|
|
04
ஆகஸ்ட் 2018 |
|
|
பொதுக்காலம்
17ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர்
உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 11-16,24
அந்நாள்களில் குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள்
அனைவரையும் நோக்கி, "இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்;
ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக
இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்" என்று முறையிட்டனர்.
அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது:
"நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும்
எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பி யுள்ளார்.
எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக்கொள்ளுங்கள்;
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது
உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனை பற்றி ஆண்டவர் தம் மனத்தை
மாற்றிக்கொள்வார்.
இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது
எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள். ஆனால் ஒன்றை மட்டும்
நன்கு அறிந்து கொள்ளுங்கள்; என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற
இரத்தப்பழி உங்கள் மேலும் இந்நகர் மேலும், அதில்
குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும்.
ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க
ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்."
பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும்
நோக்கி, "கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்; ஏனெனில் நம்
கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்" என்றார்கள்.
ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு,
சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 69: 14-15. 29-30. 32-33 ( பல்லவி: 13ab
காண்க)
=================================================================================
பல்லவி: எனது விண்ணப்பத்திற்கு கடவுளே பதில் மொழி தாரும்.
14 சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்; என்னை
வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்.
15 பெருவெள்ளம் என்னை அடித்துக் கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல்
என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன் வாய் திறந்து என்னை
மூடிக் கொள்ளாதிருப்பதாக! பல்லவி
29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும்
மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை
நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை
மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி
32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித்
தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின்
விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை
அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(மத் 5: 10 )
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்
பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து
இயேசுவிடம் அறிவித்தனர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12
அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய
செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், "இவர்
திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச்
செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்" என்று
கூறினான்.
ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின்
பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.
ஏனெனில் யோவான் அவனிடம், "நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல"
என்று சொல்லி வந்தார். ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்;
ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால்
அவர்களுக்கு அஞ்சினான்.
ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம்
ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக
அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான்.
அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, "திருமுழுக்கு யோவானின்
தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்" என்று
கேட்டாள்.
இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன்
ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச்
சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை
ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம்
கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.
யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம்
செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼
சிந்தனை
கள்ளக்காதல் இன்று 04 வயது குழந்தையை கொல்ல செய்து கொலையாளியாக
தங்களது வாழ்நாள் முழுவதும் குற்றத்தோடே வாழச் செய்து இருக்கின்றது.
இது பத்திரிக்கை செய்தி.
விவிலியத்திலும் கள்ள தொடர்புக்காக ஒரு புனிதரின் தலையை பரிசாக
கேட்டு கொலை நடந்தறியிருக்கின்றது.
உணர்ச்சிகளை வடிகாலாக்கி அதனை அடக்க தெரியாதவர்கள் குற்றப்பழிக்கு
ஆளாகிறார்கள் என்பதுவே உண்மை. தவறுகளை எந்த ரூபத்திலும் மறைத்தாலும்,
எவ்வளவு திறமையாக செயல்களை செய்து வந்தாலும், பல நாள் திருடன்
ஒருநாள் ஆகப்படுவான் என்பதுவே உண்மை. யானைக்கும் அடி சறுக்கும்
என்பதுவும் உண்மையே.
திறமைகளை பயன்படுத்தி தவறு செய்வதிலே நம்முடைய ஆற்றலை விரயமாக்காமல்,
திறமைகளை பயன்படுத்தி நன்மைகளை செய்து நல்லவர்களாக வாழ்ந்திட
முனைவோம். இதுவே முன்னேற்றத்தை தரும்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
உண்மைக்குச் சான்று பகர்வோம்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், அமெரிக்க அதிபராகத்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக வழக்குரைஞர் பணியைத்தான்
செய்து வந்தார். மக்களிடத்தில் அவர் உண்மையும், நேர்மையுமான ஒரு
வழக்குரைஞர் என்று பெயர் எடுத்திருந்தார்.
ஒருநாள் அவரைச் சந்திக்க ஒரு பெரிய பணக்காரன் வந்திருந்தான்.
அவன் ஒரு கொலைக் குற்றத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் ஆபிரகாம்
லிங்கனிடம், "நான் ஒரு கொலைவழக்கில் மாட்டிக்கொண்டு விட்டேன்,
என்னை எப்படியாவது நீங்கள் நிரபராதி என்று நிருபித்து, வழக்கிலிருந்து
விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டான்.
அதற்கு அவர், "நான் ஒருபோதும் பொய்மைக்குத் துணைபோகமாட்டேன்.
அதை என்னுடைய மனச்சாட்சி அனுமதிக்காது. ஒருவேளை நான் உங்களிடம்
பணம் வாங்கிக்கொண்டு, நீங்கள் நிரபராதி என்று வாதாடினால், என்னுடைய
மனசாட்சி என்னிடம், "அபிரகாம் நீ ஒரு பொய்யன், ஒரு சந்தர்ப்பவாதி
என்று என்னை சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும். அதனால் என்னால்
உங்களுக்காக வழக்காட முடியாது. வேண்டுமானால் நீங்கள் வேறு ஆளைப்
பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வு ஆபிரகாம் லிங்கன் எந்தளவுக்கு உண்மையும்,
நேர்மையும் உள்ளவராக விளங்கினார் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது.
இன்றைக்கு எங்கு பார்த்தாலும் பொய்யும், புரட்டும் மலிந்து
போய்விட்டது. நேர்மையான, உண்மைக்குச் சான்று பகரக்கூடிய ஒரு மனிதரைப்
பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. இத்தகைய பின்னணில் இன்றைய
நற்செய்தி வாசகத்தில் வரும் திருமுழுக்கு யோவான் உண்மைக்குச்
சான்று பகரக்கூடியவராக இருக்கின்றார்.
ஏரோது தன்னுடைய சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாளோடு
வாழ்கிறான். இதை அறியும் திருமுழுக்கு யோவான் ஏரோதிடம், "நீ உன்னுடைய
சகோதரனின் மனைவியோடு வாழ்வது நல்லதல்ல" என்று மிகத் துணிச்சலாக
அறிவிக்கின்றார். அதற்காகத் தன்னுடைய உயிரையும் இழக்கின்றார்.
உண்மையான மனிதர்களைப் பார்ப்பதே அரிது. அப்படியே உண்மையும்,
நேர்மையுமான மனிதர்கள் இருந்து, அவர்கள் ஒருவர் தவறுசெய்கிறபோது
அதை சுட்டிகாட்டுவது மிகமிக அரிது. ஆனால் திருமுழுக்கு யோவான்
எதற்கும், யாருக்கும் பயப்படாமல் உண்மையை துணிச்சலுடன் எடுத்துரைக்கின்றார்.
நற்செய்தியில் வரும் இந்த நிகழ்வு நமக்கு இரண்டு உண்மைகளை எடுத்துரைகிறது.
ஒன்று உண்மைக்குச் சான்று பகர்வது. இரண்டாவது தீய வழியை விட்டு
விலகுவது. திருமுழுக்கு யோவான் உண்மையின் உரைகல், அவர் உண்மைக்குச்
சான்று பகர்ந்தவர். அவரைப் போன்று நாமும் உண்மைக்குச் சான்றுபகர்வதுதான்
உண்மையான கிறிஸ்தவ வாழ்வாக இருக்கும்.
திருப்பாடல் ஒன்றாம் அதிகாரம் 1-3 வரை உள்ள இறைவார்த்தையில் படிக்கின்றோம்,
"நற்பேறு பெற்றவர் யார்? அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீய வழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
ஆனால், ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது
சட்டத்தைப்பற்றி இரவும், பகலும் சிந்திப்பவர்..."என்று.
திருமுழுக்கு யோவான் தீயவர்களின் வழியில் நில்லாதவர் மட்டுமல்ல,
ஆண்டவருக்கு உகந்த நல்வழியில் நடந்தவர், அதனால்தான் "பெண்களுள்
பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர்
யாருமில்லை" என்ற நற்பேற்றை ஆண்டவர் இயேசுவிடமிருந்து
பெறுகின்றார். நாமும் திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மையின்
வழியில் நடப்போம்.
அடுத்ததாக இன்றைய இறைவார்த்தை நமக்குத் தரும் சிந்தனை தீய வழியை
விட்டு விலகுவதாகும். தீய வழியில் சென்ற ஏரோதை திருமுழுக்கு
யோவான் கடிந்துகொண்டும், அவன் அந்த தவற்றிலிருந்து வெளியே வராமல்
மீண்டும் மீண்டுமாக அந்த தவற்றைச் செய்தான். அதனால்தான் இறுதியில்
மிகக் கொடிய அழிவைச் சந்தித்தான். ஆகவே தீய வழியில் செல்லும்
எவரும் தங்களுடைய தவற்றை உணர்ந்து நல்வழியில் நடக்க வேண்டும்.
இறைவாக்கினர் எரேமியா புத்தகம் 21:16 ல் வாசிக்கின்றோம்,
"இப்பொழுதே உங்கள் வழிகளையும், செயல்களையும் சீர்படுத்திக்கொள்ளுங்கள்;
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது
உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனைபற்றி ஆண்டவர் தம் மனதை
மாற்றிக்கொள்வார்" என்று. ஆம், தீயவர் ஒருவர் தன்னுடைய தவறை
உணர்ந்து, திருந்தி வரும்போது ஆண்டவர் அவரைக் கனிவோடு ஏற்பார்.
எனவே, நமது வாழ்வில் நாம் மேற்கொள்ளும்/ நடக்கும் தீய வழிகளை
விட்டுவிடுவோம். திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மைக்குச்
சான்று பகர்வோம். அதற்கு ஈடாக எதையும் கொடுக்கத் துணிவோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
-------------------------------------------------------- |
|