Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   16  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 28ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை எனும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை. விருத்தசேதனம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமை உண்டு என்பதை நான் மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறேன்.

திருச்சட்டம் சார்ந்த செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக முயலும் நீங்கள் கிறிஸ்துவுடன் உறவற்றுப் போய் விட்டீர்கள்; அருளை இழந்துவிட்டீர்கள். ஆனால் நாம் தூய ஆவியின் துணையால் நம்பிக்கையின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவோம் என்னும் எதிர்நோக்கு நிறைவேறும் என ஆவலோடு காத்திருக்கிறோம்.

கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர், விருத்தசேதனம் செய்துகொண்டாலும் செய்து கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு எப்பயனும் இல்லை. அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 119: 41,43. 44, 45. 47,48 (பல்லவி: 41 )
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்.

41 ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்; உமது வாக்குறுதியின்படி நீர் என்னை மீட்பீராக! 43 என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். பல்லவி

44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். 45 உம் நியமங்களை நான் நாடியுள்ளதால் பரந்த பாதையில் தடையின்றி நான் நடப்பேன். பல்லவி

47 உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன். 48 நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 ( எபி 4: 12 )

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 37-41

அக்காலத்தில் இயேசு பேசிக்கொண்டிருந்தபோது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்துமுன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.

ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: ``பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.

அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

சிந்தனை

வாழ்வு என்பது கிண்ணமா அல்லது கிண்ணத்திற்குள் உள்ளவையா?

போராசிரியரிடம் சென்ற மாணவர்கள், தங்களுக்கு வாழ்வு ரொம்பவே கசக்கின்றது. நிறைய அழுத்தங்களோடு விடுதலையின்றி தவிர்ப்பதாக சொன்னார்கள்.

போராசிரியர் எல்லாருக்கும் காபி போட்டு கொணர்ந்து பரிமாறினார். விதவிதமாய் இருந்த கிண்ணத்தை பார்த்து பார்த்து எடுத்தார்கள். பேராசிரியர் கேட்டார். கிண்ணத்திலா, இல்லை கிண்ணத்திற்குள் உள்ளே உள்ள காபியிலா சுவையிருக்கிறது.

வாழ்வு என்பது கிண்ணத்திற்குள் உள்ள காபியை போன்றது. கிண்ணங்கள் பயன்படுத்தி விட்டு தூர எறியப்படுபவை தான். உள்ளே இருப்பது தான் களைத்தவனுக்கு ஊக்கம் தரும்.

"உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்."

வாழ்வை இயேசுவைப் போல பிறருக்காய் கொடுத்தால், நாமும் தூய்மையாகலாம்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 அகத்தூய்மை

அண்மையில் ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் பெற்றோர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு (Survey) நடத்தப்பட்டது. அந்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட கேள்வி "உங்கள் குழந்தைகள் எப்படி இருக்கவேண்டும்? என்பதுதான்.

அதற்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் "வெற்றிகரமான மனிதர்களாக இருக்கவேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் சொன்ன விளக்கம், "வெற்றிதான் ஒரு மனிதனுடைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. இங்கே தோற்றுப் போனவர்களை யாருமே கண்டுகொள்வதில்லை, வெற்றிபெற்றவர்களைத்தான் இந்த உலகம் திரும்பிப் பார்க்கிறது. எனவேதான் எங்களுடைய குழந்தைகள் வெற்றிகரமான மனிதர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார்கள்.

இந்தக் கேள்விக்கு அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோர்கள் வேறுவிதமாக பதிலளித்தார்கள். அவர்கள் தங்களுடைய குழந்தைகள் "மகிழ்ச்சிகரமான மனிதர்களாக" இருக்கவேண்டும் என்று தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தினார்கள். அதற்கு அவர்கள் சொன்ன விளக்கம், "வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் மகிழ்ச்சி மட்டும் இல்லையென்றால் வாழ்வே வெறுமையானதாக இருக்கும். எனவே எங்களுடைய குழந்தைகள் மகிழ்சிகரமான மனிதர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்கள்.

ஆனால் இறைவனோ, நாம் வெற்றிகரமான மனிதர்களாகவோ, மகிழ்ச்சிகரமான மனிதர்களாகவோ இருக்க விரும்பவில்லை (வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் கடவுள் எதிரானவர் அல்ல). அதைவிடவும் நாம் அவரைப் போன்று தூயவர்களாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார் (1 பேதுரு 1:15 உங்களை அழைத்தவர் தூயமையுள்ளவராய் இருப்பது போல் நீங்களும் உங்கள் நடத்தையில் தூயவர்களாய் இருங்கள்).

ஆம், இறைவனின் அன்பு மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் இறைவனைப் போன்று தூயவர்களாக இருக்கவேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாம் வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உட்புறத்திலும் தூயவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்.

நற்செய்தியில் பரிசேயர் ஒருவர் இயேசுவை விருந்துக்கு அழைக்கிறார். இயேசுவும் பரிசேயரின் அழைப்பை ஏற்று பந்தியில் அமர்கின்றபோது, இயேசு கைகளைக் கழுவாததைக் கண்டு அவர் வியப்படைக்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், "பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயமையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.... உட்புறத்தில் உள்ளவற்றை தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாக இருக்கும்" என்கிறார்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களைப் போன்றுதான் நாமும் நம்முடைய வெளிப்புறத்தை அழகுபடுத்த எவ்வளவோ மெனக்கெடுகிறோம்; ஏராளமான பணத்தை செலவு செய்கிறோம். ஆனால் உட்புறத்தை அழகாக, தூய்மையாக வைத்திருக்க நாம் மெனக்கெடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் நமது உட்புறத்தை அதாவது நமது உள்ளத்தை எல்லாவிதத் தீய எண்ணங்களாலும் நாம் நிறைத்து வைத்திருக்கிறோம்.

இதற்கு அடிப்படையயான காரணம். நமது உள்ளத்தை, உள்ளத்து உணர்வுகளை யார் பார்க்கப் போகிறார்கள்? என்பதுதான்.

திருப்பாடல் 139: 1-3 வரை உள்ள வசனங்களில் வாசிக்கின்றோம், "ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!. நான் அமர்வதையும் எழுவதையும் என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணருகின்றீர். நான் நடப்பதையும், படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழியில் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே" என்று. ஆகவே, நாம் நமது உள்ளத்தில் என்ன நினைக்கிறோம் என்று மனிதர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். இறைவனுக்குத் தெரியும். எனவே நமது உள்ளத்தை, உட்புறத்தை தூய்மையானதாக வைத்திருக்க முயல்வோம்.

உள்ளத்தை எப்படி தூய்மையாக வைத்திருப்பது என்பது நமது அடுத்த சிந்தனையாக இருக்கின்றது. உள்ளம் தூய்மையாக இருக்கவேண்டும் என்றால், அதற்கு நமது எண்ணம், சிந்தனை எல்லாம் தூய்மையாக இருக்கவேண்டும். ஏனென்றால் எண்ணத்திலிருந்துதான் செயல் பிறப்பெடுக்கிறது. நமது எண்ணம், சிந்தனை தூய்மையாக இருக்கும்போது நமது உள்ளமும், அதனால் நமது செயலும் தூய்மையாக இருக்கும். அதற்கு நாம் நல்ல எண்ணங்களால், சிந்தனைகளால் நமது உள்ளத்தை நிரப்பவேண்டும்.

நற்செய்தியில் அன்னை மரியாள் நிகழ்ந்தவற்றை எல்லாம் தன்னுடைய உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார் என்று வாசிக்கின்றோம் (லூக் 2: 51). ஆம், அவள் இறைசிந்தனைகளை தன்னுடைய உள்ளத்தில் பதித்து வைத்ததால், அவளுடைய உள்ளம் தூயமையானது, ஏன் அவளுடைய வாழ்க்கையே தூயதாக மாறியது. நாமும் இறைசிந்தனைகளால் நமது உள்ளத்தை நிரப்பும்போது நமது உள்ளமும் தூய்மையாகும்.

எனவே வெளிப்புறத்தை மட்டும் தூயமையாக்குவதில் சிரத்தை எடுத்துக்கொள்ளாமல், உட்புறத்தையும் தூயதாக வைத்திருக்க அதிக அக்கறை காட்டுவோம். உள்ளத்தை இறைச் சிந்தனையால், இறைவார்த்தையால் நிரப்புவோம். தூயவர்களாக இருப்போம். அதன்வழியாக தூய இறைவனின் அருள்பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

மார்கரேட் மரியா (அக்டோபர் 16)

"நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது" (மத் 11: 29-30)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் மார்கரேட் மரியா, பிரான்ஸ் நாட்டில் உள்ள பர்கண்டி என்ற இடத்தில் 1647 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் பக்தி நெறியிலும் புண்ணிய வாழ்விலும் சிறந்துவிளங்கியவர்கள். அதனால் இவரும் சிறு வயது முதலே பக்தி நெறியில் சிறந்து விளங்கத் தொடங்கினார்.

மார்கரேட்டிற்கு எட்டு வயது நடக்கும்போது திடிரென இவருக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் இவரும் இவருடைய பெற்றோரும் மரியன்னையை வேண்டிக்கொள்ள, மார்கரேட்டிற்கு ஏற்பட்ட முடக்கவாத நோய் குணமாக முற்றிலுமாகக் குணமானது. அதற்கு நன்றிக் கடனாக மார்கரேட் சந்திப்பு துறவறசபையில் சேர்ந்து துறவியாக வாழத் தொடங்கினார்.

இவர் சிறுவதிலேயே நற்கருணை ஆண்டவர் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்ததால், துறவற சபையில் சேர்ந்ததும் அது இன்னும் அதிகமானது. தனிமையில் நற்கருணை ஆண்டவரிடம் பேசத் தொடங்கினார். அவரைக் குறித்த காட்சிகளையும் காணத் தொடங்கினார். 1673 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் ஆண்டு, மார்கரேட் மரியா நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டவர் இயேசு அவருக்கு முன்பாகத் தோன்றினார். அந்தக் காட்சியில் இயேசுவின் உடல் முழுவதும் காயங்கள் அதிகமாகக் காணப்பட்டன. இயேசு மார்கரேட் மரியாவிடம், "உன்னை நான் என்னுடைய திரு இருதய பக்தியை உலகமெங்கும் பரப்புவதற்கு ஒரு கருவியாக ஏற்படுத்தியிருக்கின்றேன்" என்றார். அவரும் இதனை ஆண்டவரின் திருவுளமென ஏற்றுக்கொண்டார்.

இதற்குப் பின்பு மார்கரேட் மரியா திரு இருதய ஆண்டவரைக் குறித்து பதினெட்டு மாதங்கள் நிறைய காட்சிகளைக் கண்டார். அந்தக் காட்சிகளை எல்லாம் அவர் அவருடைய சபைத் தலைவியிடமும் ஏனைய அருட்சகோதரிகளிடம் எடுத்துச் சொன்னபோது, அவர்கள் இவரை "ஏமாற்றுப் பேர்வழி, பொய்யானவள் என்று விமர்சிக்கத் தொடங்கினார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் சபைக்கு ஆன்ம ஆலோசகராக இருந்த அருட்தந்தை கிளாட் லா கொலம்பியர் என்பவர், மார்கரேட் மரியா கூறுவதில் இருக்கின்ற உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். அன்று முதல் மார்கரேட் மரியா சொன்னதை சபையில் இருந்த அனைவரும் நம்பத் தொடங்கினார்கள். திரு இருதய ஆண்டவர் மார்கரேட் மரியாவிடம் சொன்னவாறே ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளியன்று நற்கருணை ஆராதனையும் ஒவ்வொரு வியாழன்று திருமணி ஆராதனையும் செய்யத் தொடங்கினார்கள். அதே போன்று இயேசுவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவிற்கு அடுத்து வருகின்ற வெள்ளிகிழமை அன்று திரு இருதய ஆண்டவருக்கு விழாவும் எடுக்கத் தொடங்கினார்கள். இப்படி திரு இருதய ஆண்டவருக்கான பக்தி முயற்சி படிப்படியாகப் பரவத் தொடங்கியது.

இதன்பிறகு மார்கரேட் மரியா சபையின் துணைத் தலைவியாகவும் நவ கன்னிகைகளுக்கு பயிற்றுவிப்பவராகவும் உயர்ந்தார். இப்படி அவருடைய நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க அவர் 1690 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1920 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இவர் இறந்து எழுபது ஆண்டுகள் கழித்து திரு இருதய ஆண்டவருக்கான பக்தி முயற்சி திருத்தந்தை எட்டாம் கிளமெண்டால் அங்கீகரிக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய மார்கரேட் மரியாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தீர்ப்பிடாது வாழ்வோம்

தூய மார்கரேட் மரியாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவரை அவருடைய சபை அருட்சகோதரிகள் உண்மை தெரியாமேலே பொய்யானவள், ஏமாற்றுக்காரி என்றெல்லாம் தீர்ப்பிட்டார்கள். பின்னர் உண்மையை உணர்ந்ததும் தங்களுடைய தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டார்கள். நாமும் கூட பல நேரங்களில் மார்கரேட் மரியாவின் சபை அருட்சகோதரிகள் போன்று ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல், இவர், இவள் இப்படித்தான் என்று தீர்ப்பிடுக்கின்றோம். இத்தகைய தவற்றினை நாம் செய்யாமல் இருப்பது நல்லது.

சிறுவன் ஒருவன் தேனிக்கள் தன்னை கொட்டிவிட்டது என்று தேனிக்கூட்டதையே அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தான். இப்படிப்பட்ட நிலையில் தேனீக்களால் அருமையான தேன் கிடைக்கின்றது என்று அவனுடைய தாய் அவனிடத்தில் எடுத்துச் சொன்னபோது, தன்னுடைய தவற்றை நினைத்து வருந்தினான். நாமும் கூட இந்த சிறுவனைப் போன்று. உண்மையை உணராமல் அல்லது ஒன்றைப் பற்றி பகுதியாகத் தெரிந்துகொண்டு தீர்ப்பிடுகின்றோம். இந்நிலையையை நம்முடைய வாழ்வில் மாற்றிக்கொண்டு தீர்ப்பிடாமல் இருப்பது நல்லது.

ஆகவே, தூய மார்கரேட் மரியாவின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், தீர்ப்பிடாது வாழ்வோம், திரு இருதய ஆண்டவரிடத்தில் பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
மருந்து

நற்செய்தி நூல்களில் 'உள்புறம்,' 'வெளிப்புறம்' பற்றிய விவாதங்கள் வரும்போதெல்லாம் இயேசு பரிசேயரிடம் 'உள்புறத்தை தூய்மையாக்குங்கள்' என்று வலியுறுத்துகின்றார்.


ஆனால் நாளை நாம் வாசிக்கும் லூக்கா நற்செய்தியாளரின் பதிவு (11:37-41) சற்று வித்தியாசமாக இருக்கிறது.

'உள்புறத்தில் உள்ளவற்றை தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.'

இதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் முன்னால் வாசிக்க வேண்டும்.

'உங்கள் உள்ளத்தில் பேராசையும் தீமையும் நிறைந்திருக்கின்றன.'

பேராசைக்கு மருந்து தர்மம் செய்தல்.

அதாவது, எல்லாம் எனக்கு என்று வைத்துக் கொள்வதை விடுத்து, எல்லாம் உனக்கு என்று கைதிறக்கும் மனநிலை.

தர்மம் தொடங்கினால் பேராசையும் மறைந்துவிடும். தர்மத்தை தொடங்க தேவை நன்மை.


Fr. Yesu Karunanidhi.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!