Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       21  மே 2020  

பாஸ்கா 6ஆம் வாரம் - வியாழன்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 கொரிந்து நகரில் பவுல் வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக்கூடத்தில் பேசினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 1-8

அந்நாள்களில்

பவுல் ஏதென்சை விட்டு கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரையும் அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு அவர்களிடம் சென்றார். அவர்கள், "யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்" என்ற கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு இணங்கி இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள். கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில் யூதரிடமும் கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார்.

சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்; "இயேசுவே மெசியா" என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார். அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தபோது அவர் தமது மேலுடையிலிருந்த தூசியை உதறி, "உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்" என்று கூறினார்;

அவ்விடத்தை விட்டுவிட்டுக் கடவுளை வழிபடும் தீத்துயுஸ்து என்னும் பெயருடைய ஒருவரின் வீட்டுக்குப் போனார். அவரது வீடு தொழுகைக்கூடத்தை அடுத்து இருந்தது. தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறியவற்றைக் கேட்டு நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 98: 1. 2-3ab. 3cd-4 (பல்லவி: 2b) Mp3
=================================================================================
பல்லவி: பிற இனத்தார் முன், ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார். அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3cd
உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
(யோவா 14: 18, 16: 22b)

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்; உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 16-20


அக்காலத்தில்

இயேசு தம் சீடரிடம்: "இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்" என்றார். அப்போது அவருடைய சீடருள் சிலர், " "இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்" என்றும் "நான் தந்தையிடம் செல்கிறேன்" என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். "இந்தச் "சிறிது காலம்" என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே" என்றும் பேசிக்கொண்டனர்.

அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்புவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: " "இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்" என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 18: 1-8

வாழ்வாலும் வார்த்தையாலும் இறைவார்த்தையை அறிவிப்போம்

நிகழ்வு

அமெரிக்காவில் இருந்த பயணிகள் தங்கும் விடுதி அது. அந்த விடுதிக்கு இரவு நேரத்தில், மிகவும் நேர்த்தியாக உடையணிந்திருந்த மனிதர் ஒருவர் வந்தார். அவர் வரவேற்பறையில் இருந்த பணிப்பெண்ணிடம், "இன்று இரவு மட்டும் தங்குவதற்கு ஓர் அறை இருக்குமா?" என்று கேட்டார். பணிப்பெண்ணோ, "மன்னிக்கவும் ஐயா! இன்றைக்கு இந்த விடுதியில் உள்ள எல்லா அறைகளிலும் ஆள்கள் இருக்கின்றார்கள்" என்றார்.

இப்படி இருவருக்கும் இடையில் உரையாடல் நடந்துகொண்டிருக்கும்பொழுது, தற்செயலாக ஒருவர் அந்தப் பக்கமாய் வந்தார். அவர் அதே விடுதியில் தங்கி இருந்தவர். அவர் புதிதாக வந்திருந்தவரிடம், "நீங்கள் விரும்பினால், என்னுடைய அறையில் வந்து தங்கிக் கொள்ளலாம்" என்றார். புதியவரும் அதற்குச் சரியென்று சொல்லி, அந்த மனிதருடைய அறைக்குச் சென்று தங்கினார்.

புதியவர் மிகவும் களைப்பாக இருந்ததால், ஏற்கெனவே அந்த அறையில் இருந்தவரிடம் எதுவும் பேசாமல் அப்படியே தூங்கிவிட்டார்; ஆனால், ஏற்கெனவே, அந்த அறையில் இருந்தவர், திருவிவிலியம் வாசித்து, இறைவனிடம் வேண்டிவிட்டு அதன்பிறகு தூங்கச் சென்றார். அடுத்த நாளையிலும் அந்த மனிதர் திருவிவிலியம் வாசித்துத் தியானித்துவிட்டு அன்றைய நாளைத் தொடங்கினார். இது புதிதாக அந்த அறையில் வந்து தங்கிய மனிதருக்கு வியப்பைத் தந்தது.

உடனே அந்தப் புதியவர், "இரவில் நான் தங்குவதற்கு உங்களுடைய அறையை என்னோடு பகிர்ந்துகொண்டீர்கள். மட்டுமல்லாமல், நேற்று இரவும் சரி, இப்பொழுதும் சரி, நீங்கள் திருவிவிலியம் வாசித்து, இறைவனிடம் வேண்டுகின்றீர்கள். உண்மையில் நீங்கள் பின்பற்றும் அந்த சமயம்தான் உங்களுடைய வாழ்க்கையில் இப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகின்றேன். உங்களுடைய இந்த எடுத்துக்காட்டான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, நானும் நீங்கள் பின்பற்றும் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றவேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது" என்றார்.

இதைக் கேட்டு அந்த மனிதர் கிறிஸ்தவர் மிகவும் மகிழ்ந்தார். பின்னர் அந்தப் புதியவர் தன்னைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட ஓர் அட்டையை எடுத்து அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தபொழுது, அதில், அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுடைய கட்சியின் மாநிலச் செயலர் "வில்லியம் ஜென்னிங்ஸ் பிரையன்" என்று பொறிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு, அந்த மனிதர் இன்னும் மகிழ்ச்சியடைந்தார்.

நம்முடைய வார்த்தை மட்டுமல்ல, நம்முடைய வாழ்வே ஒரு நற்செய்திப் பணி. ஆகையால், நம்முடைய வாழ்வைக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப அமைத்துக் கொண்டால், அதைப் பார்த்துவிட்டுப் பலரும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வார்கள். என்பது உறுதி. முதல் வாசகத்தில் பவுல், கொரிந்து நகரில் தன்னுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் ஆண்டவருக்குச் சான்று பகர்ந்தது, பலரையும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கொரிந்தில் வாழ்வாலும் வார்த்தையாலும் சான்று பகர்ந்த பவுல்

பவுல், ஏதென்ஸ் நகரில் கடவுளின் வார்த்தையை அறிவித்துவிட்டு, கொரிந்து நகருக்கு வருகின்றார். இந்தக் கொரிந்து நகர் பாவத்தில் மூழ்கிப்போயிருந்த நகர். அப்படிப்பட்ட நகரில் பவுல், அக்கிலா மற்றும் பிரிஸ்கில்லா என்ற தம்பதியரோடு சேர்ந்து கூடாரத் தொழிலைச் செய்துகொண்டு, யூதரிடமும் கிரேக்கரிடமும் கடவுளின் வார்த்தையை அறிவித்து வருகின்றார். இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி, பவுல் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவித்ததோடு மட்டுமல்லாமல், கூடாரத் தொழிலைச் செய்துவந்ததுதான்.

இது குறித்துப் பவுல் குறிப்பிடும்பொழுது, "...உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்" (2 தெச 3: 7-8) என்பார். ஆம், பவுல் மக்களிடம் கடவுளின் வார்த்தையை அறிவித்தபொழுது, வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்வாலும் அறிவித்தார். அதனால்தான் பலரும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்கள்.

பவுலின் சாட்சியத்தால் பலரும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளுதல்

பவுல், தன்னுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் கடவுளின் வார்த்தையை மிகவும் ஆர்வத்தோடு அறிவித்தத்தைப் பார்த்துவிட்டு, யூதரும் கிரேக்கரும் ஆண்டவர் இயேசுவின் நம்பிக்கை கொண்டார்கள் என்பது, நாமும் நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து வாழவேண்டும் என்ற மேலான சிந்தனையை நமக்கு வழங்குகின்றது. பவுல் கடவுளின் வார்த்தையை யூதர்களுக்கு அறிவித்தபொழுது, ஒருசிலர் அவரை எதிர்த்தார்கள். அவருக்கு எதிர்ப்புகள் வந்ததுபோன்று நமக்கும் வரலாம். ஆனாலும் நாம் எதிர்ப்புகளைக் கடந்து, கடவுளின் வார்த்தையை அறிவிக்கவே அழைக்கப்படுகின்றோம்.

ஆதலால், பவுலைப் போன்று நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து, பலரையும் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளச் செய்வோம்.

சிந்தனை

"இவையனைத்தையும் கடைபிடித்துக் கற்பிக்கின்றவரோ விண்ணரசில் பெரியவர்" (மத் 5:19) என்பார் இயேசு. ஆகையால், நாம் புனித பவுலைப் போன்று பவுலின் வார்த்தையைக் கடைப்பிடித்துப் கற்பித்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 16: 16-20

"துயரம் மகிழ்ச்சியாக மாறும்"

நிகழ்வு


ஆற்றங்கரையோரமாக இருந்த ஆலமரத்தடியில் துறவி ஒருவர் இருந்தார். அவருடைய போதனை பலரையும் கவர்ந்திழுப்பதாக இருந்தது. அவருடைய போதனையால் தொடப்பட்ட அவ்வூரில் இருந்த ஒரு செல்வந்தரின் மகன் அவருடைய சீடராகலாம் என்று முடிவுசெய்து, எல்லாவற்றையும் துறந்துவிட்டு, அவருடைய சீடரானான்.

துறவியின் சீடராகச் சேர்ந்த பிறகு அந்த இளைஞன் மிகவும் பணிவோடு துறவிக்கு ஒத்தாசை புரிவது; அவருக்கு உணவு வாங்கித் தருவது; அவர் களைப்புற்று இருக்கின்ற நேரத்தில், மக்களுக்குப் பதில் போதிப்பது என்று பற்பல பணிகளைச் செய்து வந்தான். இதற்கு நடுவில் அந்த இளைஞனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. தொடக்கத்தில் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அவன், அது தீராதவலியான பின்பு, அது நீங்கவேண்டும் என்று அவன் இறைவனிடம் தொடர்ந்து மன்றாடிவந்தான். அப்படியிருந்தும் இறைவன் அவனுடைய தீராத வயிற்றுவலியை அவனிடமிருந்து நீக்கவில்லை. இதனால் அவனுக்கு இறைவனுக்குச் சிறிது வருத்தமும்கூட.

இப்படி இருக்கையில் ஒருநாள் அவன் தன்னுடைய குருவிற்கும் தனக்கும் சேர்த்து உணவு வாங்குவதற்காக ஊருக்குள் சென்றான். அவன் ஊருக்குள் சென்றபொழுது சிறுமி ஒருத்தி தன்னுடைய தோழிகளோடு மிகவும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தாள். இக்காட்சிக் கண்ட அந்த இளைஞனின் உள்ளத்தில் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சிறிதுநேரத்திலேயே அவன் கண்ட காட்சி அவனை வியப்படைய வைத்தது. ஆம், உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியின் ஒரு கால் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

உடனே அந்த இளைஞன் சிந்திக்கத் தொடங்கினான்: "இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சிறுமியே இவ்வளவு உற்சாக இருக்கும்பொழுது, வயிற்றுவலிக்காக இப்படி வருத்ததோடு இருப்பதா...? கூடாது" என்று முடிவுசெய்தவனாய், தனக்கு வந்திருக்கும் வயிற்றுவலியைப் பெரிதாக நினைக்காமல், தனக்குக் கை, கால் நன்றாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்தான்.

இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன், அதாவது சீடன் தனக்கு இருந்த வயிற்றுவலியை மட்டும் நினைத்துக் கொண்டிருந்தபொழுது, துக்கத்தோடும் வருத்தத்தோடும்தான் இருந்தான். எப்பொழுது அவன் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பார்த்துவிட்டு, தனக்கு கை, கல் நன்றாக இருக்கின்றன என்று நினைத்தானோ அப்பொழுது மகிழ்ச்சியடைந்தான். நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம் "உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்" என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை பிரிந்திருக்கும் அந்தச் சிறிதுகாலம்தான் துயரம்

நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "இன்னும் சிறிதுகாலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிதுகாலத்தில் என்னைக் காண்பீர்கள்" என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அவற்றின் பொருள் என்ன என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்கின்றார்கள்.

இயேசு குறிப்பிடுகின்ற "சிறிதுகாலம்" என்பதை இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம். அவருடைய இறப்புக்கும் உயிர்ப்பும் இடையே உள்ள காலம் சிறிதுகாலம் என்று ஒருவிதத்திலும், அவருடைய உயிர்ப்புக்கும் இரண்டாம் இரண்டாம் வருகைக்கும் இடையே உள்ள காலம் சிறிதுகாலம் என்று இன்னொரு விதத்திலும் எடுத்துக்கொள்ளலாம். எப்படி எடுத்துக்கொண்டாலும், இயேசு கூறுகின்ற இந்தச் "சிறிதுகாலத்தில்" எதிரிகளிடமிருந்தும் பகைவர்களிடமிருந்தும் அவருடைய சீடர்கள் நிறைய எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டி வரும். அதனால் அவர்கள் அழுது, புலம்பக்கூடிய சூழ்நிலைகூட வரும். அதைதான் இயேசு, "நீங்கள் அழுவீர்கள்; புலம்புவீர்கள்; அப்பொழுது உலகம் மகிழும்" என்கின்றார்.

இயேசுவை மீண்டும் காணும்பொழுது மகிழ்ச்சி உண்டாகும்

புயலுக்குப் பின்னே அமைதி என்பது போல், அழுகைகையும் புலம்பலுக்கும் பின்னால், மகிழ்ச்சி பிறக்கும் என்கின்றார் இயேசு. ஆம், சீடர்கள் எதிரிகளிடமிருந்தும் தங்களை வெறுப்பவர்களிடமிருந்தும் பல்வேறு பிரச்சனைகளையும் இடர்களையும் சந்தித்தாலும், அவையெல்லாம் நிரந்தரமல்ல; மாறாக, அவையெல்லாம் சீடர்கள் தன்னைக் காணுகின்றபொழுது மகிழ்ச்சியாக மாறிவிடும் என்கின்றார் இயேசு. இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகள், "இதுவும் கடந்து போய்விடும்" என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுபவையாக இருக்கின்றன. சீடர்கள் இயேசுவைப் பிரிந்திருக்கும் காலத்தில் துன்பங்களைச் சந்திக்கலாம்; ஆனால், அந்தத் துன்பங்கள் எல்லாம் அவர்கள் இயேசுவைக் காணுகின்றபொழுது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

நம்முடைய வாழ்விலும் நாம் சந்திக்கின்ற துக்கம், துயரம், தோல்வி அனைத்தும் நிரந்தரம் கிடையாது; அவையெல்லாம் மகிழ்ச்சியாக மாறும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அதற்கு நாம் ஆண்டவரில் முழுமையான நம்பிக்கை வைத்து, இறுதிவரை மனவுறுதியோடு இருக்கவேண்டும் (மத் 24: 13)

நாம் ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கையில் இறுதிவரை மன உறுதியோடு இருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்" (பிலி 4: 4) என்பார் பவுல். ஆகையால், நாம் நம்முடைய வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் ஆண்டவரோடு இணைந்திருப்போம். அதன்வழியாக மகிழ்வான வாழ்வையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!