|
|
04
செப்டம்பர் 2020 |
|
பொதுக்காலம்
22ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 4: 1-5
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை
அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். பொறுப்பாளர்கள்
நம்பிக்கைக்கு உரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம்
அன்றோ! என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின்
நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட
மாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன்.
எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும்
நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர்
ஆண்டவர் ஒருவரே. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின்
வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில்
மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும்
வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து
பாராட்டுப் பெறுவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
=================================================================================
திபா 37: 3-4. 5-6. 27-28. 39-40 . (பல்லவி: 39a)
Mp3
பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.
3
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத்தக்கவராய்
வாழ்.
4
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர்
நிறைவேற்றுவார். - பல்லவி
5
உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே
உன் சார்பில் செயலாற்றுவார்.
6
உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும்
அவர் விளங்கச் செய்வார். - பல்லவி
27
தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில்
நிலைத்திருப்பாய்.
28
ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர்
கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ
வேரறுக்கப்படுவர். - பல்லவி
39
நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான
நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
40
ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து
அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை
மீட்கின்றார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 8: 12
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே;
என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி
காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39
அக்காலத்தில்
பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, "யோவானுடைய சீடர்கள்
அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின்
சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக
இருக்கின்றனரே!" என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, "மணமகன்
மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச்
செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம்
வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்றார்.
அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: "எவரும் புதிய ஆடையிலிருந்து
ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை.
அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய
துண்டும் பழையதோடு பொருந்தாது.
அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி
வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச்
செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும்.
புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய
திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்;
ஏனெனில் "பழையதே நல்லது" என்பது அவர் கருத்து."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 கொரிந்தியர் 4: 1-5
"தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே"
நிகழ்வு
திருத்தந்தை இருபத்து மூன்றாம் யோவான், வெனிஸ் நகரில் ஆயராக இருந்தபொழுது
நடந்த நிகழ்வு இது. இவர் இருந்த வெனிஸ் மறைமாவட்டத்தில் ஒரு பங்குப்பணியாளர்
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார் என்ற செய்தி இவருக்குத்
தெரிய வந்தது. உடனே இவர் தனது செயலரிடம், "வாருங்கள்! நாம் இருவரும்
அந்தப் பங்குப் பணியாளரைப் பார்த்துவிட்டு வருவோம்" என்று
சொல்லிவிட்டு, அவரைப் பார்ப்பதற்கு இருவரும் கிளம்பிப் போனார்கள்
இருவரும், குறிப்பிட்ட அந்தப் பங்குப் பணியாளரின் பங்கு எல்கையில்
நுழைகையில் ஒரு பெரிய விடுதி இருப்பதைக் கண்டார்கள். அந்த
விடுதிக்கு முன்பாக பங்குப் பணியாளரின் ஊர்தியானது
நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஆயர், தன் செயலரிடம்,
"பங்குப்பணியாளர் இங்குதான் இருக்கின்றார். அவரை அழைத்து
வாருங்கள்" என்றார். செயலரும் ஆயரின் சொல்லுக்குப் பணிந்து,
விடுதிக்குள் சென்று, பங்குப் பணியாளரைத் தேடித் பார்த்தார்.
அவர் ஒரு மூலையில் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தார். உடனே
ஆயரின் செயலர் அவரிடம் சென்று, "ஆயர் உங்களை அழைத்து வரச்
சொன்னார்" என்றார். அவரோ விழுந்தடிக்கொண்டு ஆயரிடம் ஓடி வந்தார்.
ஆயர் அந்தப் பங்குப் பணியாளரிடம், "வண்டியைப் பங்கு இல்லத்திற்கு
ஓட்டுங்கள்" என்று சொல்ல, அவரும் வண்டியைப் பங்கு இல்லத்திற்கு
ஓட்டிக்கொண்டு சென்றார். போகிற வழியில் பங்குப் பணியாளர்,
"ஆயர் என்னைத் தேடி வந்திருக்கின்றார்... அவர் வந்த நேரம்
பார்த்து, நான் குடித்துக் கொண்டிருந்திருக்கின்றேன்... இன்றைக்கு
எனக்கு என்ன ஆகப் போகிறதோ...?" என்று பதற்றத்தோடு சென்றார்.
அவரைத் தொடர்ந்து ஆயரும் அவருடைய செயலரும் தங்களது வண்டியில்
சென்றார்கள்.
பங்குப் பணியாளர் பங்கு இல்லத்தை அடைந்ததும், ஆயர் பங்குப் பணியாளரிடம்,
"இப்பொழுது நான் உங்களிடத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை
மேற்கொள்ளவேண்டும்" என்றார். இதைக்கேட்டு அதிர்ந்தவராய் பங்குப்
பணியாளர் ஆயரிடம், "ஆயரே! நீங்களா என்னிடத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை
மேற்கொள்ளப் போகிறீர்கள்...?" என்றார். "ஆமாம், நான்தான் உங்களிடத்தில்
ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொள்ளப் போகிறேன்" என்றார். பின்னர்
அந்தப் பங்குப் பணியாளர் ஆயருக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்க,
ஆயர் அவருக்கு நன்றிசொல்லிவிட்டுத் தன்னுடைய இல்லத்திற்குத்
திரும்பினார்.
வரும் வழியில், நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த
ஆயரின் செயலர் அவரிடம், "ஆயர்ப் பெருந்தகையே! குடிப்பழக்கத்திற்கு
அடிமையாகி, பலருக்கு துன்மாதிரியாக இருக்கும் அந்தப் பங்குப்
பணியாளரை நீங்கள் கண்டிப்பீர்கள் என்று நினைத்தேன். நீங்களோ
அவரிடம் ஒப்புரவு அருளடையாளம் மேற்கொண்டுவிட்டு வந்திருக்கின்றீர்களே!"
என்றார். அதற்கு ஆயர் தன் செயலரிடம், "அவர் குடிகாரர்... பாவி
என்று தீர்ப்பிடுவதற்கு நான் யார்...? கடவுளைத் தவிர வேறு
யாருக்கும் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இல்லாதபொழுது, நான் அவரைத்
தீர்ப்பிடுவது சரியாகுமா...? மேலும் நான் அவரிடம் ஒப்புரம் அருளடையாளம்
மேற்கொண்டிருப்பதால், அவர் "ஆயரே என்னிடம் ஒப்புரவு அருளடையாளம்
மேற்கொண்டுவிட்டுப் போயிருக்கின்றார் என்றால், நான் எப்படி இருக்கவேண்டும்...?"
என்று தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பார்" என்றார்.
ஆயர் தன்னுடைய செயலரிடம் சொன்னதுபோன்றே குடிக்கு அடிமையான அந்தப்
பங்குப் பணியாளர் தனது வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப்
பார்த்து, ஒருசிலர் மாதங்களிலேயே குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையானார்.
ஆம். திருத்தத்தை இருபத்து மூன்றாம் யோவான் ஆயராக இருந்தபொழுது,
குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிருந்த பங்குப் பணியாளரைத்
தீர்ப்பிடவில்லை; மாறாக அவரை வேறொரு வழியில் நல்வழிக்குக்
கொண்டு வந்தார். இன்றைய முதல் வாசகத்தில் பவுல் யாரும்
யாரையும் தீர்ப்பளிக்கக்கூடாது. ஏனெனில் தீர்ப்பு வழங்குபவர்
ஆண்டவர் ஒருவரே என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இந்த
வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப்
பாப்போம்.
தீர்ப்பு வழங்குபவர் மனிதர் அல்ல; ஆண்டவர்
கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர், கிறிஸ்துவின் ஊழியர்களாக
இருந்து, கடவுளின் மறை உண்மையை அறிவித்த பவுல், அப்பொல்லோ,
கேபா ஆகியோரைத் தீர்ப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும்
வகையில், புனித பவுல் இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும்
வார்த்தைகளை எழுதுகின்றார்.
"என்னைப் பற்றி மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால், அதைப் பற்றிச்
சிறிதும் கவலைப்படமாட்டேன்" என்று சொல்லும் புனித பவுல்,
"எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே" என்கின்றார்.
ஆண்டவருக்குத்தான் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருப்பதால்,
யாருக்கும் யாரையும் தீர்ப்பளிப்பதற்கு அதிகாரம் கிடையாது. இந்த
உண்மையைத்தான் பவுல் கொரிந்து நகரில் இருந்த மக்களிடம் எடுத்துச்
சொல்கின்றார். கடவுளுக்கு மட்டுமே தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருக்கின்றபொழுது,
நாம் அடுத்தவரை எந்தவோர் ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பிடுவது தகுமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான்
நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்" (மத் 7: 1) என்பார்
இயேசு. ஆகையால், நாம் யாரையும் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல்,
அடுத்தவரிடம் இருக்கும் நல்ல பண்புகளைக் கண்டு, அவற்றைப்
பாராட்டக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 5: 33-39
"பரிசேயர்களின் பழைய சட்டமும், இயேசுவின்
புதிய சட்டமும்"
நிகழ்வு
ஒரு நகரில் ஜான், பெர்னார்டு என்ற இரண்டு மனநல மருத்துவர்கள்
இருந்தார்கள்; இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்கள். ஒருநாள்
இருவரும் ஜானுக்குச் சொந்தமான மருத்துவமனையில்
பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஜான், தன் நண்பன் பெர்னார்டைப்
பார்த்து, "மனிதர்களில் பலர் செம்மறியாட்டுக் கூட்டம்
போன்றவர்கள். ஒருவர் ஒரு செயலைச் செய்தால், அதை மற்றவர்
எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அப்படியே செய்வார்" என்றார்.
"அப்படியா?!" என்று கேட்ட பெர்னார்டிடம், "ஆமாம், நீ
வேண்டுமானால் பார்" என்று சொல்லிவிட்டு, "அடுத்த நோயாளர்
என்னுடைய அறைக்குள் வருவதற்கு முன்பாக நீ என்னுடைய காலைத்
தொட்டு வணங்கி, ஒரு நூறு உரூபாய் நோட்டை காலடியில்
வைத்துவிட்டுப் போ, அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்"
என்றார். பெர்னார்டும் தன் நண்பர் தன்னிடம் சொன்னதுபோன்று,
அடுத்த நோயாளர், ஜானின் அறைக்குள் நுழைவதற்கு முன்பாக, அவருடைய
காலைத் தொட்டு வணங்கி, நூறு உரூபாயை வைத்துவிட்டுப் போனார்.
பெர்னார்டு அங்கிருந்து போன பிறகு உள்ளே வந்த ஒரே
குடும்பத்தைச் சார்ந்த மூவர், மருத்துவர் ஜானிடம் தங்களுடைய
பிரச்சனை எடுத்துச் சொல்ல, அவர் அவர்களிடம் அவர்களுடைய
பிரச்சனைகள் தீர்வதற்கான வழிகளைச் சொல்லி முடித்ததும், அவர்கள்
அவரிடமிருந்து விடைபெறும்பொழுது, அவருடைய காலைத் தொட்டு
வணங்கி, ஒரு நூறு உரூபாய் நோட்டை அவரது காலடியில் வைத்தார்கள்.
இதைப் பார்த்துவிட்டு மருத்துவர் ஜான் அவர்களிடம், "நீங்கள்
ஏன் என் காலைத் தொட்டு வணங்கி, நூறு உரூபாயை வைத்தீர்கள்...?"
என்று கேட்க, அவர்கள் அவரிடம், "எங்களுக்கு முன்பாக உங்களைப்
பார்க்க வந்தவர் இப்படிச் செய்தார். அதைப்
பார்த்துவிட்டுத்தான் நாங்கள் இப்படிச் செய்தோம்" என்றார்கள்.
பின்னர் அவர் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, தன் நண்பர்
பெர்னார்டுவை உள்ளே அழைத்தார். "நடந்த எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டுதானே இருந்தாய்...! இதிலிருந்தே நாம்
தெரிந்துகொள்ளலாம். மனிதர்கள் எப்படிச் செம்மறியாட்டுக்
கூட்டம் போன்று, ஒருவர் செய்த செயலை எந்தவொரு கேள்வியும்
கேட்காமல், சாத்திர சம்பிரதாதம் என்று அப்படியே
செய்கின்றார்கள் என்று" என்றார்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், மனிதர்களாகிய
நாம் எப்படி பழக்கவழக்கம், சாத்திர சம்பிரதாயம் என்ற பெயரில்
நம் முன்னோர்கள் செய்ததை எந்தவொரு கேள்வியும் கேட்காமல்
அப்படியே செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு
உணர்த்துவதாக இருகின்றது. நற்செய்தியில் நோன்பு பற்றிய கேள்வி
எழுகின்றபொழுது, இயேசு, "எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு
துண்டைக் கிழித்து, அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை"
என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன
என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பரிசேயர்களின் பழைய சட்டம்
நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற பரிசேயரும் மறைநூல்
அறிஞரும், "யோவானுடைய சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும்
அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகின்றனர். உம்முடைய சீடரோ
உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே" என்கின்றார்கள்.
இக்கேள்விக்கு இயேசு தந்த பதிலைக் குறித்துச் சிந்தித்துப்
பார்ப்பதற்கு முன்னர், இஸ்ரயேலில் எப்பொழுதெல்லாம் மக்கள்
நோன்பிருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஆண்டுக்கொரு முறை பாவப் பரிகார நாளில் மக்கள் நோன்பிருக்க
வேண்டும் என்பது மோசேயின் சட்டம் (லேவி 16: 29) ஒருசில
முக்கியமான காரணங்களுக்காகவும் மக்கள் நோன்பிருந்தார்கள் (நீத
20: 26; 1அர 21: 27); ஆனால், பரிசேயர்களோ மக்களுக்கு முன்பாகத்
தாங்கள் நல்லவர்கள் என்பதைக் காட்டுவதற்காக, வாரம் இருமுறை
நோன்பிருந்தார்கள் (லூக் 18: 12); இதைப் பார்த்து யோவானின்
சீடர்களும் அடிக்கடி நோன்பிருந்தார்கள். யோவானின் சீடர்கள்
மெசியாவின் வருகைக்காக நோன்பிருந்தார்கள்; அவர்கள் மெசியா
வந்துகூட தெரியாமல் நோன்பிருந்துதான் இதில் உள்ள நகைமுரண்.
இப்படித்தான் இருந்தது, பரிசேயர் செய்துவந்த நோன்பு. இதில்
இறையன்புக்கோ, பிறரன்புக்கோ எந்தவோர் இடமுமில்லை.
இயேசுவின் புதிய சட்டம்
தாங்கள் நல்லவர்கள் என்பதைக் காட்டுவதற்காக நோன்பு
மேற்கொள்ளப்பொழுது, இயேசு, "மணமகன் மணவிருந்தினரோடு
இருக்கும்பொழுது, அவர்கள் நோன்பிருப்பதில்லை" என்றும், "எவரும்
புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு
ஓட்டுப் போட்டுவதில்லை" என்றும் சொல்லி, தான் அன்பு என்ற புதிய
சட்டத்தைக் கொண்டுவந்திருக்கின்றேன், அதைப் பழி, பாவம் என்பதை
வலியுறுத்தும் பழைய சட்டத்தோடு ஒப்பிடவேண்டாம் என்று
குறிப்பிடுகின்றார்.
ஆம், ஆண்டவர் இயேசு "சட்டம்" என்ற பழையதைத் தூக்கி
எறிந்துவிட்டு, அன்பு என்ற புதியதைக் கொண்டுவந்திருக்கின்றார்.
ஆகையால், நாம் சாத்திர சம்பிரதாயங்கள், மரபுகள் என்ற பழமையைப்
பற்றிக்கொண்டிருக்காமல், அன்பு என்ற புதிய கட்டளையைக்
கடைப்பிடித்து வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
"அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" (உரோ 13: 10) என்பார் புனித
பவுல். ஆகையால், நாம் பழைமைவாதத்தைப் பற்றிக்கொண்டிருக்காமல்,
அன்பைப் பற்றிக்கொண்டு அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|