Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   09  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 27ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
பிற இனத்தவர்க்கு நற்செய்தியை அறிவிக்குமாறு திருவுளங்கொண்டார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 13-24

சகோதரர் சகோதரிகளே, பவுல் ஆகிய நான் யூத நெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்துகொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூத நெறியில் சிறந்து விளங்கினேன்.

ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்கு முன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன்.

அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை. நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை; இதற்குக் கடவுளே சாட்சி! பிறகு நான் சிரியா, சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன்.

ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலேயே இருந்தேன். "ஒரு காலத்தில் தங்களைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை இப்பொழுது நற்செய்தியாக அறிவிக்கிறான்'' என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். அதற்காக என் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 118: 1-2. 16-17. 28 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும் ஆண்டவரே.

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி

13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! 14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி

15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்'' என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

இறைபிரசன்னத்தில் அமர்வது என்பது தாவீது அரசரின் பார்வையில் 1000 நாள் வெளியே வாழ்வதை விட ஒருநாள் ஆண்டவரது இல்லத்தில் வாழ்வது அற்புதமானது.

இன்றைய கால கட்டத்தில் அமர்வது என்பது இயலாத ஒன்றாகவே அமைகின்றது.

அதுவும் இறைபிரசன்னத்தில் அமர்வது என்பது இன்னும் இயலாத ஒன்றாகவே மாறி வருகின்றது.

அமராது அலைவதாலே இன்று வாழ்வு சுகமானதாக இல்லாது போகின்றது.

அமர்வதற்கு காலம் எடுத்து கொள்ள முற்படும் போதே நாம் நம்முடைய வாழ்வை காத்துக் கொள்ள முடியும். அதுவே நல்ல பங்காகிட முடியும் இறை பார்வையில்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"தேவையானது ஒன்றே"!

பெண் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் கடைத்தெருவுக்குச் சென்றபோது ஒருகடையில் "பேசும் கிளி" விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அது அந்தப் பெண்ணுக்குப் பிடித்துப் போக, அவர் அதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்தார். கிளி பேசும் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். ஆனால் அன்றைக்கு அது பேசவே இல்லை. "சரி புது இடம் அல்லவா, அதனால்தான் பேசாமல் இருக்கிறது போலும்" என்று அவர் இருந்துவிட்டார்.

மறுநாளும் கிளி பேசாமல் இருப்பதைக் கண்டு அந்தப் பெண்ணுக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே அவர் கடைத்தெருவிற்குச் சென்று, பேசும் கிளியைக் கொடுத்த கடைக்காரரிடம், "கிளி பேசவே இல்லை" என்றார். "அப்படியா சங்கதி! கிளிக்கு கண்ணாடி என்றால் உயிர். அது கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்தது என்றால், தன்னாலே பேசும்" என்றார். உடனே அந்தப் பெண் ஒரு கண்ணாடியை வாங்கி, கிளியின் கூட்டின் மாட்டி வைத்தார். அப்போதும் கூட கிளி பேசுவும் பேசவில்லை.

இதனால் ஏமாந்துபோன அந்தப் பெண் மறுநாள் காலையில் அந்தக் கடைக்காரரிடம் போய், "கிளிக் கூட்டில் கண்ணாடி வைத்தப்போதும் அது பேசவே இல்லை" என்றார். அதற்குக் கடைக்காரர், "கிளிக்கு ஏணி என்றால் இஷ்டம். சில சமயங்களில் அது ஏணியில் நடந்துகொண்டே பேசும்" என்றார். உடனே அந்தப் பெண் ஒரு சின்ன ஏணியைச் செய்து அதனை கிளிக்கூட்டில் மாட்டி வைத்து, கிளி பேசுமா என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். அப்போதும் கிளி பேசவே இல்லை. இதனால் பொறுமை இழந்த அந்தப் பெண், மறுநாள் விடிந்தும் விடியாததுமான நேரத்தில் கடைக்காரரிடம் சென்று, "கிளி இப்போதும் பேசவில்லை" என்றார். "கிளிக் கூட்டில் ஊஞ்சல் இருக்கின்றதா? ஊஞ்சல் இருந்தால் அது ஆடிக்கொண்டே பேசும்" என்றார் கடைக்காரர். அந்தப் பெண் பொறுமை இழந்து, கிளி கூண்டில் ஒரு ஊஞ்சலையும் மாட்டி வைத்து, அது பேசுமென்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். அப்போதும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இப்படியே ஓரிரு நாட்கள் அவர், அந்தக் கிளி பேசும் என்று காத்துக்கொண்டே இருந்தார். கிளியோ எதுவும் பேசவில்லை. ஒருநாள் அதிகாலையில் அவர் தூங்கி எழுந்து, கிளிக் கூண்டைப் பார்த்தப்போது கிளி செத்துக் கிடப்பதைக் கண்டார். உடனே அவர் அந்த செத்த கிளியைத் தூக்கிக் கொண்டு கடைக்காரரிடம் ஓடினார். "ஐயா! நீங்கள் கொடுத்த பேசும் கிளி இப்போது செத்த கிளியாகிவிட்டது" என்றார். அதற்கு அந்த கடைக்காரர், "அப்படியா! இந்தக் கிளி சாவதற்கு முன்பு, ஏதாவது சொல்லியதா?" என்று கேட்டார். "ஆமாம் சொல்லியது, கடைசியாக அது "ஏதாவது சாப்பாடு கிடைக்குமா?" என்று சொல்லியது. நான் அதற்காகச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதற்குள் அது செத்தே போய்விட்டது" என்றார்.

"கிளிக்கு எல்லாம் செய்து தந்த நீங்கள், அதற்கு மிக முக்கியமான சாப்பாடு செய்து தரவில்லையே" என்று மிகவும் வருத்தப்பட்டார்.

கதையில் வரும் பெண்ணைப் போன்று நாமும் பலநேரங்களில் வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தேவையில்லாத காரியங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். இன்றைய இறைவார்த்தையோ மனித வாழ்விற்கு எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ நம்மை அழைக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஓர் ஊருக்குச் செல்கின்றார். அங்கே ஒரு பெண் அவரைத் தம் வீட்டில் வரவேற்கின்றார். அவர் பெயர் மார்த்தா. மார்த்தாவிற்கு மரியா என்ற சகோதரி ஒருவர் இருக்கின்றார். அவரோ இயேசுவின் காலடியில் அமர்ந்து இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்க, மார்த்தாவோ பற்பல பணிகளில் மிகவும் பரபரப்பாக இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய சகோதரி தனக்கு ஒத்தாசை செயவில்லை என்றும் குறைபட்டுக் கொள்கின்றார். அப்போது இயேசு அவரிடம், "மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகின்றாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்" என்கின்றார்.

மார்த்தாவோ, தன்னுடைய வீட்டிற்கு வந்த இயேசுவை நல்லவிதமாய் கவனிக்க வேண்டும் என்று இருந்தார். அது தேவைதான். ஆனால் அதைவிட முக்கியம் அவருடைய காலடியில் அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்பது. மரியா இயேசுவின் காலடி அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்டார். அதனால்தான் அவரை நல்ல பங்கைத் தேர்தெடுத்துக் கொண்டார் என்று இயேசு பாராட்டுகின்றார்.

நமது வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றோம் என்று யோசிப்போம். அனைத்திற்கு மேலாக அவருக்கு ஏற்புடைய காரியத்தை நாடுவோம். (மத் 6:33) அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼


தூய ஜான் லியோனர்டி (அக்டோபர் 09)

"கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்" (திப 10: 38)

வாழ்க்கை வரலாறு

ஜான் லியோனார்டி, இத்தாலில் உள்ள லூக்கா என்னும் இடத்தில் 1541 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வளர்ந்து இளைய பருவத்தை அடைந்தபோது, ஒரு மருந்தகத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவர் இறைவனுடைய அழைப்பை உணர்ந்தார். உடனே இவர் தான் பார்த்து வந்த வேலை, சொத்து, சுகம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு குருமடத்தில் சேர்ந்து, குருத்துவ வாழ்விற்குத் தன்னையே தயாரித்து 1572 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப் பட்டார்.

குருவாக மாறிய பின்பு இவர், திரிதெந்திய பொதுச்சங்கம் சொன்னதற்கேற்ப மக்களுக்கு மறைக்கல்வியை கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். மக்களும் இவர் கற்றுக்கொடுத்த மறைகல்வியை ஆர்வமுடன் கற்றார்கள். இதற்குப் பிறகு இவர் மருத்துவவமனைகளுக்குச் சென்று நோயாளிகளோடு நேரத்தை செலவழித்தார்; சிறைச்சாலையில் இருந்த கைதிகளை சென்று சந்தித்து, அவர்களிடம் ஆறுதலான வார்த்தைகளைப் பேசினார். இவையெல்லாவற்றையும் விட, தேவையில் இருந்தவர்களுக்கும் அனாதைகளுக்கும் கைவிடப்பட்டவர்களும் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவி செய்துவந்தார்.

இவர் செய்துவந்த இந்த சேவைகளைப் பார்த்துவிட்டு நிறைய இளைஞர்கள் இவரோடு சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்கள். பின்னாளில் இதுவே "Clerks Regular of the Mother of God" என்ற சபை உருவாகக் காரணமாக இருந்தது. இந்த சபையானது 1583 ஆம் ஆண்டு லூக்கா நகரின் ஆயராலும் பின்னர் 1595 ஆம் ஆண்டு, திருத்தந்தை எட்டாம் கிளமென்ட் அவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது. இந்த சபையின் வழியாக ஜான் லியோனர்டி மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்துவந்தார்.

இதற்கிடையில் ஜான் லியோனார்டிற்கு அவருடைய சொந்த ஊர் மக்களிடமிருந்தே நிறைய எதிர்ப்புகள் கிளப்பின. இதனால் இவர் உரோமைக்குச் சென்றார். அங்கு இவரை பிலிப் நேரியார் உள்ளன்போடு வரவேற்று, தன்னுடைய "தூய வில்லியம் சேவை இல்லத்தை" இவருக்குக் கொடுத்து, சேவை செய்ய உறுதுணையாக இருந்தார். இதனால் இவர் மனமுவந்து மக்களுக்கு சேவைகளைச் செய்துவந்தார். 1600 களில் உரோமையில் பயங்கரக் கொள்ளைநோய் பரவியது. இப்படி கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜான் லியோனார்டி அயராது பணி செய்தார். இதனால் இவர் அந்தக் கொள்ளை நோயாலேயே பாதிக்கப்பட்டு 1609 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1938 ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினோறாம் பத்திநாதரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஜான் லியோனார்டியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


கைம்மாறு கருதாமல் சேவை செய்வோம்

தூய ஜான் லியோனார்டி பற்பல பணிகளை மக்களுக்குச் செய்துவந்தார். அந்தப் பணிகளை எல்லாம் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்துவந்தார் என்பதுதான் இவரிடத்தில் உள்ள சிறப்பாகும். இன்றைக்கு சாதாரண ஒரு உதவி செய்துவிட்டு, பெரிய அளவில் விளம்பரம் தேடுவதுதான் வாடிக்கையாக இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் தூய ஜான் லியோனார்டியைப் போன்று கைம்மாறு கருதாமல், பிரதிபலன் எதிர்பாராமல் சேவை செய்வதுதான் நமக்கு முன்பாக இருக்கின்ற சவாலாக இருக்கின்றது.

பெரிய மலையிலிருந்து விழுந்த நீர்வீழ்ச்சியானது ஆறாக மாறி, பாய்ந்தோடிய இடங்களிலெல்லாம் செழுமையையும் வளமையையும் வந்தது. ஆனால் அந்த ஆறு செய்த நன்மைகளை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதற்காக அந்த ஆறு ஒன்றும் வருத்தப்படவுமில்லை.

ஒருநாள் இந்த ஆறினால் செழித்து வளர்ந்த ஒரு ரோஜாத் தோட்டமும் அருகில் இருந்த வயலும் ஆற்றைப் பார்த்து, "உன்னால்தான் நாங்கள் இப்படி செழித்து வளர்ந்திருக்கின்றோம், இதற்காக உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகாது" என்றன. அதற்கு அந்த ஆறு, "நான் என்ன பெரிதாக செய்துவிட்டேன், என்னுடைய கடமையைத்தான் செய்தேன்" என்றது. இதைக் கேட்ட அந்த ரோஜாத் தோட்டமும் வயலும் ஆற்றின் பெருந்தன்மையைக் எண்ணி வியக்கத் தொடங்கியது.

இது ஒரு கற்பனைக் கதையாக இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவருக்கு எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் சேவை செய்வது நம்முடைய கடமை என்று எண்ணிச் செய்தால், எல்லாருடைய வாழ்வும் சிறக்கும் என்பது உறுதி.

ஆகவே, தூய ஜான் லியோனார்டியின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

நண்பர் 'எனக்கு உதவிபுரியும்படி அவளிடம் சொல்லும்!' (காண். லூக்கா 10:38-42)

இன்று உலக பாய்ஃபிரண்ட் தினம் என்று டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் ஓடிக்கொண்டிருக்கிறது.

பாய்ஃபிரண்ட் ஆக இருப்பது எவ்வளவு கடினம் என்று நிறையப்பேர் தங்கள் ஆதங்கத்தை கீச்சுக்கொண்டிருக்கிறார்கள்.

நாளைய நற்செய்தியில் (காண். லூக் 10:38-42) நாம் இயேசுவை ஒரு நண்பராகப் பார்க்கிறோம்.

தங்கள் குடும்ப நண்பர் இயேசுவை பெத்தானியாவின் மார்த்தாவும், மரியாவும் தங்கள் இல்லத்திற்கு வரவேற்கின்றனர்.
நண்பரின் வருகை கண்டு உவகை கொண்ட மார்த்தா சமையல்கட்டில் பரபரப்பாகிவிடுகின்றாள்.
மரியா இயேசுவின் பாதம் அமர்ந்துவிடுகின்றாள்.
இரண்டு பேரில் இயேசுவுக்கு நெருக்கமானவள் மரியாதான் என்பதற்கு இரண்டு க்ளு இருக்கின்றன.

ஒன்று, மரியா இயேசுவோடு ஒட்டிக்கொள்கின்றாள்.
இரண்டு, தன் சகோதரியை தன்னோடு வேலைக்கு அனுப்புமாறு இயேசுவிடம் கேட்கின்றாள். தன் சகோதரி மேல் தனக்கு உள்ள உரிமையை இயேசு எடுத்துக்கொள்கின்றார். அல்லது மரியாள் அந்த உரிமையை இயேசுவுக்கு கொடுத்துவிடுகின்றாள்.
'ஏட்டி மரியா இங்க வேலைக்கு வா!' என்று அவள் ஏன் தன் சகோதரியிடம் சொல்லவில்லை?
நல்ல நண்பராகத்தான் இயேசு இருக்கின்றார் மரியாளுக்கு!
நல்ல பாய்ஃபிரண்டாக இருப்பதற்கு அழகான பாடம் கற்றுக்கொடுக்கின்றார் இயேசு.
ஒருபோதும் தன் ஃபிரண்டை விட்டுக்கொடுக்கக்கூடாது.
ஆம். மரியாளை விட்டுக்கொடுக்கவில்லை.


- Rev. Fr. Yesu Karunanidhi.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
செவி கொடு... உணர்ந்திடு... புகழ்ந்திடு

கலா 1:13-24
லூக் 10:38-42

இன்றைய இறைவார்த்தை இறைவனுக்கு செவிமடுக்கும் திறனை முன்னிறுத்துகிறது. சவுல் பவுலான கதை நமக்கு தெரியும், அதில் வெளிப்படும் பவுலடிகளாரின் முதன்மையான திறன், அவர் கடவுளின் குரலுக்கு செவிசாய்த்ததே ஆகும். அவருக்கே உரிய தற்புகழ்ச்சியோடும், இறுக்கமான சிந்தனைகளோடும் இருந்திருந்தால் அவர் இறைவனின் மாபெரும் அப்போஸ்தலராய் உருவாகியே இருக்கமுடியாது என்பதுதான் எதார்த்தம். தான் அப்போஸ்தலனாய் உருவானதன் வரலாற்றை கூறும் அவரே, அதில் பெரும் பங்கை தான் இறைவனுக்கு செவிகொடுக்க முன்வந்ததற்கே அளிப்பது இந்த ஆழமான உண்மையை நாம் உணர செய்கிறது.

பெத்தானியாவை சார்ந்த மரியாவும் செவிகொடுப்பதில் நமக்கு மேலுமொரு முன்னோடியாய் தரப்படுகிறார். வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடமன்றோ உள்ளன என்று பேதுரு கூறியது போல, அந்த வாழ்வு தரும் வார்த்தைகளுக்கே முதல் இடம் கொடுத்து அனைத்தையும் விட்டுவிட தயாராய் இருக்கும் மரியா நாம் நமது உள்ளத்தில் முன்னெடுக்க வேண்டிய மாற்றத்தை நமக்கு குறித்து காட்டுகிறார்.

இவர்கள் அனைவருக்கும், உள்ள முன்னோடிகள் அனைவருக்கும் முத்தாய்ப்பாய் விளங்குபவர் அன்னை மரியாள். இவரை விட இறைவார்த்தைக்கு செவிமடுத்து அதன்படி வாழ முன்வந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. நிகழ்ந்தவை அனைத்தையும் தன் மனதில் நிறுத்தி தியானித்து வந்தாள், என்று நற்செய்தி நமக்கு குறித்துக்காட்டுகிறது. கடந்த ஞாயிறன்று இவ்வன்னையை செபமாலையின் அன்னை என நாம் நினைவு கூர்ந்தோம். செபமாலை என்பது இறைவனுக்கு செவிகொடுக்க மாபெரும் துணையாகும். கபிரியேல் தூதர் மரியன்னைக்கு இறைவார்த்தையை அறிவித்தது முதல் மரியன்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசியாய் முடிசூட்டப்பட்டது வரை நாம் செபமாலையில் தியானிக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் இறைவனின் திட்டம் மனித வரலாற்றில் எவ்வாறு படிப்படியாய் வெளிப்பட்டது என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது. இந்நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் விவிலியத்தில் சான்று தேட முடியாது எனினும், உள்ளத்தின் ஆழத்தில் இவற்றை தியானிக்கும்போது இறைவனின் மீட்பு திட்டம் தொடர்ந்து வெளிப்படுவதை நம்மால் உணரமுடிகிறது.

நம் வாழ்வில் இன்றும் இறைவனின் திட்டம் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் பயன்படுத்தி அமைதியில், உள்ளத்தின் ஆழத்தில், இறைவனுக்கு செவிகொடுக்க நாம் முன் வந்தால், இதை உணரமுடியும், இறைவனை புகழ தூண்டும்.

(Rev. Father: Antony Christy SDB)
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!