Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        28  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 21ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
எங்கள் வாய்மொழி, திருமுகம் வழியாக அறிவிக்கப்பட்டவற்றில் நிலையாய் இருங்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் (2: 1-3a, 14-17)

சகோதரர் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்.

ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக்கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 96: 10. 11-12a. 12b-13 (பல்லவி: 13ab)
=================================================================================
பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.
10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.
-பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12ய வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்.
-பல்லவி

12b அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.
13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(எபி 4: 12)

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (23: 23-26)

அக்காலத்தில் இயேசு கூறியது: "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது. குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.

இளைஞன் ஒருவன் ஒருநாள் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில் சொர்க்க வாசலில் நிறைய மனிதர்கள் வரிசையாக நின்றுகொண்டிருப்பதும், அவர்களுக்கு முன்பாக இருந்த வானதூதர் கையில் ஒரு பெரிய புத்தகம் வைத்துக்கொண்டு, அந்த புத்தகத்தில் அம்மனிதர்களைப் பற்றி என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதற்கேற்ப தீர்ப்பு வழங்குவதுமாக இருந்தது.

முதலில் மெத்தப் படித்த சான்றோர் ஒருவர் வந்தார். அவர் வானதூதரிடம், "நான் மறைநூல்கள் அனைத்தையும் பிழையற கற்றுத் தெரிந்தவன். அவை எல்லாவற்றையும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அதனால் என்னை சொர்கத்திற்கு உள்ளே அனுமதியுங்கள்" என்றார். அப்போது வானதூதர் தன்னுடைய கையிலிருந்த புத்தகத்தைப் படித்துவிட்டு அவரிடம், "நீ மறைநூல் அனைத்தையும் கற்றுத் தெரிந்திருக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் நீ மக்கள் உன்னைப் பாராட்டவேண்டும் என்றே செய்தாய். உனது செயல் உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் உன்னுடைய நோக்கம் சரியானதல்ல" என்று சொல்லி அவரை நரகத்திற்கு அனுப்பி வைத்தார்.

அடுத்ததாக ஒரு முனிவர் வந்தார். அவர் வானதூதரிடம், "நான் பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்திருக்கிறேன். நான் கடவுளிடம் கேட்பது எல்லாம் பலிக்கும். அதனால் என்னை சொர்க்கத்திற்கு அனுமதியுங்கள்" என்றார். உடனே வானதூதர் தன்னிடம் இருந்த புத்தகத்தை வாசித்துவிட்டு, "நீங்கள் பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்திருக்கலாம். ஆனால் இந்த தவ முயற்சிகள் அனைத்தும் உங்களிடத்தில் நான்தான் பெரியவன் என்ற ஆணவத்தை வளர்த்ததே தவிர, வேறு ஒன்றையும் செய்யவில்லை. அதனால் உங்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை" என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

இறுதியாக ஒரு விவசாயி வந்தான். அவன் வானதூதரிடம், "நான் பெரியதாக எதையும் செய்யவில்லை. எங்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கைவிடப்பட்ட மூதாட்டியை கவனித்துக் கொள்வேன். அவருடைய அறையைச் சுத்தம் செய்து, அவருக்கு வேண்டியதையெல்லாம் செய்துதருவேன். அவ்வளவுதான் நான் செய்த நல்ல காரியங்கள்" என்றான். உடனே வானதூதர் கையிலிருந்த புத்தகத்தை விரித்துப் பார்த்து, "நீ செய்தது சிறிய, சிறிய இரக்கச் செயல்களாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் நீ உள்ளார்ந்த அன்போடு செய்தாய். யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காகச் செய்யவில்லை. அதனால் நீ சொர்க்கத்திற்குள் செல்" என்றார்.

திடிரென்று பக்கத்தில் சத்தம் கேட்கவும் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தான் அந்த இளைஞன். அன்று முதல் தன்னுடைய வீட்டிலிருந்த வயதான தாய் தந்தையை பராமரிப்பதிலும், அவர்களுக்கு வேண்டியதைச் செய்யவும் கண்ணும் கருத்துமாய் இருந்தான்.

நாம் மேற்கொள்ளும் பக்தி முயற்சிகளோ, தவமுயற்சிகளோ அல்ல, மாறாக நாம் செய்யும் இரக்கச் செயல்கள்தான் நம்மை விண்ணகத்திற்கு கூட்டிச் செல்லும் என்பதை இந்த கதையானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம். நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள்" என்று கடுமையாகச் சாடுகிறார்.

பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் வெளி அடையாளங்களைச் செய்து மக்கள் தங்களைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் தங்களோடு வாழ்ந்த ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் யாவரையும் கடுமையாக ஒடுக்கினார்கள். லூக்கா நற்செய்தியில் வரும் இதன் ஒத்தமைப் பகுதியில் இது தெளிவாக வெளிப்படுகிறது. "மறைநூல் அறிஞர்கள் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல் நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே" என்கிறார். (லூக் 20:47) ஆக, பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் வழிப்பாட்டுக்கும், வாழ்வுக்கு பாரதூர வித்தியாசம் இருந்தது இங்கே வெட்ட வெளிச்சமாகிறது.

பல நேரங்களில் நாமும் கூட இந்த பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களைப் போன்று சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்து கூறுவார், "நீங்கள் கிண்ணத்தையும், தட்டையும் வெளிப்புறத்தில் தூயமையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருட்களாலும், தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்" என்று. ஆம், நாம் இரக்கமும், நீதியும் உள்ள மக்களாக வாழவேண்டும் என்றால் அதற்கு நம்முடைய உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உள்ளம் /உள்ளே தூய்மையாக இருக்கும்போது, எல்லாம் நன்றாக இருக்கும்.

ஆகவே, வெளிவேடத்தை அகற்றி, தூய்மையான உள்ளத்தினராய் அடுத்தவர்மட்டில் இரக்கமுள்ளவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"இவற்றைக் கண்டிப்பாய்க் கடைபிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது"

அன்று கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. ஒரு தாய் தன்னுடைய பத்து வயது மகனைக் கூட்டிக்கொண்டு ஆலயத்திற்குப் போனாள். ஆலயத்தினுள் அழகுற அமைக்கப்பட்டிருந்த குடிலுக்கு முன்பாகச் சென்று, "இதோ இயேசு பாலன். தொட்டுக் குப்பிட்டுக் கொள்" என்றாள். "இந்த பொம்மையா இயேசு பாலன்? இதையா தொட்டுக் கும்பிட வேண்டும்?" என்று மகன் தாயைப் பார்த்து மிகவும் பாவமாகக் கேட்டான். "அப்படியெல்லாம் பேசக்கூடாது. இல்லையென்றால் இயேசு பாலன் உன்னை அடித்துவிடுவார்" என்று தாய் சொல்ல, மகன் வேறு வழியில்லாமல் தொட்டுக் குப்பிட்டுக் கொண்டான்.

பின்னர் அவர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். அப்போது சிறுவன் ஒருவன் ஓடிவந்து இவனுடைய கையை வாஞ்சையோடு பிடித்தான். அவனோ இந்தச் சிறுவனுடைய நெருங்கிய நண்பன். ஆனால் அவன் ஏழையாக இருந்ததால் அவனுடைய சட்டையெல்லாம் அழுக்குப் படிந்திருந்தது. இதைப் பார்த்த அந்தத் தாய் தன் மகனின் கையை அந்த ஏழைச் சிறுவனிடமிருந்து வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டு வேகவேகமாக நடந்தாள்.

இதைச் சற்றும் எதிர்பாராத சிறுவன், "ஏனம்மா என்னுடைய கையை இப்படி வெடுக்கென பிடுங்கினீர்கள்? அவன் என்னுடைய நெருங்கிய நண்பன்" என்றான். அதற்கு அவனுடைய தாய், "அவன் உன்னுடைய நண்பனாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவனுடைய தோற்றமே சரியில்லை. அதனால்தான் அவனிடமிருந்து உன்னுடைய கையைப் பிடுங்கினேன்" என்றாள். சிறிதுநேரம் எதுவும் பேசாமல் வந்த சிறுவன் மெல்ல பேசத் தொடங்கினான். "சாதாரண பொம்மையில் இயேசு பாலன் இருப்பதாகச் சொல்லும் நீங்கள், என்னுடைய நண்பனும் ஒரு மனிதன்தான் என ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றான். இதற்கு அவனுடைய தாயால் ஒன்றும் பேச முடியவில்லை.

ஆண்டவருக்கும் ஆலய வழிபாடுகளுக்கும் அதிகமாக முக்கியத்துவம் தருபவர்கள், கண்முன்னாலே இருக்கும் மனிதர்களை அன்பு செய்யாமல் இருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. இத்தகைய வெளிவேடத்தைத்தான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கடுமையாக எதிர்க்கின்றார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களிடம் இருந்த வெளிவேடத்தைக் கடுமையாகச் சாடுகின்றார். இன்றைய நற்செயதி வாசகத்திலும் அது தொடர்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து இரண்டு காரியங்களுக்காக மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் கடுமையாகச் சாடுகின்றார். ஒன்று, அவர்கள் வழிபாட்டிற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை சகமனிதர்களுக்கு கொடுக்காததற்காக. இரண்டு உள்ளக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு, மக்களுக்கு முன்பாக வேறொரு வாழக்கை வாழ்ந்ததற்காக. இப்போது இந்த இரண்டையும் குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.

நிலத்தில் விளைந்தவற்றில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாகக் கொடுக்கவேண்டும் என்று சட்டம் சொல்கின்றது (இச 14:22). இதனை மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் மிக நுணுக்கமாகக் கடைபிடித்தார்கள். ஆனால், திருச்சட்டத்தின் அடிநாதமாக இருக்கக்கூடிய நீதியையும் இரக்கத்தையும் அவர்கள் கடைபிடிக்க மறந்துபோனார்கள். மாறாக அவர்கள் ஏழை எளியவரை நசுக்கி, கைம்பெண்களின் வீடுகளை அபகரித்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களிடம் பத்தில் ஒரு பகுதி காணிக்கையாகச் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், நீதியையும் இரக்கத்தையும் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார்.

அடுத்ததாக மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் வெளிப்புறத்தை அழகாக வைத்திருப்பதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அவர்களின் உள்ளேயே தீய எண்ணங்களையும் தீய சிந்தனைகளையும் தேக்கி வைத்திருந்தார்கள். யாருடைய பொருளை எப்படி அபகரிக்கலாம், யாரை எப்படி வீழ்த்தலாம் என்பதுதான் அவர்களுடைய சிந்தனையாக இருந்தது. அதனாலும் ஆண்டவர் இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

மனிதவாழ்க்கை அல்லது கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வெறுமனே சட்டங்களை மிக நுணுக்கமாக கடைபிடிப்பது மட்டும் கிடையாது. சக மனிதரிடத்தில் நாம் காட்டுகின்ற அன்பு இரக்கம் இவற்றில் அடங்கி இருக்கின்றது. நாம் நம்மோடு வாழக்கூடிய சக மனிதரிடத்தில் அன்பும் அக்கறையும் செலுத்தாமல், இறைவனை வழிபடுவதால் மட்டும் என்ன நன்மை கிடைத்துவிடப்போகின்றது?. மேலும் நம்மிடத்தில் உண்மைத் தன்மையானது இருக்கவேண்டும். ஊருக்காக ஒரு வாழ்வும் நமக்காக ஒரு வாழ்வுமாக இரட்டைத் தன்மையோடு வாழ்கின்ற வாழ்க்கை ஒருபோதும் இறைவனுக்கு ஏற்றதாக இராது.

ஆகவே, சட்டங்கள், சடங்குகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவை சக மனிதர்களுக்கும் கொடுப்போம். இறைவனுக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இயேசு, "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!  ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள்.  ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும்  தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்" என்றார். (மத்தேயு 23:25)

-- நாடகத்தில் ஒருவர் அரசராகவோ, அமைச்சராகவோ, படைத்தலைவராகவோ, ஏவலாளாகவோ நடிக்கலாம். ஆனால் நாடகம் முடிந்ததும் அவர் தன்னுடைய அன்றாட வாழ்க்கை முறைக்குத் திரும்பி விடுவார். இயேசு குறிப்பிடுகின்ற "வெளிவேடம்" இதுபோன்றதுதான். பரிசேயரும் மறைநூல் அறிஞரும் மக்கள்முன் நல்லவர்கள்போல் நடிக்கிறார்களே தவிர உண்மையிலேயே நல்லவர்களாகச் செயல்படவில்லை என இயேசு குற்றம் சாட்டுகிறார். எல்லாப் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் வேண்டுமென்றே மக்களைத் திசைதிருப்பினார்கள் என்றோ, அவர்களை ஏய்த்துப் பிழைத்தார்கள் என்றோ நாம் கூற முடியாது. ஆனால் பொதுவாக அவர்கள் தாங்கள் நல்லதையே செய்வதாக நினைத்துக் கொண்டு, உண்மையில் தங்களையே ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் என இயேசு சுட்டிக்காட்டுகிறார். சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக் கடைப்பிடித்த அவர்கள் உண்மையிலேயே கனமான காரியங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். தூய்மை சார்பான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நிறைவேற்றினால் போதும், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகிவிடலாம் என நினைத்த அவர்கள் உண்மையிலேயே கருத்தில் கொள்ளவேண்டிய முதன்மைகளைப் புறக்கணித்துவிட்டுத் தங்களை நல்லவர்கள் என நினைத்துக்கொண்டார்கள். வெளித்தூய்மையில் கண்ணும் கருத்துமாக இருந்த அவர்கள் உண்மையான தூய்மை என்பது மனித இதயத்தை மாசின்றிக் காப்பதில் அடங்கும் என்பதை மறந்துவிட்டார்கள். ஆக, மனித உள்ளத்தில் அன்பும் இரக்கமும் பரிவும் பாசமும் நீதியும் நேர்மையும் இல்லாவிட்டால் அது மாசடைந்து பாழ்பட்ட வீடு போல ஆகிவிடும் என இயேசு உணர்த்துகிறார் (மத் 23:25).

-- மனிதரை மாசுபடுத்துகின்றவை உள்ளத்திலிருந்து எழுகின்ற தீய சிந்தனைகளும் அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய செயல்களுமே என இயேசு வழங்குகின்ற போதனை நமக்கும் பொருந்தும் (காண்க: மத் 15:18-19). எனவே நாம் தூய சிந்தனையை நம்மில் வளர்த்திட வேண்டும். எண்ணத்தில் தூய்மையிருந்தால் நாம் சிந்திக்கின்ற பாணிகளும் நலமாக இருக்கும். நம் சிந்தனையிலிருந்து எழுகின்ற செயல்களும் நல்லவையாக இருக்கும். வெளிச்சடங்குகளைத் துல்லியமாக நிறைவேற்றிவிட்டால் கடவுளுக்கு ஏற்புடையவராகிவிடலாம் என நினைப்பவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிற பரிசேயருக்கு ஒப்பானவர்களே. மாறாக, உள்ளத்தில் தூய்மையை வளர்த்துக்கொண்டு, "நீதி, இரக்கம், நம்பிக்கை" ஆகிய "முக்கிய போதனைகளை" நாம் கடைப்பிடித்தால் (மத் 23:23) கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ்வோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!