Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        31  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 21ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
கிறிஸ்துவின் சிலுவை பிற இனத்தாருக்கு மடமையாகவும் அழைக்கப்பட்டவர்களுக்கு கடவுளின் வல்லமையும் ஞானமுமாக உள்ளது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1: 17-25)

சகோதரர் சகோதரிகளே, திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும். சிலுவை பற்றிய செய்தி அழிந்துபோகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.

ஏனெனில், "ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டார் அல்லவா? கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்துகொள்ள முடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்துகொள்ளவில்லை.

எனவே மடமை என்று கருதப்பட்ட நற்சய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார். யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.

ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 33: 1-2. 4-5. 10-11 (பல்லவி: 5b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
-பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
-பல்லவி

10 வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார்.
11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 21: 36)

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (25: 1-13)

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், "இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்' என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, "எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள்.

முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, "உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது' என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.

பிறகு மற்றத் தோழிகளும் வந்து, "ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள். அவர் மறுமொழியாக, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார்.

எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முன்மதியுள்ள பணியாளர்களாக

ஈசாப் கதை இது.

காட்டில் கழுதை ஒன்று தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது திடிரென்று ஒரு புதருக்குள் இருந்து வெளிப்பட்ட புலியொன்று, கொழுகொழுவென்று இருந்த அந்தக் கழுதையின்மீது பாயத் தொடங்கியது. புலியின் பாய்ச்சலை சிறிதும் எதிர்பாராத கழுதை தொடக்கத்தில் தடுமாறினாலும், உடனே சுதாரித்துக்கொண்டது.

கழுதை, புலியிடம், "நீங்கள் என்மீது பாய்ந்து என்னைத் தின்பதற்கு முன்பாக, ஒன்றை மட்டும் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" என்றது. அதற்கு புலி அதனிடம், "அது என்ன என்று விரைவாகச் சொல், நான் உன்னைச் சாப்பிட்டுவிட்டு என்னுடைய பசியைப் போக்கவேண்டும்" என்றது.

உடனே கழுதை அதனிடம், "என்னுடைய கழுத்தில் கழுத்து தோஷமும், வயிற்றில் வயிற்று தோஷமும் இருக்கிறது. ஆதலால் என்னுடைய கழுதையோ, வயிற்றையோ சாப்பிட்டால் உனக்கு தோஷம்தான் பிடிக்கும். மாறாக நீ என்னுடைய பின்னங்காலை சாப்பிட்டால் உனக்கு புண்ணியம் கிடைக்கும்" என்றது. புலியும் கழுதையின் வார்த்தையை உண்மையென நம்பி, கழுதையின் காலை சுவைக்கத் தொடங்கியது.

அப்போது கழுதை தன்னுடைய பலம் முழுவதையும் சேர்த்துக்கொண்டு புலியை நோக்கி ஓங்கி ஒரு உதைவிட்டது. அடுத்த நொடியில் புலி பத்தடி தள்ளிப்போய் விழுந்தது. புலியின் வாயிலிருந்த பற்களெல்லாம் சிதறி ஓடின.. ஆளை விட்டால் போதும் என்று நினைத்துகொண்டு புலி கழுதையிடமிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடியது.

விவேகத்தோடும் முன்மதியோடும் செயல்பட்டால் எப்படிப்பட்ட ஆபத்திலிருந்தும் நாம் தப்பித்துகொள்ளலாம் என்பதை இந்த கதை நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணரசை மணமகனின் வருகையை எதிர்கொண்டு செல்லும் பத்துக்கன்னியர்களுக்கு ஒப்பிடுகிறார். பத்துக் கன்னியர்களில் ஐந்து பேர் முன்மதியுள்ளவர்கள், ஐந்து பேர் முன்மதியில்லாதவர்கள். முன்மதியுள்ள கன்னியர்களோ தங்களது முன்மதியால் மணமகனைக் காணும் பேறு பெறுகிறார்கள். முன்மதி இல்லாதவர்களோ தங்களுடைய தவற்றால் மணமகனோடு விருந்துண்ணும் வாய்ப்பினை இழக்கிறார்கள். நாம் நமது வாழ்வில் முன்மதியோடு இருந்தால் எப்படிப்பட்ட ஆசிர்வாதத்தைப் பெறலாம் என்பதற்கு இயேசு கூறும் இந்த உவமை ஒரு சான்றாக இருக்கின்றது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு முன்மதியோடு இருக்கவேண்டும் என்பதை நினைவூட்டுகிறார். அவர் தன்னுடைய சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறபோது, "இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன், எனவே, பாம்புகளைப்போல முன்மதியுடையவர்களாகவும், புறாக்களைப் போன்று கபற்றவர்களாகும் இருங்கள்" என்கிறார். (மத் 10:16).

இத்தகைய முன்மதியை/ ஞானத்தை/ விவேகத்தை நாம் நமது ஆற்றலால் மட்டும் பெற்றுக்கொள்ள முடியுமா? என்று சொன்னால், நிச்சயமாக இல்லை என்றே பதில்வரும். மாறாக இவையெல்லாம் கடவுள் நமக்குக் கொடுக்கும் கொடையாகும். 1 கொரிந்தியர் 12:8 ல் வாசிக்கின்றோம், "தூய ஆவியார் சிலருக்கு ஞானம் நிறைந்த சொல்வன்மையை அளிக்கிறார். இன்னொருவருக்கு அறிவுநிறைந்த சொல்வன்மையை அளிக்கிறார்...." என்று. ஆக கடவுள்தான் நாம் பெற்றிருக்கும் எல்லா ஆயர்வாதங்களுக்கும் காரணமாகவும். ஆகவே நாம் கடவுளிடம்/ தூய ஆவியிடம் இத்தகைய வரங்களைக் கேட்கிறபோது அவர் நிறைவாகப் பொழிந்தருளுகிறார்.

பழைய ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் சாலமோனிடம், "உமக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கிறபோது, அவர், மக்களுக்கு நல்லமுறையில் தீர்ப்பளிக்க ஞானத்தைத் தா என்று கேட்கிறார். அதனால் கடவுள் அவருக்கு ஞானத்தைப் பொழிந்தார். நாமும் கடவுளிடம் ஞானத்தை கொடையாகக் கேட்கும்போது அவர் நமக்கு நிறைவாகத் தருவார்.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், கடவுளிடம் நாம் ஜெபிக்கும்போது பணத்தைக் கேட்கிறோம், பொருட்களைக் கேட்கின்றோம், இன்னும் சொல்லப்போனால் நாம் நிம்மதியைத் தரவேண்டும் என்று ஜெபிக்கிறோம். ஆனால் ஒருபோதும் நாம் ஞானத்தை, விவேகத்தை, முன்மதியைத் தரவேண்டும் என்று கேட்பதில்லை. அதனால்தான் என்னவோ அவர் நமக்கு முன்மதியைத் தருவதில்லை.

ஆகவே நாம் இறைவனிடம் முன்மதியைக் கொடையாகத் தரவேண்டும் என்று கேட்போம். அதோடு மட்டுமல்லாமல், நாம் முதலில் முன்மதியுள்ள மக்களாக விளங்கவோம்.

நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ காரியங்களை முன்மதியற்ற தன்மையால் இழந்துகொண்டிருக்கிறோம். எனவே, அறியாமையை, பேதையை நமது வாழ்விலிருந்து அகற்றுவோம். முன்மதியோடு வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

அறிஞர்கள் அறிவைத் தேடுகிறார்கள், முட்டாள்களோ அதைப் பெற்றுவிட்டதாகவே நினைக்கிறார்கள் ஜெர்மானியப் பழமொழி.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

"விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது"

கறுப்பின மக்களுக்காக அயராது பாடுபட்டும் நிறையப் போராட்டங்களையும் நடத்தியும் வந்தவர் மார்டின் லூதர் கிங்.

ஒரு சமயம் அவரிடத்தில் ஒருவர், "பெரும் போராட்டங்களிலிருந்து இருந்து வெற்றிகரமாக மீண்டு வருகிறீர்கள். இதன் இரகசியம் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர் அவரிடம், "விழிப்புணர்வுடன் இருப்பது, புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்வது, மாற்றங்களுக்கான சவால்கள் வருகிறபோதெல்லாம் விழிப்புணர்வுடன் எதிர்கொள்வது. இந்தக் குணங்கள் மட்டும் இருக்குமென்றால், எந்தவிதமான போராட்டங்களையும் எதிர்கொண்டு வெல்வது, எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே சாத்தியம்" என்றார்.

ஆம், நாம் நம் வாழ்வில் விழிப்புணர்வோடு இருந்தோமென்றால், எதையும் நம்மால் எளிதாகச் செய்துவிட முடியும். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணரசை மணமகனை எதிர்கொள்ளச் செல்லும் மணமகளின் தோழியருக்கு ஒப்பிடுகின்றார். யூத சமூகத்தில் மணமகனை வரவேற்பதற்காக மணமகளின் தோழியர் விளக்குகளோடு காத்திருப்பது வழக்கம். சில சமயங்களில் மணமகன் வரக் காலம் தாழ்த்துவார். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட மணமகளின் தோழியர் மணமகனுக்காகக் காத்திருக்க வேண்டும். மணமகன் வந்த பிறகு, அவர்கள் அனைவரும் திருமண நிகழ்வில் கலந்துகொள்வார்கள். இதனை அப்படியே எடுத்துக்கொண்டு ஆண்டவர் இயேசு விண்ணரசோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார்.

ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய உவமையில் இரண்டு விதமான மணப்பெண் தோழியர் வருகின்றனர். முதலாவது வகையினர் அறிவிலிகள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், கடைசி நேரத்தில் எதையும் செய்பவர்களுக்குச் சமமானவர்கள். உதாரணத்திற்கு சிலர் தேர்வுக்குத் தயார் செய்ய வருடம் முழுவதும் இருக்கின்றபோது வருடக்கடைசியில் அல்லது தேர்வு நாளில் தயார் செய்வார்கள். இப்படிப்பட்டவர்களால் எப்படி தேர்வினைச் சரியான முறையில் எழுதமுடியாதோ அதுபோன்றுதான் இளமைக் காலத்தில் மனம்போன போக்கில் வாழ்ந்துவிட்டு, சாவு நெருங்கி வரக்கூடிய தருணத்தில் ஆண்டவரைத் தேடுபவர்களால் விண்ணரசை அடைய முடியாது. இவர்களை இறைவார்த்தையைக் கேட்டு, அதனை தங்களுடைய வாழ்வில் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஒப்பிடலாம். இவர்கள் இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதனைத் தங்களுடைய வாழ்வில் கடைபிடிக்க முடியாது போவதால் இவர்களால் இறையரசுக்குள் நுழைய முடியாமலே போய்விடுகின்றது.

இயேசு சொல்லக்கூடிய உவமையில் இரண்டாவதாக வரக்கூடியவர்கள் முன்மதியுள்ளவர்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாச் சூழ்நிலையும் தயார்நிலை இருக்கக்கூடியவர்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், விழிப்புணர்வோடு இருக்கக்கூடியவர்கள். விழிப்புணர்வோடு இவர்கள் இருப்பதால் இறைவனின் வார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல் அதனைக் கடைபிடிக்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். அதனாலே கடவுளின் அன்புக்குச் சொந்தக்காரர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். ஆகையால், நமது வாழ்விற்கு விழிப்புணர்வு அல்லது முன்மதி அல்லது ஞானமானது கட்டாயம் தேவைப்படுவதாக இருக்கின்றது.

இந்த விழிப்புணர்வை, முன்மதியை, ஞானத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது? அதற்கு விவிலியம் சொல்லக்கூடிய பதில், அதன்மீது அன்புகூர வேண்டும் என்பதாகும். சாலமோனின் ஞானநூல் 6:12,13 ஆகிய வசனங்களில் வாசிக்கின்றோம், "ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர்" என்று. ஆம். யாராரெல்லாம் ஞானத்தை, ஞானத்தின் உறைவிடமான ஆண்டவரைத் தேடுகின்றார்களோ அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆண்டவர் இயேசு கருக்கலில் ஞானத்தை ஆண்டவரைத் - தேடிச் சென்றார் என்று மாற்கு நற்செய்தி, முதலாவது அதிகாரம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. நாம் ஞானத்தை தேடிச் செல்கின்றவர்களாக இருக்கின்றோமா? அல்லது நமது சோம்பேறித்தனத்தால் அல்லது அசட்டத்தனத்தால் அதனைப் புறந் தள்ளுபவர்களாக இருக்கின்றோமா? என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தூய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவார், "ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்" என்று (1: தெச 5:6) ஆம், நாம் சராசரியான மனிதர்கள் கிடையாது. வித்தியாசமானவர்கள். ஆகவே, நாம் நம்மிடத்தில் இருக்கின்ற சோம்பேறித்தனத்தையும் அசட்டத்தனத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, விழிப்புணர்வோடு வாழ்வதே சிறப்பானது.

நாம் விழிப்புணர்வோடு வாழவேண்டிய இன்னொரு கட்டாயம் இருக்கின்றது. ஆண்டவர் இயேசுவின் வருகை எப்போது வரும், எப்படி வரும் என்பது யாருக்கும் தெரியாது, அது எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே தெரியது. ஆகவே, நாம் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஆகவே, தூய ஆண்டவரின் வருகைக்காக எப்போதும் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
''மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர்
தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
அவர்களுள் ஐந்துபேர் அறிவிலிகள்; ஐந்துபேர் முன்மதி உடையவர்கள்'' (மத்தேயு 25:1-2)


-- இறையாட்சி நம்மிடையே வந்துகொண்டிருப்பதை நாம் அடையாளம் கண்டு, அதில் பங்கேற்றிட எப்போதும் ''விழிப்பாயிருக்க வேண்டும்'' என்னும் கருத்தை வலியுறுத்த இயேசு கூறிய கதை ''பத்துத் தோழியர் உவமை'' ஆகும் (மத் 25:13). இந்த உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இந்த உவமையின் பொருளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அக்காலத் திருமணப் பழக்கம் பற்றி நாம் அறிவது தேவை. இந்திய நாட்டின் பல பகுதிகளில் இன்றும்கூட திருமணம் என்றால் இரு தனி ஆள்களுக்கு இடையே ஏற்படும் ஒப்பந்தம் என்றில்லாமல் இரு குடும்பங்களுக்கிடையே நிகழ்கின்ற உடன்பாடு என்றே உள்ளது. அதுபோலவே, இயேசு வாழ்ந்த காலத்திலும் பெற்றோரே தங்கள் பிள்ளைக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது வழக்கம். திருமண நிகழ்வு இரு கட்டங்களாக அமைந்தது. முதல் கட்டம் திருமண ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. மணமகனின் தந்தை மணமகளின் தந்தையின் வீட்டுக்குச் சென்று, மணமகனிடமிருந்து திருமண ஒப்பந்த ஏட்டையும் வரதட்சணையையும் பெற்றுக்கொள்வார். மணமகள் தன் தந்தையின் வீட்டிலேயே ஏறத்தாழ ஒரு வருடம் தொடர்ந்து தங்கியிருந்த பின்னரே மணமகனின் வீட்டுக்குச் சென்று தாம்பத்திய வாழ்க்கை நடத்துவார். இயேசு கூறிய உவமையில் வருகின்ற பத்துத் தோழியர் மணமகனின் வருகைக்குக் காத்திருக்கின்றனர். அவர் மணப்பெண்ணின் வீட்டில் தன் வருங்கால மாமனாரைச் சந்தித்து, அவரோடு திருமண ஏற்பாட்டுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். அது நன்முறையில் முடிந்ததும், ''இதோ மணமகன் வருகிறார்'' என்று அறிவிக்கப்படுகிறது. திருமண ஊர்வலம் புறப்பட்டு, மணமக்களோடு மணமகனின் வீட்டை நோக்கிச் செல்வதற்குத் தயாராகிறது. அங்கே திருமணக் கொண்டாட்டங்கள் நிகழும். ஆனால் ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்த தோழியர் பத்துப்பேரில் ஐவர் மட்டுமே தயாராக உள்ளனர். மற்ற ஐவரும் போதிய எண்ணெய் இல்லாததால் தங்கள் விளக்குகளை ஏற்ற இயலாதிருக்கிறார்கள். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்ற நேரம் பார்த்து மணமகனும் வெளியே வருகிறார். ஊர்வலமும் புறப்படுகிறது.

-- ஆயத்தமாயிருந்தவர்கள் மட்டுமே திருமண மண்டபத்துக்குள் சென்று கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். பிந்தி வந்தவர்கள் ஏமாற்றத்தோடு வெளியே நிற்கிறார்கள். இந்த உவமை வழியாக இயேசு இரு கருத்துக்களை உணர்த்துகிறார். முதலில் ''விளக்கு'' என்பது நாம் செய்கின்ற நற்செயல்களைக் குறிக்கிறது. ''உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் புகழ்வார்கள்'' (மத் 5:16) என இயேசு கூறுகிறார். மேலும் யார் அறிவாளி யார் அறிவிலி என்பதை இயேசு ஏற்கெனவே விளக்கியிருந்தார். அதாவது, முன்மதியோடு உறுதியான அடித்தளம் இட்டு வீடுகட்டுபவர் அறிவாளி; ஆனால் உறுதியற்ற மணல்மீது வீடுகட்டுபவர் அறிவிலி (மத் 7:24-27). அதுபோல, அறிவோடு செயல்பட்ட தோழியர் இயேசுவின் சொற்களைக் கேட்டு அவற்றை வாழ்வில் கடைப்பிடிப்போருக்கு ஒப்பாவர். அறிவிலிகளாகச் செயல்பட்ட தோழியரோ நற்செயல்கள் புரியாதோருக்கு ஒப்பாவர். ஒருவர் புரிகின்ற நற்செயலை மற்றவரோடு பகிர்ந்துகொள்ள இயலாது. ஒவ்வொருவரும் கடவுள் முன்னிலையில் பொறுப்போடு செயல்பட்டு, அவர் சொற்படி நடக்க அழைக்கப்படுகிறார்கள்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
எங்கள் விளக்குகள்

பிறகு மற்றத் தோழிகளும் வந்து, 'ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள்.
அவர் மறுமொழியாக, 'எனக்கு உங்களைத் தெரியாது' என்றார்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் பத்துக் கன்னியர் அல்லது பத்து தோழியர் எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம். விளக்குகள் எரிந்து கொண்டிருந்த ஐந்து தோழியருக்கு கதவுகள் திறக்கப்படுகின்றன. மற்ற ஐவருக்கும் கதவுகள் மூடப்படுகின்றன. இறுதியாக, 'விழிப்பாயிருங்கள்' என்ற செய்தி தரப்படுகிறது.

இந்த உவமையை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு மணமகன் மேல் தான் கோபம் வரும்.

'ஏன் தம்பி, நீ லேட்டா வந்துட்டு, இருக்குற ஆளையெல்லாம் விரட்டிக்கிட்டு இருக்கியே!' என்று மணமகனைக் கேட்கத் தோன்றுகிறது.

மேலும், தோழிகளை 'அறிவிலிகள்,' 'முன்மதியுடைவர்கள்' என்று லேபிள் பதிப்பதும் தவறே. லேபிள்கள் நாம் கடையில் பார்க்கும் பொருள்களுக்குத்தானே தவிர, நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு அல்ல. இல்லையா?

மேலும், 'உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்' என முன்மதியுடையவர்கள் தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இல்லை. இப்படிப்பட்ட தன்னலம் கொண்டவர்களுக்குத்தான் மணமகன் தன்னுடன் இருக்க இடம் தருவார் என்றால், அப்படிப்பட்ட இடம் வேண்டாம் என்றே தோன்றுகிறது.

மேலும், 'நீங்கள் போய் வணிகரிடம் வாங்கிக்கொள்ளுங்கள்' என முன்மதியுடைவர்கள் அட்வைஸ் கொடுக்கிறார்கள். இவர்கள் இப்படி ஓஸியாக அட்வைஸ் கொடுப்பதற்குப் பதிலாக கொஞ்சம் எண்ணெய் கொடுத்திருக்கலாம். வணிகரிடம் போய் வாங்கலாம். ஆனால், வாங்குவதற்குப் பணம் இல்லை என்றால் என்ன செய்வது? சில நேரங்களில் நாம் பிறருக்கு கொடுக்கும் அறிவுரைகூட இப்படித்தான். யாருக்கும் பயன்தராமல் இருக்கும்!

இப்படி பல எண்ணங்களை உருவாக்கும் இந்த உவமை எனக்கு எப்போதும் நெருடலாகவே இருக்கின்றது. மணமகனின் தாமதத்தால் - ஒரு ஆணின் தாமதத்தால் - சில இளம் பெண்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் இது. அந்த இரவில் அந்தப் பெண்கள் எங்கே கடையைத் தேடி அலைந்திருப்பார்கள்? 'போடா, நீயும் உன் கல்யாணமும்' என்று தங்கள் வீட்டிற்குச் சென்றிருந்தால் மணமகன் என்ன செய்திருப்பார்?

மேலும், முன்மதியோடு இருக்க நிறைய பணம் வேண்டும். விளக்கு வாங்க, விளக்கிற்கு எண்ணெய் வாங்க, எண்ணெய்க்கு குடுவை வாங்க - எல்லாவற்றிற்கும் பணம் வேண்டும். பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? முன்மதி என்ன அவ்வளவு பெரிய மதிப்பீடா? 'அன்றைய தொல்லை அன்றைக்கு போதும்' என்று சொன்ன ஆண்டவர், 'நாளைக்கு சேர்த்து வைக்கும் முன்மதி' பற்றி பேசுவது ஏன்?

நிற்க.

உவமையை நாம் ஆராய்வதை விடுத்து இருப்பதை போல எடுத்துக்கொள்வோம்.

அவர் மணமகன்.

அவர் அப்படித்தான் செய்வார்.

அவர் தாமதிக்கலாம்.

ஏனெனில் அவர் கடவுள்.

அவர் நினைத்தால் நாம் வெறுமையாக இருந்தாலும் நம்மைத் தழுவ முடியும் - அகுஸ்தினாரை தழுவிக்கொண்டதுபோல.


Fr. Yesu Karunanidhi

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!