|
|
28 மே 2020 |
|
பாஸ்கா
7ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
++உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்
22: 30; 23: 6-11
அந்நாள்களில் யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள்
என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார். எனவே மறுநாள்
தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு
அவர் ஆணை பிறப்பித்துப் பவுலைச் சிறையிலிருந்து கொண்டுவந்து
அவர்கள் முன் நிறுத்தினார். அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர்
என்றும், மறு பகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, "சகோதரரே!
நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர்
என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்" என்று
தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார். அவர் இப்படிச்
சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர். சதுசேயப்
பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை
என்று கூறிவந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக்கொண்டனர்.
அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச் சேர்ந்த
மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, "இவரிடம் தவறொன்றையும்
காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!"
என வாதாடினர். வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப்
பிய்த்தெறிந்துவிடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சிப் படைவீரரை
வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக்
கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார். மறுநாள்
இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, "துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றிச்
சான்று பகர்ந்ததுபோல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 16: 1-2,5. 7-8. 9-10. 11 . (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம்
புகுந்துள்ளேன். அல்லது: அல்லேலூயா.
1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம்
புகுந்துள்ளேன்.
2
நான் ஆண்டவரிடம் "நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம்
எனக்கு இல்லை"என்று சொன்னேன்.
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய
பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி
7
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட
என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம்
உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி
9
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;
என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப்
படுகுழியைக் காணவிடமாட்டீர். - பல்லவி
11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு
நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும்
பேரின்பம் உண்டு. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17: 21
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும்
இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக. இதனால் நீரே என்னை
அனுப்பினீர் என்று உலகம் நம்பும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++அனைவரும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக!
+யோவான்
எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26
அக்காலத்தில் இயேசு
வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: "தந்தையே, என் சீடர்களுக்காக
மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம்
நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய்
இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்
அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர்
என்று உலகம் நம்பும். நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய்
இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.
இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும்
முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர்
எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள்மீதும் அன்பு
கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும். தந்தையே, உலகம்
தோன்றும் முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர்.
நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும்
நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என
விரும்புகிறேன். நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால்
நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும்
அறிந்துகொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது
கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு
அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 22: 30; 23: 6-11
"துணிவோடிரு; சான்று பகர்ந்துகொண்டே இரு"
நிகழ்வு
உலகின் பல இடங்களுக்கும் அருள்பணியாளர்களை அனுப்பி வைத்து, மறைப்பணியை
மிகச் சிறப்பான முறையில் செய்து வந்த மறைப்பணித்தளம் அது.
அந்த மறைப்பணித்தளத்திலிருந்து அருள்பணியாளர் ஒருவர், பழங்குடி
மக்கள் மிகுதியாக வாழ்ந்து வந்த ஓர் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவர் அங்கு சென்று, அந்த மக்களுடைய ஆன்மிகத் தேவைகளைப்
பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும்
தொடங்கினார். இப்படி ஆன்மிகப் பணி, கல்விப் பணி என்ற இரண்டு
பெரும் பணிகளை ஒருசேரச் செய்து வந்தது இவருக்கு மிகவும் சவாலாக
இருந்தாலும், மிகுந்த உற்சாகத்தோடு அந்தப் பணிகளைச் செய்துவந்தார்.
இவர் ஆற்றிவந்த கல்விப் பணியினால், அங்கிருந்த மக்கள் சுயமாகச்
சிந்திக்கத் தொடங்கினார்கள். இதனால், இத்தனை ஆண்டுகளும் தங்களை
அடிமைப்படுத்தி, தங்களுடைய உழைப்பினைச் சுரண்டி வாழ்ந்து வந்த
முதலாளிகளை கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். இதைச் சிறிதும் எதிர்பார்த்திராத
முதலாளிகள், "இத்தனை ஆண்டுகள் நம்மை எதிர்த்துப் பேசாதவர்கள்,
இன்று நம்மை எதிர்த்துப் பேசத் துணிந்துவிட்டார்கள் எனில், இதற்கு
முக்கியமான காரணம், இவர்கள் நடுவில் பணிசெய்யக் கூடிய அருள்பணியாளர்தான்.
அவரைத் தீர்த்துக் கட்டிவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்"என்று
முடிவுசெய்து, அருள்பணியாளரைத் தீர்த்துக் கட்டத் திட்டம்
தீட்டினார்கள்.
இச்செய்தியை அறிந்த அருள்பணியாளர், தன்னை அங்கு அனுப்பி வைத்த
மறைப்பணித்தளத்தின் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில்
தான் பணியாற்றி வரும் மறைப்பணித்தளத்தில் தன்னுடைய உயிருக்கு
ஆபத்து இருப்பதைக் குறிப்பிட்டு, அங்கு பணியைத் தொடர்வதா?
வேண்டாமா? என்று கேட்டிருந்தார். இதற்கு அந்த மறைப்பணிதளத்தின்
தலைவரிடம் இப்படியொரு பதில் கடிதம் வந்தது: "அங்கு மட்டுமல்ல,
எங்கும் ஆபத்துகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதனால் நீங்கள்
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, துணிவோடிருந்து, தொடர்ந்து ஆண்டவருக்குச்
சான்று பகருங்கள்."
தலைமையிடத்திலிருந்து வந்த இப்படியொரு நம்பிக்கையூட்டும் கடிதத்தை
படித்துப் பார்த்த அந்த அருள்பணியாளர், தன்னுடைய பணியைப்
பாதிலேயே விட்டுவிட்டுப் போய்விடலாம் என்ற எண்ணத்தை மாற்றிக்
கொண்டு, எதிர்ப்புகளுக்கு நடுவிலும், தொடர்ந்து அந்த மக்கள் நடுவில்
நல்லதொரு பணியைச் செய்து வந்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற அருள்பணியாளருக்கு ஆபத்து வந்தபொழுது,
எப்படி அவருடைய தலைமையிடத்திலிருந்து வந்த, துணிவோடிருங்கள்;
தொடர்ந்து இயேசுவுக்குச் சான்று பகருங்கள் என்ற நம்பிக்கையூட்டும்
வார்த்தைகள் அவரை ஊக்கமூட்டினவோ அப்படி, இன்றைய முதல் வாசகத்தில்,
பல்வேறு சவால்களுக்கு நடுவில் பணிசெய்து வந்த பவுலுக்கு ஆண்டவரிடமிருந்து
வந்த, துணிவோரும்; தொடர்ந்து சான்று பகரும் என்ற நம்பிக்கை
நிறைந்த வார்த்தைகள் அவருக்கு ஊக்கமூட்டுவனவாக இருக்கின்றன. இது
குறித்து நாம் சிந்திப்போம்.
பவுல் யூதர்களிடமிருந்து காப்பாற்றப்படல்
யூதர்கள், பவுல்மீது என்ன குற்றம் சுமத்த விரும்புகின்றார்கள்
என்பதை அறிய விரும்பிய ஆயிரத்தவர் தலைவர், தலைமைக் குருக்கள்,
தலைமைச் சங்கத்தார் இருந்த இடத்திற்கு அவரைக் கூட்டி வருகின்றார்.
அங்கு அவர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்று
அவர் காத்துக்கொண்டிருந்த வேளையில், பவுல் அங்கிருந்தவர்களில்
பரிசேயர், சதுசேயர் என இரு பிரிவினர் இருப்பதை அறிந்து, மிகவும்
முன்மதியோடு, "...இறந்தோர் உயிர்த்தெழுவார் என்னும் எதிர்நோக்கின்
பொருட்டு விசாரிக்கப்படுகின்றேன்" என்று உரத்த குரலில்
கூறுகின்றார்.
பவுல் இவ்வாறு பேசியது அங்கிருந்தவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்துகின்றது.
காரணம், சதுசேயர்களுக்கு உயிர்ப்பின்மீது நம்பிக்கை கிடையாது;
பழைய ஏற்பாட்டில் வரும் முதல் ஐந்து நூல்களை மட்டுமே அவர்கள்
ஏற்றுக்கொள்வர். இதற்கு முற்றிலும் மாறாக இருந்தவர்கள் பரிசேயர்கள்,
இவர்களுக்கு உயிர்ப்பின்மீது நம்பிக்கை இருந்தது. இதனாலேயே பவுல்
உயிர்ப்பைப் பற்றிப் பேசும்பொழுது அங்கிருந்த இருபிரிவினருக்கும்
இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது. இதைத்தொடர்ந்து, ஆயிரத்தவர்
தலைவர், பவுலைப் பத்திரமாகக் கோட்டைக்குள் கொண்டு வருகின்றார்.
பவுல் சாதூயர்மாகப் பேசி யூதர்களிடமிருந்து தப்பித்தது நமக்கு,
இயேசு சொல்லக்கூடிய, "... அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதைப்
பேசுங்கள்" (மாற் 13: 9-11) என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றன.
பவுல் துணிவோடிருக்க, ஆண்டவர் அவருக்கு நம்பிகையூட்டுதல்
ஆயிரத்தவர் தலைவர், பவுலைக் கோட்டைக்குள் கொண்டு வந்ததற்கு, அடுத்த
நாள் இரவில், ஆண்டவர் அவரருகில் நின்று, துணிவோடிரும்... தொடர்ந்து
சான்று பகரும் என்கிறார். ஆண்டவர் பவுலிடம் சொல்லக்கூடிய இந்த
வார்த்தைகள் நிச்சயம் அவருக்கு நம்பிக்கையை அளித்திருக்கும் என்று
உறுதியாகச் சொல்லலாம். இதைத் தொடர்ந்து பவுல் இன்னும் துணிவோடு
ஆண்டவருக்குச் சான்று பகர்கின்றார்.
அன்று ஆண்டவர் பவுலிடம் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் இன்று நம்மிடம்
சொல்கின்றார். ஆகையால், நாம் துணிவோடிருந்து, ஆண்டவருக்குச்
சான்று பகர்வோம்.
சிந்தனை
"துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்"(மத் 14: 27) என்பார்
ஆண்டவர் இயேசு. ஆகையால், நாம் ஆண்டவர் நமக்குச் சொல்லும் இந்த
நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை உள்வாங்கியவர்களாய், புனித பவுலைப்
போன்று ஆண்டவருக்குத் துணிவோடு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 17: 20-26
"அன்பே உலகை ஒற்றுமையில் உன்னதமாக வாழச்
செய்கின்றது"
நிகழ்வு
ராய் பௌலர் (Roy Fowler) என்ற எழுத்தாளர் எழுதிய ஓர் உண்மை நிகழ்வு
இது. ஆலிஸ் என்றோர் அரசி இருந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தார்.
மகளுக்கோ தொண்டை அழற்சி நோய் எனப்படும் "டிப்தீரியா"(Diphtheria)
தொற்று நோய் வந்தது. ஏறக்குறைய கொரோனோ தொற்றுநோய் போன்ற இந்த
நோய் வந்தவருடைய மூச்சுக்காற்றைச் சுவாசிக்கக் கூடாது; அவரைத்
தொடக்கூடாது. மீறினால் இறப்புதான்.
டிப்தீரியாவினால் பாதிக்கப்பட்டிருந்த ஆலிஸ் அரசியின் மகளுக்குச்
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரிடம், "உங்களுடைய மகளுக்கு
அருகில் எக்காரணத்தைக் கொண்டு செல்லவேண்டாம்; அவரைத் தொடவும்
வேண்டாம்" என்று அறிவுறுத்திவிட்டுப் போனார்கள். அரசியும் சரியென்று
கேட்டுக்கொண்டார். இது நடந்து ஓரிரு நாள்கள் கழித்து, அரசியின்
மகள் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். இதைப்
பார்த்துவிட்டு அரசி வேறெதையும் சிந்திக்காமல், தன் மகள் அருகே
சென்றார். மட்டுமல்லாமல், "அம்மா! என்னை முத்தமிடுங்கள்" என்று
சொன்ன மகளின் கன்னங்களிலும் இதழ்களிலும் அன்போடு அவர் முத்தமிட்டார்.
இது நடந்து ஓரிரு நாள்கள் கழித்து ஆலிஸ் அரசியின் மகள் இறந்துபோனாள்.
அவளைத் தொடர்ந்து அரசியும் டிப்தீரியாவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.
அவருடைய இறுதி ஊர்வலத்தின் பொழுது, "இப்படியோர் அன்புமிக்க அன்னையா...?"
என்று சொல்லி நாடே கண்ணீர் விட்டு அழுதது.
ஆம், அன்பு பயமறியாது; தீவினையை நாடாது. அது நன்மையை மட்டுமே
செய்து, எல்லாரையும் உன்னதமாக வாழ வைக்கும். நற்செய்தியில் இயேசு
அன்பே உலகை, உறவை, ஒற்றுமையல் உன்னதமாக வாழச் செய்கின்றது என்கின்றார்.
இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஒற்றுமைக்காக மன்றாடும் இயேசு
இன்றைய நற்செய்தி வாசகமானது, பெரிய குருவாம் இயேசு தந்தைக் கடவுளை
நோக்கி வேண்டுகின்ற இறைவேண்டலின் இறுதிப் பகுதியாக இருக்கின்றது.
கடந்த இரண்டு நாள்களும் இயேசு தந்தைக் கடவுளை நோக்கி எழுப்பிய
இறைவேண்டலின் முதல் மற்றும் இரண்டாம் பகுதியாக இருந்தன; இன்றைய
நற்செய்தி வாசகமோ அதன் தொடர்ச்சியாகவும் நிறைவுப் பகுதியாகவும்
இருக்கின்றது.
இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்ற இயேசுவின் இறைவேண்டலில்,
இயேசு தந்தைக் கடவுளிடம் ஒற்றுமைக்காக மன்றாடுகின்றார். எப்படிப்பட்ட
ஒற்றுமை எனில், தானும் தந்தைக் கடவுளும் ஒன்றாய் இருப்பதுபோல,
மனிதர்களாகிய அனைவரும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்ற ஒற்றுமைக்காக!
இப்படிப்பட்ட ஒற்றுமையை, உன்னத நிலையை தந்தை அவருள்ளும் அவர்
நம்முள்ளும் இருப்பதால் ஏற்படுகின்ற ஒன்றிப்பின் மூலமே அடைய
முடியும். இப்படிப்பட்ட ஒற்றுமைக்கு, உன்னத நிலைக்கு மிக
முக்கியமான ஒன்றும் காரணமாக இருக்கின்றது. அது என்ன என்று தொடர்ந்து
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அன்பே ஒற்றுமைக்கு அடிப்படை
"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!"என்று தந்தைக் கடவுளிடம்
வேண்டிய இயேசு, இந்த ஒன்றிப்பிற்கு அல்லது ஒற்றுமைக்கு அடிப்படைக்
காரணமாக அன்பைச் சொல்கின்றார். அதைத்தான் இன்றைய நற்செய்தியின்
இறுதியில் இவ்வாறு நாம் இவ்வாறு வாசிக்கின்றோம்: "அன்பே உலகை,
உறவை, ஒற்றுமையில் உன்னதமாக வாழச் செய்கின்றது." அப்படியானால்
இந்த உலகில் ஒற்றுமையும், ஒன்றிப்பும் உருவாவதற்கு அன்புதான்
அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்பது உறுதியாகின்றது. ஏனெனில்,
அனைத்து நற்பண்புகளின் இருப்பிடமாக இருக்கின்றது அன்பு.
இந்த அன்பைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும்பொழுது புனித
பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிப்பிடுகின்ற
வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. "நாம்
பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில்
பொழியப்பட்டுள்ளது" (உரோ 5:5). ஒற்றுமைக்கு இலக்கணமாக இருக்கும்
மூவொரு கடவுளின் அன்பு, தூய ஆவியாரின் வழியாக நம்மீது பொழியப்பட்டிருக்கின்றது
என்றால், நாம் ஒவ்வொருவும் ஒன்றிருக்கவேண்டும் என்பதுதான் இறைவன்
நமக்குத் தரும் அழைப்பாக இருக்கின்றது.
இன்றைக்கு நாம் பல காரணங்களால் பிரிந்து கிடைக்கின்றோம். இதற்கான
மூல காரணம் என்று சிந்தித்துப் பார்த்தோமெனில் அன்பின்மையே காரணமாக
இருக்கும். ஆகையால், நம்மிடம் இருக்கின்ற பகைமையையும்
வெறுப்பையும் அகற்றிவிட்டு, அன்பை ஆடையாக அணிந்துகொண்டு,
கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருப்போம்.
சிந்தனை
"அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழ்வுறும்"
(1கொரி 13: 6) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் உண்மையில்
மகிழ்வுறுவதும் ஒற்றுமைக்குக் காரணமாகவும் இருக்கும் அன்பை நம்
உள்ளங்களில் தாங்கி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|