Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       23  மே 2020  

பாஸ்கா 6ஆம் வாரம் - சனி

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இயேசுவே மெசியா' என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28

பவுல் சிறிது காலம் அந்தியோக்கியாவில் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்.

அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அவர் தொழுகைக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர்.

அவர் அக்காயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார். ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, "இயேசுவே மெசியா" என மறைநூல்களின்மூலம் எடுத்துக் காட்டினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 47: 1-2. 7-8. 9 . (பல்லவி: 7a) Mp3
=================================================================================
பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே. அல்லது: அல்லேலூயா.
1
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. - பல்லவி

7
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
8
கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

9
மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
யோவா 16: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தையே உங்கள்மீது அன்புகொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நம்பினீர்கள்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.

நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது "உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்" என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார்.

நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 18: 23-28

ஒருவர் மற்றவரை ஊக்கப்படுத்துவோம்

நிகழ்வு

அமெரிக்காவில், இளம் வயதில் அமைச்சரான ஒருவர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் அவருடைய முறை வந்தபொழுது, அவர் எழுந்து நின்று பேசத் தொடங்கினார். இதற்கு முன்பு ஒரு கூட்டத்திலும் பேசிய அனுபவம் கிடையாது... பெரிய பெரிய மனிதர்களெல்லாம் அங்கு இருந்தார்கள்... இவையெல்லாம் அவரை அறியாமல், அவருக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தின. அதனால் அவருடைய பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது. இதை எல்லாரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

அப்பொழுது அந்த இளம் அமைச்சருக்குப் பக்கத்தில் இருந்த, வயதில் மூத்த ஓர் அமைச்சர் ஒரு காகிதத்தில், "You Will Do" என்ற வார்த்தைளை எழுதிக் கொடுத்தார். அதைப் பார்த்துவிட்டு, அந்த இளம் வயது அமைச்சர், தன்னிடம் தயக்கத்தையும் நடுக்கத்தையும் போக்கி, மிகவும் நம்பிக்கையோடு பேசி எல்லாருடைய பாராட்டையும் பெற்றார்.

இந்த நிகழ்வில் வரும் இளம்வயது அமைச்சர் தடுமாறிபொழுது, அவருக்குப் பக்கத்தில் இருந்த வயதில் மூத்த அமைச்சர் எப்படி நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளால் அவரைப் உற்சாகப்படுத்தினாரோ, அப்படி இன்றைய முதல் வாசகத்தில் வரும் பவுலும் பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் திருஅவையில் இருந்தவர்களையும் அப்பொல்லோவையும் உற்சாகப்படுத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தான் ஏற்படுத்திய திருஅவையை உற்சாகப்படுத்திய பவுல்

பிற இனத்தாரின் இறைவாக்கினர் என அழைக்கப்படும் பவுல் இரண்டு திருத்தூது பயணங்களை மேற்கொண்ட பிறகு அந்தியோக்கிற்கு வந்து, அங்கு சில காலம் செலவிட்டபின், அங்கிருந்து புறப்பட்டுக் கலாத்தியா, பிரிகியா போன்ற பகுதிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று, அங்கிருந்த இறைமக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார்.

பவுல் மேற்கொண்ட இப்பணி மிகவும் பாராட்டப்பட வேண்டிய பணி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், பவுல் தான் சென்ற இடங்களிலெல்லாம் திருஅவையை அல்லது இறைமக்களைக் கட்டி எழுப்பிவிட்டு, அவர்களை அப்படியே மறந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் இறைநம்பிக்கையில் மிக உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்காக, அவர்களை மீண்டுமாகச் சந்தித்து அவர்களை நம்பிக்கையில் மேலும் உறுதிப்படுத்துகின்றார். பவுல் ஏற்படுத்திய திருஅவையில் இருந்தவர்கள், வெளியே இருந்தும் உள்ளே இருந்தும் பிரச்சனைகளை சந்தித்திருக்கக்கூடும். அதனால் அவர்கள் நம்பிக்கை தளர்ந்திருக்கக்கூடும். இதை உணர்ந்தவராகத்தான் பவுல், தான் ஏற்படுத்திய திருஅவையில் இருந்தவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார்.

அப்பொல்லோவை ஊக்கப்டுத்திய பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும்

இன்றைய முதல் வாசகத்தின் முதல் பகுதி, பவுல் தான் ஏற்படுத்திய திருஅவையில் இருந்தவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தியதைப் பற்றி சொல்கின்றது என்றால், இரண்டாவது பகுதி, பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் எபேசு நகரைச் சார்ந்த அப்பொல்லோவை நம்பிக்கையில் உறுதிப்படுத்தியை எடுத்துச் சொல்கின்றது.

இந்த அப்பொல்லா சொல்வன்மை மிக்கவராகவும்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவராகவும்; ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவராகவும் இருந்தார்; ஆனால், அவர் யோவானின் திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அதனால் பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்து கடவுளின் நெறியைத் திட்டவட்டமாய் அவருக்கு அறிவிக்கின்றார்கள். மட்டுமல்லாமல், அப்பொல்லோ அக்காயாவிற்குப் போக விரும்பியபொழுது, பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அங்கிருந்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அப்பொல்லாவை ஊக்கப்படுத்தி, ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். இவ்வாறு பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும், கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அப்போல்லாவை ஊக்கப்படுத்துபவர்களாவும் உற்சாகப்படுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.

பவுலும் பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் திருஅவையில் இருந்தவர்களை உற்சாகப்படுத்தியது, நமக்கொரு முக்கியமானதோர் அழைப்பினைத் தருகின்றது. அது என்னவெனில், ஒருவர் மற்றவரை உற்சாகப்படுத்தவேண்டும் என்பதுதான். உரோமானியக் கவியான ஓவித் (BC 43- AD 18) இவ்வாறு கூறுவார்: "பந்தயத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை அதன் உரிமையாளர் உற்சாகப்படுத்தினால், அது இன்னும் வேகமாக ஓடித் தன் இலக்கை வெகு விரைவாக அடையும்."

ஆம், உற்சாகமான வார்த்தைகளுக்கு எப்பொழுதும் வலிமை உண்டு. ஆகவே, நாம் பவுலும் பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் எப்படித் திருஅவையில் இருந்தவர்களை ஊக்க மூட்டினார்களோ, அப்படி நாம் நம்மோடு இருப்பவர்களை ஊக்கமூட்டி, அவர்களை நம்பிக்கையில் மேலும் வளர்த்தெடுப்போம்.

சிந்தனை

"தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்" (எசா 35:3) என்று கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை உரைப்பார். நாம் தளர்ந்து போன கைகளையும் கால்களையும் மட்டுமல்ல, தளர்ந்து போன உள்ளங்களையும் உறுதிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 16: 23b- 28

இயேசுவின் பெயரால் தந்தையிடம் கேட்போம்

நிகழ்வு

Lord of the Rings (2001) என்ற ஆங்கிலத் திரைப்படம் வெளிவந்து, சக்கைப்போடு போட்டு, ஓடிக்கொண்டிருந்த நேரம், அந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக, அமெரிக்காவைச் சார்ந்த டேவிட் என்ற பதின்வயதுப் பையன் ஒருவன் தன் தந்தையோடு அந்தத் திரைப்பாடம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கிற்குச் சென்றான்.

படம் தொடங்கி, விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், டேவிட் என்ற அந்தப் பையனின் தந்தை, "டேவிட் எழுந்திடு! டேவிட் எழுந்திடு" என்று உரக்கக் கத்தினார். காரணம், டேவிட் என்ற அந்தப் பையன் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து, பேச்சுக் மூச்சற்றுக் கிடந்தான்.

டேவிட்டின் தந்தை எழுந்திடு, எழுந்திடு என்று உரக்கக் கத்தியதையும் அவன் பேச்சு மூச்சற்றுக் கிடப்பதையும் பார்த்துவிட்டுத் திரையரங்கில் இருந்தவர்கள், என்ன நடக்கின்றது என்று பதறியடித்துக்கொண்டு அவர்களைச் சூழ்ந்துகொண்டார்கள். ஒவ்வொருவரும் டேவிட் தந்தையிடம் ஒவ்வொன்றைச் சொல்லிக்கொண்டிருக்க, அங்கிருந்த நோம் (Norm) என்ற இறைநம்பிக்கையாளர், டேவிட்டின் நெஞ்சுப்பகுதியில் தன் கையை வைத்து, "டேவிட்! இயேசுவின் பெயரால் மூச்சுவிடு" என்று உரக்கச் சொன்னார். அவர் இவ்வாறு சொன்ன மறுநொடி, பேச்சு மூச்சற்றவனாய்க் கிடந்த டேவிட், எழுந்து உட்காரத் தொடங்கினான். இதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த எல்லாரும் வியந்துபோனார்கள்.

ஆம், இயேசுவின் திருப்பெயர் சாதாரண ஒரு பெயர் அல்ல; வல்லமையுள்ள ஒரு திருப்பெயர். அப்படிப்பட்ட பெயரை நம்பிக்கையோடு நாம் சொல்லி மன்றாடினோம் எனில், நம்முடைய மன்றாட்டு கேட்கப்படும் என்பதை இந்த நிகழ்வு மிக அருமையாக எடுத்துச் சொல்கின்றது. நற்செய்தியில் இயேசு, "நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்" என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கும் வல்லமை

இயேசு தன்னுடைய சீடர்களிடம் தொடர்ந்து பேசும்பொழுது, "நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை அவர் உங்களுக்குத் தருவார்" என்கின்றார். இயேசுவின் பெயரைச் சொல்லி மன்றாடுவதால், தந்தை எப்படிப் பதில் தருகின்றார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கும் வல்லமையைக் குறித்துத் தெரிந்துகொள்வோம்.

திருத்தூதர் பணிகள் நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம்: "நாம் மீட்பு பெறுமாறு வானத்தின் கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை" (திப 4: 12). புனித பவுல், "இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2: 10) என்கின்றார். அப்படியெனில், நாம் மீட்பு பெறுவதற்குக் காரணமாகவும் எல்லாரும் மண்டிடும் திருப்பெயரான இயேசுவின் திருப்பெயரின் வல்லமையை உணர்ந்து, அப்பெயரால் தந்தையிடம் வேண்டுவது மிகவும் இன்றியமையாத இருக்கின்றது.

இயேசுவின் பெயரால் கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள்

இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கும் வல்லமையை உணர்ந்தவர்களாய், அவருடைய பெயரால் தந்தையிடம் கேட்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி, பேதுரு கால் ஊனமுற்றவரை நலப்படுத்தியதைப் பற்றித் திருத்தூதர் பணிகள் நூல் மூன்றாம் அதிகாரம் மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது.

இங்கு நமக்கு ஒரு கேள்வி எழலாம். அது என்னவெனில், இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி நாம் தந்தைக் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் தந்திடுவா...? என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்கான பதிலை, யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் மிக அழகாக எடுத்துச் சொல்கின்றார் அங்கு யோவான் சொல்லக்கூடிய பதில், "நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின் அவர் நமக்குச் செவிசாய்க்கின்றார்" (1 யோவா 5: 14) என்கின்றார் என்பதாகும். அவ்வாறெனில், நாம் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடுகின்ற எல்லா மன்றாட்டுகளும் இறைவனால் கேட்கப்படுவதில்லை; அவருடைய திருவுளத்திற்கு ஏற்ப எது அமைந்திருக்கின்றதோ, அதுவே கேட்கப்படுகின்றது என்பது உறுதியாகின்றது.

அடுத்ததாக, நற்செய்தியில் இயேசு சொல்லும் மிக முக்கியமான ஒரு செய்தி, நாம் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி தந்தைக் கடவுளின் மன்றாடி, அதைப் பெற்றுக்கொள்கின்றபொழுது, நம்முடைய மகிழ்ச்சி நிறைவடையும் என்பதாகும். ஆகையால், நாம் நம்முடைய மகிழ்ச்சி நிறைவடைவதற்கு, தந்தையிடம் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாட முயற்சி செய்யவேண்டும். இத்தகையதொரு செயலை நாம் நம்முடைய வாழ்வில் செய்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்" (எசா 12: 4) என்பார் இறைவாக்கினர் எசாயா. ஆகையால், நாம் வல்லமையுள்ள இயேசுவின் திருப்பெயரை இறைவனிடம் நம்பிக்கையோடு சொல்லி மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!