Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        18  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 19ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 1-10, 13b, 30-32

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: "புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்" என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன? என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது. உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.

ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால், மலைகளின்மேல் உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை நோக்கித் தன் கண்களை ஏறெடுக்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும், தீட்டுள்ள பெண்ணை நெருங்காமலும் இருந்தால், அடுத்திருப்பவனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கியவனுக்கு அடைமானத்தைத் திருப்பிக் கொடுத்து, பசித்தவனுக்குத் தன் உணவைப் பகிர்ந்தளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை அணிவித்து இருந்தால், வட்டிக்குக் கொடாமலும், கொடுத்ததற்கு அதிகமாய்ப் பெறாமலும் இருந்து, தன் கையால் அநீதி செய்யாது விலகி, மனிதரிடையே எழும் வழக்குகளுக்கு நீதியுடன் தீர்ப்பளித்தால், என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகொண்டால், அவன் நீதிமான் ஆவான்; அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும், முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால், அவன் வாழமாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி. அவனது இரத்தப் பழி அவன் மேலேயே இருக்கும்.

எனவே, இஸ்ரயேல் வீட்டாரே! ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். மனம் மாறி, உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள். அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது. எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்? எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: 10a)
=================================================================================
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 13-15

அக்காலத்தில் சிறு பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது'' என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼


சிந்தனை

குழந்தைகளின் சார்புத் தன்மை. வெகுளித் தன்மை. எளிமையான உண்மைத்தன்மை இன்றைக்கு அவர்களுக்கான குற்றம் அதிகரிக்கச் செய்கின்றது. இதனை கவனத்தில் கொண்டு, பெற்றவர்களும். பெரியவர்களும் குற்றம் அதிகரிக்காது, சிறியவர்கள் பாதிப்படையாது பாதுகாப்பதும் கடமையாகும்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்

ஒரு நகரில் இருந்த புகழ்பெற்ற ஓவியர் ஒருவர் இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடிரென்று தன்னுடைய ஓவியக்கூடத்தில் ஏதோ ஒரு சத்தம் கேட்பதை உணர்ந்து, ஓவியக்கூடத்திற்குள் ஓடினார்.

உள்ளே சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சியாய் இருந்தது. ஏனென்றால் அங்கே ஒரு புதிய மனிதர், தான் வரைந்த விண்ணகம் குறித்தான ஓவியத்தில் இருந்த குழந்தைகளின் முகத்திற்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தார். உடனே ஓவியர் அந்த புதிய மனிதரிடம், "நீங்கள் யார்?, என்னுடைய ஓவியக்கூடத்திற்குள் வந்து நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?, எதற்காக என்னுடைய ஓவியத்தை இப்படிப் பாழ்படுத்துகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த புதியமனிதர், "நீங்கள் பாழ்படுத்தியைவிடவா நான் பாழ்படுத்திவிடப் போகிறேன்" என்றார்.

ஒன்றும் புரியாமல் முழித்துக்கொண்டிருந்த ஓவியரைப் பார்த்து அந்த புதிய மனிதர், "நீங்கள் வரைந்திருக்கும் விண்ணகம் குறித்தான ஓவியத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லாரும் வெள்ளையாக இருக்கிறார்கள். அதனால்தான் நான் ஒருசில குழந்தைகள் மஞ்சள் நிறத்திலும், ஒருசில குழந்தைகள் கறுப்பு நிறத்திலும் இருக்குமாறு வண்ணம் தீட்டுகிறேன்" என்றார். அதற்கு ஓவியர், "வழக்கமாக விண்ணகத்தில் குழந்தைகள் வெள்ளையாகத்தானே இருப்பார்கள். அதனால்தான் நான் அப்படி ஓவியம் வரைந்தேன்" என்றார்.

தொடர்ந்து அந்த ஓவியர் புதிய மனிதரிடத்தில், "நீங்கள் குழந்தைகளை இப்படி மஞ்சள் நிறத்திலும், கருப்பு நிறத்திலும் வரைகிறீர்களே. உங்களுக்கு விண்ணகம் பற்றி நிறையத் தெரியுமோ?" என்று கேட்டார். அதற்கு புதியவர், "ஆமாம். எனக்கு விண்ணகம் பற்றி அதிகமாகத் தெரியும். ஒரு காலத்தில் நான்தான், "சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள்" என்று சொன்னேன். என்னுடைய அழைப்பை ஏற்றுத்தான் குழந்தைகள் எல்லா நாடுகளிலிருந்தும், இடங்களிலிருந்தும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள். அதனால் என்னுடைய அழைப்பை ஏற்று வந்திருக்கிற குழந்தைகளைப் பற்றி, எனக்கு அதிகமாகத் தெரியும்" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் மறைந்துபோனார். அடுத்த நாள் காலையில் ஓவியர் தன்னுடைய ஓவியக் கூடத்திற்கு வேகவேகமாக ஓடினார். ஆனால் விண்ணகம் குறித்த ஓவியம் அப்படியே இருந்தது. அப்போதுதான் அவருக்குப் புரிந்தது நேற்று இரவு நடந்தது எல்லாம் கனவு என்று. உடனே அவர் தன்னுடைய தூரிகையை எடுத்து, அந்த ஓவியத்தில் சில குழந்தைகளை மஞ்சள் நிறத்திலும், சில குழந்தைகளை கறுப்பு நிறத்திலும் வரைந்தார்.

ஆண்டவர் இயேசு எல்லாக் குழந்தைகளையும் தன்னிடத்தில் அழைக்கிறார். அவர் அழைக்கும் குழந்தைகளில் நிறம் குறித்தோ, இனம் குறித்தோ வேறுபாடு கிடையாது என்பதை இந்த கற்பனைக் கதை நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் சிறுபிள்ளைகள் மீது இயேசு கைகளை வைத்து ஜெபிக்குமாறு, ஒருசில பெற்றோர்கள் இயேசுவிடம் கொண்டுவருகிறார்கள். ஆனால் சீடர்களோ அவர்களை அதட்டுகிறார்கள். அதைக் கண்ட இயேசு அவர்களிடத்தில், "சிறு பிள்ளைகளை என்னிடம் கொண்டுவாருங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்கிறார். யூதர்கள் தங்களுடைய குழந்தைகளை ரபிகள், குருக்கள் ஆசிர்வதிக்கவேண்டுமென்று கொண்டுவருவார்கள். இது வழக்கமாக நடைபெறும் ஒரு காரியம்தான். ஆனால் சீடர்கள் குழந்தைகளை ஆசிர்வதிக்க வேண்டும் என்று வந்த பெற்றோர்களை அதட்டுவது நமக்கு வியப்பாக இருக்கின்றது.

இன்றைக்கும்கூட குழந்தைகள் வளர்வதற்கு, கடவுளுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்வது பெரியவர்களாகிய நாம் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கின்றோம். இன்னும் சில நேரத்தில் குழந்தைகளை நாம் ஒருபொருட்டாகக்கூட மதிப்பது கிடையாது. குடும்பத்தில் முடிவு எடுப்பதிலும், அல்லது குழந்தைகள் தொடர்ப்பாக நாம் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்கிறபோதும் நாம் அவர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. எப்போதும் குழந்தைகள் இரண்டாம் பட்சம்தான்.

இத்தகைய சூழ்நிலையில் நாம் ஆண்டவர் இயேசு சொல்லும், "விண்ணரசு குழந்தைகளுக்கு/ குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு உரியது என்பதை நாம் நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்தவேண்டும். இப்படிப்பட்ட சிந்தனையை நாம் பெற்றுக்கொண்டோம் என்றால், ஒருபோதும் குழந்தைகளை இரண்டாம் பட்சமாக நடத்தமாட்டோம்; அவர்களை இழிவாகக் கருதமாட்டோம். மாறாக அவர்களிடம் விளங்கும் தூய்மை, மாசுமறுவற்ற தன்மை போன்றவை எல்லாம் விண்ணகம் செல்வதற்கான நுழைவாயில் என்பதை உணர்ந்துகொள்வோம்.

ஆகவே, இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம், நம்மோடு வாழும் குழந்தைகளுக்கு மதிப்பளிப்போம். குழந்தை உள்ளம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
சிறுபிள்ளைகளைத் தம்மிடம் வரவழைத்த இயேசு!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ப்ரூஸ்ரிட்டர் என்ற குருவானவர் ஒருவர் இருந்தார். ஒருநாள் நள்ளிரவு அவர் இருந்த வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, அவர் கதவைத் திறந்து பார்த்தார். அப்போது இரண்டு சிறுவர் சிறுமிகள் மிகவும் பரிதாபமான கோலத்தில், வெளியே நின்றுகொண்டிருந்தனர். அந்நேரத்தில் அவர்களிடத்தில் வேறெதுவும் பேசாமல் நிலைமையைப் புரிந்துக்கொண்டு, அவர்களுக்கு தங்குவதற்கு இடமளித்துவிட்டு தூங்கப் போனார்.

மறுநாள் காலையில் அவர் விழித்தெழுந்து பார்த்தபோது, அவர் இருந்த இடமெல்லாம் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், அவர் உண்பதற்கான காலை உணவும் தாயரித்து வைக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன ப்ரூஸ்ரிட்டர் அந்த இரண்டு சிறுவர் சிறுமிகளையும் அழைத்து, நீங்கள் யார்? உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், நாங்கள் சாதாரண ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்கள். எங்களுடைய பெற்றோர் எங்களை வீட்டைவிட்டே துரத்திவிட்டனர்" என்று சொல்லி விம்மி விம்மி அழுதனர். அவர்களுடைய நிலையைப் புரிந்துகொண்டவராய் ப்ரூஸ்ரிட்டர் அவரிடம், நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இங்கே தங்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு நான் எல்லா வசதிகளையும் செய்துதருகின்றேன்" என்றார். அவர்களும் சந்தோசமாக அவரோடு அங்கு தங்கி இருந்தார்கள்.

இதற்கிடையில் ப்ரூஸ்ரிட்டருக்கு அறிமுகமானவர்கள் அவரிடம், முன்பின் அறிமுகம் இல்லாத குழந்தைகளை உங்களோடு வைத்திருப்பது நல்லதல்ல, அது பின்னாளில் பெரிய பிரச்சனையில் கொண்டு போய்முடியும். அதனால் அவர்களை இங்கிருந்து அனுப்பிவிடுங்கள்" என்று அவருக்குப் புத்திமதி சொன்னார்கள். அவரோ எவர் சொன்னதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அந்தக் குழந்தைகளைத் தன்னோடே வைத்துப் பராமரித்து வந்தார்.

சில நாடளுக்குப் பின்னர் அவருக்கு ஒரு யோசனை வந்தது. ஏன் நாம் வீடுகளிலிருந்து துரத்திவிடப்பட்ட, கைவிடப்பட்ட, அனாதைக் குழந்தைகளுக்கு என்று ஓர் இல்லம் அமைக்கக்கூடாது என்பதே அந்த யோசனை. உடனே அவர் தன்னோடு இருந்த அந்த இரண்டு சிறுவர் சிறுமிகளையும் வைத்து, உடன்படிக்கையின் இல்லம் என்றொரு இல்லத்தை அமைத்தார். இன்றைக்கு அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி பயன்பெற்று வருகின்றனர்.

ஊரார் சொன்னதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் ஏழைகள், கைவிடப்பட்ட, அனாதைக் குழந்தைகளை அன்போடு வரவேற்று அவர்களை நல்லமுறையில் பராமரித்து வரும் ப்ரூஸ்ரிட்டரின் பணி உண்மையிலே பாராட்டுக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சிறுபிள்ளைகளை தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு ஆசிர் வழங்குகின்றார். ஆனால், இயேசுவின் சீடர்கள்தான் குழந்தைகள்மீது அவருக்கு இருக்கும் அன்பினைப் புரிந்துகொள்ளாமல், அவரிடத்தில் குழந்தைகளைக் கொண்டு வந்த பெற்றோர்களை தடுக்கின்றார்கள். அதனால் இயேசு சீடர்களைக் கடிந்துகொள்கின்றார். அதன்பின்னர் தன்னிடம் கொண்டுவரப்பட்ட குழந்தைகளை அவர் ஆசிர்வதிக்கின்றார்.

இந்நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளைத் தெளிவாக விளக்குகின்றது. அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். முதலாவதாக குழந்தைகளைப் பெரியவர்கள் ஆசிர்வதிக்கின்ற வழக்கம் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யாக்கோபு, யோசேப்பின் இரு புதல்வர்களான மனாசேயையும் எப்ராயிமையும் ஆசிர்வதித்ததாக விவிலியம் நமக்குச் சான்று பகர்கின்றது (தொநூ 48:5, 14). இந்தப் பின்னணியில்தான் தங்களுடைய குழந்தைகளை இயேசு ஆசிர்வதிக்கவேண்டும் என்று அதனுடைய பெற்றோர் இயேசுவிடத்தில் கொண்டு வருகின்றார்கள். இயேசுவோ அக்குழந்தைகள் ஆசிர்வதிக்க முன்வருகின்றார். ஆனால் சீடர்களோ இயேசுவைக் காப்பாற்றுவதாக நினைத்துகொண்டு, குழந்தைகளின் பெற்றோரைத் தடுக்கிறார்கள். அதனால் இயேசுவால் கடிந்துகொள்ளப்படுகின்றார்கள்.

அடுத்ததாக, இந்த நிகழ்வின் இறுதியில் ஆண்டவர் இயேசு தனது சீடர்களைப் பார்த்துச் சொல்கின்றார், சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்கவேண்டாம்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" இவ்வார்த்தைகளையும் நாம் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும். இயேசு குழந்தைகளைத் தன்னிடம் அழைப்பதற்குக் காரணம் அவர்கள் இயேசுவிடமிருந்து ஏராளமானவற்றைக் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கே. மத்தேயு நற்செய்தி 11:29ல் இயேசு கூறுவதுபோல கனிவும் மனத்தாழ்மையும் உடையவரான அவரிடத்தில் குழந்தைகள் செல்கின்றபோது, அவரிடத்தில் இருக்கும் அந்தப் பண்புகளை எல்லாம் கற்றுக்கொல்லம் என்று உறுதி. மேலும் குழந்தையின் உள்ளத்தை யாராரெல்லாம் கொண்டிருகின்றார்களோ அவர்களுக்கு மட்டுமே உரியது என்பதை ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

ஆகவே, நாம் குழந்தைகளின் உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம், குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தடையாய் இல்லாமல், அவர்களின் வளர்சிக்குக் காரணமாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!