|
|
08
செப்டம்பர் 2020 |
|
பொதுக்காலம்
23ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம் தூய
கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா
=================================================================================
இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே
தோன்றுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம்
5: 2-5a
ஆண்டவர் கூறுவது இதுவே:
நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள்
மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக
ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ
ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள்
பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர்
அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம்
திரும்பி வருவார்கள்.
அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது
பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும்
அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது
அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது
ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம் 8: 28-30
சகோதரர் சகோதரிகளே,
கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப
அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும்
ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே
தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க
வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள்
பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச்
செய்தார். தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்;
தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு
ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 13: 5, 6 . (பல்லவி: எசா 61: 10a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
5
நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும்
விடுதலையால் என் இதயம் களிகூரும். - பல்லவி
6
நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை
பல செய்துள்ளார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! புனித கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர்;
புகழ் அனைத்திற்கும் மிக ஏற்றவரும் நீரே; ஏனெனில் என் இறைவன்
இயேசு கிறிஸ்து நீதியின் ஆதவனாய் உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 1: 1-16, 18-23
தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர்
பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு;
யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.
யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும்
செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம்.
இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின்
மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன்
போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின்
மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்.
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின்
மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா.
ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின்
மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு;
ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின்
மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும்
அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள்
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப்
பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.
செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின்
மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்;
ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின்
மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின்
கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய்
மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது.
அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது.
அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு
நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்
மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர்
அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி
மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது
தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு
எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து
மீட்பார்" என்றார்.
"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு
இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர்
உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால்
"கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்பது பொருள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 1: 18-23
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய்
மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது.
அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது.
அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு
நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்
மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர்
அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி
மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது
தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு
எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து
மீட்பார்" என்றார்.
"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு
இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர்
உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால்
"கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்பது பொருள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 கொரிந்தியர் 6: 1-11
"உலகுக்கே தீர்ப்பளிக்கப்போகும் நீங்கள், உங்களிடையே உள்ள சின்னஞ்சிறிய
வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளத் தகுதியவற்றவர்களாகி விட்டீர்களா?"
நிகழ்வு
ஒரு சிற்றூரில் விவசாயி ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய
வீட்டிற்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் காய்கறிகளை வளர்த்து
வந்தார். இந்நிலையில் இவருடைய வீட்டிற்குப் பக்கத்து வீட்டில்
இருந்தவர், வளர்த்து வந்த கோழிகள் இவருடைய தோட்டத்திற்குள்
புகுந்து, செடிகளையும் காய்கறிகளையும் நாசம் செய்துவந்தன. இதைப்
பார்த்து விவசாயி விழி பிதுங்கி நின்றார்.
"பக்கத்துக்கு வீட்டுக்காரர்...! அவரிடம் இந்தப் பிரச்சனையைச்
சொல்லி சண்டை பிடித்தால் அது நிரந்தரப் பகையாகிவிடும்; அதன்பிறகு
மனவருத்தத்தோடுதான் அவரோடு காலம் தள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அதே நேரத்தில் அவர் வளர்த்து வரும் கோழிகளை நம்முடைய தோட்டத்திற்குள்
அனுமதித்தால், நமக்குத்தான் பேரிழப்பு ஏற்படும்! இதற்கு என்ன
செய்வது...?" என்று விவசாயி தீவிரமாக யோசித்தார்.
அப்பொழுதுதான் இவருக்கு ஓர் அருமையான யோசனை வந்தது. அதன்படியே
செய்துவிடலாம் என்று இவர் முடிவுசெய்து, அவ்வூரில் இருந்த ஒரு
பலசரக்குக் கடைக்குச் சென்று, கொஞ்சம் முட்டைகளை வாங்கி, அவற்றைப்
பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் எடுத்துக்கொண்டு போய், "நீங்கள்
வளர்த்து வரும் கோழிகள் என்னுடைய காய்கறித் தோட்டத்திற்குள்
முட்டைகளை இட்டுவிட்டுச் சென்றுவிட்டன. நான் யாருடைய உடைமைக்கும்
பொருளுக்கும் ஆசைப்படாதவன். அதனால்தான் நான் உங்களுடைய கோழிகள்
என்னுடைய தோட்டத்தில் இட்ட முட்டைகளை உங்களிடம்
கொடுத்துவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கின்றேன்" என்றார்.
விவசாயி கொடுத்த கோழி முட்டைகளை நன்றியுணர்வோடு பெற்றுக்கொண்ட
பக்கத்து வீட்டுக்காரர், விவசாயிக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு,
அதன்பிறகு தன்னுடைய கோழிகள் விவசாயியின் காய்கறித் தோட்டத்திற்குள்
போகாத வண்ணம் பார்த்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வருகின்ற விவசாயி, பக்கத்து வீட்டுக்காரரின்
கோழிகள் தன்னுடைய தோட்டத்திற்குள் வந்து மேய்ந்தபொழுது, அதைப்
பெரிய பிரச்சனையாக்காமல், முன்மதியோடு செயல்பட்டு, அந்தப் பிரச்சனைக்கு,
வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நாமும்கூட பிறரோடு இருக்கும்
வழக்குகளை முன்மதியோடும் நமக்குள்ளேயும் தீர்த்துக்கொள்ள
வேண்டுமே ஒழிய, அதைப் பிறரிடத்தில் கொண்டு சென்று, பெரிய பிரச்சனையாக்கக்கூடாது
என்பதை இந்த நிகழ்வும் இன்றைய முதல் வாசகமும் எடுத்துக்கூறுகின்றன.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
வழக்குகளைப் பிற இனத்தாரிடம் கொண்டுசென்ற மக்கள்
இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல் கொரிந்து நகர்த் திருஅவையில்
இருந்த மற்றுமொரு முக்கியமான பிரச்சனையைக் குறித்துப்
பேசுகின்றார். அது என்னவெனில், தங்களுடைய ஏற்படும் வழக்குகளை
தீர்த்துக்கொள்ள, இறைமக்களிடம் போகாமல், பிற இனத்தாரிடம் சென்றதாகும்.
இறைமக்கள், தங்களிடையே ஏற்படும் வழக்குகளை, சிக்கல்களை தங்களுக்குள்ளே
தீர்த்துக்கொள்ளாமல், பிற இனத்தாரிடம் கொண்டுசெல்கின்றபொழுது
என்ன நடக்குமெனில், முதலாவதாக, இறைமக்களுடைய சூழல், அவர்களுடைய
பின்புலத்தை அறியாத பிற இனத்தார் இறைமக்களுக்கு நல்லதொரு
தீர்ப்பு வழங்கமுடியாத நிலை ஏற்படும். இரண்டாவதாக, இறைமக்கள்
தங்களுடைய வழக்குகளை பிற இனத்தாரிடம் கொண்டுசெல்கின்றபொழுது,
பிரச்சனை மிகவும் பெரிதாகுமே ஒழிய, அது தீர்வதற்கான வழியில்லை.
மூன்றாவதாக, இறைமக்கள் தங்களுடைய வழக்குகளைப் பிற இனத்தாரிடம்
கொண்டு செல்கின்றபொழுது, அவர்கள் முதிர்ச்சி இல்லாதவர்கள்,
கிறிஸ்துவின் விழுமியங்களின்படி (மத் 5:39) நடக்கவில்லை என்பதையே
காட்டும். இதனால் இறைமக்கள் தங்களிடைய ஏற்படும் வழக்குகளை தங்கள்
நடுவில் இருக்கும் ஞானமுள்ளவர்களை நாடித் தீர்த்துக்கொள்ளச்
சொல்கின்றார் புனித பவுல்.
கிறிஸ்துவின் வழியில் நடப்பவர்கள் தங்களுடைய மகத்துவத்தை உணரவேண்டும்
புனித பவுல், கொரிந்து நகரில் இருந்தவர்கள் தங்களிடையே ஏற்படும்
வழக்குகளை, தங்களுக்குள்ளே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வதற்கு
மற்றுமொரு முக்கியமான காரணத்தை முன்மொழிகின்றார். அது என்னவெனில்,
"இறைமக்கள் உலகுக்குத் தீர்ப்பளிப்பவர்கள்" என்பதாகும். இது
குறித்து திருவெளிப்பாடு நூல் 3:21 இல் நாம் இவ்வாறு
வாசிக்கின்றோம்: "நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில்
அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில்
என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்." ஆம், சாத்தானை
வெற்றி பெறும் ஒருவர், இயேசுவோடு அவருடைய அரியணையில்
வீற்றிருக்கும் பேற்றினை பெறுகின்றார். அவ்வாறெனில் அவருக்கு,
இவ்வுலகிற்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரமும் இருக்கும் என்பதை
மறுப்பதற்கில்லை.
இத்தகைய காரணங்கள், கொரிந்து நகரில் இருந்தவர்கள் தங்களுடைய
வழக்குகளை பிற இனத்தாரிடம் எடுத்துச் சொல்லாமல், தங்களுக்குள்ளே
தீர்த்துக்கொள்ளவும், தங்களுள்ளே ஒற்றுமையோடு வாழவேண்டும் என்றும்
அறிவுறுத்துகின்றார் புனித பவுல்.
இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், பிறரோடு ஒற்றுமையோடு
வாழ்கின்றோமா? அல்லது பிரச்சனையோடு வாழ்ந்து, அதைப்
பெரிதாக்கிக்கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து
காணிக்கையைச் செலுத்துங்கள்" (மத் 5: 23-24) என்பார் இயேசு. ஆகையால்,
நாம் நமக்கிடையே இருக்கும் பிணக்குகளை, வழக்குகளை சுமூகமாகத்
தீர்த்துக்கொண்டு, நல்லுறவோடு வாழ்ந்து இயேசுவுக்குச் சான்று
பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 6: 12-19
பன்னிருவரைத் தேர்தெடுத்த இயேசு
நிகழ்வு
மாமன்னர் ஒருவர் இருந்தார். இவருக்குக் குழந்தை கிடையாது. அதனால்
இவர் தனக்குப் பிறகு நாட்டை ஆளுகின்ற பொறுப்பை யாரிடத்தில்
கொடுப்பது என்று மிகத் தீவிரமாக யோசித்தார். கடைசியாக இவருக்கு
ஒரு யோசனை வந்தது. அதன்படியே செய்யலாம் என்று இவர்
முடிவுசெய்தார்.
இதைத் தொடர்ந்து இவர் தன்னிடம் பணியாற்றிய நான்கு அமைச்சர்களை
அழைத்தார். அவர்களிடத்தில் ஒரு பூட்டைக்க் கொடுத்து, இப்பூட்டானது
கணித முறையில் வடிவமைக்கப்பட்டிருகின்றது. இதை யார் திறக்கின்றாரோ,
அவரையே நான் எனக்குப் பின் இந்த நாட்டின் மன்னராக
முடிசூட்டுவேன்" என்றார்.
மாமன்னர் இவ்வாறு சொன்னதும் அந்த நான்கு அமைச்சர்களில் ஒருவரைத்
தவிர்த்து மற்ற மூன்று அமைச்சர்களும், "பூட்டு கணித முறையில்
வடிவமைக்கப்பட்டது என்பதால், இதைத் திறப்பதற்கு ஓலைச் சுவடிகளில்
ஏதாவது குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். அவற்றைப் படித்துப்
பார்த்துவிட்டு, பூட்டைத் திறந்து பார்க்கலாம்" என்று ஓலைச் சுவடிகளைப்
புரட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் நீண்டநேரம், ஓலைச்
சுவடிகளைப் புரட்டிப் பார்த்தபொழுதும், கணித முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்
பூட்டைத் திறப்பதற்கான குறிப்புகள் எங்கும் குறிப்பிடப்படாததால்,
அவர்கள் சோர்ந்து போனார்கள்.
ஆனால், ஓலைச் சுவடிகளையோ, வேறு எந்தவொரு குறிப்பையோ பார்க்காமல்,
மிகவும் சாதாரண இருந்த நான்காவது அமைச்சர், பூட்டைக் கூர்ந்து
கவனித்தபொழுதுதான் தெரிந்தது, அது பூட்டப்படவில்லை என்பது. உடனே
அந்த நான்காவது அமைச்சர், பூட்டு பூட்டப்படாமல் திறந்தேதான் இருக்கின்றது
என்பதை மாமன்னரிடம் சொன்னபொழுது, மாமன்னர் அவரை மன்னராக
முடிசூட்டினார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மாமன்னர் தனக்குப் பின் நாட்டை
ஆள்வதற்கு யார் தகுதியானர் என்பதை ஒரு வித்தியாசமான போட்டியின்
மூலம் தேர்ந்தெடுத்தார். ஆண்டவர் இயேசு, தனக்குப் பின் தனது பணியை
இறையாட்சிப் பணியைத் தொடர்வதற்கு யாரெல்லாம் சரியானவர்கள்
என்பதை இரவெல்லாம் இறைவனிடம் வேண்டிவிட்டுத்
தேர்ந்தெடுக்கின்றார். இயேசு பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தது நமக்கு
செய்தியை எடுத்துக்கூறுகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவேண்டலோடு எந்தவொரு செயலையும் தொடங்கும் இயேசு
நற்செய்தியில் இயேசு பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கின்றார். அதற்கு
முன்னதாக அவர் ஒரு மலைக்குச் சென்று இரவெல்லாம் கடவுளிடம்
வேண்டுவதற்குச் செலவிட்டார் என்று வாசிக்கின்றோம். ஆம், இயேசு
எந்தவொரு செயலையும் இறைவேண்டலோடுதான் தொடங்கினார். இறையாட்சிப்
பணியைத் தொடங்கும்பொழுது அவர் நாற்பது நாள்கள் நோன்பிருந்து மன்றாடினார்
(மத் 4: 1) ஒவ்வொரு நாளும் தன்னுடைய பணியைத் தொடங்குவதற்கு
முன்பாகவும் இயேசு இறைவனிடம் வேண்டினார் (மாற் 1: 35). எல்லாவற்றிற்கும்
மேலாக பாடுகளைப் படுவதற்கு முன்பாகவும் இயேசு இறைவனிடம்
வேண்டினார் (லூக் 22: 41). இவ்வாறு எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு
முன்பாக இறைவனிடம் வேண்டிய இயேசு, பன்னிருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு
முன்பாகவும் இறைவனிடம் வேண்டுகின்றார்.
இயேசு எந்தவொரு செயலையும் இறைவேண்டலோடு தொடங்கியதுபோன்று,
நாமும் எந்தவொரு செயலையும் இறைவேண்டலோடு தொடங்கினோம் எனில், அது
நமது மிகப்பெரிய ஆசியாக இருக்கும் என்பது உறுதி
தனக்குப் பின் தன் பணியைத் தொடர்வதாகப் பன்னிருவரைத்
தேர்ந்தெடுத்த இயேசு
எந்தவொரு இயக்கமாக இருந்தாலும் அல்லது நிறுவனமாக இருந்தாலும்
அது தொடங்கிய கையோடு முடிந்துவிடாமல் தொடர்ந்து நடைபெற இயக்கத்
தோழர்கள், தொண்டர்கள், பணியாளர் கட்டாயம் இருந்தாக வேண்டும்.
இயேசு தன்னுடைய பணி இறையாட்சிப் பணி - தொடர்ந்து நடைபெறவேண்டும்
என்பதற்காகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கின்றார். இந்தப் பன்னிருவரும்
இஸ்ரயேலில் இருந்த பன்னிரு குலங்களையும் அடையாளபடுத்துபவர்களாக
இருந்தாலும் (மத் 19: 20) பன்னிருவரும் வெவ்வேறு குணங்களைக்
கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இது இறையாட்சிப் பணிக்கு ஒரு
குறிப்பிட்ட மக்கள் போதும் என்று இல்லாமல், எல்லாரும் தேவை என்ற
செய்தியை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.
இயேசு வெவ்வேறு குணங்களைக் கொண்ட பன்னிருவரைத் திருத்தூதர்களாகத்
தேர்ந்தெடுத்து, அவர்கள்மூலம் இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெறுமாறு
செய்தார். நாமும்கூட பலரையும் இயேசு கிறிஸ்துவில் ஒன்றிணைத்து,
இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெறுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.
சிந்தனை
"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத்
28: 19) என்பார் இயேசு. ஆகையால், இயேசுவின் சீடர்களாக இருக்கும்
நாம், மற்றவரையும் அவருடைய சீடராக்கி, இறையாட்சிப் பணி தொடர்ந்து
நடைபெறச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|