Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        27  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 21ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் (1: 1-5, 11b-12)

நம் தந்தையாகிய கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உரிய தெசலோனிக்கத் திருச்சபைக்குப் பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

சகோதரர் சகோதரிகளே! உங்கள் பொருட்டுக் கடவுளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஓங்கி வளருகின்றது; நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு பெருகி வழிகிறது.

ஆகவேதான் நாங்கள் கடவுளின் சபைகளில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறோம்; உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும் நம்பிக்கையையும் முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம்.

இவை, கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன. இவை அனத்தின் விளைவாக நீங்கள் இறையாட்சிக்குத் தகுதி உள்ளவர்கள் ஆவீர்கள். இந்த ஆட்சிக்காகவே நீங்கள் துன்புறுகிறீர்கள். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவர் ஆக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக!

இவ்வாறு நம் கடவுளும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும், அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 96: 1-2a. 2b-3. 4-5 (பல்லவி: 3b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2ய ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்.
-பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
-பல்லவி

4 ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.
5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 10: 27)

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு!

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (23: 13-22)

அக்காலத்தில் இயேசு கூறியது: "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களை விட இரு மடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.

குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா? யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.

குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா? எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன் மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார். திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார். வானத்தின்மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முன்மாதிரியான வழிகாட்டிகளாக...

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் சிமியோன் (1759 - 1836) என்பவர் மிகச் சிறந்த பேச்சாளர், மறைபோதகரும்கூட. ஆனால் அவர் மக்களிடத்தில் மிகவும் கடினமான வார்த்தைகளை உபயோகிப்பவராகவும், எப்போதும் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். மக்களுக்கு அவருடைய போதனை பிடித்த அளவுக்கு அவரைப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை.

ஒருநாள் அவர் தன்னுடைய நெருங்கிய நண்பரின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார். நண்பரும் அவரை இன்முகத்தோடு வரவேற்று விருந்து உபசரித்தார். நண்பருடைய வீட்டிலிருந்த குழந்தைகள் சார்லஸ் சிமியோனோடு பேசிக்கொண்டிருந்தன. ஆனால் சிறுதுநேரத்திலேயே அவருடனான பேச்சு அவர்களுக்கு பிடிக்காமல் போகவே அவர்கள் அவரிடமிருந்து விலகிச் சென்றார்கள்.

பின்னர் அவர்கள் தங்களுடைய தந்தையை அழைத்து, சார்லஸ் சிமியோனைப் பற்றிய தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

உடனே அவர் தன்னுடைய குழந்தைகளை வீட்டுத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே இருந்த ஒரு மரத்தின் காய்களை பறித்துத் தந்து சாப்பிடச் சொன்னார். அதற்கு அவருடைய குழந்தைகள் அவரிடம், "யாராவது மரத்தின் காய்களைச் சாப்பிடுவார்களா? காய் கனிந்து பழமாக மாறினால்தானே சாப்பிட நன்றாக இருக்கும்" என்றார்கள். அதற்கு அந்த நண்பர், "இன்னும் ஒருசில நாட்களில் இந்த காயானது கனிந்து நல்ல பழமாகும், அப்போது இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். எப்படி என்னுடைய நண்பர் கரடு முரடாக இருந்து கனிவாக மாறுவாரோ அது போன்று இந்த காயும் கனிந்து நல்ல பழமாக மாறும்" என்று சொன்னார்.

இதை வீட்டுக்குள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த சார்லஸ் சிமியோன் தன்னுடைய தவற்றை உணர்ந்தார். தான் இனிமேலும் அடுத்தவரிடம் கடினமாக நடந்து கொள்ளமாட்டேன் என்றும், தற்பெருமை பேசமாட்டேன் என்றும் உறுதிபூண்டு, சில மாதங்களிலே எல்லாருக்கும் பிடித்தமான ஒரு மறைபோதகராக மாறினார்.

மக்களை வழிநடத்தும் தலைவர்கள், மறைப்பணியாளர்கள் பிறருக்குத் தடைகல்லாக இல்லாமல், முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு அன்றைய காலத்தில் மக்களின் தலைவர்களாக இருந்த மறைநூல் அறிஞர்களை, பரிசேயர்களை கடுமையாகச் சாடுகின்றார். எதற்காக என்றால் அவர்கள் மக்களுக்கு படிக்கட்டுகளாக இல்லாமல், தடைகற்களாக இருந்ததே காரணமாகும்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கூறுவார், "நீங்கள் மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை. நுழைவோரையும் விடுவதில்லை" என்று. மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் கடவுளுடைய வார்த்தையையும், போதனையையும் எடுத்துச் சொல்லி, மக்களை கடவுளின் பக்கம் கூட்டிக்கொண்டு வரவேண்டும். ஆனால் அவர்கள் செய்ததோ முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் தங்களுடைய பெயர் விளங்க வெளிவேடத்தனமாக நடந்துகொண்டார்களே ஒழிய, மக்களுக்கு இறைவனின் வார்த்தையைப் போதிக்கவுமில்லை, நல்ல தலைவர்களாக இருந்ததுமில்லை.

அடுத்ததாக மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் குருட்டு வழிகாட்டிகளாக இருந்தார்களே ஒழிய, மக்களை நல்வழியில் நடத்தவில்லை. அதனாலும் அவர்கள் இயேசுவின் சினத்திற்கு ஆளாகுகிறார்கள்.

"மக்கள் தங்களைத் தாங்களே வழி நடத்திக்கொள்ள யார் வழிகாட்டுகிறார்களோ அவர்தான் மிகச் சிறந்த தலைவர்" என்பார் மேன்டவி கூர்கன் என்ற அறிஞர். அந்த வகையில் பார்க்கும்போது மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் மக்களை நல்வழியில் நடத்தும் பொறுப்பிலிருந்து விலகி, தங்களுடைய பெயர்விளங்க எல்லா காரியத்தையும் செய்தார்கள். அதனால்தான் அவர்கள் இயேசுவின் சினத்திற்கு ஆளாகுகின்றார்கள்.

ஆகவே, தலைவர்களாக, பொறுப்பாளர்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் மக்களை வாழ்வில் முன்னேற்றும் அதே நேரத்தில், அவர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும்.

இந்த நேரத்தில் நாம் இயேசு எப்படி மிகச் சிறந்த தலைவராகவும், வழிகாட்டியாவும் இருந்தார் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு ஒரு நல்ல ஆயனாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகது. ஆடுகளாகிய நாம் எந்த வழியில் நடக்கவேண்டும், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்பதை எல்லாம் நமக்குக் கற்றுத்தருகிறார். அதனை தன்னுடைய வாழ்ந்துகாட்டி, ஆடுகளாகிய நாம் வாழ்வுபெற தன்னுடிய உயிரையும் தந்தார் (யோவான் 10:10).

எனவே நாம் இயேசு வாழ்ந்துகாட்டிய முன்மாதிரியைப் பின்பற்றி, மக்களின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருப்போம், சிறந்த வழிகாட்டியாக விளங்குவோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
வெளிவேடங்களை அகற்றி, உள்ளார்ந்த அன்புடன் வாழ்வோம்

ஒரு கிராமத்தில் பரம ஏழை ஒருவர் இருந்தார். அவர் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.

இதற்கிடையில் ஒருநாள் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், "நீங்கள் படும் கஷ்டத்தை நான் என் கண்ணால் கண்டேன். அது எனக்குத் தாங்காத துயரத்தைத் தந்தது. ஆகவே, இன்றிலிருந்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு என்னால் முடிந்த அளவு ஒருசிறு தொகையை அனுப்பி வைக்கின்றேன். அதை வைத்துக்கொண்டு நீங்கள் சந்தோசமாக இருங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. அக்கடிதத்தை வாசித்ததும் அவர் மிகுந்த சந்தோசமடைந்தார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை காசோலையாக வந்தது. அதைப் பெற்றுக் கொண்டு அந்த பரம ஏழை சந்தோசமாக தன்னுடைய வாழ்வினை ஓட்டி வந்தார். இப்படி நாட்கள் ஓடிக்கொண்டிருக்க, ஒருநாள் அவருக்கும் அவருடைய பக்கத்து வீட்டுக் காரருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றி, கலகலப்பு, அடிதடி என்று சண்டை முற்றி, கடைசியில் அது கொலையில் போய் முடிந்தது. ஆம், சண்டையில் அந்த பரம ஏழை பக்கத்து வீட்டுக்காரரை அடித்தே கொன்றுவிட்டார்.

அந்த கொலைக்குப் பின்பு மாதந்தோறும் அந்த பரம ஏழைக்கு வரக்கூடிய காசோலை நின்றுபோனது. ஏனென்று விசாரித்துப் பார்த்த பிறகு தெரிந்தது, அவருக்கு ஒவ்வொருக்கும் மாதமும் பணம் அனுப்பியவர் அவர் அடித்துக் கொன்றுபோட்ட அவருடைய பக்கத்து வீட்டுக்காரர்தான் என்று. "வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாதிருக்கட்டும் என்பதுபோல் யாருக்கும் தெரியாமல் பெரிய மனது வைத்து எனக்கு உதவி செய்துவந்த இந்த நல்லவரையா இப்படிக் கொன்றுபோட்டேன்" என்று அவர் கண்ணீர் சிந்தி அழுதார்.

எந்தவொரு ஆடம்பரமோ, விளம்பரமோ இல்லாமல், யாருக்கும் தெரியாமல் உதவிசெய்து வந்த அந்த நல்ல மனிதரைப் போல், இன்று மனிதர்களைக் காண்பது அரிது. ஏனென்றால் இன்றைக்கு உதவி என்ற பெயரில் விளம்பரம் வெளிவேடமும்தான் நடைபெறுகின்றதே ஒழியே அதில் உண்மைத்தன்மை இல்லை. இத்தகைய சூழலில், இன்றைய இறைவார்த்தை நமக்குக் எடுத்துச் சொல்லும் செய்தியை சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் கடுமையாகச் சாடுகின்றார். அவர் அவர்களைச் சாடுகின்ற விதமே வித்தியாசமாக இருக்கின்றது. "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே ஐயோ! உங்களுக்குக் கேடு!" என்பதாகத்தான் இருக்கின்றது இயேசு சாடல். வெளிவேடம் என்றால், அவர்கள் மக்களுக்காக ஒரு வாழ்க்கையும் உண்மையில் ஒரு வாழ்க்கையும் வாழ்ந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இதனை வேறுவிதமாகச் சொல்லவேண்டும் என்றால், மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் உள்ளுக்குள் பொய்யையும் போலித்தனத்தையும் வைத்துக்கொண்டு, வெளியே நல்லவர்கள்போல் நடமாடினார்கள். அதனால்தான் இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் வெளிவேடத்திற்கு ஒரு நல்ல எடுத்தக்காட்டாக நற்செய்தியில் இயேசு ஒன்றைச் சொல்கின்றார். அதுதான் அவர்கள் புதியவர்களைத் தங்களுடைய மதத்தில் சேர்த்துக்கொண்டு அவர்களுடைய அழிவிற்குக் காரணமாக இருந்தது. மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் தங்களுடைய மதம் உயர்ந்தது என்று மக்களிடத்தில் பம்மாத்து காட்டி, பலரை தங்களுடைய மதத்தில் சேர்ந்தார்கள். ஆனால், அவர்களுடைய மீட்புக்குக் காரணமாக இல்லாமல், அவர்களுடைய அழிவிற்குக் காரணமாக இருந்ததுதான் வேதனை கலந்த உண்மை.

இங்கு நமது வாழ்வையும் சிறிது ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும். அன்றைக்கு மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் எப்படி கடவுளுக்கும் உண்மையில்லாமல் தங்களுக்கும் உண்மையில்லாமல் மக்களுக்காகப் போலியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்களோ, அதுபோல இன்றைக்கு நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இத்தகைய வாழக்கையைத் தவிர்த்து என்றைக்கு உண்மையான வாழ்க்கையை, அடுத்தவர் மட்டும் கரிசனை கொண்ட வாழ்க்கையை வாழப்போகின்றோம் என்று நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

"உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்போது உங்கள் நற்செயல்களைக் கண்டு, மக்கள் உங்கள் விண்ணகத்தந்தையைப் போற்றிப் புகழ்வர்" (மத் 5:16) என்பார் இயேசு. ஆம், நமது வாழ்க்கை பலருக்கும் ஒளிதரக்கூடியதாக இருக்கவேண்டுமே ஒழிய, யாருக்கும் இடறலாக இருக்கக்கூடாது. அப்படி நமது வாழ்க்கை ஒளிதரக்கூடியதாக இருக்கும்போது, நாம் இறைவனுக்குப் பெருமை சேர்க்கின்றோம் என்பது உறுதி.

ஆகவே, நமது வாழ்வில் வெளிவேடங்களை அகற்றி, உள்ளார்ந்த அன்போடு ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துவாழ்வோம். நமது வாழ்வால் இறைவனுக்குப் பெருமை சேர்ப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே,
...நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை" (மத்தேயு 23:13-14)

-- இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தபோது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பலர். அவர்கள் நடுவே யூத சமயத்தின் நுணுக்கங்களைத் தெரிந்த மறைநூல் அறிஞரும், சமய நெறிகளைத் துல்லியமாகக் கடைப்பிடித்துவந்த பரிசேயரும் இருந்தனர். அவர்களைப் பார்த்து இயேசு கூறிய வார்த்தைகள் உண்மையிலேயே கடினமானவை. அவர்களை இயேசு "வெளிவேடக்காரர்கள்" என்று கூறிக் கடிந்துகொண்டார். சமய நெறியை விளக்குகிறோம் என்று சொல்லி மக்கள்மீது கடினமான சுமையைச் சுமத்திவிட்டு, தாங்கள் மட்டும் அந்த நெறிப்படி நடக்காமல் இருந்த அந்த வெளிவேடக்காரர்களைப் பின்பற்றலாகாது என்று இயேசு கூறினார். அவர்களுடைய தவறான செயல்பாட்டைச் சுட்டிக்காட்டிய இயேசு அவர்கள் விண்ணரசில் நுழைவதுமில்லை, விண்ணரசில் நுழைய விரும்புவோரை விடுவதுமில்லை என்றுகூறிக் கடிந்தார். இக்கருத்தைக் கவிதையாக வடித்த கண்ணதாசன் இயேசுவின் எதிரிகளை "வைக்கோற் போரில் படுத்த நாய்"க்கு ஒப்பிடுவது கருதத்தக்கது:

"வைக்கோற் போரில் படுத்த நாய்போல்
தானுண்ணாமல் உண்ண விடாமல்
தடுக்கும் உமக்கு ஐயோ கேடு!" (இயேசு காவியம், பாடல் எண் 108, பக். 283).

-- பிறருக்கு நல்லதே செய்ய வேண்டும் என இயேசு வழங்கிய போதனையை மறந்துவிட்டு அவர்களுக்குத் தீங்கிழைக்க முனைவோர் இயேசுவின் வழியில் நடக்க மறுக்கின்றனர். அவர்கள் நல்லது செய்வதுமில்லை, பிறர் நல்லது செய்ய விடுவதுமில்லை. இத்தகையோர் நடக்கும் வழி அழிவுக்கே இட்டுச்செல்லும். மாறாக, இயேசுவைப் போல நாமும் பிறருக்காக வாழ்ந்தால் விண்ணரசில் புகுந்திடத் தகுதி பெறுவோம்.

---JDH--- தெய்வீக குணமளிக்கும் இயேசு/திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!