Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   10  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 27ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து கைகொடுத்தனர்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-2, 7-14

சகோதரர் சகோதரிகளே, பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் தீத்துவையும் கூட்டிக்கொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன். நான் போகவேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டபடியால்தான் அங்குப் போனேன். பிற இனத்தார் நடுவில் நான் அறிவித்துவந்த நற்செய்தியைப் பற்றி அங்கே எடுத்துக் கூறினேன். செல்வாக்கு உள்ளவர்களிடம் தனிமையில் எடுத்துரைத்தேன். நான் இப்போது செய்யும் பணியும் இதுவரை செய்த பணியும் பயனற்றுப் போகக் கூடாதே என்பதற் காகத்தான் இவ்வாறு செய்தேன்.

ஆனால் யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போலவே, பிற இனத்தாருக்கு அதை அறிவிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். ஆம், யூதர்களின் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலைப் பேதுருவுக்குத் தந்தவரே பிற இனத்தாருக்குத் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார்.

அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின் தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கைகொடுத்தனர். யூதர்களுக்கு அவர்களும் யூதரல்லாதோர்க்கு நாங்களும் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டோம்.

ஏழைகளுக்கு உதவிசெய்ய மறக்கவேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதைச் செய்வதில் தான் நான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன். ஆனால் கேபா அந்தியோக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன். அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்; ஆனால் அவர்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்.

மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்துகொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக்கூடக் கவர்ந்து விட்டது.

இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப நேர்மையாய் நடவாததைக் கண்ட நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், "நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூத முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?" என்று கேட்டேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 117: 1. 2 (பல்லவி: மாற்கு 16: 15)
=================================================================================
பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி

2 ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( உரோ 8: 15 )

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆண்டவரே, எங்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4


அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, "ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" என்றார்.

அவர் அவர்களிடம், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்" என்று கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்"

இரண்டாம் உலகப்போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். அப்போது ஹிட்லரின் நாசிப் படையானது பிரான்சு நாட்டின் கடற்கரைப் பகுதியான டன்கிர்க்கை சுற்றி வளைத்துக்கொண்டது. அதில் மூன்று லட்சத்திற்கும் மேலாக மக்கள் இருந்தார்கள். இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாட்டுப் படைவீரர்களும் ஏராளமானவர்கள் அங்கே தங்கி இருந்தார்கள். மிகக் குறைந்த அளவு படைவீரர்களை வைத்துக்கொண்டு நாசிப்படையை எப்படி எதிர்கொள்வதென்று நேசநாடுகளான பிரான்சும், இங்கிலாந்தும் செய்வதரியாமல் விழித்தார்கள்.
நாசிப்படை டன்கிர்க்கை சுற்றிவளைத்துக் கொண்ட செய்தி பிரான்சு நாட்டு அதிபருக்கும், இங்கிலாந்து நாட்டு அதிபரான வின்சென்ட் சர்ச்சிலுக்கும் சென்றது. அப்போது வின்சென்ட் சர்ச்சில் தன்னுடைய நாட்டு மக்களிடம் வானொலி வழியாக இவ்வாறு பேசினார்.

"அன்பு மக்களே நம்முடைய படைவீரர்களும், மக்களும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்காக இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம் ஜெபம் செய்வதுதான். எனவே அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் தீயோரிடமிருந்து விடுபடவேண்டும் என்று ஜெபியுங்கள்" என்றார். அதிபரின் அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் டன்கிர்க் பகுதி மக்களுக்காக ஜெபித்தார்கள்.

அது கோடைகாலம். வெயில் வேறு வெளுத்து வாங்கியது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக டர்கிர்க் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக ஏற்பட்டது. எதிரே யார் இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பிரான்சு மற்றும் இங்கிலாந்து நாட்டுப் போர்க்கப்பல்கள் டன்கிர்க் பகுதியில் நுழைந்து, நாசிப் படையினருக்குத் தெரியாமல் அங்கிருந்து மக்கள் அனைவரையும் வேறு இடங்களுக்கு இடம்மாற்றினார்கள். அவர்கள் மக்கள் அனைவரையும் இடமாற்றுவதற்கும் பனிப்பொழிவு நின்றுபோவதற்கும் சரியாக இருந்தது. ஒருவார காலம் இருந்த பனிப்பொழிவில் நேச நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் டன்விர்க் பகுதியில் இருந்த எல்லாரையும் அப்புறப்படுத்தினார்கள்.
பனிப்பொழிவு முடிந்து மக்களைப் பார்த்த நாசிப் படையினருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆம், டன்கிர்க் பகுதியில் யாருமே இல்லை.

ஆபத்திலிருந்து தங்களுடைய நாட்டுமக்களை இறைவன் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டியதால், இறைவன் அவர்களை அற்புதமாக எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார். டன்கிர்க் பகுதியில் நடந்த இந்த நிகழ்வு "Dankirk Miracle" என்று அழைக்கப்படுகிறது. இது வரலாற்றில் நடைபெற்ற மிகவும் முக்கியமான நிகழ்வு.
துன்ப வேளையில் இறைவனை நோக்கி அழைத்தால் இறைவன் நம்முடைய வேண்டுதலுக்குப் பதில் தருவார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரை அணுகி வந்து, "யோவான் தம் சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கட்டுக்கொடும்" என்கிறார்கள்.. இதைக் கேட்ட இயேசு கிறிஸ்து அவர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுத்தருகிறார்.

முதலாவதாக ஜெபம் என்றால் வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போவது கிடையாது, மாறாக குறைவான வார்த்தைகளாக இருந்தாலும் அவற்றை மனமுருகிச் சொல்லவேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுக்கிறார். பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் நீண்ட நேரம் ஜெபித்தால்தான் ஜெபம் அல்லது ஜோடனையான வார்த்தைகளைப் பயன்படுத்தினால்தான் ஜெபம் என்ற தவறான கற்பிதத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ இதற்கு முற்றிலும் மாறான ஒரு செய்தியை நமக்கு முன் வைக்கிறார். அதுதான் குறைவான வார்த்தைகளானாலும், அவற்றை மனமுருகி ஜெபிக்கவேண்டும் என்பதாகும்.

அடுத்ததாக இயேசு கிறிஸ்து ஜெபிக்கக் கற்றுத் தரும்போது இறைவனை தந்தையே என்று அழைக்கக் கற்றுத்தருகிறார். இது யூத மரபைப் பொறுத்தளவில் மிகப்பெரிய புரட்சி என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் இறைவனின் திருப்பெயரைச் சொல்வது மிகப்பெரிய குற்றம் என்று நினைத்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு அப்படிப்பட்ட எண்ணத்தை புரட்டிப் போடுகிறார். இறைவனை அப்பா தந்தையே என அழைக்கச் சொல்லித்தருகிறார்.

நிறைவாக இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தைப் பொறுத்தளவில் முதல் பகுதி இறைப்புகழ்ச்சியாகும், இரண்டாவது பகுதி நமது தேவைகளுக்காக மன்றாடுவதாகவும் இருக்கின்றது. எப்போது நாம் இறைவனைப் புகழ்ந்து, அவர் செய்த நன்மையாக நன்றி செலுத்துகிறோமோ அப்போதுதான் நமது ஜெபம் முழுமை பெறும். வெறுமனே வேண்டுதல்களை அடுக்கிக்கொண்டே போவதால் மட்டும் நம்முடைய ஜெபம் முழுமை பெறாது.

எனவே முதலில் நாம் இறைவனைப் புகழ்வோம், அதன்பிறகு அன்றாட தேவைகளுக்காக மன்றாடுவோம்; தீயோனிடமிருந்து விடுவிக்கும்படியாக வேண்டுவோம். அப்போது இறைவன் நமது வேண்டுதலுக்கு செவிசாய்த்து நமது வாழ்வினை ஆசிர்வதிப்பார்.

இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் இந்த அற்புதமான ஜெபத்தின் மகிமையை உணர்வோம். இறைவனைப் புகழ்வோம், அதன்வழியாக இறையருள் பெற்று, இடர்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼


தூய டேனியல் கம்பொனி (அக்டோபர் 10)

இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்று கூறினார் (மாற் 16:15)

வாழ்க்கை வரலாறு

டேனியல் கம்பொனி இத்தாலியில் உள்ள வெரோனாவில் 1826 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வெரோனாவில் படித்துக்கொண்டிருக்கும்போது, எப்படி தூய லயோலா இஞ்ஞாசியார் சவேரியாரிடம், "மனிதன் உலகமெல்லாம் தனதாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழப்பாரெனில், அதனால் வரும் பயனென்ன?" என சொல்லிவந்தாரோ, அதுபோன்று இவரிடத்தில் அருட்தந்தை காங்கோ, "நீ ஆப்ரிக்காவிற்குச் சென்று பணிசெய்" என்று மீண்டும் மீண்டுமாகச் சொல்லி வந்தார். இது டேனியலின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. அப்போதே இவருக்கு ஆப்ரிக்காவிற்குச் சென்று, அங்குள்ள மக்களுக்குப் பணி செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவானது.

இதற்கிடையில் ஆப்ரிக்காவிற்குச் சென்று மறைப்பணியாற்றிவிட்டு திரும்பிவந்த ஒருசிலர், அங்கு பணிசெய்வது எத்துணை சவாலான காரியம் என்று எடுத்துச்சொன்னார்கள். இதுவும் அவரைச் சிந்திகக் வைத்தது. இப்படி இருக்கும்போது டேனியல் கம்பொனிக்கு ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட்டது. அது அவரிடத்தில் ஆப்ரிக்காவிற்கு சென்று பணி செய் என்று திரும்பத் திரும்பச் சொல்லியது. இதனால் இவர் குருத்துவ வாழ்விற்கு தன்னையே தயார்செய்து, 1854 ஆம் ஆண்டு குருவாக மாறினார். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து ஆப்ரிக்க மொழியைக் கற்பதும் மருத்துவத்தைக் கற்பதும் என்று தன்னையே தயார்செய்து 1857 ஆம் ஆண்டு தன்னோடு மேலும் ஐந்து குருக்களை சேர்த்துக்கொண்டு ஆப்ரிக்க மண்ணில் பணிசெய்ய புறப்பட்டுச் சென்று, சூடானின் தலைநகரான ஹர்தௌம் என்ற இடத்தில் இறங்கினார்.

இவரும் இவருடைய தோழர்களும் அங்கு சென்று இறங்கியபோது, இவர் நினைத்துப் பார்த்ததைவிடவும் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆம், மக்கள் அங்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவித்தார்கள், எங்கு பார்த்தாலும் வறுமை நிலவியது. இவையெல்லாவற்றையும் விட மக்கள் அறியாமையில் இருந்தார்கள். இதனால் அந்த மக்களுக்கு மத்தியில் பணிசெய்வது மிகவும் சவாலாக இருந்தது. அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் டேனியல் கம்பொனியும் அவருடைய தோழர்களும் அர்ப்பண உள்ளத்தோடு பணிசெய்தார்கள்.

டேனியல் கம்பொனி ஆப்ரிக்க மண்ணில் பணிசெய்வதற்கு மூன்றுவிதமான திட்டங்களை வகுத்துக்கொண்டார். ஒன்று, ஆப்ரிக்க மண்ணில் நற்செய்தியை பரப்புவதற்கு மண்ணின் மைந்தர்களிடமிருந்து குருக்களை உருவாக்குவது. இரண்டு. அங்குள்ள மக்களுக்கு பல்வேறுவிதமான உதவிகளைச் செய்வதற்கு தன்னுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள், நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து உதவி பெறுவது. மூன்று, குருக்களுக்கும் கன்னியர்களுக்கும் துறவற சபையை உருவாக்குவது. இந்த மூன்று திட்டங்களையும் அவர் படிப்படியாக நடைமுறைப்படுத்தினார்; அதில் வெற்றியும் கண்டார். இவருடைய முயற்சியின் காரணமாக ஆப்ரிக்க மண்ணிலிருந்து நிறைய குருக்கள் உருவானார்கள். அதனால் அங்கு நற்செய்திப் பணிசெய்வது மிகவும் இலகுவானது. அடுத்ததாக டேனியல் கம்பொனிக்குத் தெரிந்தவர்கள், வசதி படைத்தவர்கள் என்று ஏராளமான பேர் ஆப்ரிக்க மக்களுக்கு உதவி செய்வதற்கு முன்வந்தார்கள். அவர்களிடமிருந்து பெற்ற உதவியை இவர் மக்களுக்காகப் பயன்படுத்தினார்.

மேலும் 1867 ஆம் ஆண்டு ஆண்களுக்கென்று ஒரு துறவற சபையும் 1872 ஆம் ஆண்டு பெண்களுக்கு என்று ஒரு துறவறசபையையும் ஏற்படுத்தி, ஆப்ரிக்க மண்ணில் நற்செய்தி பரவ பெரிதும் பாடுபட்டார். இவர் ஆற்றிவந்த பணிகளைப் பார்த்துவிட்டு திருத்தந்தை அவர்கள் இவரை 1878 ஆம் ஆண்டு ஆப்ரிக்காவின் முதல் ஆயராக ஏற்படுத்தினார்.

இவர் ஆற்றிவந்த அயராத பணியினால் இவருடைய உடல்நலம் குன்றியது. இதனால் இவர் 1881 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய டேனியல் கம்பொனியின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நற்செய்தி அறிவிக்கின்ற தாகம்

தூய டேனியல் கம்பொனியின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவரிடத்தில் இருந்த நற்செய்தியை அறிவிக்கின்ற தாகம்தான் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமாக இருக்கின்றது. "நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு" என்பார் பவுலடியார். அவருடைய வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டவராய் டேனியல் கம்பொனி ஆப்ரிக்க மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். அவர்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தார். இவரிடத்தில் இருந்த நற்செய்தியை அறிவிக்கின்ற தாகம் நமக்கிருக்கின்ற என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும், இவரைப் போன்றே நற்செய்திக்காக நம்முடைய வாழ்வை அர்பணிக்கவேண்டும். அதுவே இவரை நினைவுகூருவதற்கான முழு அர்த்தத்தைத் தரும்.

ஆகவே, தூய டேனியல் கம்பொனியின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவரின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்!

சிறு நகரொன்றில் பெண்ணொருத்தி இருந்தார். அவர் மிகவும் பக்தியுள்ள பெண்மணி. அவர் "விண்ணுலகிலுள்ள எங்கள் தந்தையே!" என்ற ஜெபத்தை அடிக்கடி சொல்லுவார்.

ஒருநாள் அவர் இவ்வாறு "விண்ணுலகிலுள்ள எங்கள் தந்தையே" என்ற ஜெபத்தை சொல்லிக்கொண்டிருக்கும்போது அதில் வருகின்ற "உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக" என்ற வரிகளைச் சொல்லத் தொடங்கியதும் அவர் கலக்கமுற்றார். உடனே அவர் பங்குத்தந்தையிடம் விரைந்து சென்று, "சுவாமி! நான் விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே! என்ற ஜெபத்தை அடிக்கடி சொல்லக்கூடியவள். இன்றைக்கு நான் அந்த ஜெபத்தை கொண்டிருக்கும்போது, அதில் வரக்கூடிய "உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக" என்ற வரிகளைச் சொல்லத் தொடங்கியதும் நான் மிகவும் கலக்கமுற்றேன். என்னுடைய கலக்கத்திற்குக் காரணம் இதுதான்: ஒருவேளை இறைவனின் திருவுளம் என்னுடைய மகனை என்னிடமிருந்து எடுத்துக்கொள்வதாக இருந்தால் அது நடந்துவிடுவோமோ? என்று கேட்டார்.

பங்குத்தந்தை சிறிதுநேரம் பொறுமையாக யோசித்துவிட்டுச் சொன்னார், "உங்களுக்கு ஒரு மகன் இருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா? ஒருநாள் அந்த மகன் உங்களிடத்தில் வந்து, "அம்மா! நீங்கள் எனக்கு என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன்" என்று உங்களிடத்தில் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் அவனுக்கு மிகவும் கடினமான வேலைகளைக் கொடுப்பீர்களா? அல்லது எளிதான வேலையைக் கொடுப்பீர்களா?". "மகன் அப்படிச் சொல்லிவிட்டான் என்பதற்காக அவனுக்குக் கடினமான வேலை கொடுக்கமுடியுமா?, அவன் என் அன்பு மகன். அப்படியெல்லாம் நான் அவனுக்கு கடினமான வேலைகளை எல்லாம் கொடுக்கமாட்டேன்" என்றார் அந்தப் பெண்மணி.

உடனே பங்குத்தந்தை அந்தப் பெண்மணியிடம், "உங்கள் மகன் உங்களிடத்தில் கடினமான வேலையைக் கொடுங்கள் என்று சொன்னபோதும், நீங்கள் அவனுக்கு எளிதான வேலையைத்தான் கொடுக்கிறீர்கள். அப்படியானால் உங்களை விட உங்கள் மகன்மீது அதிகமாக அன்புகொண்டிருக்கின்ற இறைவன், நீங்கள் அவரிடம் "உமது திருவுளம் நிறைவேறுக" என்று சொல்லி ஜெபித்ததும் அவர் உங்களுடைய மகனை உங்களிடமிருந்து எடுத்துவிடமாட்டார். காரணம் அவர் நன்மையே உருவானவர்" என்றார்.

பங்குத்தந்தையிடமிருந்து இத்தகையதொரு விளக்கத்தைக் கேட்ட அந்த பெண்மணி "விண்ணுலகிலுள்ள எங்கள் தந்தையே" என்ற ஜெபத்தை இன்னும் பக்திப் பரவசத்தோடு சொல்லி தன்னுடைய வாழ்விற்கான ஆறுதலைப் பெற்றுக்கொண்டார்.

இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம் சாதாரண ஜெபம் கிடையாது. அது நம்முடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் ஆறுதலையும் தரக்கூடிய ஒரு ஜெபம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரிடத்தில் வந்து, "யோவான் தன்னுடைய சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்குக் கற்றுத்தாரும்" என்று கேட்கிறார்கள். உடனே இயேசு அவர்களுக்கு "விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே" என்ற ஜெபத்தைக் கற்றுத் தருகின்றார். இயேசு கற்றுத்தரும் இந்த ஜெபத்தில் இறைவனை அவர் தந்தையென அழைக்கச் சொல்கின்றார். இறைவனை நாம் எங்கோ இருக்கின்ற ஒருவராகப் பார்க்காமல், அவர் நம்மோடு இருந்து நம்மீது உண்மையான அன்புகொண்டிருக்கின்ற ஒரு தந்தையாகப் பார்க்கச் சொல்லி, அவரிடத்தில் வேண்டச் சொல்கின்றார்.

இறைவனைத் தந்தையாகப் பார்த்து, அவரிடம் ஜெபிக்கச் சொல்லும் இயேசு, நமது ஜெபத்தில் தந்தை இறைவனுக்கே முதன்மையான இடம் கொடுக்கச் சொல்கின்றார். இயேசு கற்றுத் தரும் ஜெபத்தில் வருகின்ற "உமது ஆட்சி வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல், மண்ணுலகிலும் நிறைவேறுக" என்ற வார்த்தைகள் நமக்கு அதைத்தான் எடுத்துக்கூறுகின்றன. பல நேரங்களில் நாம் இறைவனிடத்தில் வேண்டுகின்றபோது, நம்முடைய தேவைகளைத் தான் முதன்மைப்படுத்திச் ஜெபிக்கின்றோம். உண்மையான ஜெபம் இறைவனை முதன்மைப் படுத்துவதாகவும் அவருக்கு புகழ்ச்சியையும் மாட்சியையும் சேர்ப்பதாகவும் இருக்கவேண்டும் என்கின்றார் இயேசு.

ஜெபிக்கின்றபோது இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுக்க வேண்டும் எனச் சொல்லும் இயேசு, நிறைவாக நம்முடைய தேவைகளுக்காக இறைவனிடம் வேண்டச் சொல்கின்றார். நமது அன்றாட உணவிற்காகவும் நமது குற்றங்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்றும் அவர் நம்மை சோதனையிலிருந்து காத்தருளவேண்டும் என்றும் ஜெபிக்கச் சொல்கின்றார். இத்தகைய அர்த்தம் பொதிந்த, நம்முடைய தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கிய இயேசு கற்றுக்கொடுத்த இந்த ஜெபத்தினை நம்பிக்கையோடு நாம் சொல்கின்றபோது நம்முடைய வாழ்விற்கான எல்லா ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொள்வது உறுதி.

ஆகவே, இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தை நம்பிக்கையோடு சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
_இனி எல்லாம் சுகமே! _

மெல்லியது

நாம் நிறைய நேரங்களில் ஜென்டில்மேன்(உமன்) ஆக அல்லது டிப்ளமட்டிக்காக இருக்க விரும்புகிறோம்.

ஜென்டில்மேன் அல்லது டிப்ளமேட்டிக்காக இருப்பது என்பது யாரையும் காயப்படுத்தாமல் பேசுவது, பழகுவது என்று ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி பதிவு செய்கிறது.

யாரையும் காயப்படுத்தாமல் இருக்க முடியுமா? பழக முடியுமா?

முடியாது என்கிறது நாளைய முதல் வாசகம் (காண். கலா 2:1-2, 7-14).

தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தை நாம் இந்நாள்களில் வாசித்துக்கொண்டிருக்கிறோம்.

தனக்கும் பேதுருவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி மனம் திறக்கின்றார் பவுல்.

பேதுருவைப் பொறுத்தவரையில் தான் செய்தது டிப்ளமட்டிக்கான செயல்.

அதாவது, யூதர்கள் இருக்கும்போது அவர்களோடு ஒன்றிணைந்து கொண்டும், புறவினத்தார் இருக்கும்போது அவர்களோடு ஒன்றிணைந்து கொண்டும் இருக்கின்றார்.

ஆனால், பவுல் மிகவும் கட் அன்ட் ரைட் ஆக இருக்கிறார்.

ஒன்று இந்தப் பக்கம். அல்லது அந்தப் பக்கம்.

டிப்ளமட்டிக்காக இருப்பதை வெளிவேடம் என்கிறார் பவுல்.

டிப்ளமட்டிக் - வெளிவேடம். இந்த இரண்டிற்கும் இடையேயான கோடு மிகவும் மெல்லியது.

- Rev. Fr. Yesu Karunanidhi


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!