Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   11  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 27ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5

அறிவிலிகளான கலாத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா? உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்: நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா? தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனித முயற்சியால் நிறைவு செய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா? வீணாகத்தான் முடியுமா? உங்களுக்குத் தூய ஆவியை அளித்து உங்களிடையே வல்ல செயல்களை ஆற்றுபவர் எதை முன்னிட்டு அவ்வாறு செய்கிறார்? நீங்கள் சட்டம் சார்ந்த செயல்களைச் செய்வதாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (லூக் 1: 69-70. 71-73. 74-75 (பல்லவி: 68)
=================================================================================
பல்லவி: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.

69-70 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். பல்லவி

71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். 72-73 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவுகூர்ந்தார். பல்லவி

74-75 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( திப 16: 14b)
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13

அக்காலத்தில் இயேசு சீடர்களை நோக்கிக் கூறியது: "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, 'நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

உள்ளே இருப்பவர், 'எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார்.

எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?

தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!"


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
விடாமுயற்சியுடன் கூடிய ஜெபம்!

இறைப்பற்றுள்ள ஒருவர், ஒருநாள் தூங்கும்போது ஒரு கனவு கண்டார். அந்த கனவில் அவர் விண்ணுலகத்திற்கு தேவதைகளால் கூட்டிக்கொண்டு போகப்பட்டார்.

அவரைக் கூட்டிக்கொண்டு போன தேவதைகள் அவரிடம் விண்ணகத்தில் இருந்த ஒவ்வொரு அறையாகக் காட்டினார்கள். அப்போது ஓர் அறையில் நிறையப் பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அந்த மனிதர் தேவதைகளிடம், "இவையெல்லாம் என்ன?" என்று கேட்டார். அதற்கு ஒரு தேவதை அவரிடம், "இவையெல்லாம் மண்ணகத்தில் இருக்கின்ற மனிதர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற பரிசுப் பொருட்கள்... அவர்கள் இறைவனிடத்தில் இறைவா! எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று வேண்டுகிறார்கள். ஓரிரு முறை அவர்கள் இறைவனிடம் இவ்வாறு வேண்டுகின்றார்கள். இறைவனும் அவர்கள்மீது அக்கறை கொண்டு, அவர்கள் வேண்டுவதை எங்கள் வழியாக கொடுத்து அனுப்புகின்றார். ஆனால் அவர்கள் ஓரிரு முறை இறைவனிடம் வேண்டிவிட்டு, தங்கள் வேண்டியது கிடைக்கத் தாமதமானதும் அதை மறந்துவிடுகின்றார்கள். அதனால்தான் அவர்கள் வேண்டியது எல்லாம் அவர்களைச் சென்று சேராமல் இங்கே, இந்த அறையிலே கிடக்கின்றன" என்றது.

சீனாவில் பாரம்பரியமாக சொல்லப்பட்டு வருகின்ற இந்தக் கதையானது, நாம் இறைவனிடம் ஜெபிக்கின்றபோது, இடைவிடாது ஜெபிக்கவேண்டும் என்ற ஆழமான உண்மையை நமக்குக் கற்றுத் தருகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன்னுடைய சீடர்களும் இறைவனிடம் எப்படி ஜெபிக்கவேண்டும் என்ற உண்மையை நமக்குக் கற்றுத் தருகின்றார். இதற்கு முந்தைய பகுதியில் (நேற்றைய நற்செய்தியில்) ஜெபிக்கக் கற்றுத்தாரும் என்று சீடர்கள் கேட்டதும் அவர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்த இயேசு, இன்றைய நற்செய்தியில் எத்தகைய மனநிலையோடு ஜெபிக்கவேண்டும் என்பதை நமக்குக் கற்றுக்தருகின்றார். அதற்காக அவர் சொல்கின்ற உவமைதான் இரவு நேரத்த்தில் நண்பனிடத்தில் அப்பம் கேட்கச் சென்ற ஒருவனுடைய உவமை".

இந்த உவமையில் வரும் மனிதன், தனக்காக அல்ல, இரவு நேரத்தில் தன்னை நாடி வந்த நண்பனுக்காக இன்னொரு நண்பனிடம் அப்பம் கேட்கச் செல்கின்றான். அந்த நண்பனோ தன்னுடைய மனைவி பிள்ளைகளோடு படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றான். அப்படிப்பட்ட சூழலில் இந்த மனிதன் அவனிடம் அப்பம் வேண்டுமென்று கேட்கின்றான். அவனுக்கோ இவனுக்கு அப்பம் தர மனமில்லை. ஆனாலும் வந்தவனுடைய தொல்லையின் பொருட்டு அவனுக்கு அப்பத்தைக் கொடுக்கின்றான்.

இந்த உவமையைச் சொல்லும் இயேசு, உவமையில் வரும் மனிதன் தன்னுடைய விடாமுயற்சியால் நண்பனிடமிருந்து அப்பத்தைப் பெற்றுக்கொண்டதுபோல், நாமும் இறைவனிடம் விடாமுயற்சியோடு ஜெபித்தோம் என்றால், நாம் வேண்டுவது கிடைக்கும் என்கின்றார்.

பலநேரங்களில் நாம் இறைவனிடம் கேட்பதே கிடையாது, ஒருவேளை கேட்டாலும் கூட அதைத் தொடர்ந்து கேட்பது கிடையாது. அதனாலேயே நாம் இறைவனின் அருளைப் பெற்றுக்கொள்ளாமலே போகின்றோம். தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்திலே கூறுவார், "நீங்கள் ஆசைப்படுவதைப் பெறமுடிவதில்லை. ஏனெனில் நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை" (4:2). ஆம், நாம் இறைவனிடத்தில் கேட்பதில்லை, அதனால்தான் பெற்றுக்கொள்வதுமில்லை.

எனவேதான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்கின்றார், "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்" என்று. ஆம், நாம் கேட்கின்றபோது பெற்றுக்கொள்கின்றோம். தேடுகின்றபோது கண்டடைகின்றோம்; தட்டுகின்றபோது அது திறக்கப்படுகின்றது. காரணம் இதுதான், மண்ணுலகில் இருக்கின்ற நம்முடைய தந்தையர்களே நாம் கேட்பதைக் கொடுக்கின்றபோது, விண்ணுலகில் இருக்கின்ற நம்முடைய விண்ணகத் தந்தை நாம் கேட்பதைக் கொடுக்காமல் இருப்பாரா? அல்லது நாம் கேட்பதை விடுத்து வேறொன்றைக் கொடுப்பாரா?. நிச்சயம் நாம் கேட்பதைத்தான் கொடுப்பார்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்கின்ற வார்த்தைகளிலிருந்து நாம் இரண்டு முக்கியமான உண்மைகளை நம்முடைய கருத்தில் கொள்ளவேண்டும். ஒன்று நாம் இறைவனிடம் கேட்கும்போது அவர் நமக்குத் தருவார் என்ற நம்பிக்கையோடு கேட்கவேண்டும். நம்பிக்கையோடு கேட்கின்ற அதே நேரத்தில் விடாமுயற்சியோடு கேட்கவேண்டும். ஏனென்றால், இன்றைக்குப் பலர், இறைவனிடம் ஒருமுறையோ இருமுறையோ கேட்டுவிட்டு, தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்று சொன்னதும் இறைவனை விட்டே விலகி இருப்பதைப் பார்க்கின்றோம். நாம் இத்தகையவர்களைப் போன்று இல்லாமல், இறைவனிடம் விடாமுயற்சியோடு, மனந்தளராமல் கேட்கவேண்டும். அப்படி நாம் கேட்கின்றபோது நாம் கேட்டது கிடைக்கும் என்பது உறுதி.

ஆகவே, இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼
தூய இருபத்தி மூன்றாம் யோவான் (அக்டோபர் 11)

"உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" (மத் 16:18)

வாழ்க்கை வரலாறு

தூய பேதுருவின் வழியில் 261 வது திருத்தந்தையாக உயர்ந்து, திருச்சபையின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்த இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டிய திருந்தந்தை இருபத்தி மூன்றாம் யோவான் எனப்படும் ஆஞ்சலோ கியூசெப்பே ராங்கால்லி இத்தாலியில் உள்ள பெர்கமோ என்ற இடத்தில் இருந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் 1881 ஆம் ஆண்டு பிறந்தார்.

சிறுவயது முதலே குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த ஆஞ்சலோ வளர்ந்து பெரியவராகியபோது, தான் எண்ணியதுபோன்றே குருவாக மாறினார். இதற்குப் பின்பு இவர் உரோமைக்குச் சென்று திருச்சபையின் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுத் தன்னுடைய சொந்த மறைமாவட்டத்திற்குத் திரும்பினார். அப்போது மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தவர் இவரை தன்னுடைய செயலராக வைத்துக்கொண்டார். ஆயரின் செயலராக இருந்த இவர் ஆயரிடம் மிகவும் கீழ்ப்படிதலோடு நடந்துகொண்டார். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் ஆயரின் செயலராக இருந்த இவர், அப்போது நடைபெற்ற முதல் உலகப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளையும் செய்துவந்தார்.

ஆயரின் செயலராக இருந்து பின்பு இத்தாலில் உள்ள நற்செய்தி அறிவிப்புப் பணி அமைப்பின் (Propagation of Faith) தேசியத் தலைவராக உயர்ந்தார். பின் 1925 ஆம் ஆண்டு பேராயராக உயர்ந்தார். அந்நாட்களில் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே சண்டைச் சச்சரவுகளும் குழப்பங்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அதனைத் தீர்த்துவைக்க இவர் பெரிதும் பாடுபட்டார். இதனால் ஆஞ்சலோவின் புகழ் எங்கும் பரவியது. ஆஞ்சலோவிற்கு பரந்துவிரிந்த ஞானமும் பிரச்சனைகளை எப்படித் தீர்த்து வைக்கவேண்டும் என்ற ஞானம் அதிகமாக இருந்தது. இறைவன் கொடுத்த அந்த கொடையினைக் கொண்டு, இவர் பல பிரச்சனைகளைத் தீர்த்துவைத்தார்.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவருடைய பெயரும் புகழும் வளர்ந்துவர, இவர் 1958 ஆம் ஆண்டு திருத்தந்தையாக உயர்த்தப்பட்டார். இருபத்தி மூன்றாம் யோவான் என்ற பெயரினைத் தாங்கி திருத்தந்தையாக வலம்வந்த இவர் ஐந்து ஆண்டுகளே திருத்தந்தையாக இருந்தாலும் பற்பல பணிகளை மிகச் சிறப்பாக செய்தார். குறிப்பாக நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடக்க பெரிதும் உழைத்தார்; தொழிலாளர் நல்வாழ்விற்காக தன்னுடைய குரலைப் பதிவுசெய்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருச்சபையின் வரலாற்றில் ஒரு மைகல்லாக விளங்கக்கூடிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டி, திருச்சபையில் புத்தொழி பாய்ச்சினார்.

திருத்தந்தை அவர்கள், திருச்சபையின் வளர்ச்சிக்காக பலவேறு பணிகளைச் செய்தாலும் ஜெபத்திற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தார். அதிலும் குறிப்பாக மரியன்னையின் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்துவந்தார். அந்த நம்பிக்கை அவருக்கு பலவிதங்கில் உதவியது. திருத்தந்தை அவர்கள் பிறசபையாரோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள பலவிதங்களில் முயன்றார். அதற்கான பலனும் அவருக்குக் கிடைத்தது.

இப்படி அயராது பாடுபட்ட திருத்தந்தை இருபத்தி மூன்றாம் யோவான் 1963 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 2014 ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய இருபத்தி மூன்றாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மரியன்னையிடம் பக்தி

தூய திருத்தந்தை இருப்பதி மூன்றாம் யோவானின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கின்றபோது, அவர் செய்த பல வியப்புக்குரிய காரியங்கள் நம்முடைய நினைவுக்கு வந்தாலும் அவர் மரியன்னையிடம் கொண்டிருந்த ஆழமான பக்திதான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. மரியன்னையிடம் அவர் கொண்டிருந்த பக்திதான் அவர் பல பணிகளையும் சிறப்பாகச் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது. அவரைப் போன்று நாம் மரியன்னையிடம் பக்திகொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இங்கே மரியன்னிடம் ஆழமான பக்திகொண்டு வாழ்ந்த தூய தொன் போஸ்கோவின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லியாக வேண்டும். 1869 ஆம் ஆண்டு, மே மாதத்தில் ஒருநாள் இத்தாலியில் உள்ள தூரின் என்ற இடத்தில் இருந்த லான்சோ என்ற பள்ளியில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவிற்கு தொன் போஸ்கோ சென்றிருந்தார். அவர் போகும்போது அந்த பள்ளிக்கூடத்தில் படித்துவந்த ஒருசில மாணவர்கள் சின்னம்மை என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி அவரிடத்தில் சொல்லப்பட்டது. உடனே அவர் அந்த மாணவர்களிடத்தில் சென்று, "கிறிஸ்தவர்களின் சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்று சொல்லி மரியாவிடம் ஜெபித்துவிட்டு அந்த மாணவர்களுக்காக ஜெபித்தார். மறுகணமே அவர்கள் அந்த நோயிலிருந்து விடுதலை அடைந்தார்கள். இது அங்கிருந்த எல்லாருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

மரியாவிடம் நம்பிக்கைகொண்டு ஜெபிக்கும்போது, நாம் வேண்டியது நிறைவேறும் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

ஆகவே, தூய திருத்தந்தை இருபத்தி மூன்றாம் யோவானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மரியன்னையிடம் ஆழமான பக்தி கொண்டுவாழ்வோம். எப்போதும் இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
விடாமுயற்சியுடன் கூடிய ஜெபம் வெற்றியைத் தராமல் போகாது.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிஞர் மற்றும் விஞ்ஞானி அலெக்சிஸ் காரல் என்பவர். அவர் எழுதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிடும் நிகழ்ச்சி இது.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஒரு யுத்த களத்தில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டார்கள். நிறையப் பேர் படுகாயமடைந்தார்கள். மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவக் குழுவினர் தங்களால் முடிந்த மட்டும் படுகாயமடைந்த வீரர்களை தூக்கிக்கொண்டுவந்து, அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்துவந்தார்கள்.

ஒரு கட்டத்தில் எல்லாருக்கும் சிகிச்சை அழிப்பது முடியாத காரியம். ஆதலால் காயமடைந்தவர்களில் முப்பது பேரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிப்பதென முடிவு செய்தார்கள். அதன்படியே மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அந்தோ பரிதாபம். அவர்கள் சிகிச்சை அளித்த முப்பது பேரில் இரண்டு பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். மற்ற எல்லாரும் இறந்துபோனார்கள். இதற்கு முற்றிலும் மாறாக மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படாமல் கைவிடப்பட்ட பெரும்பாலான வீரர்கள் உயிர்பிழைத்தார்கள்.

அது எப்படி என்பதற்கு அலெக்சிஸ் காரலே விளக்கம் தருகிறார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் கைவிடப்பட்ட படைவீரர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து, ஆண்டவரை நோக்கி தீனமான குரல் எழுப்பி, "மனித சமூகம் எங்களைக் கைவிட்டு விட்டது. இனி உம்மையன்றி எங்களுக்கு வேறு துணை இல்லை" என்று மனமுருக கூட்டுப் பிராத்தனை செய்தார்கள். மனிதனையும், மனிதன் கண்டுபிடித்த அறிவியலையும், மருத்துவத்தையும் முழுமையாக நம்புவதை விடுத்து, மனிதனைப் படைத்த அந்த பரம்பொருளையே நினைத்துக் கொண்டார்கள்! இறுதியில் ஆச்சரியம் நிகழ்ந்தது.

ஆம், இறைவனிடம் நம்பிக்கையோடு ஜெபிக்கும்போது அதற்கு நிச்சயம் பலன் உண்டு என்பதை இந்த நிகழ்வானது நமக்கு அருமையாக எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, நாம் இறைவனிடம் ஜெபிக்கும்போது எப்படி ஜெபிக்கும் ஜெபிக்கவேண்டும் என்பதை நமக்குக் கற்றுத் தருகிறார். இதற்கு முந்தைய பகுதியில் (நேற்றைய நற்செய்தி வாசகம்) இறைவன் நமது விண்ணகத் தந்தை என்று சொன்ன இயேசு, அவரிடம் விடாமுயற்சியோடு ஜெபிக்கவேண்டும் என்பதை நமக்குக் கற்றுத் தருகிறார். அதற்காக அவர் சொல்லும் உவமைதான் இரவு நேரத்தில் தன்னுடைய நண்பருக்காக, இன்னொரு நண்பரிடம் அப்பம் கேட்கும் மனிதரின் உவமை. இவ்வுவமையில் தன்னிடம் அப்பம் கேட்டு வந்த நண்பருக்கு, அவர் நண்பர் என்பதற்காக கொடுக்காவிட்டாலும், அவருடைய தொல்லையின் பொருட்டாவது கொடுப்பார் என்கிறார் இயேசு.

இறைவனும் அப்படிதான். தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தன்னை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு செவிசாக்காமல், நீதி வழங்காமல் போகார் (லூக் 18: 7) இது இறைவார்த்தை உணர்த்தும் உண்மையாகும்.

இறைவனின் அன்பு மக்களாகிய நாம் இறைவனிடம் இடைவிடாது ஜெபிக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாகும். பல நேரங்களில் நாம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ இறைவனிடம் ஜெபித்துவிட்டு, இறைவன் என்னுடைய வேண்டுதலுக்கு பதிலளிக்கவில்லை என்று முறையிடுகிறோம். இது சரியான ஓர் அணுகுமுறையாகது.

பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் சோதோமை அழிக்க நினைத்தபோது, ஆபிரகாம் அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுகிறார். "தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்துவிடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தை காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?" என்று சொல்லி மன்றாடுகிறார். இப்படி ஒருமுறை, இருமுறையல்ல 50, 45, 40, 30, 20, 10 என்ற கணக்கில் ஆறுமுறை இடைவிடாது மன்றாடுகிறார். இதனால் கடவுள் அந்நகரை அழிக்காமல் போய்விடுகிறார் (தொநூ 18:16-33) ஆகவே நாம் இடைவிடாது இறைவனிடம் மன்றாடுகிறபோது இறைவன் நம்முடைய வேண்டுதலுக்குப் பதிலளிப்பார் என்பது மிக உறுதியான உண்மையாகும்.

எனவே நாம் இறைவனிடம் இடைவிடாது மன்றாடுவோம்.

ஸ்ரீ அரவிந்தர் தான் எழுதிய "சாவித்திரி காவியத்தில்" "ஒரு ஜெபம் மற்றும் வல்லமை மிகுந்த செயல் ஆகியவை இறைவனை அடையும்போது, அற்புதங்கள் சாதாரண நிகழ்சிகள் ஆகின்றன" என்பார்.

ஆகையால் நாம் இறைவனிடம் இடைவிடாது, விடாமுயற்சியோடு ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
மறதி என்னும் கொடுமை!

கலா 3:1-5
லூக்கா 11: 5-13

மறதி என்பது ஒரு கொடுமையான நிலை... பைண்டிங் நீமோ மற்றும் பைண்டிங் டோரி என்ற அசைவூட்டு திரைப்படங்களை (அனிமேஷன் திரைப்படங்கள்) பார்த்தவர்களுக்கு அதில் வரும் டோரி என்னும் ஒரு பாத்திரம் நினைவிருக்கும். அது மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவ்வப்போது தன்னோடு இருப்பவர்களை பார்த்தே, நீ யார் என்று கேட்கும் வேடிக்கை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். வேடிக்கையாக இருந்தாலும் ஒரு கட்டத்திலே தானே யாரென்று தெரியாமல் தத்தளிக்கும் போது மறதியின் கொடுமை மிக தெளிவாக விளங்கும்.

மறதி என்பது மிக கொடுமையான, வருத்தத்திற்குரிய நிலைக்கு ஒருவரை அழைத்து செல்ல கூடியதாகும். இதை நான் கூறும் போதே, இன்று நற்செய்தியில் வரும் கதையில் அந்த நபர் தான் வருவதாக தன் நண்பரிடம் கூற மறந்ததை குறித்தோ, தன் நண்பர் வருவார் என்பதை மறந்த அந்த விட்டுத்தலைவனை குறித்தோ நான் பேசவிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது சரியல்ல. ஏனெனில், நாம் சிந்திக்கவேண்டியது, தங்கள் உண்மை அடையாளம் என்ன, தாங்கள் கேட்டு மனமாறிய நற்செய்தியென்ன என்பதை வெகு விரைவில் மறக்க நேர்ந்த கலாத்தியரை குறித்தே! இதனாலேயே அவர்களை கடுமையாய் சாடுகிறார் பவுலடிகளார்.

நாம் பல வேளைகளில் நமது உண்மை அடையாளத்தை வெகு எளிதில் மறந்து விடுகிறோம். உண்மையிலேயே நம்மை அழைத்த இறைவன், அவர் தந்த அழைப்பு, நாம் பெற்றுக்கொண்ட கொடைகள் இவற்றை எல்லாம் மறந்து, தான் என்ற அகந்தையிலும், சட்டம் சம்பிரதாயம் என்னும் போதையிலும், பெயர் புகழ் என்ற மடமையிலும் நம்மையே இழந்துவிடுகிறோம். இந்நிலையில், நமது உண்மை இலக்கு என்ன, நாம் சென்று சேர வேண்டிய இறைவன் எங்கே, நமக்கு தரப்பட்ட வாழ்முறை என்ன என்பதையெல்லாம் மறந்து நிற்கிறோம். இறைவனை கேட்கவோ, அவர் கதவை தட்டவோ, அவரது சித்தத்தை தேடவோ நமக்கு நினைவே வருவதில்லை.

ஆம், அகந்தை, தன்னலம், ஆன்மீகமற்ற நிலை இவற்றினால் நாம் இறைவனின் பிள்ளைகள், அவரது அன்பிலே வளர்ந்தவர்கள், அந்த அன்பை இவ்வுலகிற்கு அளிக்க அனுப்பப்பட்டவர்கள் என்பதே நமக்கு மறந்துவிடுகிறது... இது கொடுமையல்லவா!

(Rev. Father: Antony Christy SDB)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!