Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   08  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 27ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக நற்செய்தி எனக்குக் கிடைத்தது.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-12

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் பொருட்டு அருள்கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது. வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.

நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக! ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம்; இப்பொழுது மீண்டும் சொல்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக! இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது.

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 111: 1-2. 7-8. 9,10c (பல்லவி: 5b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.

அல்லது: அல்லேலூயா.

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை. 8 என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. பல்லவி

9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது. 10உ அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( யோவா 13: 34 )

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எனக்கு அடுத்திருப்பவர் யார்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"என்று கேட்டார்.

அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?"என்று அவரிடம் கேட்டார்.

அவர் மறுமொழியாக, "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்று எழுதியுள்ளது என்றார்.

இயேசு, "சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்"என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?"என்று இயேசுவிடம் கேட்டார்.

அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: "ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார்.

அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.

"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார்.

அதற்குத் திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார்.

இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"நிலை"வாழ்வுக்கான சாவி அன்பே!

அமெரிக்கவில் தோன்றிய மிகப்பெரிய கோடிஸ்வரர் ராக்பெல்லர். ஒருசமயம் அவர் நோயில் விழுந்து படுத்த படுக்கையானார். அதனால் அவருக்கு மருத்துவம் பார்க்க, உலகில் இருந்த தலைசிறந்த மருத்துவர்கள் எல்லாம் கொண்டுவரப்பட்டார்கள். அப்படியிருந்தபோதும் அவரிடமிருந்த நோய் நீங்கவே இல்லை.

இதற்கு மத்தியில் அவரைப் பார்க்க வந்த அவருடைய நெருங்கிய நண்பரும் உளவியலாளருமான ஒருவர் ராக்பெல்லரிடம், "நண்பா! உனக்கு ஏழைகளுக்கு உதவி செய்யும் பழக்கம் இருக்கின்றதா?" என்று கேட்டார். அதற்கு அவர், "அதுவெல்லாம் எனக்குக் கிடையவே கிடையாது" என்றார். உடனே அவருடைய நண்பர், "இன்றிலிருந்து நீ ஏழைகளுக்கு தாரளமாக உதவி செய். அதற்குப் பின் ஏற்படுகின்ற மாற்றத்தைப் பார்" என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

நண்பர் சொன்னதை ஏற்றுக்கொண்டு ராக்பெல்லர் ஏழை எளிய மக்களுக்கு தாராளமான உதவி செய்யத் தொடங்கினார். அவர் அவ்வாறு உதவி செய்யத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவருடைய உடலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஆம், அவரால் எழுந்து உட்கார முடிந்தது, முன்புபோல் பணிகளை இலகுவாகச் செய்ய முடிந்தது. அப்போதுதான் அவருக்கு ஓர் உண்மை புரிந்தது. ஏழைகளுக்கு உதவிவதன் மூலம் வாழ்நாளைக் கூட்ட முடியுமென்று. அதன்பிறகு அவர் தொடங்கியதுதான் "ராக்பெல்லர் பவுண்டேசன்". இந்த அமைப்பு இன்றைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவம் தொடர்பாக பல நல்ல காரியங்களை ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றது.

ஏழை எளிய மக்களுக்கு உள்ளன்போடு உதவி செய்வதால், வாழ்நாளைக் கூட்ட முடியும் என்ற உண்மையை உணர்த்திய, ராக்பெல்லரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, "நிலை" வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கின்றார். திருச்சட்ட அறிஞருக்கு நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இயேசுவின் வாயிலிருந்து என்ன வருகின்றது என்பதற்காகக் கேட்கின்றார். இயேசுவோ அவரிடம் "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் என்ன வாசிக்கிறீர்?" என்று பதில் கேள்வி கேட்டு, அவருடைய வாயாலே அதற்குப் பதிலையும் சொல்ல வைக்கின்றார்.

திருச்சட்ட அறிஞர், "உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக" என்று சொன்னதும் இயேசு, "சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்" என்கின்றார். ஆம், நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்வதற்கு இறைவனையும் தன்னோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளையும் அன்பு செய்யவேண்டும். அப்படி ஒருவர் அன்பு செய்கின்றபோது அவர் நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்வது உறுதி.

இறைவனையும் தன்னோடு வாழக்கூடிய சகோதர சகோதரியும் எப்படி அன்பு செய்யவேண்டும் என்பதற்கு இயேசு தொடர்ந்து சொல்லக்கூடிய உவமைதான் நல்ல சமாரியன் உவமை. நல்ல சமாரியன் உவமை வெறும் உவமை மட்டுமல்ல, எருசலேமிலிருந்து எரிக்கவோ வரை அன்றாடம் நடைபெறக்கூடிய நிகழ்வுதான். அப்பகுதி இன்றைக்கும் கொலை மற்றும் கொள்ளைக்கும் பேர் போன இடமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட பகுதியின் வழியாகச் செல்லக்கூடிய ஒரு யூதரைத்தான் கள்வர்கள் பிடித்து அடித்து அவரிடமிருந்ததை எல்லாம் கவர்ந்துகொண்டு அவரைக் குற்றுயிராய் போட்டுவிட்டுப் போகிறார்கள். அப்போது அந்த வழியாக ஒரு குரு வருகின்றார். அடிபட்டுக் கிடப்பவரைக் கண்டும் காணாமல் போகின்றார். அவரைத் தொடர்ந்து ஒரு லேவியர் வருகின்றார். அவரும் அடிபட்டுக் கிடப்பவரைக் கண்டும் காணாமல் போகின்றார். ஆனால், கடைசில் வருகின்ற சமாரியரோ அவருக்குப் பண்டுவம் பார்த்து, அவரைச் சாவடிக்குக் தூக்கிக்கொண்டு போய் அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்கின்றார். இவ்வாறு அந்த சமாரியர் அடிபட்டுக் கிடப்பது தன்னுடைய எதிராளியான யூதராக இருந்தாலும் அவருக்கு எல்லாம் செய்து, அவருடைய உயிரைக் காப்பாற்றுகின்றார். இதன்மூலம் ஒருவரை எப்படி அன்பு செய்யவேண்டும் என்பதற்கு அவர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். அதனால்தான் அவர் நல்ல சமாரியர் ஆகின்றார்.

நாமும்கூட நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளை நிபந்தனை இல்லாமல் அன்பு செய்கின்றபொது "நிலை" வாழ்வினைப் ஏற்றுக்கொள்வோம் என்பது உறுதி. ஆகவே, ஒருவர் மற்றவரை எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் அன்புசெய்து, கடவுளையும் அன்பு செய்பவர்கள் ஆவோம். அதன்வழியாக நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
ஆபத்தில் உதவும் நல்ல நண்பர்களாக சமாரியர்களாக மாறுவோம்.

'கலீலா வதிம்னா' என்ற அரபி நூலில் இடம் ஒரு கதை

ஒரு காட்டில் காகம், ஆமை, எலி ஆகியவை நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒரு முறை மூன்று நண்பர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு மான் தூரத்திலிருந்து வேகமாக ஓடிவந்தது. திடுக்கிட்ட ஆமை அருகில் உள்ள குளத்தில் மூழ்கிவிட்டது. எலி தன் பொந்தில் நுழைந்துகொண்டது. காகமோ யாரேனும் வேடன் வந்துள்ளானா என வானில் வட்டமடித்துப் பறந்து பார்த்தது. வேடன் வந்ததற்கான அடையாளம் எதுவும் அருகில் இல்லாததால் காகம், எலியையும் ஆமையையும் அழைத்தது. அவை இரண்டும் வெளியே வந்தன.

களைத்துப் போயிருந்த மான் பயத்துடன் குளத்தில் தண்ணீரை குடிக்க நினைத்தது. ஆமை மானிடம் "பயப்படாதே! இங்கு உனக்கு ஆபத்து இல்லை' எனக் கூறிய பிறகு "எங்கிருந்து வருகிறாய்?' என விசாரித்தது. "இந்தக் காட்டில்தான் எனக்கான இரையைத் தேடிக் கொள்கிறேன். ஒவ்வொரு இடத்திலிருந்தும் வேடனின் அம்புகள் என்னை மற்றொரு இடத்திற்கு துரத்திக்கொண்டே இருக்கின்றன. இன்று தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. அது வேடனோ என பயந்து நான் ஓடி வந்தேன்" எனக் கூறியது மான். அதற்கு ஆமை, "பயப்படாதே! இங்கு இதுவரை நாங்கள் வேடனைப் பார்த்ததே இல்லை. இது இயற்கை வளமும் உனக்கான இரையும் நிறைந்த பகுதி. எனவே எங்களுடனேயே நீ தங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்" என்றது. மானும் அவைகளுடன் தங்க சம்மதித்தது.

மூவருடனும் மான் நண்பனாக ஆனது. நால்வரும் ஒன்று கூடிப் பேச அங்கு கூடாரம் ஒன்று இருந்தது. ஒருநாள் அந்தக் கூடாரத்தில் காகம், எலி மற்றும் ஆமை ஒன்றாய் பேசிக் கொண்டிருந்தன. மானை மட்டும் காணவில்லை. சிறிது நேரம் இவை எதிர்பார்த்த பிறகும் வரவில்லை. எனவே மிகவும் தாமதமானதால் மானிற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என அவை பயந்தன. காகத்திடம் எலியும், ஆமையும் "நீ சென்று என்ன நடந்தது என்று பார்த்து வா" எனக் கூறின. காகம் வானத்தில் வட்டமடித்துப் பார்த்தபோது மான் ஒரு வலையில் மாட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

உடனே அதை காகம் மற்ற இருவரிடமும் கூறியது. அவை மிகவும் கவலைப்பட்டன. ஆமையும் காகமும் எலியிடம் "இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற உன்னால்தான் முடியும். எனவே உன் நண்பனுக்காக உதவி செய்" எனக் கூறின. எலி வேகமாக, மான் வலையில் மாட்டிக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றது. மானிடம் "நீ தான் புத்திசாலியாயிற்றே! பிறகு எப்படி இந்த வலையில் வீழ்ந்தாய்?" எனக் கேட்டது. அதற்கு மான் "ஏதோ கவனக்குறைவால் நேர்ந்துவிட்டது" என்றது. இரண்டும் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆமையும் அங்கு வந்தது. இதனைப் பார்த்த மான், "நீ ஏன் இங்கு வந்தாய்? உனக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எங்கள் பக்கத்தில் வேடன் வந்துவிட்டால் எலி என் வலையை துண்டித்துவிடும். நான் ஓடிவிடுவேன். எலி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஏராளமான பொந்துகள் உள்ளன. காகமும் வானில் பறந்துவிடும். ஆனால், உன்னாலோ வேகமாகக் கூட செல்ல முடியாது. உன்னைப் பற்றித்தான் எனக்கு பயமாக உள்ளது" என்றது. இதைக் கேட்ட ஆமை, "நண்பர்களைப் பிரிந்து வாழ்கிற வாழ்வு வாழ்வே இல்லை. ஒரு நண்பனை விட்டு மற்றொரு நண்பன் பிரிந்துவிட்டால் உள்ளத்திலிருந்து நிம்மதி பறந்துவிடும். சந்தோஷம் என்பதே இருக்காது" என்று கூறி முடிப்பதற்குள் வேடன் வந்துவிட்டான்.

வேடன் வந்த மறுகணம் வலையை எலி துண்டித்தது. மான் தப்பியோடியது. காகம் பறந்துவிட்டது. எலி ஒரு பொந்தில் நுழைந்து விட்டது. ஆமையைத் தவிர வேறொன்றும் அங்கு இல்லை. வேடன் வலையின் பக்கத்தில் வந்து அது துண்டிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். ஆமையைத் தவிர வேறொன்றும் அங்கு கண்ணுக்கு தெரியவில்லை. எனவே அதனைக் கட்டி எடுத்துச் சென்றான். வேடனின் கைகளில் ஆமை பிடிபட்டதைப் பார்த்த எலி, மான் மற்றும் காகம் மிகவும் கவலைப்பட்டன. எலி, "ஒரு ஆபத்திலிருந்து தப்பிப்பதற்குள் அதனை விட பெரிய ஆபத்தில் நாம் மாட்டிக்கொள்கிறோமே. இதனைத்தான், "ஒருவன் தடுமாறுகிற வரை முன்னேறிச்சென்று கொண்டேயிருப்பான். ஒருமுறை தடுமாறி விழுந்துவிட்டால் அவன் கட்டாந்தரையில் நடந்து சென்றாலும் தடுக்கி விழுந்துகொண்டே இருப்பான்' என்று கூறுவார்கள் போலும். பிரதிபலன் எதிர்பார்க்காமல் தூய நட்பு கொண்ட ஆமையை எப்படிக் காப்பாற்றுவது?" என்று புலம்பியது.

மானும், காகமும் எலியிடம், "இப்படிப் புலம்புவதால் ஆமையை காப்பாற்றி விட முடியாது. ஆபத்தில் உதவுபவன்தான் அருமை நண்பன் என்பார்கள். அதுபோல் ஆபத்தில் சிக்கியிருக்கும் ஆமையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அதற்கு ஒரு வழி சொல்" என்றது. சிறிது நேரம் யோசித்த எலி, " மானே! நீ ஒரு தந்திரத்தை கையாள வேண்டும். நீ சென்று காயமுற்றதைப் போல் வேடன் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் படுத்துக்கொள். காகம் உன்னை உண்ண முயல்வது போல் உன் மீதுஅமர்ந்து கொள்ளும். நான் வேடனை கண்காணித்துக் கொள்கிறேன். அவன் ஆமையை கீழே வைத்துவிட்டு உன்னை அடைய அம்புடன் தயாராவான். உன் அருகில் அவன் வந்தால் நீ எழுந்து கொஞ்ச தூரம் ஓடு. பிறகு மீண்டும் இயலாததைப் போன்று படுத்துக்கொள். இவ்வாறே அவனை எங்களை விட்டும் தூரமாக அழைத்துச் சென்றுவிடு. அவன் திரும்பி வருவதற்குள் நான் ஆமையைக் காப்பாற்றி விடுகிறேன்" எனக் கூறியது.

காகமும், மானும் எலி கூறியதைப் போன்றே செய்தன. அவை இரண்டின் பின்னாலேயே வேடனும் சென்றான். ஆமையை விட்டு விலகி தூரத்திற்கு அவனை மான் இழுத்துச் சென்றது. எலி, ஆமையைக் காப்பாற்றியது. களைப்படைந்த வேடன் நிராசையாகி திரும்பினான். ஆமை இருந்த வலை துண்டிக்கப்பட்டதை பார்த்தான். நடந்த நிகழ்வுகளை எல்லாம் வைத்து "இது ஏதோ மாய மந்திரங்கள் நிறைந்த காடு" என எண்ணினான். "இனி இங்கு வரமாட்டேன்' என தனக்குத் தானே கூறிக்கொண்டு ஓடிவிட்டான்.

நமக்குத் துன்பம் வந்தாலும் பரவாயில்லை, தேவையில், கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவவேண்டும் என்பதை கதையில் வரும் நான்கு நண்பர்களும், குறிப்பாக ஆமை நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" எனக் கேட்ட மறைநூல் அறிஞரிடம், நல்ல சமாரியன் உவமையைச் சொல்கிறார். எருசலேமிலிருந்து எரிக்கோவிற்கு செல்லும் ஒருவரை கள்வர்கள் அடித்துப் போட, அந்த வழியாகச் சென்ற குருவோ, லேவியரோ கண்டுகொள்ளவே இல்லை. மாறாக சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சமாரியர்தான் அவரைத் தூக்கிவந்து, எல்லா உதவிகளையும் செய்கிறார். இவ்வாறு சமாரியரே மற்ற இருவரையும் விட பிறரன்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகச் சொல்லி, தன்னிடம் கேள்விகேட்ட மறைநூல் அறிஞரைப் பார்த்து, நீரும் போய் அவ்வாறே செய்யும்" என்கிறார் இயேசு.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தேவையில் இருக்கின்ற, கஷ்டத்தில் இருக்கின்ற எத்தனையோ மனிதர்களைப் பார்க்கின்றோம். ஆனால் நாம் அவர்களைக் கண்டும் காணாமல்தான் போகின்றோம். இத்தகைய ஒரு நிலையை நம்முடைய வாழ்விலிருந்து மாற்றிக்கொள்வோம். ஆபத்தில் இருக்கின்றவர்களுக்கு உதவிடுவோம், தேவையில் இருப்போருக்கு உறுதுணயாக இருப்போம். நல்ல சமாரியர்களாக விளங்கிடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
நல்ல சமாரியன்

நாளைய நற்செய்தியில் (காண். 10:25-37) 'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.

இந்த இறைவாக்கு பகுதியை கடந்த முறை வாசித்தபோது இரண்டு விஷயங்கள் என்னைத் தொட்டன:
அ. 'கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?' என்று இயேசு திருச்சட்ட அறிஞரிடம் கேட்கின்றார். திருச்சட்ட அறிஞர், 'அவருக்கு இரக்கம் காட்டியவரே' என்று பதில் தருகின்றார்.
அதாவது, 'சமாரியன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை வேண்டுமென்றே தவிர்க்கின்றார் இந்த அறிஞர். 'சமாரியன்' என்ற பெயரை பயன்படுத்துவது கூட தீட்டு என்று யூதர்கள் கருதியதை தோலுரிக்கின்றார் லூக்கா.
எனக்கு ஒரு டவுட்.
'சமாரியன்' என்ற பெயரையே பயன்படுத்த தயங்கிய இந்த அறிஞர் இந்த சமாரியன் செய்ததுபோல செய்திருப்பாரா?
ஆ. இயேசு 'நீரும் போய் அப்படியே செய்யும்' என்று கூறினார்.
ஐந்து வசனங்களுக்கு முன்னால், 'அப்படியே செய்யும். அப்போது நீர் வாழ்வீர்' என்று சொல்லும் இயேசு, இப்போது, 'நீர் வாழ்வீர்' என்ற பகுதியை விட்டுவிடுகின்றார்.
அதாவது, அடுத்தவருக்கு இரக்கம் காட்டுதல் அல்லது அன்பு காட்டுதல் என்பது அந்த இரக்கம் அல்லது அன்பு நமக்கு வாழ்வு தரும் என்பதற்காக அதைச் செய்யக் கூடாது.
இரக்கத்தை இரக்கத்திற்காக மட்டுமே காட்ட வேண்டும். அதை விடுத்து, நாம் வாழ்வு பெற இரக்கம் அல்லது அன்பு காட்டினால் நாம் அடுத்தவரை பயன்படுத்துபவராக மாறிவிடுவோம்.
மனிதர்கள் ஒருபோதும் பயன்பாட்டுப் பொருள்கள் அல்லர்!


- Rev. Fr. Yesu Karunanidhi.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!