|
|
01
செப்டம்பர் 2020 |
|
பொதுக்காலம்
22ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின்
ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய
முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 10b-16
சகோதரர் சகோதரிகளே,
தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும்
அறிகிறார். மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அவருள் இருக்கும் மனமேயன்றி
வேறு எவரும் அறிய முடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்தில்
இருப்பதை அவர்தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார். ஆனால்,
நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தூய
ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு
அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்கிறோம். ஆவிக்குரியவர்களுக்கு
ஆவிக்கு உரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித
ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார்
கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம்.
மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்
கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால்
அறிந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின்
துணை கொண்டே ஆய்ந்துணர முடியும். ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார்.
எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. "ஆண்டவருடைய மனத்தை
அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?" நாமோ
கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 145: 8-9. 10-11. 12-13ab. 13cd-14 . (பல்லவி: 17a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்.
8
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்;
பேரன்பு கொண்டவர்.
9
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்
மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி
10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய
அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப்
பற்றிப் பேசுவார்கள். - பல்லவி
12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய
மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13ab
உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை
தலைமுறையாக உள்ளது. - பல்லவி
13cd
ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள்
அனைத்திலும் தூய்மையானவர்.
14
தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட
யாவரையும் தூக்கி விடுகின்றார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர்
தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீர் யார் என எனக்குத் தெரியும். நீர்
கடவுளுக்கு அர்ப்பணமானவர்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
4: 31-37
அக்காலத்தில்
இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு
நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக்
குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய
ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப்
பிடித்திருந்த பேய், "ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன
வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத்
தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று உரத்த குரலில்
கத்தியது.
"வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார்.
அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு
ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று.
எல்லாரும் திகைப்படைந்து, "எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்
தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும்
போய்விடுகின்றனவே!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர்.
அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 கொரிந்தியர் 2: 10b-16
மனித இயல்பை மட்டும் உடையே ஒருவர் கடவுளின்
ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை
நிகழ்வு
ஒரு நகரில் இயங்கிவந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர்,
அந்த நிறுவனம் தொடங்கப்பட்டு, பத்தாண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி,
நிறுவனத்தில் பணியாற்றி வந்த பணியாளர்களுக்கு ஒருநாள் கருத்தமர்வு
ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்தக் கருத்தமர்வில் பேசுவதற்கு நகரில்
இருந்த பிரபல மருத்துவரும் பேச்சாளருமான ஒருவரை அழைத்திருந்தார்.
அழைக்கப்பட்டிருந்த மருத்துவர் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி
வந்த பணியாளர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய வகையில்
பேசிவிட்டு, தன் உரையை முடிக்கும்பொழுது, "எத்தனையோ அறுவைச்
சிகிச்சைகளை நான் செய்திருக்கின்றேன்; ஆனால், என்ன வாழ்வில் ஆன்மா
என்ற ஒன்றை இதுவரை பார்த்ததே இல்லை" என்று சொல்லி முடித்தார்.
மருத்துவர் இவ்வாறு பேசி முடித்தும், அமைதியாகக்
கேட்டுக்கொண்டிருந்த பணியாளர்கள் யாவரும் தங்களுடைய கைகளைத் தட்டி
வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அப்பொழுது அந்தக்
கூட்டத்தில் இருந்த கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட
கிறிஸ்தவப் பெண்மணி ஒருவர் எழுந்து, "ஐயா! உங்களுடைய உரை மிக
அருமையாக இருந்தது. வாழ்த்துகள். உங்களுடைய உரையிலிருந்து எனக்கொரு
கேள்வி எழுந்துள்ளது. என்னுடைய கேள்வி இதுதான். நீங்கள் இதுவரை
ஆயிரக்கணக்கான அறுவைச் சிகிச்சை செய்திருப்பதாகச் சொன்னீர்கள்.
அப்படியானால் பலருடைய மூளைக்கும் சிகிச்சை அளித்திருப்பீர்கள்தானே!
அப்படி நீங்கள் பலருடைய மூளைக்குச் சிகிச்சை அளிக்கும்பொழுது,
அவர்களுடைய மூளையில் "எண்ணம்" என்ற ஒன்றைப்
பார்த்திருக்கின்றீர்களா?" என்றார்.
மருத்துவர் தன்னிடம் கேள்வி கேட்ட பெண்மணியை ஒருமாதிரிப்
பார்த்துவிட்டு, "இல்லை" என்று பதில் சொன்னார். "ஆன்மாவைப்
பார்க்கவில்லை என்பதற்காக ஆன்மாவே கிடையாது என்று சொன்னால்,
"எண்ணத்தைப்" பார்க்கவில்லை என்பதற்காக மனிதருக்கு எண்ணமே
தோன்றாது... எண்ணமே கிடையாது என்று சொல்ல முடியுமா?" என்றார்
அந்தக் கிறிஸ்தவப் பெண்மணி. இதற்கு அந்த மருத்துவரால் பதில் எதுவும்
சொல்ல முடியவில்லை.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மருத்துவரைப் போன்று, மனித இயல்புடைய
பலர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார்கள்.
இத்தகைய பின்னணியில், இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், மனித
இயல்புடையவர் அல்ல, ஆவிக்குரியவரே அனைத்தையும் ஆய்ந்துணர்வார்
என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின்
பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
மனித இயல்புடையவர் யார்?
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (இன்றைய
முதல் வாசகத்தில்) இரண்டு வகையான மனிதர்களைச்
சுட்டிக்காட்டுகின்றார். மனித இயல்புடையவர்கள் முதல்வகையினர்;
ஆவிக்குரியவர்களோ இரண்டாம் வகையினர். இவர்கள் இருவருக்கும் உள்ள
வேறுபாடு என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கொரிந்து நகரில் இருந்த ஒருசிலருக்கு, குறிப்பாகக் கிரேக்கர்களுக்குப்
(1 கொரி 1:18), பவுல் அறிவித்து வந்த செய்தி மடமையாகத் தோன்றியது.
அவர்களுடைய எண்ணமெல்லாம், கடவுள் எப்படிச் சிலுவையில் அறையப்பட்டு
கொல்லப்பட முடியும்...? அப்படியென்றால் சிலுவையில் அறையப்பட்ட
இயேசு கடவுளே அல்ல என்பதாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான்
புனித பவுல், "மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை
ஏற்றுக்கொள்வதில்லை" என்றார். ஆம், கிரேக்கர்கள் மனித இயல்பைக்
உடையவர்களாக இருந்தார்கள், அதனால் அவர்கள் கடவுளின் ஆவிக்குரியவற்றை
ஏற்றுக்கொள்வதில்லை.
ஆவிக்குரியவர் யார்?
மனித இயல்புடையவர் எப்படி இருப்பார் என்று சுட்டிக்காட்டிய பவுல்,
ஆவிக்குரியவர், அனைத்தையும் ஆய்ந்துணர்வார் என்று
குறிப்பிடுகின்றார். ஆவிக்குரியவரால் எப்படி அனைத்தையும் ஆய்ந்துணர
முடியும் எனில், புனித பவுல், இன்றைய முதல் வாசகத்தின் தொடக்கத்தில்
குறிப்பிடுவது போன்று, தூய ஆவியார் அனைத்தையும் துருவி ஆய்கின்றவராக
இருக்கின்றார் என்பதால்தான். பவுல் இவ்வார்த்தைகளை திருப்பாடல்
31: 20; எசாயா 52:15 ஆகிய இறைவார்த்தைப் பகுதிகளிலிருந்து
மேற்கோள் காட்டிப்பேசுகின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு
கூட, "உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர்
முழு உண்மையை நோக்கி உங்களை வழி நடத்துவார்" (யோவா 16: 13) என்று
குறிப்பிடுவார்.
ஆகையால், நாம் மனித இயல்புடையவராக அல்ல, அனைத்தையும் ஆய்ந்துணரும்
ஆவிக்குரியவராக இருக்கவேண்டும். இதற்கு நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை
கொண்டு வாழவேண்டும். நாம் நம் ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கை
கொண்டு ஆவிக்குரியவராக வாழத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
"ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர்
யார்?" (உரோ 11: 34) என்பார் புனித பவுல். ஆவிக்குரியவர் அனைத்தையும்
ஆய்ந்துணர்கின்றார். ஆகையால், நாம் ஆவிக்குரியவர்களாய்
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 4: 31-37
"பேய் அவரை விட்டு வெளியேறிற்று"
நிகழ்வு
பெருநகரில் இருந்த பெரிய பங்குத்தளம் அது. அந்தப் பங்குத்தளத்தில்
இருந்த பங்குக்கோயிலில், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் பங்குப்
பணியாளர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.
மறையுரை ஆற்றும்நேரம் வந்ததும், பங்குப் பணியாளர் மறையுரையாற்றத்
தொடங்கினார். அப்பொழுது எங்கிருந்தோ வந்த இருவர் கோயிலுக்குள்
நுழைந்து பின்வரிசையில் அமர்ந்துகொண்டனர். பங்குப் பணியாளர் ஆர்வமாய்
மறையுரை ஆற்றிக்கொண்டிருக்கும்பொழுது, பின்னால் வந்து அமர்ந்த
அந்த இருவரும் தங்களுக்குப் பக்கத்திலிருந்த ஒருவரிடம்,
"உங்களுடைய போதகர் அதிசயம் எதுவும் செய்து காட்டமாட்டாரா?" என்று
கேட்டார்கள். அவர்களுக்குப் பக்கத்திலிருந்தவரோ எதுவும் பேசாமல்
அமைதியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து, அவர்கள் இருவரும்
பக்கத்திலிருந்தவரிடம் மீண்டுமாக அதே கேள்வியைக் கேட்டார்கள்.
அப்பொழுதும் அவர் அவர்களிடம் எதுவும் பேசமால் அமைதியாக இருந்தார்.
இதையெல்லாம் மறையுரை ஆற்றிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்த பங்குப்
பணியாளர், அந்தப் புதிய மனிதர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த
- தனக்கு நன்கு அறிமுகமான - கிறிஸ்தவரைத் தன்னருகே அழைத்து, ஒருசில
வார்த்தைகளை அவரிடம் சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் பங்குப்பணியாளர்
சொன்னதைக் கருத்தாய்க் கேட்டுக்கொண்டு, முன்பு அமர்ந்திருந்த
இடத்தில் போய் அமர்ந்துகொண்டார்.
சிறிதுநேரம் கழித்து, அந்த இரண்டு புதியவர்களும் பக்கத்திலிருந்த
கிறிஸ்தவரிடம் முன்புகேட்ட அதே கேள்வி கேட்டபொழுது, அவர் அவர்கள்
இருவரிடம், "எங்களுடைய பங்குப் பணியாளர் அதிசயங்கள் எதுவும்
செய்வது கிடையாது; ஆனால் உங்களைப் போன்ற பேய்களை அவர் நன்றாகவே
விரட்டுவார்" என்று சொல்லிவிட்டு, "வழிபாடு நடக்கும்பொழுது அமைதி
காக்கவேண்டும் என்பதுகூட தெரியாமல், பேய்கள் போன்று செயல்பட்டுக்
கொண்டிருக்கும் உங்கள் இருவரையும் எங்கள் பங்குப் பணியாளர்
பிடித்து வெளியே அனுப்பச் சொன்னார்" என்று சொல்லிக்கொண்டே, அவர்
பக்கத்திலிருந்த ஒருசிலரிடம் உதவியுடன், அந்த இரண்டு புதிய மனிதர்களையும்
கோயிலை விட்டு வெளியே அனுப்பினார் (Saints, Demons, And Asses:
Southern Preacher"s Anecdotes Gary Holloway)
வழிபாடு நடக்கும்பொழுது பலருக்கும் இடறலாக சாத்தான்களாக - இருந்த
அந்த இரண்டு புதியவர்களும் பங்குப் பணியாளரால் வெளியேற்றப்பட்டது
போன்று, இந்த சமூகத்திற்கும், அடுத்தவருடைய வளர்ச்சிக்கும் தடையாக
இருக்கின்ற தீய சக்திகளை நாம் நம்மிடமிருந்தும் இந்தச் சமூகத்திலிருந்தும்
அகற்றவேண்டும். அது நாம் செய்யவேண்டிய தலையாய பணியாக இருக்கின்றது
என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தியில்
இயேசு தீய ஆவி பிடித்திருந்த மனிதரிடமிருந்து, தீய ஆவியை, பேயை
வெளியேற்றுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு செய்த இந்த வல்ல
செயல் நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்
கப்பர்நாகுமிற்கு வந்து கற்பித்த இயேசு
நேற்றைய நற்செய்தியில், ஆண்டவர் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில்
இருந்த தொழுகைக்கூடத்தில் போதிக்கும்பொழுது, அங்கிருந்த மக்கள்
அவரைப் பிடித்து, மலை உச்சியிலிருந்து தள்ளிவிட முயற்சிப்பார்கள்.
இயேசு தன்னுடைய சொந்த ஊர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த நிகழ்வு,
அவருடைய பணிவாழ்வின் தொடக்கத்திலேயே நடந்த நிகழ்வு.
"பணிவாழ்வின் தொடக்கத்திலேயே மக்கள் இப்படி நம்மைப் புறக்கணித்துவிட்டார்களே"
என்று இயேசு மனம்தளர்ந்துவிடவில்லை. மாறாக, அவர் அடுத்த கட்டத்திற்கு
நகர்கின்றார். அதாவது நாசரேத்திலிருந்து வடக்கில் இருபது
கிலோமீட்டர் தொலையிலிருந்த கப்பர்நாகுமிற்கு வந்து, அங்கு கடவுளின்
வார்த்தையை எடுத்துரைக்கத் தொடங்குகின்றார்.
இயேசுவுக்குத் தன்னுடைய பணிவாழ்வின் தொடக்கத்திலேயே பிரச்சனைகள்
வந்தது போன்று, நமக்கும் பிரச்சனைகள் வரலாம். அவற்றைக் கண்டு
நாம் மனம்தளர்ந்து போய்விடாமல், இயேசுவைப் போன்று அடுத்த கட்டத்திற்கு
நகரவேண்டும்.
பேய்பிடித்திருந்த மனிதரிடமிருந்து பேயை வெளியேற்றிய இயேசு
கப்பர்நாகுமிற்கு வரும் இயேசு, அங்குள்ள தொழுகைக் கூடத்தில் ஓய்வுநாள்களில்
கற்பிக்கின்றார். ஒருநாள் அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கின்றபொழுதுதான்,
தீய ஆவி பிடித்திருந்த ஒருவரைக் காண்கின்றார். உடனே அவர் தீய
ஆவியை அவரிடமிருந்து விரட்டுகின்றார். இயேசு தீய ஆவியை விரட்டுவது
நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. ஒன்று,
இயேசுவுக்கு தீய ஆவியின்மீது அதிகாரம் இருந்தது (மத் 28: 18).
இரண்டு, இயேசு தீய ஆவியை விரட்டியது போன்று, நாமும் இந்த சமூகத்தில்
இருக்கின்ற தீய ஆவிகளான உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு,
அடிமைத்தனம், பஞ்சம், பசி பட்டினி போன்றவற்றை அகற்றவேண்டும்.
அப்பொழுதுதான் இந்த மண்ணகத்தில் விண்ணரசு மலரும்.
நாம் இந்த மண்ணகத்தில் இருக்கின்ற தீவி ஆவிகளை விரட்டியடித்து,
இயேசு நிறுவ விரும்பிய இறையாட்சி, இம்மண்ணில் மலர, அவருடைய கருவிகளாக
இருந்து செயல்படத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
"நன்மையை நாடுங்கள்; தீமையைத் தேடாதீர்கள்" (ஆமோ 5: 14) என்பார்
இறைவாக்கினர் ஆமோஸ். ஆகையால், நாம் இந்தச் சமூகத்திலும் நமக்குள்ளும்
இருக்கின்ற தீமைகளை விரட்டியடித்து, நன்மையை நாடுவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|