Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                  01  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 26ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!

யோபு நூலிலிருந்து வாசகம் 1: 6-22

ஒரு நாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்து நின்றான். ஆண்டவர் சாத்தானிடம், "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், "உலகைச் சுற்றி உலவி வருகிறேன்" என்றான்.

ஆண்டவர் சாத்தானிடம், "என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை" என்றார்.

மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம், "ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்" என்றான்.

ஆண்டவர் சாத்தானிடம், "இதோ! அவனுக்கு உரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே" என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.

ஒரு நாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, "எருதுகள் உழுது கொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, "கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்து விட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, "கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, "உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்" என்றான்.

யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்; தம் தலையை மழித்துக் கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி, "என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக!" என்றார்.

இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவும் இல்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 17: 1. 2-3. 6-7 (பல்லவி: 6cd)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

2 உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும். 3 என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காண மாட்டீர்; என் வாய் பிழை செய்யக் கூடாதென உறுதி கொண்டேன். பல்லவி

6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். 7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(மாற் 10: 45)

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50

அக்காலத்தில் தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், "இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்" என்றார்.

யோவான் இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார்.

இயேசு அவரை நோக்கி, "தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 "உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்"

ஒருநாள் அசிசி நகர தூய பிரான்சிஸ், போர்ஜியுன்கோலா (Porziuncola) என்ற நகரிலிருந்து தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

அப்போது அவரை எதிர்கொண்டு வந்த மாசியோ என்ற சகோதரர் பிரான்சிசைப் பார்த்து, "ஒட்டுமொத்த உலகமும் உம் பின்னால் வருகிறது; நீர் என்ன சொல்கிறீர் என்று கேட்பதற்கு ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றது. எப்படி உம்மால் இதெல்லாம் சாத்தியப்படுகின்றது? இத்தனைக்கும் உம்மிடத்தில் பொழிவான தோற்றம் கிடையாது, நீர் ஒன்றும் அறிவில் சிறந்தவரும் கிடையாது, உம்முடைய குடும்பமும் அரச குடும்பமும் கிடையாது. அப்படியிருக்கும்போது எப்படி உம்மால் இந்த உலகத்தையே கட்டிப்போட முடிந்தது" என்று கேட்டார்.

பிரான்சிஸ் சிறுது நேரம் யோசித்துவிட்டு பொறுமையாகச் சொன்னார், "கடவுள் உலகத்திலே மிகப்பெரிய பாவியும் இழிவானவனும் முட்டாளும் யாரென்று தேடிப்பார்த்தார். அப்படி அவர் தேடும்போதும் அவருடைய பார்வைக்கு நான்தான் கிடைத்தேன். மேலும் கடவுள் இவ்வுலக ஞானத்தை மடமையாக்க நினைத்தார். அதனை மிகப்பெரிய பாவியும் இழிவானவனும் முட்டாளுமான என்னைக் கொண்டு செய்துமுடித்தார்". பிரான்சிஸ் இவ்வாறு பேசப் பேச, அவரிடத்தில் கேள்விகேட்ட மாசியோ, பிரான்சிஸ் எந்தவுளுக்கு தாழ்ச்சியுள்ள இருக்கின்றார் என்று எண்ணி வியந்தார்.

திருச்சபையில் அசிசி நகர தூய பிரான்சிஸ் மிகப்பெரிய புனிதராக விளங்குகின்றார் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் அவரிடத்தில் விளங்கிய தாழ்ச்சியே என்று சொன்னால் அது மிகையாகாது.

நற்செய்தி வாசகத்தில், சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். இதனைக் குறிப்பால் அறிந்த இயேசு, ஒரு சிறு பிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், "இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்" என்கின்றார்.

சீடர்கள் இயேசுவைப் பார்த்த விதமே வேறு. அவர்கள் இயேசுவை ஓர் அரசியல் மெசியாவாகப் பார்த்தார்கள். இயேசு அரசராக இருக்கும்பட்சத்தில் தங்களுக்கு எப்படியும் பதவி கிடைக்கும். அந்தப் பதவி உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்தவராய் அவர்களுக்குப் பாடம் புகட்டுகின்றார். திருப்பாடல் ஆசிரியர் சொல்வது போல, நாம் அமர்வதையும் எழுவதையும் அறிந்த இறைவனுக்கு நம்முடைய உள்ளுணர்வுகளை அறியத் தெரியாதா?. சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குக்வாதத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதை அறிந்தவராய் இயேசு அவர்களுக்குப் பாடம் கற்பிக்க முனைகின்றார். அதற்காக அவர் ஒரு குழந்தையைத் தன் கையில் எடுக்கின்றார்.

குழந்தை தூய்மையின் அடையாளம், தாழ்ச்சிக்கு இலக்கணம், அகந்தை அறவே இல்லாத அன்பின் சின்னம், கடவுளின் மறு உரு. அப்படிப்பட்ட குழந்தையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் தன்னையே ஏற்றுக்கொள்கின்றார் எனச் சொல்லும் இயேசு, அந்தக் குழந்தையைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்பவரே பெரியவர் என்று சொல்கின்றார்.

இன்றைய சூழலில் பெரியவர் என்றால், எல்லாரும் அவருக்குப் பணிவிடை செய்யவேண்டும், அவர் மற்றவரை அடக்கி ஆண்டுகொண்டிருப்பார் என்ற புரிதல்தான் இருக்கின்றது. ஆனால் ஆண்டவர் இயேசு பெரியவர் என்ற வார்த்தைக்குச் சொல்கின்ற விளக்கமே வேறு. அடுத்தவருக்கு பணிவிடை செய்பவரும் தன்னையே தாழ்த்திக்கொண்டு மற்றவருக்குச் சேவைசெய்பவரும்தான் இயேசுவைப் பொறுத்தளவில் பெரியவர். இயேசு சொல்வதைப் போன்று ஒருவர் பெரியவர் ஆகவேண்டும் என்றால், அவர் தான் என்ற அகந்தையைத் துறக்கவேண்டும். தான் என்ற அகந்தையைத் துறக்காமல் ஒரு பெரியவராக முடியாது.

இன்றைக்குப் பலரும் தான் தான் பெரியவன் என்ற அகந்தையோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். உண்மை என்னவென்றால், கந்தைகூட தரை துடைக்கப் பயன்படும். ஆனால் அகந்தையோ எதற்கும் பயன்படாது. ஆகையால், எதற்கும் பயன்படாமல் இருக்கின்ற அகந்தையோடு வாழ்வதால் என்ன லாபம்?. மாறாக தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழ்கின்றபோது, இறைவனின் ஆசிர்வாதம் நமக்கு ஏராளமாகக் கிட்டும். அன்னை மரியா, ஆண்டவரின் அடிமையென தன்னைத் தாழ்த்திக் கொண்டார், அதனால் எல்லாத் தலைமுறையினரும் புகழுகின்ற பேறுபெற்றார். ஆண்டவர் இயேசு தன்னைத் தாழ்த்திக் கொண்டு அடிமையின் வடிவை ஏற்றார், அதனால் எப்பெயருக்கும் மேலான பெயரை அவர் பெற்றார். நாமும் தாழ்ச்சியோடு வாழ்வதனால் இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம்.

ஆகவே, தான் என்ற அகந்தையை விடுத்து, தாழ்ச்சியான உள்ளத்தோடு ஒருவர் மற்றவருக்குப் பணிசெய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யார் பெரியவர்?, தாழ்ச்சியோடு பிறருக்குப் பணிவிடை செய்பவரே.

1950 ஆம் ஆண்டுக்குப் பின்னால் ஒருநாள், வத்திகான் நகரில் கர்தினால் மொந்தினி, -பின்னாளில் திருத்தந்தை ஆறாம் பவுலாக உயர்த்தப்பட்டவர் - வயதான மூதாட்டி ஒருவரின் சூட்கேசைத் தூக்கிக்கொண்டு வந்தார். இதைப் பார்த்த வத்திக்கான் நகரில் பணிசெய்துவந்த பணியாளர் ஒருவர், ஒரு கர்தினால் இப்படி சூட்கேசைத் தூக்கிக்கொண்டு செல்வதா?" என்று ஓடிச்சென்று கர்தினால் மொந்தினியிடமிருந்து சூட்கேசைப் பறித்தார்.

"இந்த சூட்கேசை எதற்கு நீங்கள் சுமந்து வருகிறீர்கள்?. அதை என்னிடம் தாருங்கள் நான் சுமந்து வருகிறேன்" என்றார் அந்தப் பணியாளர். அதற்கு அவர், "வேண்டாம் நானே சுமந்து வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டு சூட்கேசை தூக்கிக்கொண்டு தொடர்ந்து நடந்துகொண்டே சென்றார். ஆனால் பணியாளர் கெஞ்சிக்கொண்டே வந்ததால் சூட்கேசை அவர் அவரிடம் கொடுத்து, அதைப் பத்திரமாக பெண்மணி இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு வருமாறு கேட்டுக்கொண்டார். பணியாளரும் அந்தப் பெண்மணி இருக்கும் வீடுவரை சென்று, சூட்கேசை அவரிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பினார்.

அப்போது அந்தப் பெண்மணி பணியாளரிடம், "உனக்கு முன்னால் இந்த சூட்கேசை சுமந்து கொண்டுவந்த அந்த மனிதர் யார்? என்று கேட்டார். இதைக் கேட்ட அந்த பணியாளருக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் அந்த பணியாளர், மூதாட்டி கர்தினாலுக்கு நெருங்கிய உறவினராக இருக்கவேண்டும் என்று நினைத்தார். அவர் இப்படிப்பட்ட ஒரு கேள்வியைக் கேட்பார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவர் சற்று சுதாரித்துக்கொண்டு, "அந்த மனிதர் வேறு யாருமல்ல, திருத்தந்தைக்குப் பிறகு வத்திக்கான் நகரில் இருக்கும் மிகவும் முக்கியமான மனிதர் கர்தினால் மொந்தினி" என்றார்.

"அப்படியா இருந்த உண்மை எனக்குத் தெரியாதே. நான் இரயில் நிலையத்திலிருந்து இறங்கியபோது என்னிடம் போதிய பணம் இல்லை. உடலில் போதிய வலுவில்லை. அதனால் சுமைதூக்கும் ஆட்களை என்னால் அழைத்து, என்னுடைய சூட்கேசைத் தூக்கிக்கொண்டு வரச் சொல்லமுடியவில்லை. அப்போது என்னுடைய நிலையை உணர்ந்துகொண்டு கொண்டு அவர் என்னுடைய சூட்கேசைத் தூக்கிக்கொண்டு வந்தார்" என்றார்.

அப்போதுதான் அந்தப் பணியாளருக்கு ஓர் உண்மை புரிந்தது கர்தினால் மொந்தினி பெரிய பதவியில், பொறுப்பில் இருந்தாலும் அதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், யாரோ முன்பின் அறிமுகமில்லாத பெண்மணிக்கு உதவிசெய்து தாழ்ச்சியுள்ளவராக விளங்குகிறாரே" என்று.

கர்தினால் மொந்தினி மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும், தாழ்ச்சியோடு அந்த மூதாட்டிக்கு உதவியது நாம் எப்படி தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர்? என்ற விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதை அறிந்த இயேசு கிறிஸ்து, ஒரு சிறு பிள்ளையை அவர்கள் நடுவே நிறுத்தி, அவர்களிடம், "இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்களில் சிறியவரே பெரியவர் ஆவார்" என்கிறார். அதாவது நாம் குழந்தைகளைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்கிறபோது, பிறருக்குப் பணிவிடை செய்து வாழ்கிறபோது பெரியவர்கள் ஆவோம் என்பதுதான் இயேசு போதனையாக இருக்கின்றது.

ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து, பெரிய பெரிய நிறுவனங்கள் வரை இன்றைக்கு யார் பெரியவன்? என்ற கேள்விதான் எழுந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய பணபலத்தை, அதிகாரத்தை வைத்துக்கொண்டு தாங்கள்தான் பெரியவர்கள் என்று தங்களை இந்த உலகிற்கு நிரூபிக்கப் பார்க்கின்றார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ, "தாழ்ச்சியோடு வாழ்கிறவரே, பிறருக்குப் பணிவிடை செய்பவரே பெரியவர் என்று போதிக்கின்றார். உண்மையிலே நாம் தாழ்ச்சியுள்ளவர்களாக, பிறருக்குப் பணிவிடை புரிகின்றவர்களாக வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இறைவாக்கினர் எசாயாப் புத்தகம் 2:17 ல் வாசிக்கின்றோம், "மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்; அவர்களின் செருக்கு அகற்றப்படும்; அந்நாளில் ஆண்டவர் மட்டுமே உன்னதராய் இருப்பார்" என்று. ஆம், நாம் ஆணவத்தோடு வாழ்கிறபோது அழிவைத் தவிர வேறொன்றையும் சம்பாதிக்கப் போவத்தில்லை. மாறாக நாம் தாழ்ச்சியோடு பிறருக்குப் பணிவிடை செய்துவாழும் நாம் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம்.

யோபு புத்தகம் 5:11 ல் வாசிக்கின்றோம், "அவர் தாழ்ந்தோரை மேலிடத்தில் வைக்கிறார்" என்று. இதுதான் உண்மை. இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்லலாம். அன்னை மரியாள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

எனவே நம்மிடத்தில் இருக்கும் நான் பெரியவன் என்ற ஆணவத்தை அகற்றுவோம். எல்லாருக்கும் கடையவன் நான் என்பதை உணர்ந்துகொண்டு பணிவிடை செய்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!