Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     26 ஆகஸ்டு 2018  
                                         பொதுக்காலம் 21ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாங்களும் அவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்.

யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 1-2a,15-17,18b

அந்நாள்களில் செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர்.

யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: "ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்."

மக்கள் மறுமொழியாக, "ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்" என்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் (திபா 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. 16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். பல்லவி

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். பல்லவி

19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். 20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. பல்லவி

21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
திருமணத்தில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்தும்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-32

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்.

ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.

திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்.

ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.

அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவர் ஆவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார்.

ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். "இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்" என மறைநூல் கூறுகிறது. இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( யோவா 6: 63b,68b)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69

அக்காலத்தில் இயேசு சொல்வதைக் கேட்டு அவருடைய சீடர் பலர், "இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிக் கொண்டனர்.

இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிட மகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?

வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை" என்றார்.

நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.

மேலும் அவர், "இதன் காரணமாகத்தான் "என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது" என்று உங்களுக்குக் கூறினேன்" என்றார்.

அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.

இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

"அனைவரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்"


மாமன்னர் ஐந்தாம் சார்லசின் (1519- 1558) அரண்மனையில் அவருக்குப் பிடித்த சேவகர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் ஒருநாள் நோயில் விழுந்து படுத்தபடுக்கையானார்.

அவரைப் பார்க்கச் சென்ற மன்னர், படுக்கையில் கிடந்த சேவகரின் கையைப் பிடித்துக்கொண்டு சிறிதுநேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த சேவகரிடம், "ஐயா! நீங்கள் எனக்கு மிகவும் அற்புதமாகப் பணியாற்றி இருக்கிறீர்கள். அதை நினைத்து நான் எப்போதும் மகிழ்ச்சியடைவது உண்டு. இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு வாய்ப்புத் தருகின்றேன். நீங்கள் என்னிடத்தில் எதுவேண்டுமானாலும் கேளுங்கள். நான் அதை உங்களுக்குத் தருகின்றேன்" என்றார்.

சிறுதுநேரம் அமைதியாக இருந்த அந்த சேவகர், "நான் கேட்கும் எதை வேண்டுமானாலும் நீங்கள தருவீர்களா? அப்படியானால், என்னுடைய வாழ்நாளை இன்னும் ஒருநாள் கூட்டித் தாருங்கள்" என்றார். அதற்கு அரசர், "நான் மிகப்பெரிய அரசனாக இருக்கலாம் ஆனால், உன்னுடைய வாழ்நாளை இன்னும் ஒருநாள் கூட்டித் தர என்னால் முடியாது, அது கடவுளால்தான் முடியும்" என்றார். அதுவரைக்கும் அமைதியாகப் பேசிக்கொண்டிருந்த அந்த சேவகர், "என்னுடைய வாழ்நாளை இன்னும் ஒருநாள் கூட்டமுடியாத அரசருக்குத்தான் இத்தனை ஆண்டுகளும் பணி செய்தேனா?, நான் எவ்வளவு பெரிய முட்டாள்!, ஒருவேளை நான்மட்டும் வாழ்நாள்களைக் கூட்டித் தருகின்ற ஆண்டவருக்குப் பணி செய்திருந்தால், என்னுடைய வாழ்க்கை எத்துணை அர்த்தமள்ளதாக இருந்திருந்திருக்கும்?, அத்தகைய வாய்ப்பினை நான் இழந்துவிட்டேனே" என்று மிக வருத்தத்தோடு சொன்னார்.

மனிதருக்குப் பணி செய்வதால் ஒருவருக்கு மனநிறைவும் அமைதியும் கிடைக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், ஆண்டவருக்கு பணி செய்தால்/ ஊழியம் செய்தால் நிச்சயம் ஆசிர்வாதம் உண்டு என்பதை உறுதியாகச் சொல்லலாம். பொதுக்காலம் இருப்பத்தியோறாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் "ஆண்டவருக்கே ஊழியம் புரியுங்கள்" என்னும் சிந்தனையைத் தருவதாக இருக்கின்றன. நாம் அதைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மனிதர்களாக நாம் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்றாரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆனால், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அப்படிப்பட்டதாய் இருக்கக்கூடாது. ஏனென்றால், ஆண்டவர் இயேசு கூறுவார், "எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை புரிய முடியாது" என்று (லூக் 16:13). நாம் கடவுளுக்குப் பணிவிடை புரியும் பட்சத்தில் உலகிற்கும் அதன் தலைவர்களுக்கும் பணிவிடை புரிய முடியாது, அதே நேரத்தில் உலகிற்கும் அதன் தலைவர்களுக்கும் பணிவிடை புரியும் பட்சத்தில், நம்மால் கடவுளுக்குப் பணிவிடை புரியாது. நாம் யாருக்குப் பணிபுரிகின்றோம் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

யோசுவா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் யோசுவா மக்களைப் பார்த்துச் சொல்வார், "ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்துவந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்கள் இப்போது முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால், நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்". யோசுவா இவ்வாறு சொன்னதைக் கேட்டு, இஸ்ரயேல் மக்கள், "நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். அவரே எங்கள் கடவுள்" என்கின்றார்கள்.

இஸ்ரயேல் மக்கள் உண்மைக் கடவுளான யாவே கடவுளுக்குப் பணிந்து, அவருக்கு மட்டுமே ஊழியம் செய்த நாட்களில் எல்லாம் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டார்கள், அதே நேரத்தில் அவர்கள் யாவே இறைவனை மறந்து பிற தெய்வங்களை வழிபட்டபோது அசீரியர்கள், பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானார்கள் என்பதை விவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. எனவே, இஸ்ரயேல் மக்களின் வாழ்வும் தாழ்வும் அவர்கள் கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருந்து, அவருக்கு ஊழியம் செய்ததைப் பொறுத்து அடங்கி இருந்தது என்பதை நாம் மிக உறுதியாகச் சொல்லலாம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் உயிருள்ள உணவாக, பானமாகச் சொன்னபோது, அவருடைய சீடர்களில் சிலர், "இது மிதமிஞ்சிய பேச்சாக இருக்கின்றதே, இதை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது?" என்று சொல்லி, அவரைவிட்டுப் பிரிந்து போகின்றார்கள். அப்போது இயேசு தனக்கு நெருக்கமாக இருந்த திருத்தூதர்களிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கின்றார். அதற்கு திருத்தூதர்களின் தலைவராகிய பேதுருவோ, "ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம், நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என்று சொல்லி பிரமாணிக்கத்தை வெளிப்படுத்தினார். அதன்பிறகு திருத்தூதர்கள் இயேசுவோடு இறுதி வரைக்கும் உடனிருந்தார்கள் இருந்தார்கள். என்பது நாம் அறிந்த செய்தியாகும். ஆகவே, நாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்கின்றோம் என்று சொன்னால், அவருக்கு இறுதி வரைக்கும் பிரமாணிக்கமாய், விசுவாசமாய் இருக்கவேண்டும் என்பதுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டிய முதன்மையான செய்தியாக இருக்கின்றது.

ஆண்டவருக்கு ஊழியம் செய்வதில் இருக்கின்ற இரண்டாவது முக்கியமான உண்மை கீழ்ப்படிதல் ஆகும். கீழ்ப்படிதல் என்று சொன்னால், ஆண்டவரின் வார்த்தைகளுக்கு அப்படியே கட்டுப்பட்டு நடத்தல் ஆகும். பழைய ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமைப் பார்த்து, நான் உனக்குக் காட்டும் ஊருக்குப் போ என்று சொன்னதும், அவர் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், அப்படியே போகின்றார். அந்த ஊரில் உள்ள மக்கள் எப்படி, அங்கு உயிர்வாழ முடியுமா? என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. ஆண்டவர் சொல்லிவிட்டார், அதனால் போவோம் என்று போகின்றார். இவ்வாறு அவர் கீழ்படிதலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். ஆண்டவருக்கு நம்மையே அர்ப்பணித்தும் வாழும் வாழ்வில் கீழ்ப்படிதல் என்பது மிகவும் தேவையாக இருக்கின்றது. பவுலடியார் இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில், "கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்" என்று கூறுகின்றார். ஆம், நாம் ஆண்டவருக்கு அஞ்சி கீழ்படிந்தோ அல்லது பணிந்தோ நடக்கின்றபோது அதனால் நம்முடைய வாழ்க்கையில் கிடைக்கின்ற ஆசிர்வாதங்கள் ஏராளம்.

ஆண்டவருக்கு நம்மையே நாம் அர்ப்பணித்து வாழும் பிரமாணிக்கமான வாழ்க்கையில் மூன்றாவதாக நம்முடைய மனதில் கொள்ளவேண்டிய உண்மை அன்பு என்பதாகும். நம்முடைய உள்ளத்தில் அன்பில்லாமல், ஆண்டவருக்கு நம்மை அர்ப்பணித்து, அவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதனால் என்ன புண்ணியம் கிடைத்துவிடப்போகிறது?. அன்பில்லாமல் நாம் கடவுளுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தோம் என்றால், அது பெயருக்கு அல்லது கடமைக்கு வாழ்கின்ற வாழ்க்கையாகிவிடும். மாறாக, உள்ளத்தில் அன்புகொண்டு, ஆண்டவருக்கு நம்மை முழுமையாய் அர்ப்பணித்து, அவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தோம் என்றால், நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், "கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியதுபோல" என்றொரு வார்த்தை வரும். ஆம், நாம் செய்கின்ற எந்த பணியினையும், யாரையும் கிறிஸ்து நம்மை அன்பு செய்ததுபோல அன்பு செய்தோம் என்றால், நம்முடைய அர்ப்பண வாழ்க்கை முழுமை பெறும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

அர்ப்பண வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய நான்காவது உண்மைதான் "இலட்சியத்திற்காக உயிர் தருதல்" ஆகும். ஆண்டவர் இயேசு இந்த உலகை மீட்கும் பணியை தன்னுடைய உயிரைத் தந்து நிறைவு செய்தார். அது போன்று நாமும் நம்முடைய அர்ப்பணத்திற்காக, ஆண்டவர் இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்காக உயிரைத் தருவதற்கு முன்வரவேண்டும். மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறுவார், "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கின்ற எவரும் வாழ்வடைவார்" (மத் 16: 24,25) என்று. ஆம், நாம் ஆண்டவருக்காக நம்முடைய வாழ்க்கையை இழக்கத் துணிகின்றபோதுதான் அதனைப் பெற்றுக்கொள்கின்றோம். அது மட்டுமல்லாமல் நாம் நம்முடைய அர்ப்பண வாழ்க்கையில் முழுமை பெறுகின்றோம்.

இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெர்சிய நாட்டில் சென்னேன் (Sennen) அப்டன் (Abdon) என்னும் இரண்டு செல்வந்தர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அந்தக் காலக் கட்டத்தில் கிறிஸ்துவை/ கிறிஸ்தவ நெறியைக் கடைப்பிடிப்போரை உரோமை அரசாங்கம் சித்ரவதை செய்து வந்தது. சொன்னேன், அப்டன் ஆகிய இருவரும் கிறிஸ்தவ நெறியைக் கடைப்பிடித்து வந்த செய்தி எப்படியோ உரோமை அரசாங்கத்திற்குத் தெரியவரவே, இராணுவம் அவர்கள் இவருடைய காலிலும் இரும்புச் சங்கிலியைக் கட்டி இழுத்துக்கொண்டு போய், உரோமை அரசனுக்கு முன்பாகப் நிறுத்தியது. அவர்கள் இருவரையும் விசாரித்த அரசன், அவர்கள் இருவரும் கிறிஸ்தவ நெறியைக் கடைபிடிப்பது உண்மை எனத் தெரிந்தது. எனவே, அரசன் அவர்களிடம், "நீங்கள் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு என்னை வணங்கினால், உங்களை விடுதலை செய்துவிடுவேன்" என்று சொன்னான். அதற்கு அவர்கள் இருவரும், "நாங்கள் இருவரும் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, உம்மை வணங்குவதற்குப் பதில் சாவதே மேல்" என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

அவர்கள் இருவரும் இவ்வாறு சொன்னதைக் கேட்ட அரசன் அவர்கள் இருவரையும் வாளுக்கு இரையாக்கினான். சென்னேன், அப்டன் இருவரும் செல்வம் படைத்தவர்கள், அவர்கள் கிறிஸ்துவை மறுத்தலித்து விட்டு வசதியாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கைக்காக உயிரையும் துறந்தார்கள். நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் மீதுகொண்ட நம்பிக்கைக்காக உயிரையும் இழக்கத் துணிவதுதான் மிகவும் சிறப்பானது.

எனவே, ஆண்டவருக்கு மட்டும் ஊழியம் புரியும் மக்களாவோம், அதற்காக நம்முடைய உயிரையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!