Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        25  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 20ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
ஆண்டவரின் மாட்சி கோவிலினுள் நுழைந்தது.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 43: 1-7a

அந்நாள்களில் மனிதர் ஒருவர் கோவிலின் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். இதோ "இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி' கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல் போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று. நான் கண்ட காட்சி, அவர் நகரை அழிக்க வந்தபோது நான் கண்டது போன்றும், கேபார் ஆற்றோரம் நான் கண்டது போன்றும் இருந்தது. நான் முகங்குப்புற விழுந்தேன். ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது.

பின்னர் ஆவி என்னைத் தூக்கி உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்றது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று. அம்மனிதர் என்னருகில் நிற்கையில் கோவிலிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன்.

அவர் உரைத்தது: "மானிடா! இது என் அரியணையின் இடம்; என் கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: 9b)
=================================================================================
பல்லவி: நம் நாட்டில் ஆண்டவரது மாட்சி குடிகொள்ளும்.

8ab ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( மத் 23: 9b, 10b )

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.

சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.

விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் "ரபி" என அழைப்பதையும் விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் "ரபி" என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

சிந்தனை
மிக அற்புதமான அறிவுரை.
உலகப் போக்குக்கு முற்றிலும் மாறான போதனை.
கடைப்பிடிக்க இயலாத போதனை என்று விட்டுவிடப்பட்ட பகுதித் தான்.
சொல்லில் செல்வர்கள். செயலிலும் மற்றவர்களை செய்ய வைத்து வேடிக்கைப் பார்க்கும் பணக்காரர்கள். போதகர், ரபி, தந்தை என அழைக்கப்பட வேண்டாம்.
ஆனால் இன்றைக்கு இதுவே நடந்தேறிக் கொண்டு இருக்கின்றது.
எனவே தான் இன்று ஊருக்குத் தான் உபதேசம் என்பது உண்மையாகின்றது.
என்றைக்கு இந்த வார்த்தை நமதாகின்றதோ அன்றைக்குத் தான் நாம் சாட்சிகளாவோம்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்படுவர்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1767 - 1859) இந்தியத் திருநாட்டில் மறைபோதகப் பணியைச் செய்தவர் வில்லியம் காரே (William Carey) என்ற அயல் நாட்டவர். இவர்தான் இந்தியாவில் அச்சுப் பதிப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகின்றார். ஏனென்றால் இவர் பிராந்திய மொழிகளில் முதல்முறையாக புத்தகங்களை, குறிப்பாக விவிலியத்தை அச்சிட்டுக் கொடுத்தவர்.

வில்லியம் காரே மறைபோதகப் பணியைச் செய்ததோடு மட்டுமல்லாமல், சமூகப் பணிகளையும் செய்தவர். கணவன் இறந்துவிட்டால், கணவனோடு சேர்ந்து மனைவியும் இறக்கவேண்டும் என்ற உடன்கட்டை ஏறுதல் போன்ற தீய நடவடிக்கைகளை இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான விதையைப் போட்டவர். இப்படி பல்வேறுபட்ட பணிகளைத் தன்னுடைய கையில் எடுத்து, அதனைச் செவ்வனே செய்துவந்தார் இவர்.

ஒருநாள் இவர் மரணப்படுக்கையில் கிடந்தபோது இவரைப் பார்க்க இவருடைய நெருங்கிய நண்பரான அலெக்ஸ் டுப் வந்தார். வந்தவர் வில்லியம் காரே செய்த பணிகளை எல்லாம் எடுத்துச்சொல்லி பாராட்டிக்கொண்டே போனார். எல்லாவற்றையும் அவர் அமைதியாகக் கேட்டுகொண்டே வந்தார்.

அவருடைய நண்பர் அவரிடமிருந்து விடைபெறும் நேரம் வந்ததும் வில்லியம் காரே அவரிடம், " நான் செய்ததாக எவ்வளவோ பணிகளை நீங்கள் அடுக்கிக்கொண்டே போனீர்கள். மிக்க மகிழ்ச்சி. ஆனால், இந்தப் பணிகளை எல்லாம் நான் மட்டும் செய்துவிடவில்லை. கடவுள்தான் என் வழியாய் செய்தார். அதனால் எல்லா பேரும், புகழும் சேரவேண்டியது எனக்கு அல்ல, என் வழியாகச் செயல்பட்ட இறைவனுக்கே" என்று மிகவும் தாழ்சியாகப் பதிலளித்தார்.

என்றைக்கு நாம் தாழ்ச்சியோடு நடந்துகொள்கிறோமோ, அன்றைக்கு நாம் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மறைநூல் அறிஞர்களையும், பரிசேயர்களையும் கடுமையாக விமர்சிக்கிறார். இயேசு பரிசேயர்களை இப்படி விமர்சிக்கும் இந்த நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளை எடுத்துக்கூருகிறது. நேர்மறையாக அல்ல, மாறாக எதிர்மறையாகக் கற்றுத்தருகிறது.

பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் "இதைச் செய், அதைச் செய்யாதே" என பல்வேறு சட்டங்களை மக்கள்மீது திணித்தார்கள். அவர்களோ அதைச் சிறிதும் அசைத்துப் பார்த்தத் துணியவில்லை. மேலும் பரிசேயர்கள், மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்தவேண்டும் என்றும், தகுந்த மரியாதை செலுத்தவேண்டும் என்றும் ரபி என அழைக்கப்படவும் விரும்பினார்கள். இதனால் இயேசு அவர்களுடைய வெளிவேடத்தனத்தைப் பார்த்து, அவர்களைச் சாடுகிறார்.

நாம் இந்த பரிசேயர்களைப் போன்று கொடிய சட்டங்களை மக்கள்மீது திணிக்காமல், தாழ்ச்சியோடு நடக்கவும் முன்வரவேண்டும்.

நற்செய்தியில் இயேசு சொல்லும் இன்னொரு உண்மை, "உங்களில் தலைவராக விரும்புகிறவர் தொண்டராக இருக்கட்டும்" என்பதே ஆகும். இந்த உலகில் பிறந்த எல்லாருமே தலைவராகத் தான் இருக்க விரும்புகிறார்கள். ஒரு அடிமைகூட தனக்குக் கீழே இன்னொரு அடிமை இருந்தால் நன்றாக இருக்கவேண்டும் என்றே விருபும்புகிறார். இத்தகைய பின்னணியில் நாம் இயேசு கூறிய உங்களில் தலைவராக இருக்க விரும்புகிறவர், உங்களுக்குத் தொண்டராக இருக்கட்டும் என்ற வார்த்தைகளை சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தொண்டராகப், பணியாளராக, மிகவும் தாழ்ச்சியோடு இருப்பது என்பது அவ்வளவு எளிதன்று. அதற்கு நிறைய தியாகங்களில் செய்யவேண்டும். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அப்படி இல்லை. அவர் சொன்னதைச் செய்துகாட்டினார். யோவான் நற்செய்தி 13:13 ல் வாசிக்கின்றோம், "நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே, ஆண்டவரும், போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என்று.

ஆகவே, நாம் இயேசுவைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய், ஒருவர் மற்றவருக்குப் பணிவிடை செய்துவாழவேண்டும். அப்போதுதான் கடவுள் நம்மை நிறைவாய் ஆசிர்வதிப்பார்.

"நாம் உயிர்நிலையில் இருக்கும்போது மிகவும் பணிவுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பார் சிசரோ என்ற அறிஞர். ஆகவே நாம் எந்த நிலையை அடைந்தாலும் தாழ்ச்சியை ஆடையாக அணிந்துகொள்வோம். சொல்வதை செயலில் காட்டாத பரிசேயர்களைப் போன்று அல்லாமல், சொல்வதைச் செய்துமுடிக்கும் இயேசுவைப் போன்று வாழ முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

"அடக்கம் ஒரு ஆபரணம் மட்டுமல்ல, நற்குணத்திற்கு ஒரு காவலன். ஜோசப் அடிசன்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
போதனைக்கேற்ற வாழ்க்கை!

பிரான்சு நாட்டில் புரட்சி வெடித்து ஓய்ந்திருந்த சமயம், அறிஞர் ஒருவர் புதிய மதத்தைத் தோற்றுவித்தார். அந்த மதம் இயேசு கிறிஸ்துவின் கருத்துகளையும் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ ஞானிகளின் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.

அவர் நினைத்தார், நாம் ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய மதம் பெரிய பெரிய மனிதர்களின் கருத்துகளையும் தத்துவார்த்த சிந்தனைகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதனால் இந்த மதத்தில் அறிவில் சிறந்த பெருமக்களும் ஏன் பொதுமக்களும் கட்டாயம் உறுப்பினர்களாய் சேருவார்கள் என்று. ஆனால் யாருமே அந்த மதத்தில் உறுப்பினராகச் சேரச் சேரவில்லை. இதனால் பெரிய ஏமாற்றமடைந்தார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய நண்பரிடத்தில் பேசிக்கொண்டிருந்தார். "சாதாரண மீன்பிடி தொழில் செய்துவந்த பன்னிரெண்டு சீடர்களை வைத்து இயேசு தொடங்கிய மதம் இன்றைக்கு உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. ஆனால் பெரிய பெரிய மனிதர்கள் கருத்துகளையும் சிந்தனைகளையும் உள்வாங்கிய்த் தொடங்கப்பட்ட என்னுடைய மதத்தில் யாரும் சேர முன்வரவில்லை? அது ஏன்?" என்று கேட்டார். அதற்கு அவருடைய நண்பர், "முதலில் நீ இயேசுவைப் போன்று மக்களுக்காக உயிர்தியாகம் செய்து, சிலுவையில் அறைந்து கொல்லப்படு, அவரைப் போன்று மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீ போதிப்பதை வாழ்வாக்கு. அப்போது உன்னுடைய மதத்தில் மக்கள் தன்னாலேயே சேர்வார்கள்" என்றார்.

ஆம், இன்றைக்கு போதனையாளர்களைவிடவும் போதித்து அதனை வாழ்வாக்குகின்றவர்களால் மட்டும்தான் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, பரிசேயர்களுக்கும் மறைநூல் அறிஞர்களுக்கும் எதிரான தன்னுடைய கண்டனக் குரலைப் பதிவுசெய்கின்றார். ஆண்டவர் இயேசு ஏன் அவர்களைச் சாடவேண்டும். அவர்கள் செய்த தவறு என்ன? அவற்றிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் செய்த முதல் தவறாக இயேசு சுட்டிக்காட்டுவது அவர்களுடைய முன்னுக்குப் பின் முரணான வாழ்க்கையாகும். அதாவது அவர்கள் மோசேயின் சட்டங்களை மக்களுக்குப் போதித்தார்கள். ஆனால் அவர்கள் போதித்ததைத் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்தார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுடைய போதனை ஒன்றாகவும் வாழ்ந்த வாழ்க்கை வேறொன்றாகவும் இருந்தது. அதனால் இயேசு அவர்களைத் தோலுரிக்கின்றார்.

மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் செய்த இரண்டாவது மிகப்பெரிய தவறு, மக்கள் மீது அளவுக்கு அதிகமான சுமைகளை இறக்கி வைத்ததாகும். சுமைகள் என்று சொல்கின்றபோது சட்டங்கள், ஒழுக்க நெறிகள் என்று சொல்லலாம். அவர்கள் ஓய்வுநாள் சட்டங்கள், மூதாதையர் மரபுகள் என்று சொல்லி, மக்கள்மீது அதிகப்படியான சுமைகளை இறக்கி வைத்தார்கள். ஆனால், அவர்கள் அதனை சிறிதளவுகூட கடைபிடிக்கவில்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மை.

மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் செய்த மூன்றாவது மிகப்பெரிய தவறு வீண் ஆடம்பரங்களையும் மக்களின் புகழ்ச்சியையும் விரும்பியதாகும். அவர்கள் எதைச் செய்தாலும் மக்கள் பார்க்கவேண்டும், மக்கள் புகழவேண்டும் என்றுதான் செய்தார்கள். எடுத்துக்காட்டாக ஆண்டுக்கு ஒருமுறை பாவப்பரிகார நாளில் நோன்பிருந்தால் போதும் என்ற ஒரு நெறி இருக்கும்போது, இவர்கள் மட்டும் வாரத்திற்கு இரண்டுமுறை நோன்பிருந்தார்கள். காரணம் அந்த இரண்டு நாட்களுமே சந்தைகூடும் நாட்கள். ஆகவே, மக்கள் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காக மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் பக்தி முயற்சிகளையும் இன்ன பிற காரியங்களையும் செய்ததனால் ஆண்டவர் இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

இவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் போதித்ததை வாழ்வாக்கவில்லை, மாறாக நாம் போதித்ததை வாழ்வாக்குகின்றபோது, வாழ்வதைப் போதிக்கின்றபோது இறைவனின் அன்புக்குப் பாத்திரமானவர்களாக மாறுவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. அடுத்ததாக நாம் செய்கின்ற எதையும் நமக்கு பெருமை சேருவதற்காக அல்லாமல், இறைவனுக்குப் பெருமை சேருமாறு செய்யவேண்டும். காரணம் இறைவன்தான் நம்மைப் பாதுகாத்து, பராமரித்து, எல்லாவிதத்திலும் வழிநடத்தி வருகின்றார். ஆகவே, அப்படிப்பட்டவருக்குப் பெருமை சேர்ப்பதுபோல் நமது வாழ்க்கை இருக்கவேண்டும். அப்படி இருந்தால் நாம் இறைவனின் அன்பு மக்களாக வாழ்வோம் என்பது உறுதி.

ஆகவே, நம்முடைய வாழ்வை போதனைக்கேற்ற வாழ்வாக அமைப்போம். வீண் புகழ்ச்சிகளைத் தவிர்த்து தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================






=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!