|
|
01
செப்டம்பர் 2020 |
|
பொதுக்காலம்
22ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 3: 18-23
சகோதரர் சகோதரிகளே,
எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை
ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது
அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய்
உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, "ஞானிகளைக் கடவுள்
அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்." மேலும் "ஞானிகளின் எண்ணங்கள்
வீணானவை என ஆண்டவர் அறிவார்." எனவே மனிதரைக் குறித்து யாரும்
பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும்
உங்களுக்குரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம்,
எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. ஆனால் நீங்கள்
கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 24: 1-2. 3-4ab. 5-6 . (பல்லவி: 1a)
Mp3
=================================================================================
பல்லவி: மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை.
1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும்
அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது
அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி
3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில்
நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை
நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி
5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து
நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத்
தேடுவோர் இவர்களே. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 19
அல்லேலூயா, அல்லேலூயா! என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப்
பிடிப்பவர் ஆக்குவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11
அக்காலத்தில்
இயேசு கெனசரேத்து ஏரிக் கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான
மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர்
படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள்
ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து
அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே
மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய்,
மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். சீமோன் மறுமொழியாக,
"ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும்
கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்"
என்றார்.
அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள்.
வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச்
சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து
இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும்
நிலையிலிருந்தன.
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து,
"ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார்.
அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு
திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள்
யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.
இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன்
ஆவாய்" என்று சொன்னார்.
அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும்
விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 கொரிந்தியர் 3: 18-23
"நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்"
நிகழ்வு
அது ஒரு கடற்கரைக் கிராமம். அந்தக் கிராமத்தில் கடற்கரையை ஒட்டி
ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் கிறிஸ்டோபர் என்றொரு சிறுவன்
இருந்தான். இவன் கடலில் போகும் விதவிதமான படகுகளைப்
பார்த்துவிட்டு, தானும் ஒரு படகு செய்யலாம் என்று முடிவு
செய்தான். அதற்காக இவன் ஒரு மரக்கட்டையைத் தேர்ந்தெடுத்து, அதில்
ஒரு படகு செய்து, தனக்குப் பிடித்த வண்ணத்தை அதில் பூசினான்.
பின்னொரு நாளில் இவன் தான் செய்த சிறிய படகைக் கடலில் விட்டுப்
பார்க்க நினைத்தான். அதன்படி இவன், தான் செய்த சிறு படகை எடுத்துக்கொண்டு,
கடலுக்குச் சென்று அதில் விட்டுப் பார்த்தான். இவன் செய்த
சிறிய படகு கடலில் நன்றாக மிதந்தது. அதைப் பார்த்துவிட்டு இவனுக்கு
மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. அப்பொழுது இவன் எதிர்பாராத வகையில்
ஒரு பெரிய அலை அடித்தது. அந்த அலையில் இவன் செய்த படகு கடலுக்குள்
இழுத்துக் கொண்டு போகப்பட்டது. இதைச் சற்றும் எதிர்பார்த்திராத
இவன் பேயறைந்தவன் போல் தன்னுடைய சிறு படகு கடலுக்குள் போன
திசையே பார்க்கத் தொடங்கினான். அது திரும்பி வராததை அறிந்து,
கவலை தோய்ந்த முகத்தோடு வீட்டிற்குச் சென்றான். அன்றிரவு இவனுக்குத்
தூக்கமே வரவில்லை.
இது நடந்து ஓரிரு நாள்கள் கழித்து, இவன் கடைத்தெருவிற்குச்
சென்றான். அப்பொழுது ஒரு விளையாட்டுப் பொருள்கள் விற்கும் கடையில்,
இவன் செய்த படகு மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு, இவன் மிகுந்த உற்சாகத்தோடு
கடைக்காரரிடம் சென்று, "இது நான் செய்த படகு. இது எப்படி இங்கே
வந்தது?" என்றான். "இது உன்னுடைய படகு என்பதெல்லாம் எனக்குத்
தெரியாது. நான் இதை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றேன். உனக்கு
வேண்டுமானால், நீ இதற்குஉரிய விலை கொடுத்து வாங்கிக்கொள்" என்று
சற்றுக் கடுமையான வார்த்தைகளில் பதிலளித்தார் கடைக்காரர்.
இது இவனுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. உடனே இவன் தன் தந்தையிடம்
வந்து, நடந்த எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். இவனுடைய தந்தையோ,
"படகை நீ செய்ததாகவே இருந்தாலும், இப்பொழுது அது உனக்குச் சொந்தமாக
இல்லை. அதனால் நீ அதை உனக்குச் சொந்தமாக்கவேண்டும் என்றால், அதை
விலை கொடுத்துத்தான் வாங்கவேண்டும்... இத்தனை நாள்களும் நானும்
அம்மாவும் உனக்கும் கொடுக்கும் பணத்தை நீ சேமித்து வருகின்றாய்
அல்லவா, அதை நீ கடைக்காரரிடம் கொடுத்து அந்தப் படகை உனக்குச்
சொந்தமாக்கிக் கொள்" என்றார்.
தன் தந்தை கொடுத்த யோசனை இவனுக்குச் சரியென பட்டதால், இவன்
தான் பல நாள்களாகச் சேமித்துவைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு
போய், கடைக்காரரிடம் கொடுத்து, அந்தச் சிறுபடகை தனக்குச் சொந்தமாக்கிக்
கொண்டு, வீட்டிற்கு வந்து, தன் தந்தையிடம், "அப்பா! என்னுடைய
படகைப் பாருங்கள்" என்று சொல்லி மகிழ்ந்தான்.
இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன்தான் இயேசு; படகுதான் நாம் அனைவரும்.
சிறுவன் எப்படித் தனக்குரியதை எல்லாம் கொடுத்து சிறுபடகைத் தனக்குச்
சொன்னமாக்கிக் கொண்டானோ, அப்படி இயேசு தன்னையே தந்து, நம்மைத்
தனக்கு உரியவர்கள் ஆக்கிக்கொண்டார். ஆகையால், தன்னையே தந்து,
நம்மை அவருக்கு உரியவர்களாக்கிக் கொண்டதால், நாம் அனைவரும் நம்மைக்
குறித்துப் பெருமையடித்துக்கொண்டு, நமக்காக வாழாமல்,
கிறிஸ்துவுக்காக வாழவேண்டும். இதைத்தான் இந்த நிகழ்வும், இன்றைய
முதல் வாசகமும் எடுத்துச் சொல்கின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதால் கிறிஸ்துவைக்
குறித்துப் பெருமை பாராட்டுவோம்
கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த ஒருசிலர், தங்களது ஞானத்தைக்
குறித்துப் பெருமையடித்துக்கொண்டார்கள். இப்படிப்பட்ட
சூழ்நிலையில், புனித பவுல் உலக ஞானம் என்பது கடவுளுக்கு முன்பு
மடமை என்று சுட்டிக்காட்டுகின்றார். இதற்காக அவர் யோபு 5:12,
திருப்பாடல் 94: 11 ஆகிய இரண்டு பகுதிகளிலும் வருகின்ற இறைவார்த்தையை
மேற்கோள் காட்டிப் பேசுகின்றார்.
ஆம், மனித ஞானம் கடவுளுக்கு முன் மடமைதான். ஆகையால், யாரும் தங்களுடைய
ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்டுவது மிகப்பெரிய அபத்தமாகும்.
மனிதர்கள் ஏன் தங்களுடைய ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்டக்கூடாது
என்பதற்குப் புனித பவுல் சொல்லக்கூடிய இரண்டாவது காரணம், நாம்
அனைவரும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து நம்மை
விலைகொடுத்து வாங்கிக்கொண்டார் என்பதால்தான் (1கொரி 7: 23;
2பேது 2:1). நாம் அனைவரும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்றால்,
அவருக்காக வாழ்ந்து, அவரைக் குறித்துப் பெருமை பாராட்டவேண்டுமே
ஒழிய, நம்மைக் குறித்துப் பெருமை பாராட்டக்கூடாது.
இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் நாம், கிறிஸ்துவுக்கு உகந்தவர்களாய்
வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
"நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்
பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன்" (கலா 6: 14) என்பார்
புனித பவுல். ஆகையால், நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்ற
உணர்வோடு அவரைக் குறித்துப் பெருமை பாராட்டுவோம்; அவருக்கு உகந்த
வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 5: 1-11
"அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப்
பின்பற்றினார்கள்"
நிகழ்வு
பதினொன்றாம் நூற்றாண்டில், காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ
மன்னருக்கு இணையாக மிகப்பெரிய செல்வந்தராய் வாழ்ந்து வந்தவர்
பட்டினத்தார். கடல் வணிகம் செய்து வந்ததால், பட்டினத்தாரிடம்
அவ்வளவு செல்வம் இருந்தது. இதனால் மக்கள் இவரை இவருடைய
இயற்பெயரான திருவெண்காடர் என்று அழைப்பதற்குப் பதில்,
பட்டினத்தார் என்றே அழைத்து வந்தனர்.
இவருக்கு ஒரு மகன் இருந்தான். ஒருநாள் அவனை இவர் கடல்
வணிகத்திற்கு அனுப்பி வைத்தார். போனவன் நீண்ட நாள்களாகத்
திரும்பி வரவில்லை. "தன் மகனுக்கு என்ன வாயிற்று?" என்று இவர்
நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது, ஒருநாள் அவன் திரும்பி
வந்தான். "கடல் வணிகத்திற்குச் சென்றவன், நிறையச்
சம்பாத்தித்து வந்திருப்பான்" என்று இவர் எதிர்பார்த்தார்.
ஆனால், இவர் நினைத்ததற்கு மாறாக, எருவிராட்டியையும் தவிடையும்
அவன் கொண்டு வந்திருந்தான்.
இதைக் கண்டு சினமுற்ற பட்டினத்தார் அவனை கடுமையாகத் திட்டித்
தீர்த்தார். இதனால் அவன் மிகுந்த வருத்தத்தோடு தன் தாயிடம்
சென்றான். பின்னர் அவன் ஓர் ஓலைத் துணுக்கில் "காதற்ற ஊசியும்
வாராதுகாண் கடைவழிக்கே!" என்ற வார்த்தைகளை அவரிடம்
கொடுத்துவிட்டு அப்படியே ஓடிப்போய்விட்டான். பட்டினத்தார்
இவ்வார்த்தைகளைப் படித்துப் பார்த்தார். "காதற்ற ஊசி கடையில்
விற்பனைக்கு வராது...! அப்படியானால், நாம் சேர்த்து
வைத்திருக்கும் செல்வம் கடைசிவரைக்கும் வராதுதானே! என்ற
உண்மையை உணர்ந்தவராய் ஞானம் பெற்றார்.
இதற்குப் பிறகு இவர் தன்னுடைய செல்வம், மனைவி எல்லாவற்றையும்
துறந்து, ஒரு துறவியைப் போன்று வாழத் தொடங்கினார்.
மிகப்பெரிய செல்வந்தரான பட்டினத்தார் ஞானமடைந்ததும் எப்படி
எல்லாவற்றையும் துறந்து துறவியானாரோ, அப்படி மிகுதியான
மீன்பாட்டைக் கண்டதும், பேதுருவும் யாக்கோபும் யோவானும்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார்கள்.
லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன
செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இரவு முழுவதும் பாடுபட்டும் மீன் ஒன்றும் கிடைக்காத நிலை!
நற்செய்தியில் இயேசு கெனசரேத்து ஏரிக்கு வருகின்றனர். அங்குத்
திரளான மக்கள் அவருடைய போதனையைக் கேட்க, அவரை நெருக்கிக்
கொண்டிருந்ததால், அவர் சீமோன் பேதுருவின் படகில் ஏறி அமர்ந்து,
மக்களுக்குப் போதிக்கின்றார். பின்னர் அவர் பேதுருவிடம்,
"ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள்
வலைகளைப் போடுங்கள்" என்கின்றார். அவரோ, "இரவு முழுவதும்
பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது
சொற்படியே வலைகளைப் போடுகின்றேன்" என்கின்றார்.
பேதுரும் அவருடன் இருந்தவர்களும் மீன்பிடிப்பதையே தங்களுடைய
தொழிலாகக் கொண்டவர்கள் (யோவா 21: 2-3) அப்படிப்பட்டவர்களுக்கே
மீன் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது, மனிதர்களின் இயலாமையை
வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. அதேநேரத்தில் பேதுரு
இயேசுவின் வார்த்தைகளை நம்பி வலைவீசியதும், மிகுதியான மீன்
கிடைப்பது, ஆண்டவரால் இயலாதது ஒன்றுமில்லை (லூக் 1: 37) என்ற
உண்மையை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.
பலநேரங்களில் நாம் நம்முடைய ஆற்றலால் எதையும் செய்துவிடலாம்
என்று நினைக்கின்றோம். உண்மையில் நமது ஆற்றலால் மட்டும்
எதையும் செய்ய முடியாது. புனித பவுல் சொல்வது போன்று, நமக்கு
வலுவூட்டுகின்றவரின் துணைகொண்டு மட்டுமே நம்மால் எதையும் செய்ய
முடியும் (பிலி 4: 13)
ஆண்டவரின் வல்லமையை உணர்ந்து, அவரைப் பின்தொடர்ந்தல்
இயேசு தன்னிடம் சொன்னதுபோன்று பேதுரு கடலில் வலையை வீச,
மிகுதியான மீன்பாடு கிடைத்ததைப் பார்த்துவிட்டு, அவர் தன்னுடைய
தகுதியற்ற நிலையை உணர்ந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர்
என்னைவிட்டுப் போய்விடும்" என்கின்றார். அப்பொழுதுதான் இயேசு
பேதுருவிடம், "இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்"
என்கின்றார்.
இயேசு பேதுவையும் யாக்கோபையும் யோவானையும் முன்னதாகவே தன்னுடைய
பணிக்காக அழைத்திருந்தார் (மத் 4: 19). அவர்களோ தங்களுடைய
அழைப்பின் மேன்மையை உணராமல், வழக்கம் போல் மீன்பிடித் தொழிலைச்
செய்து வந்தனர். இந்நிலையில் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு,
மலைத்துப் போய், அவர்கள் இயேசு சாதாரணமானவர் கிடையாது; ஆண்டவர்
என உணர்ந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப்
பின்தொடர்கின்றார்கள்.
ஆம், நம்மை அழைப்பது சாதாரணமாணவர் கிடையாது. இறைமகன். ஆகையால்,
நாம் அவருடைய அழைப்பின் மேன்மையை உணர்ந்து, அவரைப்
பின்தொடர்ந்து செல்வோம்
சிந்தனை
"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம்
சிலுவையைத் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும்" (மத் 16:
25) என்பார் இயேசு. எனவே, நாம் தன்னலத்தைத் துறந்து,
சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடர்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|