Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     13 செப்டம்பர் 2020  
                                            பொதுக்காலம் 24 ஆம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

சீராக்கின் ஞான நூலிருந்து வாசகம் 27: 30- 28: 7


வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை; பாவிகள் இவற்றைப் பற்றிக்கொள்கின்றார்கள்.

பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார்.

உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்; அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மனிதர் தம் போன்ற மனிதருக்கு இரக்கம் காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவ மன்னிப்புக்காக எப்படி மன்றாட முடியும்? அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்?

உன் முடிவை நினைத்துப் பார்; பகைமையை அகற்று; அழிவையும் சாவையும் நினைத்துப் பார்; கட்டளைகளில் நிலைத்திரு. கட்டளைகளை நினைவில் கொள்; அடுத்தவர் மீது சினங்கொள்ளாதே; உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை; குற்றங்களைப் பொருட்படுத்தாதே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 103: 1-2. 3-4. 9-10. 11-12 . (பல்லவி: 8)  Mp3
=================================================================================
 

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்ளுபவரல்லர்.
10
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி

11
அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். - பல்லவி



================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14: 7-9

சகோதரர் சகோதரிகளே,

நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35

அக்காலத்தில்

பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா"? எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: "ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கிய பொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, "என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்" என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, "நீ பட்ட கடனைத் திருப்பித் தா" எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, "பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?" என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

I சீராக்கின் ஞானம் 27: 30-28:7
II உரோமையர் 14: 7-9
III மத்தேயு 18: 21-35

மன்னிப்பு என்னும் மாமருந்து

நிகழ்வு



மத்தியப் பிரதேச மாநிலம், தெவாஸ் மாவட்டத்தில் ஆன்மிகப் பணியோடு சமூகப் பணியையும் செய்துவந்தவர் அருள்சகோதரி இராணி மரியா. இவர் 1995 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாள் சமந்தர் சிங் என்பவனால் குத்திக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து சமந்தர் சிங் என்ற அந்த மதவெறியன் கைது செய்யப்பட்டு இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டான்.

இது நடந்து ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் கழித்து, அதாவது 2003 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 24 ஆம் நாள், அருள்சகோதரி இராணி மரியாவின் தாய் எலிசாவும், அவருடைய சகோதரி செல்மியும், சகோதரர் ஸ்டீபனும் இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமந்தர் சிங்கைப் பார்க்கச் சென்றார்கள்.

"நான் நாற்பது முறைக்கும் மேலாகக் கத்தியால் குத்திக்கொன்ற இராணி மரியாவின் குடும்பத்திலிருந்தா என்னைப் பார்க்க வந்திருக்கின்றார்கள்...? அவர்களை எப்படி நான் எதிர்கொள்வது...? அவர்களிடத்தில் நான் என்ன பேசுவது...?" என்ற ஒருவிதமான பதைபதைப்புடனே அவர்களைப் பார்க்கச் சென்றான் சமந்தர் சிங். அவர்களைப் பார்த்த மறுவினாடி அவன் தன் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினான்.

அப்பொழுது அருள்சகோதரி இராணி மரியாவின் தாய் எலிசா யாரும் நினைத்துப் பார்த்திராத ஒரு செயலைச் செய்தார். ஆம், எந்தக் கைகள் தன்னுடைய மகளைக் கத்தியால் குத்திக் கிழித்தனவோ, அந்தக் கைகளை அவர் அன்போடு முத்தமிட்டு, "என்னுடைய மகளைக் குத்திக்கொன்ற உன்னை நான் மனதார மன்னிக்கின்றேன்" என்பதைச் சொல்லாமல் சொன்னார். இதனால் அருள்சகோதரியின் குடும்பமும், சமந்தர் சிங்கின் குடும்பமும் ஒன்றானது.

தன் மகளைக் கத்தியால் குத்திக் கொன்றவனை மன்னித்ததன் மூலம், அருள்சகோதரி இராணி மரியாவின் தாயாரும், அவருடைய குடும்பத்தினரும் மன்னிப்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்கள். பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் நம் விண்ணகத் தந்தையைப் போன்று தாராளமாய், நிபந்தனையின்றி மன்னித்து வாழவேண்டும் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எத்தனை முறை மன்னிப்பது?

நற்செய்தியில் சீமோன் பேதுரு இயேசுவிடம், "என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால், நான் எத்தனை முறை மன்னிக்கவேண்டும்? ஏழு முறை மட்டுமா?" என்றொரு கேள்வியோடு வருகின்றார். பேதுரு இயேசுவிடம் இப்படியொரு கேள்வியோடு வருவதன் மூலம், "மன்னிப்பதில் தான் தாராளமானவான்" என்பதை நிரூபித்துக் காட்ட விழைகின்றார். காரணம், யூத இரபிகள் தவறு அல்லது பாவம் செய்கின்ற ஒருவரை மூன்றுமுறை மன்னிக்கலாம் என்று போதித்து வந்தார்கள். பேதுரு இதை உள்வாங்கிக் கொண்டு, மூன்றோடு மூன்றைச் சேர்த்து, அத்தோடு இன்னொன்றைச் சேர்த்து, இயேசுவிடம் ஏழு முறை மட்டுமா? என்று கேட்கின்றார்.

பேதுரு இயேசுவிடம் இப்படிச் கேட்பதன் மூலம், அவர் தன்னைப் பாராட்டுவார் என்று நினைத்திருக்கக் கூடும். காரணம் ஏழு என்பது முழுமையைக் குறித்து நிற்பதால்; ஆனால், இயேசு பேதுருவைப் பாராட்டவில்லை. மாறாக, அவர் பேதுருவிடம், அதைவிடப் பெரிதான ஒரு செயலைச் செய்யச் சொல்கின்றார். அது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும்

"...ஏழுமுறை மட்டுமா?" என்று கேட்ட பேதுருவிடம் இயேசு, "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்கின்றார் இதன் மூலம் இயேசு பேதுருவிடம், "உனக்கெதிராகப் பாவம் செய்யும் சகோதரர், சகோதரியை நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும்" என்று சொல்கின்றார். இதற்காக இயேசு ஓர் உவமையையும் சொல்கின்றார்.

இந்த உவமையில் வருகின்ற மன்னர் தன்னிடம் மிகுதியாகக் கடன்பட்டிருந்த பணியாளரின் கடனை முழுவதும் தள்ளுபடி செய்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், மன்னர் தன்னிடம் பணிபுரிந்து வந்த பணியாளரை முழுவதும் மன்னிக்கின்றார் என்று சொல்லலாம். ஆனால், மன்னரிடமிருந்து மிகுதியாக மன்னிப்பைப் பெற்ற பணியாளரோ, தன்னிடம் குறைந்த அளவே கடன்பட்டிருந்த பணியாளரின் கடனைத் தள்ளுபடி செய்யாமல், அவரை மன்னிக்காமல், சிறையில் அடைக்கின்றார். இதை அறிய வரும் மன்னர், மன்னிக்க மறுத்த பணியாளரைச் சிறையில் அடைக்கின்றார்.

இந்த உவமையில் வருகின்ற மன்னர், நம்முடைய விண்ணகத் தந்தை போன்று. எப்படி இந்த மன்னர் தாராளமாய், நிபந்தனையின்றி மன்னிக்கின்றாரோ, அப்படி விண்ணகத் தந்தை நம்மைத் தாராளமாய், நிபந்தனையின்றி மன்னிக்கின்றார். விண்ணகத் தந்தை மட்டும் நாம் செய்த குற்றங்களை மன்னியாது இருப்பார் எனில், திருப்பாடல் ஆசிரியர் சொல்வது போன்று, அவருக்கு முன்பாக யாரும் நிலைத்திருக்க முடியாது (திப 130: 3). கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கின்றார் என்பதற்குச் சான்றே, நாம் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதுதான்.

விண்ணகத்தந்தை நம்மைத் தாளராமாய் மன்னிக்கின்றார்; ஆனால், நாம்தான் நம்மோடு இருப்பவர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்கத் தயாராத இல்லை. அதைத்தான் உவமையில் வரும் மன்னிக்க மறுத்த பணியாளர் நமக்கு உணர்த்துகின்றார். விண்ணகத் தந்தை நம்மைத் தாரளாமாய் மன்னித்தும், நாம் நம் சகோதரர், சகோதரிகள் செய்யும் குற்றங்களை மன்னிக்காமல், பழிவாங்கத் துடித்தால், நமக்கு என்ன நேரும் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து தொடர்ந்து நாம் சிந்திப்போம்.

நீங்கள் அளக்கும் அளவையாலேயே உங்களுக்கும் அளக்கப்படும்

சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், "உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்து விடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது, உன் பாவங்கள் மன்னிக்கப்படும்" என்று வாசிக்கின்றோம். ஆம், எப்பொழுது நாம் பிறருடைய குற்றங்களை மன்னிக்கின்றோமா, அப்பொழுதுதான் இறைவனால் நம்முடைய குற்றங்களும் பாவங்களும் மன்னிக்கப் படுகின்றன. இதையேதான் இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுத்தரும் இறைவேண்டலில் குறிப்பிடுகின்றார் (மத் 6:14).

இன்றைக்குப் பலர் பிறர் செய்த குற்றங்களை மன்னியாமல், பழிக்குப் பழி என வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். வழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர் என்கின்றார் சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். ஆகையால், நாம் பழிக்கு பழி என்ற எண்ணத்தை விட்டொழித்து, பிறர் செய்யும் குற்றங்களை நம் விண்ணகத் தந்தையைப் போன்று தாராளாமாய் மன்னித்து, அவர் நமக்கு அருளுகின்ற மன்னிப்பையும், நலவாழ்வையும் பெற்று மகிழ்வோம்.

சிந்தனை

"மன்னிப்பு என்பது ஒரு கைதியைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்கு இணையானது. அந்தக் கைதி வேறு யாருமல்ல, நீங்களே" என்பார் லெவிஸ் பி.ஸ்மெதஸ் (Lewis B.Smedes) என்ற அறிஞர். ஆகையால், நமக்கு விடுதலையும், நலமும் தருகின்ற மன்னிப்பு என்ற பண்பை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம்; விண்ணகத் தந்தையைப் போன்று தாராளமாய் ஒருவர் செய்த குற்றத்தை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!