|
24 மே 2020 |
|
ஆண்டவரின் விண்ணேற்றம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எங்கள் கண்கள் முன்பாக, இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்
1: 1-11
தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு
அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து
அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை
அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம்
நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது
நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்;
பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார்.
அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், "நீங்கள் எருசலேமை
விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின்
வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால்
திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய
ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்" என்று கூறினார்.
பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு
ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?" என்று
கேட்டார்கள். அதற்கு அவர், "என் தந்தை தம் அதிகாரத்தால்
குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு
உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது
வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும்
உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்"
என்றார்.
இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து
மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர்
தோன்றி, "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து
விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர்
மீண்டும் வருவார்" என்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 47: 1-2.
5-6. 7-8 . (பல்லவி: 5b) Mp3
=================================================================================
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
அல்லது: அல்லேலூயா.
1
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப்
புகழ்ந்து பாடுங்கள்.
2
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும்
ஆளும் மாவேந்தர் அவரே. - பல்லவி
5
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே
உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
6
பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப்
புகழ் பாடுங்கள். - பல்லவி
7
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப்
புகழ் பாடுங்கள்.
8
கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில்
வீற்றிருக்கின்றார். - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
அவரை விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில்
அமர்த்தினார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-23
சகோதரர் சகோதரிகளே,
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர்
அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும்,
வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக!
கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது
என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை
மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்ப வர்களாகிய நம்மிடம்
செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும்
நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப்பெறுவனவாக! கடவுள்
வலிமைமிக்க தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த
அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில்
அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை
உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை
உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு
எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்.
அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும்
மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே
அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது
நிறைவு பெறுகின்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 28: 19-20
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும்
சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன்
இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும்
எனக்கு அருளப்பட்டிருக்கிறது.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20
அக்காலத்தில்
பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள
ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள்.
சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும்
அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள்
போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன்,
தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக்
கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்.
இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று
கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
ஆண்டவரின் விண்ணேற்றம்
I திருத்தூதர் பணிகள் 1: 1-11
II எபேசியர் 1: 17-23
III மத்தேயு 28: 16-20
அறிவிப்போம்; அளிப்போம்; கற்பிப்போம்
நிகழ்வு
மிகச்சிறந்த மறைப்போதர் கெர்மித் லாங் (Kermith Long
1926-2009). இவர் எல்லாக் கிறிஸ்தவ அவைகளையும் சார்ந்த, தலைவர்கள்
கூடியிருந்த ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, இவ்வாறு பேசினார்:
"தரமான கல்வியோ, நல்ல கட்டமைப்போ; இன்றைக்கு இருப்பது போன்ற
பெரிய பெரிய கோயில்களோ... இப்படி எதுவுமே இல்லாமல்கூட, இயேசுவின்
சீடர்கள் "மனிதர்களைப் பிடிப்பர்களாக" மாறிப் பலரையும் ஆண்டவர்
இயேசுவுக்குள் கொண்டு வந்தார்கள். ஆனால், இன்றைக்கு நம்மிடம்
தரமான கல்வியும் நல்ல கட்டமைப்பும் பெரிய பெரிய கோயில்களும் இருகின்றன.
அப்படியிருந்தும் நம்மால் மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாற முடியவில்லை.
மாறாக, நாம் நம்மிடம் இருக்கின்ற இறைமக்களை எப்படித் தக்கவைப்பது
என்றும் ஒரு திருஅவையில் உள்ள இறைமக்களை இன்னொரு திருஅவைக்கு
எப்படி இழுப்பது என்றும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்."
கெர்மித் லாங் இவ்வாறு பேசி முடிந்ததும் கூட்டத்திலிருந்து ஒருவர்
எழுந்து, "இயேசுவின் சீடர்களைப் போன்று இன்று நம்மால் மனிதர்களைப்
பிடிக்க முடியவில்லை என்று சொல்கிறீர்கள்...! என்ன செய்தால்,
அவர்களைப் போன்று நம்மால் மனிதர்களைப் பிடிக்கமுடியம்?" என்றார்.
அதற்கு கெர்மித் லாங், "மூன்று முதன்மையான செயல்களைச் செய்யவேண்டும்.
ஒன்று. நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும். இரண்டு,
அறிவிக்கப்பட்ட நற்செய்தியை நம்பி ஏற்றுக்கொண்டோருக்குத்
திருமுழுக்கு அளிக்கவேண்டும். மூன்று, உண்மையான கிறிஸ்தவர்களாக
வாழ்வதற்கு கிறிஸ்து கற்றுக்கொடுத்ததைக் கற்பிக்கவேண்டும். இம்மூன்று
முதன்மையான செயல்களையும் நாம் செய்தால், இயேசுவின் சீடர்களைப்
போன்று நம்மாலும் மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாற முடியும்;
பலரையும் இயேசுவுக்குள் கொண்டுவரமுடியும்" என்றார்.
ஆம், நாம் அறிவித்தல், அளித்தல், கற்பித்தல் ஆகிய முப்பெரும்
பணிகளைச் செய்தால், நம்மாலும் ஏரளாமான மனிதர்களைப் பிடித்து,
கிறிஸ்துவுக்குள் கொண்டுவர முடியும். இன்று நாம் ஆண்டவரின்
விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இயேசு விண்ணேற்றம்
அடையும் முன்பாகத் தன்னுடைய சீடர்களிடம், மேலே சொல்லப்பட்ட
மூன்று முதன்மையான கட்டளைகளைத் தந்தார். இம்மூன்று கட்டளைகளின்
முக்கியத்துவம் என்ன...? இவற்றை நாம் எப்படிக் கடைப்பிடித்து
வாழ்வது...? என்பன குறித்து சிந்திப்போம்.
நற்செய்தியை அறிவிப்போம்
நாம் மிகவும் அன்பு செய்த ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்து
செல்கின்றார் எனில், அவர் இறுதியாகச் சொல்லக்கூடிய ஒவ்வொரு
சொல்லும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும். அந்தவிதத்தில்
இயேசு தன்னுடைய சீடர்களை விட்டுப் பிரிந்து, விண்ணகம்
செல்லும்முன் சொன்ன ஒவ்வொரு சொல்லும் அல்லது ஒவ்வொரு கருத்தும்
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. இயேசு தன்னுடைய சீடர்களைவிட்டுப்
பிரிந்து செல்லுமுன், மூன்று முதன்மையான கருத்துகளைச்
சொன்னார்; அதில் முதலாவதாக வருவது; "எல்லா மக்களினத்தாரையும்
சீடராக்குங்கள்" என்பதாகும். எல்லா மக்களினத்தாரையும் எப்படிச்
சீடராக்குவது என்று நாம் சிந்திப்போம்.
இயேசு தன்னுடைய சீடர்களை முதன்முறையாகப் பணித்தளத்திற்கு அனுப்பியபொழுது,
அவர்களிடம், பிறஇனத்தாரின் எப்பகுதிக்கோ, சமாரியாவின் எந்த நகருக்குள்ளோ
நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் மக்களிடமே
செல்லுங்கள் (மத் 10: 5-6) என்றார். இங்கோ இயேசு, "எல்லா மக்களினத்தாரையும்
சீடராக்குங்கள்" என்கின்றார். அப்படியானால், இயேசுவின் நற்செய்தி
ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படவேண்டும்.
அப்பொழுதுதான் எல்லாரையும் இயேசுவின் சீடராக்க முடியும்.
மேலும் இயேசு தன் சீடர்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகளைச் சாதாரண
வார்த்தைகளாகச் சொல்லவில்லை; கட்டளையாகச் சொல்கின்றார். ஆகையால்,
இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும், நற்செய்தி அறிவிப்பு
என்பது நம்மேல் சுமத்தப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு (1 கொரி 9:
17) என்பதை உணர்ந்து, உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி
அறிவித்து, எல்லாரையும் இயேசுவின் சீடராக்கவேண்டும்.
திருமுழுக்கு அளிப்போம்
இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுத்த இரண்டாவது செய்தி அல்லது
கட்டளை "தந்தை, மகன் தூய ஆவியார் பெயரால் திழுமுழுக்குக்
கொடுங்கள் அளியுங்கள் " என்பதாகும். திருமுழுக்குக் கொடுப்பதற்கு
முன்பாக, திருமுழுக்கில் என்ன நடக்கின்றது என்பதைத்
தெரிந்துகொள்ளவேண்டும்.
திருமுழுக்கினால் ஒருவர் கடவுளோடு ஒன்றிணைகின்றார். இதைப்
புனித பவுலின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் பாவத்திற்கு
இறந்து, கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்றவராக
மாறுகின்றார் (உரோ 6: 11). திருமுழுக்கினால் ஒருவர்
கிறிஸ்துவோடு ஒன்றிணைத்து விட்டால், அவர் தன்னை முற்றிலும் இயேசுவிடம்
ஒப்படைத்துவிட்டுத் தன்னுடைய விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளி,
இயேசுவின் விரும்பமே தன்னுடைய விருப்பமென வாழ்வார். இயேசுவின்
விருப்பம், எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குவது. ஆகையால்,
நாம் தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் ஒருவருக்குத்
திருமுழுக்கு அளிக்கின்றபொழுது, அவர் இயேசுவோடு ஒன்றிணைகின்றார்.
அவ்வாறு ஒன்றிணையும் நபர், எல்லா மக்களினத்தரையும் சீடராக்கும்
பணியிடச் சிறப்பாகச் செய்யும் அழைப்பினைப் பெறுகின்றார்.
இயேசு கற்றுக்கொடுத்ததைக் கற்பிப்போம்
இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுக்கின்ற மூன்றாவது கட்டளை;
"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி
கற்பியுங்கள்" என்பதாகும். இயேசு தன்னுடைய சீடர்களுக்குப் பலவற்றைக்
கற்பித்தார். அவை எல்லாவற்றின் சாரம்சமாக இருப்பது, அவருடைய அன்புக்
கட்டளைதான் (யோவா 13: 34). ஆகையால், இயேசுவின் சீடராக இருக்கின்ற
ஒவ்வொருவரும், அவருடைய அன்புக் கட்டளையை எல்லாருக்கும் கற்பிக்க
வேண்டும். அதுவும் கடைப்பிடிக்கும்படி கற்பிக்கவேண்டும்.
இன்றைக்குக் கற்பிக்கும் பணி மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
ஏனென்றால், இன்றைக்குப் பலர் போலியானதையும் பொய்யானதையும் கற்பித்து,
அவற்றை மக்கள் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று வலியுறுத்திக்
கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில், நாம் உண்மையானதும்
வாழ்வளிப்பதுமான இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்குக்
கற்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் இயேசுவின்மீது மக்களுக்கு நம்பிக்கை
உண்டாகும் (உரோ 10: 17) அந்த நம்பிக்கை அவர்களையும் இயேசுவின்
சீடர்களாக மாற்றி, அவருடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கத்
தூண்டும்.
இப்படிப்பட்ட அரும்பணியை நாம் செய்யும்பொழுது, இயேசுவின் உடனிருப்பு
நமக்கு இருக்குமா? என்ற கேள்வி எழலாம். இயேசுவின் உடனிருப்பு
நிச்சயமாக இருக்கும் என்பதுதான், நற்செய்தியின் இறுதியில் இயேசு
சொல்லக்கூடிய, "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன்
இருக்கிறேன்" என்ற சொற்களில் பதிலாக இருக்கின்றது. ஆகையால்,
நாம் இயேசுவின் உடனிருப்பை உணர்ந்தவர்களாய், அவர் நமக்குக்
கொடுத்த அறிவிப்போம்; அளிப்போம்; கற்பிப்போம் என்ற இம்மூன்று
கட்டளைகளையும் கடைப்பிடித்து, எல்லா மக்களினத்தாரையும் இயேசுவின்
சீடராக்குவோம்.
சிந்தனை
"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே
பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது" என்பார்
கார்ல் மாக்ஸ். ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக்
கொண்டாடும் நாம், "எல்லா மக்களினத்தையும் சீடராங்குங்கள்" என்ற
நல்ல குறிக்கோளை அடைவதற்குத் தொடர்ந்து முயன்று, எல்லாரையும்
இயேசுவின் சீடராக்குவோம். அதன்மூலம் நாம் வரலாறு சொல்லும் இயேசுவின்
உண்மையான சீடராக மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
|
|