|
|
10
செப்டம்பர் 2020 |
|
பொதுக்காலம்
23ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும்
ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 10: 14-22
என் அன்பிற்குரியவர்களே, சிலைவழிபாட்டைவிட்டு விலகுங்கள். உங்களை
அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து
நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். கடவுளைப் போற்றித்
திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது
கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்
பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல்
அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்.
ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு
கொள்கிறோம்.
இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள். பலிப் பொருள்களை
உண்கிறவர்கள் பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு
உறவு கொள்ளவில்லையா?
எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை அல்லது சிலைகளைப் பொருட்படுத்த
வேண்டும் என்றா சொல்லுகிறேன்? மாறாக, சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை
கடவுளுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும். நீங்கள்
பேய்களோடு உறவு கொள்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் ஆண்டவரு
டைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது.
நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்குகொள்ள
முடியாது. நாம் ஆண்டவருக்கு எரிச்சல் ஊட்டலாமா? நாம் அவரைவிட
வலிமைமிக்கவர்களா?
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 116: 12-13. 17-18 . (பல்லவி: 17a)
Mp3
=================================================================================
பல்லவி: நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.
12
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு
என்ன கைம்மாறு செய்வேன்?
13
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத்
தொழுவேன். - பல்லவி
17
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத்
தொழுவேன்;
18
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு
என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக்
கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள்
அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை `ஆண்டவரே, ஆண்டவரே' என ஏன்
கூப்பிடுகிறீர்கள்?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-49
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "கெட்ட கனி தரும் நல்ல
மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும்
அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப்
பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை
அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து
நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை
எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, "ஆண்டவரே, ஆண்டவரே" என ஏன்
கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு,
அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு
எடுத்துக்காட்டுகிறேன்.
அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின்மீது அடித்தளம் அமைத்து, வீடு
கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து
அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால்
அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.
நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல்
மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல்
மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 கொரிந்தியர் 10: 14-22
"நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்"
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளை இனத்தைச் சார்ந்த அருள்பணியாளர்
ஒருவர், தன்சானியா நாட்டில், முன்பு தான் பணியாற்றிய பணித்தளத்திலிருந்த
மக்களைப் பார்வையிடச் சென்றார். அந்தப் பணித்தளத்தில் கறுப்பினத்தைச்
சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள், முன்பு தங்களுடைய
பகுதியில் நற்செய்திப் பணியாற்றிய அருள்பணியாளரைக் கண்டதும்,
மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். அருள்பணியாளரும் அவர்களிடம்
நீண்டநேரம் பேசிவிட்டு, அவர்களிடமிருந்து விடைபெறலானார்.
அப்பொழுது, "அருள்பணியாளரே! கொஞ்சம் நில்லுங்கள்...! உங்களிடம்
கொடுப்பதற்காகப் பரிசு ஒன்று வைத்திருக்கின்றேன்" என்றொரு குரல்
ஒலித்தது. அருள்பணியாளர் குரல் வந்த திசையை நோக்கித்
திரும்பிப் பார்க்க, வயதானவர் ஒருவர் பழைய செய்தித்தாளில் ஏதோ
ஒன்றைச் சுருட்டிக் கையில் வைத்திருந்தார்.
தன்னுடைய குரலைக் கேட்டு, அருள்பணியாளர் திரும்பிப் பார்த்ததும்,
பெரியவர் அவரிடத்தில் மெல்ல நடந்துசென்று, தன்னிடம் இருந்த இபோனி
(Ebony) என்ற மரத்தில் செய்யப்பட்ட இயேசுவின் திருவுருவத்தை
கொடுத்தார். வழக்கமாக இபோனி மரக்கட்டைகள் அடர் கறுப்பாக இருக்கும்;
ஆனால், பெரியவர் அருள்பணியாளரிடம் கொடுத்த இயேசுவின் திருவுளத்தில்
ஒருபுறம் கறுப்பாகவும், இன்னொரு புறம் ஆங்காங்கே வெள்ளையாகவும்
இருந்தது.
பெரியவர் இத்தகைய அரியவகை இபோனி மரத்தால் செய்யப்பட்ட இயேசுவின்
திருவுருவத்தை அருள்பணியாளரிடம் கொடுத்துவிட்டு,
"அருள்பணியாளரே! இபோனி மரக் கட்டையில் செய்யப்பட்ட இந்த இயேசுவின்
திருவுருவத்தில் கறுப்பு நிறமும், வெள்ளை நிறமும் இருந்தாலும்,
ஒரே மரக்கட்டைதான். அதுபோன்று, நீங்கள் வெள்ளை இனத்தைச் சார்ந்தவராகவும்
நான் கறுப்பு இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், இயேசு
கிறிஸ்துவில் நாம் ஒன்றாக இருக்கின்றோம். இதை உணர்த்தவே இந்தப்
பரிசை உங்களுக்குக் கொடுக்கின்றேன்" என்றார். தனக்கு அருமையான
பரிசு தந்ததோடு மட்டுமல்லாமல், அதற்கு நல்லதொரு விளக்கமும் தந்ததற்காக
அருள்பணியாளர் பெரியவரை வெகுவாகப் பாராட்டினார்.
ஆம், நாம் இனத்தால், மொழியால், பண்பாட்டால் வேறு வேறாக இருந்தாலும்,
இயேசு கிறிஸ்துவில் ஒன்றாக இருக்கின்றோம். அதைத்தான் இந்த நிகழ்வு
நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே
செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. நாம் எப்படிப் பலராயினும்
ஒரே உடலாக இருக்கின்றோம்...? நாம் ஒரே உடலாக இருப்பதற்கு எது
தடையாக இருக்கின்றது...? என்பன குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் எப்படி ஒரே உடலாக இருக்கின்றோம்?
அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகுவது என்பது கிறிஸ்துவின் உடலிலும்
அவருடைய இரத்தத்திலும் பங்குகொள்வதாகும் என்று குறிப்பிடும் பவுல்,
"ஆதலால், நாம் பலராயினும் ஒரே உடலாக இருக்கின்றோம்" என்று
குறிப்பிடுகின்றார். ஆம், கிறிஸ்துவின் தூய்மைமிகு உடலிலும்
இரத்தத்திலும் பங்குபெறுகின்ற ஒருவர், அவரோடும் அடுத்தவரோடும்
ஒன்றித்திருக்கின்றார். இதனால்தான் நாம் பலராக இருந்தாலும், ஒரே
உடலாக இருக்கின்றோம் என்கிறார் பவுல்.
நாம் கிறிஸ்துவில் ஒரே உடலாக இருக்கின்றோம் எனில், அந்த உடலில்
உறுப்புகளாக இருக்கும் பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கவேண்டுமே
ஒழிய, தடைக்கல்லாக இருக்கக்கூடாது. கொரிந்து நகர்த் திருஅவையில்
இருந்த ஒருசிலர், கிறிஸ்துவின் உறுப்புகளாக இருந்த பிறருடைய
வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக, இடறலாக இருந்தார்கள். என்ன செயல்
கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த மக்களுக்குத் தடைக்கல்லாக
இருந்தது என்பதைக் குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
நாம் ஓருடலாக இருக்க எது தடையாக இருக்கின்றது?
கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர் சிலைகளுக்குப் படைக்கப்பட்ட
உணவை உண்டுவிட்டு, ஆண்டவரின் திருவிருந்திலும் பங்குகொண்டார்கள்.
சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணக்கூடாது (திபா 15: 29)
என்பது எருசலேம் பொதுச் சங்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான
முடிவு. கொரிந்து நகரில் இருந்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு
முன்பு சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்டுவந்தாலும்,
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகும் உண்டு வந்ததால்தான், புனித பவுல்,
அப்படி உண்பது கடவுளுக்கு எரிச்சல் ஊட்டக்கூடிய ஒரு செயல். அது
கிறிஸ்துவில் ஒரே உடலாக இருக்கும் பிறருக்குத் தடைக்கல்லாக,
இடறலாக இருக்கும் ஒரு செயல் என்று குறிப்பிடுகின்றார்.
ஒரே அப்பத்தை உண்டு, ஒரே கிண்ணத்தில் பருகுவதன் மூலம்
கிறிஸ்துவில் ஓர் உடலாக இருக்கின்ற நாம் கிறிஸ்து என்ற உடலில்
உறுப்புகளாக இருப்பவர்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கவேண்டுமே
ஒழிய, இடறலாக இருக்கக்கூடாது. நாம் பிறரது வளர்சிக்குக் காரணமாக
இருக்கின்றோமா? அல்லது இடறலாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"இச்சிறியோருள் எவரையாது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில்
எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது
அவர்களுக்கு நல்லது" (மத் 18:6) என்பார் இயேசு. ஆகையால், நாம்
பிறருக்கு இடறலாக இல்லாமல், வளர்ச்சிக் காரணமாக இருப்போம். அதன்மூலம்
கிறிஸ்துவில் ஓருடலாக இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 6: 43-49
"நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து
நல்லவற்றைக் எடுத்துக் கொடுப்பார்"
நிகழ்வு
அந்தக் குடியிருப்பில் ஷீலாவைத் தெரியாதவர் கிடையாது. சிறியவர்
முதல் பெரியவர் வரை எல்லாருக்கும் இவரை நன்கு தெரியும். காரணம்,
நோய்வாய்ப்பட்டவரை மருத்துவனையில் சேர்ப்பதாக இருக்கட்டும்...
வறியவர் ஒருவருக்கு உணவளிப்பதாக இருக்கட்டும்... முதியவர் ஒருவரை
ஓரிடத்திற்குக் கொண்டு சென்று, திரும்பக் கூட்டி வருவதாக இருக்கட்டும்
ஷீலாதான் முன்னால் இருப்பார்
ஷீலாவின் குடும்பம் அவ்வளவு வசதியான குடும்பம் கிடையாது; ஆனாலும்
இவர் கேட்பவருக்கு முகங்கோணாமல் கொடுப்பார் .எந்தவொரு எதிர்பார்ப்புமின்றியும்
தேவையில் உள்ளவருக்கு உதவி செய்வர். இப்படிப்பட்டவருக்கு அன்பு
என்றொரு மகன் இருந்தான். "தாயைப் போல பிள்ளை... நூலைப் போல
சேலை" என்று சொல்வார்களே, இந்த வார்த்தைகளுக்கு அப்படியே
பொருந்திப் போனான் ஷீலாவின் மகன் அன்பு.
இவன் பக்கத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்புப்
படித்து வந்தான். தன் தாயைப் போன்று இவன் கேட்பவருக்கு முகங்கோணாமல்
கொடுத்து வந்ததாலும், எல்லாரிடத்திலும் அன்பாகவும் நட்பாகவும்
பழகி வந்தாலும் இவனை எல்லாருக்கும் பிடித்துப் போனது.
இப்படியிருக்கையில் ஒருநாள் அன்புக்குத் திடீரென்று உடல்நிலை
சரியில்லாமல் போனது. மருத்துவர்கள் அவனைச் சோதித்துப் பார்த்தபொழுதுதான்
தெரிந்தது, அவனுடைய இதயத்தில் ஓட்டை இருக்கின்றது என்று. "உடனே
இதய அறுவைச் சிகிச்சை செய்தால்தான் அன்பு பிழைப்பான்" என்று மருத்துவர்
சொல்லிவிட்டுப் போக, ஷீலா ஒருவினாடி அப்படியே அதிர்ந்துபோய்
நின்றார். "இதய அறுவைச் சிகிச்சைக்குப் பல இலட்சங்கள் ஆகுமே...
அவ்வளவு பணத்திற்கு நான் எங்கு போவது?" என்று ஷீலா கலக்கமுறத்
தொடங்கினார்.
இது நடந்து ஓரிரு நாள்கள் கழித்து, ஷீலா இருந்த குடியிருப்பைச்
சார்ந்த பெரியவர்கள் ஒருசிலர் இவரைப் பார்க்க வந்தனர். அவர்கள்
ஷீலாவிடம், "எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம்... எல்லாருக்கும்
ஓடி ஓடி உதவிசெய்த உனக்கு ஓர் இக்கட்டான சூழ்நிலை
ஏற்பட்டிருக்கின்றது. இதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தால்
நாங்கள் மனிதர்களே கிடையாது" என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய
தொகையைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். அன்றைய நாளில் அன்போடு
படித்துவந்த மாணவர்களும் வீட்டுக்கு வந்து, ஷீலாவிடம் ஒரு
தொகையைக் கொடுத்து, "இதை அன்புவின் அறுவைச் சிகிச்சைக்குப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
இதையெல்லாம் பார்த்து ஷீலா உள்ளம் பூரித்துப்போனார். பின்னர்
இவர் அந்தப் பணத்தைக் கொண்டு, தன் மகனுக்கு நல்லமுறையில்
அறுவைச் சிகிச்சை செய்து முடித்தார்.
"நல்ல மரமாக" இருந்த ஷீலா நல்ல "கனியாகிய" தன் மகன் அன்புவை
தன் போன்று வளர்த்து வந்தார். அதனால் அவனுக்கு இதய அறுவைச்
சிகிச்சை செய்வதற்காக அவனுடைய நண்பர்கள் தொடங்கி, ஷீலாவுக்குத்
தெரிந்தவர்கள் என்று பலரும் உதவிசெய்தார்கள். ஆம், நல்லமரம்
எப்பொழுதுமே நல்ல கனிகளைத் தான் கொடுக்கும்; அது கெட்ட
கனிகளைக் கொடுப்பதில்லை. நற்செய்தியில் இயேசு, "கெட்ட கனிதரும்
நல்ல மரமுமில்லை; நல்ல கனிதரும் கெட்ட மரமும் இல்லை"
என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள்
என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
யார் நல்ல மரம்? யார் கெட்ட மரம்?
இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவின் ஒரு நீண்ட போதனையின்
அல்லது சமவெளிப்பொழிவின் நிறைவுப்பகுதியாக இருக்கின்றது.
இப்பகுதியில் இயேசு தன்னுடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த
மக்களிடம் ஒரு நிலைபாட்டை எடுத்துமாறு அழைப்புவிடுகின்றார்.
இந்த அழைப்பு, மக்கள் தாங்கள் அதுவரைக் கேட்ட
இறைவார்த்தையின்படி வாழ்வதற்கான ஓர் அழைப்பாக இருக்கின்றது.
தான் அறிவித்த இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்கின்றவர்
நல்ல மரமாக இருப்பார்; அவர் நல்ல கனிகளைக் கொடுப்பார். அதே
நேரத்தில் தான் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு, அதன்படி
வாழாமல், வெறுமனே "ஆண்டவரே... ஆண்டவரே" என்று
சொல்லிக்கொண்டிருப்பவர் கெட்ட மரமாக இருப்பார். அவர் கெட்ட
கனிகளைத்தான் கொடுப்பார் என்கின்றார் இயேசு. அப்படியானால்
ஒருவர் நல்ல மரமாக இருந்து, நல்ல கனி கொடுப்பதற்கும், கெட்ட
மரமாக இருந்து, கெட்ட கனியைக் கொடுப்பதற்கும் அவர்
இறைவார்த்தைக்கு எப்படிப் பதிலளிக்கின்றார் என்பதைப் பொருத்தே
உள்ளது.
இறைவார்த்தையைக் கேட்டு, நல்ல மரமாக இருந்து, நல்ல கனிகளைக்
கொடுத்து வாழ்கின்றபொழுது, மழை வெள்ளம் போல் ஆபத்துகள் வரலாம்.
அத்தகைய ஆபத்துகளையும் கடந்து, நாம் ஆண்டவரில்
நிலைத்திருந்தால், நமது வாழ்க்கை கற்பாறையில் கட்டிய
வீட்டிற்கு ஒப்பாக இருக்கும் என்பது உறுதி.
எனவே, நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து, நல்ல
கனிகளைக் கொடுக்கும் நல்ல மரமாவோம். ஆண்டவருடைய எல்லா
ஆசியையும் பெறுவோம்.
சிந்தனை
"நற்பேறு பெற்றோர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்.
பருவ காலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும்
அம்மரத்திற்கு ஒப்பாவார்" (திபா 1: 3) என்பார் திருப்பாடல்
ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு,
அதன்படி நடந்து, நற்பேறு பெற்றவர்கள் ஆவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|