Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        23  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 20ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 23-28

இறைவன் கூறுவது: நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலை வழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: எசே 36: 25)
=================================================================================
பல்லவி: தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் அனைவரும் தூய்மையாவீர்கள்.

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 95: 8b,7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14

அக்காலத்தில் இயேசு மீண்டும் உவமைகள் வாயிலாகப் பேசியது: `'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.

திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், 'நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

பின்னர் தம் பணியாளர்களிடம், 'திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்' என்றார்.

அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.

அரசர் அவனைப் பார்த்து, 'தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.

அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், 'அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்றார்.

இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப் பட்டவர்களோ சிலர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

எல்லாருமே திருமண விருந்துக்குரியவர்களே. எல்லாரையும் அழைத்து வாருங்கள். ஆண்டவர் பார்வையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இந்த உவமை விளக்குகிறது.

ஆனாலும் வருவோர் அதற்குரிய கண்ணியத்தோடு பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றார்.

அழைக்கப்பட்டதாலே கண்ணியம் கூடிவிடாது. நாம் தான் நம்மிடம் அந்த கண்ணியத்தை வருவித்துக் கொண்டு பங்கேற்க வேண்டும். நாம் அதை செய்ய மறுக்கின்ற போது, புறந்தள்ளப்படுவோம் என்ற எச்சரிக்கையை பெற்றுக் கொள்வோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
ஆண்டவருக்கு முதலிடம்

சிறுவன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் சாலையோரமாக நடந்துசெல்லும்போது, ஓரிடத்தில் 100 ரூபாயைக் கண்டெடுத்தான். அது அவனுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தந்தது. அவன் அதைத் தன்னுடைய பெற்றோரிடத்திலும் காட்டி மட்டில்லா மகிழ்ச்சியடைந்தான்.

அன்றைக்கு அவன் யோசித்துப் பார்த்தான். இன்றைக்குப் போல் என்றைக்குமே கீழே பார்த்துக்கொண்டு நடந்தால் எவ்வளவோ பணத்தைக் கண்டெடுக்கலாம் என்று. அன்றிலிருந்தே அவன் எங்கு சென்றாலும் கீழே பார்த்துக்கொண்டேதான் நடந்தான். அவனுக்கு முப்பது வயது, நாற்பது வயது என்று வயது ஏறிக்கொண்டே போனது. அப்போதும்கூட அவன் கீழே பார்த்துக்கொண்டு நடப்பதை நிறுத்தவே இல்லை. அவனுடைய நினைப்பெல்லாம் எப்படியும் பெரிதாக பணப்பெட்டியோ தங்க நகையோ கிடைக்கும் அதை வைத்துக்கொண்டு நாம் பெரிய ஆளாகிவிடலாம் என்பதாகவே இருந்தது. அதனால் அவன் தொடர்ந்து கீழே பார்த்துக்கொண்டு நடந்தான்.

அவனுக்கு இப்போது வயது அறுபதைத் தொட்டிருந்தது. அவன் தான் அதுவரைக்கும் கீழே கண்டெடுத்த பணத்தையும் தங்கத்தின் மதிப்பையும் கணக்குப் போட்டுப் பார்த்தன். அது இருபதாயிரத்துக்கும் குறைவாகத்தான் இருந்தது. அப்போது அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். 'இந்த இருபதாயிரத்துக்கும் குறைவான பணத்திற்காக எத்தனையோ சூர்யோதயங்களையும், வானவில் காட்சிகளையும் இரசிக்க மறந்தேன். இதற்காகவா என் வாழ்வையே தொலைத்து நிற்கின்றேன்'.

கதையில் வரும் மனிதனைப் போன்றுதான் நாமும் வாழ்வில் எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் தராமல், சிறு சிறு காரியங்களுக்கும் சிற்றின்பத்திக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, கடைசில் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றோம். இப்படிப்பட்ட வாழ்க்கையினை வாழாமல், நமது வாழ்வில் இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்புத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணரசை திருமண நிகழ்ச்சிக்கு ஒப்பிடுகின்றார். அரசர் திருமண விருந்தினை ஏற்பாடு செய்துவிட்டு அழைப்புப் பெற்றோர் அனைவரையும் அழைக்கின்றார். அவர்களோ சாக்குப்போக்குச் சொல்லி வராமல் இருக்கிறார்கள். இதனால் சினம்கொண்ட அரசர் தன்னுடைய பணியாளர்களை அனுப்பி தெருவோரங்களிலும் சாலையோரங்களிலும் இருப்போரையும் தான் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் விருந்தினை உண்பதற்கு அழைக்கின்றார்.

ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய இந்த உவமையானது இறைவனுடைய அழைப்பு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகிய யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது எனச் சொல்கிறது. யூதர்களோ இறைவனுடைய அழைப்பிற்குச் செவிமடுக்காமல் தங்களுடைய மனம்போல் வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதனால் புறவினத்தாருக்கு அந்த அழைப்புக் கொடுக்கப்படுகின்றது. அவர்களோ கடவுள் கொடுத்த அழைப்பினை திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டு அவர் ஏற்பாடு செய்திருக்கும் விண்ணக விருந்தில் கலந்துகொள்கின்றார்கள்.

இந்த உவமையைக் குறித்து சிந்தித்துப் பார்க்கின்றபோது நாம் நமது வாழ்வைக் குறித்தும் சிறிது சிந்தித்துப் பார்க்கவேண்டும். கடவுள் நம்மை அவருடைய விருந்தில் கலந்துகொள்வதற்காக அழைக்கின்றபோது நாம் அவருடைய அழைப்பிற்குச் செவிமடுத்து, அவர் தரும் விருந்தில் கலந்துகொள்கின்றோமா? அல்லது ஏதாவது சாக்குக்போக்குச் சொல்லிவிட்டு நமது மனம்போல் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம், இறைவனுடைய மேலான அழைப்பினை உதறித்தள்ளிவிட்டு, சிற்றின்ப வாழ்க்கையில் புதையுண்டு கிடப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. ஆகவே, நமது வாழ்க்கையில் எது முக்கியம் என்பதைத் தேர்ந்து தெளியவேண்டும்.

இயேசு சொல்லக்கூடிய இந்த உவமை நமக்கு இன்னொரு செய்தியையும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், இறைவனுடைய அழைப்பை நாம் சிறப்பாகப் பெற்றிருந்தாலும், இறைவன் தருகின்ற விருந்தில் கலந்துகொள்வதற்கு தகுதியான நிலையில் செல்லவேண்டும். இல்லையென்றால் விண்ணக விருந்தில் நம்மால் கலந்துகொள்ள முடியாமலே போய்விடும்.

உவமையில் எல்லாரும் திருமண உடையில் வந்திருக்கும்போது ஒருவர் மட்டும் அதற்கான உடையில் வராமல் இருக்கின்றார். அதனால் அவரை அப்புறப்படுத்துமாறு அரசர் தன் பணியாளர்களைக் கேட்டுக்கொள்கின்றார். நாம் இறைவனின் திரு விருந்தில் கலந்துகொள்வதற்கு அவருடைய மேலான அழைப்பினைப் பெற்றிருந்தாலும் தகுதியான உள்ளத்தோடு, தகுந்த மனநிலையோடு செல்லவேண்டும். இல்லையென்றால் நாமும் அந்த மனிதரைப் போன்று வெளியே அனுப்பப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, நமது வாழ்வில் இறைவனுக்கு முன்னுரிமை தந்து வாழ்வோம். நம்முடைய சிற்றின்ப நாட்டங்களையும் உலக மாயைகளையும் விட்டு விலகுவோம். எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம்

திரு.மொராஜி தேசாய் அவர்கள் இந்தியத் திருநாட்டின் பிரதம மந்திரியாக இருந்தபோது, பணி நிமித்தமாக அவசரமாக விமானத்தில் செல்ல வேண்டி இருந்தது. அவரோடு ஒருசில முக்கியமான பிரமுகர்களும் பயணம் செய்தார்கள்.

மோசமான சீதோசனநிலை காரணமாக விமானம் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நேரத்தில் விமானத்தை எப்படி இறக்குவது என்ற குழப்பம் விமான ஓட்டிக்கு ஏற்பட்டது. அவர் சிறுது நேரம் யோசித்துப் பார்த்தார், விமானத்தை தலை பக்கமாக தரையிறக்கினால், விமானத்தின் முன்பகுதியில் இருக்கும் தனக்கும், தன்னைப் போன்ற பணியாளர்களுக்கும் ஆபத்து ஏற்படும். அதனால் அவர்களை நம்பி வாழும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். அதே நேரத்தில் விமானத்தை வால் பக்கமாக தரை இறக்கினால், விமானத்தின் பின்பக்கம் இருக்கும் பிரதம மந்திரி உட்பட முக்கியப் புரமுகர்கள் ஆபத்தைச் சந்திப்பார்கள் என்ன செய்வது என்று குழம்பித் தவித்தார்.

பின்னர் தான் விமான ஓட்டுனராக பொறுப்பெடுக்கும்போது கொடுத்த வாக்குறுதிகளை நினைவுகூர்ந்தார். அதில் விமானம் ஒட்டுபோது ஆபத்து ஏற்பட்டால், தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தாவது விமானத்தில் பயணம் செய்வோரின் உயிரைக் காப்பாற்றவேண்டும் என்பதை நினைவுகூர்ந்தார்.

உடனே விமானத்தை தலைபக்கமாக இறக்கி, தன்னுடைய உயிரை தியாகம் செய்து, விமானத்தில் பின்பக்கமாக உட்கார்ந்திருந்த பிரதம மந்திரி உட்பட முக்கியமான பிரமுகர்களின் உயிரைக் காப்பாற்றினார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியைக் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மொராஜி தேசாய், 'விமான ஓட்டி, தன்னுடைய உயிரைத் தியாகம் செய்து, எங்களுடைய உயிரைக் காப்பாற்றினார்' என்றார். பிரதம மந்திரியைக் காப்பாற்றிய மனிதர் ஒரு கிறிஸ்தவர் என்பது கூடுதல் தகவல். தன் உயிர் போனாலும் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய அந்த விமான ஒட்டி நமக்கெல்லாம் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணரசை திருமண விருந்துக்கு ஒப்பிடுகிறார். அரசர் தான் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு விருந்தினர்களை அழைக்கிறார். ஆனால் அவர்களோ சாக்குப் போக்குச் சொல்லி, விருந்துக்கு வராமல் இருந்துவிடுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறிதிகளை மறந்துபோய்விடுகிறார்கள். அதனால் சினம் கொண்ட அரசர் அவர்களைக் கொன்றொழிக்கிறார்.

இன்றைக்கும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த சமூகத்தில் எத்தனையோ மனிதர்கள், தலைவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தாங்கள் வாக்குறுதி கொடுத்ததையே அவர்கள் மறந்து போய்விடுகிறார்கள். இதை அரசியல் தலைவர்கள்தான் என்றில்லை, எல்லாருமே செய்கிறார்கள்.

மனிதர்களின் வாழ்வே கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் சென்றுகொண்டிருக்கிறது. அது பொய்யாகும்போது எல்லாமே வீணாகிப் போய்விடுகிறது. அளிக்கப்பட்ட வாக்குறுதி செலுத்தப்படாத கடன் என்பார் ராபர்ட் வில்லியம் என்ற அறிஞர். ஒருவரிடம் கடன்பெற்றிருக்கிறோம் என்றால், அதனைத் திருப்பிச் செலுத்தவேண்டும். அதுபோலத் தான், நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆகவேண்டும். இல்லையென்றால் நாம் நம்பத் தகாதவர்கள் ஆகின்றோம்.

இந்த வேளையில் இறைவன் எந்தளவுக்கு வாக்கு மாறாதவராக இருக்கிறார் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருப்பாடல் 119: 140 ல் வாசிக்கின்றோம், 'உம் வாக்குறுதிகள் முற்றிலும் சரியென மெய்பிக்கப்பட்டுள்ளது. உம் ஊழியன் அதன்மீது பற்றுக்கொண்டுள்ளான்' என்று. ஆம், இறைவன் என்றென்றும் வாக்கு மாறாதவராக இருக்கின்றார். ஆகவே, நாம் இறைவனைப் போன்று கொடுத்த வாக்குறுதியின் படி நடப்பவர்களாகவும், அந்த வாக்குறுதிக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க முயல்வோம்.
நம்முடைய வாக்குறுதிகள் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட அரசியல்வாதிகளின் வாக்குறுதியைப் போன்று நம்பத்தகாதாய் இல்லாமல், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்றைக்கும் நிலைத்திருக்கும்படி செய்வோம்.

உன்னால் கொடுக்கமுடியும் என்பதற்குத்தான் வாக்குறுதி கொடுக்கவேண்டும். அடுத்தது நீ வாக்குறுதி கொடுத்ததற்கு மேல் கொடு என்பார்' ஒயிட் என்ற எழுத்தாளர். ஆகவே, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் வாக்குறுதி மாறாதவர்களாக இருப்போம். கொடுத்த வாக்குறுதிக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம். ஆண்டவர் வாக்குறுதி மாறாதவராக இருக்கின்றார். அவரைப் போன்று வாக்குறுதி மாறாதவர்களாக இருப்போம். அதன்வழியாக கடவுளுக்கும், மக்களுக்கும் என்றைக்கும் பிரமாணிக்கமுள்ளவர்களாக இருப்போம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!