|
|
20 மே 2020 |
|
பாஸ்கா 6ஆம் வாரம்
- புதன்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே
நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17: 15, 22- 18: 1
அந்நாள்களில்
பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு வரை அழைத்துச் சென்றார்கள்.
சீலாவும் திமொத்தேயுவும் விரைவில் வந்து சேரவேண்டும் என்னும்
கட்டளையைப் பவுலிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள் திரும்பிச்
சென்றார்கள்.
அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது:
"ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை
நான் காண்கிறேன். நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப்
பார்த்துக்கொண்டு வந்தபோது "அறியாத தெய்வத்துக்கு" என்று எழுதப்பட்டிருந்த
பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும்
அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர்
குடியிருப்பதில்லை. அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும்
கொடுப்பவர் அவரே. எனவே மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும்
அவருக்குத் தேவையில்லை. ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும்
படைத்து அவர்களை மண்ணுலகின்மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக்
குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக்
கொடுத்தார். கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச்
செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே
இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே
உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம்,
இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, "நாம் அவருடைய
பிள்ளைகளே."
நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனிதக் கற்பனையாலும்
சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப்போலக்
கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது. ஏனெனில் மக்கள்
அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை.
ஆனால் இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று
அவர் கட்டளையிடுகிறார். ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது
தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான
தீர்ப்பு அளிப்பார். இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக
இந்நம்பிக்கை உறுதியானது என எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்."
"இறந்தவர் உயிர்த்தெழுதல்" என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக்
கிண்டல் செய்தனர். மற்றவர்கள், "இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து
பேசும்; கேட்போம்" என்றார்கள். அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து
வெளியே சென்றார். சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன்
சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான
தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர்.
இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப்
போய்ச் சேர்ந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
=================================================================================
திபா 148: 1-2. 11-12. 13. 14 (பல்லவி: )
பல்லவி: ஆண்டவரே, விண்ணும் மண்ணும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
அல்லது: அல்லேலூயா.
1
விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில்
அவரைப் போற்றுங்கள்.
2
அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய
படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். - பல்லவி
11
உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,
12
இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும்
ஆண்டவரைப் போற்றுங்கள். - பல்லவி
13
அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே
உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது. - பல்லவி
14
அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து
அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல்
மக்களும் அவரைப் போற்றுவார்கள். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 14: 16)
அல்லேலூயா, அல்லேலூயா! உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு
துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை
அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது முழு உண்மையை
நோக்கி உங்களை வழிநடத்துவார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நான் உங்களிடம் சொல்ல
வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால்
தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது
அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும்
பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு
அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார்.
இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும்
என்னுடையவையே. எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு
அறிவிப்பார்" என்றேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 17: 15, 22-18:1
உலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் இயேசு
நிகழ்வு
ஒருமுறை ஒரு மருத்துவரும் ஒரு பொறியாளரும் ஓர் அரசியல்வாதியும்
சந்தித்துக் கொண்டார்கள். மூவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால்
நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இடையில் மூவருடைய பேச்சும், இந்த உலகத்தில் யார் முதலில்
தோன்றியிருக்கவேண்டும் என்பதற்குத் தாவியது. "மருத்துவர்தான்
முதலில் தோன்றியிருக்கவேண்டும். ஏனெனில், மருத்துவர் மட்டும்
இல்லையென்றால், எல்லாரும் நோய்வாய்ப்பட்டு, செத்து
மடிந்திருப்பார்கள்" என்றார் மருத்துவர். அவரைத் தொடர்ந்து
பொறியாளர், "இந்த உலகத்தில் முதலில் பொறியாளர்தான்
தோன்றியிருக்கவேண்டும். ஏனென்றால், இந்த உலகம் தொடக்கத்தில்
உருவமற்று வெறுமையாய் இருந்தது. அப்படியிருந்த இந்த
உலகத்திற்கு ஒருவர் உருவம் கொடுத்தார் எனில், அவர்
பொறியாளராகத்தான் இருக்கவேண்டும்" என்றார்.
அவர் பேசி முடித்ததும் அரசியல்வாதி, பொறியாளரைப் பார்த்துச்
சொன்னார்: "தொடக்கத்தில் இந்த உலகம் உருவமற்று வெறுமையாய்
இருந்தது என்று சொன்னாய். அப்படி இந்த உலகம் வெறுமையாய்
இருந்ததற்கு யார் காரணம், நாங்களாகத்தான் இருக்கும்.
ஏனென்றால், நாங்கள் இந்த உலகத்தில் இருந்த எல்லாவற்றையும்
அபகரித்துக் கொண்டு வெறுமையாய் விட்டோம்."
அரசியல்வாதி இவ்வாறு சொன்னதைக் கேட்டு, மற்ற இருவரும்
அங்கிருந்து தெறித்து ஓடினர்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், இந்த
உலகத்தில் ஒரு மருத்துவரோ, பொறியாளரோ, அரசியல்வாதியோ
இருப்பதற்கு முன்னால், ஆண்டவர் இருந்தார். ஏனெனில், அவரே
தொடக்கமும் முடிவும் இல்லாதவர்; அவரே இந்த உலகையும் இதில் உள்ள
யாவையும் படைத்தவர். முதல் வாசகத்தில் பவுல் ஆண்டவர் இயேசுவைப்
பற்றி அரயோபாகு மன்றத்தில் உள்ளவர்களிடம் பேசுகின்றபொழுது,
இயேசுவே, இந்த உலகையும் இதில் உள்ள யாவையும் படைத்தவர் என்று
பேசுகின்றார். பவுல் பேசிய இப்பேச்சு அங்கிருந்தவர்களிடம்
எத்தகைய அதிர்வலையை ஏற்படுத்துகிறது என்பதை நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
அரயோபாகு மன்றத்தில் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்ந்த பவுல்
பவுல், ஏதென்ஸ் நகருக்கு வந்து, அங்கிருந்த அரயோபாகு
மண்டபத்தில் பேசத் தொடங்குகின்றார். பவுல் அங்கு என்ன பேசினார்
என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர்,
ஏதென்ஸ் நகர் எப்படிப் பட்டது எனத் தெரிந்துகொள்வது நல்லது.
பிளேட்டோ, சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், எபிகுரஸ், ஜெனோ போன்ற
உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் தோன்றிய நகர்தான் இந்த
ஏதென்ஸ் நகர். இந்த நகரில் பல தெய்வங்களை வழிபடும்
(Politheism) வழக்கமும் இயற்கையைக் கடவுளாக வழிபடும்
(Pantheism) வழக்கமும் இருந்தது. இதைவிடைவும் இந்த நகரில்
இருந்தவர்கள், தங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்ற
எண்ணத்தில் இருந்தவர்கள். இப்படிப்பட்ட மக்கள் கூடி இருந்த
அரயோபாகு மன்றத்தில்தான் பவுல் பேசுகின்றார்.
பவுல் அரயோபாகு மன்றத்தில் இருந்தவர்களிடம் பேசத்
தொடங்கும்பொழுது, அவர்களுடைய தொழுகையிடத்தில், அறியாத
தெய்வத்திற்குப் பலிபீடம் ஒன்று இருப்பதை வைத்துப் பேசத்
தொடங்குகினார். "அறியாத தெய்வம்" என்று நீங்கள் வழிபடுவது வேறு
யாருமல்லர்; ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. அவரே இந்த உலகையும்
இதில் உள்ள யாவையும் படைத்தவர். அப்படிப்பட்டவர் மனிதர் கையால்
கட்டிய திருக்கோயில்களில் குடியிருப்பதில்லை என்கின்றார்.
மேலும் பவுல், இறந்த இயேசுவைக்கடவுள் உயிர்த்தெழச் செய்தார்
என்றும் பேசுகின்றார்.
பவுல், இறந்து உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசுகின்றபொழுது
அங்கிருந்த ஒருசிலர் அவரைக் கிண்டல் செய்கின்றார்கள். வேறு
சிலரோ, இதைப் பற்றி மீண்டும் பேசும்; கேட்போம்.
என்கின்றார்கள். பவுல் அரயோபாகு மன்றத்தில் பேசிய பேச்சு,
அங்கிருந்தவர்களிடம் எத்தகைய அதிர்வலையை ஏற்படுத்தியது என்று
பார்ப்போம்.
பவுல் அறிவித்த நற்செய்தியை கேட்டு மக்கள் இயேசுவில் நம்பிக்கை
கொள்ளுதல்
"விதைத்தவன் உறங்கலாம்; விதைகள் உறங்குவதில்லை" என்ற பொன்மொழி
ஒன்று உண்டு. இந்தப் பொன்மொழிக்கு ஏற்ப, பவுல் ஆண்டவர்
இயேசுவைப் பற்றி எடுத்துரைத்தது, அரயோபாகு மன்றத்தின்
உறுப்பினரான தியோனிசியுஸ், தாமரி, இன்னும் ஒருசிலரையும்
ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்கின்றது.
அப்படியானால், நாம் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை
மக்களிடம் கட்டாயம் அறிவிக்கவேண்டும். அப்படி
அறிவிக்கின்றபொழுது, மக்கள் அதன்வழியாக இயேசுவின் மீது
நம்பிக்கை கொள்வார்கள் என்பது உறுதி.
சிந்தனை
"நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல்" (எரே 1:17)
என்று ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவிடம் கூறுவார். அன்று
இறைவாக்கினர் எரேமியாவிடம் உரைத்த அதே வாக்கைத்தான் அவர் இன்று
நமக்கும் உரைக்கின்றார். ஆகவே, நாம் கடவுளின் வார்த்தையை
மக்களுக்கு அறிவிப்போம்; அறிவிப்பதோடு அவர்களை ஆண்டவரில்
நம்பிக்கை கொள்ளச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 16: 12-15
"உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்"
நிகழ்வு
ஒரு நகரில் இறைநம்பிக்கை இல்லாத பெரியவர் ஒருவர் இருந்தார்.
அவரிடம் பலரும் கிறிஸ்துவைக் குறித்து அறிவித்தார்கள். யாருடைய
போதனையாலும் அவர் ஈர்க்கப்படவில்லை; மனமும் மாறவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நகரில் இருந்த சாதாரண ஒரு
கிறிஸ்தவர், அந்தப் பெரியவரிடம் கிறிஸ்துவைக் குறித்து
அறிவித்தார். அந்தக் கிறிஸ்தவர் பெரியவரிடம் கிறிஸ்துவைக்
குறித்து அறிவித்த ஒருசில மணிநேரங்களுக்குள், அவர் கிறிஸ்துவை
ஏற்றுக்கொண்டார்.
இச்செய்தியைக் கேள்விப்பட்டு, எல்லாரும் வியப்படைத்தார்கள்.
ஒருசிலர் அந்தப் பெரியவரிடம், "அது எப்படி திருவிவிலியத்தைக்
கற்றுத் தேர்ந்தவர்களெல்லாம் கிறிஸ்துவைக் குறித்து உங்களிடம்
அறிவித்தபொழுது மனம்மாறாத நீங்கள், ஒரு சாதாரண கிறிஸ்தவர்,
மற்றவர்களைப் போன்று மிகுதியாகப் படித்திராதவர் கிறிஸ்துவைக்
குறித்து உங்களிடம் அறிவித்தவுடனே நீங்கள் கிறிஸ்துவை
ஏற்றுக்கொண்டீர்களே...! அது எப்படி?" என்று கேட்டார்கள்.
அதற்கு அந்தப் பெரியவர் மிகவும் பொறுமையாகப் பதில் சொன்னார்:
"எல்லாரும் மூளையிலிருந்தே பேசினார்கள். அதனால் அவர்கள் தங்கள்
தரப்பு நியாங்களை என்னிடம் எடுத்துச்சொல்லி, நான் கிறிஸ்துவை
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு முயற்சி செய்தார்களோ அன்றி,
ஆத்மார்த்தமாகப் பேசவில்லை. ஆனால், கடைசியாக வந்த இந்த மனிதர்
ஆத்மார்த்தமாக, உள்ளத்திலிருந்து பேசினார். மேலும் இவர்
என்னிடம் இயேசுவைப் பற்றி அறிவித்தபொழுது, ஏதோவோர் ஆற்றல்
என்னை ஆட்கொள்வது போன்று நான் உணர்ந்தேன். அதனால்தான் நான்
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன்" என்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற மிகுதியாகப் படித்திராத சாதாரண
கிறிஸ்தவர், கிறிஸ்துவைப் பற்றி அறிவித்ததால், கிறிஸ்துவை
ஏற்றுக்கொண்ட பெரியவர் சொல்லக்கூடிய வார்த்தைகள் நமக்கொரு
முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றன. அது என்னவெனில்,
மிகுதியாகப் படித்திராத கிறிஸ்தவர் அவரிடத்தில் பேசியபொழுது,
ஏதாவோர் ஆற்றல் அவரை ஆட்கொண்டதாகச் சொன்னார் அல்லவா...! அந்த
ஆற்றல்தான் தூய ஆவியார். ஆம், தூய ஆவியார்தான் அவருக்கு
உண்மையை வெளிப்படுத்தி, அவரைக் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளச்
செய்தார்.
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம் தூய ஆவியாரைக்
குறித்துப் பேசும்பொழுது, "உண்மையை வெளிப்படுத்தும் தூய
ஆவியார்" என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின்
பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
முழு உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியார்
இயேசு தன்னுடைய சீடர்களிடம், துணையாளராம் தூய ஆவியாரைக்
குறித்துத் தொடர்ந்து பேசி வருகின்றார். இதற்கு முந்தைய
பகுதியில் (நேற்றைய நற்செய்தியில்) இயேசு தூய ஆவியாரைக்
குறித்துப் பேசும்பொழுது, உலகினர் நடுவில் அவர் எத்தகைய பணிகளை
ஆற்றுவார் என்பதைக் குறித்துப் பேசியிருப்பார். இன்றைய
நற்செய்தியிலோ, சீடர்கள் நடுவில் அவர் எத்தகைய பணிகளை
ஆற்றுவார் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். இன்றைய
நற்செய்தியில் இயேசு தூய ஆவியாரைக் குறித்துப்
பேசுகின்றபொழுது, "உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்
வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்திச்
செல்வார்" என்கின்றார்.
முழு உண்மை எது எனத் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசு தன்னைக்
குறித்துக் குறிப்பிடும்பொழுது, "வழியும் உண்மையும் வாழ்வும்
நானே" (யோவா 14: 6) என்பார். அப்படியானால், தூய ஆவியார் முழு
உண்மையாம் இயேசுவை நோக்கி நம்மை வழிநடத்துவர என்றொரு பொருளில்
எடுத்துக் கொள்ளலாம். இதைவிடவும், இயேசு ஏன் பாடுபட்டு,
சிலுவையில் அறையப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றாம்நாள்
உயிர்த்தெழவேண்டும் என்கின்ற உண்மை சீடர்களுக்குப் புரியாத
புதிராக இருந்தது. இந்த உண்மையைத் தூய ஆவியார் வரும்பொழுது
அவர்களுக்கு வெளிப்படுத்துவார் என்கின்றார்.
வரப்போகிறவற்றை முன்னறிவிப்பார்
இயேசு தூய ஆவியாரைக் குறித்துச் சொல்லக்கூடிய இரண்டாவது
செய்தி, வரப்போகிறவற்றை அறிவிப்பார் என்பதாகும். ஆமாம், தூய
ஆவியார் எதிர்காலத்தில் நிகழப் போகிறவற்றைச் சீடர்களுக்கு
அறிவித்து, அவர்களை அதற்கேற்றாற்போல் தயாரிப்பார்; இவ்வாறு
அவர் தன்னை மாட்சிப்படுத்துவார் என்கின்றார் இயேசு.
ஆகையால், இயேசுவின் சீடர்களாகிய நம்மை முழு உண்மையை நோக்கி
வழிநடத்தி, வரப்போகிறவற்றை அறிவிப்பவராக இருக்கும் தூய
ஆவியாரால் அருள்பொழிவு பெற்றவர்களாய் (1யோவா 2:20) நாம்
அவருடைய வழிகாட்டுதலின்படி நடந்து இறைவனுக்கு உகந்தவர்களாய்
வாழ்வோம்.
சிந்தனை
"ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு" (1 கொரி
3:17) என்பார் புனித பவுல். ஆகையால், நமக்கு உண்மையை
வெளிப்படுத்தி விடுதலை அளிக்கும் தூய ஆவியார் கட்டும் வழியில்
நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|