Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       26  மே 2020  

பாஸ்கா 7ஆம் வாரம் - செவ்வாய்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 17-27

அந்நாள்களில்

பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது:

"நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்துகொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன். நன்மை பயக்கும் ஒன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை; பொது இடங்களிலும் வீடு வீடாகவும் சென்று உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன். நம் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளுமாறும், மனம்மாறி கடவுளிடம் வந்து சேருமாறும் நான் யூதரிடமும் கிரேக்கரிடமும் வற்புறுத்திக் கூறினேன்.

இப்போதும் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேமுக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு என்ன நேரிடும் என்பது தெரியாது. சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார். என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்.

இதுவரை நான் உங்களிடையே வந்து இறையாட்சியைப் பற்றிப் பறைசாற்றினேன். ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை என்று நான் அறிவேன். உங்களுள் எவரது அழிவுக்கும் நான் பொறுப்பாளியல்ல என்று இன்று நான் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுளின் திட்டம் எதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிடவில்லை."

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 68: 9-10. 19-20 . (பல்லவி: 32a) Mp3
=================================================================================

பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது: அல்லேலூயா.
9
கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.
10
உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். - பல்லவி

19
ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக்கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு.
20
நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 14: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தையே, நீர் உம் மகனை மாட்சிப்படுத்தும்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-11a


அக்காலத்தில்

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: "தந்தையே, நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.

நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.

நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.

அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய் நான் மாட்சி பெற்றிருக்கிறேன். இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 20: 17-27

சவால்களுடன் வாழப் பழகு

நிகழ்வு

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய மிகப்பெரிய மறைப்போதகர் சார்லஸ் சிமியோன் (1759-1836). இவர் 1783 ஆம் ஆண்டு, காம்பிரிட்ஜில் இருந்த திருக்கோயிலில் பங்குப் பணியாளராக நியமிக்கப்பட்டார்.

இவருடைய கனவெல்லாம், கடவுளுடைய வார்த்தையை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக இவர் கடுமையாக உழைத்தார்; எல்லா மக்களோடும் இனிமையாகப் பழகினார். இது அங்கிருந்த வசதி படைத்தவர்களுக்குப் பிடிக்கவே இல்லை. வசதி படைத்தவர்களெல்லாம் அதிகாரத்தில் இருப்பார்கள் அல்லவா! அதுபோன்றுதான் அந்தக் கோயில் நிர்வாகத்தின் முக்கியமான பொறுப்புகளில் இருந்தவர்களெல்லாம் வசதிபடைத்தவர்கள். அவர்கள், "சார்லஸ் சிமியோன் இங்கு இருக்கின்ற வரைக்கும் யாரும் கோயிலுக்குப் போகக்கூடாது" என்று உத்தரவிட்டார்கள்.

இந்த உத்தரவையும் மீறி, சார்லஸ் சிமியோனால் மிகவும் அன்பு செய்யப்பட்ட சாதாரண மக்கள் இவருடைய போதனைக் கேட்கக் கோயிலுக்கு வந்தார்கள். தங்களுடைய உத்தரவையும் மீறி எளிய மக்கள் சார்லஸ் சிமியோனின் போதனையைக் கேட்பதற்கு வந்ததைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாத வசதி படைத்தவர்கள் இருந்தவர்கள், எளிய மக்கள் கோயிலில் உள்ள இருக்கைகளில் அமராத வண்ணம் அவற்றைச் சங்கிலிகளால் கட்டிப் பூட்டுப் போட்டனர். அப்படியிருந்தும்கூட அந்த எளிய மக்கள் கோயிலுக்கு வந்து, நின்றுகொண்டே திருவழிபாட்டில் கலந்துகொண்டு விட்டுச் சென்றார்கள்.

இப்படி நாள்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருக்க, சார்லஸ் சிமியோன், அதிகாரத்தில் இருந்த வசதி படைத்தவர்கள் தனக்கெதிராகச் செயல்படுவதை நினைத்து வருந்தவில்லை. மாறாக, அவர்கள் மனம்மாறவேண்டும்; ஏழை எளிய மக்களையும் கடவுளின் மக்களாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களுக்காகப் பொறுமையோடும் நம்பிக்கையோடும் இறைவனிடம் மன்றாடி வந்தார். ஆம். இவருடைய மன்றாட்டு வீண்போகவில்லை. யாரெல்லாம் இவர் ஏழைகளோடு நெருங்கிப் பழகுகின்றார்; அவர்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவிப்பதில் தீவிரம் காட்டுகின்றார் என்று குற்றம் சுமத்தினார்களோ, அவர்களெல்லாம் இவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டார்கள். மட்டுமல்லாமல், எளிய மக்களிடம் கடவுளின் வார்த்தையைக் கொண்டு செல்வதற்குத் இவர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற மறைப்போதரான சார்லஸ் சிமியோன் எப்படிப் பல்வேறு சவால்களுக்கு நடுவில் கடவுளின் வார்த்தையைச் சாதாரண மக்களுக்கு எடுத்துரைத்தாரோ, அப்படிப் "பிறஇனத்தாரின் இறைவாக்கினர்"என அழைக்கப்படும் பவுல், பல்வேறு சவால்களுக்கு நடுவில் அந்த மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்தார். இன்றைய முதல் வாசகம், பவுல் தன்னுடைய பணிவாழ்வில் சந்தித்த சாவல்கள் எத்தகையவை... சந்திக்கப்போகும் சவால்கள் எத்தகையவை... என்பன குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்திப்போம்.

எபேசுத் திருஅவையின் மூப்பர்களைத் தன்னிடம் வரவழைத்த பவுல்

தன்னுடைய மூன்றாவது திருத்தூதுப் பயணமாக எபேசுக்கு வந்த பவுல், அங்கு சில காலம் தங்கியிருந்து, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் கடவுளின் வார்த்தையை அறிவித்தார். பின்னர் அவர் தூய ஆவியாரின் அறிவுறுத்தலின் பேரில் எருசலேமிற்குப் போக விழைகின்றார். அதற்கு முன்பாக எபேசில் இருந்த திருஅவை மூப்பர்களைச் சந்தித்துப் பேசுகின்றார்.

பவுல் எபேசுத் திருஅவையில் இருந்த மூப்பர்களைச் சந்தித்துப் பேசியது முக்கியமான தருணம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த சந்திப்பில் பவுல், யூதர்கள் தனக்கெதிரகச் செய்த சூழ்ச்சியையும், நன்மைபயக்கும் அனைத்தையும் தான் ஒவ்வொருவருடைய வீடுவீடாகச் சென்று அறிவித்ததையும், மக்கள் தங்களுடைய பாவங்களை விட்டுவிட்டு மனம்மாறி ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று அறிவித்ததையும் அவர்களிடம் எடுத்துச் சொல்கின்றார். அதைவிடவும் மிகவும் முக்கியமாக, எருசலேமில் தனக்குக் நேர இருக்கும் துன்பங்களையும் பவுல் அவர்களிடம் எடுத்துச் சொல்கின்றார்.

ஆபத்து இருக்கின்றது என்று தெரிந்தும் எருசலேமிற்குச் செல்லத் துணிந்த பவுல்

பவுல், தன்னிடம் வந்த எபேசுத் திருஅவையின் மூப்பர்களிடம், தான் எருசலேமில் அனுபவிக்க இருக்கும் துன்பங்களைப் பற்றிச் சொல்வது, எப்படிப்பட்ட பிரச்சனையையும் தான் எதிர்கொள்ளத் தயார் என்ற பவுலின் துணிச்சலைக் காட்டுகின்றது.

பவுல், எருசலேமில் தனக்கு நேர இருந்த துன்பங்களைக் கண்டு அஞ்சவில்லை. மாறாகத் தூய ஆவியாரின் துணையோடு அந்தத் துன்பங்களை எதிர்கொள்ளத் துணிகின்றார். நம்முடைய பணிவாழ்விலும் நமக்குத் துன்பங்கள் வரலாம். அந்தத் துன்பங்களைக் கண்டு நாம் அஞ்சாமல், தூய ஆவியாரின் துணையோடு அந்தத் துன்பங்களை எதிர்கொள்ளத் தயாராவோம்.

சிந்தனை

"அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கின்றேன்; கலங்காதே, நான் உன் கடவுள். நான் உனக்கு வலிமை அளிப்பேன்"(எசா 41: 10) என்று ஆண்டவர் இறைவாக்கினர் எசாயா வழியாகக் கூறுவார். ஆகவே, பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவில் பவுல் எப்படி ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய பணியைச் சிறப்பாகச் செய்தாரோ, அதுபோன்று நாமும் ஆண்டவர்மீது நம்பிக்கைவைத்து, அவருடைய பணியைச் சிறப்பாகச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 17: 1-11a

மாட்சிப்படுத்திய இயேசு; மாட்சிப்படுத்தும் கடவுள்


நிகழ்வு

பெரியவர் ஒருவர், ஒருநாள் மாலைவேளையில் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். வழியில் கோயில் திருப்பணி நடந்துகொண்டிருந்தது. அதற்கு முன்பு சிற்பி ஒருவர் ஆறடி உயரத்தில் சிற்பம் ஒன்றைச் செதுக்கிக்கொண்டிருந்தார்.

அவர் மிகுந்த ஈடுபாட்டோடு சிற்பத்தைச் செதுக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த பெரியவர் அவரிடத்தில் பேச்சுக் கொடுத்தார். இடையில், அந்தச் சிற்பி செதுக்கிக் கொண்டிருந்த சிற்பத்திற்கு அருகில், அதைப் போன்றே இன்னொரு சிற்பம் இருப்பதைக் கண்டு பெரியவர் அவரிடம், "நீங்கள் ஏன் ஒன்றுபோல் இரண்டு சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்...? இரண்டையும் வேறுவேறு இடத்தில் வைக்கப் போகிறீர்களா என்ன...?" என்று கேட்டார். அதற்குச் சிற்பி, "அப்படியெல்லாம் இல்லை, பக்கத்தில் உள்ள சிற்பத்தில், மூக்கில் ஒரு சிறிய விரிசல் விழுந்துவிட்டது. அதனால்தான் இந்தச் சிற்பத்தைச் செதுக்கிக்கொண்டிருக்கின்றேன்" என்றான்.

சிற்பி இவ்வாறு சொன்னதும் பெரியவர், பக்கத்தில் இருந்த சிற்பத்தினுடைய மூக்கில் ஏதாவது விரிசல் தெரிகின்றதா? என்று பார்த்தார். மிகச் சிறிய அளவில்தான் அதில் விரிசல் இருந்தது. அதுவும் உன்னிப்பாகக் கவனித்ததால் தெரிந்தது. உடனே பெரியவர் சிற்பியிடம், "இந்தச் சிற்பத்தில் தெரிகின்ற விரிசல் ஒன்றும் பெரிதாக இல்லை. பிறகு எதற்கு இதைப் போன்று இன்னொரு சிற்பத்தைச் செய்துகொண்டிருக்கின்றீர்கள்...? ஒருவேளை இந்தச் சிற்பத்தை மக்கள் தொட்டுவிடக்கூடிய உயரத்தில் வைக்கப் போகிறீர்களா என்ன?" என்றார்.

"அப்படியெல்லாம் இல்லை. இந்தச் சிற்பத்தை கோபுரத்தின் உச்சியில் வைக்கப்போகிறார்கள்" என்றார் சிற்பி. இதைக்கேட்டு மிகவும் வியப்படைந்த பெரியவர், "இந்தச் சிற்பத்தில் மிகச் சிறிதாகத்தான் விரிசில் இருக்கின்றது. மேலும், இதைக் கோபுரத்தின் உச்சியில் வைக்கப்போகிறார்கள் என்று வேறு சொல்கின்றீர்கள். கோபுரத்தின் உச்சி, கீழிலிருந்து எப்படியும் இருபது அடி உயரம் இருக்கும்! இங்கிருந்து பார்த்தால், சிற்பத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது யாருக்கும் தெரியாது. பிறகு எதற்கு இன்னொரு சிற்பத்தைச் செய்துகொண்டிருக்கின்றீர்கள்?" என்றார். அப்பொழுது சிற்பி மிகவும் பொறுமையாக, "அந்தச் சிற்பத்தில் உள்ள விரிசல், அதை பார்க்கக்கூடிய மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், கடவுளுக்கும் எனக்கும் தெரியும்" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டுச் சிற்பி அந்தப் பெரியவரிடம் தொடர்ந்து பேசினார்: "இத்தனை ஆண்டுகளும் இந்தச் சிற்ப வேலையை என்னுடைய மனநிறைவுக்காகவும் கடவுளின் மாட்சிக்காகவும்தான் செய்கின்றேன். இதில் எனக்கு மனநிறைவு இல்லையென்றால், என்னால் கடவுளை மாட்சிப்படுத்த முடியவில்லையே என்ற உணர்வு ஏற்படும். அதனால்தான் புதிதாக ஒரு சிற்பத்தைச் செய்துகொண்டிருக்கின்றேன்."

இந்த நிகழ்வில் வருகின்ற சிற்பி, தன்னுடைய மனநிறைவிற்காகவும் கடவுளை மாட்சிப்படுத்துவதற்காகவும் சிற்ப வேலையைச் செய்தது போல, ஆண்டவர் இயேசு, தான் செய்த ஒவ்வொன்றும் கடவுளின் மாட்சிக்காகவே செய்தார். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு எப்படிக் கடவுளை மாட்சிப்படுத்தினர் என்பதையும் பதிலுக்குக் கடவுள் எப்படி இயேசுவை மாட்சிப்படுத்தினார் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தந்தையை மாட்சிப்படுத்திய இயேசு

இன்றைய நற்செய்தி வாசகம், பெரிய குருவாம் இயேசுவினுடைய இறைவேண்டலின் முதற்பகுதியாக இருக்கின்றது. இதில் இயேசு தந்தைக் கடவுளை நோக்கி, "தந்தையே, நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்தியவாறு, நீர் மகனை மாட்சிப்படுத்தும்" என்கின்றார்.

இங்கு இயேசு குறிப்பிடுகின்ற "நேரம்"என்பது அவர் பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்படுவதைக் குறிக்கின்றது. இதற்கு முன்னதாக "அவருடைய நேரம் இன்னும் வரவில்லை"என்பது பற்றிப் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது (யோவா 2: 4, 7: 6,8,30). இன்றைய நற்செய்தியில் அவருடைய நேரம் வந்துவிட்டது என்று சொல்லப்படுவது, இயேசுவின் சிலுவைச்சாவிற்கான நேரம் என்பதைக் குறிப்பிடுவதாக இருக்கின்றது. இயேசு தன்னுடைய இறுதி மூச்சு வரை தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரை மாட்சிப்படுத்தினார்.

இயேசுவை மாட்சிப்படுத்திய கடவுள்

இயேசு தந்தையின் திருவுளத்தை இறுதிவரை நிறைவேற்றி அவரை மாட்சிப்படுத்தியதால், தந்தை இயேசுவை மாட்சிப்படுத்துகின்றார். கடவுள் இயேசுவை எப்படி மாட்சிப்படுத்தினார் என்பதைப் பவுல், "கடவுள் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்" (பிலி 2:9) என்கின்றார். இவ்வாறு தன்னை மாட்சிப்படுத்திய இயேசுவை தந்தைக் கடவுள் மாட்சிப்படுத்துகின்றார்.

நாமும் இவ்வுலகில் தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, இயேசுவைப் போன்று கடவுளை மாட்சிப்படுத்தவே இருக்கின்றோம். எனவே, நாம் இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் இயேசுவைப் போன்று நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் தந்தையை மாட்சிப்படுத்துவோம்.

சிந்தனை

"உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்"(மத் 5: 16) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசு எப்படித் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரை மாட்சிப்படுத்தினாரோ, அப்படி நாம் நமது நற்செயல்களால் தந்தையை மாட்சிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!