Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   01  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 26ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
குழந்தை இயேசுவின் புனித தெரேசா - கன்னியர் நினைவு

கன்னியர் - பொது (பக்கம் 632) அல்லது புனிதையர் - பொது (துறவியர், பக்கம் 642).


ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14c

எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 118: 1-2. 16-17. 28 (பல்லவி: 1a)
=================================================================================
131: 1. 2. 3

பல்லவி: ஆண்டவரே நான் அமைதியாய் இருக்க, என் உயிரைக் காத்தருளும்.

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாய் உள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, "விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?" என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: "நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

சிறிய வழி இறையாட்சியின் நுழைவாயில்
சிறிய விதை மிகப் பெரிய பயன்
சிறிய குழந்தையைப் போல மாறுங்கள், இறையசிற்கான அழைப்பு.
சிறிய செயல்கள் நம்மை அடையாளம் காட்டுமா?
இன்றைக்கு அடையாளத்திற்காக பெரிது பெரிதாக செய்து விட்டு, விண்ணகத்திலே தங்களது பெயர் பொறிக்க வைக்க கூடிய சிறிய செயல்களை செய்ய மறுக்கின்றோம்.
இறதி தீர்வை நாளில் கேட்கப்படும் கேள்விகள் என்ன? சிறிய செயல்களை செய்தாயா இத்தகைய சிறியவர்களுக்கு செய்த போது எனக்கே செய்தாய். மத் 25


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசுவின் குழந்தை தெரசா விழா

இன்று திருச்சபையானது புனிதையும், மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலியுமான தூய குழந்தைத் தெரசாவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.
குழந்தைத் தெரசா 1873 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் வசித்து வந்த லூயிஸ் மார்டின் என்பவருக்கு கடைசி மகளாகப் பிறந்தாள். தெரசாவின் குடும்பம் மிகவும் பக்தியான குடும்பம். இவருடைய சகோதரிகள் இருவர் ஏற்கனவே கார்மேல் மடத்தில் சேர்த்து துறவிகளாக வாழ்ந்து வந்தார்கள். இவர்களைப் பார்த்து வளர்ந்த தெரசா தானும் கார்மேல் மதத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு துறவுமடத்தில் சேர்வதற்கான போதிய வயது வராத காரணத்தினால் அவர் துறவு மடத்தில் அனுமதிக்கப்படவில்லை.
இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு தெரசாவும், அவருடைய பெற்றோரும் ரோம் நகரில் அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் லியோவின் குருத்துவ வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றார்கள். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது தெரசா எழுந்து, கார்மேல் மடத்தில் துறவியாகச் சேரவேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவருக்கு வயது பதினைந்து மட்டுமே. குழந்தைத் தெரசாவிடம் இருந்த ஆர்வத்தை பார்த்த திருத்தந்தை அவர்கள், அவரை கார்மேல் மடத்தில் துறவியாக சேர்த்துக்கொள்ளப்படுவார் என்ற ஒப்புதல் அளித்தார். அன்று குழந்தைத் தெரசா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

1890 ஆம் ஆண்டு தெரசா கார்மேல் கன்னியர் மடத்தில் துறவியாகச் சேர்ந்தார். அங்கே ஒரு சாதாரண வாழ்க்கையை, அசாதாரண முறையில் வாழ்ந்துகாட்டினார். ஆம், தெரசா கன்னியர் மடத்தில் செய்த அனைத்தையும் கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் செய்தார். இது அவரை மற்ற துறவிகளிடமிருந்து பிரித்துக்காட்டியது. ஒருநாள் இவரைச் சந்தித்த இல்லத் தலைவி அக்னேஸ், துறவு மடத்தில் நீ சந்திக்கின்ற ஒவ்வொரு அனுபவத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக வடிக்கச் சொன்னார். இல்லத் தலைவியின் வேண்டுகோளுக்கு இணங்க தெரசா தன்னுடைய துறவற வாழ்க்கையில் சந்திக்க அனுபத்தை எல்லாம் "ஓர் ஆன்மாவின் கதை" (The Story of Soul) என்ற புத்தகமாகப் படைத்தார்.

"ஓர் ஆன்மாவின் கதை" என்ற அந்தப் புத்தகத்தில் தெரசா குறிப்பிடும் மிக முக்கியமான காரியம் "சிறிய வழி" (Little Way) என்பதாகும். அதாவது நாம் செய்யும் சிறு செயலாக இருந்தாலும், அதை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்தால், அதன்வழியாக ஓர் ஆன்மாவை மீட்டெடுக்க முடியும் என்பதே குழந்தைத் தெரசா உணர்ந்தும் உண்மையாகும். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை "To Pick up a pin for love can convert a soul" என்பதாகும்.

தெரசா தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடும் இன்னொரு உண்மை யாதெனில், அவர் நான்கு சுவர்களுக்குள் இருந்துகொண்டு பல்வேறு நாடுகளில் மறைப்பணி செய்துகொண்டு வந்த குருக்களுக்காகச் ஜெபித்தார்; உலக மக்களுக்காகச் ஜெபித்தார். அந்த ஜெபத்தின் வழியாக அவர் ஆன்மாக்களை இறைவன்பால் கொண்டு வந்து சேர்த்தார். இவ்வாறு அவர் துறவு மடத்தில் வாழ்ந்த ஒன்பது ஆண்டுகளில் ஏராளமான ஆன்மாக்கள் மனந்திரும்பக் காரணமாக இருந்தார். இப்படிப்பட்ட புனிதை தன்னுடைய இருபத்தி நான்காம் வயதில் இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்.

இவருடைய வாழ்வைப் பார்த்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1999 ஆம் ஆண்டு இவரை மறைபரப்பு நாடுகளுக்குப் பாதுகாவளியாக ஏற்படுத்தினார்.
தூய குழந்தைத் தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் அவருடைய வாழ்வைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், அவருடைய வாழ்க்கை நமக்கு எத்தகைய செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
இவருடைய வாழ்க்கை உணர்த்தும் உண்மை ஒன்றே ஒன்றுதான். அது மீட்பை, இறைவனின் அருளைப் பெற பெரிய பெரிய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதில்லை, மாறாக சிறிய காரியங்களைச் செய்தாலும், அதை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்தால் அதுவே போதுமானதாகும் என்பதாகும். ஆண்டவர் இயேசுகூட நம்மை பெரிய பெரிய காரியங்களைச் செய்யச் சொல்லவில்லை. மாறாக பசித்தோருக்கு உணவிடச் சொல்கிறார், தாகமாக இருப்போருக்கு தண்ணீர் தரச் சொல்கிறார், நோயாளியைக் கவனிக்கச் சொல்கிறார், சிறையில் இருப்போரைப் பார்க்கச் சொல்கிறார்..... (மத் 25:40) இப்படிச் செய்வதனால் நாம் விண்ணரசைப் பெற்றுக்கொள்ளலாம் என வாக்குறுதியும் தருகிறார். எனவே நாம் சிறிய சிறிய காரியங்களை குழந்தைத் தெரசாவைப் போன்று இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்வோம். இயேசுவின் அன்புக்கு உரியவர்களாவோம்.
இறுதியாக ஒரு நிகழ்வைச் சொல்லி நிறைவு செய்வோம். ஒருமுறை பத்திரக்கையாளர் ஒருவர் எட்மன்ட் ஹிலாரியிடம், "உங்களோடு பணிசெய்யும் குழுவை நீங்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், "சின்னதாகவோ, பெரிதாகவோ செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்களை நான் தேர்ந்தெடுக்கிறேன்" என்றார். தொடர்ந்து அவர் அவரிடம்,. சிறிய முயற்சிகளில் சிறப்பாகச் செய்தவர்கள் பெரிய முயற்சிகளில் பரிமளிப்பார்கள் என்பதை நான் அறிவேன். அதனால்தான் நான் சிறிய விசயங்களில் பொறுப்புள்ளவர்களாக இருப்பவர்களை, பெரிய விசயங்களுக்கு பொறுப்பாளர்களாக அமர்த்துகிறேன்" என்றார்.

இதனை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். வெற்றி என்பது உடனே கிடைத்துவிடகூடிய ஒன்று அல்ல, அது படிப்படியாக கிடைப்பது. நாம் சிறிய சிறிய காரியங்களை முனைப்போடு செய்தால் பெரிய பெரிய காரியங்கள் நமக்கு ஒருநாள் கைகூடும்.

ஆகவே தூய குழந்தை தெரசாவைப் போன்று சிறிய சிறிய காரியங்களை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்வோம். இறைவன் நம்மை பெரிய காரியங்களுக்கு பொறுப்பாளராக உயர்த்துவார்.- Fr. Maria Antonyraj, Palayamkottai. 2016

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
புனித குழந்தை தெரசா நினைவுநாள்

நற்செய்தியின் தூதுவர்களாக

"உம் நற்செய்தியை உலகின் ஐந்து கண்டங்களுக்கும் சென்று போதிக்க வேண்டும் என்கிற தணியாத ஆவல் உள்ளது; உமது மீட்பின் சிலுவையை, உம்மை அறியாத நாடுகளில் நிறுவவும் விரும்புகிறேன்; உமது திருப்பெயரின் மகிமையை மக்களுக்கு உணர்த்த எவ்வளவோ விரும்புகிறேன்; என் இறைவாக்கு பணி ஐந்து கண்டங்களில் மட்டுமல்லாது, தனித்திருக்கும் தீவுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பது என் ஆவல்; என் பணி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அல்லாது, உலக முடிவு வரை தொடர வேண்டும் என்று அதிகமாய் விரும்புகிறேன்". இது புனித குழந்தை தெரசா தம் வாழ்வின் இறுதிநாட்களில், தனது வாழ்க்கை குறிப்பேட்டில் எழுதியவை.
இவை எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் மேல் கழிந்த பின்னர், கடந்த 2008 மே 31 முதல் ஜூன் 14 வரை விண்வெளியில் பயணம் செய்த கர்னல் ரோள்கரன், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், நியூகேள்ளி என்ற இடத்தில் உள்ள கார்மல் கன்னியர் இல்லச் அருட்சகோதரிகளைச் சந்திக்கச் சென்றார். இந்த அமெரிக்கர் தம் விண்வெளிப் பயண வெற்றிக்காகச் செபிக்கும்படி அந்த அருட்சகோதரிகளைக் கேட்டுக்கொண்டார். அப்போது விண்வெளியில் தான் வைத்துவிட்டு வர ஏதாவது புனிதப் பொருள் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அருட்சகோதரிகள் புனித குழந்தை தெரசாவின் இறுதி விருப்பத்தை தெரிவித்து, அப்புனிதையின் நினைவுப் பொருள் ஒன்றினை விண்வெளி வீரரிடம் கொடுத்தனர். இப்பொழுது புனித தெரசாவின் புனித நினைவுப் பொருள் 57,35, 843 மைல்கள் உயரத்தில் இடம்பெற்றிருப்பதாகக் செய்திகள் கூறுகின்றன.
திருச்சபையால் மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலி என்று அழைக்கப்படும் புனித குழந்தை தெரசாவின் எல்லா கண்டங்களிலும், ஏன் எல்லா இடங்களிலும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற கனவு இவ்வாறு நிறைவேறுகிறது.
இன்று திருச்சபையானது புனித குழந்தை தெரசாவின் நினைவுநாளைக் கொண்டாடும் வேளையில் அவரது வாழ்வும், இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்களும் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களை பணிக்காக அனுப்புகிறார். அப்படி அனுப்புகிறபோது ஒருசில அறிவுரையும் சொல்கிறார். அவற்றில் முதலாவது "ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போன்று உங்களை நான் அனுப்புகிறேன்" என்பது ஆகும். இங்கே ஓநாய்கள் என்பது நற்செய்திப் பணியில் நாம் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள், துன்பங்களைக் குறிப்பதாக இருக்கிறது. இறைவார்த்தையை அறிவிக்கின்றபோது பலர் நம்மைத் துன்புறுத்தலாம், இகழ்ந்து பேசலாம், இல்லாதது, பொல்லாதது எல்லாம் சொல்லலாம். அவற்றையெல்லாம் நாம் துணிவோடு தாங்கிக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக இயேசு "பணப்பையோ, வேறு எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம்" என்று கூறுகின்றார். காரணம் நற்செய்திப் பணி என்பது இறைவனை நம்பி, இறைவனின் மகிமைக்காகச் செய்யப்படவேண்டிய ஒன்று. எனவே அத்தகைய பணியில் நாம் பணத்தை நம்பிச் செயல்பட்டால், நமது பணி பொருளற்றதாகிவிடும். பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதியமடல் 4:13ல் கூறுவார், "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய ஆற்றல் உண்டு." என்று. நாம் கடவுளை மட்டும் நம்பி பணிசெய்கிறபோது வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை என்பதுதான் இயேசுவின் கருத்தாக இருக்கின்றது.

மூன்றாவதாக இயேசு, "நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும், இவ்வீட்டிற்கு அமைதி உரித்தாகுக எனச் சொல்லுங்கள்" என்கிறார். ஆம், இயேசுவின் சீடர்களாக இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அமைதியின் தூதுவர்களாக மாறவேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம். அதனை அவர் வாழ்வின் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார். "உலகம் தரமுடியாத அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் எனச் சொல்லும் இயேசு, தான் உயிர்த்த பின்பு "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" எனச் சொல்கிறார். இவ்வாறு இயேசு அமைதியின் அரசராக விளங்கினார். அவரது பணியைத் தொடரும் நாமும், நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு அமைதியை, அன்பை வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆகவே புனித குழந்தை தெரசாவின் நினைவுநாளைக் கொண்டாடும் வேளையில் அவரைப் போன்று நற்செய்தியின் தூதுவராக - அமைதியின் தூதுவராக - விளங்குவோம். நற்செய்திப் பணியில் எதிர்வரும் சவால்களை துணிவோடு எதிர்கொள்வோம். இறையருள் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
வாழ்வின் பொருள் புரிகிறதா?

குழந்தை இயேசுவின் புனித தெரேசா - நினைவு

யோபு 1:6-22
லூக்கா 9: 46-50

இந்த உலகிற்கு நாம் என்ன கொண்டுவந்தோம், இங்கிருந்து எதை கொண்டுச்செல்ல போகிறோம்? இறைவனிடமிருந்து வந்தோம், அவரிடமே திரும்பி செல்வோம்... ஆனால் வாழும்போது மட்டும் அனைத்தும் நம்முடையது போலவே எண்ணி வாழ்வது ஏன்... என்ற ஆழமான கேள்வியொன்றை எழுப்புகிறது இன்றைய இறைவார்த்தை. பிறப்பும் நாம் கேட்டு வருவதில்லை, இறப்பும் நாம் நிர்ணயித்து நிகழ்வதில்லை, இடைப்பட்ட காலத்தில் மட்டும் அனைத்தும் நமது விருப்பு வெறுப்பின் படியே நடக்க வேண்டும் என்று சிந்தித்தால் நம்மைவிட அதிக மடமையுள்ளவர்கள் யாராவது இருக்க முடியுமா?

முதல் வாசகத்தில் வரும் யோபுவும் சரி நற்செய்தியில் பேசும் கிறிஸ்துவும் சரி, இதையே நமக்கு நினைவுறுத்துகிறார்கள் - விருப்பு வெறுப்பு, பழி பொறாமை, போட்டி பகை, பெயர் புகழ் என்று இல்லாத ஒன்றை மனதில் வைத்து கொண்டு, இருக்கும் வாழ்க்கையை வீணடிக்கும் மூடத்தனத்தை மனிதர்கள் மட்டுமே செய்ய கூடும் என்பதை காலமும் நமக்கு தொடர்ந்து உறுதிசெய்துக்கொண்டே இருக்கிறது.

இன்று நாம் நினைவுகூரும் குழந்தையேசுவின் தெரேசா எனப்படும் லிசியே நகரத்து தெரேசம்மாள் தனது வாழ்வில் விட்டுச்சென்ற பாடமும் இதுவே. 24 வயதிலேயே இறந்த அவர் தன் வாழ்க்கை முழுவதையும் தியாகத்திலும், உடல் வருத்திய நோயிலும் செலவிட்டாலும், இறைவனின் சித்தமேற்கும் பக்குவத்தாலும், அவர் திருவுளத்திற்கு அடிப்பணியும் முடிவினாலும் அனைத்தையும் இறைவனின் மகிமைக்காக மட்டும் செய்யும் மனம் கொண்டவராய் வாழ்ந்தார். 'பெரும் செயல்களை செய்வதில் அல்ல, இறைவன் வகுக்கும் செயல்களை பெரும் அன்போடு செய்வதிலே தான் புனிதம் இருக்கிறது' என்று கற்பிக்கும் அவரை போன்றே, இறைவனின் திருவுளத்திற்கும், அவரது மகிமைக்கும் நம்மையே சரணாக்குவோம், முழுமை காண்போம்.

(Rev. Father: Antony Christy SDB)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!