|
|
30 மே 2020 |
|
பாஸ்கா
7ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இன்று மாலையில் நடைபெறும் திருப்பலியில் தூய ஆவி ஞாயிறு
திருவிழிப்புத் திருப்பலி வாசகங்களைப் பயன்படுத்தவும்.
முதல் வாசகம்
பவுல் உரோமையில் தங்கி, இறையாட்சியைக்
குறித்துப் பறைசாற்றி வந்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்
28: 16-20, 30-31
உரோமையில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுல் அனுமதி
பெற்றுக்கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து
வந்தார். மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக்
குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின்
அவர்களை நோக்கி, "சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ,
மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும்
எருசலேமில் நான் கைதுசெய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன்.
அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும்
என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.
யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், "சீசரே என்னை
விசாரிக்கவேண்டும்" என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன்.
ஆனால் என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை.
இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல்
மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்"
என்றார்.
பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த
வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று
இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவைப்பற்றி முழுத் துணிவோடு தடை ஏதுமின்றிக் கற்பித்துக்
கொண்டிருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 11: 4. 5,7 . (பல்லவி: 7b )
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, நேர்மையாளர் உமது திருமுகத்தைக் காண்பார்கள்.
அல்லது : அல்லேலூயா.
4
ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில்
இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள்
மானிடரைச் சோதித்தறிகின்றன. - பல்லவி
5
ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்; வன்முறையில்
நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.
7
ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்;
அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 16: 7, 13
அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை
வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை
நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
யோவான் இவற்றை எழுதி வைத்தார். இவரது
சான்று உண்மையானது.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
21: 20-25
அக்காலத்தில்
பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீடரும்
பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின்
அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, "ஆண்டவரே உம்மைக்
காட்டிக் கொடுப்பவன் எவன்?" என்று கேட்டவர். அவரைக் கண்ட
பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்?" என்று
கேட்டார். இயேசு அவரிடம், "நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும்
என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து
வா" என்றார்.
ஆகையால் அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே
பரவியது. ஆனால் இவர் இறக்கமாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக,
"நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால்,
உனக்கு என்ன?" என்றுதான் கூறினார்.
இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர்.
இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். இயேசு செய்தவை
வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும்
நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 28: 16-20, 30-31
இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத்
துணிவோடு கற்பித்து வந்த பவுல்
நிகழ்வு
சி.டி.ஸ்டுட் என அன்போடு அழைப்படும் சார்லஸ் தாமஸ் ஸ்டுட், இங்கிலாந்து
நாட்டில் தோன்றிய மிகப்பெரிய மறைப்பணியாளர். கிரிக்கெட் வீரராகத்
தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில்
விளையாடி வந்த இவர், ஆண்டவர் இயேசுவால் தொடப்பட்டு சீனா, ஆப்பிரிக்கா
போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்று கடவுளுடைய வார்த்தையை அறிவித்து
வந்தார்.
ஒருமுறை இவருக்கு அறிமுகமான ஒருசிலர் இவரிடம், இவர் செய்த நற்செய்திப்
பணியைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, இவர்
குறுக்கிட்டு, "ஆண்டவர் இயேசு எனக்காகத் தன்னுடைய உயிரையே கையளித்திருக்கின்றார்!
அப்படிப்பட்டவருக்கு நான் செய்யக்கூடிய இந்த நற்செய்திப் பணியெல்லாம்
மிகவும் சாதாரணம். மேலும் நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும்
அவருடைய வார்த்தையை அறிவித்து வந்தாலும், அது அவருடைய தியாக அன்பிற்கு
ஈடாகாது" என்றார்.
ஒருகாலத்தில் கிரிக்கெட் வீரராக இருந்து, பின்னர் ஆண்டவர் இயேசுவால்
தொடப்பட்டு அவருடைய வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைப்பவராக
சி.டி. ஸ்டுட் எப்படி மாறினாரோ, அப்படி ஒருகாலத்தில் கிறிஸ்தவர்களைச்
சித்திரவதை செய்து வந்த பவுல், ஆண்டவர் இயேசுவால் தொடப்பட்டு,
அவருடைய நற்செய்தியைத் துணிவோடு அறிவிப்பவராக மாறினார். இன்றைய
முதல் வாசகம் பவுல் கிறிஸ்து இயேசுவைப் பற்றித் துணிவோடு அறிவித்து
வருவதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்த பவுல்
மூன்று திருத்தூது பயணங்களை மேற்கொண்ட பவுல், தூய ஆவியாரின் அறிவுறுத்தலின்
பேரில் எருசலேமிற்கு வருகின்றார். அங்கு யூதர்கள் அவர்மீது
குற்றம் சுமத்தி, தாக்குவதற்கு முற்பட்டபொழுது, ஆயிரத்தவர் தலைவரால்
அவர் உரோமைக்குக் கொண்டு வரப்படுகின்றார். அங்கு அவருக்கு விசாரணை
நடைபெறுகின்றது, விசாரணையில் தண்டனைக்குரிய குற்றம் எதுவும் இல்லை
என்று கண்டுபிடிக்கப்படுகின்றது. இதனால் அவர் வீட்டுச்
சிறையில் வைக்கப்படுகின்றார். இன்றைய முதல் வாசகத்தின் முதற்பகுதி,
வீட்டுச் சிறையில் இருந்த பவுல் யூத முதன்மைக் குடிமக்களைச் சந்திப்பதைப்
பற்றியதாக இருக்கின்றது.
பவுலின் அழைப்பின் பேரில் அவரிடம் வருகின்றார்கள் யூத முதன்மைக்
குடிமக்கள். இவர்கள் அதிகாரத்தில் இருந்தவர்கள் கிடையாது என்பதை
நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இப்படிப்பட்டவர்களிடம் பவுல்,
தான் மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ
எதுவும் செய்யவில்லை என்று வெளிப்படையாகப் பேசுகின்றார். பவுல்
யூத முதன்மைக் குடிமக்களைச் சந்தித்துப் பேசியதை, பவுலின் தன்னிலை
விளக்கம் என்றும் அவர்களுடான ஒன்றிப்புக்கான ஓர் அழைப்பு என்றும்கூட
எடுத்துக்கொள்ளலாம்.
கடவுளின் வார்த்தையை முழுத் துணிவோடு அறிவித்த பவுல்
பவுல், யூத முதன்மைக் குடிமக்களை அழைத்துப் பேசிய பின்பு, இறையாட்சியைக்
குறித்தும் கிறிஸ்து இயேசுவைக் குறித்தும் முழு துணிவோடு அறிவிப்பதைக்
குறித்து வாசிக்கின்றோம். இது இன்றைய வாசகத்தின் இரண்டாவது பகுதியாக
வருகின்றது.
ஆம், கிறிஸ்துவைத் துன்புறுத்தி வந்த பவுலுக்கு, ஆண்டவராகிய இயேசு,
தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும் வழியில் மறுவாழ்வு தந்தார். அதனால்
அவர் ஆண்டவர் இயேசுவைப் பற்றி எல்லா மக்களுக்கும், அதிலும்
குறிப்பாகப் பிற இனத்து மக்களுக்கு அறிவித்து வந்தார். இப்படிப்பட்ட
பவுலின் பணிவாழ்வில் பல்வேறு சவால்களும் பிரச்சனைகளும் இடர்பாடுகளும்
வந்தன. ஆனாலும், அவர் ஆண்டவர் தன்னோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையில்
அவருடைய வார்த்தையை மக்களுக்கு அறிவித்து வந்தார்.
பவுல், கடவுளின் வார்த்தையை முழுத் துணிவோடு அறிவித்து வந்ததுபோல,
நாமும் கடவுளின் வார்த்தையைத் துணிவோடு அறிவிக்கவேண்டும். ஏனெனில்,
நற்செய்தியை அறிவிப்பது நமக்கு இருக்கின்ற மிகப்பெரிய பொறுப்பு
(1கொரி 9: 17). இந்தப் பொறுப்பினை உணர்ந்தவர்களாய், நாம் கடவுளின்
வார்த்தையை மக்களுக்கு முழுத் துணிவோடு அறிவிப்போம்.
சிந்தனை
"நான் நற்செய்தியை அறிவிக்கின்றேன் என்றாலும் அதில் நான்
பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு
உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!"
(1கொரி 9: 16) என்பார் புனித பவுல். ஆகவே, நாம் புனித பவுல் எப்படி,
கடவுளின் வார்த்தையை அறிவிப்பது தன்னுடைய கடமை என உணர்ந்து செயல்பட்டாரோ,
அப்படி நாமும் கடவுளின் வார்த்தையை அறிவிப்பது நம்முடைய கடமை
என உணர்ந்து அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 21: 20-25
"நான் விரும்பினால் உனக்கு என்ன?"
நிகழ்வு
ஒரு காட்டில் மயிலும் நாரையும் (Crane) அருகருகே வாழ்ந்து வந்தன.
மயிலுக்குத் தன் தோகையைக் குறித்து மிகுந்த கர்வம் இருந்தது.
இதுகூடப் பரவாயில்லை. அது தன்னோடு இருந்த நாரையின் நிறத்தைக்
குறித்தும் அதன் தோற்றத்தைக் குறித்தும் மிகத் தரக்குறைவாக
நினைத்து வந்தது. ஒருநாள் மயில் நாரையைப் பார்த்து, "நாரையே!
என்னுடைய தோகையைப் பார். எவ்வளவு அருமையாக தோகைகள்; பார்ப்பதற்கு
மிகவும் அழகாக இருக்கின்றன அல்லவா! ஆனால், உனக்குத் தோகை என்ற
ஒன்று கிடையாது; உன்னுடைய நிறம்கூட வெளிறிப்போய் போய்ப் பார்ப்பதற்குச்
சகிக்க முடியாதவாறு இருக்கின்றது. எப்படி நீ இதை
வைத்துக்கொண்டு வெளியே திரிகிறாய்?" என்றது.
மயில் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த நாரை, அது
பேசி முடித்ததும் இவ்வாறு சொல்லி அதனுடைய வாயை அடைத்தது:
"மயிலே! எனக்கு உன்னிடம் இருக்கின்ற தோகை இல்லாமல் இருக்கலாம்;
என்னுடைய நிறம்கூட வெளிறிப்போய்ப் பார்ப்பதற்குச் சகிக்க
முடியாதவாறு இருக்கலாம்; ஆனால், என்னால் உயரமாகப் பறக்க
முடியும். உனால் உயரமாகப் பறக்க முடியுமா...? நீ தரையை ஒட்டிப்
பறப்பதால்தான் மனிதர்கள் உன்னை எளிதாகப் பிடித்துவிடுகின்றார்கள்."
இதற்குப் பின்பு மயில் நாரையிடம் பேச்சுக் கொடுப்பதே இல்லை.
(Melody of the Heart Joji Valli) கடவுள் இந்த உலகத்தில் உள்ள
ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி, தனித்தன்மையோடு
படைத்திருக்கின்றார். அப்படி இருக்கும்பொழுது ஒருவரோடு ஒருவரை
ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
இன்றைய நற்செய்தி வாசகம் பேதுரு, யோவானைக் குறித்து இயேசுவிடம்
கேட்கிறபொழுது, அதற்கு இயேசு தரும் பதிலாக இருக்கின்றது. அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இவருக்கு என்ன ஆகும் என்று இயேசுவிடம் கேட்ட பேதுரு
பேதுரு இயேசுவிடம் பேசிவிட்டு, அல்லது அவரிடம் தன்னுடைய குற்றத்தை
அறிக்கையிட்டுவிட்டு திரும்பிப் பார்க்கின்றபொழுது, யோவான் தங்களைப்
பின்தொடர்வதைப் பார்க்கின்றார். உடனே பேதுரு இயேசுவிடம்,
"ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?" என்று கேட்கின்றார். இதற்கு இயேசு
அவரிடம், "நான் வரும்வரை இவன் இருக்கவேண்டும் என நான்
விரும்பினால் உமக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா" என்கின்றார்.
இயேசு பேதுருவிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள் நமக்கு இரண்டு முதன்மையான
செய்திகளை எடுத்துச் சொல்கின்றன. அதில் முதலாவது செய்தி, ஒவ்வொருவரும்
தனித்தன்மையானவர்கள் என்பதாகும்.
ஆண்டவர் இயேசு பேதுருவைத் திருஅவையின் நியமித்தார் (மத் 16:
18-19). அவருடைய விண்ணேற்றத்திற்குப் பிறகு பேதுரு திருஅவையின்
தலைவராக இருந்து எப்படிப்பட்ட பணிகளைச் செய்தார் என்பதை
திருத்தூதர் பணிகளின் முதல் பகுதியில் வாசிக்கின்றோம். இதற்கு
முற்றிலும் மாறாக, யோவான் நீண்ட நாள்கள் வாழ்ந்து, தன்னுடைய எழுத்துகளின்
மூலமாகவும் வாழ்வின் மூலமாகவும் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து
வந்தார். இப்படிப் பேதுருவும் யோவானும் வெவ்வேறு பணிகளைச்
செய்ய இருந்தார்கள்; செய்தார்கள். இதனால்தான் இயேசு பேதுருவிடம்,
"...நான் விரும்பினால் உமக்கு என்ன?" என்று கேட்கின்றார். இயேசு
பேதுருவிடம் இவ்வாறு சொல்வதன்மூலம், ஒவ்வொருவரும் தனித்தன்மையோடு
படைக்கப்பட்டிருக்கின்றார்கள்; ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பணி
கொடுக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தியை நமக்கு எடுத்துச்
கூறுகின்றார்.
ஒவ்வொருவரும் அவருடைய நிலையிலிருந்து பணிசெய்வோம்
இயேசு பேதுருவிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள் நமக்கு எடுத்துரைக்கும்
இரண்டாவது செய்தி, நாம் எந்த நிலையில் இருக்கின்றோமோ, அந்த
நிலையில் இருந்து பணிசெய்வோம் என்பதாகும். கடவுள் நம்மைத் தனித்தன்மையோடு
படைத்திருப்பதால், நம்மிடம் என்ன திறமை இருக்கின்றதோ, நமக்கு
என்ன வாய்ப்புகள் இருக்கின்றனவோ அவற்றைக் கொண்டு நாம் இறைப்பணியைச்
சிறப்புடன் செய்வதே நல்லது. அதை விடுத்து, அவரைப் போன்று நான்
இல்லை, என்னைப் போன்று அவரில்லை என்று ஒப்பிட்டுப் பார்த்துக்
கொண்டிருந்தால் நிம்மதியாக இருக்க முடியாது.
இயேசு பேதுருவிடம் சொல்லக்கூடிய, "நான் விரும்பினால் உனக்கு என்ன?"
என்ற வார்த்தைகள், "யோவான் அவர் வேலைப் பார்க்கட்டும், நீர் உம்
வேலையைப் பாரும்" என்று இயேசு சொல்வதுபோல் இருக்கின்றன. ஆகையால்,
நாம் யாரோடும் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல்,
நாம் இருக்கின்ற நிலையிலயே இறைப்பணியைச் செய்து, இயேசுவுக்குச்
சான்று பகர்வோம்.
சிந்தனை
"நம்முடைய மகிழ்ச்சியைக் களவாடுகின்ற ஒரு பண்பு இவ்வுலகில் உண்டெனில்,
அது நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பான்மைதான்"
என்பார் தியோடர் ரூஸ்வெல்ட் என்ற அறிஞர். ஆகையால், நாம், மற்றவரோடு
நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல், கடவுள் ஒவ்வொருவரையும்
ஒவ்வொரு விதமாகப் படைத்திருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய்,
தனிதன்மையாய் இருந்து, ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|