Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                  05 செப்டம்பர் 2020  

பொதுக்காலம் 22ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-15

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில், "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே" என்பதன் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவைதானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக் கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்? தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே.

கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்; நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள் போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.

நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள். இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம். எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும்போது ஆசி கூறுகிறோம்; துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம். அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போல் ஆனோம். இதுவரை அனைத்திலும் கழிவுப் பொருட்கள் எனக் கருதப்பட்டுவருகிறோம்.

உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை; நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன். கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் -
=================================================================================
திபா 145: 17-18. 19-20. 21 . (பல்லவி: 18)  Mp3

பல்லவி: மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி

19
அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்.
20
ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். - பல்லவி

21
என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5

ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயருள் சிலர், "ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்று கேட்டனர்.

அதற்கு இயேசு மறுமொழியாக, "தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?" என்று கூறினார். மேலும் அவர்களிடம், "ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 
1 கொரிந்தியர் 4: 6-15

"மனிதர்களைப் பிரிப்பவர்களாக இல்லாமல், இணைப்பவர்களாக இருப்போம்"

நிகழ்வு



தையல்காரர் ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக அமைத்திருந்த சிறிய தையல்கடையில் துணிகளைத் தைத்து, அதன்மூலம் தன்னுடைய குடும்பத்தைக் கரையேற்றி வந்தார்.

ஒரு விடுமுறை நாளில் இந்தக் தையல்கடைக்கு வந்த தையல்காரரின் மகன், தன் தந்தை கத்தரிக்கோலை எடுத்துத் துணிகளை வெட்டுவதையும், பின்னர் துணிகளை வெட்டப் பயன்படுத்திய கத்திரிக்கோலைத் தன் காலடியில் வைப்பதையும், அதன்பின்னர் ஊசியை எடுத்து வெட்டிய துணிகளைத் தைப்பதும், துணிகளைத் தைத்த பின்னர் ஊசியைத் தன்னுடைய தலைப்பாகையில் சொருகிக் கொள்வதுமாக இருந்ததைப் பார்த்தான்.

இக்காட்சியைப் பார்த்துவிட்டு அவன் தன் தந்தையிடம், "அப்பா! கத்தரிக்கோலோ அளவில் பெரிதாக இருக்கின்றது; பார்ப்பதற்கு விலை அதிகம் போல இருக்கின்றது. அதை நீங்கள் உங்களுடைய காலடியில் வைத்துவிட்டு, சிறியதும், அதேநேரத்தில் விலை மிகவும் குறைவானதுமான ஊசியை உங்கள் தலைப்பாகையில் சொருகிக் கொள்கிறீர்களே. ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்றான்.

தன் மகன் கேட்ட இக்கேள்விக்கு அந்தத் தையல்காரத் தந்தை இப்படிப் பதிலளித்தார்: "தம்பி! கத்தரிக்கோல் பெரியதாகவும், விலை கூடுதலாகவும் இருக்கலாம்; ஆனால், இந்தக் கத்தரிக்கோல் துணிகளை வெட்டிக்கொண்டிருக்கின்றது. வெட்டிவிடும் வேலையைச் செய்யும் இந்தக் கத்தரிக்கோலைக் காலடியில் வைப்பதுதான் நல்லது. மாறாக, இந்த ஊசி அளவில் சிறியதாகவும், விலை மிகவும் குறைவானதாகவும் இருந்தாலும், இணைக்கும் வேலையைச் செய்கின்றது. இணைக்கும் வேலையைச் செய்யும் எதையும் நமக்கு அருகில் வைத்திருப்பதுதான் நல்லது. அதனால்தான் அதை நான் என்னுடைய தலைப்பாகையில் சொருகி வைத்துக்கொள்கின்றேன்."

இப்படிச் சொல்லிவிட்டு அந்தத் தையல்காரத் தந்தை, தன் மகனிடம் இவ்வாறு சொல்லி முடித்தார். "மனிதர்களில்கூட பிரிப்பவர்கள், இணைப்பவர்கள் என்று இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். பிரிப்பவர்களைச் சற்றுத் தொலைவிலேயே வைத்துவிட்டு, இணைப்பவர்களை நமக்கு மிக நெருக்கமாக வைத்துக்கொண்டால், நமது வாழ்க்கை சிறக்கும்."

ஆம், இந்த நிகழ்வில் வரும் தையல்காரத் தந்தை தன் மகனிடம் சொல்வதைப் போன்று, இந்த உலகில் மனிதர்களைப் பிரிப்பவர்கள், இணைப்பவர்கள் என்று இருவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். இன்றைய முதல் வாசகமும் மனிதர்களைப் பிரிப்பவர்கள், இணைப்பவர்கள் என்று இரண்டுவகையான மனிதர்களைக் குறித்துப் பேசுகின்றது. யாரெல்லாம் மனிதர்களைப் பிரிப்பவர்களாக இருந்தார்கள்...? யாரெல்லாம் மனிதர்களை இணைப்பவர்களாக இருந்தார்கள்...? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மனிதர்களைப் பிரித்தவர்கள்

கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர், "நான் பவுலைச் சார்ந்துள்ளேன்", "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்" என்று பிரிந்து கிடந்தார்கள்; மற்றவர்களையும் பிரித்துக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்துவில் ஒரே உடலாக (1 கொரி 12: 13) இருந்து, ஒன்றித்து வாழப் பணிக்கப்பட்ட கொரிந்து நகர்த் திருஅவையைச் சார்ந்த மக்கள் இப்படிப் பிரிந்துகிடந்ததைப் பார்த்துத்தான் பவுல் அவர்களிடம், "ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்" என்று அவர்களுக்கு அறிவுரை கூறுகின்றார்.

மனிதர்களை இணைத்தவர்

கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர் பிரிந்தும், மற்றவர்களைப் பிரிப்பவர்களாகவும் இருந்தபொழுது, பவுல் அவர்களைக் கிறிஸ்துவில் ஓருடலாக இருக்க, இணைந்து வாழப் பணித்தார். ஆம், மனிதர்களைப் பிரித்து, அதன்மூலம் ஆதாயம் தேடுவதற்கு இன்றைக்குப் பலர் இருக்கின்றார்கள்; மக்களை இணைப்பதற்கு இன்றைக்கு மனிதர்கள் வெகு சொற்பம்தான். கொரிந்தில் இருந்தவர்களைப் பிரிப்பதற்குப் பலர் முயன்றபொழுது, பவுல் அவர்களை இணைப்பதற்காக முயற்சி செய்தார்.

ஆண்டவர் இயேசு யூதர்களையும், பிற இனத்தாரையும் பிரித்து நின்ற பகைமை என்ற சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார் (எபே 2:13). இயேசுவின் வழியில் நடக்கின்ற நாமும் நம்மைப் பிரித்து வைத்திருக்கும் தீய சக்திகளை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு, கிறிஸ்துவில் எல்லாரையும் ஓருடலாக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். புனித பவுல் எல்லாரையும் கிறிஸ்துவில் ஒருடலாக்க முயற்சி செய்தார். நாமும் அத்தகைய வழியைப் பின்பற்றி இயேசுவின் உண்மையான சீடார்களாய் வாழ்வோம்.

சிந்தனை

"கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" (மாற்கு 10:9) என்பார் இயேசு. இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகள் திருமண வாழ்வில் இணைத்திருப்பர்களை முன்னிட்டுச் சொல்லப்பட்ட வார்த்தைகளாக இருந்தாலும், எல்லாருக்கும் பொருந்தக்கூடிய வார்த்தைகளாக இருக்கின்றன. ஆகையால், நாம் மொழியின் பெயரிலும், இனத்தின் பெயரிலும், குலத்தின் பெயரிலும் மனிதர்களைப் பிரிப்பவர்களாக இல்லாமல், இயேசுவின் பெயரில் மனிதர்களை இணைப்பவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 லூக்கா 6: 1-5

குறைகூறிக் கொண்டே இருப்பவர்கள்!

நிகழ்வு



இளைஞன் ஒருவன் இருந்தான். இவனுக்குத் திடீரென்று துறவியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் இவன் ஒரு துறவுமடத்திற்குச் சென்று, அங்கிருந்த துறவுமடத் தலைவரிடம், துறவியாக வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைச் சொன்னான். அவரோ இவனிடம், "இந்தத் துறவுமடத்திற்கென்று ஒரு நிபந்தனை இருக்கின்றது. ஒருவர் இந்தத் துறவுமடத்தில் துறவியாக இருக்கவேண்டுமெனில், அவர் ஏழு ஆண்டுகளுக்கு எதுவும் பேசக்கூடாது; ஏழு ஆண்டுகள் கழித்து, அவர் என்னிடம் எதுவேண்டுமானாலும் பேசலாம்; ஆனால் ஒரு வாக்கியம்தான் பேசவேண்டும். இந்த நிபந்தனைக்கு நீ கட்டுப்பட்டாய் எனில் துறவுமடத்தில் சேரலாம்" என்றார். "துறவியாகவேண்டும் என்று ஆசைப்பட்டுவிட்டோம்... பேசாமல் இருப்பது ஒரு பெரிய செயலா...?" என்று நினைத்துகொண்டு இவன் துறவுமடத் தலைவரிடம், "நிபந்தனைகளுக்குக் கட்டுபட்டு நடக்கின்றேன்" என்றான்.

இதற்குப் பிறகு இவனுக்கென்று ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறை மிகவும் சிறிதாக இருந்தது. மட்டுமல்லாமல், அந்த அறையில் படுத்துறங்கக் கட்டில் இல்லை; வெறும் பாய் மட்டுமே இருந்தது. வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்ட இவன், "படுத்துறங்க ஒரு கட்டில் கூட இல்லையே!" என்று துறவுமடத்தில் புகுந்த முதல் நாளே புலம்பத் தொடங்கினான். என்ன செய்வது; ஏழு ஆண்டுகளுக்கு எதுவும் பேசக்கூடாது என்ற நிபந்தனை இருந்ததால், குளிரைத் தாங்கிக்கொண்டு இவன் ஏழு ஆண்டுகள் பாயிலேயே படுத்துறங்கி வந்தான்.

ஏழு ஆண்டுகளுக்கு கழித்து, துறவுமடத் தலைவரிடம் சென்ற இவன், "என்னுடைய அறையில் படுத்துறங்க கட்டில் இல்லை; ஒரு கட்டில் இருந்தால் நன்றாக இருக்கும்" என்றான். "சரி, உன்னுடைய அறைக்குக் கட்டில் கொண்டுவரப்படும். இனி ஏதாவது பேசவேண்டும் என்றால், ஏழு ஆண்டுகள் கழித்துப் பேசலாம்" என்று சொல்லிவிட்டு போய்விட்டார் துறவுமடத் தலைவர். இவன் துறவுமடத் தலைவரிடம் கேட்டுக்கொண்டது போல், இவனுடைய அறைக்குக் கட்டில் கொண்டுவரப்பட்டது; ஆனால், கட்டிலை உள்ளே கொண்டுவர முடியாதவாறு அறை மிகவும் சிறிதாக இருந்ததால், அதைக்கொண்டு வந்த பணியாளர் கட்டிலைப் பக்க வாட்டில் கொண்டுவர முயற்சி செய்தார்கள். அப்படிக் கொண்டுவரும்பொழுது, அவர்கள் அறையில் இருந்த காலதரில் மோத (Window), அது உடைந்துபோனது. இதனால் இவன் மழையையும் குளிரையும் தாங்கிக்கொண்டு ஏழு ஆண்டுகள் சிரமப்பட வேண்டியதாயிற்று.

ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டுமாக இவன் துறவியிடம் சென்று, "என்னுடைய அறையில் உள்ள காலதர் உடைந்துவிட்டது. அதைச் சரிசெய்து தந்தால் நன்றாக இருக்கும்" என்றான். "காலதரைச் சரிசெய்யப் பணியாளர்கள் வருவார்கள்; நீங்கள் போகலாம். ஆனால் நீங்கள் "அது சரியில்லை... இது சரியில்லை" என்று சொல்லிக்கொண்டு மீண்டுமாக என்னிடம் வரக்கூடாது" என்று சொல்லி அனுப்பி வைத்தார் துறவுமடத் தலைவர். இதற்குப் பின்பு பணியாளர்கள் இவனுடைய அறையில் இருந்த உடைந்துபோன காலதரைச் சரிசெய்ய வந்தார்கள். அவர்கள் காலதரைச் சரிசெய்ய, அறையின் உள்ளே கிடந்த கட்டிலைத் தூக்கி வெளியே போடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் இவன் காலதர் சரிசெய்யப்பட்டாலும், வெளியே கட்டில் போனதால், முன்புபோல் பாயிலேயே படுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் "கட்டில் வெளியே போய்விட்டது; அதை உள்ளே கொண்டுவரவேண்டும்" என்று இவர் துறவுமடத் தலைவரிடம் சொல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

இந்த நிகழ்வில் வரும் இளந்துறவியைப் போன்றுதான் பலரும் "அது சரியில்லை, இது சரியில்லை", "அடுத்தவர் சரியில்லை" என்று குறைகூறிக்கொண்டு இருப்பதைக் காணமுடிகின்றது. இன்றைய நற்செய்தியிலும் பரிசேயருள் சிலர் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப் பெரிய குறையாகச் சொல்கின்றார்கள். இதற்கு இயேசுவின் பதில் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் சீடர்களைக் குறைகூறிய பரிசேயர்கள்

நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப் பார்த்த பரிசேயர்களுள் சிலர், "ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்கின்றார்கள். கதிர்களைக் கொய்து உண்பது பிற நாள்களில் குற்றமில்லை என்றாலும் (இச 23: 25), இயேசுவின் சீடர்கள் அதை ஓய்வுநாளில் செய்தததால், பரிசேயர்கள் அதைப் பெரிய குற்றமாகப் பார்க்கின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம் தாவீதின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை (1 சாமு 21: 1-6) அவர்களுக்கு எடுத்துச் சொல்லித் தக்க பதிலளிக்கின்றார்.

உடன்படிக்கைப் பேழையில், ஏற்கெனவே இருக்கும் பன்னிரண்டு அப்பங்கள் மாற்றப்பட்டு, புதிதாகப் பன்னிரண்டு அப்பங்கள் ஒவ்வொரு வாரமும் வைக்கப்படும் (லேவி 24:9). இப்படிப் பழைய அப்பங்கள் மாற்றப்பட்டு, புதிய அப்பங்கள் வைக்கப்படும்பொழுது ஏற்கெனவே இருந்த பன்னிரண்டு அப்பங்களைக் குருக்கள் மட்டுமே உண்ணவேண்டும். அப்படிப்பட்ட அப்பங்களைத் தாவீது சவுலிடமிருந்து தப்பியோடும்பொழுது, தன்னோடு இருந்தவர்களோடு உண்கின்றார். இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டிப் பேசும் இயேசு, தாவீது செய்தது குற்றமில்லை என்றால், தன் சீடர்கள் செய்ததும் குற்றமில்லைதான் என்கின்றார். அதைவிடவும் சட்டங்களை விடவும் மனிதரின் தேவை முக்கியம் என்கின்றார் .

ஆம், சட்டமா? மனிதரின் தேவையா? என்று பார்த்தால், மனிதரிடம் தேவைதான் முன்னுரிமை பெறவேண்டும். இந்த உண்மையைத்தான் இயேசு பரிசேயர்களுக்கு எடுத்துக் கூறுகின்றார். ஆகையால், நாம் சட்டங்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டு பிறரைக் குறைகூறிக் கொண்டு திரியாமல், மனிதரின் தேவைக்குக் முதன்மையான இடம் கொடுத்து, ஒருவர் மற்றவரிடம் அன்போடும் இரக்கத்தோடும் வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்பது மூத்தோர் வாக்கு. ஆகையால், நாம் அடுத்தவரைக் குறைகூறிக் கொண்டே இராமல், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளைக் கண்டு பாராட்டக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================

அன்னைத் தெரசா (செப்டம்பர் 05)


நிகழ்வு


நம்முடைய இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜரால் அன்னைத் தெரசாவைப் பற்றி இவ்வாறு நினைவுகூர்கின்றார்: இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. குளிர்காலத்தில் கல்கத்தாவுக்கு அருகிலுள்ள விடுதி ஒன்றில் தனது நண்பர்களோடு தங்கியிருந்தார் பரமஹம்சர். கடுங்குளிரைத் தாக்குப் பிடிக்க நெருப்புக் கங்சின் அருகே அமர்ந்து குளிர் காய்ந்தபடியே அவர்கள் ஒரு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது பரமஹம்சர் தனது உடல் திடீரென்று சில்லிட்டுப் போனதை உணர்ந்தார். உடனே நண்பர்களிடம் விடுதியின் வாசல் கதவைத் திறந்து விடுமாறும், அங்கே ஓர் ஏழை கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதாகவும் சொல்ல ஆரம்பித்தார்.


இதைக் கேட்ட நண்பர்கள் கேலி செய்தார்கள். "இங்கிருந்தபடியே நீர் எப்படி இப்படிச் சொல்கிறீர்?". அவரோ திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருக்க வேறு வழியில்லாமல் நண்பர்கள் போய் கதவைத் திறந்து பார்க்க, அங்கே, அவர் சொன்னபடியே கடுங்குளிரில் நடுங்கியபடியே நின்றுகொண்டிருந்தார் ஒரு மனிதர். பரமஹம்சரின் இந்த உடன் உணரும் உள்ளத்தை (Empathatic Feeling) நினைவுகூர்ந்த முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இவ்வாறு எழுதுகிறார் : "இது போன்ற உள்ளம்தான் இந்திய ஏழை எளியவரின் நிலை கண்டு, அன்னைத் தெரசாவை அல்பேனியாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவந்து சேர்த்தது.


வாழ்க்கை வரலாறு


தற்போதைய மாசிடோனியாவில் உள்ள ஸ்காப்ஜே என்னும் நகரில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாள் நிக்கோலா திராணி என்ற தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர்தான் அன்னைத் தெரசா. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஆக்னஸ் கொன்சாகா போஜாக்சியு என்பதாகும். தெரசா சிறுவயது முதலே கடவுள்மீது அதிக பக்தியும் சக மனிதர்களிடத்தில் அன்பும் கொண்டு வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரரும், சகோதரியும் இருந்தனர்.


சிறுவயதிலேயே தந்தையை இழந்த தெரசா தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்தார். இவருடைய பங்கிலே செயல்பட்டு வந்த மறைக்கல்வி மாமன்றத்தின் மூலமாக மறைபரப்புப் பணிகளை பல்வேறு நாடுகளுக்குச் சென்று செய்யவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டார். இவருக்குப் பதினெட்டு வயது நடந்துகொண்டிருந்தபோது லோரோட்டோ அருட்சகோதரிகள் சபையில் அருட்சகோதரியாகச் சேர்ந்தார். அங்கே இருந்தபோதுதான் இவர் ஆக்னஸ் என்ற தன்னுடைய திருமுழுக்குப் பெயரை குழந்தைத் தெரசாவின் மீது கொண்ட ஆழமான பக்தியினால் தெரசா என்று மாற்றிக்கொண்டார். அடுத்த ஆண்டிலேயே அவர் இந்தியாவில் உள்ள கல்கத்தாவில் பணிசெய்வதற்கு புறப்பட்டு வந்தார். அங்கே ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.


1946 ஆம் ஆண்டு, செப்டம்பர் 10 ஆம் நாள், அவர் கல்கத்தாவிலிருந்து டார்ஜிலிங்கிற்கு தியானம் மேற்கொள்வதற்காக தொடர்வண்டியிலே பயணம் செய்தபோது கடவுளின் அழைப்பை உணர்ந்தார். "ஏழைகளுக்குப் பணிசெய்ய வருவாயா?" என்ற குரல் அவருடைய உள்ளத்தில் கேட்டுகொண்டே இருந்தது. உடனே அவர் இச்செய்தியை கல்கத்தாவின் ஆயரிடம் சொன்னார். அதற்கு அவர், "இதெல்லாம் சாத்தியப்படாது, தயவுசெய்து நீங்கள் வழக்கமாக செய்துகொண்டிருக்கும் பணியையே தொடர்ந்து செய்யுங்கள்" என்று சொல்லி அவருடைய விரும்பத்திற்கு முற்றுப்புள்ளி வந்தார். ஆனால் தெரசாவோ தன்னுடைய விருப்பத்தை அப்போது திருத்தந்தையாக இருந்த பனிரெண்டாம் பத்திநாதரிடம் எடுத்துச் சொன்னார். அதற்கு அவர், "இது இவருடைய திட்டம் என்றால், அதைத் தடுப்பதற்கு நான் யார்?" என்று சொல்லி, தெரசாவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அடுத்த ஆண்டிலேயே தெரசா இதுவரைக்கு தான் வாழ்ந்துவந்த சொகுசான வாழக்கையை, நான்கு சுவற்றுக்குள்ளே அடைப்பட்டுக் கிடந்த வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு ஓர் இந்தியப் பெண்மணியைப் போன்று வெள்ளை நிற ஆடையில் நீல நிற பட்டை போட்ட சேலையை அணிந்துகொண்டு கல்கத்தா நகரில் இருந்த சேரிப்பகுதிகளில் தன்னுடைய பணியைச் செய்யத் தொடங்கினார். தொடக்கத்தில் போதிய பொருளாதார வசதியில்லாமல், இட வசதியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட தெரசா, அதன்பிறகு இறைவனுடைய பராமரிப்பினால் தன்னுடைய பணியை செவ்வனே செய்யத் தொடங்கினார்.


தெரசாவின் பணியைப் பார்த்துவிட்டு நிறையப் பெண்கள் அவருக்கு உதவி செய்ய வந்தார்கள். அவர்களுடைய உதவியுடன் தெரசா 1950 ஆம் ஆண்டு "அன்பின் பணியாளர் சபை" (Sisters of Charity) என புதிய சபையைத் தொடங்கினார். தொடக்கத்தில் இச்சபையின் முதன்மையான பணி குடும்பங்களால் கைவிடப்பட்ட அனாதைகள், வயது முதிர்ந்தோர், சாகும் தருவாயில் இருக்கும் நோயாளிகளை கவனித்துக் கொள்வதாகவே இருந்தது. அதற்காக தெரசா "Home for the Dying" என்றதோர் இல்லத்தைத் தொடங்கினார். இதன்மூலம் குடும்பத்தால் கைவிடப்பட்ட அனாதைகள், ஏழை எளியவர் நல்மரணம் அடைவதற்குப் பேருதவியாக இருந்தார். 1952 ஆம் ஆண்டு சிஷ்ய பவன் என்ற புதியதோர் இல்லத்தை ஆரம்பித்து அனாதைக் குழந்தைகள் நல்வாழ்வு பெற உழைத்தார். அதற்கு அடுத்த ஆண்டில் சத்ய நிலையம் என்ற புதியதோர் இல்லத்தைத் தொடங்கி சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளர்கள் மறுவாழ்வு பெற பெரும் பங்காற்றினார்.


இப்படி அன்னைத் தெரசா பல்வேறு பணிகளைச் செய்வதைப் பார்த்துவிட்டு நிறையப் பேர் அவர்மீது மதிப்பும் மரியாதையும் கொள்ளத் தொடங்கினார்கள். ஒருசிலர் அவருடைய பெயரைக் கெடுப்பதற்காக அவர் மதமாற்றம் செய்கிறார் என்று பொய்க்குற்றம் சுமத்தினார்கள். அப்போது அன்னை அவர்களிடம், "எங்களது சிசு பவனுக்கு வரும் குழந்தைகளை, அவர்களது பெற்றோர்கள் யார் எனத் தெரியாதவரை, யாருக்கும் நாங்கள் திருமுழுக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் கிறிஸ்தவக் குழந்தை காப்பகத்திற்கு அனுப்பப்பட்டால் கிறிஸ்தவராகவோ, இந்து காப்பகத்திற்கு அனுப்பப்பட்டால் இந்துவாகவோ, முஸ்லீம் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டால் முஸ்லீமாகவோ ஆகிறார்கள். எங்களது காளிகாட் இறப்போர் இல்லத்திலே, இறந்திருக்கும் ஒருவர் கிறிஸ்தவர் அல்லது முஸ்லீம் என்று தெரியாத பட்சத்தில், தகன மேடைக்கே அனுப்பப்படுகின்றார். மேலும் என்னைப் பொறுத்தளவில், ஒரு குழந்தையைக் கட்டாயப்படுத்திக் கிறிஸ்தவராக்குவது ஒரு பாவமே" என்று சொல்லி தன்மேல் விழுந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.


அன்னைத் தெரசா செய்துவந்த பணியைப் பார்த்துவிட்டு நிறைய இடங்களிலிருந்து அவருக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. 1971 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த இருபத்து மூன்றாம் அருளப்பர் அவருக்கு அமைதிக்கான பரிசினை வழங்கினார். 1972 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் அவருக்கு நேரு விருதை வழங்கியது. 1979 ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட தொகையினையும் அவர் அனாதைக் குழந்தைகள் வாழ்வுபெறவே செலவிட்டார். 1980 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. எல்லா விருதுகளையும் அவர் ஏழைக் குழந்தைகளுக்காகவே சமர்ப்பித்தார்.


இப்படி ஓயாமல் பணிசெய்ய அன்னைத் தெரசா 1996 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு விழுந்தார். அப்போதும்கூட அவர் ஏழைக் குழந்தைகளைப் பற்றியே அதிகம் சிந்தித்தார். 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் மீண்டுமாக நோய்வாய்ப்பட்டு அவர் படுக்கையில் விழுந்தபோது அப்படியே தன்னுடைய ஆவியை இறைவனிடத்தில் ஒப்படைத்தார். அன்னைத் தெரசா இறந்த செய்தியைப் கேள்விப்பட்டதும் எல்லாரும் தங்களுடைய தாய் இறந்தது போன்றே உணர்ந்தார்கள். அன்னையின் அடக்கத்திற்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் நாட்டுதலைவர்கள் வந்து தங்களுடைய மரியாதையைச் செலுத்தினார்கள். இந்த மண்ணுலகில் "பூமியின் தேவதையாக" வாழ்ந்துவிட்டுச் சென்ற அன்னைக்கு 2003 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாளில் அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், புனிதர் பட்டமும் கொடுக்கப்பட்டது.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


அன்னைத் தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


எளியவரில் இறைவனைக் காணுதல்


அன்னைத் தெரசா ஏழை எளிய மக்களில் இறைவனைக் கண்டார். அதனாலேயே அவர் சொகுசாக வாழ்ந்துவந்த வாழக்கையை உதறித் தள்ளிவிட்டு கல்கத்தாவில் சேரிப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்களுக்கு பணிசெய்வதில் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். அவர் "மிகச் சிறியோராகிய சகோதர சகோதரிகளுக்குள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத் 25:40) என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தார். அதனாலேயே அவர் இன்றைக்கும் மக்களால் நினைவுகூறப்படுகின்றார்.


அன்னையின் வாழ்வில் நடைபெற்றர் ஒரு நிகழ்வு. ஒரு சமயம் செல்வச் சீமான்கள் அன்னைத் தெரசாவிற்கு பெரிய விருந்தொன்று தந்தார்கள். அந்த விருந்தில் திடிரென்று தொழுநோய் பற்றிய பேச்சு எழுந்தது. அப்போது செல்வச் சீமாட்டி அன்னைத் தெரசாவிடம், "இந்தத் தொழுநோயாளர்களை எப்படித்தான் தொடுகிறீர்களோ?, நானெல்லாம் ஒரு மில்லியன் டாலர கொடுத்தாலும் அவர்களைத் தொடமாட்டேன்!" என்றார். அதற்கு அன்னை, "ஆம், நான்கூடத்தான் இரண்டு மில்லியன் டாலரே கொடுத்தாலும் தொழுநோயாளர்களைத் தொடமாட்டேன். ஆனால், நான் ஒவ்வொரு தொழுநோயாளியிலும் இயேசுவைக் காண்கிறேன். அதனால்தான் தொழுநோயாளர்கள் வடிவில் இருக்கும் இயேசுவுக்கு பணிசெய்கிறேன்" என்று சொன்னார்.


அன்னைத் தெரசாவைப் போன்று நாமும் அடுத்தவரில், ஏழை எளிய மக்களிடத்தில் இயேசுவை, அந்த இறைவனைக் காண்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். அப்படி நாம், எளியவருக்கு உதவி செய்யும்போது அந்த இறைவனுக்கே உதவி செய்கிறோம் என அறிந்து இறைவன் அதற்கேற்ற கைமாறு தருவார்.


இறைவன்மீது நம்பிக்கை


அன்னைத் தெரசா எந்த செயலைச் செய்தாலும் இறைவனின் துணை தன்னோடு இருக்கின்றது என்ற இறை நம்பிக்கையோடுதான் செய்தார். தன்னுடைய பணியைத் தொடங்கும்போது அவரிடத்தில் வெறும் ஐந்து ரூபாய்தான் இருந்தது. ஆனாலும் அவர் இறைவன் தன்னை உடனிருந்து வழிநடத்துவார், தன்னைப் பராமரித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையோடு தொடங்கினார். இன்றைக்கு அவருடைய சபையானது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரந்துவிரிந்து கிடக்கின்றது. ஆகவே, நாம் இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழும்போது இறைவன் நம்முடைய தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்பதைத்தான் அவருடைய வாழ்வு நமக்குக் கற்றுத்தருகின்றது.

உலகில் உள்ள அனைத்து நாட்டு ஆயர்களும் அன்னையைத் தங்களது நாடுகளுக்கு பணிசெய்ய அழைத்துக்கொண்டிருந்த நேரமது. அப்போது அன்னை தானாகவே நீயூயார்க் நகரைத் தேர்ந்துகொண்டு, தனது இரண்டு சகோதரிகளோடு அங்கு போனார். பணிகளை ஆரம்பிக்க பல இடங்களைப் பார்வையிட்டார். பொருத்தமான இடம் அமையாமல் கொஞ்சம் காலதாமதமாகிக் கொண்டிருந்தது. இதைக் கவனித்த நீயூயார்க் நகர் கர்தினால் ஹீக் அன்னையிடம், "பணிகளை ஆரம்பிக்க போதிய பணம் இல்லையோ, நான் வேண்டுமானால் ஒவ்வொரு சகோதரிக்கும் மாதம் 500 டாலர் தந்துவிடுகிறேன், விரைவில் பணியை ஆரம்பியுங்கள்" என்றார். அதற்கு அவர், "இந்த நீயூயார்க் நகரிலே கடவுள் என்ன திவாலாகியா போய்விட்டார்?, அனைத்தையும் அவர் தருவார்! நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?" என்று சொல்லி விரைவிலே அங்கே தன்னுடைய பணியைத் தொடங்கினார்.

கடவுள் மீது அவர் எந்தளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தால் இப்படிச் சொல்லியிருக்க முடியும் என நாம் சிந்தித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

அன்னை அடிக்கடி சொல்கின்ற வசனம், "ஜெபம் செய்து பாருங்கள்; நீங்கள் கடவுள் அருகில் போவீர்கள். சேவை செய்து பாருங்கள், கடவுளே உங்களருகில் வருவார்". ஆகவே, நாம் அன்னையைப் போன்று ஏழை எளியவரில் இறைவனைக் கண்டு அவர்களுக்கு சேவை செய்வோம், எல்லாச் சூழலில் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!