|
|
31 மே 2020 |
|
தூய ஆவி பெருவிழா
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11
பெந்தக்கோஸ்து
என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில்
கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர்
இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு
முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள்
ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள்
அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால்
அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.
அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த
இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக்
கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில்
அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய்,
"இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க
நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும்
கேட்பது எப்படி?" என வியந்தனர். "பார்த்தரும், மேதியரும், எலாமியரும்,
மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய
நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து,
சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து
வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும்,
கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின்
மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 104: 1ab,24ac. 29bc-30. 31,34 . (பல்லவி: திபா 104:30)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப்
புதுப்பிக்கின்றீர்.
1ab
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர்
எத்துணை மேன்மைமிக்கவர்!
24ac
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால்
நிறைந்துள்ளது. - பல்லவி
29bc
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும்
புழுதிக்கே திரும்பும்.
30
உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின்
முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி
31
ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக்
குறித்து மகிழ்வாராக!
34
என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில்
மகிழ்ச்சி கொள்வேன். - பல்லவி
இரண்டாம் வாசகம்
நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி
திருமுழுக்குப் பெற்றோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 12: 3b-7, 12-13
சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும்
"இயேசுவே ஆண்டவர்" எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து
கொள்ள வேண்டும். அருள் கொடைகள் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார்
ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே.
செயல்பாடுகள் பலவகை உண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும்
எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின்
செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. உடல் ஒன்றே; உறுப்புகள்
பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல
கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும்,
அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே
தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்.
அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
தொடர்பாடல்
தூய ஆவியே, எழுந்தருள்வீர்
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில்
நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது
அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்;
தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
+யோவான் எழுதிய
நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23
அன்று வாரத்தின் முதல்
நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள்
இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு
அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி
உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர்
தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக்
கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும்
அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை
அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார். இதைச்
சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப்
பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள்
மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை
மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
தூய ஆவியார் பெருவிழா
I திருத்தூதர் பணிகள் 2: 1-11
II 1 கொரிந்தியர் 12: 3b-7, 12-13
III யோவான் 20: 19-23
தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக "Joyful News Magazine" என்ற
சஞ்சிகையில் வந்த ஒரு நிகழ்வு. நார்வேயைச் சார்ந்த நான்சென்
(Nansen 1861- 1930) என்ற ஆய்வாளர், பனி படர்ந்த ஆர்ட்டிக்
பகுதியில், மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழல் இருக்கின்றதா
என்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றார்.
அப்படிப் புறப்படும்பொழுது நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு
புறாவையும் தன்னோடு கொண்டுசென்றார்.
பல நாள்கள் பயணத்திற்குப் பின்பு, ஆர்ட்டிக் பகுதியை வந்தடைந்த
நான்சென், மிகப் பொறுமையாகத் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொள்ளத்
தொடங்கினார். எங்கு பார்த்தாலும் பனி படர்ந்திருந்த அந்தப்
பகுதியில் இருப்பது இவருக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது.
இருந்தாலும், வந்த வேலையை முடிக்காமல் பாதியில் செல்வது
நல்லதல்ல என்பதை உணர்ந்த இவர், தொடர்ந்து ஆய்வுகளை
மேற்கொண்டார். இப்படி இவர் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டதால்,
நாள்கள் போனதே தெரியவில்லை; கண்மூடி முழிப்பதற்குள் இரண்டு
ஆண்டுகள் ஓடியிருந்தது இவருக்குத் தெரிந்தது.
இதனால் இவர், தன்னுடைய வீட்டில் இருப்பவர்களுக்குத் தான்
பத்திரமாகத்தான் இருக்கின்றேன் என்ற செய்தியைச் சொல்ல
விரும்பினார். அதனால் இவர் ஒரு காகிதத்தில், தான் மேற்கொண்டு
வரும் ஆய்வு, நன்றாகப் போய்க்கொண்டிருப்பது பற்றியும் தான்
பாதுகாப்பாக இருப்பது பற்றியும் எழுதி, தன்னோடு இருந்த
புறாவின் காலில் கட்டி, அதனைத் தன்னுடைய வீட்டாருக்கு அனுப்பி
வைத்தார். நான்சென் இருந்த இடத்திற்கும் இவருடைய வீடு இருந்த
இடத்திற்கும் இடையே இரண்டாயிரம் கிலோ மீட்டர்கள். ஆனாலும்,
நான்சென் அனுப்பி வைத்த அந்தப் புறா, பாதுகாப்பாக, இவருடைய
வீட்டிற்குச் சென்றது. புறாவையும் அதன்காலில் இருந்த
காகித்தத்தில் பார்த்த இவருடைய மனைவியும் பிள்ளையும், நான்சென்
பாதுகாப்பாகத்தான் இருக்கின்றார் என்று மனநிம்மதியும்
மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.
எப்படி ஆய்வாளர் நான்சென் அனுப்பி வைத்த புறாவைக் கண்டதும்,
அவருடைய குடும்பத்தார், நான்சென் பாதுகாப்பாகத்தான்
இருக்கின்றார் என்ற மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தார்களோ,
அப்படி விண்ணகப் புறாவான, தூய ஆவியார் சீடர்களிடம் வந்ததும்,
அவர்கள் விண்ணகத்திற்குச் சென்ற இயேசு, தந்தையின்
வலப்பக்கத்தில்தான் இருக்கின்றார் என்றும் தங்களுக்குத்
துணையாகத் தூய ஆவியார் இருக்கப்போகிறார் என்றும் மகிழ்ச்சி
அடைகின்றார்கள்.
ஆம், இன்று நாம் தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.
இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொன்னதுபோன்றே தூய ஆவியார்
அவர்கள்மீது இறங்கி வருகின்றார். தூய ஆவியாரின் வருகை சீடர்கள்
நடுவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் அவர்
நமக்கு விடுக்கும் அழைப்பு எத்தகையது என்பதையும் நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
துணிவைத் தரும் தூய ஆவியார்
யூதர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்துகொன்ற பிறகு, அவருடைய
சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவை
அடைத்தே வைத்திருந்தார்கள் (யோவா 20: 19). இத்தனைக்கும்
உயிர்த்த ஆண்டவரைக் கண்ட மகதலா மரியாவும் (யோவா 20: 18)
எம்மாவு நோக்கிச் சென்ற இரண்டு சீடர்களும் (லூக் 24: 15-16)
சீமோன் பேதுருவும் (லூக் 24:34) உயிர்த்த ஆண்டவரைப் பற்றி மற்ற
சீடர்களிடம் சொன்னபொழுதுகூட, அவர்கள் அதை நம்பாமல், அச்சத்தோடே
இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசு தன்
சீடர்களுக்குத் தோன்றி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று
இரண்டு சொல்லி, தன் கைகளையும் விலாவையும் அவர்களுக்கு
காட்டுகின்றார். மட்டுமல்லாமல், அவர் அவர்கள் மேல் ஊதி, "தூய
ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார்.
"இயேசு சீடர்கள் மேல் ஊதினார்" என்ற சொற்கள், ஆண்டவராகிய
கடவுள் "மண்ணால் மனிதனை உருவாக்கி, அவனுடைய நாசிகளில் உயிர்
மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்" (தொநூ 2: 7) என்ற
சொற்களை நமக்கு நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. மண்ணால்
உண்டாக்கப்பட்ட மனிதனுடைய நாசிகளில் ஆண்டவராகிய கடவுள், உயிர்
மூச்சை ஊதும் வரையில், அவன் உயிரற்றவனாகத்தான் இருந்தான்.
எப்பொழுது கடவுள் அவனுடைய நாசிகளில் உயிர் மூச்சி ஊதினாரோ,
அப்பொழுது அவன் உயிர் உள்ளவன் ஆனான். அதுமாதிரித்தான்
இயேசுவின் சீடர்களும். சீடர்கள் தூய ஆவியாரைப் பெறும்வரையிலும்
யூதர்களுக்கு அஞ்சி வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எப்பொழுது
அவர்கள் தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டார்களோ, அப்பொழுது அவர்கள்
துணிவுள்ளவர்களாக மாறி, இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்கள்.
அவ்வாறெனில், இன்றைக்கும் தூய ஆவியார் அச்சத்தோடு இருக்கின்ற
நமக்குத் துணிவைத் தருகின்றார் என்பதே உண்மை.
நற்செய்தி அறிவிக்க வல்லமையைத் தரும் தூய ஆவியார்
இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னுடைய சீடர்களிடம்
பேசுகின்றபொழுது, "தந்தை என்னை அனுப்பியது போல் நானும் உங்களை
அனுப்புகிறேன்" என்பார். பின்னர் அவர் விண்ணேற்றம் அடைவதற்கு
முன்பாகச் சீடர்களிடம், "தூய ஆவி உங்களிடம் வரும்பொழுது
நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று.... எனக்குச் சாட்சிகளாய்
இருப்பீர்கள்" (திப 1:8) என்பார். இயேசுவின் இவ்வார்த்தைகள்
கவனிக்கத்தக்கவை.
தூய ஆவியார் சீடர்கள்மீது வரும்பொழுது, கடவுளின் வல்லமையைப்
பெற்றவர்களாய் அவர்கள் இயேசுவுக்குச் சாட்சிகளாய் இருப்பார்கள்
என்றால், தூய ஆவியார் சீடர்களுக்கும் நமக்கும் நற்செய்தியை
அறிவிப்பதற்கு வல்லமையைத் தருகின்றார் என்பதுதானே பொருள். ஆம்,
இயேசுவின் சீடர்கள் தூய ஆவியாரின் வல்லமையைப் பெற்றுக்கொண்ட
பிறகு, யாருக்கும் அஞ்சாமல் நற்செய்தியை அறிவித்தார்கள். இன்று
நாம் ஆண்டவரின் நற்செய்தி அறிவித்தால் ஆபத்து வருமோ என்று
அஞ்சிக் கொண்டிருந்தால், தூய ஆவியார் நற்செய்தியை
அறிவிப்பதற்கான வல்லமையைத் தருகின்றார். இந்த உண்மையை
உணர்ந்துகொண்டு நாம் நற்செய்தியை அறிவித்தால், இன்னும்
சிறப்பாக நற்செய்தியை அறிவிக்கலாம்.
பாவங்களை மன்னிக்கும் அருளைத் தரும் தூய ஆவியார்
உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்கள்மீது தூய ஆவியை ஊதிய
பின், எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை
மன்னிக்கப்படும்" என்கின்றார். அப்படியானால், தூய ஆவியார்
பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தையும் ஆற்றலையும்
சீடர்களுக்குத் தருகின்றார் என்பதுதானே உண்மை.
தூய ஆவியார் வேறு யாருமல்ல, அவர் மற்றொரு துணையாளர் (யோவா
14:16); இயேசுதான் நமக்கு முதல் துணையாளர். இயேசுவுக்கு எப்படி
எல்லா அதிகாரமும் இருக்கின்றதோ, அப்படி தூய ஆவியாருக்கும்
இருக்கும் (மத் 28: 18). ஆகையால், தூய ஆவியார் பாவங்களை
மன்னிப்பதற்கான அதிகாரத்தையும் வல்லமையும் சீடர்களுக்கும்
நமக்கும் தருகின்றார். இது மறுக்கமுடியாத உண்மை. எனவே தூய
ஆவியாளர் அளிக்கின்ற பாவ மன்னிப்பை, நாம் ஒவ்வொருவரும் வழங்கி,
அவர்கள் கடவுள் அளிக்கும் மீட்பினைப் பெற நாம் கருவிகளாக
இருந்து செயல்படவேண்டும். ஏனென்றால், பாவ மன்னிப்பால்தான்
மீட்பு வரும் (லூக் 1: 76-77).
எனவே, தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட நாம், எல்லா
அச்சத்திலிருந்தும் விடுதலை பெற்று, ஆண்டவரைப் பற்றிய
நற்செய்தியை எல்லாருக்கும் அறிவித்து, அவர்கள் பாவ
மன்னிப்பினால் வரும் மீட்பை அடைய, நாம் கருவிகளாக இருந்து
செயல்படுவோம்.
சிந்தனை
"கடவுள் மனிதர்களிடம் பல வழிகளில் பேசுகின்றார். அதில்
முதன்மையான வழி தூய ஆவியார்" என்பார் ஹென்றி ப்ளாக்கபி என்ற
எழுத்தாளர். ஆகையால், கடவுள், தூய ஆவியார் வழியாக நம்மிடம்
பேசுகின்றபொழுது, நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப
வாழ்ந்து (கலா 5:16), ஆண்டவரின் நற்செய்தியைத் துணிவோடு
அறிவித்து, அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். அதவழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1 தூய ஆவியார் பெருவிழா
=================================================================================
"தூய ஆவியே எழுந்தருவீர்"
கிரேக்க நாட்டில் பாரம்பரியமாக சொல்லப்பட்டு வரும் கதை ஒன்று
உண்டு.
அந்நாட்டில் அட்லாண்டா என்னும் பெண் ஒருத்தி இருந்தாள். அவள்
மிகவும் வேகமாக ஓடக்கூடியவள். அது மட்டுமல்ல, குறிதவறாமல் அம்பெய்வதிலும்
அவள் சிறந்தவளாயிருந்தாள். அவளை அருட்சாதனம்
செய்ய அந்நாட்டிலிருந்த
நிறையப் பேர் முயன்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு அவள் ஒரு நிபந்தனை
விதித்தாள். அது என்னவென்றால், ஓட்டப்பந்தயத்தில் தன்னை யார்
தோற்கடிக்கிறாரோ அவரை மணப்பதாகவும், இல்லாவிட்டால் அம்மனிதரைக்
கொன்று விடுவதாகவும் அவள் நிபந்தனை விதித்தாள். நிறையப் பேர்
அவளோடு போட்டிப் போட்டு தோற்று தங்கள் தலைகளை இழந்தனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹிப்போமெனஸ் என்பவன் அவளோடு நேரடியாக
மோதி, தோற்கடிக்க முடியாது என்பதனால், எப்படியாவது தந்திரமாகத்தான்
தோற்கடிக்க வேண்டும் என்று சொல்லி, மூன்று தங்க ஆப்பிள்களை
கொண்டு வந்து, அவற்றை அவள் ஓடும்போது, ஒவ்வொன்றாக அவள்முன்பாக
வீசினான். அட்லாண்டா அது என்ன என்று பார்க்க குனிந்து எடுக்கும்போது,
ஹிப்போமெனஸ் என்ற அந்த இளைஞன் அவளைவிடவும் வேகமாக ஓடி
ஜெயித்து, அவளுக்கு மாலையிட்டான்.
இந்தக் கதையில் வரும் அடலாண்டா என்ற அந்தப் பெண்மணியைப் போன்று
நாமும் கடவுள் நமக்குக் கொடையாகக் கொடுத்திருக்கும் ஆசிர்வாதத்தை
- தூய ஆவியை சிற்றின்ப நாட்டங்களால் தொலைத்துவிட்டு வாழ்வையே
இழந்து நிற்கின்றோம். தூய ஆவிப் பெருவிழாவான இன்று கடவுள் நமக்குக்
கொடையாகக் கொடுத்திருக்கும் தூய ஆவியை தகுந்த முறையில் பயன்படுத்தி,
அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்ள அழைக்கப்படுகின்றோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகைவிட்டுப் பிரிந்து
செல்வதற்கு முன்பாக தன்னுடைய சீடர்களிடம், "நான் போவதால் நீங்கள்
பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் தூய ஆவி என்னும் துணையாளர்
வரமாட்டார்" என்றார் (யோவான் 16: 7). அதன்படி இயேசு தன்னுடைய
விண்ணேற்றத்திற்குப் பிறகு தூய ஆவியாம் துணையாளரை சீடர்கள்
மீது அனுப்புகிறார். தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட பின்பு அதுவரை
யூதர்களுக்கு அடங்கிக் கிடந்த சீடர்கள் துணிவோடு ஆண்டவர் இயேசு
கிறிஸ்து பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கிறார்கள்.
தூய ஆவிப் பெருவிழாவான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்களின்
வழியாக இறைவன் நமக்குத் தரும் செய்தியை கவனத்துடன்
தியானித்துப் பார்ப்போம். படைப்பின் தொடக்கத்தில் தண்ணீரிலே அசைவாடிக்கொண்டிருந்த
தூய ஆவியார், உலர்ந்துப்போன எலும்புகளுக்கு உயிர்கொடுத்த தூய
ஆவியார், ஆண்டவர் இயேசுவினுடைய பணிகளுக்கு உறுதுணையாக, உந்துசக்தியாக
இருந்த தூய ஆவியார் இந்த நாளிலே நெருப்புப் போன்ற பிளவுற்ற
நாவின் வடிவில் சீடர்கள் மீது, மக்கள்மீது இறங்கி வருகின்றார்.
அப்படி இறங்கி வந்த தூய ஆவியார் சீடர்களையும் மக்களையும் திடப்படுத்துகிறார்.
இந்த நாளில் தூய ஆவியார் நமக்கு வழங்கும் நன்மைகள், ஆசிர்வாதங்கள்
என்னென்னவென்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
முதலாவதாக தூய ஆவியார் வழங்கக்கூடிய ஆசீர்வாதம் நன்மை :
இயேசுவே ஆண்டவர் என அறிக்கையிடச் செய்கின்றார் என்பதாகும்.
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பவுலடியார்
கூறுகிறார், "தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும்
இயேசுவே ஆண்டவர் எனச் சொல்லமுடியாது" என்று. அப்படியானால்
இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கையிடுவதற்கு தூய ஆவியாரின் வல்லமையானது
நமக்குத் தேவையானதாக இருக்கின்றது. தூய ஆவியால் நிரப்பப்படாத
ஒருவர் ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிக்கையிட்டாலும் அது
மேம்போக்காக இருக்குமே தவிர முழுமை பெறாது. காரணம் தூய ஆவியார்
முழு உண்மையை நோக்கி வழிநடத்துபவராக இருக்கிறார் (யோவான் 16:
13).
இன்றைக்கு எத்தனையோ மறைப்பணியாளர்கள், நற்செய்திப் பணியாளர்கள்
ஆண்டவர் இயேசுவைப் பற்றி நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கிறார்கள்
என்றால் அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது தூய ஆவியினால்தான்.
ஆகவே தூய ஆவியாரே நம்மை இயேசுவே ஆண்டவர் என அறிக்கையிடுவதற்கு
தூண்டுகோலாக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து அதன்படி வாழ
முற்படுவோம்.
இரண்டாவதாக தூய ஆவியார் நமக்கு வழங்கக்கூடிய ஆசிர்வாதம்: நாம்
பெற்றிருக்கும் நன்மைகள், கொடைகள் அனைத்தும் தனி ஒரு மனிதனுக்காக
அல்ல, மாறாக பொதுநன்மைகாகவே என்ற உணர்வைத்தான். இன்றைக்கு
நிறைய மனிதர்கள் தாம் பெற்றிருக்கும் கொடைகள், திறமைகள் அனைத்தையும்
தன்னுடைய நலனுக்காகவே பயன்படுத்தும் ஓர் அவலநிலையே தொடர்ந்துகொண்டிருக்கிறது.
லூக்கா நற்செய்தியில் வரும் அறிவற்ற செல்வந்தனைப் போன்றுதான்
நிறைய மனிதர்களின் வாழ்வும் இருக்கிறது. இப்படி நாம் சுயநலத்தோடு
வாழாமல், பொதுநலத்தோடு வாழவேண்டும் என்பதைத்தான் தூய ஆவியார்
இன்று நமக்கு நினைவுவூட்டுகிறார்.
ஓர் ஊரில் நல்லான் என்ற விறகு வெட்டி ஒருவன் இருந்தான்.
அவனுக்கு விறகு வெட்டுவதைத் தவிர வேறு தொழில் எதுவும்
தெரியாது. காட்டுக்குச் சென்று தூக்க முடிந்த அளவுக்கு
மரக்கிளைகளை வெட்டி எடுத்து வருவான். அவற்றை விற்று
வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வான். அவனது
மனைவியும், இரு குழந்தைகளும் அவனது உழைப்பை நம்பித்தான்
வாழ்ந்து வந்தனர்.
ஒருநாள் ஆற்றின் கரையோரமாக இருந்த ஒரு மரத்தின் கிளைகளை
வெட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவனது இரும்புக் கோடரி தவறி
ஆற்றில் விழுந்துவிட்டது. அவனால் கோடரியைத் தேட முடியவில்லை.
என்ன செய்வது என்று கவலையோடு அமர்ந்திருந்தான். அப்போது ஒரு
தேவதை எதிரில் தோன்றியது. நல்லானைப் பார்த்து "ஏன் அழுகிறாய்?'
என்று கேட்டது. "என் தொழிலுக்கு மூலதனமான கோடரி ஆற்றில்
விழுந்துவிட்டது. இனி பிழைப்புக்கு என்ன செய்வேன்?" என்று
கூறி மேலும் பலமாக அழுதான்.
உடனே தேவதை ஒரு தங்கக் கோடரியை எடுத்து வந்து நல்லானிடம்
கொடுத்தது. "இது தங்கக் கோடரி. இது என்னுடையது அல்ல" என்றான்
நல்லான். மறுபடியும் ஆற்றில் குதித்து ஒரு வெள்ளிக் கோடரியை
எடுத்து வந்து நல்லானிடம் கொடுத்தது தேவதை. "இது வெள்ளிக்
கோடரி. இதுவும் என்னுடையது அல்ல" என்றான் நல்லான். மீண்டும்
நீரில் குதித்து ஒரு இரும்புக் கோடரியை எடுத்து வந்து
கொடுத்தது தேவதை. "இதுதான் என்னுடையது" என்று நன்றி கூறிப்
பெற்றுக் கொண்டான் நல்லான்.
நல்லான் உண்மை பேசியதால் மகிழ்ச்சியடைந்த தேவதை, தங்கம்,
வெள்ளிக் கோடரிகளையும் அவனிடமே கொடுத்து "விற்றுப்
பிழைத்துக்கொள்" என்று சொல்லி மறைந்து போனது. கோடரிகளை
விற்றுப் பெரும் பணக்காரனானான் நல்லான். (இது வரை பழைய கதை.
கதை இத்தோடு முடிந்துவிடவில்லை) நல்லானால் விறகு வெட்டும்
தொழிலை மறக்கவில்லை.
கோடரிக்குப் புதிய பிடி போடலாமென்று முற்றிய கிளை தேடிக்
காட்டுக்குச் சென்றான். வெயிலாக இருந்தபடியால் ஒரு மரத்தின்
கீழ் அமர்ந்திருந்தான். "நல்லான் கோடரிக்குப் பிடி போட
வேண்டுமா?, இதோ என்னிடமிருந்து முதிர்ந்த கிளையினை
வெட்டிக்கொள்" என்றது மரம். நல்லான் திடுக்கிட்டான். "என்
நண்பனே. உன்னை வெட்டுவதற்குரிய ஆயுதம் செய்ய உன் உடலில் ஒரு
பகுதியைத் தருகிறாயா? உனக்கு வருத்தமாக இல்லையா?", என்று
கேட்டான் நல்லான்.
அதற்கு அந்த மரம் சொன்னது "எனக்கு என்ன வருத்தம் நல்லான்.
பிறருக்கு உதவுவதில்தான் மகிழ்ச்சியே அடங்கியுள்ளது. எங்களை
என்ன மனிதர்களைப்போல் சுயநலவாதிகள் என்று நினைத்துக் கொண்டாயா?
வா. வேண்டிய மட்டும் கிளைகளை வெட்டிச் செல்" என்றது.
நல்லானுக்கு உள்ளம் நெகிழ்ந்து விட்டது. மரத்தைக் கட்டித்
தழுவிக் கொண்டான். இன்றைக்கு மரத்திற்கு இருக்கும்
மனப்பான்மைகூட மனிதற்கு இல்லை. மரம் எப்போதும் அடுத்தவரைக்
குறித்தே யோசிக்கிறது. மனிதனோ எப்போதுமே தன்னைக் குறித்து
மட்டும்தான் யோசிக்கிறான். ஆகவே தூய ஆவி பெருவிழாவைக்
கொண்டாடும் இந்த நாளில் நாம், நம்மிடம் இருக்கும் திறமைகளை,
கொடைகளை பிறரது நன்மைக்காகப் பயன்படுத்துவோம்.
நிறைவாக தூய ஆவியானவர் தரும் ஆசிர்வாதம் : நாம் அனைவரும் ஒரே
உயிரும், ஒரே உள்ளமுமாய் வாழவேண்டும் என்பதாகும். இன்றைக்கு
கிறிஸ்தவர்களாகிய நாம் இனம் வாரியாக, மொழி வாரியாக, சாதி
வாரியாக இன்னும் பல்வேறு விதமாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றோம்.
இத்தகைய ஒருநிலை மாறி, நாம் அனைவருமே ஒருமனப்பட்டவராக
வாழவேண்டும்.
திருத்தூதர் பணிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த மக்களும் ஓரிடத்தில்
கூடியிருக்கிறார்கள். அப்படியிருந்தாலும் அவர் திருதூதர்கள்
பேசுவதை தத்தம் மொழிகளிலே கேட்கிறார்கள். அதாவது அங்கே ஓர்
ஒற்றுமை உணர்வானது தோன்றுகிறது. ஆம், தூய ஆவி எங்கு இருக்கிறதோ
அங்கே ஒற்றுமை இருக்கிறது. இன்னும் வேறுவிதமாகச்
சொல்லவேண்டுமானால் ஒற்றுமை இருக்கும் இடத்தில்தான் தூய
ஆவியானவரும் இருக்கிறார்.
"ஆயிரக்கணக்கான மறைக்கல்வி வகுப்புகளோ, யோகா அமர்வுகளோ அல்லது
சென் ஆன்மீகப் பயிற்சிகளோ அல்ல, தூய ஆவியே நம் இதயங்களை
இறைவனுக்கும், அவரின் அன்புக்கும் திறக்கும் வல்லமையைக்
கொண்டிருக்கிறார் என்று கூறுவார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள். ஆம், இது முற்றிலும் உண்மை. தூய ஆவியினாலன்றி வேறு
எதனாலும் நம்முடைய இதயங்களைத் திறக்க முடியாது.
ஆகவே தூய ஆவியின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில்
நாம் தூய ஆவி நமக்கு வழங்கும் ஆசிர்வாதங்களை பெற்று மகிழ்வோம்.
அதோடு மட்டுமல்லாமல் நாம் தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப
வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2 தூய ஆவியார் பெருவிழா
=================================================================================
இது எப்படி?
திருத்தூதர் பணிகள் 2:1-11
1 கொரிந்தியர் 12:3-7, 12-13
யோவான் 20:19-23
நேற்று மாலை திரு. சுப. வீ. அவர்களின், 'நம்மைச் சுற்றி நடப்பவை
பற்றி' உரை கேட்டேன். தன் உரையை அவர் மகாபாரதத்தில் நடக்கும்
ஒரு நிகழ்வோடு தொடங்குகிறார். மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப்
போரின் 13ம் நாள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எதிரான
பங்காளி சண்டை அது. பாண்டவர்களின் அணியில் நின்று போரிடுவதற்காக
அன்றைய நாளில் அர்ஜூனின் மகன் அபிமன்யு வருகிறார். எதிரணியினரான
கௌரவர்கள் 'சக்கர வியூகம்' அமைத்துள்ளனர். அதாவது, சக்கரம் போல
தங்கள் படையை நிறுத்தியுள்ளனர். தாமரை, சங்கு, முதலை என்று
நிறைய வியூகங்கள் அமைக்கப்படுவதுண்டு. வியூகத்தை உடைத்தால்தான்
எதிராளியின் அணிக்குள் மற்றவர்கள் நுழைய முடியும். யார் இதை உடைப்பார்கள்?
என்ற கேள்வி எழும்போது, அபிமன்யு முன்வருகிறார். அபிமன்யு
வெற்றியுடன் சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே போகிறார். ஆனால்,
என்ன கொடுமை என்றால், உடைத்து உள்ளே சென்ற அபிமன்யு வெளியே வர
முடியவில்லை. ஏனெனில், அவர் கற்றது பாதிதான். உள்ளே போகத்
தெரிந்த அவருக்கு வெளியே வரத் தெரியவில்லை. உள்ளே அகப்பட்டுக்
கொண்ட அவர் இறந்துவிடுகிறார்.
பாதி அறிவுடன் செயலாற்றும் ஒருவரை அபிமன்யுவிற்கு ஒப்பிடுவது
வழக்கம்.
மேற்காணும் நிகழ்வைச் சுட்டிக்காட்டுகின்ற திரு. சுப. வீ அவர்கள்,
'ஊரடங்கு என்னும் சக்கர வியூகம் அமைத்து, கொரோனாவுக்கு எதிரான
போரில் உள்ளே சென்ற நம் அரசுக்கு வெளியே வரத் தெரியவில்லை' என்கிறார்.
ஊரடங்கினால் கொரோனோ கட்டுக்குள் வந்துவிடும் என்றும், 21 நாள்கள்
இருந்தால் போதும் ஒழித்துவிடலாம் என்றும், மகாபாரதப் போர் 18
நாள்கள் என்றால் கொரோனோ போர் 21 நாள்கள் என்றும், கொரோனாவுக்கு
எதிரான போரில் மக்கள் அனைவரும் இராணுவ வீரர்கள் என்றும்
சொல்லிக் கொண்டிருந்த நடுவண் மற்றும் மாநில அரசுகள், இன்று
ஊரடங்கிலிருந்து வெளியில் வர இயலாமல் நிற்கின்றனர்.
நிற்க,
வெளியில் வர வகையறியாத சீடர்களை வெளியில் கொண்டு வந்து
நிறுத்தியதும், அவர்களின் நாவுகளின் கட்டுக்களை அவிழ்த்து அவர்களைப்
பேச வைத்ததும் தூய ஆவியாரே.
அவரின் திருநாளை, பெந்தெகோஸ்தே பெருநாளை இன்று நாம்
கொண்டாடுகின்றோம்.
சீடர்கள் வெளியில் வந்ததையும், அவர்கள் பேசுவதையும் தத்தம்
மொழிகளில் கேட்கின்ற அனைவரும், 'இது எப்படி?' எனக் கேட்கின்றனர்,
வியக்கின்றனர்.
தூய ஆவியாரைப் பற்றி சிந்திக்கும்போதெல்லாம் எனக்கு மூன்று
விவிலியப் பகுதிகள் நினைவிற்கு வருவதுண்டு:
ஒன்று, திப 19:2. பவுல் தன்னுடைய தூதுரைப் பயணத்தில் எபேசு வருகின்றார்.
அங்கிருந்த நம்பிக்கையாளர்களிடம், 'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது,
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?' எனக் கேட்கின்றார். அங்கிருந்தவர்கள்,
'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!'
எனப் பதில் தருகிறார்கள்.
இன்று, தூய ஆவியைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்று நம்மையே
கேட்டால், அல்லது நம் வாழ்வை சற்றே கூர்ந்து கவனித்தால், தூய
ஆவி என்னும் ஒன்று நம்மில் இல்லாததுபோல நாம் இருக்கிறோமோ என்று
எண்ணத் தோன்றுகிறது. உறுதிப்பூசுதலின் போது கிறிஸ்தவர்களாகிய
நம் அனைவர்மேலும், குருத்துவ அருள்பொழிவின் போது நம் அருள்பணியாளர்கள்மேலும்
இறங்கி வந்த ஆவியார் என்ன ஆனார்?
இரண்டு, திபா 51:11. பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் தாவீது
பாடியதாகச் சொல்லப்படுகின்ற திருப்பாடல் 51இல், தாவீது ஆண்டவரிடம்,
'உம் முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்! உம் தூய ஆவியை
என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்!' என மன்றாடுகின்றார்.
தாவீது ஏன் இப்படி மன்றாட வேண்டும்? ஏனெனில், சவுல் கீழ்ப்படியாமையால்
பாவம் செய்தபோது, 'ஆண்டவரின் ஆவி சவுலைவிட்டு நீங்கியது'
(காண். 1 சாமு 16:14) அவருக்குத் தெரியும். ஆண்டவரின் ஆவி
நீங்கியதால் சவுல் பொறாமையாலும், தீய எண்ணங்களாலும், வன்மத்தாலும்,
பிளவுண்ட மனத்தாலும் அலைக்கழிக்கப்படுகிறார்.
இன்று, ஆண்டவரின் ஆவி நம்மிடம் இருக்கிறதா? அல்லது நீங்கிவிட்டதா?
ஒருவேளை நம்மிடமிருந்து அவர் நீங்கிவிட, சிம்சோன் போல நாம் அதை
அறியாமல் இருக்கிறோமோ? (காண். நீத 16:20)
மூன்று, திபா 23:5. சில நாள்களுக்கு முன் இத்திருப்பாடல் பற்றி
வாசித்துக்கொண்டிருந்தபோது, இத்திருப்பாடலில் நம் கத்தோலிக்க
திருஅவையில் உள்ள ஏழு அருளடையாளங்களும் இருப்பதைக் காண முடிந்தது.
அந்த வகையில், ஆவியாரைப் பற்றிய ஒரு வாக்கியமாக நான் கருதுவது:
'என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர். எனது பாத்திரம் நிரம்பி
வழிகின்றது.' இதன் சூழல் என்னவென்றால், எதிரிகளின்முன்
விருந்து. இந்த 'விருந்தை' நாம் நற்கருணை என எடுத்துக்கொள்ளலாம்.
நம் எதிரிகள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் பசியும், வறுமையும்,
வீடின்மையும், ஆடையின்மையும், அல்லது சில நேரங்களில் நம் அழிவை.
இப்படி எதிர்பார்க்கும் எதிரியின் முன் ஆண்டவர் நமக்கு
விருந்தை ஏற்பாடு செய்கிறார் என்றால், அந்த எதிரியின் எதிர்பார்ப்புக்களை
எல்லாம் தவிடுபொடியாக்குகின்றார் என்றே பொருள். கடவுள் அத்தோடு
நிறுத்தவில்லை. நம் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றார். 'தலையில்
நறுமணத் தைலம் பூசுதல்' என்பது திருப்பொழிவின் அடையாளம். அந்த
நிகழ்வில் ஆண்டவர் தன் ஆவியை திருப்பொழிவு செய்யப்படுபவருக்கு
அருள்கிறார். இதன் விளைவு, 'பாத்திரம் நிரம்பி வழிகின்றது.' அதாவது,
'குறையொன்றும் இல்லை' என்ற நிலை உருவாகிறது.
இன்று, நம்மிடம் குறைவு மனம் இருந்தால் ஆண்டவரின் ஆவி நம்மிடம்
இல்லை என்பதை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
இந்த மூன்று இறைவார்த்தைப் பகுதிகளின் பின்புலத்தில், இன்றைய
வாசகங்களைப் பார்க்கும்போது, தூய ஆவியாரின் வருகை, முன்பிருந்த
நிலையை மாற்றி, 'இது எப்படி!' என்று காண்பவர்களை ஆச்சர்யப்பட
வைக்கிறது.
இன்றைய முதல் வாசகம் (காண். திப 2:1-11) பெந்தெகோஸ்தே நிகழ்வு
பற்றிச் சொல்கிறது. நிகழ்வில் இரண்டு முக்கியமான வார்த்தைகள்
இருக்கின்றன. ஒன்று, காற்று. இரண்டு, நாக்கு. இவ்விரண்டு
வார்த்தைகளுமே இரட்டைப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று,
காற்று. இந்த நிகழ்வில் பெருங்காற்று வீசுகிறது. அதே வேளையில்,
ஆவியார் என்னும் காற்று சீடர்களுக்குள் நுழைகிறது. இரண்டு,
நாக்கு. பிளவுண்ட நெருப்பு நாக்குகள் இறங்கி வருகின்றன. சீடர்கள்
வௌ;வேறு நாவுகளில் (மொழிகளில்) பேசுகின்றனர். ஆக, முன்பில்லாத
ஒரு நிலை இப்போது வருகிறது. அடைத்து வைக்கப்பட்ட கதவுகள்
காற்றினால் திறக்கப்படுகின்றன. கட்டப்பட்ட நாவுகள் பேச ஆரம்பிக்கின்றன.
இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:3-7,12-13), புனித பவுல்,
கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்ற திருமடலில், ஆவியாரையும்
அவர் அருளும் வரங்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றார். நம்பிக்கையாளர்கள்
தாங்கள் நம்பிக்கை நிலைக்குள் வந்தவுடன் ஆவியாரின் அருள்பொழிவையும்,
வரங்களையும் பெறுகின்றனர். ஆக, அவர்கள் தங்களுடைய பழைய
வாழ்க்கையை, பிரிவினை வாழ்க்கையை விட்டுவிட வேண்டும்.
நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-23) நம்மில் சில ஐயங்களை
எழுப்புகின்றது.
ஒன்று, இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாளன்று நடக்கிறது.
அதாவது, 'வாரத்தின் முதல் நாள். மாலை வேளை.' ஆனால், வாரத்தின்
முதல் நாள், மாலை வேளையில், லூக்காவின் பதிவின்படி (காண். லூக்
24), இயேசு எம்மாவு நகரில் இருக்கிறார். இயேசு எங்கேதான் இருந்தார்?
யோவான் சொல்வது போல எருசலேமிலா? அல்லது லூக்கா சொல்வது போல எம்மாவு
நகரிலா? அல்லது இரு இடங்களிலுமா?
இரண்டு, இந்த நிகழ்வில் தூய ஆவியார் இயேசுவின் உயிர்ப்பு
நாளில் சீடர்களுக்கு வழங்கப்படுகிறார். ஆனால், லூக்காவின் பதிவின்படி
பெந்தெகோஸ்தே நாளில்தான் ஆவியார் இறங்கி வருகின்றார்.
மூன்று, இந்த நிகழ்வில் தோமா இல்லை. அப்படி என்றால், தோமாவின்
மேல் தூய ஆவி அருளப்படவில்லையா? அல்லது மன்னிப்பு வழங்கும்,
நிறுத்தும் அதிகாரம் தோமாவுக்கு வழங்கப்படவில்லையா?
நான்கு, இந்த நிகழ்வில் இயேசு தன் சீடர்களின்மேல் ஆவியை ஊதினார்
என்றால், அவர்கள் மீண்டும் எட்டு நாள்களுக்குப் பின்பும் யூதர்களுக்கு
அஞ்சி கதவுகளைப் பூட்டிக்கொண்டிருந்தது ஏன்? இயேசு ஊதிய ஆவி
அவர்களுக்கு ஊட்டமும் ஊக்கமும் தரவில்லையா?
இந்த ஐயங்கள் ஒரு பக்கம் எழ, மற்றொரு பக்கம், இயேசு இங்கே பாவத்தைப்
பற்றிப் பேசுகிறார். ஆனால், மற்ற நற்செய்தியாளர்களின் பதிவுகளில்
பாவம் பற்றிய குறிப்பு இல்லை, மாறாக, பணி பற்றிய குறிப்பு இருக்கின்றது:
'எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்.
எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா.'
யோவான் நற்செய்தியின் பின்புலத்தை இங்கே புரிந்துகொள்வோம்.
யோவான் நற்செய்தியில், 'பாவம்' என்பது 'நம்பிக்கையின்மை.' ஆக,
பாவம் நீக்குதல் என்பது நம்பிக்கையின்மை நீக்குதல் என எடுத்துக்கொள்ளலாம்.
இங்கே, சீடர்கள் தாங்களே நம்பிக்கையின்மையில்தான் இருக்கிறார்கள்.
ஆக, படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் முதல் மனிதன்
மேல் தன் ஆவியை ஊதியதுபோல, இன்று இயேசு தன் சீடர்கள்மேல் ஆவியை
ஊதுகின்றார். அவர்கள் இனி இன்றுமுதல் தங்கள் இயல்பு விடுத்து
இயேசுவின் இயல்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறாக,
முதல் வாசகத்தில், சீடர்களின் பயம் மறைந்து, துணிவு பிறக்கிறது.
இரண்டாம் வாசகத்தில், பிரிவினை மறைந்து, ஒருமைப்பாடு பிறக்கிறது.
நற்செய்தி வாசகத்தில், நம்பிக்கையின்மை மறைந்து, நம்பிக்கை பிறக்கிறது.
முந்தைய நிலை இப்போது இல்லை.
'இது எப்படி?' - தூய ஆவியாரால்!
இன்று நான் என் வாழ்வைப் பார்த்து, 'இது எப்படி?' என்று என்னால்
கேட்க முடியுமா? அல்லது 'ஐயோ! மறுபடியும் இப்படியா?' என்று புலம்பும்,
பரிதவிக்கும் நிலையில் நான் இருக்கின்றேனா?
இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 104), பாடலாசிரியர், 'ஆண்டவரே!
உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப்
புதுப்பிக்கின்றீர்!' எனப் பாடுகின்றார்.
என் முகம் ஆண்டவரின் ஆவியாரால் புதுப்பிக்கப்படுகிறதா?
சீடர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களிடம் இருந்ததுபோல, என்னுள்
இருக்கும் பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, பொறாமை, வெட்கம்,
குற்றவுணர்வு, பலிகடா மனநிலை, சோர்வு, பின்வாங்குதல், இறுமாப்பு,
பிரிவினை எண்ணம் ஆகியவை மறைகின்றனவா?
என் வாழ்க்கை இறைவனை நோக்கித் திரும்பியுள்ளதா?
என்னால் எல்லாரையும் மன்னிக்கவும் அன்பு செய்யவும் முடிகிறதா?
என் வாழ்வின் பொறுப்பாளரும், கண்காணிப்பாளரும், தலைவரும் நான்
என்ற எண்ணம் என்னில் வருகிறதா?
என் அருள்பொழிவு நிலையை நான் அன்றாடம் உணர்கிறேனா?
என் வாழ்வின் கொடைகளுக்காகக் கடவுளுக்கு நன்றிகூறுகிறேனா?
கண்ணியத்தோடு என் கடப்பாடு இருக்கிறதா?
இப்படியாக,
முன்பிருந்த நிலை என்னில் மாறினால், என்னைச் சுற்றியிருக்கும்
நிலையும் மாறும்.
இந்த நேரத்தில் நான், 'இது எப்படி?' என்று எருசலேம் நகரத்தார்
போலக் கேட்க முடியும்.
இப்படிக் கேட்டலில்தான் நான் எந்த வியூகத்தையும் உடைத்து உள்ளே
செல்லவும், வெளியே வரவும் முடியும்.
தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துக்களும் செபங்களும்!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi) |
|