Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   19  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 28ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டோம்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் (1: 11-14)

சகோதரர் சகோதரிகளே, கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாடவேண்டுமென அவர் விரும்பினார்.

நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 33: 1-2. 4-5. 12-13 (பல்லவி: 12b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
-பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
-பல்லவி

12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர்.
13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார்.
-பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (திபா 33: 22)

அல்லேலூயா, அல்லேலூயா! உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன.

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (12: 1-7)

அக்காலத்தில் ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார்.

அவர் அவர்களிடம் கூறியது: "பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும். என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.

கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 அஞ்சாதீர்கள்

சீனாவில் கம்யூனிச ஆட்சி நடைபெற்றபோது கிறிஸ்தவர்கள் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டார்கள். குறிப்பாக அருட்தந்தை ஃபாங்க் செங்க் (Fang Cheng) சிறையில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டார். கிறிஸ்தவ மதத்தை யாராரெல்லாம் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லவேண்டுமென அருட்தந்தை அவர்கள் அதிகமான கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆனால் அவர் யாருக்கும் அஞ்சாமல், யாருடைய பெயரையும் வெளியே சொல்லாமல், கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்.

ஒருநாள் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, மரண தண்டனை பெற்றுத் தந்திட மிகத்தீவிரமாக இருந்தார்கள். அருட்தந்தை அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். அவர் அங்கிருந்து கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது அவருக்கு முன்பாக அவருடைய தாயானவர் விலங்குகளால் கட்டப்பட்டு, மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தார். தன்னைப் போன்று கிறிஸ்தவ விசுவாசத்திற்காக அவர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று அருட்தந்தை நினைத்துக் கொண்டார்.

அப்போது ஓர் அதிகாரி அவருக்கு முன்பாகத் தோன்றி, "அருட்தந்தை அவர்களே, உங்களுக்கு விவிலியத்தில் வரும் பத்துக் கட்டளைகள் நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன். இப்போது அவற்றை ஒவ்வொன்றாக இந்த அவையினருக்கு முன்பாகச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார். அதற்கு அவர், ஒவ்வொரு கட்டளையாகச் சொன்னார். அவர் "உன் தாய் தந்தையை மதித்து நட" என்று சொன்னதும், குறுக்கிட்ட அதிகாரி, "தாய் தந்தையை மதித்து நடப்பது உங்களுடைய கடமையாகும், அப்படியானால் இப்போது நீங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவருடைய பெயர் பட்டியலைத் தாருங்கள். இல்லையென்றால் உங்கள் தாயை நாங்கள் சித்ரவதை செய்வோம். அது நீங்கள் உங்கள் தாயை அவமதிப்பதற்குச் சமமாகும். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்" என்று கேட்டார்.

கிறிஸ்தவர்களின் பெயர்களைச் சொல்வதா?, அல்லது தாயினை சித்ரவதை செய்வதை அனுமதிப்பதா?, என்ன செய்வதென்று என்று அருட்தந்தை அவர்கள் ஒரு நிமிடம் குழம்பிப் போய் நின்றார்கள். அப்போது நீதிமன்றத்தின் ஓர் ஓரத்தில் இருந்த அவருடைய தாய், "அன்பு மகனே, நீ எக்காரணத்தைக் கொண்டும் கிறிஸ்தவர்களைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டும். ஒரு வேலை நீ காட்டிக்கொடுக்கும் பட்சத்தில் என்னுடைய மகன் என அழைக்கப்பட தகுதியற்றுப் போய்விடுவாய்" என்றார்.

இதைக் கேட்ட அவர், கிறிஸ்தவர்களின் பெயர்களை சொல்லமாட்டேன் என்று உறுதியாக இருந்தார். இதனால் அந்த அதிகாரியும் மற்றவர்களும் சேர்ந்து அருட்தந்தையின் தாயையும், அவரையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்கள். இறுதியில் அவர்கள் கிறிஸ்துவுக்காக உயிர் துறந்தார்கள்.

எத்தனை துன்பங்கள் வந்தாலும், அஞ்சாது கிறிஸ்துவுக்காக உயிர்துறந்த அருட்தந்தை பாங்க் செங்க் மற்றும் அவருடைய தாயின் விசுவாசம் உண்மையில் பாராட்டுக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன்னைப் பின்பற்றி வரும் சீடர்கள் எப்படி அஞ்சாது நற்செய்திப் பணி செய்யவேண்டும் என்பதை எடுத்துரைக்கிறார். இயேசு கூறுகிறார். "உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சவேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்சவேண்டும் என நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவர்களுக்கு அஞ்சுங்கள்" என்று. ஆம், இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும் யாருக்கும் அஞ்சாமல் துணிவோடு நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை எத்தனையோ புனிதர்கள், மறைசாட்சிகள், இறையடியார்கள் தங்களுடைய இன்னுயிரை கிறிஸ்துவுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நாம் எப்படி இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னோடிகளாக இருக்கிறாகள். எனவே நாம் ஒவ்வொருவரும் அவர்களை முன்மாதிரியாக கொண்டு இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழவேண்டும்.

மேலும் இயேசு தன்னுடைய பணியச் செய்யும் சீடர்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பைத் தருவார் என்பதையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் அழகுபட எடுத்துரைக்கின்றார். "இரண்டு காசுகளுக்கு ஐந்து சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லை என்று சொல்லி, ஒரு சாதாரண உயிரினத்தைக் காக்கின்ற கடவுள் நம்மையும் எத்தீங்கும் அணுகாது காத்திடுவார் என்கிறார் இயேசு.

எனவே இறைவன் நம்மை எத்தீங்கும் அணுகாது காத்திடுவார், பணிவாழ்வில் நம்மைக் கரம்பிடித்து நடத்திடுவார் என்பதை உணர்ந்து, நாம் இயேசுக்காக அஞ்சாமல், துணிவோடு சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

"அஞ்சாமல் துணிந்து நின்று செயல்படுகிறவான்தான் அடிக்கடி வெற்றிச் சிகரத்தை அடைகிறான்" ஜவஹர்லால் நேரு


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சவேண்டாம்!

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இத்தாலியை ஆட்சி செய்துவந்தவர் சர்வாதிகாரி முசோலினி. அவர் ஆட்சியிலிருந்த போது நடைபெற்ற நிகழ்வு இது.

ஒரு சமயம் முசோலினி மாறுவேடத்தில் திரையரங்கம் சென்றிருந்தார். அப்போது திரையில் அவருடைய படம் வந்தது. அதைப் பார்த்ததும் எல்லாரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். அவர் மட்டும் எழாமல் அமர்ந்துகொண்டு அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். தன் படத்தைப் பார்த்ததும் எல்லாரும் எழுந்துநின்று தனக்கு மரியாதையை செலுத்துகிறார்களே என்று அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

அப்போது அவருடைய தோளில் யாரோ ஒருவர் தட்டுவது போன்று இருந்தது. அவர் திரும்பிப் பார்த்தார். அவர் பின்னால் நின்றுகொண்டிருந்த ஒருவர், " ஐயா தயதுசெய்து எழுந்துவிடுங்கள். இல்லையென்றால் நீங்கள் அமர்ந்திருப்பத்தை யாராவது பார்க்க நேர்ந்து அதை கொடுங்கோலன் முசோலினியிடம் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்... உங்களைப் போன்று எனக்கும் " இவனுக்கெல்லாம் மரியாதை செலுத்தவேண்டுமா என்ற எண்ணம் வருகிறது. என்ன செய்ய பயமாக இருக்கின்றது!" என்றார். இதைக் கேட்ட முசோலினிக்குத் தூக்கி வாரிப்போட்டது. எல்லாரும் பயத்தினால்தான் எழுந்து நிற்கிறார்களே அன்றி, உண்மையான மரியாதையினால் அல்ல என்பதை அப்போது அவர் உணர்ந்து கொண்டார்.

" இதைக் கடைப்பிடிக்கவிட்டால் அவன் என்ன சொல்லுவானோ?, அதைச் செய்யவில்லை என்றால் இவன் ஏதாவது செய்துவிடுவானோ" என்ற பயத்தில்தான் பலரும் பலநேரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு முத்தான ஓர் அறிவுரையைத் தருகின்றார். அதுதான் " உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சவேண்டாம். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகார உள்ளவருக்கே அஞ்சுங்கள்" என்பதாகும்.

இயேசு இவ்வாறு சொல்வதற்கான காரணத்தையும் தொடர்ந்து சொல்கின்றார். சிட்டுக் குருவிகள் சாதாரணமானவை. அதற்கு அவ்வளவு ஒன்றும் மதிப்பு இல்லை, இயேசு சொல்வது போன்று " இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகளை வாங்கிவிடலாம். எடுத்துக்காட்டாக ஒருவர் "நூறு ரூபாய்க்கு இருபது சிட்டுக்குருவிகள்" என்று விற்றுக்கொண்டிருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடத்தில் நூறு ரூபாய்க்கு இருப்பத்தைந்து சிட்டுக்குருவிகளைத் தாருங்கள் என்று சொல்லி பேரம் பேசினால், அவர் முதலில் தயங்கினாலும் கட்டாயம் தருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அப்படிப்பட்ட விலைகுறைவான சிட்டுக்குருவிகளையே கடவுள் காப்பாற்றும்போது, கடவுள் பார்வையில் விலைமதிக்கப் பெறாதவர்களாக இருக்கின்ற நம்மைக் கடவுள் காப்பாற்றமாட்டாரா? என்பதுதான் இயேசு முன் வைக்கின்ற கேள்வியாக இருக்கின்றது.

அடுத்ததாக இயேசு சொல்லக்கூடியது, " உங்கள் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன" என்பது. நம்முடைய தலைமுடிகள் எண்ண முடியாத அளவுக்கு கணக்கில் அடங்காதவை. அப்படியிருந்தாலும் அவையெல்லாம் கடவுளுடைய பார்வைக்கு மிக மதிப்புக் குரியவையாக இருக்கின்றன. இப்படி சாதாரண சிட்டுக்குருவிகளும் தலைமுடியும் கடவுளுடைய பார்வையில் மதிப்புக்குரியவையாக இருக்கின்றபோது, படைப்பின் மணிமகுடமாக இருக்கின்ற மனிதர்களாகிய நாம், கடவுளுடைய பார்வையில் எவ்வளவு மதிப்புக்குரியவர்களாக இருப்போம்?. ஆதலால், உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சவேண்டாம் என்கிறார் இயேசு.

மனிதர்களுக்கு அஞ்சவேண்டாம் எனச் சொல்லும் இயேசு " கடவுளுக்கு அஞ்சுங்கள்" எனச் சொல்கின்றார். கடவுளுக்கு ஏன் அஞ்சவேண்டும் என்றால், அவருக்கு மட்டுமே நம்மை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை இருக்கின்றது. ஆகவே, அப்படிப்பட்டவருக்கு நாம் அஞ்சி நடப்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது. அறிவிலும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்த கால கட்டத்தில் மக்களுக்கு இறையச்சமே/ கடவுள் பயமே இல்லை. அதனால்தான் சமூகத்தில் தீமைகள் மலிந்துபோய்விட்டடன. ஒரு சமூகம் கடவுளுக்கு அஞ்சி வாழுகின்ற சமூகமாக இருக்கின்றபோது, அந்த சமூகத்தில் குற்றங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனென்றால் தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார் என நினைத்து தவறுகள் செய்யப் பயப்படுவர். ஆனால் " கடவுள் என்ன செய்துவிடுவார்?" என நினைத்துக்கொண்டு தவறுகள் செய்தால், தவறுகள் கூடுமே ஒழிய குறைவதற்கான வழியே இல்லை. ஆதலால்தான், இறைவனுக்கு அஞ்சி வாழ்வது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

இதைவிடவும் இறைவனுக்கு நாம் ஏன் அஞ்சி வாழவேண்டும் என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. விவிலியம் சொல்வது போல " இறையச்சம் ஞானத்தின் தொடக்கம்" . ஆதலால் நாம் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தோமெனில், ஞானத்தில் வளர்வோம் என்பது உறுதி.

ஆகவே, உயிரைக் கொல்பவர்களுக்கு அஞ்சாமல் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணரும் ஞானத்தின் ஊற்றுமாக இருக்கின்ற இறைவனுக்கு மட்டுமே அஞ்சி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

(அருட்தந்தை: மரிய அந்தோனிராஜ்)
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
'அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்" (லூக்கா 12:7)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- விவிலியத்தில் பல இடங்களில் "அஞ்சாதீர்கள்" என்னும் சொல் ஆளப்படுவதை நாம் காணலாம். இதோ ஒருசில எடுத்துக்காட்டுகள்: எசாயா 43:1-2; நீதிமொழிகள் 3:25-26; லூக்கா 1:30; மத்தேயு 10:29-30. மனிதரின் வாழ்க்கையில் அச்சம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறதோ என்னும் எண்ணம் மேலோங்குகின்ற வேளையில் நாம் அச்சமடைகிறோம். நமக்கு ஏற்படுகின்ற பயம் பிற மனிதர் நமக்குத் தீங்கிழைக்கப் போகிறார்களோ என நாம் நினைப்பதால் ஏற்படலாம். அல்லது இயற்கை நிகழ்வுகள் நம் உள்ளத்தில் பயத்தை எழுப்பலாம். அன்றாட உணவும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரமும் நமக்கு இல்லையே என்னும் உணர்வினால் பயம் தோன்றலாம். நோய்நொடிகள் ஏற்படும்போதும், நம்மைச் சார்ந்திருப்போருக்குத் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என நாம் நினைப்பதாலும் அச்சம் தோன்றலாம். மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அச்சம் ஏற்படக் கூடும். ஆனால் விவிலியம் நமக்குத் தருகின்ற செய்தி, "எதைக் கண்டும் நீங்கள் அஞ்சவேண்டாம்" என்பதே. நாம் உண்மையிலேயே அஞ்சவேண்டிய ஒருவர் உண்டு. அவர்தான் நம்மை அன்புசெய்கின்ற கடவுள்.

-- கடவுளுக்கு அஞ்சி நாம் நடக்கவேண்டும் என்றதும் கடவுள் நம்மைத் தண்டிக்கப்போகிறார் என்னும் எண்ணத்தால் நாம் பயந்து நடுங்க வேண்டும் என்று சிலர் தவறாகப் பொருள்புரிந்துகொள்வது உண்டு. கடவுள் நம்மைத் தண்டிக்கக் காத்திருக்கும் "நீதிபதி" அல்ல; மாறாக, அவர் நம் அன்புத் தந்தை. எனவேதான், சிட்டுக் குருவிகளைக் காக்கின்ற கடவுள் நம்மைக் காக்காமல் கைவிடமாட்டார் என இயேசு அறிவுறுத்துகிறார். கடவுளின் பராமரிப்பும் காவலும் நமக்கு என்றுமே உண்டு என்னும் உணர்வு நம்மில் வளர்ந்து வேரூயஅp;ன்ற வேண்டும். அப்போது நமக்கு ஏற்படுகின்ற அல்லது ஏற்படக்கூடும் என நாம் நினைக்கின்ற தீமைகள் குறித்து நாம் அஞ்சமாட்டோம். ஏனென்றால் கடவுளை முழுமையாக நம்பி நாம் வாழ்ந்தால் நமக்குத் தீமைகள் ஏற்பட்டாலும் அவை நம்மைக் கடவுளின் அன்பிலிருந்து பிரித்துவிட முடியாது. அப்போது தீமையை எதிர்த்து நாம் போராடவும், நன்மை செய்வதன் வழியாகத் தீமையை வென்றிடவும் கடவுள் நமக்கு வல்லமை தருவார். எதைக் கண்டும் அஞ்சாத உள்ளம் நம்மில் உருவானால் நாமும் பிறருக்குத் துணிவூட்டுகின்ற மனிதராக மாறுவோம். சாதாரண சிட்டுக்குருவியைப் பாதுகாக்கின்ற கடவுளின் பார்வையில் மண்வாழ் மனிதார் மாபெரும் மாண்புமிக்கவர் என்னும் உண்மையை நம் வாழ்வின் வழியாகப் பறைசாற்றுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
கடவுள்நிலை

நாளைய நற்செய்தியில் 'சிட்டுக்குருவிகள்' பகுதியை வாசிக்கின்றோம்.

இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?

நீங்கள் சிட்டுக்குருவிகளைவிட மேலானவர்கள்.

எத்தனையோ முறை இப்பகுதியை வாசித்திருந்தாலும் இன்று வாசிக்கும் போது ஒரு வரி புதிய அர்த்தத்தை கொடுத்தது.

'அக்காலத்தில் ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தபோது' என லூக்கா நிகழ்வைத் தொடங்குகின்றார்.

மேலும், 'உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன' என்றும் 'சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்' என்றும் சொல்கிறார்.

'தலைமுடி எண்ணுவது' என்பது 'ஹைபர்போல்' ('மிகைப்படுத்துதல்') என்னும் இலக்கியக்கூறு.

அதாவது, நிறையக் கூட்டத்தில் நீங்கள் ஒரு நபராக இருந்தாலும் ஒவ்வொருவரும் என் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள் என்ற செய்தியை இயேசு சொல்கிறார்.

கடவுளின் பார்வையில் எல்லாருக்கும் முதன்மை இடம்.

இது எப்படி சாத்தியமாகும்?

எல்லாருக்கும் முதன்மை இடம் கொடுப்பது எனக்கு பல நேரங்களில் சிரமமாக இருக்கிறது.

'நீ யாருக்கு உடனே பதில் மெசேஜ் அனுப்புகிறாயோ அவரே உனக்கு முதன்மையானவர்' என்று டுவிட்டரில் கீச்சு ஒன்றை வாசித்தேன்.

'முதன்மைப்படுத்துவது' கடினமாக இருக்கிறது.

சில நாள்களில் பணி முதன்மையானதாக இருக்கிறது.

சில நேரங்களில் உடல்நலம் முதன்மையானதாக இருக்கிறது.

சில நேரங்களில் நண்பர்கள் முதன்மையானதாக இருக்கின்றனர்.

சில நேரங்களில் பயணம் முதன்மையானதாக இருக்கிறது.

எல்லா நேரங்களிலும் எல்லாவற்றிற்கும் எல்லாருக்கும் முதன்மையான நிலையை கொடுப்பதுதான் கடவுள்நிலை என நினைக்கிறேன்.

காசு கொடுத்து வாங்கப்பட்ட குருவி என்றாலும் சரி, கொசுறாக வந்த குருவியானாலும் சரி இறைவனின் பார்வையில் இரண்டும் முதன்மையானவையே.


Fr. Yesu Karunanidhi.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5  28ம் வாரம் வெள்ளி, பொதுக்காலம்
(அக்டோபர் 19, 2018)
=================================================================================
கடவுளின் உரிமையின் முத்திரை

எபேசியர் 1:11-14
லூக்கா 12:1-7

சில நேரங்களில் நான் சிலரை கண்டு வியந்தது உண்டு... இவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென விரும்புகிறார்களா இல்லையா என்று! மகிழ்ச்சியாயிருக்க காரணமும் வழியும் ஆயிரம் இருக்க, தவறாக செல்லும் ஓரிரு காரணங்கங்களை மட்டும் பிடித்து கொண்டு தங்கள் வாழ்வையும், தங்களை சுற்றி இருப்போர் வாழ்வையும் நரகமாக்கி அதிலேயே இருந்துவிட எண்ணும் இவர்களது போக்கு உண்மையிலேயே வியப்பும் வருத்தமும் தரக்கூடியது! உண்மையில் நான் கடவுளின் மகனாய், மகளாய் இருந்தால், எனக்குள் இருக்கும் இந்த மனநிலையை நான் முதலில் களைய வேண்டும்.

கிறிஸ்து இன்று கூறும் அச்சமற்ற மனநிலை என்பது இதை சார்ந்ததே. அஞ்சாதீர்கள், அஞ்சாதீர்கள் என்று திரும்ப திரும்ப கூறும் கிறிஸ்துவின் மனதை புரிந்து கொள்ள முயற்சிப்போம்... உண்மையான நிலைபாடுகளும், சரியான சிந்தனையும், நேர்மறையான வாழ்வியல் முறையும் இருந்துவிட்டால் நாம் யாரையும் எதையும் குறித்து அஞ்ச வேண்டும் என்ற அவசியமே இல்லை. நான் கடவுளுக்கு சொந்தமானவன், கடவுள் எனக்கென ஒரு திட்டத்தை வைத்துள்ளார், அதை நான் அறிவேன், படிப்படியாய் அதை எனக்கு உணர்த்தியும் வருகின்றார், அவரது வழிகளில் நான் நடக்கும் போது எந்த இருளும் என்னை மேற்கொள்ளாது, எந்த இழிநிலையும் எனக்கு வந்து விடாது; ஏனெனில் அவரே எனக்கு கேடயமும் பலமுமாய் இருக்கிறார், அவரே என்னை காக்கின்றார், ஏனெனில் நான் அவருக்கே சொந்தமானவன், சொந்தமானவள் - இதுவே உண்மை, இந்த உண்மையே நம்மை விடுதலையாக்கும்!

இந்த உண்மையை நமக்கு விளங்கச்செய்பவர் தூய ஆவியானவரே... அவரே இறைவன் என் மீது கொண்டுள்ள உரிமையின் முத்திரை ஆவார், என்கிறார் பவுலடிகளார். இந்த தூய ஆவியார் என் உள்ளத்திலே பொழியப்பட்டுள்ளார், குடிகொண்டுள்ளார், தொடர்ந்து என்னை வழி நடத்துகின்றார். அவரது உரிமையின் முத்திரையை நான் உணர்கின்றேனா, அதற்கு கட்டுப்பட்டு வாழ்கின்றேனா... அவ்வாறு வாழ்ந்தால் எனக்குள்ளிருக்கும் மகிழ்ச்சியை யாராலும் எந்நேரத்திலும் எடுத்துவிட முடியாது!

(Rev. Father: Antony Christy SDB)

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!