Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            01  ஜூலை  2018  
                                                           பொதுக்காலம் 17ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எனக்கு ஏன் தீராத வேதனை? நீ திரும்பி வந்தால் என்முன் வந்து நிற்பாய்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 15: 10. 16-21

நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதும் இல்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள். நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன.

ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று. களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை. உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர். எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!

எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: "நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்பாய்; பயனில நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம். நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்; அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்; ஆனால், உன்மேல் வெற்றிகொள்ள மாட்டார்கள்; ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்; முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 59: 1-2. 3. 9-10. 16-17 (பல்லவி: 16c)
=================================================================================
பல்லவி: நெருக்கடி வேளையில் எனக்கு அரணும் அடைக்கலமும் நீரே.

1 என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்; என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு அளித்தருளும். 2 தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும். பல்லவி

3 ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்; கொடியவர் என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்; நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும் இழைக்கவில்லை; பாவம் ஏதும் செய்யவில்லை. பல்லவி

9 நீரே என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்; ஏனெனில், கடவுளே! நீரே என் அரண். 10 என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்; கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார். பல்லவி

16 நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர். 17 என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், கடவுள் எனக்கு அரண்; கடவுளே எனக்குப் பேரன்பு! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 15b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தமக்குள்ள யாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: "ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச்செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

சிந்தனை

விலையுயர்ந்ததாய் மனிதர் கருதும் எதனையும் பெற்றுக் கொள்வதுண்டு.

கைபேசி, கணனி, முத்து, வைரம், நிலம், புத்தகம், கடந்த உலக கால்பந்தில் உதைபட்ட கால்பந்து கூட அதிக விலையில் ஏலத்திற்கு போனதாம். நடிகை கடித்து எறிந்த ஆப்பிள் இது போன்ற எதனையும் மனிதர் அவரவர் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப விலையுயர்ந்ததாய் கருதி, அதிக தொகை கொடுத்து தனதாக்கி கொள்ள நினைக்கின்றனர்.

இவையெல்லாம் நிரந்தரமாய் தங்கிக் கொள்கிறதா? மரிக்கும் போது உடன் எடுத்து வரப்படுகின்றதா? என்ற கேள்விக்கெல்லாம் விடைதெரிந்தாலும், அற்ப இன்பமாய் இருந்தாலும் இருந்து போகட்டுமே என்ற பதில் பெறப்படுகின்றது. அற்ப இன்பம் இன்பமே இல்லை.

இறையாட்சியே, அதனுடைய கனிகளே விலையுயர்ந்ததாக கருதப்பட வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தன்னையே கொடுத்து, நம்மை மீட்ட இறைமகன் இயேசு

இளைஞன் ஒருவன் தன்னுடைய பால்ய வயதில் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஒருவரைக் காணச் சென்றான்.

அந்த ஆசிரியர் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக ஏழை, எளியவர்களுக்கு உணவும், உதவித் தொகையும் வழங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய வீடோ மிகவும் சிறிதாக இருந்தது. இதைப் பார்த்த அந்த இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது.

உடனே அவன் ஆசிரியரிடம், "உங்களுக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல், எதற்காக இப்படி எல்லாவற்றையும் ஏழை, எளியவருக்காக வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர், "நான் இந்த மண்ணுலகில் என்னிடம் இருப்பதை எல்லாம் கொடுப்பதற்குக் காரணம் விண்ணுலகில் நிலையான ஓர் இடத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தான்" என்றார்.

ஆசிரியரின் பதிலைக் கேட்டு, இளைஞன் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் ஆசிரியர், விண்ணகத்தைப் பெற தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் ஏழை, எளியவருக்குக் கொடுத்தார். அதைப் போன்றுதான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஒருவர் நிலத்தில் புதையலைக் கண்டதும் அதை பெற தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் விற்று அதைப்பெற்றுக்கொள்கிறார். நல்ல முத்தைக் காணும் வணிகரும் அப்படியே செய்கிறார்.

இயேசு கூறும் இந்த புதையல் உவமை நமக்கு ஒருசில உண்மைகளை எடுத்துக்கூறுகிறது. அதில் முதலாவது புதையலுக்காக தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டு, புதையலைப் பெறும் மனிதரைப் போன்று, ஆண்டவர் இயேசுவும் நம்மை மீட்பதற்காக, தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் சிந்துகிறார்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் ஏழாம் அதிகாரம் இருபத்தி மூன்றாம் வசனத்தில் வாசிக்கின்றோம், "நீங்கள் ஆண்டவரால் விலை கொடுத்து மீட்கப்பட்டீர்கள்" என்று. ஆண்டவர் கொடுத்த விலை என்ன?, அது வேறொன்றுமில்லை. அவருடைய விலை மதிக்கப்பெறாத இரத்தம்தான். அந்த இரத்ததால்தான் நாம் அனைவரும் மீட்கப்பட்டோம்; புதிய வாழ்வைக் கொடையாகப் பெற்றுக்கொண்டோம்.

அடுத்ததாக இயேசு எதற்காக தன்னுடைய விலைமதிக்கப்பெறாத தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி, நம்மை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கும்போது, நாம் அனைவரும் கடவுளுடைய பார்வையில் விலைமதிப்பற்றவர்களாக இருக்கின்றோம்.

எசாயா புத்தகம் 43:4 ல் வாசிக்கின்றோம், "என் பார்வையில் நீ விலையேறப்பெற்றவன், மதிப்புமிக்கவன்; அதனால் நான் உன்மேல் அன்பு கூர்கின்றேன்" என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் பெரியவராக இருந்தாலும், சிறியவராக இருந்தாலும் கடவுளுடைய பார்வையில் மதிப்பு மிக்கவர்களாக இருக்கின்றோம். அதனால்தான் ஆண்டவர் இயேசு தன்னுடைய விலைமதிக்கப்பெறாத தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்டுக் கொள்கிறார்.

எனவே, அவருக்குச் சொந்தமானவர்களாகிய நாம் எப்படி வாழவேண்டும் என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கும் சவாலாக இருக்கின்றது. ஒரு தலைவருக்குக் கீழே நாம் வேலை பார்க்கிறோம் என்றால், நாம் நம்முடைய விருப்பத்தின்படி செயல்பட முடியாது. மாறாக அந்தத் தலைவர் நம்மிடம் எதிர்பார்க்கிறாரோ, அதன்படிதான் நாம் நடக்கவேண்டும். ஆகையால் ஆண்டவர் இயேசுவால் விலைகொடுத்து வாங்கபெற்ற நாம் அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதுதான் அவருக்குப் பிரியமான காரியமாக இருக்கும்.

இன்றைக்கு கடவுளுடைய மக்களாகிய நாம் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழாமல், நம்முடைய விருப்பத்தின்படி நடப்பதுதான் மிகவும் வேதனையான ஒரு காரியமாக இருக்கின்றது. இந்த இடத்தில் நாம் அன்னை மரியாளைக் குறித்து சிறிது சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் அன்னை மரியாள் இதோ ஆண்டவரின் அடிமை என்று சொன்னபிறகு, கடவுளின் திருவுளம் என்ன?, அவருடைய திட்டம் என்ன? என்பதை உணர்ந்து அதன்படி தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொண்டார். அவரைப் போன்று நாமும் கடவுளின் திருவுளம் அறிந்து, அதன்படி வாழ்கிறபோது, அதனால் கடவுள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எனவே, நம்மை விலைகொடுத்து வாங்கிக்கொண்ட இயேசுவின்/இறைவனின் திருவுளப்படி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!