Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   12  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 27ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை கொள்வோரும் பங்கு பெறுவர்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-17

சகோதரர் சகோதரிகளே, நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நம்பிக்கை கொள்ளும் பிற இனத்தாரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குவார் என்பதை முன்னறிந்துதான் மறைநூல், "உன் வழியாக மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" என்னும் நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது.

ஆகவே நம்பிக்கை கொண்ட ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை கொள்வோரும் பங்கு பெறுவர். திருச்சட்டம் சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்; ஏனெனில், "திருச்சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதோர் சபிக்கப்படட்டும்!" என்று எழுதியுள்ளது. சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை என்பதும் தெளிவு.

ஏனெனில், "நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்." திருச்சட்டம் நம்பிக்கையை அடிப்படையாய்க் கொண்டது அல்ல. மாறாக, "சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர்" என்று எழுதியுள்ளது.

"மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்" என்று எழுதி உள்ளவாறு, நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார்.

ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் பிற இனத்தார்க்கும் கிடைக்கவும், வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை நாம் நம்பிக்கையின் வழியாய்ப் பெற்றுக்கொள்ளவுமே இவ்வாறு செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 111: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 5b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். பல்லவி

5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; 6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (யோவா 12: 31b-32)
அல்லேலூயா, அல்லேலூயா! இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்கு உள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26

அக்காலத்தில் மக்களுள் சிலர் இயேசுவைக் குறித்து, "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.

வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.

இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: "தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?

பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!

வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார். என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார். ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், "நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்" எனச் சொல்லும்.

திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
புறந்தள்ளப்படவேண்டிய விமர்சனங்கள்!

துருக்கி நாட்டில் பிறந்தவர் முல்லா நசுருதீன். வேடிக்கையாகக் கதைகள் சொல்லி மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யக்கூடியவர். அப்படிப்பட்டவரை அவர் குள்ளமாக இருக்கிறார் என்பதற்காக மக்களில் ஒருசிலர் ஏளனமாகவும் இளக்காரமாகவும் பார்த்தார்கள். மட்டுமல்லாமல் அவரிடத்தில் அவ்வப்போது வந்து இடக்கு முடக்கான கேள்விகளையும் கேட்டார்கள். அப்போதெல்லாம் முல்லா நசுருதீன் தன்னுடைய சாதூர்யத்தால் அவர்களை வெற்றிகொண்டார்.

ஒரு சமயம் அவர் வேலை விசயமாக வெளியே கிளம்பிக் கொண்டிருக்கும்போது, ஒருவன் வேகவேகமாக அவரிடத்தில் வந்தான். "முல்லா அவர்களே! எனக்கொரு பிரச்சனை ஏற்பட்டிருக்கின்றது. அந்தப் பிரச்சனையை உங்களால்தான் தீர்த்து வைக்க முடியும்" என்றான். "என்ன பிரச்சனை? வேகமாகச் சொல்லுங்கள்" என்றார் முல்லா. "வேறொன்றுமில்லை, நேற்று இரவு நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது, பெரிய எலி ஒன்று என்னுடைய வாய்க்குள் நுழைந்துவிட்டது. அதை எப்படி வெளியே எடுக்கலாம் என்பது தொடர்பாகத்தான் உங்களிடத்தில் ஆலோசனை கேட்க வந்திருக்கிறேன்" என்றான்.

வந்தவன் தன்னிடத்தில் விதண்டாவதாம் செய்யத்தான் வந்திருக்கின்றான் என்பதை உணர்ந்த முல்லா அவனிடம், "வாய்க்குள் போன எலியைப் பிடிக்க நீங்கள் ஒரு பூனையைப் பிடித்து விழுங்கி விடுங்கள். பூனை எலியைப் பிடித்து கொன்றுவிடும்" என்றார். அவ்வளவுதான். முல்லாவைக் கேலி செய்ய வந்தவன் துண்டக் காணோம் துணியக் காணோம் என்று ஓடிவிட்டான்.

சில சமயங்களில் நம்மிடம் விதண்டாவாதம் செய்பவர்களையும் தேவையில்லாமல் நம்மை விமர்சிப்பவர்களையும் விவேகமாகவும் சாதூர்யமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார். அதைப் பார்த்த மக்களெல்லாம் வியந்து நிற்கின்றார்கள். ஆனால், பரிசேயக் கூட்டமோ, "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார்" என்று இயேசுவை விமர்சிகின்றது. தன்னை இவ்வாறு விமர்சித்த பரிசேயக் கூட்டத்திற்கு இயேசு என்ன பதில் சொன்னார், இயேசு யாரைக் கொண்டு பேயை ஓட்டினார் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு பேச்சிழந்த மனிதரிடமிருந்து பேயை ஓட்டியதும், பேச இயலாத அந்த மனிதர் பேசத் தொடங்குகின்றார். இதனால் மக்களெல்லாம் இயேசுவுக்குப் பின்னால் செல்கின்றார்கள். இதைப் பார்த்து பொறாமை கொள்ளும் பரிசேயர்கள், இயேசுவை எப்படி வீழ்த்தலாம் என்று சூழ்ச்சி செய்து, அவர் "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார" என்று விமர்சிக்கின்றார்கள். உடனே இயேசு தன்னை இவ்வாறு விமர்சித்தவர்களைப் பார்த்து மூன்றுவிதமான பதில்களைச் சொல்லி அவர்களை வாயடைக்கின்றார்.

இயேசு பரிசேயர்களுக்குச் சொல்லும் முதல் பதில், "தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் பாழாய்போய்விடும் என்பதாகும். ஓர் அரசாங்கம் எப்போதும் தான் வளரவேண்டும் என்றுதான் நினைவுகுமே ஒழிய, வீழவேண்டும் என்று நினைக்காது. அந்த வகையில் சாத்தான் ஒருவரைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அதன்மூலம் அவரை வெற்றிகொள்ள நினைக்குமே ஒழிய, அவரைவிட்டு வெளியேறி வீழவேண்டும் என்று நினைக்காது. இயேசு சாத்தானின் தந்திரங்களை முறியடிப்படிப்பவர், அப்படியிருக்கும்போது பரிசேயர்கள் சொல்வதுபோன்று அவர் எப்படி பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டமுடியும்?. இது சாத்தானுக்கு எதிராகத் சாத்தானே செயல்படுவது போன்று இருக்காதா? என்பதுதான் இயேசு அவர்களுக்கு முன்பாக வைக்கின்ற பதிலாக இருக்கின்றது.

இயேசு பரிசேயர்களுக்கு கொடுக்கக்கூடிய இரண்டாவது பதில், "நான் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறேன் என்றால், உங்களைச் சார்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார்கள்?" என்பதாகும். பரிசேயக் கூட்டத்தைச் சார்ந்த ஒருசிலர் மந்திர சக்தியால் பேய்களை ஒட்டிவந்தார்கள். அவர்களை எல்லாம் பரிசேயர்கள் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் இயேசு பேய்களை ஓட்டியபோது மட்டும் அவர்கள் அதைப் பெரிய கொலைக் குற்றம்போல் பார்ப்பதை நினைத்துத்தான் இயேசு அவர்களுக்கு தக்க பதில் தருகின்றார்.

பரிசேயர்களுக்கு இயேசு கொடுக்கின்ற மூன்றாவது பதில், நான் தூய ஆவியின் வல்லமையால் பேய்களை ஓட்டுகின்றேன் என்பதாகும். இயேசு தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு சென்ற இடங்களில் எல்லாம் நன்மையைச் செய்தவர், அப்படியிருக்கும்போது அவரை தவறாகச் சித்தரிப்பதினால் இயேசு அவர்களுக்கு தக்க பதில் தருகின்றார். இவ்வாறு இயேசு தன்னைக் காரணமின்றி விமர்சித்தவர்களுக்கு சரியான பதில் சொல்லி அவர்களை வாயடைக்கின்றார். நாமும் நம்மைக் காரணமின்றி விமர்சிப்பவர்களை இயேசுவைப் போன்று தக்க பதில் சொல்லி வாயடைப்பதுதான் சிறந்தது.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று நம்மைத் தேவையில்லாமல் விமர்சிப்பவர்களை முன்மதியோடு எதிர்கொண்டு வெற்றிகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼


தூயவர்களான பெலிக்ஸ் மற்றும் சிப்ரியான் (அக்டோபர் 12)

"ஆண்டவரே என் ஆயர்! எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைக்கு எனை அழைத்துக் செல்வார்" (திபா 23: 1-2)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூயவர்களான பெலிக்ஸ் மற்றும் சிப்ரியான் இருவரும் ஐந்தாம் நூற்றாண்டில், வடக்கு ஆப்ரிக்காவில் வாழ்ந்து வந்த ஆயர் பெருமக்கள். பெலிக்ஸோ வயதில் மூத்தவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அப்படியிருந்தபோதும் அவர் இறைமக்கள் சமூகத்தைக் கட்டியெழுப்பி, அவர்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்தியவர். சிப்ரியானோ இளையவர். இவர் பல நேரங்களில் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து, சிறைச்சாலையில் இருந்த கைதிகளைச் சந்தித்து, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி, அவர்களை ஆற்றுப்படுத்தியவர்.

இப்படி இருவரும் தாங்கள் இருந்த இடத்தில் மிகச் சிறப்பான பணிகளைச் செய்துகொண்டிருக்கும்போது, ஹுனேரிக் என்ற மன்னன் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டான். கிறிஸ்துவின் கடவுள் தன்மையை மறுக்கின்ற ஆரியபதத்தைப் பின்பற்றி வந்த இவன் கிறிஸ்துவை உண்மைக் கடவுளாக ஏற்றுக்கொண்டவர்களை கொன்றொழிக்கத் திட்டமிட்டான். எனவே ஆயர்களான பெலிக்ஸ் மற்றும் சிப்ரியானையும் அவர்களோடு இருந்த ஏறக்குறைய 5000 க்கும் ஏற்பட்ட கிறிஸ்தவர்களையும் லிப்யா என்ற பாலைவனத்திற்கு இழுத்துச் சென்று, அங்கிருந்த பாதாள அறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்து கொன்றுபோட்டான்.

இவ்வாறு ஆயர்களான பெலிக்ஸ் மற்றும் சிப்ரியான் உட்பட ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆண்டவர் இயேசுவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்தார்கள். அவர்கள் பாலைவனத்தில் இழுத்துச் செல்லப்பட்டபோது திருப்பாடல்களை பாடிக்கொண்டும் ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொண்டும் சென்றார்கள்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூயவர்களாக பெலிக்ஸ் மற்றும் சிப்ரியானின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

விசுவாசத்திற்காக உயிரையும் இழக்கத் துணிதல்

தூயவர்களான பெலிக்ஸ் மற்றும் சிப்ரியானின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட விசுவாசத்திற்காக தங்களுடைய உயிரையும் இழக்கத் துணிந்ததுதான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்வார், "தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என் பொருட்டு தம்மையே அழித்துகொள்கின்ற எவரும் வாழ்வடைவார்" (மத் 16: 25). தூயவர்களான பெலிக்சும் சிப்ரியானும் ஆண்டவர் இயேசுவுக்காக தங்களுடைய உயிரை இழந்தார்கள். அதனால்தான் அவர்கள் இன்றைக்கு விண்ணகத் திருக்கூட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். நாம் இயேசுவுக்காக உயிரை இழக்கத் துணிகின்றபோது வாழ்வடைவோம் என்பது உறுதி.

இந்த இடத்தில் 2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் கந்தமால் கலவரத்தின்போது ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி மறைசாட்சியாக மரித்த அக்பர் நாயக்கைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அக்பர், மொண்டகியா (Mondakia) என்ற இடத்தில் மறைபோதகப் பணியைச் செய்துவந்த பாப்டிஸ்ட் சபையைச் சார்ந்த ஒரு போதகர். 2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23 ஆம் நாள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக பெரியளவில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, அக்பர் தன்னுடைய மனைவி மற்றும் மகனை காட்டில் இருந்த ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி, அவர் மட்டும் தைரியமாக வீட்டில் இருந்தார். மதவெறியர்கள் தன்னைக் கண்டால், நிச்சயம் அடித்தே கொன்றுவிடுவார்கள் என்று அவருக்குத் தெரியும். இருந்தாலும் அவர் தைரியமாக இருந்தார்.

மதவெறியர்கள் வாளோடும் ஈட்டியோடும் தீப்பந்தத்தோடும் அக்பருடைய வீட்டுக்கு முன்பாக வந்தார்கள். வீட்டில் அவர் இருப்பது கண்டு, அவரைத் தெருவில் இழுத்துப் போட்டார்கள். பின்னர் அவரைத் தெருவில் தரதரவென இழுத்துச் சென்று, ஒரு பாழடைந்த கட்டடத்தில் போட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி, கொன்று போட்டார்கள். அடுத்த நாள் காலையில் அக்பருடைய மனைவியும் அவருடைய மகனுடைய வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் அங்கு இல்லை, மாறாக சாம்பலாகக் கிடந்தார். இதைக் கண்டு அவர்கள் இருவரும் கலங்கினார்கள். ஆனாலும் அவர்கள் தங்களுடைய விசுவாசத்தைக் கைவிடாமல், ஆண்டவருக்கு இயேசுவுக்கு தொடர்ந்து சான்று பகர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.

கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிந்த அக்பர் நாயக்கின் விசுவாசத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. அவரிடத்தில் இருந்த மனவுறுதி, கிறிஸ்துவுக்காக எதையும் செய்யத் துணிந்த மனதிடம் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

ஆகவே, தூய பெலிக்ஸ் மற்றும் சிப்ரியானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
விமர்சனங்களை விவேகத்துடன் எதிர்கொள்வோம்.

இளைஞர் ஒருவர் ஒருநாள் தான் வசித்து வந்த பெருநகரில் இருந்த சீன உணவகத்திற்குச் சென்று, அங்கே இருந்த நிர்வாக இயக்குனரை (Managing Director) சந்தித்தார்.

அவரிடம், "ஐயா! இந்த உணவகத்தில் தவளைக்கால் சூப் மிகவும் பிரபலம் என்று கேள்விப்பட்டேன். நான் நாள் ஒன்றுக்கு நூறு தவளைக் கால்களைத் தருகிறேன். அதற்கு ஈடாக எனக்கு நீங்கள் எவ்வளவு பணம் தருகிறீர்கள்?" என்று கேட்டுப் பார்த்தார். அதற்கு அவர் சற்று வியப்புடன், "ஒருநாளைக்கு நூறு தவளைக் கால்களைத் தரமுடியுமா?, அது எப்படி சாத்தியம்?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர், "என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் பெரிய குளம் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து எப்போது பார்த்தாலும் நிறைய தவளைகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கின்றது, அதனால்தான் ஒருநாளைக்கு நூறு தவளைக் கால்களைத் தருகிறேன்" என்றார்.

அந்த இளைஞர் சொல்வதில் உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்த நிர்வாக இயக்குனர் வாரத்திற்கு ஐநூறு தவளைக் கால்களை அவர் தருவது என்று ஒப்பந்தத்திற்கு வந்தார்.

அடுத்த நாள் காலை. சீன உணவம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வேகவேகமாக உள்ளே வந்த அந்த இளைஞர், உணவகத்தின் நிர்வாக இயக்குனரைச் சந்தித்து, தான் வைத்திருந்த பையிலிருந்து மூன்று தவளைகளை எடுத்து வெளியே போட்டார். அதற்கு நிர்வாக இயக்குனர், "இது என்னது?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர், "என்னுடைய வீட்டுக்குப் பக்கத்திலிருந்த குளத்திலிருந்து பிடித்த தவளைகள் இவை". தொடர்ந்து அந்த இளைஞர் அவரிடத்தில் சொன்னார், "ஐயா ஒரு தவறு நடந்துவிட்டது. குளத்திலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுவிட்டு, குளத்தினுள்ளே ஏராளமான தவளைகள் இருக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன், ஆனால் உள்ளே இறங்கிப் பார்த்தபோதுதான் தெரிந்து, இந்த குளத்தில் வெறும் மூன்று தவளைகள்தான் இருக்கிறது" என்று கவலை தோய்ந்த குரலில் சொன்னார்.

மேம்போக்காகப் பார்த்தால் நம்மை நோக்கி வரும் விமர்சனங்கள், வசை மொழிகள் ஏராளம் என்றுதான் தோன்றும். ஆனால் மிக நுட்பமாக ஆராந்து பார்த்தால், அவையெல்லாம் ஒன்றுமில்லை, அவற்றைக் கண்டு நாம் கலங்கத் தேவையில்லை என்பதை மேலே வரும் நிகழ்வு நமக்கு மிக நுட்பமாக எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் மக்களுள் சிலர் ஆண்டவர் இயேசுவைப் பார்த்து, "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்" என்று விமர்சனம் செய்கிறார்கள். அதற்கு ஆண்டவர் இயேசுவோ, "தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?" என்று அவர்களிடம் மறுகேள்வி கேட்டு, தன்னை விமர்சனம் செய்தவர்களை திக்குமுக்காடச் செய்கிறார்.

இயேசுவைப் பொறுத்தளவில் தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்கள் யாவும் பொய்யான, பொறாமையினால் எழுந்த விமர்சனங்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர் அத்தகைய பொய்யான விமர்சனங்களைக் கண்டுகொள்ளவில்லை. பணிவாழ்வில், பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மீதும் ஏராளமான விமர்சனங்கள் விழலாம். அவற்றை நாம் எப்படி அணுகுகிறோம், எதிர்கொள்கிறோம்? என்பதுதான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

பெரும்பாலான நேரங்களில் ஒரு சாதாரண விமர்சனத்திற்கு எல்லாம் பெருமளவில் வருந்துகிறோம், அச்சம் கொள்கிறோம். மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இளைஞர் இரண்டு மூன்று தவளைகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டுவிட்டு, ஏராளமான தவளைகள் இருப்பதாக தப்புக் கணக்குப் போட்டதுபோல், நாமும் சாதாரண விமர்சனத்தை பூதாகரமாக்கிவிட்டு அஞ்சி நடுங்குகின்றோம். இத்தகைய ஒரு மனநிலை தவிர்க்கப்பட வேண்டும். விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொள்ளவேண்டும்.

"ரைட்மந்திரா சுந்தர்" என்ற எழுத்தாளர் நம்மீது சுமத்தப்படும் விமர்சனங்களை நாம் எப்படி எதிர்கொள்வது என்பதற்கு மூன்றுவிதமான வழிமுறைகளைச் சொல்வார்.

1. நம்மைப் பற்றிய வதந்திகளுக்கு அல்லது விமர்சனங்களுக்கு நாம் ஒருபோதும் செவிசாய்க்கத் தேவைஇல்லை. ஏனென்றால் அவை பெரும்பாலான நேரங்களில் பொய்யாக இருக்கலாம்.

2. ஒருவேளை அவை நியாயமற்றதாகவும், நம்மைக் காயப்படுத்துவதாகவும் இருந்தால் அது நம்மை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். யாரோ ஒரு சிலரின் அறியாமை என்று ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுப் போய்விடவேண்டும்

3. ஆனால் அதில் நியாயம் இருந்தால் அது விமர்சனமல்ல, பாடம். அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவும்கூட ஜெயிப்பதற்கு ஒரு வழியெனப் புரிந்து செயல்படவேண்டும்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் நம்மீது சுமத்தப்படும் தேவையற்ற விமர்சனங்களை இயேசுவைப் போன்று புறந்தள்ளக் கற்றுக்கொள்வோம். நியாயமானதை நமது வளர்ச்சிக்கு எடுத்துக்கொள்வோம். அதன்வழியாக இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
அன்றாட வாழ்வே அளவுகோல்

கலா 3:7-14
லூக்கா 11: 15-26

நம்பிக்கையினால் நேர்மையாளர் வாழ்வார் (அபாகுக்கு 2:4) என்பது காலம் காலமாய் வாழ்ந்துவரும் உண்மை, அதையே பவுலடிகளாரும் இன்று முதல் வாசகத்தில் உரக்க கூறுகிறார். கடவுளுக்கு உரியவர்களாக வாழ்வது என்பது அன்றாட வாழ்வில் பற்பல முடிவுகளை உள்ளடக்கியது. ஏதோ ஒரு நாள் ஏற்பட்டு வாழ்நாள் முழுதும் நிலைக்கும் மாற்றமல்ல நம்பிக்கை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் கடவுளோடு நமக்கிருக்கின்ற உறவில் நிலைக்கும் நம்பகத்தனமே நம்பிக்கையாகும், இந்த உறவில் நாம் எந்த அளவுக்கு நிலையாய் இருக்கிறோம் என்பதே இதில் மையக்கூறாகும். ஆகவே நம்பிக்கை என்பது நாம் மனதில் நிறுத்தக்கூடிய, இறுத்த வேண்டிய சில உண்மைகளை புரிந்துகொள்வதோ நினைவில் வைப்பதோ அல்ல. கடவுளோடு தனிப்பட்ட விதத்திலே வாழப்பட வேண்டிய ஒன்று, அவரோடு வளர்க்கப்பட வேண்டிய உறவு, அன்றாடம் அவருக்கும் எனக்கும் நடுவே இருக்கும் ஒரு பரிமாற்றம்!

என் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதால், அவருக்கும் எனக்கும் நடுவே இந்த உறவை உருவாக்க கிறிஸ்துவே தன்னிலை துறந்து இறங்கி வந்து என்னோடு உறவு கொண்டு நம்பிக்கை என்னும் வாழ்வு முழுதும் தொடர்ந்து வரும் உறவை ஏற்படுத்துகின்றார்... நாம் மீட்பு பெறவேண்டுமென்று கிறிஸ்துவே சாபத்துக்குள்ளானவர் ஆனார் என்று நமக்கு நினைவூட்டுகிறார் பவுலடிகளார். என் தகுதிக்கு முற்றிலுமாய் அப்பாற்பட்ட மாபெரும் கொடையான இந்த உறவை நான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அதில் வளரவேண்டும். நான் கேட்காமலேயே எனக்கு தரப்பட்ட இந்த கொடையை, எனது பொறுப்பு இன்றி என்னால் தக்க வைத்துக்கொள்ள முடியாது. இதை நான் தக்கவைத்துக்கொள்ளாதபோது தீயோன் என்னையும், என் மனதையும், என் ஆன்மாவையும், வாழ்வு முழுவதையும் ஆக்கிரமித்துக்கொள்ள காத்துக்கொண்டிருக்கிறான் என்பதை நான் உணர வேண்டும்... ஏனெனில் 'உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமென கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது' (1 பேதுரு 5:8). இதை எதிர்த்து நாம் செய்யக்கூடியது ஒன்று மட்டுமே: அன்றாட வாழ்வையே நம்பிக்கையின் அளவுகோலாக கொள்வோம், இறைவனோடுள்ள உறவில் நாள்தோறும் வளர்வோம்!

(Rev. Father: Antony Christy SDB)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!