Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        29  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 21ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6-10,16-18

அன்பர்களே! எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட முறைமையின்படி ஒழுகாமல் சோம்பித்திரியும் எல்லாச் சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள் என, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும்.

ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப் பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல; மாறாக, நீங்களும் எங்களைப்போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.

"உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது" என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம்.

அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன்.

நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம். இதுவே நான் எழுதும் முறை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 128: 1-2. 4-5 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(1 யோவா 2: 5 )

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 27-32

அக்காலத்தில் இயேசு கூறியது: "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுபடுத்துகிறீர்கள்; "எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்" என்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

சிந்தனை

வாழ்விலே இன்று நேர்மையாளர்களாக தோற்றமளித்து விட்டு உள்ளேயே கபடோடும், வஞ்சகத்தோடும் இருந்து பெயர் கொலை செய்து, பாவத்தை கட்டிக் கொள்வோர் ஏராளம் உண்டு.

பலர் இன்று வழிபாடுகளிலும், செப கூட்டங்களிலும் பங்கேற்பவர்களாக, ஞாயிறு கிறிஸ்தவர்களாக இருந்தும் உண்மையான சாட்சியம் பகர முடிகிறதா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

வாழ்வு ஒன்று, வேடம் பல என்ற முறையில் வாழ்க்கை நமதாகின்றது எனவே சாட்சியம் இல்லாததாகவே அமைகின்றது.

இத்தகையவர்களுக் இன்றைய வாசகம் அறிவுக் கண்ணை திறக்கட்டும்.

நான் இவ்வாறு இல்லையே என்று பெருமிதம் கொள்ளாமல், அமைதியிலே நம்மை ஆய்வு செய்வதோடு, சமூகத்தில் இத்தகைய வேடமிட்டு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வோருக்காக மன்றாடுவோம். ஒருவர் பொருட்டு பாவம் பெருப்பெடுத்தது போல ஊருக்கொருவர் இருந்தாலே போதும் சாட்சியம் தடைபடும் என்பதை புரிந்து கொள்வோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
வெளிவேடங்களை அகற்றி, உண்மையாய் வாழ்வோம்

புகழ்பெற்ற இரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் சொல்லக்கூடிய கதை இது. பறவை ஒன்று ஆற்றங்கரையோரமாய் இருந்த பெரிய மரமொன்றில் கூடு கட்டி தன்னுடைய மூன்று குஞ்சுப் பறவைகளுடன் வாழ்ந்து வந்தது. ஒரு சமயம் ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்படவே, ஆற்றங்கரையோரமாய் இருந்த அந்த மரம் சாய்ந்தது. இதனால் இனிமேலும் அந்தப் பறவையால் தன்னுடைய மூன்று குஞ்சுகளுடன் அந்த மரத்தில் வாழமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே அது மறுகரையில் இருந்த ஒரு மரத்தில் கூடுகட்டி, அங்கேயே தன்னுடைய குஞ்சுகளுடன் வாழ நினைத்தது. அதன்பேரில் அது ஒவ்வொரு குஞ்சுப் பறவையாக தன்னுடைய கால்களுக்கு இடையே வைத்து, மறுகரையில் இருந்த மரத்தில் வைக்கத் திட்டம் தீட்டியது.

முதலில் ஒரு குஞ்சுப் பறவையை தன்னுடைய இரு கால்களுக்கும் இடையே வைத்துக்கொண்டு தாய் பறவை ஆற்றின் மேலே பறந்துசென்றது. அப்போது அந்தத் தாய் பறவை தன்னுடைய குஞ்சுப் பறவையிடம், "உனக்கு இது மாதிரி ஒரு நிலை ஏற்பட்டு, உன் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்ளும். அப்போது நானும் உயிரோடு இருக்கிறேன். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நீ யாரை முதலில் காப்பாற்றுவாய்? என்னையா? உன்னுடைய பிள்ளைகளையா?" என்று கேட்டது.

உடனே குஞ்சுப் பறவை யோசிக்கத் தொடங்கியது. என்னுடைய பிள்ளைகளைத் தான் முதலில் காப்பாற்றுவேன் என்று சொன்னால், அது என்னை இப்படியே இந்த ஆற்றில்போட்டுவிட்டுப் பறந்துவிடும். உங்களைத்தான் முதலில் காப்பாற்றுவேன் என்று சொன்னால், உயிர்பிழைக்க வழியிருக்கின்றது. அதனால் உங்களைத்தான் முதலில் காப்பாற்றுவேன் எனச் சொல்லலாம் என முடிவுசெய்து, அதனையே சொன்னது. இதைக் கேட்ட தாய் பறவை, "நீ என்னை ஏமாற்றுகின்றாய்" என்று சொல்லி அதனை ஆற்றுக்குள் போட்டுவிட்டு, தன்னுடைய பழைய கூட்டிற்குத் திரும்பி போனது.

கூட்டிற்குத் திரும்பிய தாய் பறவை அடுத்த குஞ்சுப் பறவையை தன்னுடைய கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு மறுகரையில் இருந்த புதிய கூட்டை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. சிறுதுதூரம் பறந்துசென்ற பிறகு, தாய் பறவை முந்தைய குஞ்சுப் பறவையிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டது. அதுவும் முந்தை குஞ்சுப் பறவையைப் போன்றே யோசித்து, "உங்களைத்தான் முதலில் காப்பாற்றுவேன்" என்று சொன்னது. "நீயும் என்னிடத்தில் பொய் சொல்கிறாய்" என்று சொல்லி தாய் பறவை அந்த குஞ்சுப் பறவையையும் ஆற்றுக்குள் போட்டுவிட்டு, பழைய கூட்டிற்குத் திரும்பிச் சென்றது.

இந்த குஞ்சுப் பறவையாவது உயிர்பிழைக்கிறதா? என எண்ணத்தோடு தாய் பறவை அந்த மூன்றாவது குஞ்சுப் பறவையை தன்னுடைய கால்களுக்கு இடையே வைத்து பறக்கத் தொடங்கியது. சிறிதுதூரம் சென்றபோது முந்தைய இரு குஞ்சுப் பறவைகளிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டது. அந்த குஞ்சுப் பறவை யோசிக்கத் தொடங்கியது. பின்னர் அது நம் மனதில் பட்டதைச் சொல்வோம் என முடிவுசெய்துகொண்டு, "அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், நான் என்னுடைய பிள்ளைகளைத்தான் காப்பாற்றுவேன்" என்று உறுதியாகச் சொன்னது. இதைக் கேட்டு மகிழ்ந்த அந்த தாய் பறவை, "நீ மற்றவர்களை திருப்திப் படுத்தவேண்டும் என்று பொய் சொல்லவில்லை, மாறாக உண்மையைச் சொன்னாய். அதனால் நான் உன்னை புதிய கூட்டில் கொண்டுபோய் வைக்கப்போகிறேன்" என்று சொல்லி அங்கே போய் வைத்தது. அங்கே அவர்கள் இருவரும் சந்தோசமாக இருந்தார்கள்.

எல்லாரையும் திருப்திப் படுத்தவேண்டும் என்பதற்காக போலியான வாழ்க்கை வாழாமல் உண்மையான வாழவேண்டும் என்னும் செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த கதை நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்களுடைய வெளிவேடத்தை வெட்ட வெளிச்சமாக்குகின்றார். "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே, இறைவாக்கினர்களைக் கொன்றுபோட்டுவிட்டு, அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்புகிறீர்களே" என்று சொல்லி, அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசி, போலியாக வாழ்ந்து வந்தார்கள். இவ்வாறு அவர்கள் பலருக்கும் துன்மாதிரியாக இருந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களைச் சாடுகின்றார்.

நாம் அவர்களைப் போன்று இல்லாமல், வெளி வேடத்தை அகற்றி, உண்மையாய் வாழ்வோம். உண்மைக்குச் சான்று பகர்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
திருமுழுக்கு யோவானின் பாடுகள்

இயேசுவின் முன்னோடி, இறுதி இறைவாக்கினர், ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்தவர் போன்ற பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான தூய திருமுழுக்கு யோவானின் பாடுகளை இன்றைய நாளிலே திருச்சபையானது நினைவுகூறுகிறது.

இவருடைய நினைவுநாளைக் கொண்டாடுகின்ற இந்த வேளையிலே இவ்விழா நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக நாம் ஓவ்வொருவருமே நேர்மையோடும், உண்மைக்குச் சான்று பகரக்கூடியவர்களாகவும் வாழ அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலே திருமுழுக்கு யோவான் நேர்மையும், தூய்மையும் கொண்டவராக விளங்கினார் என்று படிக்கின்றோம். திருமுழுக்கு யோவான் நேர்மையோடும், துணிவோடும் இறைவனின் வார்த்தையை எடுத்துரைக்கக்கூடியவராக இருந்தார் (மாற் 6:20). மேலும் ஒரு இறைவாக்கினர் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார்.

இன்றைய முதல் வாசகத்திலே கடவுள் எரேமியா இறைவாக்கினரைப் பார்த்து, "நான் உனக்குச் சொல்லக்கூடியவற்றை அம்மக்களிடம் போய் சொல்" என்ற இறைவார்த்தையை திருமுழுக்கு யோவான் தனது வாழ்வாக்கினார். எப்படி என்றால் அவர், தன்னுடைய சகோதரனின் மனைவியோடு வாழ்ந்துகொண்டிருந்த ஏரோதின் தவறைச் சுட்டிக்காட்டுகிறார். அதற்காக தன்னுடைய உயிரையும் தருகிறார். இப்படியாக நேர்மையும், தூய்மையும் கொண்ட திருமுழுக்கு யோவான் இறைவாக்குப் பணிக்காக எதையும் இழக்கக்கூடியவராக இருக்கிறார்.

பலவேளைகளில் நேர்மையோடு நாம் வாழ்கின்றபோது அதற்காக தரக்கூடிய விலை அதிகம். சில மாதங்களுக்கு முன்பாக (அக்டோபர் 12, 2014) நேர்மையோடு செயல்பட்டு, 260 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலத்தை மீ்ட்ட சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார் என்று செய்தித்தாளிலே படித்திருப்போம். அரசு நிர்வாகத்தில் நேர்மையை தங்கள் பணியில் கடைப்பிடித்து வந்தால், அவர்களால் ஒரே இடத்தில் பணி செய்ய முடியாது என்பதை சகாயம், அன்சுல் மிஸ்ரா, இறையன்பு போன்ற மாவட்ட ஆட்சியர்களின் மாற்றத்திலிருந்து நாம் தெரிந்து கொண்டதுதான். ஆனால் இப்போது மாவட்ட ஆட்சியர் மட்டுமில்லை, நேர்மையாகச் செயல்படும் அதிகாரி யாராக இருந்தாலும் அவர் இடமாற்றம் செய்யப்படுவார் என்பதற்கு உதாரணமாக சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் இருக்கிறார்.

மத் 5:10 ல் படிக்கின்றோம், "நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது" என்று. நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று நேரியவழியில் நடப்போம். இறைவனின் அரசை உரித்தாக்கிகொள்வோம்..

இவ்விழா நமக்குச் சுட்டிக்காட்டும் இரண்டாவது பாடம். கடவுளின் உடனிருப்பு மற்றும் பராமரிப்புதான். முதல் வாசகத்திலே கடவுள், "உன்னை விடுக்க நான் உன்னோடு இருக்கிறேன்" என்கிறார். இறைவனின் வழியில் நடக்கின்றபோது, அவருக்கு பணிசெய்கின்றபோது கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் அசைக்கமுடியாத உண்மை.

ஓர் ஊரிலே விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளுக்குப் பயந்து வாழக்கூடியவர். ஒருமுறை அவருக்கு சிறிய வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். இதனால் அவர் மிகவும் மன வருத்தமடைந்தார். "எனக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு நிலை?" என்று கண்கலங்கினார். ஆனால் மருத்துவர்களோ, "அறுவைச் சிகிச்சை செய்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்லி மருத்துவமனையிலே அனுமதித்தனர்.

அன்று இரவு அவர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார். அதிலே அவர் ஓர் ஏரிக்கரையிலே இருந்த படகை ஒன்றை எடுத்துக்கொண்டு, உள்ளே பயணம் செய்தார். அந்தப் படகானது தண்ணீரில் மிகவும் தத்தளித்தது. அப்போது அவருக்கு எதிரே ஒரு வானவில் தோன்றி, அதிலிருந்து ஒரு குரல், "மகனே நீ எதைக்குறித்தும் கவலைப்படாதே!, நீ தனி ஆள் கிடையாது. நான் உன்னோடு இருக்கிறேன்" என்று சொல்லி மறைந்தது. உடனே தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுந்தார்.

அடுத்த நாள் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அது வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சையை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, ஒரு சிறுமி கையிலே காகிதத்தை வைத்திருந்தாள். அந்தக் காகிதத்தில் ஏரிக்கரை, அதிலே ஒரு படகு, அதற்கு நேர் எதிரே வானவில் என்றிருந்தது. அப்போதுதான் அவர் முந்தின நாள் தான் கண்ட கனவு அது என்பதை அறிந்து, கடவுள் தன்னைக் குணப்படுத்த இருக்கிறார் என்பதைக் கனவின் வழியாகச் சொல்லி இருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டார்.

இறைவழியில் நடப்போருக்கு இறைவனின் துணை எப்போதும் உண்டு என்பத்தை தான் இக்கதை நமக்கு உணர்த்துகிறது. எனவே தூய திருமுழுக்கு யோவானின் பாடுகளை நினைவுகூறுகிற வேளையில் அவரைப் போன்று நேரிய வழியில் நடந்து உண்மைக்கு இயேசுவுக்கு சான்று பகர்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.



 திருமுழுக்கு யோவானின் பாடுகள்

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது அப்படியேதான் இருக்கும். மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலைக் கொடுக்கும். (யோவான் 12)

இன்று திருச்சபையானது தூய திருமுழுக்கு யோவானுடைய பாடுகளை நினைவுகூர்ந்து பார்க்கிறது. ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்தவர், பாலைவனத்தில் ஒலித்த குரல், இயேசுவுக்கு திருமுழுக்குக் கொடுத்தவர், இயேசுவை மக்களுக்கு சுட்டிக்காட்டியவர், இறுதி இறைவாக்கினர் போன்ற பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான இவரது பாடுகளை நினைவுகூர்ந்து பார்ப்பது நாம் நமது விசுவாசகத்தில் வளர்வதற்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

திருமுழுக்கு யோவான் ஆண்டவருடைய கைவன்மையையும், எலியா இறைவாக்கினரின் உளப்பாங்கையும் பெற்றிருந்தவர் (லூக் 1:17) அதன்மூலம் மக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் சென்றவர். குறிப்பாக உண்மையை உரக்கச் சொன்னவர். அதற்காக தன்னுடைய உயிரையும் விலையாகத் தந்தவர்.

ஏரோது தன்னுடைய சகோதரனான பிலிப்பின் மனைவியோடு வாழ்வதைப் பார்த்த திருமுழுக்கு யோவான் அவனிடம், நீ உன்னுடைய சகோதரனின் மனைவியோடு வாழ்வது முறையல்ல என்று அவனுடைய தவறைச் சுட்டிக்காட்டுகிறார். அதற்கு விலையாக தன்னுடைய உயிரையே தருகிறார். இவ்வாறு அவர் எப்படிப்பட்டட் துன்பம் வந்தாலும் உண்மையைத் துணிச்சலாக அறிவிக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

இயேசுவின் வழியின் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் உண்மையின் வழியில் நடந்து உண்மைக்குச் சான்று பகரவேண்டும்.

இந்நேரத்தில் அமெரிக்காவில் இருந்த கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மாட்டின் லூதர் கிங் என்பவரை நினைத்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மார்டின் லூதர் கிங் வெள்ளை இனத்தவரால் கறுப்பினத்தவருக்கு நேர்ந்த கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் துணிச்சலோடு எடுத்துரைத்தார். இதனால் அவர் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தார். ஆனாலும் அவர் சாவைக் கண்டு கலங்காமல் தான் மேற்கொண்ட பணியில் மிகவும் உறுதியாக இருந்தார்.

1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, அதாவது அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுவதற்கு முந்தின நாள் திரண்டிருந்த மக்களைப் பார்த்துப் பேசினார், "அன்பார்ந்த மக்களே! என்னுடைய சாவு நெருங்கி வருவதை நான் நன்றாகவே உணர்கிறேன். ஆனாலும் நான் சாவைக் குறித்துக் கவலைப்படவில்லை. எனக்கு முன்பாக வாக்களிக்கப்பட்ட நாடு (கறுப்பினத்தவர் எல்லா உரிமையையும் பெற்று அமைதியாக வாழும் நாடு) மிகத் தெளிவாகத் தெரிகிறது. அந்நாட்டில் நான் நுழைவேனோ இல்லையோ, என்னுடைய மக்கள் நுழைவார்கள். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது" என்று.

அவர் சொன்னது போன்று 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள் மார்டின் லூதர் கிங் பகைவரால் துப்பாக்கியில் சுடப்பட்டு, கொல்லப்பட்டார். அவர் எதிர்பார்த்த கருப்பினத்தவரும் சம உரிமை பெற்று வாழும் நாட்டில் அவர் வாழ முடியாவிட்டாலும்கூட, அவர் கண்ட கனவு சில ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியது. இவ்வாறு அவர் உண்மையை உரக்கச் சொன்னதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

திருமுழுக்கு யோவானும் தான் அரசனின் தவற்றைச் சுட்டிக்காட்டுகிறோம் என்றெல்லாம் நினைத்துக் கவலைப்படவில்லை. குற்றம் என்றால் குற்றம்தான். அது யார் செய்தால் என்ன? என்பதில் மிகத் தெளிவாக இருந்து, உண்மையை எடுத்துரைத்து இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்.

அடுத்ததாக திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அவரிடம் விளங்கிய நேர்மையும், தூய்மையுமே ஆகும். நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் நேர்மையும், தூய்மையும் உள்ளவராக விளங்கியதால் ஏரோது அவரைக் கண்டு அஞ்சுகிறார். நாம் நம்முடைய வாழ்வில் நேர்மையோடும், தூய்மையோடு விளங்கினோம் என்றால் நமது வாழ்வு மிகச்சிறந்த சாட்சிய வாழ்வாக இருக்கும் என்பதில் எந்தவித சங்கமும் இல்லை.

விவிலியத்தில் கடவுள்தான் தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். தூய்மை என்பது அவருடைய தனிப்பட்ட குணம். அதனால்தான் லேவியர் புத்தகம் 19:2ல் வாசிக்கின்றோம், "உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராக இருப்பது போல நீங்களும் தூயவராக இருங்கள்" என்று. எனவே கடவுளின் பிள்ளைகளாகிய நாம் தூயவர்களாக இருக்க முயற்சிப்போம்.

பல நேரங்கில் நாம் நமது சிந்தனையால், சொல்லால், செயலால் பாவம் செய்து, கடவுளை விட்டு வெகுதொலைவில் போய்விடுகிறோம். எனவே நாம் நம்மிடம் இருக்கும் பாவத்தை விட்டுவிட்டு திருமுழுக்கு யோவானைப் போன்று தூயவர்களாக வாழ முயற்சிப்போம்.

இயேசு கூறுவார், "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்" என்று. நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று தூயவர்களாகவும், உண்மைக்குக் சான்று பகர்பவர்களாகவும் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
Saint John the Baptist was called by God to be the precursor of His divine Son. In order to preserve his innocence spotless, and to improve upon the extraordinary graces which he had received in his earliest infancy, he was directed by the Holy Spirit to lead an austere and contemplative life in the wilderness. There he devoted himself to the continuous exercise of devout prayer and penance.

When Saint John was thirty years old, the faithful minister of the Lord began to discharge his mission. Clothed with the garments of penance, he announced to all men the obligation weighing upon them of washing away their iniquities with the tears of sincere compunction. He proclaimed the Messiah, who was of his own age but whom he had never seen, when one day Jesus came to be baptized by him in the Jordan. Saint John was received by the poor folk as the true herald of the Most High God, and his voice was, as it were, a trumpet sounding from heaven to summon all men to avert the divine judgments. Souls were exhorted by him to prepare themselves to reap the benefit of the mercy offered them.

When the tetrarch Herod Antipas, in defiance of all laws divine and human, married Herodias, the wife of his brother Philip who was yet living, Saint John the Baptist boldly reprimanded the tetrarch and his accomplice for so scandalous an adultery. Herod, motivated by his lust and his anger, cast the Saint into prison. About a year after Saint John had been made a prisoner, Herod gave a splendid entertainment to the official world of Galilee. Salome, a daughter of Herodias by her lawful husband, pleased Herod by her dancing, to the point that he made her the foolish promise of granting whatever she might ask. Salome consulted with her mother as to what to ask, and that immoral woman instructed her daughter to demand the death of John the Baptist, and that the head of the prisoner should be immediately brought to her on a platter. This barbaric request startled the tyrant himself; but governed by human respect he assented and sent a soldier of his guard to behead the Saint in prison. Thus died the great forerunner of our blessed Saviour, some two years after his entrance upon his public ministry, and a year before the death of the One he announced.

Reflection: All the signal graces with which Saint John was favored sprang from his humility; in that virtue all his other virtues were founded. If we desire to form ourselves to solid virtue, we must, above all things, labor to lay the same deep foundation.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
முயற்சி திருவினையாக்கும் - Fr. YESU KARUNANIDHI ROME
'வாழ்க்கை மிக குறுகியது. காதல் கொள்ளுங்கள்!' (Life is short. Have an affair) என்ற கவர்ந்திழுக்கும் முதற்பக்கத்துடன் இயங்கிவந்த 'ஆஷ்லி மேடிசன்' (Ashley Madison) என்ற 'காதல்' வலைதளம் கடந்த வாரம் சில தொழில்நுட்ப கில்லாடிகளால் ஊடுருவப்பட்டது. 'திருமணத்திற்கு வெளியே உறவு கொள்ள' ஒருவர் மற்றவரை நெருக்கமாக்கும் இந்த வலைதளத்தில் தங்கள் விவரங்கள் மற்றும் நிழற்படங்களைப் பதிவு செய்திருந்த பலரையும் இந்த கில்லாடிகள் இப்போது பயமுறுத்தி காசுபார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். 'திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி' இதில் பதிவு செய்தவர்கள் யாரிடமும் புகார் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் இந்திய நகரங்களில் இந்த இணையதளத்தில் பதிவு செய்தவர்களின் பட்டியிலில் நம்ம சென்னைக்கு மூன்றாம் இடம் வேறு.

சரி! இப்போ எதுக்கு இந்த டீடெய்ல்ஸ் எல்லாம்!

நேற்று மதியம் என் நண்பர் ஒருவருடன் வங்கிக்குச் சென்றபோது, உரையாடலில் போகிற போக்கில் அவர், 'இப்ப எல்லாம் யாரு ப்ராமிஸ் எல்லாம் கீப்-அப் பண்ணுறா? நாங்களும் இறுதி வார்த்தைப்பாடு கொடுக்கும்போது எல்லார் முன்னிலையிலும் ப்ராமிஸ் கொடுத்தோம். ஆனால், திருப்பலி, விருந்து, அன்பளிப்பு என கொண்டாடி மகிழ்ந்த அந்த நாளை மறந்தது போல கொடுத்த ப்ராமிஸையும் மறந்துவிட்டோம்!' என்றார்.

இதற்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை. அப்படியே உரையாடல் வேறு தலைப்பிற்கு மாறியது.

இன்று காலை அருட்செல்வியரின் இல்லத்தில் திருப்பலியில் மறையுரை வைத்துக்கொண்டிருந்தபோது ஒரு புதிய ஐடியா வந்தது.

இன்று திருமுழுக்கு யோவானின் மறைசாட்சியத்தைக் கொண்டாடினோம். இன்றைய நற்செய்திப் பகுதியில் மாற்கு நற்செய்தியாளர் யோவானின் மறைசாட்சியத்தைப் பற்றிப் பதிவு செய்ததை நாம் வாசித்தோம். திருப்பலி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதும் என்னுள் அந்த வசனம் ஓடிக்கொண்டே இருந்தது.

அது என்ன வசனம்?

'இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் (வாக்கு கொடுத்ததால்) அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான்.' (மாற்கு 6:26-27)

துரியோதனன் என்றவுடன் நமக்கு அவன் தீயவன் என எப்படித் தோன்றுகிறதோ, அப்படித்தான் ஏரோது என்றவுடன் நான் அவனை தீயவன் என நினைக்கின்றோம். ஆனால் தீயவர்களிடத்திலும் சில நல்ல குணங்கள் இருக்கின்றன. ஏரோதிடம் நான் மூன்று நற்குணங்களைக் காண்கின்றேன்:


அவன் ஏரோதியாவைக் கட்டாயப்படுத்தி தன்னுடன் வைத்திருக்கவில்லை. 'ஏரோது அவனது சகோதரனின் மனைவியை வைத்திருப்பது தவறு' என யோவான் சுட்டிக்காட்டுகின்றார். ஒரு அரசனுக்கு யாருடைய மனைவியையும் வைத்துக்கொள்ள உரிமை இருந்ததை நாம் அறிவோம். அவன் கட்டாயப்படுத்தி ஒருத்தியை மனைவியாக்கினால் அது தவறு. ஆனால், இங்கே ஏரோதியா கட்டாயத்தின் பேரில் ஏரோதிடம் இணையவில்லை (தாவீது செய்ததுபோல!). அவளுக்கும் ஏரோதுவை பிடித்திருக்கிறது.

'ஏரோது யோவானின் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்' (6:21) எனப் பதிவு செய்கிறார் மாற்கு. அதாவது, அவன் ஒரு சந்தர்ப்பக் கைதி. 'நல்லது செய்யக் கூடாது என்பதல்ல. நான் நல்லது செய்யத்தான் நினைக்கிறேன். ஆனால் அதை செய்யத்தான் முடியவில்லை' என்ற பவுலின் போராட்டத்தைத்தான், ஏரோதும் போராடுகிறான். இதுதான் நம் போராட்டமும்கூட. 'இது தவறு! இதை செய்யக்கூடாது!' எனத் தோன்றினாலும், நம்முள் இருக்கும் ஏவாளின் கைவிரல்கள், அந்தத் தவற்றைத் தழுவிக்கொள்ளவே ஆசைப்படுகின்றன.

3. சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது! அவன் வாக்கு தவறுவானா? இல்லையா? என்ற கேள்வியை வாசகர் உள்ளத்தில் விதைப்பதற்கு மாற்கு அவனின் வாக்குறுதியை இரண்டுமுறை பதிவு செய்கின்றார்: அ. 'உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்!' ஆ. 'நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்!'


ஏரோதின் இந்த மூன்றாவது குணத்தை மட்டும் கொஞ்சம் நெருக்கமாகப் பார்ப்போம்.

யார் வாக்கு கொடுக்கிறார்? ஏரோது.

யாருக்கு? ஏரோதியாவின் மகளுக்கு ('சலோமி' என்பது வரலாறு). இவள் ஏரோதின் சகோதரன் பிலிப்பு வழியாகப் பிறந்தவள். ஆக, ஏரோதுக்கும் இவளுக்கும் நேரடியான இரத்த உறவு கிடையாது.

யார் முன்னிலையில்? விருந்தினர்கள் முன்னிலையில் (அரசவையினர், ஆயிரத்தலைவர், முதன்மைக் குடிமக்கள் - ஆக, எல்லாரும் மனிதர்கள்!)

இந்த விருந்தினர்கள் முன்னிலையில் தான் வாக்குக்கொடுத்துவிட்டோமே என்பதற்காக - அதாவது, அவர்கள் முன் தன் தலை குனிந்துவிடக்கூடாது என்பதற்காக கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகிறான்.

நாம் நம் படுக்கையருகில் வைக்கும் அலார்ம்கூட நாம் நமக்கு கொடுக்கும் வாக்குறுதியே. இப்படித் தொடங்கி அன்றாடம் நாம் நமக்கும், நாம் பிறருக்கும் கொடுக்கும் வாக்குறுதிகள் ஆயிரமாயிரம். மற்றொரு பக்கம், அரசியலில் ப்ராமிஸ், மதங்களில் ப்ராமிஸ், விளையாட்டில் ப்ராமிஸ் என எல்லா இடத்திலும் 'ப்ராமிஸ்' நிறைந்து கிடக்கிறது. நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டில்கூட 'I promise to pay the bearer the sum of rupees' என அச்சிடப்பட்டு அதன்கீழ் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பமும் இருக்கிறது.

'ஆஷ்லி மேடிசன்' வழியாக ஒருவர் மற்றவர் தங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு தவறு இழைத்தது, அல்லது பிரமாணிக்கத்தை உடைத்தது, 'நல்லதா', 'கெட்டதா' என்ற கலந்தாய்வு இப்போது வேண்டாம். அல்லது அருள்நிலை வாழ்வில் தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் எந்த அளவிற்கு தங்கள் வாக்குறுதிகளில் நிலைத்திருக்கிறார்கள் என்ற ஆய்வும் வேண்டாம்.

நமக்கு ஏரோது வைக்கும் சின்ன கேள்வி இதுதான்:

'கொஞ்ச நேரம் தன்னுடன் இருந்த சில வருடங்களில் அழிந்து போகும் மனிதர்களுக்குத் தன் குடிபோதையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சமரசத்திற்கே இடமில்லாமல் நான் முயற்சி செய்தேன் என்றால், என்றும் உங்களுடன் இருக்கும் உங்கள் கடவுளுக்கு அல்லது கடவுள் முன் நீங்கள் தரும் வாக்குறுதியைக் காப்பாற்ற நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்?'

'முயற்சி திருவினையாக்கும்!'

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!