|
|
27 மே 2020 |
|
பாஸ்கா
7ஆம் வாரம் - புதன்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வளர்ச்சியையும் உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்ல கடவுளிடம்
ஒப்படைக்கிறேன்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்
20: 28-38
அந்நாள்களில் பவுல் எபேசு சபையின் மூப்பர்களிடம் கூறியது:
"தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் திருச்சபையை
மேய்ப்பதற்குத் தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால்
உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.
உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்
நுழையும் என்பது எனக்குத் தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு
தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம்
திசைதிருப்பும் அளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர். எனவே
விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது
கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை
நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம்
ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக!
அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கும் உரிய உரிமைப்பேற்றையும்
உங்களுக்குத் தர வல்லது. எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ
நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய
தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்கவேண்டுமென்று
அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக்கொள்வதைவிடக்
கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவுகூருங்கள்
என்றும் கூறினேன்.'' இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள்படியிட்டு,
அவர்கள் எல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார். பின் எல்லாரும்
பவுலைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர். `இனிமேல்
நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை' என்று அவர் கூறியது
அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும்
சென்று அவரை வழியனுப்பிவைத்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 68: 28-29. 32-34a. 34b-35c . (பல்லவி: 32a)
Mp3
=================================================================================
பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது:
அல்லேலூயா.
28
கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய
கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்!
29
எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக்
காணிக்கை கொணர்வர். - பல்லவி
32
உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப்
போற்றிப் பாடுங்கள்.
33
வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப்
புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார்.
34ய
கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். - பல்லவி
34b
அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில்
உள்ளது.
35c
கடவுள் போற்றி! போற்றி! - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17: 17b, a
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே உமது வார்த்தையே உண்மை. உண்மையினால்
அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
17: 11b-19
இயேசு
வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: "தூய தந்தையே! நாம் ஒன்றாய்
இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த
உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு
இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக்
காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை.
மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே
அழிவுற்றான். இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள்
நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச்
சொல்கிறேன். உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன்.
நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச்
சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை
உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை;
தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே
வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும்
உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்.
உமது வார்த்தையே உண்மை. நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல,
நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால்
உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.''
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 20: 28-38
முன்மாதிரியாகவும் கவனத்தோடு இருந்தும்
திருஅவையைக் காக்கவேண்டிய தலைவர்கள்
நிகழ்வு
கலிபோர்னியாவில் உள்ள சான்டா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் ஒருவர்
இருந்தார். இவர், பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அல்லது தலைவர்கள்
எப்படி இருக்கவேண்டும் என்பது தொடர்பான ஒரு கருத்துக்கணிப்பு
நடத்தினார். அந்தக் கருத்துக் கணிப்பிற்காக இவர் ஆயிரத்து ஐநூறு
தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம், ஒரு தலைவர் எப்படி
இருக்க வேண்டும்?" என்றொரு கேள்வியைக் கேட்டார்.
இவர் நடத்திய அந்தக் கருத்துக் கணிப்பில் பல்வேறு விதமான பதில்கள்
வந்திருந்தன. அந்தப் பதில்களை எல்லாம் இவர் மூன்று தலைப்பின்கீழ்
வரிசைப்படுத்தினார். அவையாவன: 1. தலைவர் என்பவர் எடுத்துக்காட்டாக
இருக்கவேண்டும் 2. தலைவர் என்பவர் தனக்குக் கீழே உள்ளவர்களை நல்லமுறையில்
வழிநடத்தவேண்டும். 3. தலைவர் என்பவர் உயர்ந்த குறிக்கோளோடு இருக்கவேண்டும்.
இந்த மூன்று கருத்துக்களை ஒட்டி, கருத்துக்கணிப்பில் பங்கேற்றிருந்த
பலரும் வலியுறுத்தியிருந்த இன்னொரு முக்கியமமான கருத்து, தலைவர்
என்பவர் தன்னுடைய கடமையில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டும்
என்பதாகும்.
ஓர் அதிகாரி அல்லது ஒரு தலைவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும்
என்பதற்கு மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு மிகவும் வியக்கத்தக்க
உண்மைகளை நமக்கு எடுத்துக் கூறுகின்றன. ஆம், ஒரு தலைவர் எடுத்துக்காட்டானவராகவும்,
தனக்குக் கீழ் உள்ளவர்களை நல்லமுறையில் வழிநடத்தக்கூடியவராகவும்,
உயர்ந்த குறிக்கோள் உடையவராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னுடைய
கடமையில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவரே
நல்ல தலைவர்.
இன்றைய முதல் வாசகத்தில், பவுல் எபேசுத் திருஅவையில் தலைவர்களாக
இருந்த மூப்பர்களை அழைத்து, அவர்கள் எப்படி நல்ல தலைவர்களாக இருந்து
மந்தையை வழிநடத்தவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார்.
அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கவனமாகவும் விழிப்பாகவும் இருந்து மந்தையை வழிநடந்தவேண்டும்
மூன்றாவது திருத்தூதுப் பயணமாக எபேசு நகருக்கு வந்த பவுல்,
மூன்றாண்டுகள் அங்கு மிகக் கடினமாக உழைத்துக் கடவுளின்
வார்த்தையை அறிவித்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு, தூய ஆவியார்
அவரை எருசலேமிற்குப் போகவேண்டும் என்று அறிவுறுத்தியதும், அவர்
அங்கிருந்த மூப்பர்களை அழைத்து, அவர்களிடம் ஒருசில அறிவுரைகளைக்
கூறுகின்றார். அந்த அறிவுரைகள்தான் இன்றைய முதல் வாசமாக இருக்கின்றது.
பவுல், எபேசுத் திருஅவையில் இருந்த மூப்பர்களிடம் சொல்லக்கூடிய
மிக முக்கியமான அறிவுரை, கவனத்தோடும் விழிப்போடும் இருந்து மந்தையைக்
கண்காணிக்க வேண்டும் என்பதாகும். பவுல் இவ்வாறு சொல்வதற்குக்
காரணம், திருஅவைக்கு வெளியே, ஓநாய்களைப் போன்று இருந்த போலி இறைவாக்கினர்கள்
திருஅவையை தாக்குவதற்குக் தயாராக இருந்தார்கள். இந்தப் போலி இறைவக்கினர்களைக்
குறித்து பவுல் தன்னுடைய திருமுகங்ககளில் ஆங்காங்கே
குறிப்பிடுகின்றார் (1திமொ 1: 6-7, 9-20). இப்படித் திருஅவையை
தாக்குவதற்குத் தயாராக இருந்த போலி இறைவாக்கினரைக் குறித்து மிகவும்
கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும் என்றுகூறும் பவுல்,
திருஅவைக்கு உள்ளே இருந்து ஆபத்துகள் வரக்கூடும், அவற்றைக்
குறித்தும் அவர்கள் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும்
என்று அறிவுறுத்துகின்றார்.
முன்மாதிரியாய் இருந்து மந்தையை வழிநடத்தவேண்டும்
பவுல், எபேசுத் திருஅவையில் இருந்தவர்களிடம் வெளியே இருந்தும்
உள்ளே இருந்தும் வரக்கூடிய ஆபத்துகளைச் சுட்டிக்காட்டிவிட்டு,
அவர்கள் தங்களுடைய நன்நடத்தை மூலம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற
மந்தைக்கு நல்லமுறையில் வழிகாட்டவேண்டும் என்று
குறிப்பிடுகின்றார்.
இது குறித்து அவர் அவர்களிடம் பேசுகின்றபொழுது, என்னுடைய தேவைகளுக்காகவும்
என்னோடு இருந்தவர்களிடம் தேவைகளுக்காகவும் என் கைகளே உழைத்தன.
இவ்வாறு பாடுபட்டு உழைத்து, நலிவுற்றோருக்குத் துணைநிற்க
வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன் என்கின்றார்.
ஆம். பவுல் மக்களிடத்தில் கடவுளின் வார்த்தையை அறிவித்தபொழுது,
தன்னுடைய வார்த்தையால் மட்டுமல்ல, தன்னுடைய வாழ்வாலும் மக்களுக்கும்
முன்மாதிரியாய் இருந்தார். அதனால்தான் அவர் எபேசுத் திருஅவையைச்
சார்ந்த மூப்பர்களிடம், தங்களுடைய போதனையால் மட்டுமல்ல, எடுத்துக்காட்டான
வாழ்வாலும் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.
இந்த உலகத்தில் எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் மன்னர்கள்தான்; தலைவர்கள்தான்.
ஆகையால், நாம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற மக்களை நம்முடைய
எடுத்துக்காட்ட வாழ்வால் நல்ல முறையில் வழிநடத்தி, அவர்களைக்
கடவுளிடம் கொண்டு சேர்ப்போம்.
சிந்தனை
"ஒவ்வொரு தலைவருக்கும் இரண்டு தலையாய கடமைகள் இருக்கின்றன. ஒன்று,
தான் அடுத்த கட்டத்திற்கு நகர்வது. இரண்டு, தான் அடுத்தக் கட்டத்திற்கு
நகர்கின்றபொழுது, தன்னோடு இருப்பவர்களையும் அடுத்த கட்டத்திற்கு
நகரத்துவது" என்பார் ஆல்டன் ஜோன் என்ற சிந்தனையாளர். ஆகையால்,
நாம் நல்ல தலைவர்களாக இருந்து, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை
நல்லவிதமாய் வழிநடத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 17: 11b-19
அவர்களைக் காத்தருளும்"
நிகழ்வு
ஒரு சிற்றூரில் விவசாயக் குடும்பம் ஒன்று இருந்தது. அந்தக்
குடும்பத்தில் கணவன், மனைவி, மகள் என்று மூவர் வாழ்ந்து வந்தனர்.
இதில் மனைவிக்கு கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அதனால்
அவர் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்த பின்னும், இரவில் தூங்கச்
செல்லும் முன்னும் தன்னுடைய குடும்பத்திற்காக மிக உருக்கமாக மன்றாடி
வந்தார். அவ்வாறு மன்றாடும்பொழுது, அவர் தன்னுடைய குடும்பத்தில்
உள்ள ஒவ்வொருவரையும் எல்லாவிதத் தீமைகளிலிருந்தும் இறைவன் காத்தருள
வேண்டும் என்று மன்றாடி வந்தார். இதைப் பார்த்துவிட்டு, கடவுள்மீது
அவ்வளவாக நம்பிக்கை இல்லாத அவருடைய கணவர், "எதற்கு இந்த வீண்
வேலை?" என்று அவரைத் திட்டித் தீர்த்துவந்தார். ஆனாலும்கூட, மனைவி
இறைவனிடம் தொடர்ந்து மன்றாடி வந்தார்.
இப்படி இருக்கையில் ஒருநாள் மாலை வேளையில், காட்டு வேலைக்குப்
போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய கணவர் மிகவும் உற்சாகத்தோடு
மனைவியிடம் வந்து, வா! நாம் இருவரும் சேர்ந்து கடவுளுக்கு நன்றி
செலுத்துவோம்" என்றார். மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை.
"இவருக்குத்தான் கடவுள் நம்பிக்கையே கிடையாதே...! பிறகு எதற்கு
இவர் கடவுளுக்கு செலுத்துவோம் என்று என்னை அழைக்கின்றார்" என்று
ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தார்.
அப்பொழுது கணவர் தன் மனைவியிடம் என்ன நடந்தது என்ற விரிவாக
விளக்கத் தொடங்கினார்: வழக்கமாக நான் காட்டு வேலையை
முடித்துக்கொண்டு மலையடிவாரத்தின் வழியாக வருவேன். இன்றும்
நான் அந்த வழியாகத்தான் வந்தேன். அப்படி வரும்பொழுது
எங்கிருந்த வந்த ஒரு நாய் என்னைத் துரத்தத் தொடங்கியது. நான்
அந்த நாயிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, கால் கிலோமீட்டருக்கு
மேல் வேகமாக ஓடிவந்தேன். அப்படி நான் ஓடிவருகின்றபொழுது
திடீரென்று பயங்கரச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
அங்கோ மலையிலிருந்து உருண்டுவந்த ஒரு பெரிய பாறை, நான்
வழக்கமாக வரும் பாதையில் வந்து விழுந்தது. அப்பொழுதுதான் நான்
"ஒவ்வொருநாளும் நீ இறைவனிடம் நம் குடும்பத்தையும் என்னையும்
எல்லாவிதமான தீமையிலிருந்தும் காப்பாற்றவேண்டும் என்று மன்றாடி
வருகின்றாய் அல்லவா! அந்த மன்றாட்டுதான் என்னை இந்த
ஆபத்திலிருந்து காப்பாற்றியது" என்று நினைத்துக்கொண்டேன்."
தன் கணவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, மிகவும் மகிழ்ந்தவராய்,
மனைவி அவரோடு சேர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் வரும் மனைவி, இறைவன் தன் கணவரையும்
குடும்பத்தையும் எல்லாவிதத் தீமையிலிருந்தும் காத்தருள
வேண்டும் என்று மன்றாடி வந்தார். அவர் மன்றாடியதுபோலவே,
அவருடைய கணவர் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார். இன்றைய
நற்செய்தியில் இயேசு, தன்மீது நம்பிக்கை கொண்டவர்களைக்
காத்திருளுமாறு இறைவனிடம் மன்றாடுகின்றார். அது எப்படிப் பட்ட
மன்றாட்டு என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தன்மீது நம்பிக்கை கொண்டவர்களைக் காத்தருள மன்றாடும் இயேசு
இன்றைய நற்செய்தி வாசகமானது, பெரிய குருவாம் இயேசு, தந்தைக்
கடவுளை நோக்கி எழுப்புகின்ற மன்றாட்டின் ஒரு பகுதியாக
இருக்கிறது. இதில் இயேசு தன்மீது நம்பிக்கை கொண்டவர்களைக்
காத்தருளுமாறு இறைவனிடம் மன்றாடுகின்றார்.
இயேசு, இந்த மண்ணுலகில் வாழ்ந்தபொழுது தன்னிடம்
ஒப்படைக்கப்பட்டவர்களை அல்லது தன்மீது நம்பிக்கை கொண்டவர்களை
அழிவுறாமல் காத்துக்கொண்டார். யூதாஸ் இஸ்காரியோத்து இதற்கு
விதிவிலக்காக இருக்கலாம். ஏனெனில், அவன் இயேசுவின்மீது
நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக, அவன் பேயாக இருந்தான் (யோவா
6:70). அதனால் அவனுடைய முடிவை அவனே தேடிக்கொண்டான். இவ்வாறு
இயேசு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காத்துக்கொண்டார்.
அத்தோடு, தான் விண்ணகம் வந்தபிறகு, தன்மீது நம்பிக்கை
கொண்டவர்களைக் காத்துக் கொள்ளுமாறு தந்தைக் கடவுளிடம் அவர்
மன்றாடுகின்றார் .
இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டவர்களைக் கடவுள் ஏன்
காக்கவேண்டும்
தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காக்கவேண்டும் என்று இயேசு
ஏன் தந்தையிடம் மன்றாடவேண்டும் என்றொரு கேள்வி எழலாம்.
இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அல்லது அவர்மீது நம்பிக்கை
கொண்டவர்கள், இவ்வுலகைச் சார்ந்தவர்களாய் வாழாமல், மறுவுலகைச்
சார்ந்தவர்களாய் வாழ்ந்தார்கள், வாழ்வார்கள். அதனால்
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை வாழ்பவர்களிடமிருந்து நிச்சயம்
எதிர்ப்பு வரும்; பிரச்சனைகள் வரும். அதனால்தான் இயேசு
அவர்களைக் காத்துக் கொள்ளுமாறு தந்தையிடம் மன்றாடுகின்றார்.
இயேசு தந்தைக் கடவுளிடம் இவ்வாறு மன்றாடுவது, நாமும்
பிறருக்காக, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காக
மன்றாடவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. ஆகையால், நாம்
நமக்காக மட்டுமல்லாமல், பிறருக்காகவும் மன்றாடுவோம்.
சிந்தனை
"உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை" (திபா 25: 3) என்பார்
திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்பிக்கையாளர்களை வெட்கமுறச்
செய்யாத இறைவனிடம் நமக்காகவும் பிறருக்காகவும் நாம்
மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|