Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   15  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 28ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; உரிமைப் பெண்ணின் மக்கள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் (4: 22-24, 26-27, 31 - 5: 1)

சகோதரர் சகோதரிகளே, ஆபிரகாமுக்கு மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்; மற்றவன் உரிமைப் பெண்ணிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது. அடிமைப் பெண்ணின் மகன் இயல்பான முறைப்படி பிறந்தவன்; உரிமைப் பெண்ணின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன். இது ஒரு தொடர் உருவகம். இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர். ஒன்று ஆகார் குறிக்கும் சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அது அடிமை நிலையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறது.

மேலே உள்ள எருசலேமோ உரிமைப் பெண்; நமக்கு அன்னை. ஏனெனில், ``பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு! பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு! ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளை விட ஏராளமானவர்கள்" என்று மறைநூலில் எழுதியுள்ளது.

ஆகவே சகோதரர் சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; உரிமைப் பெண்ணின் மக்கள். கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை எனும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 113: 1-2. 3-4. 5a, 6-7 (பல்லவி: 2a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக!

1 ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.
2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப்பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப்பெறுவதாக!
-பல்லவி

3 கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!
4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி.
-பல்லவி

5ய நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்?
6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்;
7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்.
-பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (திபா 95: 8b,7b)

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (11: 29-32)


அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: ``இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர்.

இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.

தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர்.

ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!"

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 அவநம்பிக்கையோ கொல்லும்; நம்பிக்கைதான் வெல்லும்!

ஹங்கேரி நாட்டைச் சார்ந்த கரோலி டாகாக்ஸ் இலக்கைக் குறிபார்த்து, அநாயாசமாகச் சுட்டு வீழ்த்துவதில் கில்லி. அவர் ஹங்கேரி ராணுவத்தில் சேர்ந்தபோது, அவருடைய துப்பாக்கி சுடும் அசாத்தியத் திறமையை அந்தப் படைப்பிரிவே வியந்து பார்த்தது. ராணுவ முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடக்கும். உடனிருக்கும் வீரர்கள் எல்லாம் நிறுத்தி, நிதானமாக இலக்கைக் குறிபார்த்துக்கொண்டிருக்க, டாகாக்ஸ் மிகச் சரியாக இலக்கைத் தாக்கிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்.

"திறமைக்கு மரியாதை" உரிய நேரத்தில், உரியவருக்கு எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை. அது டாகாக்ஸுக்கும் நடந்தது. 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்கவிருந்தது. "ஹங்கேரியின் துப்பாக்கி சுடும் குழுவில் டாகாக்ஸுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்; அவர் ஒலிம்பிக்கில் ஹங்கேரிக்குப் பதக்கம் வாங்கித் தருவார" என அவரின் சக வீரர்களும் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தக் குழுவின் பெயர்ப் பட்டியலில்கூட டாகாக்ஸின் பெயர் இல்லை. "ஒரு சாதாரண சார்ஜென்ட்டுக்கு, ராணுவத்திலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது; உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்" என ராணுவத் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது. இதற்காக டாகாக்ஸ் கலங்கவில்லை. இறைவன்மீதும் தன்மீதும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு வரட்டும் எனக் காத்திருந்தார். தன் துப்பாக்கிப் பயிற்சியை இடைவிடாமல் தொடர்ந்துகொண்டே இருந்தார்.

இரண்டே ஆண்டுகளில் ராணுவத்தில் அந்த விதிமுறை தளர்த்தப்பட்டது. "இனி, டாகாக்ஸுக்கு எந்தத் தடையும் இல்லை. எப்படியும் 1940-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வார்; ஹங்கேரிக்குத் தங்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஹங்கேரி தேசம் முழுக்க எகிறிக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது ராணுவப் பயிற்சியின்போது தவறுதலாக விழுந்த கையெறி குண்டு ஒன்று, மிகச் சரியாக டாகாக்ஸின் வலது கையில் விழுந்தது. அந்த விபத்தில் அவருடைய துப்பாக்கி சுடும் வலது கை மிக மோசமாக சேதமடைந்தது. "அவ்வளவுதான்! டாகாக்ஸின் ஆட்டம் முடிந்தது" என்று எல்லோரும் முடிவெடுத்து, அவரை மறந்துவிட்டு, அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். ஆனால், டாகாக்ஸ் தன் லட்சியத்தையோ, இறைவன்மீதும் தன்மீதும் கொண்ட நம்பிக்கையையோ கைவிடத் தயாராக இல்லை. அவருக்கு கை போனதை ஒரு குறையாக எடுத்துக்கொள்ளவில்லை. யாருக்கும் தெரியாமல் தன் இடது கையைக்கொண்டு துப்பாக்கிச் சுடப் பயிற்சியெடுத்தார். இடைவிடாத பயிற்சி. அதற்குப் பலனும் கிடைத்தது.

1939 ஆம் ஆண்டு, இலையுதிர்காலம். ஹங்கேரியில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. அதில் டாகாக்ஸ் கலந்துகொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கலந்துகொண்டார். இடது கையாலேயே சுட்டு, வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றினார். ஒட்டுமொத்த ஹங்கேரியும் அவரைத் திரும்பிப் பார்த்தது. அவர் மீதான எதிர்பார்ப்பு ஹங்கேரி மக்களுக்குக் கூடிக்கொண்டே போனது. டாகாக்ஸ் அவர் பாட்டுக்குத் தன் பயிற்சியில் மூழ்கியிருந்தார். 1940 ஆம் ஆண்டிலும் 1944 ஆம் ஆண்டிலும் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், இரண்டாம் உலகப் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டன. 1948 ஆம் ஆண்டு, தனது 38-வது வயதில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டி. அதில் கலந்துகொண்டார் டாகாக்ஸ்.

அப்போது துப்பாக்கி சுடுவதில், முடிசூடா மன்னனாக உலக சாம்பியனாக இருந்தவர் அர்ஜன்டினாவைச் சேர்ந்த வேலியென்டே, டாகாக்ஸ் போட்டிக்கு வந்திருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்தார். அவரருகே போனார். டாகாக்ஸுக்கு நடந்த விபத்தைக் கேள்விப்பட்டதாகவும், இப்போது எப்படி இருக்கிறார் என்றும் விசாரித்தார். பிறகு, விளையாட்டாக "சரி என்ன இந்தப் பக்கம்?" என்று கேட்டார். "அது ஒண்ணுமில்லை. துப்பாக்கி சுடுறதுல உலக சாதனை செய்யணும்னு ஆசை. கத்துக்கறதுக்காக இங்கே வந்திருக்கேன் என்றார் டாகாக்ஸ்.

அன்றைக்கு 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் டாகாக்ஸ் நிகழ்த்தியது உலக சாதனை. ஆம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் டாகாக்ஸ். போட்டி முடிந்ததும் வேலியென்டே, டாகாக்ஸின் அருகே வந்தார். "நீங்க துப்பாக்கி சுட நல்லா கத்துக்கிட்டீங்க. வாழ்த்துகள்!" என்று சொல்லி விடைபெற்றுப் போனார். அதோடு டாகாக்ஸின் சாதனை முடிந்துவிடவில்லை. 1952, ஃபின்லாந்தின் ஹெல்சின்கி (Helsinki)-யில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் டாகாக்ஸ் கலந்துகொண்டார். அதே 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டி, அதிலும் டாகாக்ஸுக்கு தங்கக் கோப்பை. போட்டி முடிந்ததும் வேலியென்டே வந்தார். "வாழ்த்துகள் டாகாக்ஸ்! அளவுக்கு அதிகமாகவே துப்பாக்கி சுட நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். இது, நீங்கள் எனக்குத் துப்பாக்கி சுடக் கற்றுக்கொடுக்கவேண்டிய நேரம்" என்றார்.

"கரோலி டாகாக்ஸ் அவ்வளவுதான், அவருடைய ஆட்டம் முடிந்துபோனது" என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொது கரோலி டாகாக்ஸ் இறைவனையும் தன்னையும் நம்பினார். அதனால் யாருமே எதிர்பாராத வண்ணம் ஒலிம்பிக் போட்டியில் இரண்டுமுறை தங்கம் வென்றார். அவநம்பிக்கைதான் கொல்லும். ஆனால் நம்பிக்கையோ என்றைக்கும் வெல்லும் என்பதற்கு கரோலி டாகாக்ஸின் வாழ்க்கை ஒரு சான்று.

நற்செய்தி வாசகத்தில் யூதர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை வைக்காமல் அடையாளம் கேட்கின்றார்கள். அதனால் அவர்கள் "தீய தலைமுறையினரே" என்ற இயேசுவின் கடுஞ்சொல்லுக்கு உள்ளாகிறார்கள். நாம் யூதர்களைப் போன்று இயேசுவின்மீது நம்பிக்கை வைக்காமல் அவருடைய கடுஞ்சொல்லுக்கு உள்ளாகப் போகின்றோமா? அல்லது அவர்மீதும் நம்மீதும் நம்பிக்கை வைத்து நூற்றுவத் தலைவனைப் போன்று, கரோலி டாகாக்ஸிசைப் போன்று இயேசுவின் பாராட்டையும் ஆசிரையும் பெறப் போகிறோமா?  சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவன் மீதும் நம்மீதும் நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
(வெளி)அடையாளங்களை வைத்து மக்களை மதிப்பிடும் மனிதர்கள்

பெருநகரில் வாழ்ந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு கடற்கரைக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய குழந்தைகளை கடற்கரை மணலில் விளையாட விட்டுவிட்டு, அவர்களுக்குள் கதையளக்கத் தொடங்கினார்கள்.

அப்போது நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, பழைய ஆடையில் கையில் ஒரு சாக்குப் பையைத் தூக்கிக்கொண்டு, கடற்கரை மணலில் எதை எதையோ பொறுக்கிக்கொண்டிருந்தாள். அவள் பெற்றோர்களை விட்டுத் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து அவ்வப்போது சிரிப்பதும், பின்னர் கீழே குனிந்து எதையோ பொறுக்குவதுமாய் இருந்தாள். இதைக் கவனித்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அழைத்து, அந்த பெண்மணியைப் பார்த்தால் ஏதோ சூனியக்காரி போன்று இருக்கிறது. ஆதலால் அவளுக்குப் பக்கத்தில் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள். ஆனாலும் குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களது பேச்சைச் கேட்காமல், அவர்கள் மனம்போல் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் கடற்கரை மணலில் எதையோ பொறுக்கிய அந்த பெண்மணி, அதன்பின்னர் அவ்விடத்திலிதிலிருந்து போய்விட்டாள். அவளுக்குப் பின்னால் பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டார்கள்.

அடுத்த நாள் காலை கடற்கரைக்கு காற்றுவாங்கச் சென்ற அந்த பெற்றோர்கள் தொலைக்காட்சியைப் பார்த்தபோது அதிர்ந்துபோனார்கள். ஏனென்றால் தொலைக்காட்சியில் முந்தைய தினம் கடற்கரையில் அழுக்கு உடையில் எதையோ பொறுக்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி  இப்போது அழகாக உடையுடுத்தி முக்கியமான ஒரு பிரமுகரோடு சுற்றுச்சூழல் பாதுக்காப்பு பற்றி பேசிக்கொண்டிருந்தாள். அவர் முந்தைய தினம் கடற்கரையில் பொறுக்கியது வேறொன்றும் கிடையாது மக்களால் வீசி எறியப்பட்ட பாட்டில்கள், மற்றும் கண்ணாடித் துகள்கள். கடற்கரையில் விளையாடும் குழந்தைகளின் காலில் எதுவும் பட்டுவிடக் என்பதற்காக அவள் அப்படிப்பட்ட ஓர் அரும்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

இதை அறிந்ததும் அந்தப் பெற்றோர்களுக்கு சுருக்கென்று இருந்தது. நல்ல காரியம் செய்த ஒரு பெண்மணியை அவளுடைய வெளிஅடையாளத்தை வைத்து தவறாக மதிப்பிட்டுவிட்டோமே என வருந்தினார்கள்.

பல நேரங்களில் நாமும்கூட மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் பெற்றோர்களைப் போன்று மனிதர்களை அவர்களுடைய வெளியடையாளத்தை வைத்து மதிப்பிடுகிறோம். இத்தகைய ஒரு மனநிலையை மாற்றி, மக்களைத் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னிடம் அடையாளம் கேட்ட பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களிடம், "இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கிறார்கள். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் தரப்பட மாட்டது" என்கிறார்.

யூதர்கள் இயேசுவிடம் கேட்ட அடையாளம் என்ன என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். யூதர்கள் இயேசுவிடம் "தான்தான் மெசியா" என்று நிரூபிக்க அடையாளத்தைக் கேட்கிறார்கள். ஆனால் இயேசுவோ தான்தான் மெசியா, வாக்களிக்கப்பட்ட இறைவன் என்பதை தன்னுடைய போதனைகளின் வழியாக, அன்புப் பணியாக பலமுறை நிரூபித்துக் காட்டினார். இதைப் புரிந்துகொள்ளாமல்தான் அவர்கள் இயேசுவிடம் அடையாளத்தைக் கேட்கிறார்கள். அதனால்தான் இயேசு அவர்களிடம் "யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் தரப்படமாட்டது" என்று பதிலளிக்கிறார்.

நம்மூர்களில் சொல்லப்படும் பழமொழி இது, "தூங்குகிறவனைக் கூட எழுப்பி விடலாம், ஆனால் தூங்கிறவன்போன்று நடக்கிறவனை எழுப்பிவிட முடியாது". ஆம், யூதர்கள் இயேசுதான் மெசியா என்று அறியாமலில்லை. அவர்கள் இயேசுவை அறியாதவர்கள் போன்று/ தூங்குகிறவர்கள் போன்று காட்டிக்கொண்டார்கள். அதனால்தான் மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகிறது. ஆகவே நாம் யூதர்களைப் போன்று அல்லாமல், இயேசுதான் உண்மையான மெசியா என நம்பி ஏற்றுக்கொள்வோம்.

இங்கே இயேசு எதற்காக யோனாவை முன்னிலைப் படுத்துகிறார் என்பது நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. யோனா நினிவே என்னும் புறவினத்து மக்கள் வாழும் பகுதியில் இறைவனுடைய வாக்கை எடுத்துரைத்தவர். அவர் போதித்ததைக் கேட்ட நினிவே நகர மக்கள் உடனே மனம் மாறினார்கள். இயேசுவோ யோனாவையும் விடப் பெரியவர், இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர். அப்படியிருந்தும் அவரை யூதர்கள் நம்பவில்லை. அதனால்தான் இயேசு அவர்களைக் கண்டிக்கிறார்.

இயேசுவைப் பின்தொடர்பவர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையைக் கேட்கின்றோம், திருப்பலியில் கலந்துகொள்கிறோம். ஆனால் இயேசுதான் உண்மையான மெசியா என ஏற்றுக்கொள்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

1யோவான் 5:1 ல் வாசிக்கின்றோம், "இயேசுதான் மெசியா என்று நம்புவோர் கடவுளிடமிருந்து பிறந்தவர்" என்று. ஆகவே இயேசுதான் உண்மையான மெசியா என நம்பி ஏற்றுக்கொள்வோம். அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
"யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்" (லூக்கா 11:30)

-- யோனா இறைவாக்கினர் பற்றிய கதை விவிலியத்தில் "யோனா" என்னும் நூல் வடிவத்தில் உள்ளது. யோனா எந்த விதத்தில் "அடையாளமாய்" இருந்தார் எனப் பார்க்கும்போது, மூன்று கருத்துக்கள் வெளிப்படுகின்றன. முதலில் யோனாவைப் பெரியதொரு மீன் விழுங்கிற்று; கடவுளின் கட்டளைப்படி யோனாவை உயிருடன் கரையிலே கக்கிற்று. இதை அடையாளமாகக் கருதினால் இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி இதனால் குறிக்கப்படுகிறது எனலாம். இரண்டாவது, யோனா நினிவே நகருக்குச் சென்று அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டுவிட்டு மனமாற்றம் அடைந்து, கடவுளிடம் திரும்பவேண்டும் என போதித்ததை நாம் அடையாளமாகக் கருதலாம். இயேசுவும் மக்கள் மனமாற்றம் பெற்று இறையாட்சியில் புக வேண்டும் என போதித்தார். மூன்றாவது, யோனா நினிவே மக்கள் மீது கடவுளின் தண்டனை வரும் எனப் போதித்ததை அடையாளமாகக் கொள்ளலாம். அப்படியென்றால், கடவுளாட்சியை ஏற்காதோர் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள் என இயேசு கூறியதைக் குறிப்பதாக விளக்கலாம்.

-- இயேசு குறிப்பிடுகின்ற "தலைமுறையினர்" யார்? முதலில் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களே அவர்கள் எனலாம். மேலும், லூக்கா நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அங்கே குறிக்கப்படுகிறார்கள் எனலாம். தொடர்ந்து, இக்கால உலகில் வாழ்கின்ற நாமும் அத்தலைமுறையினருள் அடங்குவோம் எனலாம். எனவே, இயேசுவின் சொற்கள் பண்டைக் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொருந்தும். அந்த இரு காலங்களையும் நாம் மனத்தில் கொண்டு இயேசுவின் போதனையை இக்காலத்தில் வாசிக்கும்போது நாமும் இயேசு குறிப்பிட்ட "தலைமுறையினராக" மாறுகிறோம். நமக்கும் இயேசு அடையாளமாக இருக்கிறார். அவர் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து நமக்குத் தம் உயிரில் பங்களிக்கிறார் என்பது நம் நம்பிக்கை. மேலும் நாம் மனமாற்றம் பெற்ற மக்களாக மாறி இறையாட்சியின் மதிப்பீடுகளை நம் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டிட அழைக்கப்படுகிறோம். தொடர்ந்து, நாம் தவறிழைத்தாலும் நம்மை இடையறாது அணுகிவந்து நம்மில் நற்சிந்தனைகளையும் நற்செயல்களையும் தூண்டியெழுப்புகின்ற சக்தியாக இயேசு உள்ளார். இந்த வேறுபட்ட விதங்களில் நாம் கடவுளின் உடனிருப்பை நம் வாழ்வில் உணர்ந்து, அதிலிருந்து பிறக்கும் மதிப்பீடுகளுக்கு ஏற்ப வாழ்ந்திட வேண்டும். இயேசு என்னும் அடையாளம் நம் வாழ்வை மாற்றியமைக்கின்ற வெற்றிச் சின்னமாக மாறிட வேண்டும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
பெரியவர்

நாளைய முதல் வாசகத்தில் (காண். கலா 4:22-5:1) தூய பவுல் ஆகார் மற்றும் சாரா என்ற இரண்டு முதல் ஏற்பாட்டுப் பெண்களை எடுத்து, 'அடிமைப் பெண்' - 'உரிமைப் பெண்' என உருவகம் செய்து, இரண்டு வகை பிறப்பு நிலை பற்றி சொல்கிறார்: 'இயல்பான முறைப்படி பிறந்தவன்' - 'வாக்குறுதியின்படி பிறந்தவன்.'

இயல்பாய் நடக்கும் எல்லா விஷயங்களும் நம் வாழ்வைக் கவர்வதில்லை.

உதாரணத்திற்கு, இயல்பாய் உதிக்கும் அல்லது மறையும் சூரியன், தோன்றி வீழும் பூக்கள்.

ஆனால், நமக்கு வாக்களிக்கப்பட்டு, நாம் எதிர்பார்த்து நின்று பார்க்கும் ஒன்று அப்படியே மனதில் பதிந்துவிடுகிறது.

உதாரணத்திற்கு, வெளிநாட்டிலிருந்து வரும் நம் நண்பர் அல்லது உறவினர்.

நாளைய நற்செய்தியில் (லூக் 11:29-32), யோனா-சாலமோன்-இயேசு என மூவர் ஒப்பீடு செய்யப்படுகின்றனர்.

யோனாவும், சாலமோனும் இயல்பு நிலை மக்கள்.

இயேசுவோ வாக்குறுதியின் மகன்.

ஆகவே அவர் மற்றவர்களைவிடப் பெரியவர்.


Fr. Yesu Karunanidhi.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!