Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        21  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 20ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 28: 1-10

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், `நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்' என்று சொல்கின்றாய். ஆனால் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே! தானியேலைவிட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை! உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்; உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய். உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்; உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது.

ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப் போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால், மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்; அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்; உன் பெருமையைக் குலைப்பர். படுகுழியில் தள்ளுவர் உன்னை; கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே! அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் `நானே கடவுள்' என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய். விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - இச 32: 26-27. 28, 30. 35cd-36ab (பல்லவி: 39c)
=================================================================================
பல்லவி: கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!

26 நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன். 27 ஆயினும், "எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!" என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன். பல்லவி

28 அவர்கள் புத்தி கெட்ட மக்கள்; அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை. 30 ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ? பல்லவி

35cd அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன. 36ab அவர்கள் ஆற்றல் இழந்துவிட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம், "செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.

சீடர்கள் இதைக் கேட்டு, "அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?" என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள்.

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.

அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, "நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்டார்.

அதற்கு இயேசு, "புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நுறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.

ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்" என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



சிந்தனை

ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.

இயலவே இயலாது என்பதற்கு பதிலாக, புரியும் விதத்தில் மிக அற்புதமான எடுத்துக்காட்டை சொல்லி விளக்கமளிக்கின்றார்.

பணம் தேவை தான் தேவைக்கு மட்டுமே இருக்கும் போது. அதுவே சேகரித்து வைத்திட முற்படும் போது, அகந்தை, ஆணவம், கௌரவம், வேறுபாடு பார்த்தல், வித்தியாசம் காட்டுதல் போன்ற எண்ணங்கள் மனிதனுக்குள் குடியேறி மனிதனை மற்றவர்களிடம் இருந்து பிரித்து, மாண்புக்கு எதிரான செயலை செய்ய தூண்டி, மனிதனை கறைப்படுத்துகின்றது.

எனவே அவனால் இறையாட்சிக்கு உட்பட முடியவே முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றார். இதைத்தான் இந்த உதாரணத்தை சொல்லி விளக்கமளிக்கின்றார். ஊசியின் காதில் எப்படி ஒட்டகம் என்ற உயர்ந்த மிருகம் நுழைய முடியாதோ, அதைப் போலவே சமூகத்தில் உயர்ந்த மனிதர்க்ள என்று தங்களது பணத்திமிரால் மிருகங்களாக மாறிப் போனவர்களும் நுழைந்திடவே முடியாது என்று தெளிவுற விளக்குகின்றார்.

இருப்பதை பகிர்வோம். இல்லாதவர்கள் என்ற நிலை ஒழிப்போம். இறையாட்சியை கட்டியெழுப்புவோம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
செல்வரும் இறையாட்சியும்!

ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். ஒருநாள் அவர் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலத்திற்குச் சுற்றுலா சென்றார். சுற்றுலாத் தளத்தில் ஓர் ஏரி இருந்தது. அதில் நிறையப் பேர் படகு சவாரி செய்துகொண்டிருந்தார். இவருக்கும் படகு சவாரி செய்யவேண்டும் என்ற ஆசை வந்தது. உடனே இவர் படகுத்துறைக்குச் சென்று அங்கிருந்த படகு ஒன்றை எடுத்துக்கொண்டு ஹாயாக பொழுதைக் கழித்தார்.

ஓரிடத்தில் "ஆபத்தான பகுதி, யாரும் இங்கு வரவேண்டாம்" என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி அவர் படகை ஓட்டிகொண்டு போனார். அப்போது எதிர்ப்பாராத விதமாக ஏற்பட்ட சுழலில் அவர் படகிலிருந்து தூக்கி வீசப்பட்டார். அவருக்கோ நீச்சல் தெரியாது. எனவே அவர் "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள். என் சொத்து முழுவதையும் எழுதித் தருகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு, அப்பக்கத்தில் இருந்த ஒரு மனிதர் ஏரிக்குள் விழுந்து அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தார்.

பணக்காரரோ போன உயிர் திரும்பி வந்ததை நினைத்து, நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். பின்னர் அவர் தன்னைக் காப்பாற்றியவருக்கு தன்னுடைய பர்சிலிருந்து பத்து ரூபாயை எடுத்துக்கொடுத்தார். காப்பாற்றிவருக்கு ஒருமாதிரி போய்விட்டது. "என்னங்க! உங்களுக்கே இது நல்லாயிருக்கிறதா?. உயிரைக் கொடுத்து உங்களைக் காப்பாற்றி இருக்கின்றேன். இப்படிப் பத்து ரூபா தருகிறீர்களே?" என்று வருத்தத்தோடு சொன்னார் அந்த மனிதர். "ஓ! சொத்தை எழுதித் தருகிறேன் என்று சொன்னதற்காகத்தான் நீங்கள் என்னைக் காப்பாற்றினீர்களா?" என்று சற்று கோபத்தோடு பேசினார் அந்த பணக்காரர். "அப்படியில்லை ஐயா! அதோ பாருங்கள் அந்த அறிவிப்புப் பலகையை. அதில் என்ன எழுத்தப்பட்டிருக்கின்றது, வாசியுங்கள்" என்றார் அந்த மனிதர். பணக்காரர் வாசிக்கத் தொடங்கினார், "ஏரிக்குள் விழுந்தவரை உயிரோடோ அல்லது பிணமாகவோ மீட்பவருக்கு 1000 ரூபாய் சன்மானம்".

பணக்காரர் இந்த வார்த்தைகளை படித்து முடித்ததும் குற்ற உணர்ச்சி மேலிட நின்றார். பின்னர் அவர் தன்னுடைய பர்சிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து தன்னைக் காப்பாற்றியவருக்குக் கொடுக்க முயன்றார். அதற்குள் அந்த மனிதர் வெகு தொலைவு போய்விட்டார்.

ஏழைகள், வறியவர்களிடத்தில் பணக்காரர்கள் சிறிதளவுகூட நியாயத்தோடு நடந்துகொள்ள மாட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்கின்றார். ஊசியின் காது என்பதை ஒரு குறுகலான வழி என்று சொல்வார்கள். அந்தக் குறுகலான வழியில் மனிதர்கள் நுழைவதே கடினம். அப்படியிருக்கும்போது ஒட்டகம் எப்படி நுழைய முடியும்? நிச்சயமாக முடியாது. அதுபோன்றுதான் செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம் என ஒருசிலர் விளக்கம் தருவர். இன்னும் ஒருசிலர் ஒட்டகம் என்பதை (kamele) கப்பலை அசையாமல் கட்டிப்போடப் பயன்படுத்தப்படும் கயிறு என்றும். அப்படிப்பட்ட கயிறு எப்படி ஊசியின் காதில் நுழைய முடியும்? முடியாதல்லவா? அதுபோன்றுதான் செல்வர் இறையாட்சிக்கு உட்பட முடியாது என்றும் விளக்கம் தருவர்.

இயேசு எதற்காக செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம் எனச் சொல்கின்றார் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். முதலாவது அவர்கள் தங்களைத் தவிர வேறு யாரையும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கமாட்டார்கள் என்பதுதான். பணக்காரன் ஏழை இலாசர் உவமையில் பணக்காரன் ஏழை இலாசரைக் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் இலாசர் அவனுடைய வீட்டு வாசல் படியில்தான் கிடக்கிறார். ஆனாலும் அவரை அவன் கண்டுகொள்ளவில்லை. அதனாலேயே அவன் இறையாட்சிக்கு உட்படவில்லை.

அடுத்ததாக, பணக்காரர்கள் பணம் மட்டும்தான் எல்லாம் என நினைத்து வாழ்வார்கள். அவர்களுக்கு கடவுளோ, மனிதரோ எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அப்படிப் பட்டவர்கள் எப்படி இறையாட்சிக்கு உட்பட முடியும்?. இறுதியாக பணக்காரர்கள் உண்மை, நீதி, அன்பு போன்ற பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். அன்பில்லாத ஒருவர் எப்படி இறையாட்சிக்கு உட்பட முடியும். அதனால்தான் இயேசு அப்படிச் சொல்கின்றார். செல்வர்கள் இறையாட்சிக்கு உட்பட முடியாது என்பதல்ல, அவர்கள் உட்பட முடியும். எப்போதென்றால் அவர்கள் அன்பிற்கும் அடுத்தவருக்கும் ஆண்டவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றார்களோ அப்போது முடியும்.

ஆதலால், நாம் பணத்திற்கு அடிமையாகிவிடாமல், ஆண்டவருக்கு அடிமையாய், அவருடைய மக்களை அன்பு செய்பவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இயேசுவைப் பின்தொடர்பவர்களுக்கு அவர் அளிக்கும் கைமாறு

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக நம் நாட்டில் ஒரு ஆங்கிலேய நீதிபதி பணிசெய்து வந்தார். அவருக்கு இங்கே இருந்த ஒரு இளைஞனோடு நல்லதொரு நட்பு ஏற்பட்டது. அவர் அவனை எங்கு சென்றாலும் கூட்டிச் செல்வார். அந்த இளைஞனுக்கும் அவர்மீது மதிப்பும், மரியாதையும் இருந்தது. இளைஞன் அவரை தன்னுடைய முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தான்.

ஒருகட்டத்தில் அவனுக்கு அவர் பின்பற்றி வந்த கிறிஸ்தவ மதம் பிடித்துப்போக கிறிஸ்தவ மதத்தைத் தழுவினான். இது அவனுடைய பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவனுடைய பெற்றோர்கள் அவனை வீட்டைவிட்டே துரத்திவிட்டார்கள். அதன்பிறகு அவன் நீதிபதியின் வீட்டிலே தங்கியிருந்து, அங்கு இருந்த வேலைகளைச் செய்துகொண்டுவந்தான்.

நீதிபதியின் வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் வழிபாடு நடக்கும். அந்த வழிபாட்டில் கலந்துகொள்வதற்காக ஏராளமான மக்கள் வருவார்கள். அதில் விவிலியம் வாசிக்கப்பட்டு விளக்கம் தரப்படும். அன்றைக்கு மத்தேயு நற்செய்தி 19 ஆம் அதிகாரம் 29 ஆம் வசனத்தில் வரும் "என் பொருட்டு தாயையோ, வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காப் பெறுவார். நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்" என்ற பகுதியானது வாசிக்கப்பட்டு, விளக்கம் தரப்பட்டது.

அப்போது நீதிபதி அந்த இளைஞனைப் பார்த்து, "இப்போது வாசிக்கப்பட்ட இந்த நற்செய்திப் பகுதி எங்களைவிட உனக்குத்தான் அதிகமாகப் பொருந்துவதாக இருக்கிறது. இப்போது சொல், இயேசு கூறிய இந்த வார்த்தைகள் உண்மைதானா?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் எழுந்து, "ஆம் இயேசுவின் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. நான் கிறிஸ்தவ மதத்தை தழுவியதற்காக ஒரு தாய் தந்தையை இழந்திருக்கலாம். ஆனால் எனக்கு இப்போது நூறு என்ன, அதற்கு மேலும் தாய் தந்தைகள் கிடைத்திருக்கிறார்கள்" என்றான்.

எல்லா உறவுகளையும் துறந்து இயேசுவைப் பின்பற்றும் அவரது சீடர்களுக்கு இயேசு எப்படிப்பட்ட ஆசிரைத் தருகிறார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தலைமைச் சீடரான பேதுரு இயேசுவிடம், "நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்கிறார். அதற்கு இயேசு, "என் பொருட்டு தாயையோ, வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ நிலபுலன்களையோ விட்டுவிட்டு எவரும் நூறு மடங்காப் பெறுவார். நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்" என்கிறார்.

இயேசுவைப் பின்தொடர்ந்து நடப்பது என்பது சவால்கள் நிறைந்தது, அதற்காக எல்லா உறவுகளையும் இழக்கத் நாம் துணியவேண்டும். இயேசுவின் சீடர்களான பேதுரு மற்ற யாவரும் இயேசுவுக்காக எல்லா உறவுகளையும் மிகத் துணிச்சலாக உதறித் தள்ளிவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களுக்கு எல்லா ஆசிரையும் நூறுமடங்காகத் திருப்பித் தருகிறார்.

இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் இயேசுவுக்காக நம்முடைய உறவுகள், சொந்த பந்தங்கள், வசதியான வாழ்க்கை அத்தனையும் உதறித்தள்ள முன்வரவேண்டும். முன்வருகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தொடக்க நூலில் கடவுள் ஆபிரகாமைப் பார்த்து, "நான் உனக்குக் காட்டும் நாட்டிற்குப் போ என்று சொன்னதும், அவர் மறுபேச்சுப் பேசாமல், எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆண்டவர் காட்டிய நாட்டிற்குப் போகிகிறார். அதனால்தான் கடவுள் அவரைப் பார்த்து, "நான் உன்னை பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன்; உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன். நீயே ஆசியாக விளங்குவாய்" என்கிறார் (தொநூ 12: 2).

ஆகவே நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் சீடர்களைப் போன்று, முதுபெரும் தந்தை ஆபிரகாமைப் போன்று இறைவனின் அழைப்பு ஏற்று அவர் பின்னே செல்வோம். எதிர்வரும் சவால்களையும், பிரச்சனைகளையும் துணிவோடு தாங்கிக் கொள்வோம். அதன் வழியாக இறைவன் அளிக்கும் கொடைகளை நிறைவாய் பெறுவோம்.

"அன்னை நீ கருவுற்றிருந்தால் ஓரிரு பிள்ளைகளுக்குத் தாயாயிருப்பாய், நீ கருணையுற்றதால் இந்த உலகிற்கே தாயானாய்" (அன்னைத் தெரசாவைப் பற்றி வின்சென்ட் சின்னத்துரை எழுதிய கவிதை).

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================





=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!