Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        22  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 20ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 1-11

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்கு உரை. அவர்களுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்! நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை. நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழி தப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள். ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின. என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது; அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்.

எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்துகொள்கிறார்கள்.

எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கி விடுவேன். எனவே தாங்களே மேய்ந்துகொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா. எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக் காப்பேன்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3a அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபி 4: 12


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

அக்காலத்தில் இயேசு கூறியது: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.

அவர்களிடம், 'நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார்.

அவர்களிடம், 'நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, 'எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றார்கள்.

அவர் அவர்களிடம், 'நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்' என்றார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வை யாளரிடம், 'வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்றார்.

எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, 'கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே' என்றார்கள்.

அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, 'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

நல்லவனாய் இருப்பதானால் பொறாமையா?

அன்றே அற்புதமாக கேட்டு பார்க்கின்றார்.

நல்லவர்களுக்கு என்றைக்குமே காலம் இல்லை என்பதனை உணர்த்தி நிற்கின்றார். பச்சை மரத்திற்கே இந்த பாடு என்றால், பட்டமரத்திற்கு என்னபாடோ?

மனிதர்களின் எண்ணங்க் வேறுபட்டே இருப்பதால், கடவுளின் கோட்பாடுகள், கட்டளைகள் கடைப்பிடிக்க முடியாததாகிப் போகின்றது. இதனால் தெய்வ அச்சத்தோடு, நல்லவர்களாய் வாழ்வோரின் எண்ணிக்கையும் அரிதாகின்றது. அப்படியே சவாலோடு வாழ்வோரையும் பார்த்து பொறாமைப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதனால் சமூகம் ஆரோக்கியமில்லாததாகிப் போகின்றது.

தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாலேயே இதை சாத்தியப்படுத்திட முடியும். நல்லவர்களாக வாழ்ந்திட, கடவுளின் கட்டளைகளையும், கோட்பாடுகளையும் கடைப்பிடித்து வாழ்ந்திட முன்வருவோம்.

நாமும் நல்லவர்களாவோம், வாழும் சமூகத்தையும் நல்லதாக்குவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பொறாமையை விட்டொழிப்போம்; ஆண்டவரைப் போன்று பெருந்தன்மையாய் இருப்போம்

துறவி ஒருவர் இருந்தார். அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள். ஒருநாள் அவர் ஊருக்கு வெளியே இருந்த கோவில் வாசலில் அமர்ந்து, போதித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்தக் கோவிலுக்கு இறைவேண்டல் செய்ய பெரியவர் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்ததும் துறவி தன்னுடைய சீடர்களிடம், "இதோ வருகிறாரே, இவர் ஒரு சொர்க்கவாசி" என்றார். உடனே எல்லாச் சீடர்களும் அவரையே உற்றுப் பார்த்தார்கள். அவர் மிகவும் சாதாரணமாக இருந்தார். அப்படிப்பட்டவர் கோவிலுக்குள் சென்றார். இறைவனை வணங்கிவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்துவிட்டார். சீடர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். 'ஆளைப் பார்த்தால் சாதாரணமாக இருக்கின்றது. கோவிலில் நீண்டநேரம்கூட இவர் வேண்டவில்லை. அப்படி இருக்கும்போது இவரைப்போய் குரு சொர்க்கவாசி என்று சொல்கிறாரே' என்று புலம்பினார்கள்.

அந்த நாள் முடிந்து மறுநாள் வழக்கமான இடத்தில் சீடர்கள் துறவிக்கு முன்பாக அமர்ந்து அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அன்றைக்கும் முந்தைய நாளில் வந்த பெரியவர் கோவிலில் இறைவேண்டல் செய்யவந்தார். அவரைப் பார்த்ததும் துறவி, "இதோ வருகிறாரே, இவர் சொர்க்கவாசி" என்றார். உடனே சீடர்கள் அந்தப் பெரியவரைக் கவனிக்கத் தொடங்கினார்கள். அன்றைக்கும் அவர் கோவிலுக்குள் சென்று, இறைவனிடம் ஜெபித்துவிட்டு, சிறிது நேரத்திலே வெளியே வந்துவிட்டார். சீட்ரகளுக்கு அன்றைக்கும் ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. 'சாதாரணமாக இருக்கின்றார். இறைவனிடத்தில் அதிகமாக வேண்டுவதுகூட கிடையாது. அப்படியிருக்கும்போது இவரைப் போய் துறவி, சொர்க்கவாசி என்று சொல்கின்றாரே?' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் சீடர்களில் ஒருவர், 'எதற்காக இவரை நம்முடைய குரு சொர்க்கவாசி என்று சொல்கின்றார்? அப்படி இவரிடத்தில் என்னதான் இருக்கின்றது? என்று தெரிந்துகொள்வதற்கு அவரையே பின்னாடி சுற்றிச் சுற்றிச் சென்றார். அப்படியிருந்தும்கூட பெரிதாக அவர் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. இதனால் பொறுமையை இழந்த அந்த சீடர் அவரிடத்தில் நேரடியாகவே சென்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், "நான் பெரிய காரியங்கள் எதையும் செய்ததில்லை. ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் என் வாழ்முழுவதும் கடைப்பிடித்து வருகின்றேன். அது என்னவென்றால், நான் யார்மீதும் காழ்புணர்ச்சியோ, யாருடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமையோ கொள்வது கிடையாது. அதனாலோ என்னவோ என்னை உங்கள் துறவி சொர்க்கவாசி என்று சொல்கிறார் போலும்" என்று சொன்னார். அந்தப் பெரியவர் இவ்வாறு சொன்ன பிறகுதான் அந்த சீடருக்குப் புரிந்தது 'பொறமைகொள்ள ஒருவர்தான் சொர்க்கவாசி' என்று.

ஆம், அடுத்தவருடைய வளர்ச்சியைக் கண்டு, சிறிதளவும் பொறாமைப்படாதவரே உண்மையான சொர்க்கவாசி.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையைப் பற்றிப் பேசுவதை வாசிக்கின்றோம். உவமையில் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தன்னுடைய தோட்டத்தில் பழம் பறிக்க காலை ஒன்பது மணி, நண்பகல் பன்னிரண்டு மணி, பிற்பகல் மூன்று மணி, மாலை ஐந்து மணி என வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகின்றார். பின்னர் கூலி கொடுக்கும்போது கடைசியில் வந்தவர் தொடங்கி எல்லாருக்கும் ஒரு தெனாரியம் கூலியாகக் கொடுக்கின்றார். இதனால் முதலில் வந்தவர்கள் அதாவது காலை ஒன்பது மணிக்கே வேலைக்கு வந்தவர்கள் தங்களுக்கு கூலி அதிகமாகக் கிடைக்கும் என்று மனக்கணக்குப் போடுகின்றார்கள். ஆனால், அவர்களுக்கும் ஒரு தெனாரியம் கொடுக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, அவர்கள் முணுமுணுக்கத் தொடங்குகின்றார்கள். அப்போது திராட்சைத் தோட்ட உரிமையாளர் முணுமுணுப்பவர்களைப் பார்த்து, "ஒரு தெனாரியம் என்று சொல்லித்தானே உங்களைக் கூலிக்கு அமர்த்தினேன். கடைசியில் வந்தவர்களுக்கு என் விருப்பம்போல் கொடுக்கக்கூடாதா? அதனால் உனக்குப் பொறாமையாக?" என்று அவர்களைச் சாடுகின்றார்.

ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய இந்த உவமை 'ஏழைகள், அனாதைகள், புறவினத்தார் இவர்கள்மீது ஆண்டவர் இயேசுவுக்கு இருக்கும் பேரன்பை, பெருந்தன்மையைக் காட்டுக்கின்றது. இது இவ்வாறு இருக்க இயேசு புறவினத்தார், எளியவர், வரியவர்மீது பெருந்தன்மையோடு இருப்பதைப் பார்க்கும் யூதர்கள் அதாவது தோட்டத்திற்கு முதலில் வேலைக்கு வந்தவர்கள் அவர்மீது சினம்கொள்கிறார்கள். அதனால்தான் இயேசு, "நான் நல்லவனாய் இருப்பது கண்டு உமக்குப் பொறமையா?" என்கின்றார்.

இங்கே நாம் இயேசுவிடத்தில் வெளிப்பட்ட பேரன்பையும் பெருந்தன்மையையும் கற்றுக்கொள்ளவேண்டும். அதுவே நமது வாழ்விற்கான பாடமாக இருக்கின்றது.

ஆகவே, இயேசுவைப் போன்று பெருந்தன்மையோடு இருப்போம். நம்மிடத்தில் இருக்கின்ற பொறமைக் குணத்தை வேரோடு அறுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இறை நீதி

'பாரதத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் காந்தியடிகள் கோட்சேயால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டபோது, மக்கள் அனைவரும் அவனுக்கு தூக்குத் தண்டனைக் கொடுக்கவேண்டும், அவனைத் தண்டிக்கவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள்.

அப்பொழுது ஒரு கருணை மனு, அன்றைய தினத்தில் ஆளுநராக இருந்த இராஜாஜிடம் வந்தது. அதில். "கோட்சேயைத் தூக்கிலிட்டுக் கொல்லவேண்டும்" என்ற குரல் எங்கும் ஒலிக்கிறது. ஆனால் காந்தி மட்டும் ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால், கோட்சேயை மன்னித்து விட்டிருப்பார்" என்று எழுதப்பட்டு இருந்தது.

இதை படித்துப் பார்த்த இராஜாஜி, "ஆம், காந்தியடிகள் உயிரோடு இருந்திருந்தால், தன்னைக் கொலை செய்ய முயற்சித்த கோட்சேயை தூக்கிலிட வேண்டும் என்றதொரு நிலையே ஏற்பட்டிருக்காது" என்றார்.

நீதியின்படி பார்த்தால் கொலைகுற்றம் செய்த கோட்சே தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இரக்கத்தின்படி பார்த்தால், அவனைத் தண்டியாது விடவேண்டும் என்பதைதான் இந்த உண்மை நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் இறை நீதியை/ இரக்கத்தை எடுத்துச் சொல்லும் திராட்சைத் தோட்ட வேலையாள்கள் என்ற அருமையான உவமையை வாசிக்கின்றோம். நிலக்கிழார் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்ய பணியாளர்களைத் தேடிச் செல்கிறார். அதிகாலை ஐந்து மணி, காலை ஒன்பது மணி, நண்பகல் பனிரெண்டு மணி, பிற்பகல் மூன்று மணி, மாலை ஐந்து மணி என்று பல முறை சந்தைவெளிக்குச் சென்று வேலையாட்களை அழைத்துக் கொண்டுவருகிறார்.

இதுவரை எல்லாம் நன்றாகத் தான் சென்றுகொண்டிருக்கிறது. எப்போது நிலக்கிழார் வேலையாட்களுக்கு ஊதியம் கொடுக்கத் தொடங்குகிறாரோ அப்போது பிரச்சனை ஆரம்பிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் முதலில் வந்தவர்களுக்கு முதலில் ஊதியம் கொடுத்து அனுப்பி இருந்தால், அவர்கள் பின்னால் வருபவர்களுக்கு என்ன ஊதியம் என்றுகூடப் பார்க்காமல், தங்களுடைய வழியில் சென்றிருப்பார்கள். ஆனால் கடைசியாக வந்தவர்களுக்கு முதலில் ஊதியம் தரப்பட்டபோதுதான் அவர்கள், கடைசியாக வந்த இவர்களுக்கே ஒரு தெனாரியம் தரப்படுகிறதே, அப்படியானால் முதலில் வந்த நமக்கு இன்னும் அதிகமான கூலி தரப்படும் நினைத்தார்கள். ஆனால் முதலில் வந்தவர்களுக்கு அதே ஒரு தெனாரியம் தரப்படுகிறது. அதுவே பிரச்சனைக்குக் காரணமாகிவிடுகிறது.

உவமையில் தனக்கு கூலி வழங்கப்பட்டதில் அநீதி இழைக்கப்பட்டதாக புலம்பும் மனிதரிடம் நிலக்கிழார் சொல்லும் பதில்தான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. நிலக்கிழார் அம்மனிதரிடம் சொல்கிறார், தோழரே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்" என்கிறார்.

முதலில் வந்து, அதிக நேரம் வெயிலில் வேலைபார்த்த மனிதருக்கும், கடைசியில் வந்து சில மணித்துளிகளே வேலைபார்த்தவருக்கும் ஒரு தெனாரியம் கூலி தரப்பட்டது மனிதர் பார்வையில் பார்த்தால் அது அநீதி போன்றுதான் இருக்கும். ஆனால் இறைவனின் பார்வை வித்தியாசமானது. அது ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டுமே கருத்தில் கொள்ளாது, எல்லாரையும் கருத்தில் கொள்ளும்.

எசாயாப் புத்தகம் 55:8 ல் வாசிப்பது போல, "கடவுளின் எண்ணங்கள் நம்முடைய எண்ணங்கள் அல்ல, நம்முடைய வழிமுறைகள் கடவுளுடைய வழிமுறைகள் அல்ல". அதனால்தான் கடைசியில் வந்த அந்த மனிதருக்கும் நிலக்கிழார் ஒரு தெனாரியம் கொடுக்கிறார். இதற்கு அடிப்படைக் காரணம் ஒருவேளை நிலக்கிழார் கடைசியில் வந்த மனிதருக்கு ஒரு தெனாரியதற்குப் பதிலாக, அதைவிடக் குறைவாக தெனாரியம் தந்தால், அந்த மனிதரை நம்பி வாழும் அவருடைய குடும்பத்தார் கஷ்டப்படுவார்கள். அதனால்தான் நிலக்கிழார் ஒரு தெனாரியம் தருகிறார். இதில் நிலக்கிழார்/ கடவுள் எந்தளவுக்கு இரக்கமுள்ளவராக இருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

அடுத்ததாக நிலக்கிழார் தன்னிடம் விவாதம் செய்த மனிதரைப் பார்த்துச் சொல்கிறார், "நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்று. இதுவும் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. பலநேரங்களில் நம்மைவிட பிறர் வாய்ப்பு வசதிகளோடு இருக்கிறார் என்றால், அவரைக் கண்டு பொறாமைப் படுகின்றோம்; அவரது வளர்ச்சியை சந்தேகப்படுகின்றோம். இத்தகைய பொறாமைக் குணமே நமக்கு அழிவினைத் தருவதாக இருக்கின்றது.

சீராக்கின் ஞான நூல் 14:8 ல் வாசிக்கின்றோம், "பொறமை கொண்டோர் தீயோர்; பிறரைப் புறக்கணித்து முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொள்வர்" என்று.

ஆகவே, கடவுளின் நீதியை விட அவரது இரக்கம் என்பதை உணர்ந்துகொண்டு, அந்த இரக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டுவோம், பிறரது வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளாமல், அவர்களை, அவர்களிடம் இருக்கும் கொடைகளை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இயேசுவைப் பின்தொடர்பவர்களுக்கு அவர் அளிக்கும் கைமாறு

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக நம் நாட்டில் ஒரு ஆங்கிலேய நீதிபதி பணிசெய்து வந்தார். அவருக்கு இங்கே இருந்த ஒரு இளைஞனோடு நல்லதொரு நட்பு ஏற்பட்டது. அவர் அவனை எங்கு சென்றாலும் கூட்டிச் செல்வார். அந்த இளைஞனுக்கும் அவர்மீது மதிப்பும், மரியாதையும் இருந்தது. இளைஞன் அவரை தன்னுடைய முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தான்.

ஒருகட்டத்தில் அவனுக்கு அவர் பின்பற்றி வந்த கிறிஸ்தவ மதம் பிடித்துப்போக கிறிஸ்தவ மதத்தைத் தழுவினான். இது அவனுடைய பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவனுடைய பெற்றோர்கள் அவனை வீட்டைவிட்டே துரத்திவிட்டார்கள். அதன்பிறகு அவன் நீதிபதியின் வீட்டிலே தங்கியிருந்து, அங்கு இருந்த வேலைகளைச் செய்துகொண்டுவந்தான்.

நீதிபதியின் வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் வழிபாடு நடக்கும். அந்த வழிபாட்டில் கலந்துகொள்வதற்காக ஏராளமான மக்கள் வருவார்கள். அதில் விவிலியம் வாசிக்கப்பட்டு விளக்கம் தரப்படும். அன்றைக்கு மத்தேயு நற்செய்தி 19 ஆம் அதிகாரம் 29 ஆம் வசனத்தில் வரும் "என் பொருட்டு தாயையோ, வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காப் பெறுவார். நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்" என்ற பகுதியானது வாசிக்கப்பட்டு, விளக்கம் தரப்பட்டது.

அப்போது நீதிபதி அந்த இளைஞனைப் பார்த்து, "இப்போது வாசிக்கப்பட்ட இந்த நற்செய்திப் பகுதி எங்களைவிட உனக்குத்தான் அதிகமாகப் பொருந்துவதாக இருக்கிறது. இப்போது சொல், இயேசு கூறிய இந்த வார்த்தைகள் உண்மைதானா?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் எழுந்து, "ஆம் இயேசுவின் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. நான் கிறிஸ்தவ மதத்தை தழுவியதற்காக ஒரு தாய் தந்தையை இழந்திருக்கலாம். ஆனால் எனக்கு இப்போது நூறு என்ன, அதற்கு மேலும் தாய் தந்தைகள் கிடைத்திருக்கிறார்கள்" என்றான்.

எல்லா உறவுகளையும் துறந்து இயேசுவைப் பின்பற்றும் அவரது சீடர்களுக்கு இயேசு எப்படிப்பட்ட ஆசிரைத் தருகிறார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தலைமைச் சீடரான பேதுரு இயேசுவிடம், "நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்கிறார். அதற்கு இயேசு, "என் பொருட்டு தாயையோ, வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ நிலபுலன்களையோ விட்டுவிட்டு எவரும் நூறு மடங்காப் பெறுவார். நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்" என்கிறார்.

இயேசுவைப் பின்தொடர்ந்து நடப்பது என்பது சவால்கள் நிறைந்தது, அதற்காக எல்லா உறவுகளையும் இழக்கத் நாம் துணியவேண்டும். இயேசுவின் சீடர்களான பேதுரு மற்ற யாவரும் இயேசுவுக்காக எல்லா உறவுகளையும் மிகத் துணிச்சலாக உதறித் தள்ளிவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களுக்கு எல்லா ஆசிரையும் நூறுமடங்காகத் திருப்பித் தருகிறார்.

இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் இயேசுவுக்காக நம்முடைய உறவுகள், சொந்த பந்தங்கள், வசதியான வாழ்க்கை அத்தனையும் உதறித்தள்ள முன்வரவேண்டும். முன்வருகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தொடக்க நூலில் கடவுள் ஆபிரகாமைப் பார்த்து, "நான் உனக்குக் காட்டும் நாட்டிற்குப் போ என்று சொன்னதும், அவர் மறுபேச்சுப் பேசாமல், எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆண்டவர் காட்டிய நாட்டிற்குப் போகிகிறார். அதனால்தான் கடவுள் அவரைப் பார்த்து, "நான் உன்னை பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன்; உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன். நீயே ஆசியாக விளங்குவாய்" என்கிறார் (தொநூ 12: 2).

ஆகவே நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் சீடர்களைப் போன்று, முதுபெரும் தந்தை ஆபிரகாமைப் போன்று இறைவனின் அழைப்பு ஏற்று அவர் பின்னே செல்வோம். எதிர்வரும் சவால்களையும், பிரச்சனைகளையும் துணிவோடு தாங்கிக் கொள்வோம். அதன் வழியாக இறைவன் அளிக்கும் கொடைகளை நிறைவாய் பெறுவோம்.

"அன்னை நீ கருவுற்றிருந்தால் ஓரிரு பிள்ளைகளுக்குத் தாயாயிருப்பாய், நீ கருணையுற்றதால் இந்த உலகிற்கே தாயானாய்" (அன்னைத் தெரசாவைப் பற்றி வின்சென்ட் சின்னத்துரை எழுதிய கவிதை).

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!