Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            03  ஜூலை  2018  
                                                           பொதுக்காலம் 17ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 1-9

யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு: "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, அங்கு வழிபாடு செலுத்த வரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே. ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பலாம்.

அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன் ".

நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: "ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும், நீங்கள் செவிசாய்க்காதபொழுதும், நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பிவைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில், இக்கோவிலைச் சீலோவைப்போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்."

ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர். மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, "நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்" என்று கூச்சலிட்டனர். "இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?" என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 69: 4. 7-9. 13 (பல்லவி: 13b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

4 காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியை விட மிகுதியாய் இருக்கின்றனர்; பொய்க் குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்? பல்லவி

7 ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. 8 என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். 9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச் சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி

13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(1 பேது 1: 25)

அல்லேலூயா, அல்லேலூயா! "நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்." இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

சிந்தனை

பிறரை ஏற்றுக் கொள்வது என்பது இன்றைய பெரிய பிரச்சனை.

காரணங்கள் பல சொல்லி இன்றைக்கு பிறரை ஏற்றுக் கொள்ள தயங்குகின்றோம்.

கிறிஸ்தவத்திற்கு இந்த செயல் உகந்தது தானா?

மனைவியை கூட விலக்கி விடுவது ஏற்புடைய செயல் அல்ல என்று கூறுகின்றார். மத் 19: 09

ஏற்புத்தன்மை இல்லாததாலே இன்றைக்கு திருமணங்கள் இன்று பிரிவினைக்கு போகின்றது.

மனம் தான் காரணம். பல காரணங்களை சொல்லி புறக்கணிப்பது என்பது, எளிது தான். இதுவே நமக்கு ஏற்பட்டால் நம் மனம் என்ன பாடுபடும் என்பதை உணர்ந்தோம் என்றால், பிறரை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள தயங்கமாட்டோம்.

இதனாலேயே இறைவாக்கு கூறுகின்றது. பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ, அதையே நீங்கள் மற்றவர்களுக்கு செய்யுங்கள் என்று. இதனை புரிந்து மற்றவர்களை ஏற்றுக் கொள்ள முற்படுவோம். நம்மையும் மற்றவர்கள் குறை நிறையோடு ஏற்றுக் கொள்ள நம் விரும்பும் போது, அதனையே நாமும் மற்றவர்களுக்கு செய்வோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!