| 
				
					|  | 02  
					ஜூலை  2018 |  |  
					| பொதுக்காலம் 
					17ம் வாரம் |  
					| ================================================================================= முதல் வாசகம்
 =================================================================================
 குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.
 
 இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 1-6
 
 எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: "நீ எழுந்து குயவன் 
					வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்." 
					எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல் வட்டை 
					கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். குயவர் தம் கையால் செய்த 
					மண் கலம் சரியாக அமையாதபோதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி 
					வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.
 
 அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு: "இஸ்ரயேல் வீட்டாரே, 
					இந்தக் குயவன் செய்வது போல் நானும் உனக்குச் செய்ய முடியாதா? 
					என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் 
					வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்."
 
 இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 =================================================================================
 பதிலுரைப் 
					பாடல் 
					- 
					திபா 146: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 5a)
 =================================================================================
 
 பல்லவி: இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர். 
					அல்லது: அல்லேலூயா.
 
 1 என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு; 2 நான் உயிரோடு உள்ளளவும் 
					ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து 
					பாடிடுவேன். பல்லவி
 
 3 ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை 
					நம்ப வேண்டாம். 4 அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய 
					மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில்அவர்களின் எண்ணங்கள் 
					அழிந்துபோம். பல்லவி
 
 5 யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் 
					பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் 
					பேறுபெற்றோர். 6 அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள 
					யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் 
					இருப்பவரும் அவரே! பல்லவி
 
 
 =================================================================================
 நற்செய்திக்கு முன் 
					வாழ்த்தொலி
 =================================================================================
 திப 16: 14b
 
 அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் 
					இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.
 
 =================================================================================
 நற்செய்தி வாசகம்
 =================================================================================
 நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; 
					கெட்டவற்றை வெளியே எறிவர்.
 
 மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 
					13: 47-53
 
 அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: "விண்ணரசு கடலில் 
					வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு 
					ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் 
					உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை 
					வெளியே எறிவர்.
 
 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து 
					தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே 
					அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்." "இவற்றையெல்லாம் 
					புரிந்துகொண்டீர்களா?" என்று இயேசு கேட்க, அவர்கள், "ஆம்" 
					என்றார்கள்.
 
 பின்பு அவர், "ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா 
					மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் 
					வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்" என்று 
					அவர்களிடம் கூறினார். இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு 
					அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
 
 இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼
 
 சிந்தனை
 
 நேர்மையாளர்கள் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையை இறைவாக்கு தருகின்றது.
 
 இந்த உலகிலா? என்றால் இல்லை என்பது தான் பதில்.
 
 நேர்மையாளர்கள் அருகிக் கொண்டே போகின்ற இந்த மண்ணுலகில், 
					நேர்மையாளர்கள் நேர்மையாற்றவர்களால் மதிக்கப்படுவதில்லை. இதனால் 
					நேர்மையாளர்கள் மனசோர்வுயுற்று போகின்ற நிலை இன்றைய நிலையாகிப் 
					போனது.
 
 இந்த நிலையில் இறைவாக்கு கூறுகின்றது, நேர்மையாளர்கள் இறைவனால் 
					இறுதி தீர்வை நாளில் மதிக்கப்படுவார்கள். பிரித்தெடுக்கப்பட்டு 
					நேர்மையாளர்களுக்குரிய மரியாதை தரப்படும் என்கிற உத்தரவாதம் படைத்தவரால், 
					வாக்கு மாறாதவரால் தரப்பட்டுள்ளது. நம்புவோம். நேர்மையாளருக்குரிய 
					கைம்மாறு பெற்றுக் கொள்ள முனைவோம்.
 
 =================================================================================
 மறையுரைச் சிந்தனை - 
					1
 =================================================================================
 விண்ணரசு கடலில் வீசப்பட்ட வலைக்கு ஒப்பாகும்
 
 ஓர் ஊரில் வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவர் 
					திடிரென்று மரணம் அடைந்தார். மரணத்திற்குப் பின் அவர் விண்வெளி 
					ஓடும் தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் (கற்பனைக் 
					கதை அல்லவா? அப்படிதான் இருக்கும்). அவரிடம் சொர்க்கத்திற்கான 
					பயணச்சீட்டு இருந்தது.
 
 ரயில் முதல் நிறுத்தத்துக்கு வந்தது. நடைமேடையில் போதிய வெளிச்சம் 
					இல்லை. எண்ணெய் விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருந்தன. 
					துருப்பிடித்த பெயர்பலகையில் 
					"சொர்க்கம்" என்ற எழுத்துகள் 
					தேய்ந்து போயிருந்தன. ஆங்காங்கே பலர் வறண்ட தரையில் கிழிந்த உடைகளுடன் 
					புரண்டு கிடந்தனர்.
 
 இதைப் பார்த்து பெரியவர் திடுக்கிட்டார். "இதுவா சொர்க்கம்?".
 
 வேகமாக இறங்கி, தொடர்வண்டி நிலைய அதிகாரியின் அறைக்கு போனார். 
					அங்கே விலா எலும்புகள் தெரிய படுத்திருந்த சாமியார் ஒருவரிடம் 
					விசாரித்தார். ஆம் இது தான் சொர்க்கம் என்றார் அவர். இயேசு 
					புத்தரெல்லாம் இங்கேயா இருக்கிறார்கள்?, ஓ! அவர்கள் எல்லாரும் 
					அடுத்த நிறுத்தத்தில் இறங்கினார்கள் என்றார் சாமியார். புறப்பட்டுக் 
					கொண்டிருந்த தொடர்வண்டியில் ஓடிப்போய் ஏறினார் பெரியவர்.
 
 பளபளவென நியான் பலகை "நரகம்" என்று வரவேற்றது. பெரியவர் தயக்கத்துடன் 
					இறங்கினார். பளிங்குக் கற்கள் போடப்பட்ட நடைமேடை, அசுர விளக்குகளின் 
					கீழ் பளபளத்தது. எங்கே பார்த்தாலும் கொண்டாட்டமும் மகிழ்ச்சியாகவும் 
					இருந்தது. அங்கே ஒரு இடத்தில் புத்தர் தியானத்தில் அமர்ந்திருந்தார். 
					இயேசு ஒருபுறம் பலரிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். இன்னும் 
					பல யோகிகளும் மகான்களும் அங்கே தென்பட்டனர்.
 
 பெரியவர் அதிந்தார். கோபமாக அங்கிருந்த அதிகாரியின் அறைக்குப் 
					போனார். தொடர்வண்டி நிலையங்களில் பெயர்பலகைகள் தவறுதலாக மாற்றி 
					வைத்திருக்கிறது என புகார் கொடுத்தார். அமர்க்களமாக உடுத்தியிருந்த 
					அதிகாரி சிரித்தார். அதெல்லாம் இல்லை. நீங்கள் முதலில் பார்த்தது 
					சொர்க்கம் தான். இது தான் நரகம். முதலில் இங்கேயும் இருளாகத்தான் 
					இருந்தது. புத்தர், இயேசு போன்றவர்கள் இங்கே வந்து இறங்கிய 
					சொற்ப நேரங்களில் எல்லாம் தலைகீழாக மாறிப்போய் விட்டது என்றார்.
 
 நாம் இருக்கும் இடத்தை நம்மால் சொர்க்கமாகவும், நரகமாகவும் 
					மாற்றலாம். எல்லாம் நம் கையில் இருக்கிறது என்பதை இந்த கற்பனைக் 
					கதை நமக்கு எடுத்துக்கூறுகிறது.
 
 நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கடலில் வீசப்பட்ட வலை உவமையைப் 
					பற்றி பேசுகிறார். கடலில் வீசப்படும் வலை எல்லா வகையான மீன்களையும் 
					இழுத்துக்கொண்டு வரும். கரைக்கு வந்தபிறகு நல்லவை கூடைகளில் போடப்படும், 
					கெட்டவை வெளியே தூக்கி எறியப்படும். அதுபோன்றுதான் உலக 
					முடிவிலும் நல்லவர்கள் விண்ணகமும், தீயவர்கள் கீழுலகமும் செல்வர்கள் 
					என்கிறார் இயேசு.
 
 இயேசு கிறிஸ்து விண்ணரசை பலவற்றிற்கு ஒப்பிடுகின்றார். கடுகு 
					விதைக்கு, நிலத்தில் மறைந்திருக்கும் புதையலுக்கு இப்படியாக இன்னும் 
					சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இயேசு விண்ணரசை கடலில் வீசப்பட்ட 
					வலைக்கு ஒப்பிடுவது நமக்கு கவனத்தை ஈர்ப்பதாக இருக்கின்றது. 
					கடல் போன்ற இந்த உலகத்தில் நல்லவர்கள், தீயவர்கள், 
					நேர்மையுள்ளோர், நேர்மையற்றோர் என எல்லாரும் உண்டு. இப்படிப்பட்ட 
					உலகில் வலை போன்று இறுதித்தீர்ப்பு வருகிறது. இதில் நல்லவர்கள் 
					இறைவன் அளிக்கும் விண்ணக மகிமையைப் பெறுகிறார்கள். தீயவர்களோ 
					வேதனையை அனுபவிக்கிறார்கள். ஆக, நம்முடைய விண்ணக வாழ்வு நம்முடைய 
					மண்ணக வாழ்வைப் பொறுத்தே அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது 
					மிகையாகது.
 
 நாம் எப்படி விண்ணகத்தை அடையலாம் என்பதையும் ஆண்டவர் இயேசு நமக்குக் 
					கற்றுத் தந்திருக்கிறார். பசித்தோருக்கு உணவிடுவதன் வழியாக, தாகமாக 
					இருப்போரரின் தாகத்தைத் தணிப்பதன் வழியாக, ஆடையின்றி இருப்போரை 
					உடுத்துவதன் வழியாக இதுபோன்ற அன்புச் செயல்களை செய்வதன் வழியாக 
					நாம் விண்ணரசைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது இயேசுவின் போதனையாக 
					இருக்கின்றது.
 
 ஆகவே, இந்த மண்ணுலக வாழ்வை அன்புமயமாக்குவோம், இறைவன் அளிக்கும் 
					விண்ணக வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
 
 மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 =================================================================================
 மறையுரைச் 
					சிந்தனை - 2
 =================================================================================
 
 
 - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
 =================================================================================
 மறையுரைச் சிந்தனை - 
					3
 =================================================================================
 
 
 =================================================================================
 மறையுரைச் சிந்தனை - 
					4
 =================================================================================
 
 --------------------------------------------------------
 |  |