Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   04  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 26ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
என் மீட்பர் வாழ்கின்றார்; இறுதியில் மண்மேல் எழுவார்.

யோபு நூலிலிருந்து வாசகம் (19: 21-27)

யோபு கூறியது: என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என்மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது. இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா? ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா? ஓ! அவை ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா? இரும்புக் கருவியாலும் ஈயத்தாலும் என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்பட வேண்டும். ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் என்றும், இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன். நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 27: 7-8a. 8b-9abc. 13-14 (பல்லவி: 13)
=================================================================================
பல்லவி: வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.

7 ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.
8a புறப்படு, அவரது முகத்தை நாடு' என்றது என் உள்ளம்.
-பல்லவி

8b ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
9abc உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும்.
-பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.
-பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(மாற் 1: 15)

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்.

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (10: 1-12)

அக்காலத்தில் இயேசு வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள்.

ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே. வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள் எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
சீடர்களை பணித்தளங்களுக்கு அனுப்பும் இயேசு!

இத்தாலியின் விடுதலைக்காகப் போராடியவர் ஜோசப் கரிபால்டி என்பவர். ஒரு சமயம் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் இத்தாலிக்காகப் போராட வருமாறு உணர்ச்சி பொங்கப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ஓர் இளைஞன் அவரிடம், "ஐயா! நீங்கள் சொல்வது போன்று நான் நாட்டிற்காகப் போராடினால் எனக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்டான். அதற்கு கரிபால்டி அவனிடம், "உனக்குக் காயங்களும் தழும்புகளும் அடிகளும் ஏன் சில சமயம் சாகும்நிலை கூட கிடைக்கும்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து அவனிடத்தில் சொன்னார், "இந்தத் துன்பத்தை எல்லாம் தாங்கிக் கொண்டால் விடுதலை பெற்ற, மகிழ்ச்சி நிறைந்த இத்தாலில் நாடு கிடைக்கும்" என்றார்.

நாட்டின் விடுதலைக்காக போராட முன்வருகிறவர் எப்படி காயங்களையும் அடிகளையும் அவமானங்களையும் தாங்கிக்கொள்ளவேண்டுமோ, அதுபோன்று இயேசுவின் சீடராக இருக்க முன்வருகின்றவர் அடிகளையும் அவமானங்களையும், காயங்களையும் தாங்கிக்கொள்ளவேண்டும். அதற்குத் தயாராக இருப்பவர்தான் இயேசுவின் சீடராக இருக்கமுடியும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் எழுபத்தி இரண்டு சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகின்றார். எழுபத்தி இரண்டு என்ற எண்ணானது எழுபது என்றும் சில பிரதிகளில் உள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விவிலியத்தில் எழுபது என்ற எண்ணானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் எண்ணாகும். யாக்கோபின் குடும்பம் எகிப்தில் குடியமர்ந்தபோது அதில் எழுபது பேர் இருந்தனர் (தொநூ 46:7), மலையில் ஆண்டவருடைய மகிமையைக் காண்பதற்கான மோசே மற்றும் ஆரோனோடு சென்றவர்களின் எண்ணிக்கையும் எழுபதுதான் (விப 24: 1,9). அதே போன்று இஸ்ரயேலின் பன்னிரு குலத்தாரிடையே மோசேயோடு சேர்ந்து பணிசெய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூப்பர்களின் எண்ணிக்கையும் எழுபதுதான் (எண் 11: 24-25). இப்படி எழுபது என்ற எண்ணிற்கென்று ஒரு முக்கியத்தும் இருப்பதை அறிந்ததால் என்னவோ இயேசு கிறிஸ்து எழுபது பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் இருவர் இருவராக தாம் போக இருந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றார்.

அவ்வாறு அனுப்பி வைக்கின்றபோது, அவர்களுக்கு இயேசு சொல்கின்ற அறிவுரைதான் நம்முடைய சிந்தனைக்குரியதாக இருகின்றது. முதலாவதாக இயேசு அவர்களிடம், "பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம். வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்தவேண்டாம்" என்கிறார். நற்செய்தி அறிவிப்புப் பணியானது இறைவனை நம்பி செய்யப்படுகின்ற ஒரு பணி, அதுவும் விரைவாகச் செய்து முடிக்கவேண்டிய பனி. இத்தகைய பணியைச் செய்கின்றபோது பொருள்களையும் இன்னபிறவற்றையும் தூக்கிக்கொண்டு அலைந்தால், அதில்தான் நாட்டம் இருக்குமே ஒழிய, இறைப்பணியாம் நற்செய்தி அறிவிக்கின்ற பணியில் நாட்டம் இருக்காது என்பதால் இயேசு அப்படிச் சொல்கின்றார்.

இயேசு சீடர்களுக்குச் சொல்கின்ற இரண்டாவது அறிவுரை, "நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! என முதலில் கூறுங்கள்" என்பதாகும். சீடர்கள் இயேசுவின் பதிலாளிகள். ஆகவே, அவர்கள் இயேசு இந்த உலகத்திற்குக் கொண்டுவந்த அமைதியை எல்லாருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும். அதனால் இயேசு மேற்சொன்ன வார்த்தைகளைச் சொல்கின்றார். ஒருவேளை இயேசு சொல்லச் சொன்ன அமைதியை சீடர்கள், தாங்கள் சந்திக்கின்ற மனிதர்களிடத்தில் சொல்கின்றபோது அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அது சீடர்களிடத்திலே திரும்பி வந்துவிடும் எனச் சொல்கின்றார்.

இயேசு தம் சீடர்களுக்குச் சொல்லுகின்ற மூன்றாவது அறிவுரை, "நீங்கள் செல்லும் ஊரில் உள்ள உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்தவிட்டது எனச் சொல்லுங்கள்" என்பதாகும். சீடர்கள் போதிக்கின்ற பணியைச் செய்யக்கூடிய அதே வேளையில் நோயாளிகளைக் குணப்படுக்கின்ற பணியையும் செய்யவேண்டும். ஏனென்றால் உடல் நலம் குன்றியிருக்கின்ற ஒருவரால் போதனையைக் கேட்பதற்கான திராணி இராது. அவர்கள் அவர்களுடைய நோயிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார்கள் என்றால், அவர்களால் போதனையை எளிதாகக் கேட்க முடியும். அதனால்தான் இயேசு தன்னுடைய சீடர்களிடம் போதிக்கின்ற பணியோடு சேர்த்து குணப்படுத்தும் பணியையும் செய்யச் சொல்கின்றார்.

இத்தகைய அறிவுரைகளோடு சேர்த்து, "நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் கால்களில் ஒட்டியுள்ள தூசியையும் உதறிவிடுங்கள்" என்றும் சொல்கின்றார். யூதர்கள் புறவினத்தாரின் ஊர்கள் வழியாகச் சென்றுவிட்டு தங்களுடைய சொந்த மண்ணுக்குள் திரும்பும்போது வழக்கமாக தங்கள் கால்களில் ஒட்டியுள்ள தூசியையும் உதறிவிட்டுத்தான் வருகின்றார். நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாதவருடைய ஊர்களை விட்டு வெளியே வரும்போதும் இப்படியே செய்யுங்கள் என்கின்றார் இயேசு.

ஆகவே, இயேசு தம் சீடர்களுக்குச் சொன்னவாறு, நற்செய்திப் பணியை இறைவனை நம்பிச் செய்வோம், ஆண்டவரின் அமைதியை அகிலத்தவருக்கு எடுத்துச் சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
அமைதி தரும் அமைதி

புனித பிரான்சிஸ்கு அசிசியார் நினைவு

யோபு 19:21-27
லூக் 10: 1-12

வரலாற்றிலே கிறிஸ்துவை மிக நெருக்கமாய் பிரதிபலித்தவர்களில் முதன்மையான புனிதர் தூய பிரான்சிஸ்கு அசிசியார் என்பார்கள். கிறிஸ்துவின் ஐந்து காயங்களை இவர் பெற்றிருந்த காரணத்தினால் மட்டுமல்ல, மாறாக கிறிஸ்து மட்டுமே தரக்கூடிய மாபெரும் கொடையான உண்மையான அமைதியை இவர் தன் வாழ்நாள் முழுதும் உலகிற்கு அறிவுறுத்தியமையாலே. நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும், 'இந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக' என்று கூறுங்கள், என்று கிறிஸ்து தன் திருத்தூதர்களிடம் கூறுவதை நாம் இன்றைய நற்செய்தியில் காண்கின்றோம்.

சிறப்பாக அடிப்படைவாதமும் தீவிரவாதமும் கோலோச்சிவரும் இந்த நாட்களிலே, வெறும் அரசியல் அல்லது சமய தீவிரவாதம் அல்ல, ஆனால் எல்லா நிலைகளிலும், தரப்பிலும், சூழலிலும் நாம் காண்கின்ற அடிப்படைவாத பிரிவினைவாத சுயநலவாத ஆற்றல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அன்று புனித பிரான்சிஸ் பத்தாம் பதினோறாம் நூற்றாண்டில் வந்தபோது இருந்தது போலவே, இன்று திருச்சபை பல சோதனைகளை, சவால்களை, காயங்களை, இடறல்களை, இழுக்குகளை எதிர்கொண்டவண்ணமே இருக்கிறது. என்ன செய்யப்போகிறோம்? கசப்போடும், பழிவாங்கும் எண்ணத்தோடும், வஞ்சம் தீற்கும் உள்ளத்தோடும் செயல்பட போகிறோமா? அல்லது கிறிஸ்துவை போன்று நம்பிக்கை தரும் ஆழ்ந்த அமைதியில் உண்மையை சந்திக்கப்போகிறோமா? அது நம் கைகளிலேயே உள்ளது என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த உலகை, தன் மக்களாகிய நம்மை தேடி வந்த அமைதியாம் இறையேசு தரும் அமைதியை நம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்வோம்; அமைதி தரும் அதே அமைதியை உலகோடு பகிர்வோம் , அமைதியின் கருவிகளாவோம்.

(Rev. Father: Antony Christy SDB)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
"இயேசு தாம் அனுப்பிய எழுபத்திரண்டு பேரை நோக்கி, 'நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள்.
அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்' என்றார்" (லூக்கா 10:1-2,5-6)


-- இயேசுவின் பணியை ஆற்றுவதற்குச் சீடர்கள் தேவைப்பட்டார்கள். அவர் எழுபத்திரண்டு பேரை அனுப்பி இறையாட்சி பற்றிய நற்செய்தியை அவர்கள் அறிவிக்க வேண்டும் எனப் பணிக்கின்றார். அப்பணியை ஆற்றச் செல்வோர் எளிமையான முறையில் தோற்றமளிக்க வேண்டும் எனவும், ஒரு மாற்றுக் கலாச்சாரப் பாணியில் மக்கள் முன் செயல்பட வேண்டும் எனவும் ( (லூக் 10:4) இயேசு அறிவுறுத்துகிறார். மேலும் இயேசுவால் அனுப்பப்பட்ட தூதர்கள் எதிர்ப்புகளையும் தடைகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் இயேசு அவர்களுக்குக் கூறுகிறார். "ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப் போல" (லூக் 10:3) அவர்கள் செல்வார்கள். இவ்வாறு பணியாற்றும் போது அவர்கள் "ஊர்களுக்கும்" "வீடுகளுக்கும்" சென்று இறையாட்சி பற்றி அறிவிக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் நிகழ்கின்ற பணி லூக்கா நற்செய்தியில் முதன்மை பெறுகிறது. வழியில் சந்திக்கின்றவர்களிடம் பேச்சுக் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம் (லூக் 10:4) என்று கூறிய அதே இயேசு தாம் அனுப்பிய சீடர்கள் "எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறும்படி" கேட்கின்றார் (காண்க: லூக் 10:5). இங்கே குறிப்பிடப்படுகின்ற "அமைதி" என்னும் சொல் வழக்கமான வாழ்த்துச் சொல் மட்டுமல்ல. அமைதி என்பது சண்டை சச்சரவு இல்லாத நிலை என்பதும் அல்ல. மாறாக, இயேசு குறிப்பிடுகின்ற "அமைதியும்" அவர் வழங்குகின்ற "மீட்பும்" ஒன்றே. கடவுள் தம் மக்களைத் தேடி வந்து அவர்களுக்கு முழு நலன் வழங்கி, அவர்களைக் கடவுளோடு உறவாடச் செய்கின்ற நிலையே "அமைதி" ஆகும். இத்தகைய நல்ல செய்தியை மக்கள் ஒன்றில் ஏற்பார்கள் அல்லது அதை வேண்டாம் என்று ஒதுக்குவார்கள்.

-- இயேசு வழங்குகின்ற அமைதியும் நல வாழ்வும் மீட்பும் அவருடைய சீடர்கள் வழியாக மக்களுக்கு எப்போதும் பறைசாற்றப்படுகிறது. கடவுளின் கொடையை விரும்பி ஏற்போர் உள்ளத்தில் உண்மையான மாற்றம் நிகழும். அவர்களும் கடவுளோடு நல்லுறவில் இணைந்து மகிழ்ச்சியடைவார்கள். கடவுளின் கொடையை நன்மனத்தோடு ஏற்காத மனிதருக்கு எந்தவொரு பயனும் ஏற்படாது. "இந்த வீட்டுக்கு அமைதி" என்பது "இந்தக் குடும்பத்திற்கு அமைதி" என்றே பொருள்படும். லூக்கா எழுதிய நற்செய்தி நூலிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் "குடும்பத் திருச்சபை" அல்லது "வீட்டுத் திருச்சபை" என்னும் கருத்து முக்கியமானது. அதாவது, தொடக்க காலத் திருச்சபை நற்செய்திப் பணி ஆற்றியது தொழுகைக் கூடங்களிலோ கோவில்களிலோ அல்ல, மாறாக, வீடுகளில் மக்கள் கூடி வந்து, ஒரு குடும்பமாக இணைந்து, இறைவேண்டலில் ஈடுபட்டார்கள்; கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுத்தார்கள்; நற்கருணை விருந்தைக் கொண்டாடினார்கள்; அன்புப் பணி ஆற்றினார்கள். இன்றைய திருச்சபையும் அடித்தள கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுவது போற்றற்குரியது. நற்செய்திப் பணியும் குடும்பச் சூழலில் நிகழும்போது அதிக பயன் நல்கும் என்பது அனுபவ உண்மை.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!