Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   13  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 27ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 22-29

சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப் பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது. நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். வெளிப்பட இருந்த அந்த நம்பிக்கையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது.

இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது. இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை.

ஏனெனில், கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள்.

இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 105: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 8)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (லூக் 11: 28)

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்காலத்தில் இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பிக் கூறினார்.

அவரோ, "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

சிந்தனை

இன்றைக்கு பலருக்கு குழப்பத்தை தருவதுவே இந்த பகுதியாக அமைந்துள்ளது. இறைவார்த்தையை கேட்டு நடப்பவர்கள் எல்லாரும் என்னுடைய உறவினர்கள் என்று. இதனால் தன்னுடைய தாயை இல்லையென்று சொல்லவில்லை. அந்த அன்னையும் இறைவார்த்தையை கேட்டு நடந்தார்கள். இதோ உமது அடிமை உமது வார்த்தையின் படியே ஆகட்டும் என சொல்லி தன்னை ஒப்புக் கொடுத்தார்கள்.

கன்னி கருத்தாங்கி ஒரு மகனை பெற்றெடுப்பார், இதுவே அடையாளம் என்று தரப்பட்டுள்ளது. இந்த இறைவாக்கை நம்பி தன்னை அர்ப்பணிக்கின்றார்கள். எனவே அவர்கள் இறைவனின் தாயே. அதைவிட அந்த இறைவார்த்தையை ஏற்று வாழ முன்வரும் ஒவ்வொருவருமே பேறு பெற்றவர்கள் தான். இறைவார்த்தையை கேட்போம், அசைபோடுவோம். வாழ்வாக்குவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 பேறுபெற்றோர் யார்?

ஓர் ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஊருக்கு வெளியே பெரிய காய்கறித் தோட்டம் ஒன்று இருந்தது. அந்த தோட்டத்தில் வேலையாட்கள் இருவர் இருந்தார்கள்.

அந்த இருவரில் ஒருவன் தன்னுடைய எஜமானனைப் பார்த்தவுடன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவான். அவரிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசி அவருக்கே தெரியாமல் காரியம் சாதிப்பான். ஆனால் அவர் அங்கிருந்து போய்விட்டால் அவ்வளவுதான், ஒருவேலையும் செய்யாமல் சோம்பேறித்தனமாய் சுற்றுவான். அது என்னவோ அவனைத் தான் எஜமானனுக்குப் பிடித்திருந்தது.

இன்னொரு வேலையாளோ தன் வேலையுண்டு, காரியமுண்டு என்று இருப்பான். கடின உழைப்பாளி. தன்னுடைய எஜமானன் வந்தாலும்கூட சிறிதாக மரியாதை செலுத்துவதோடு சரி, வேறு ஒன்றும் செய்யமாட்டான். இதனால் அந்த பணக்காரருக்கு இரண்டாவது வேலையாளைக் கொஞ்சம் பிடிக்கவில்லை. "என்ன இவன், நாம் வருவதைக்கூட கண்டுகொள்ளாமல் இப்படி இருக்கிறானே" என்று உள்ளுக்குள் புழுங்கித் தள்ளினார்.

நாட்கள் சென்றன. ஒருநாள் அந்த பணக்காரர் திடிரென்று தன்னுடைய காய்கறித் தோட்டத்திற்கு வருகை புரிந்தார். அங்கே முதலாவது வேலையாளோ, தண்ணீர் தோட்டத்திற்குப் பாய்ந்து, அருகே இருந்த தரிசு நிலத்திற்கு பாய்வதைக்கூட அறியாமல், ஒரு மரத்திற்குக்கீழே துண்டை விரித்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்ததும் அந்த பணக்காரருக்கு சரியான கோபம் வந்தது.

உடனே அருகே கிடந்த ஒரு கம்பை எடுத்து, அவனை அடிஅடியென அடித்தார். "உன்னை நான் மிகவும் நம்பினேனே. நீ இப்படி நடந்துகொள்வாய் என்று கொஞ்சமும் நம்பவில்லை" என்று சொல்லி, அவனை வேலையிலிருந்து தூக்கினார்.

ஆனால் அவர் இரண்டாவது வேலையாளைப் பார்த்தபோது, அவன் தன்னுடைய வேலையை மிக மும்முரமாகச் செய்துகொண்டிருந்தான். தோட்டத்திலிருந்த காய்கறிகளை எல்லாம் பறித்து, சந்தைக்கு அனுப்பிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த்தும் அவருக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. உடனே அவர் அந்த பணியாளரிடம் சென்று, "இதுவரை உன்னை நான் தவறாக நினைத்துவிட்டான். ஆனால் இப்போதுதான் புரிந்தது நீ எவ்வளவு கடின உழைப்பாளி, பொறுப்புள்ளவன் என்று. எனவே நான் உன்னை இந்த காய்கறித் தோட்டம் முழுமைக்கும் பொறுப்பாளராக நியமிக்கிறேன்" என்றார்.

இது விவேகானந்தர் சொன்ன ஓர் உருவகக் கதை. இந்தக் கதையில் வரும் எஜமானன் கடவுள், எஜமானனைக் கண்டதும் குலைவதும், அவரைப் பற்றி உயர்வாகப் பேசிவிட்டு, அவர் சென்றபிறகு ஒருவேலையும் செய்யாது இருக்கின்ற வேலையாள் கடவுளின் வார்த்தையைக் கேட்டுவிட்டு அத்தோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று திருப்திகொள்பவர்களைப் போன்றவர்கள். எஜமானன் கொடுத்த வேலையை கண்ணும் கருத்துமாய் செய்கின்ற வேலையாளோ இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி தங்களுடைய வாழ்வை அமைத்துக்கொள்பவர்களைப் போன்றவர்கள். இவர்கள்தான் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்பவர்கள் என்பார் அவர்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதித்துக் கொண்டிருத்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர் எழுந்து, "உம்மைக் கருத்தாங்கி பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்கிறார். அதற்கு ஆண்டவர் இயேசுவோ, "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்பவர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்கிறார்.

இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு ஒருசில உண்மைகளை உணர்த்துக்கின்றன. அதில் முதலாவது நாம் இயேசுவின் உறவினர் என்பதாலோ அல்லது கிறிஸ்தவர்கள் என்பதால் மட்டும் பேறுபெற்றவர்கள் ஆகிவிடமுடியாது. மாறாக இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கும்போதுதான் பேறுபெற்றவர்கள் ஆகமுடியும் என்பதாகும்.

ஏனென்றால் யூதர்கள் தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கடவுளின் மக்கள் என நினைத்துக்கொண்டு எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் தாங்கள் கடவுளின் மக்கள்தான் என்று நினைத்து வாழ்ந்தார்கள். இதற்கு திருமுழுக்கு யோவான் மிகத் தெளிவாக பதிலளிக்கிறார். "ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ளவேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்" என்கிறார் ( மத் 3:9). இயேசுவும் இதே கருத்தைதான் இங்கே வலியுறுத்துகிறார். ஆகவே நம் குலப் பெருமையோ அல்லது நாங்கள் பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் அதனால் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று பெருமை பேசிக்கொண்டிருக்காமல் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்க முயல்வோம்.

இயேசு கூறும் இரண்டாவது உண்மை. தன்னைப் பெற்றெடுத்த அன்னை மரியாள் தன்னை பெற்றெடுத்தனால் மட்டும் பேறுபெற்றவள் இல்லை, இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்ததாலும் பேறுபெற்றவர் ஆகிறார் என்பதாகும். ஆம், அன்னை மரியாள் தன் வாழ்நாள் முழுவதும் இறைவார்த்தையின்படி நடந்தவள். அதனால் அவள் இரண்டு விதங்களில் பேறுபெற்றவள் ஆகிறாள்.

ஆகவே, நாம் யூதர்களைப் போன்று பழம்பெருமை பேசிக்கொண்டிருக்காமல் இறைவார்த்தையைக் கேட்டு, அன்னை மரியைப் போன்று நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

தூய எட்வர்ட் (அக்டோபர் 13)


"ஏழைக்கு இரங்கி உதவி செய்கின்றவர், ஆண்டவருக்கு கடன் கொடுக்கின்றார்" (நீமொ 19:15)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் எட்வர்ட், பதினோறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தை ஆண்டுவந்த எதெல்ரெட் என்பவருக்கு மகனாக 1003 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தாயார் எம்மா என்பவர் ஆவார். எட்வர்டுக்கு முன்பாக எல்லாமே கொட்டிக்கிடந்தாலும் அவர் மனம் இறைவனையும் ஏழைகளையும்தான் அதிகமாக நாடியது.

1013 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின்மீது டானிஸ் என்ற இனக்குழுவினரின் படையெடுப்பு நடைபெற்றது. அந்தக் குழுவானது எட்வர்டையும் அவருடைய பெற்றோரையும் மக்களையும் நாடு கடத்தி நார்மண்டி என்ற இடத்தில் குடியமர்த்தினர். நார்மண்டியில் குடியமர்த்தப்பட்ட சில நாட்களிலேயே எட்வர்ட்டின் தந்தை எதெல்ரெட் இறந்துபோனார். அவருக்குப் பின் 1016 ஆம் ஆண்டு எட்வர்ட்டின் தாயாரை கனுட் என்பவர் கரம்பிடித்தார். அவர் இங்கிலாந்தை ஆண்டுவந்த டானிஸ் இனக்குழுவின்மீது போர்த்தொடுத்து இங்கிலாந்தை தனக்குச் சொந்தமாக்கினார். சில காலம் அவர் இங்கிலாந்து நாட்டின் அரசராக இருந்து பணியாற்றிவிட்டு இறந்துபோனார். இதனால் அரசர் பதவி வெற்றிடமாக இருந்தது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு 1042 ஆம் ஆண்டு, எட்வர்ட் இங்கிலாந்து நாட்டின் அரசரானார்.

1042 ஆம் ஆண்டிலிருந்து 1066 ஆம் ஆண்டு வரை, அதாவது இறக்கும்வரை ஏறக்குறைய 24 ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டின் அரசராக இருந்த எட்வர்ட் ஓர் அரசராய் வாழ்ந்ததை விடவும் துறவியாகத்தான் வாழ்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும். நிறைய ஆலயங்களைக் கட்டி எழுப்பினார்; இவரால் கட்டப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கட்டடம்தான் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள தூய பேதுரு ஆப்பேயாகும். எட்வர்ட் பக்தி நெறியில் சிறந்து விளங்கினார். இது மட்டுமல்லாமல் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கினார். தன்னுடைய வருவாயில் பத்திலொரு பங்கை ஆலய வளர்ச்சிப்பணிகளுக்காகவே கொடுத்தார். இப்படி ஜெபத்தையும் நற்செயலையும் தன்னுடைய இரு கண்களாகக் கொண்டு செயல்பட்ட எட்வர்ட் 1066 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக இவருடைய மனைவி மனம்வெதும்பி அழுதார். அப்போது எட்வர்ட் அவரிடம், "நான் இறக்கப்போகிறேன் என்று அழாதே, நான் இறக்கவில்லை, ஆண்டவரின் திருமுன் என்றும் உயிர்வாழப் போகிறேன்" என்றார். இதைக் கேட்டு அவருடைய மனைவி ஆறுதலடைந்தார். இவருக்கு 1161 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய எட்வர்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

செயலோடு கூடிய ஜெபவாழ்வு வாழ்வோம்


தூய எட்வர்டின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம், செயலோடு கூடிய ஜெபவாழ்வு வாழவேண்டும் என்பதாகும். இன்றைக்குப் பலர் இறைவனிடத்தில் ஜெபிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஜெபிப்பதற்கு ஏற்ற வாழ்க்கை வாழ்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுவது போல, "செயல்வடிவம் பெறாத ஜெபம், தன்னிலே உயிரற்றதாகிவிடும். ஆகவே, நாம் ஜெப வீரர்களாக மட்டுமல்லாமல், செயல்வீரர்களாகவும் மாறவேண்டும்.

பதினாறாம் நூற்றாண்டில், ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு நிலக்கிழாருக்கு மகனாகப் பிறந்தவர் மார்டின் தே போரஸ் என்பவர். 16 வயதிலேயே இறைவனின் சிறப்பான அழைப்பை உணர்ந்த இவர், டொமினிக்கன் சபையில் சேர்ந்து, ஏழைகள், தொழுநோயாளிகள் இவர்களுக்கு மத்தியில் முகம் கோணாமல் பணிசெய்து வந்தார். ஒருசமயம் மார்டின் ஒரு நோயாளியை தன்னுடைய அறைக்குத் தூக்கிக்கொண்டு வந்து, அவருடைய புண்களில் சோப்புப் போட்டுக் கழுவி, அவருக்கு மருத்துவ உதவியைச் செய்துகொண்டிருப்பதைப் பார்த்த, அவருடைய சபையைச் சார்ந்த சகோதரர் அவரிடம், "மார்டின்! நீ செய்யக்கூடாத காரியத்தை எல்லாம் செய்துகொண்டிருக்கின்றாய், இது நம்முடைய சபை ஒழுக்கத்திற்கு எதிரானது" என்றார்.

உடனே மார்டின் அந்த சகோதரரிடம், "இந்த மனிதனுடைய புண்களில் சோப்புக் கழுவினால் அது போய்விடும். ஆனால், நான் இந்த மனிதரைக் கண்டும் காணாமல் வந்துவிட்டால், அது மிகப்பெரிய பாவமாகிவிடும். அந்தப் பாவத்தை எந்த சோப்புப் போட்டுக் கழுவியும் போக்க முடியாது. அதனால்தான் இப்படிச் செய்கிறேன்" என்றார். மார்டின் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அந்த சகோதரரால் எதுவும் பேசமுடியவில்லை. முகம் கோணாமல் தொழுநோயாளிகள் மத்தியில் பணிசெய்த மார்டின் தே போரஸ் இறந்தபோது பெரு நகரே அழுதது.

வெறுமனே ஜெபித்துக்கொண்டு மட்டும் இருக்காமல், தொழுநோயாளர்களுக்கு மத்தியில் தொண்டு செய்து வாழ்ந்து வந்த மார்டின் தே போரஸ் நமக்கு ஒரு முன்மாதிரி.

ஆகவே, தூய எட்வர்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று செயல்வீரராக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யார் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்?

முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். ஒருசமயம் அவர் நீண்ட நாள் பயணமாக பக்கத்துக்கு நாட்டிற்குச் சென்றார். அவர் அங்கு சென்ற நேரத்தில் சாலையெங்கும் ஒரே குப்பைக் கூலமாக கிடந்தது. ஆனால் யாரும் அதைக் கண்டுகொள்வதாகத் இல்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வழியில் போய்க்கொண்டிருந்தார்கள். இது அந்த அரசருக்கு வியப்பைத் தந்தது. பின்னர் அவர் அந்த நாட்டு அரசரின் அரண்மனைக்குச் சென்றார். அங்கிருந்த அரசர் இவரை இன்முகத்தோடு வரவேற்று, நல்லமுறையில் உபசரித்தார்.

உபசரிப்பின் ஊடே பேச்சுவாக்கில், வந்தவர் அங்கிருந்த அரசரிடம், "மேன்மைதங்கிய அரசரே! உங்களிடத்தில் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்... நீங்கள் விரும்பினால் நான் அதைச் சொல்கிறேன்" என்றார். "ம்ம்ம், தயங்காமல் சொல்லுங்கள்" என்றார் உள்நாட்டு அரசர். "வேறொன்றுமில்லை. நான் என்னுடைய நாட்டிலிருந்து உங்களுடைய நாட்டிற்குள் வந்தபோது, எங்கு பார்த்தாலும் ஒரே குப்பைக் கூலமாக இருக்கக் கண்டேன். உங்களுடைய நாட்டில் யாரும் வீதிகளை, சாலைகளை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்களா?" என்று கேட்டார் வந்த அரசர். அதற்கு உள்ளாட்டு அரசர், "தெருக்களையும் சாலைகளையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று எத்தனை முறை இவர்களுக்குச் சொல்வது? யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்களே" என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

இதற்குப் பிறகு இருவரும் தூங்கச் சென்றார்கள். மறுநாள் காலை உள்நாட்டு அரசர் தூங்கி எழுந்து, வந்த அரசரைத் தேடித் பார்த்தபோது அவர் அங்கு இல்லை. உடனே அவர் தன்னுடைய படைவீரர்களை அனுப்பி, "அந்த அரசர் எங்கிருக்கிறார்?" என்று தேடித் பாருங்கள் என்று உத்தரவிட்டார். அவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அப்போது அவர்களுடைய கண்களை அவர்களாலேயே நம்ப முடியாத வண்ணம், அவர் தெருவில் கிடந்த குப்பைக் கூலங்களை எல்லாம் ஒன்றாகக் கூட்டி தீயிட்டு எரித்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்துவிட்டு படைவீரர்கள், ஓடிப்போய் தங்களுடைய நாட்டு அரசரிடம் போய் சொன்னார்கள். அவரோ, வந்தவர் நம்முடைய நாட்டில் இருக்கின்ற குப்பைகளைச் சுத்தம் செய்துகொண்டிருக்க, நாம் சுத்தம் செய்யாமல் இருந்தால் மக்களெல்லாம் என்ன நினைப்பார்கள்? என்று அவரும் தெருக்களில் கிடந்த குப்பையை ஒன்றாகக் கூட்டி, அவற்றைத் தீயிட்டு எரிக்கத் தொடங்கினார்.

தங்களுடைய அரசர் இவ்வாறு செய்வதைப் பார்த்த படைவீர்களும் அவரைப் போன்று குப்பை கூலங்களை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து நாட்டு மக்களும் தங்களுடைய வீடுகளுக்கு முன்பாக, தெருக்களில், சாலையோரங்களில் கிடந்த குப்பைகளைச் சுத்தம் செய்யத் தொடங்கியதும் நாடே சுத்தமானது.

சொல்லில் சிறந்த சொல் செயல் என்பார்கள். அந்த வகையில் வேறொரு நாட்டிலிருந்து வந்த அரசர் உள்நாட்டிலிருந்து வந்த அரசரைப் போன்று நாட்டை சுத்தமாக வைத்திருங்கள் என்று சொல்லி கொண்டிருக்காமல், அவரே சுத்தம் செய்யத் தொடங்கியதால், அவரை பார்த்துவிட்டு எல்லாரும் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். அதனால் நாடு சுத்தமானது.

ஒன்றைச் சொல்வதைவிடவும் அதை கடைப்பிடிப்பது இன்னும் சிறப்பானது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்கள் கூட்டத்திற்குப் போதித்துக் கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து ஒரு பெண்மணி, "உம்மைக் கருத்தாங்கி பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்கின்றார். அதற்கு இயேசு, "இறை இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைபிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்கின்றார்.

லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வு, நமக்கு ஓர் உண்மையை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. அது என்னவென்றால், ஒருவருக்கு அவருடைய பிறப்பினால் அல்ல, அவருடைய செயல்களால், அவர் வாழ்வினால் மட்டும் பெருமை சேரும் என்பதாகும். ஏனென்றால் இந்த நிகழ்விற்கு முன்பாக பரிசேயர்கள் இயேசுவை தேவையற்ற விதத்தில் விமர்சித்தார்கள். யூத குலத்தில் பிறந்தாலே மிகப்பெரிய பேறு என்று நினைத்த அவர்கள், இயேசுவுக்கு எதிராக என்னவெல்லாமோ செய்தார்கள். அதனால்தான் இயேசு, "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைபிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்கின்றார். அதாவது ஆபிராகாமின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு எப்படியும் வாழ்பவர்களையும் விடவும் எந்த குலத்தில் பிறந்தாலும் இறைவார்த்தையைக் கேட்டு நடப்பவர்கள் இன்னும் அதிகமாய் பேறுபெற்றவர்கள் என்கின்றார்.

நாம் நம்முடைய பிறப்பின் அடிப்படையில் பெருமை பாராட்டிக் கொண்டிருக்கின்றோமா? அல்லது இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கின்றவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இறைவார்த்தையைக் கேட்டு அதை கடைபிடிப்பவர்கள் ஆவோம், அதன்வழியாக இன்னும் அதிகமாகப் பேறுபெற்றவர்கள் ஆவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.



Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
கடவுளின் பிள்ளைகளாய்; கிறிஸ்துவின் உடன்பிறப்புக்களாய்


கலா 3: 22-29
லூக்கா 11:27-28

நாங்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள், நான் இந்த சபையை சார்ந்தவன், நான் அந்த முழுக்கு பெற்றவன், நான் இரட்சிக்கப்பட்டவன், என்றெல்லாம் பிதற்றிக்கொள்வதில் இல்லை - நாம் கடவுளுக்கு உரியவர்களா இல்லையா என்பது! ஏனெனில் யூதரென்றும், புறவினத்தாரென்றும், ஆணென்றும், பெண்ணென்றும், அடிமையென்றும், உரிமை குடிமக்களென்றும், எதுவும் இனி பொருள் தராது... பொருள் தரக்கூடியதெல்லாம் ஒன்றே: கிறிஸ்துவை நாம் அணிந்திருக்கிறோமா, அவராகவே நாம் மாறியிருக்கிறோமா, அவரது உடன்பிறப்புக்களாய், கடவுளின் பிள்ளைகளாய் நாம் மாறி வாழுகின்றோமா, வளருகின்றோமா என்பதே என்றும் பொருள் தரும் என்கிறார் பவுலடிகளார்.

கடவுளுக்குரியவர்களாய், கிறிஸ்துவுக்கு உரியவர்களாய், உணர்வது என்பது ஒரு ஆன்மிக அனுபவம், அது வெறும் பெயரளவில் நிகழ்வது அல்ல. நான் உங்களை பணியாளர்கள் என்று கருதவில்லை, என் நண்பர்களாய் உங்களை அனுப்புகிறேன் என்று கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் பார்த்து கூறுகிறார். அவரது அன்பில் நிலைத்திருக்க நம்மை அழைக்கிறார். நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்; நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள் என்ற உடன்படிக்கையின் நிறைவல்லவா அவர்! ஆகவே, கடவுளுக்கு உரியவர்களாக இருப்பதும், கிறிஸ்துவுக்கு நெருக்கமானவர்களாக இருப்பதும், எனக்குள்ளாக இருக்கவேண்டிய ஒரு அவா, ஏக்கம், கனவு... அதை நோக்கி வளர்வது என் பொறுப்பு!

ஆம் இது தானாக வருவது கிடையாது, நானாக வளர்த்துக்கொள்ள வேண்டியது! நான் திருமுழுக்கு பெற்றுவிட்டேன் என்பதனால் மட்டுமே நான் கடவுளின் பிள்ளையாகிவிட முடியாது, அந்த திருமுழுக்கின் அருளிலே நான் வளரும்போதுதான் அந்த அடையாளத்தை நான் உறுதி செய்கிறேன். கிறிஸ்துவின் மனநிலையில் நான் வளரவேண்டும்... அவரது வார்த்தைகளை கேட்டு, அதை மனதில் நிறுத்தி, அதை நான் வாழ்வாகும் போதுதான் உண்மையிலேயே நான் கிறிஸ்துவின் உடன்பிறப்பாகிறேன், அவரது உறவாக மாறுகிறேன்.

இதைதான் கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார்... என்னை பெற்றெடுத்ததால் மட்டும் அவள் உயர்ந்துவிடவில்லை, ஆனால் இறைவார்த்தையை கேட்டதால், அதை மனதில் நிறுத்தியதால், அதன்படி வாழ முன்வந்ததால், முற்றிலும் அந்த வார்த்தைக்காகவே தன்னையே அர்பணித்ததால், மரியாள் கடவுளுக்குரியவளாகிறாள், கிறிஸ்துவின் உறவாகிறாள்!

வார்த்தைக்கு செவிமடுப்போம், வார்த்தையை வாழ்வாக்குவோம், கடவுளின் பிள்ளைகளாவோம், கிறிஸ்துவின் உறவினர்களாவோம், அவரது உடன்பிறப்புக்களாவோம்.

(Rev. Father: Antony Christy SDB)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!