Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        16  ஆகஸ்டு 2018  
                                                           பொதுக்காலம் 19ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து வெளியேறு.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-12

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: "மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை; ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார். மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன் உறைவிடத்திலிருந்து வேறொர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணரலாம். நாடுகடத்தப்படும் ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் உன் பொருள்களை எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு. அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய். அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச் செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்." எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப் படுகையில் கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன். மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே வெளியேறினேன்.

காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: "மானிடா! கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம், `நீ செய்கிறது என்ன?' என்று கேட்கவில்லையா? நீ அவர்களுக்குச் சொல்: எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்; நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப்பட்டோராயும் சிறைப்பட்டோராயும் செல்வர். அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக் கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 78: 56-57. 58-59. 61-62 (பல்லவி: 7b)
=================================================================================
பல்லவி: இறைவனின் செயல்களை ஒருபோதும் மறவாதிருங்கள்.

56 ஆயினும், உன்னதரான கடவுளை அவர்கள் சோதித்தனர்; அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்; அவர்தம் நியமங்களைக் கடைப்பிடிக்கவில்லை. 57 தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்; நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; கோணிய வில்லெனக் குறி மாறினர். பல்லவி

58 தம் தொழுகை மேடுகளால் அவருக்குச் சினமூட்டினர்; தம் வார்ப்புச் சிலைகளால் அவருக்கு ஆத்திரமூட்டினர். 59 கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்; இஸ்ரயேலை அவர் முழுமையாகப் புறக்கணித்தார். பல்லவி

61 தம் வலிமையை அடிமைத்தனத்திற்குக் கையளித்தார்; தம் மாட்சியை எதிரியிடம் ஒப்புவித்தார்; 62 தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்; தம் உரிமைச் சொத்தின்மீது கடுஞ்சினங்கொண்டார். அவர்களுடைய இளைஞரை நெருப்பு விழுங்கியது. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 119: 135

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன் மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21 - 19: 1


அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?" எனக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம் கூறியது: "ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன். விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, `என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்' என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, 'நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.

அப்போது தலைவர் அவனை வரவழைத்து, "பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார்.

அத்தலைவர் சினங்கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்." இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

எத்தனை முறை மன்னிப்பது. மன்னிப்பதற்கு கணக்கு பார்ப்பது என்பது அர்த்தமற்றது.

மன்னிக்கும் போது நாம் தெய்வீகத் தன்மை பெறுகின்றோம். காரணம் மன்னிப்பது அவரது அற்புத செயல்.

சிலுவையில் அவமானத்தின் உச்சத்தில், காயங்களோடு தொங்கிய போது, வலியும் வேதனையும், மனபாரமும் தாங்க இயலாத நேரத்தில் கூட, தன்னை வதைத்தவர்களை மன்னித்த வள்ளல் அவரே.

மன்னிப்பை கேட்பதற்கும் தாமதிக்க கூடாது. மன்னிக்கவும் தாமதிக்க கூடாது. இரண்டில் எது தாமதமானாலும், உறவுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மன்னிக்கும் இறைவன்; மன்னிக்க மறுக்கும் மானிடர்கள்!

ஓர் ஊரில் மூதாட்டி ஒருத்தி இருந்தாள். அவள் கடவுளிடத்தில் ஆழமான பக்தி கொண்டிருந்தாள். அவளுடைய பக்தியைக் கண்டு வியந்து, கடவுளும் அவளுக்கு அவ்வப்போது காட்சி கொடுத்து வந்தார். கடவுள் அவளுக்குக் காட்சி கொடுப்பதை அவள் அக்கம் பக்கத்துக்கு வீட்டாரிடம் சொல்ல, அது எப்படியோ அவ்வூரில் இருந்த நாட்டமைக்குக் தெரிய வந்தது.

ஊர் நாட்டமையோ கேலியும் கிண்டலும் பிடித்தவன். ஒருநாள் அவன் மூதாட்டியை வந்து சந்தித்தான். "பாட்டி! உங்களுக்குக் கடவுள் அடிக்கடி காட்சி கொடுப்பதாகக் கேள்விப்பட்டேன். அடுத்தமுறை கடவுள் உங்களுக்குக் காட்சி கொடுக்கும்போது, யாருக்கும் தெரியாமல் நான் செய்த பாவங்கள் என்னென்ன என்று கடவுளிடத்தில் கேட்பாயா?" என்று நக்கலாகக் கேட்டான். அந்த மூதாட்டியும் அதற்குச் சரியென்று சொல்லி, அவனிடத்திலிருந்து நகர்ந்து சென்றாள்.

ஒருசில நாட்கள் கழித்து மீண்டுமாக ஊர் நாட்டமை அந்த மூதாட்டியை வந்து சந்தித்தான். "என்ன பாட்டி! கடவுள் உனக்குக் காட்சி கொடுத்தாரா? அப்படிக் காட்சி கொடுக்கும்போது நான் கேட்டதை அவரிடத்தில் எடுத்துச் சொன்னாயா?" என்று கேட்டான். அதற்கு மூதாட்டி அவனிடம், "கடவுள் எனக்குக் காட்சி கொடுத்தார். அப்போது நீ சொன்னதையும் அவரிடத்தில் சொன்னேன். அதற்கு அவர், நான் ஊர் நாட்டமை செய்த பாவங்கள் அனைத்தையும் அறிவேன். ஆனால், இப்போது நான் அவனுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டேன் எனச் சொல் என்று சொன்னார்" என்றாள். இதைக் கேட்டு ஊர் நாட்டமை எதுவும் பேசாமல் தன் வழியில் போனான்.

நாம் செய்த குற்றங்கள் கணக்கில் அடங்காதவை என்றாலும், அந்தக் குற்றங்களை எல்லாம் இறைவன் மன்னிக்கின்றார் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில், சீமோன் பேதுரு இயேசுவிடத்தில் வந்து, "ஆண்டவரே! என் சகோதர சகோதரிகளுள் ஒருவர் எனக்கெதிராகப் பாவம் செய்தால், நான் அவரை எத்தனை முறை மன்னிப்பது, ஏழுமுறையா?" என்று கேட்கின்றார். அதற்கு இயேசு அவரிடத்தில், "ஏழு முறை அல்ல, எழுபது முறை ஏழு முறை" என்று சொல்கின்றார். இப்படிச் சொல்லிவிட்டு ஓர் உவமையையும் சொல்கின்றார். ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய உவமையில் பேதுரு கேட்ட கேள்விக்கு சரியான பதில் இருப்பதோடு மட்டுமல்லாமல், நான் நமக்கு எதிராகக் குற்றம் புரிவோரை எத்தனை மன்னிக்கவேண்டும் என்பதற்கான தெளிவும் இருக்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இயேசு சொல்லக்கூடிய உவமையில் இரண்டு முக்கியமான உண்மைகள் அடங்கி இருக்கின்றன. ஒன்று மன்னிப்பதில் இறைவன் காட்டும் தாராளம். இரண்டு மன்னிப்பதில் மனிதன் காட்டும் கஞ்சத்தனம். இவ்விரண்டையும் சற்று ஆழமாய் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும் அரசர் தன்னிடத்தில் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருந்த ஒருவனுடைய கடனைத் தள்ளுபடி செய்கின்றார். ஒரு தாலந்தின் மதிப்பு (தற்போதைய சூழலில்) ஐந்தாயிரத்திலிருந்து ஆறாயிரம் ருபாய் எனக் கொண்டாலும், பத்தாயிரம் தாலந்து என்று சொன்னால் ஆறு கோடிக்கு வருகின்றது. அவ்வளவு பெரிய தொகையையும் அரசர் தள்ளுபடி செய்கின்றார். அப்படியானால் அரசர்/கடவுள் நாம் செய்த குற்றங்களை மன்னிப்பதில் தாரளமாக இருக்கின்றார் என்றுதான் சொல்லவேண்டும். திருப்பாடல் ஆசிரியர் சொல்வதுபோன்று, "இறைவன் நம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?". ஒருவரும் நிலைத்து நிற்க முடியாது. அதனால்தான் இறைவன் நம்மை அளவு கடந்த விதமாய் மன்னிக்கின்றார்.

அடுத்து, இறைவன் நம்மை மன்னிப்பதுபோன்று நாம் நம் சகோதர சகோதரிகளை மன்னிக்கின்றோமா? என்று சொன்னால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உவமையில் வரும் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட மனிதர், வெளியே வந்து தன்னிடம் வெறும் நூறு தெனாரியம் (ஒரு தெனாரியம் ஒருநாள் கூலி) கடன்பட்ட பணியாளரைப் பிடித்து சிறையில் அடைக்கின்றார். இது கடவுள் நம்மைத் தாராளமாய் மன்னித்தாலும் நாம் நம் சகோதர சகோதரிகளை அவ்வளவு எளிதாய் மன்னிக்கமாட்டோம் என்பதைத்தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. "எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களைத் மன்னியும்" என்றுதான் அனுதினமும் இறைவனிடம் ஜெபிக்கின்றோம்.

ஆகவே,. இறைவன் நம்மைத் தாராளமாய் மன்னிப்பது போல, நாம் நம் சகோதர சகோதரிகளை தாராளமாய் மன்னிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மன்னிப்பே மகத்தான மருந்து, அதுவே அருமருந்து

ஒரு பங்கு ஆலயத்தில் மாலை வேளையில் நடைபெற்ற வழிபாட்டில் குருவானவர் மனமாற்றத்தைப் பற்றியும் பாவத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் போதித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த இளம்பெண் ஒருத்தி தன்னுடைய கடந்தகால வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தாள். தான் மிகவும் தாறுமாக வாழ்ந்துவிட்டதை எண்ணி மனம் வருந்தி அழுதாள். குருவானவரிடத்தில் சென்று, தன்னுடைய பாவத்தை எல்லாம் அறிக்கையிட்டு, இனிமேல் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழப் போவதில்லை என்று உறுதிமேற்கொண்டு தன்னுடைய வாழ்க்கையை புதிதாக வாழத் தொடங்கினாள்.

அதன்பிறகு அவள் கோவிலே தஞ்சம் என்று கிடந்தாள். கோவில் காரியங்களில் தன்னையே ஈடுபடுத்திக்கொண்டு, பக்தியான ஒரு பெண்மணியை வாழ்ந்துவந்தாள். இந்த நேரத்தில் ஆலயத்திற்கு வந்துபோகும் ஒரு இளைஞன் இவள்மீது காதல்கொள்ளத் தொடங்கினான். அவன் அவ்வூரில் இருந்த ஒரு பணக்காரனின் மகன். பதிலுக்கு அவளும் அவன்மீது காதல்கொள்ளத் தொடங்கினாள். காதல் திருமணம் வரை வந்துநின்றது.

திருமணம் பற்றிய பேச்சு வந்தபோது, அந்த இளைஞனின் வீட்டில் இருந்தவர்கள் அவனிடம், "நீ அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளக்கூடாது. ஏனென்றால் அவள் ஒரு பாவமான வாழ்க்கை வாழ்ந்தவள். மேலும் நம்முடைய குடும்பம் இந்த ஊரிலே மிகவும் பணக்காராக் குடும்பம், மிகவும் பக்தியான குடும்பம். இப்படியிருக்கும்போது நீ அந்தப் பெண்ணை மணப்பது சரிப்பட்டு வராது" என்று பேசத் தொடங்கினார்கள்.

அப்போது அந்த இளைஞன் எழுந்து அவர்களிடம், "நீங்கள் அந்தப் பெண்ணை மட்டும் சந்தேகப்படவில்லை. இயேசுவின் இரத்தத்திற்கு இருக்கும் ஆற்றலையும், வல்லமையையும் சந்தேகப்படுகிறீர்கள். இயேசுவின் இரத்தம் நமது பாவத்தை/ இளம்பெண்ணின் பாவத்தை எல்லாம் கழுவிப்போக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டான். இதைக் கேட்ட அந்த இளைஞனின் வீட்டார் தங்களுடைய தவறை உணர்ந்து வருந்தினார்கள். இயேசுவின் இரத்தத்தை பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் கொண்டிருக்கிறது என்பது முழுமையாக ஏற்றுக்கொண்டு, அந்த இளம்பெண்ணை, அவள் தன்னுடைய கடந்த வாழ்வில் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து, மருமகளாக ஏற்றுக்கொண்டார்கள்.

மன்னிப்பு என்பது மிகச் சிறந்த அருமருந்து, அது எல்லாருடைய மன நோய்களையும் குணப்படுத்த வல்லது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் பேதுரு ஆண்டவர் இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே என்னுடைய சகோதரன் எனக்கெதிராகக் குற்றம் செய்தால், நான் அவனை எத்தனை முறை மன்னிப்பது, ஏழு முறையா? என்று கேட்கிறார். அதற்கு இயேசு அவரிடம், "ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்" என்கிறார்.

யூதர்களைப் பொறுத்தளவில் தவறு செய்தவர்களைத் தண்டிப்பது (கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்) என்ற சட்டம் இருந்தது. அந்த வகையில் பேதுரு தனக்கெதிராகத் தவறு செய்யும் தன்னுடைய சகோதரனை பழிக்குப் பழி வாங்காமல், ஏழுமுறை மன்னிப்பதாக சொல்வதால், மன்னிப்பதில் தான் மிகவும் தாராளமாக இருப்பதாக ஆண்டவர் இயேசுவிடம் அவர் பெருமைபட்டுக்கொள்கிறார். ஆனால் இயேசுவோ அவரிடம், "ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை" என்று சொல்லி, அளவு கடந்த விதத்தில் மன்னிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம் நமக்கெதிராகக் குற்றம் செய்பவர்களை நாம் அளவுகடந்த விதத்தில் மன்னித்து ஏற்றுக்கொள்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். எசாயாப் புத்தகம் 55:7 ல் வாசிக்கின்றோம், "மன்னிப்பதில் கடவுள்/அவர் தாராள மனத்தினர்" என்று. ஆகவே, கடவுளைப் போன்று நாம் மன்னிப்பதில் தாராள உள்ளத்தினராய் விளங்குவோம்.

இன்றைக்கு உளவியலும், மருத்துவமும் மன்னிப்பின் மகத்துவத்தைக் குறித்து அதிகமாகப் பேசுகிறது. குறிப்பாக மன்னிப்பதால் உடலில் இருக்கும் பல்வேறு நோய்கள் காணாமல் போவதாக மருத்துவம் சொல்கிறது. நாம் மன்னிப்பின் மகத்துவத்தை உணர்ந்துகொண்டு, நமக்கெதிராகத் தவறுசெய்தவர்களை நாம் மன்னித்து வாழ்வோம்

மூடர்கள் மன்னிக்கவும் மறக்கவும் மாட்டார்கள். அறிவாளிகள் மன்னிப்பார்கள் மறக்கமாட்டார்கள். கபடற்றவர்கள் மன்னிக்கவும் மறக்கவும் செய்வார்கள்" என்பார் தாமஸ் சாஸ் என்ற எழுத்தாளர். ஆகவே நாம் கபடற்றவர்களாக வாழ்ந்து மன்னிப்போம், மறப்போம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் நிம்மதியான வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!