Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        30  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 21ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-9

கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக!

இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக் கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்கள் ஆனீர்கள்.

மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருட்கொடை எதிலும் குறையே இல்லை.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்கு பெற உங்களை அவர் அழைத்துள்ளார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 145: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: என் கடவுளே, உமது பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி

4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். 5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். பல்லவி

6 அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன். 7 அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 24: 42a,44


அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம் கூறியது: "விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

சிந்தனை

நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

எதிர்பாராத நேரத்தில் மானிட மகனை சந்திக்க நாம் ஆயத்தமாகவும், விழிப்பாகவும் இருந்திடல் வேண்டும் என்ற அழைப்பை இறைவாக்கு தருகின்றது.

மனுமகன் என்ன திருடனா நினையாத நேரத்தில் வர என்ற கேள்வியை கேட்டுப் பார்க்கலாம்.

இதயங்களை திருடுகின்ற திருடன் என்ற செய்தியை மறைக்கல்வியில் அருட்செல்வியர் கற்றுக் கொடுப்பார்கள்.

நம்மை பொறுத்த மட்டில் அவர் அவரது திட்டப்படி எல்லாம் நடக்கின்றது. அவரது திட்டத்தை அறியாதவர்களுக்கு அவரது நேரம் தெரிவதில்லை என்பதுவே உண்மை என என்மனம் சொல்லும்.

அவருடைய திட்டத்தை அறிந்து செயலாற்றும் அன்பர்கள் எப்பொழுதும் விழிப்பாகவும் கவனமாகவும் ஆயத்தமாகவும் இருப்பதனால், அழுகைக்கோ அங்கலாய்ப்புக்கோ இடமில்லை.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
விழிப்பாயிருங்கள், ஆயத்தமாய் இருங்கள்

ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்டோபர் என்பவரின் தலைமையில் "Sleepless Ones" என்ற ஒரு குழுவானது இயங்கி வந்தது. அந்த குழுவில் முன்னூறு உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த முன்னூறு பேரும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஆலயத்தில் உட்கார்ந்து தூங்காது ஜெபித்து வந்தார்கள். ஓராண்டு, இராண்டு அல்ல, ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள்.

அவர்கள் எதற்காக இப்படி தூங்காமல் ஜெபித்தார்கள் என்றால் ஆண்டவர் இயேசு எந்நேரத்திலும் வரக்கூடும் என்பதற்காகவே அவர்கள் விழித்திருந்து ஜெபித்தார்கள்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து, ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. அது ஒரு திருடனின் வருகையைப் போன்று இருக்கும். எனவே விழிப்பாய் இருங்கள், ஆயத்தமாய் இருங்கள் என்று தன்னுடைய சீடர்களுக்கு எடுத்துக்கூறுகிறார்.

விழிப்பாய் இருங்கள் என்று இயேசு கூறுவதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? மேலே சொல்லப்பட்ட செய்தியில் வரும் மனிதர்களைப் போன்று கண்தூங்காமல் விழித்திருந்து, ஆண்டவர் இயேசுவுக்காக காத்திருப்பதா? நிச்சயமாக இல்லை. இயேசு நம்மிடம் இதை விரும்பவில்லை. மாறாக எப்போதும் நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளைச் சரிவரச் செய்து தலைவன்/ இயேசுவின் வருகைக்காக காத்திருப்பதே விழிப்பாய் இருப்பதாகும்.

"பசித்திரு, தனித்திரு. விழித்திரு என்பார் இராமலிங்க அடிகளார். இப்படி பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்தால் இந்த மூன்றின் முதலெழுத்தும் ஆன பதவி நமக்கு உண்டு என்பார்கள் பெரியவர்கள். நாம் விழிப்பாக இருந்தால் கடவுள் அளிக்கும் ஆசிர்வாதம் நமக்கு எப்போதும் உண்டு என்பதை ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாகக் கூறுகிறார். "தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவர் பேறுபெற்றோர்; அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார்" என்கிறார் இயேசு கிறிஸ்து.

ஆக, நாம் நம்முடைய வாழ்வில் செய்யும் ஒவ்வொரு செயலையும், விழிப்போடு செய்வோம். எதற்கும் நாம் ஆயத்தமாய் இருப்போம். இதுவே இறைவார்த்தை நமக்குத் தரும் போதனையாக இருக்கிறது.

ஆனால் பல நேரங்களில் நாம் விழிப்போடும், ஆயத்தமாகவும் இருப்பதில்லை என்பது வேதனை கலந்த உண்மையாக இருக்கிறது.

குடிசை ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. உள்ளே மனிதர் ஒருவர் கட்டிலில் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். நான்கு பேர் உடனடியாக உள்ளே சென்று கட்டிலை அப்படியே அலக்காக தூக்கிக்கொண்டு வெளியே வர முயன்றனர். ஆனால் குடிசை வீட்டின் வாசல் சின்னதாக இருந்ததால் கட்டிலைக் வெளியே கொண்டு வர முடியவில்லை. அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாயின.

அப்போது ஊர் பெரியவர் ஒருவர் வெளியில் இருந்துச் சொன்னார். 'தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பிவிடுங்கள் அது போதும். அதன் பிறகு அவரே வெளியே வந்து விடுவார்' என்று. ஆம், தூங்கி வழிந்துகொண்டிருக்கும் இந்த உலகத்தை விழிப்படையைச் செய்யவேண்டும் என்றால் முதலில் நாம் விழிப்பாய் இருக்கவேண்டும்.

சாரணர் சாரணிய இயக்கத்தில் சொல்லப்படும் ஒரு வேத வாக்கு " ஆயத்தமாய் இரு" என்பது தான். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக விழிப்பாகவும், ஆயத்தமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த உலகை விழிப்படையைச் செய்ய முடியும்.

நாம் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக விழிப்பாகவும், ஆயத்தமாக இல்லாதிருந்தால் அதுவே பல பிரச்சனைகளை உண்டுபண்ணும். தெசலோனிக்க திருச்சபையில் வாழ்ந்த மக்கள் இயேசுவின் வருகையை பற்றி கவலை கொள்ளாமல், உழைக்காமல், சோம்பேறியாய், பிறருக்குப் பாரமாய் இருந்தார்கள். இதைப் பார்த்துதான் தூய பவுல் அவர்களிடம், "உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது" (2 தெச 3:10) என்கிறார். ஆகவே, விழிப்பாய் இல்லாது, ஆயத்தமில்லாது வாழும்போது சோம்பேறித்தனம்தான் பெருகும் என்பது கண்கூடு.

"சோம்பேறித்தனம் பலவீனமுள்ளவர்களின் ஒரே புகலிடம் என்பார் செஸ்டர் பீல்டு என்ற அறிஞர். அதேபோன்று "சோம்பேறித்தனத்தைவிட துக்கத்திற்குக் காரணம் வேறெதுவும் இருக்க முடியாது" என்பார் பர்ட்டன் என்ற அறிஞர்.

எனவே நம்முடைய வாழ்விலிருந்து சோம்பேறித்தனத்தை அகற்றுவோம், ஆண்டவரின் வருகைக்காக எப்போதும் விழிப்பாய் இருப்போம், ஆயத்தமாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
யார் நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர்?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. "இரும்பு மனுசி என்று எல்லாராலும் அழைக்கப்பட்ட இவர் அவருடைய தந்தையைப் போல் தன் பொன்மொழிக்காக அறியப்பட்டவர் அல்ல. ஆனால், அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அவர் அதற்கு உடனடியாகத் தந்த பதிலும் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.

ஒருவர் இந்திரா காந்தியிடம் கேட்ட கேள்வி இதுதான். "நேசத்துக்கு (அன்புக்கு) உரியவராய் இருப்பதைக் காட்டிலும் மெயமையானது எது?. இந்திரா காந்தி தந்த பதில், "நேசத்துக்குரியவராய் இருப்பதைவிட நம்பிக்கைக்குரியவராய் இருப்பதே மேலானது".

எத்துனை அர்த்தம் போதித்த வார்த்தைகள். நாம் ஒருவருக்கு நேசத்துக்குரியவராய் இருப்பது நல்லதுதான். ஆனால் அதைவிட மேலானது நம்பிக்கைக்குரியவராய் இருப்பது. ஏனென்றால் நம்பிக்கைக்குரியவராய் நாம் இருக்கின்றபோது நேசத்துகுரியவராய் மாறிவிடுவோம் என்பது உண்மையிலும் உண்மை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மானிட மகனுடைய இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசும்போது யாராரெல்லாம் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கின்றார்களோ அவர்களெல்லாம் இறைவனிடமிருந்து ஆசிரையும், யாராரெல்லாம் நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாது இருக்கிறார்களோ அவர்களெல்லாம் தண்டனையும் பெறுவார்கள் என்று கூறுகின்றார். இப்போது யாராரெல்லாம் நம்பிக்கைக்குரியவர்கள் என்பதையும், யாராரெல்லாம் தங்களுடைய கடமையிலிருந்து தவறியவர்கள் என்பதையும், இவ்விருவரும் பெறும் கைம்மாறு என்ன என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பொறுப்பிற்கு நாம் உண்மையுள்ளவர்களாகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளமாக இருக்கின்றது. இறைவாக்கினர் மீக்கா புத்தகத்தில் நாம் இவ்வாறு வாசிக்கின்றோம், "ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்? (மீக் 6:8) என்று. ஆம், நம் ஆண்டவர் நம்மிடத்தில் நேர்மையையும் இரக்கத்தையும் தாழ்ச்சியையும் எதிர்பார்க்கின்றார். இவற்றையெல்லாம் நாம் நமது வாழ்வில் கடைப்பிடித்து, நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தோம் என்றால், இறைவன் தன்னுடைய ஆசிரை நிறைவாகப் பொழிவார் என்பது உறுதி.

யார் நம்பிக்கைக்குரியவர் என்று சிந்தித்துப் பார்த்த நாம், நம்பிக்கைக்குரியவராய் இல்லாது யாராரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை என்ன என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம்.

பொறுப்பற்றவர்களாய் இருப்பவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினை, கடமையினைச் சரிவரச் செய்யாமல் தலைவன் வரக் காலம் தாழ்த்துவார் என்று உண்டும் குடித்தும் சகபணியாளர்களை அடித்தும் துன்புறுத்துவார்கள். இப்படிப்பட்ட பொறுப்பாளர்கள் திடிரெனத் தலைவன் வருகின்றபோது நன்றாய் அடிபடுவார்கள்.

விடுதலைப் பயண நூலில் வரக்கூடிய ஒரு நிகழ்ச்சி. மோசே ஆண்டவரிடமிருந்து பத்துக்கட்டளைகளைப் பெறுவதற்காகச் சீனாய் மலைக்குச் செல்கின்றபோது, இஸ்ரயேல் மக்கள் மோசே வரக் காலம் தாழ்த்துவார் என்று நினைத்துக்கொண்டு பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து, அதனை வழிபடத் தொடங்குகின்றார்கள். இந்த நேரத்தில் மோசே அங்கு வந்து அவர்களைப் பழிக்கின்றார், சரியான தண்டனையும் கொடுக்கின்றார் (விபா 32: 1-14). நாம் இறைவன் வரக் காலம் தாழ்த்துவார் என்று நினைத்துக்கொண்டு, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளைச் சரிவரச் செய்யாமல் இருந்தோம் என்றால், நாம் இறைவனிடமிருந்து அதற்கான தண்டனையைப் பெறுவோம் என்பது உறுதி. ஆகையால், நாம் உயர்வடைவதும் தாழ்வதும் நம்முடைய கையில்தான் அடங்கியிருக்கின்றது.

இன்றைக்கு அரசியல் தளத்திலும் பொதுவெளியிலும் பொறுப்பில்லாத, உண்மையில்லாத மனிதர்களைத்தான் அதிகமாகக் காண முடிகின்றது. இப்படிப்பட்டவர்களின் நினைப்பெல்லாம், "யார் நம்மை என்ன செய்துவிட முடியும்? என்பதுதான். "அரசியலில் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்றொரு வரி சிலப்பதிகாரத்திலே வரும். இதனுடைய அர்த்தம் என்னவென்றால், யாராரெல்லாம் அரசியலில் தவறு இழைக்கின்றார்களோ அவர்களுக்கு அறம் அதற்கேற்ப தண்டனையைத் தந்துவிடும் என்பதாகும். அதுபோன்றுதான் ஆண்டவர் நமக்குக் கொடுத்த பொறுப்புகளை நாம் சரிவர நிர்வகிக்காமல், பொறுப்பில்லாமல் இருந்தோம் என்றால் அதற்கேற்ற தண்டனையை இன்றல்ல, என்றைக்காவது ஒருநாள் அல்லது ஆண்டவர் வெளிப்படும் நாளில் கட்டாயம் பெறுவது உறுதி.

ஆகவே, நாம் நமது கடமைகளில், பொறுப்புகளில் (அந்தப் பொறுப்பு எதுவாக இருந்தாலும் அதில்) உண்மையுள்ளவர்களாகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்போம். அப்போது இறைவன் வெளிப்படும் நாளில் நாம் அதற்கேற்ற கைமாறையும் இறைவனுடைய விண்ணக மகிமையையும் இறையருளையும் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================





=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!