Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   05  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 26ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?

யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 12-21; 40: 3-4

ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்: உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா? இவ்வாறு, அது வையக விளிம்பைத் தொட்டிழுத்து, பொல்லாதவரை அதனுள்ளிருந்து உதறித் தள்ளுமே! முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல் மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.

அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்; அடிக்க ஓங்கிய கை முறிக்கப்படும். கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ? சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ? அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா? அறிவிப்பாய் அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்! ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ? அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ? அதன் உறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ! ஆம், அறிவாய்; அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்; ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!

யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி: இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவே மாட்டேன்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 139: 1-3. 7-8. 9-10. 13-14ab (பல்லவி: 24b)
=================================================================================
பல்லவி: இறைவா! என்றும் உள்ள வழியில் என்னை நடத்துவீர்.

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி

7 உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? 8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! பல்லவி

9 நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். பல்லவி

13 ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! 14ab அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( திபா 95: 8b,7b )
அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில் இயேசு கூறியது: "கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து, மனம் மாறியிருப்பர்.

எனினும் தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மனம்மாறுங்கள்; கனிதரும் வாழ்க்கை வாழுங்கள்.

டாரி என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மிகச் சிறந்த போதகர் மற்றும் மறைப் பணியாளர் (Dr. B.A. Torrey, 1856 1928). ஆனால் அவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் மிகவும் தாறுமாறாக வாழ்ந்துவந்தார். எந்தளவுக்கு என்றால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் தன்னுடைய மனம்போன போக்கில் வாழ்ந்துவந்தார்.

ஒருநாள் அவருடைய அன்னை அவரைக் கண்டிக்கவே, அவர் வீட்டைவிட்டே ஓடிப்போனார். அவர் ஓடிப்போகும் முன்பாக அந்த அன்னை அவரைப் பார்த்துச் சொன்னார், "அன்பு மகனே இப்போது நான் உனக்குச் சொல்வது மிகவும் கசப்பாக இருக்கலாம், எரிச்சலாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள் நீ கடவுளைவிட்டுப் பிரிந்து வெகு தொலைவில் சென்று கொண்டிருக்கிறாய். ஒருநாள் நீ இந்த மண்ணுலகில் வாழவே முடியாது என்றொரு நிலை வரலாம். அப்போது நீ கடவுளைப் பார்த்து "உம்மை விட்டுப் போன உதாரிப்பிள்ளையான என்னைக் காத்தருளும் என்று மட்டும் ஜெபி" என்று கூறினார்.

வீட்டை விட்டு ஓடிப்போன டாரி இன்னும் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். இந்த மண்ணகத்திலே எல்லாவகையான இன்பங்களையும் அனுபவித்து விடலாம் என்று ரீதியில் வாழ்ந்தான். ஆனால் அவன் இன்பத்தை அனுபவிப்பதாக நினைத்து, துன்பத்தில் விழுந்தான். ஆம், டாரி தன்னுடைய வாழ்க்கையில் ஒருவிதமான வெறுமையை உணர்ந்தபின்பு, தன்னுடைய அறைக்குச் சென்று, துப்பாக்கியை எடுத்து, தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தான். அப்போது அவன், "வாழ்வில் இக்காட்டான சூழ்நிலையை அடைந்தால் "கடவுளே என்னைக் காத்தருளும்" என்று முன்பொரு காலத்தில் தாயானவள் தனக்குச் சொல்லிக்கொடுத்த ஜெபத்தை சொல்லிப்பார்த்தான். அப்போது அவன் தன்னிலே ஒரு மாற்றத்தை உணர்ந்தான்.

டாரி, தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை போலியானது, பொய்யானது, அருவருக்கத் தக்கது என நினைத்து வருந்தி அழுதான். அதன்பிறகு தன்னுடைய வாழ்க்கையே மாற்றுக்கொண்டு மறைபோதகராகவும், நற்செய்திப் பணியாளராகவும் வாழத் தொடங்கினான்.

பாவ வாழ்க்கை வாழும் ஒவ்வொரும் தன்னுடைய தவறை உணர்ந்து, மனமாற வேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி நமக்கு எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கொராசின் நகரையும் பெத்சாய்தா நகரையும் கப்பர்நாகும் நகரையும் கடுமையாகச் சாடுகின்றார். எதற்காக என்றால், அந்த நகர்களில் வாழ்ந்த மக்கள்தான் இயேசுவின் போதனையை அதிகமாகக் கேட்டவர்கள், அவர் ஆற்றிய புதுமையை, அற்புதத்தைக் கண்கூடாகப் பார்த்தவர்கள். அப்படியும் அவர்கள் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழாததால்தான் இயேசு அந்த நகர்களில் வாழ்ந்த மக்கள்மீது கடுமையாகச் சினம் கொள்கிறார்.

இயேசுவைப் பார்ப்பதும், அவருடைய போதனையைக் கேட்பதும் காணக்கிடைக்காத ஒரு பாக்கியம். யூத மக்கள் அப்படிப்பட்ட பேற்றினை அதிகமாகப் பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டும், அவர் ஆற்றிய புதுமைகளைக் கண்டும் மனம்மாறாததால்தான் அவர்கள் இயேசுவின் சினத்திற்கு ஆளாகிறார்கள். பல நேரங்கில் இறைவார்த்தையைக் கேட்டும், திருவிருந்தில் பங்கு கொண்டும் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாதவர்களாக இருக்கின்றோம்.

இறைவார்த்தை சொல்கிறது, "நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என்னுடைய தந்தைக்கு மாட்சியளிக்கிறது" என்று. (யோவான் 15:8). ஆனால் நாம் உண்மையிலே கனிதரும் வாழ்க்கை வாழ்கிறோமா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

"உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் வேண்டும். கிடைத்ததை நெஞ்சார வாழ்த்த வேண்டும். நம்பிக்கையோடு வளர்ச்சியை எதிர்கொள்ளவேண்டும். இதுவே வாழ்க்கை" என்று வாழ்க்கைக்கு நல்ல இலக்கணம் தருவார் புத்த பெருமான். நாம் அனைவரையும் நேசிக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

பல நேரங்களில் நமக்கு இறைவனின் போதனையோ, அல்லது பெரியவர்களின் அறிவுரையோ எதுவுமே முக்கியமானதாகத் தோன்றுவதில்லை. எதை நினைக்கிறோமோ அதனை நம்முடைய வாழ்க்கையில் செய்துவிடத் துடிக்கின்றோம் அது இறைத் திருவுளத்திற்கு எதிராக இருக்கிறது என்பதையெல்லாம் நாம் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் நாம் கடவுளின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகின்றோம்.

ஆகவே, கடவுள் நமக்குக் கொடையாகக் கொடுத்திருக்கும் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ முயற்சிப்போம். பாவத்திலிருந்தும், தீய பழக்கவழத்திலிருந்தும் விடுதலை பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼


தூய பவுஸ்தினா (அக்டோபர் 05)

நிகழ்வு

1935 ஆம் ஆண்டில் ஒரு நாள், பவுஸ்தினா ஆலயத்தில் தனியாக அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அன்னை மரியா அவருக்குக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியில் மரியா அவரிடம், "அன்பு மகளே பவுஸ்தினா! என் மகன் இயேசுகிறிஸ்து இவ்வுலகின்மீது மிகுந்த இரக்கம் கொண்டிருக்கின்றார். இந்த அளவிட முடியாத இரக்கத்தை உலகத்தார் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். அதற்காக நீ இப்போது நான் உன்னிடத்தில் சொல்வதையெல்லாம் குருக்களிடம் சென்று சொல்லி, அவர்களை இயேசுவின் இரக்கத்தை மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளச் செய்யுமாறு சொல்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்து போனார். மரியாவின் அன்புக் கட்டளைக்கிணங்க பவுஸ்தினா இரக்கத்தின் ஆண்டவரைப் பற்றி குருக்களிடம் எடுத்துச் சொல்லி, இரக்கத்தின் ஆண்டவரது பக்தி உலகம் முழுவதும் பரவுவதற்குக் காரணமாக இருந்தார்.

வாழ்க்கை வரலாறு

பவுஸ்தினா 1905 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்தார். இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பமாகும். குடும்பத்தில் இருக்கின்ற அனைவரும் உழைத்தால்தான் உணவு கிடைக்கும் என்றொரு நிலை இருந்ததால், பவுஸ்தினா அக்கம் பக்கத்து வீடுகளில் வேலை செய்து, அதிலிருந்து கிடைத்த சிறிய தொகையை தன்னுடைய தந்தையிடம் கொடுத்து, குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்தார். பவுஸ்தினா சிறு வயது முதலே நற்கருணை ஆண்டவரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவருக்கு ஏழு வயது நடந்துகொண்டிருந்தபோது கடவுளின் அழைப்பை உணர்ந்து, கன்னியர் மடத்தில் சேர நினைத்தார். ஆனால் சிறிய வயது என்பதால் அவரை கன்னியர் மடத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார். அதன்பிறகு இருபது வயதில்தான் சேர்ந்தார்.

கன்னியர் மடத்தில் பவுஸ்தினா தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மிகவும் பொறுப்புடனே செய்துவந்த அதே நேரத்தில், நற்கருணை ஆண்டவரிடத்தில் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். அவ்வப்போது ஆண்டவரின் காட்சி அவருக்குக் கிடைத்தது. ஒரு காட்சியில் ஆண்டவர் இயேசு அவரிடம், "நான் இந்த உலகத்தின் மீது மிகுந்து அன்பும் இரக்கமும் கொண்டிருக்கின்றேன். மனுக்குலத்தின் மீதான எனது இரக்கத்தை எல்லா மக்களிடத்திலும் எடுத்துச் சொல்லி, இந்த பக்தி முயற்சியை எல்லாரிடத்திலும் பரப்பு" என்று சொன்னார். அதன்பேரில் இரக்கத்தின் ஆண்டவர் பக்தி முயற்சியை எங்கும் பரவுவதற்குக் பவுஸ்தினா காரண கர்த்தாவாக இருந்தார். இன்னொரு சமயம் ஆண்டவர் இயேசு தோன்றும் போது அவருடைய நெஞ்சத்திலிருந்து இரு கதிர்கள் தென்பட்டது, ஒன்று சிகப்பு நிரந்திலும் இன்னொரு ஊதா நிறத்திலும் இருந்தது. இயேசுவின் காலடியில் "இயேசுவே உம்மை நான் நம்புகிறேன்" (Jesus i trust in you ) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் இந்தக் காட்சியில் இடம்பிடித்தவைத்தான் "இரக்கத்தின் ஆண்டவரது" அடையாளமாக மாறிப்போனது.

பவுஸ்தினா, இரக்கத்தின் ஆண்டவரது பக்தி முயற்சியை எங்கும் பரப்பி சிறந்ததொரு நற்செய்தியின் தூதுவராய் விளங்கினார். இவருக்கு முப்பத்து மூன்று வயது நடந்துகொண்டிருக்கும்போதே எலும்புருக்கி நோயினால் பத்திக்கப்பட்டு இறந்து போனார். இவருக்கு 2000 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பவுஸ்தினாவை நினைவுகூறும் இந்நாளில், அவருடைய வாழ்வு நமக்கு எத்தகைய பாடத்தைக் கற்றுத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருப்போம்

தூய பவுஸ்தினா தன் வாழ்நாள் முழுக்க இரக்கத்தின் ஆண்டவரைக் குறித்து தியானித்து, அவரை எல்லா மக்களுக்கும் அறிவித்தார் என்று அவருடைய வாழ்க்கைக் குறிப்பு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அவருடைய விழாவைக் கொண்டாடுகின்ற நாம், அவரைப் போன்று இரக்கத்தின் ஆண்டவரைப் பற்றி எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கின்றோமா? அல்லது இரக்கத்தின் ஆண்டவரைப் போன்று நாமும் நம்மோடு வாழக்கூடியவர்களிடம் இரக்கமுள்ளவர்களாக இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுக் பெற்றுக்கொள்கின்றோம். ஆனால், நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு அந்த இரக்கத்தைக் காட்டாமல் இருந்துவிடுகின்றோம். இது தகுதியான ஒரு செயலாக இருக்க முடியாது.

தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுவார், "இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்" என்று (2:13). இது உண்மையிலும் உண்மை. நாம் மற்றவர்களிடம் இரக்கம் காட்டாதபோது, இறைவனிடமிருந்து எப்படி இரக்கத்தை எதிர்ப்பார்க்க முடியும் என்பதுதான் கேள்வியாக இருக்கின்றது.

ஆகவே, நாம் விண்ணகத் தந்தையை போன்று இரக்கமுள்ளவர்களாக இருப்போம். தூய பவுஸ்தினாவைப் போன்று இரக்கத்தின் ஆண்டவரிடம் உண்மையான பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்!

அது ஒரு கூட்டுக்குடும்பம். அந்தக் குடும்பத்தில் இருந்த முதியவருக்கு அன்று 103 வது பிறந்த நாள். எனவே பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் எல்லாம் மிகவும் அமர்க்களமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. குடும்பத்தில் இருந்த எல்லாரும் மிகவும் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் பிறந்தநாள் கொண்டாடும் முதியவர் மட்டும் எதிலும் பட்டுக்கொள்ளாமல் ஓர் ஓரமாக புன்னகைத்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த உறவினர் ஒருவர் முதியவரை அணுகி, "உங்கள் வாழ்வில் இன்று ஒரு முக்கியமான நாள். அப்படியிருக்கும்போது எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறீர்களே?" என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், "தம்பி! இன்று மட்டுமில்லை, என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் முக்கியமான நாள்தான். அதை உணர்ந்ததால்தான் என் வாழ்வை அர்த்தமுள்ளவிதமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்" என்றார்.

ஆம், நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஏன், ஒவ்வொரு நொடியும்கூட முக்கியமானது. இதை உணர்ந்து வாழ்ந்தோம் என்றால், நம்முடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றலாம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் என்ற மூன்று நகரங்களையும் கடுமையாகச் சாடுகின்றார். இயேசு இந்த மூன்று நகரங்களையும் கடுமையாகச் சாடுவதற்குக் காரணம் என்ன? அப்படி இந்த நகரங்களில் இருந்தவர்கள் செய்த தவறு என்ன? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கொராசின் நகர் கலிலேயாக் கடலுக்கு கிழக்குப் பக்கமாய் உள்ள நகர். இந்த நகரத்தில் இயேசு ஏராளமான புதுமைகளை, அதிசயங்களை, அற்புதங்களைச் செய்திருக்கவேண்டும். இப்படி இயேசு அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தபோதும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல், இந்த நகரில் இருந்தவர்கள் அப்படியே இருந்ததால்தான் இயேசு அந்த நகரை, நகரில் இருந்தவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். பெத்சாய்தா நகர் கலிலேயாக் கடலுக்கு மேற்குப் பக்கமாய் உள்ள நகர், இந்த நகரிலிருந்து ஆண்டவர் இயேசு பிலிப்பு. அந்திரேயா, பேதுரு என்ற மூன்று திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இயேசு இந்த நகரை எந்தளவுக்கு அன்பு செய்திருந்தால், இந்த நகரிலிருந்து மூன்று திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்!. இப்படி இயேசு பெத்சாய்தா நகரை அன்பு செய்து, அதில் ஏராளமான அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தபோதும், அது திருந்தாமல் இருந்ததனாலேயே இயேசு பெத்சாய்தாவைக் கடுமையாகச் சாடுகின்றார்.

இயேசு தன்னுடைய பணிவாழ்வில் அதிகமான நாட்களைச் செலவழித்த ஒரு நகர் உண்டென்று சொன்னால், அது கப்பர்நாகும் என்றுதான் சொல்லவில்லை. இந்த நகரத்தில் இயேசு ஏராளமான புதுமைகளையும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தார். அப்படியிருந்தபோதுகூட அந்த நகரத்தில் இருந்தவர்கள் திருந்தாமல் அதே பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்ததால் இயேசு அந்த நகரத்தைப் பார்த்து, "கப்பர்நாகுமே நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய்" என்கின்றார்.

இயேசு இந்த மூன்று நகர்களையும் கடுமையாகச் சாடுவதிலிருந்து நமக்கு ஓர் உண்மை மிகத் தெளிவாகப் புலப்படுகின்றது. அது என்னவெனில், இந்த மூன்று நகர்களிலும் இருந்த மக்கள் கடவுள் தங்களுக்குக் கொடுத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதே ஆகும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அவர்கள் பயனுள்ள வாழ்க்கை வாழவில்லை.

ஒருவர் தன்னுடைய நிலத்தில் விதைகளைத் தூவி, அதனை நன்றாகப் பராமரித்து, குறிப்பிட்ட காலத்தில் அதிலிருந்து பலனை எதிர்பார்ப்பது தானே நியாயம். பலனை எதிர்பாராமல் பயிரிடும் விவசாயி யாரேணும் உண்டோ?. நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இதைப் போன்றுதான் இறைவனும் நாம் வளர்வதற்கு நல்ல சூழலை உருவாக்கித் தந்து, நம்மை நல்லமுறையில் பராமரிக்கின்றார். அப்படியிருந்தும் நாம் பலன்தரவில்லை என்றால் நாம் அதற்கேற்ற தண்டனையைப் பெறுவது திண்ணம்.

கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் என்ற இந்த மூன்று நகர்களிலும் இயேசு ஏராளமான புதுமைகள் செய்து, இறைவார்த்தையை நிறைவார்த்தையை நிறைய முறை எடுத்துரைத்தார். அப்படியிருந்தபோதும் அந்நகரங்கள் பலன் கொடுக்கவில்லை, திருந்தி நடக்கவில்லை என்பதால்தான் இயேசு அந்த நகரங்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

ஆகவே, நம்முடைய வாழ்வில் பலன்கொடுக்கத் தடையாய் உள்ளவை எவை எவை என ஆராய்ந்து பார்த்து, அவற்றை நம்மிடத்திலிருந்து களைவோம். பலன் கொடுக்கின்ற நல்லதொரு வாழ்வை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
கொராசின் நகரே
'கொராசின் நகரே, ஐயோ உனக்குக் கேடு!' (காண். லூக் 10:13-16)

தன் போதனையைக் கேட்டு திருந்த மறுத்த கொராசின், பெத்சாய்தா, மற்றும் கப்பர்நகூம் நகரங்களைச் சாடுகின்றார் இயேசு.
இயேசுவே இந்நகரங்களைச் சாடினாரா அல்லது இயேசுவின் சீடர்கள் காலத்தில் அவர்களின் பணி இந்த நகரங்களில் எடுபடவில்லை என்பதால் தாங்கள் சாட விரும்பியதை இயேசுவே செய்ததாக அவர்கள் பதிவு செய்தார்களா?
'நீங்கள் மனம் மாறவில்லை!' என்று சபிக்கிறராரே இயேசு. ஏன்?
மனித மனத்தில் இருப்பது அவருக்கு எப்படி தெரிந்தது?
அல்லது மனமாற்றம் என்பது வெளிப்படைச் செயல்களில் தெரியவேண்டுமா?
மனம் மாறுவதற்கு என்று டிகிரி (அளவு) எதாவது இருக்கின்றதா?
இந்த அளவை எப்படி நிர்ணயம் செய்வது?
நாளைய பதிலுரைப்பாடல் (திபா 139) திருப்பாடல் ஆசிரியர், 'உன் உள் உறுப்புக்களை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!' என்று இறைவனின் வியத்தகு ஆற்றலைப் புகழ்ந்து பாடுவதாக இருக்கிறது.
ஆக, நம் உள்ளுறை எண்ணங்களை உய்த்துணர்பவர் கடவுள்.
நம் உள்ளுறை எண்ணங்கள் மற்றவர்களுக்குத் தெரியக்காரணம் நம் பழக்கவழக்கங்களும், செயல்களும், நடை உடை பாவணைகளும்.
எனவே, மனம் மாற வேண்டும்.
அதற்கேற்ற செயல்களும், பண்புகளும் இருக்க வேண்டும்.

- Rev. Fr. Yesu Karunanidhi.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!