Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       19  மே 2020  

பாஸ்கா 6ஆம் வாரம் - செவ்வாய்

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 22-34

அந்நாள்களில்

பிலிப்பி நகர் மக்கள் திரண்டெழுந்து, பவுலையும் சீலாவையும் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக் கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக் காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார்.

நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்றக் கைதிகளோ இதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக் கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக் கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, "நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்துகொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்" என்றார்.

சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து, நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். அவர்களை வெளியே அழைத்து வந்து, "பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றார்கள்.

பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 138: 1-2a. 2bc-3. 7c-8 (பல்லவி: 7c) Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2a
உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். - பல்லவி

2bc
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3
நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். - பல்லவி

7c
உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8
நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
(யோவா 16: 7, 13)

அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் போகாவிட்டால், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 5-11

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் "நீர் எங்கே போகிறீர்?" என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள். நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.

அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார். பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காணமாட்டீர்கள். தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 திருத்தூதர் பணிகள் 16: 22-34

இக்கட்டிலும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி வேண்டிய பவுலும் சீலாவும்

நிகழ்வு

பிரபல எழுத்தாளரான நார்மன் வின்சென்ட் பேல் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த பலர், தங்களுடைய தனிப்பட்ட வாழ்விலும் குழும வாழ்விலும் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஒருவர் மற்றவரிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார்கள். வின்சென்ட் பேல் எல்லாரையும் வித்தியாசமாகப் பார்த்தார்.

இதற்கிடையில் அந்தக் கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்த ஜிம் என்ற பேச்சாளர், மக்கள் இப்படித் தங்களுடைய பிரச்சனைகளைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அவர்களிடம், "எல்லாரும் ஒரு வினாடி எழுந்து நின்று, கண்களை மூடி அமைதியாக இருங்கள்" என்றார். உடனே கூட்டத்திற்கு வந்திருந்த எல்லாரும் எழுந்து, அமைதியாக நின்றார்கள். அப்பொழுது ஜிம் என்ற அந்தப் பேச்சாளர், மிகவும் உருக்கமாக கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, அவருக்கு நன்றி செலுத்தத் தொடங்கினார். ஒருவினாடி அவர் இவ்வாறு கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, அவருக்கு நன்றி சொல்லி முடித்ததும், கூட்டத்தினரை அமரச் சொன்னார்.

அதுவரைக்கும் தங்களுடைய பிரச்சனைகளைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த மக்கள் தங்களுடைய உள்ளத்தில் பேரமைதி ஏற்பட்டதை உணர்ந்தார்கள். இந்த மாற்றத்தை கண்கூடாகக் கண்ட வின்சென்ட் பேலுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. கூட்டம் முடிந்ததும் இவர், ஜிம் என்ற அந்தப் பேச்சாளரைச் சந்தித்து, "அது எப்படி மக்கள் தங்களுடைய பிரச்சனைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கையில், நீர் அவர்களுடைய பிரச்சனைகள் நீங்கக் கடவுளிடம் வேண்டாமல், கடவுளைப் போற்றிப் புகழவும் அவருக்கு நன்றி செலுத்தவும் முடிந்தது?" என்று கேட்டார்.

அதற்கு ஜிம் அவரிடம், "கடவுள் நம்முடைய பிரச்சனைகளை அறியாதவர் அல்லர்; அவரிடம் நம்முடைய பிரச்சனைகளைச் சொல்லி வேண்டுவதற்குப் பதில், அவரைப் போற்றிப் புகழ்ந்து, அவருக்கு நன்றி சொன்னால், இன்னும் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அதனால்தான் நான் அப்படிச் செய்தேன்" என்றார்.

ஜிம் என்ற அந்தப் பேச்சாளர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு வின்சென்ட் பேல், கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, அவருக்கு நன்றி சொல்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார்.

நார்மன் வின்சென்ட் பேர்ல் எழுதிய "Positive Living Day by Day" என்ற கட்டுரையில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வு கடவுளைப் போற்றிப் புகழ்வதன் முக்கியத்துவத்தை நமக்கு மிக அருமையாக எடுத்துக் கூறுகின்றது. முதல் வாசகத்தில், பவுலும் சீலாவும் சிறையில் தொழுமரத்தில் கட்டிவைக்கப்பொழுது, அவர்கள் இருவரும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி, வேண்டத் தொடங்குகின்றார்கள். அது அங்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகின்றது. பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா படியது, ஏற்படுத்திய மாற்றம் எத்தகையது என சிந்தித்துப் பார்ப்போம்.

தொழுமரத்தில் கட்டப்பட்டபொழுதும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடுதல்

குறிசொல்லும் ஆவியைத் தன்னுள்ளே கொண்டிருந்த அடிமைப்பெண்ணிடமிருந்து பவுலும் சீலாவும், அந்த ஆவியை விரட்டியபின்பு, அந்தப் பெண்ணை அடிமையாக வைத்திருந்தவர்கள் இவர்கள் இருவரையும் பிடித்துத் துன்புறுத்திச் சிறையில் அடைக்கின்றார்கள். சிறைக்காவலரோ, இவர்கள் இருவரையும் தொழுமரத்தில் கட்டி வைக்கின்றார். இப்படி இருக்கையில் பவுலும் சீலாவும் தாங்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்காக வருந்தவில்லை; மாறாக, கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி, அவரிடம் வேண்டத் தொடங்குகின்றார்கள். இதனால் அங்கு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரிய மாற்றம் ஏற்படுகின்றது.

சிறையில் அடைக்கப்பட்டபொழுதும் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா படி, அவரிடம் வேண்டியது, "இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்; எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள்" (1 தெச 5: 17,18) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

சிறைக்காவலரும் அவருடைய குடும்பமும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுதல்

சிறையில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, அங்கிருந்தவர்களின் விலங்குகள் கழன்று விழுந்தையும் சிறைக் கதவுகள் திறந்திருப்பதையும் கண்ட சிறைக்காவலர், எல்லாரும் தப்பித்துப் ஓடியிருப்பார்கள் எனத் தவறாக நினைத்துக் கொண்டு, தன்னுடைய வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ளப் பார்க்கின்றார். அவர் இவ்வாறு செய்யக் காரணம், தன்னுடைய காவலில் இருக்கும் கைதிகள் காணாமல் போய்விட்டால், தனக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பதால்தான் (திப 12:19).

இப்படி இருக்கையில் பவுல், நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கின்றோம் என்று சொல்ல, சிறைக்காவலர், "மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்க, பவுல் அவரிடம், "இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளும்" என்று சொல்ல, அவர் அவ்வாறே செய்கின்றார். மேலும் அவர் மட்டுமல்லாமல், அவருடைய குடும்பமும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்குகின்றது.

இங்குப் பவுல் மற்றும் சீலாவின் சாட்சிய வாழ்வும் சிறைக்காவலரையும் அவருடைய குடும்பத்தாரையும் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. ஆகையால், நம்முடைய வாழ்வையே நாம் மிகச் சிறந்த நற்செய்தியாக்கினோம் எனில், பலரும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்வார்கள் என்பது உறுதி.

எனவே, நாம் நம்முடைய வாழ்வையே மிகச் சிறந்த நற்செய்தியாக்குவோம்.

சிந்தனை

"உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்" (மத் 5: 16) என்பார் இயேசு. ஆகையால், நாம் என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம், இக்கட்டிலும் இறைவனுக்குச் சான்று பவர்வோம். இவற்றின்மூலம் நாம் மற்றவரை ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 16: 5-11

"ஏன் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்?"

நிகழ்வு


அசிசி நகர்ப் புனித பிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது. ஒருநாள் இவர் தன்னுடைய சபைச் சகோதரர் ஒருவரைப் பார்க்க நேர்ந்தது. அவர் மிகவும் கவலை தோய்ந்த முகத்தோடு இருப்பதைப் பார்த்துவிட்டுப் பிரான்சிஸ் அந்தச் சகோதரரிடம், "கடவுளின் அடியவர் இப்படிக் கவலை தோய்ந்த முகத்தோடு இருக்கக்கூடாது; ஒருவேளை கவலை தோய்ந்த முகத்தோடு கடவுளின் அடியவர் ஒருவர் இருந்தால், அவர் கடவுளின் அடியவரே கிடையாது" என்றார். இதற்குப் பின்பு அந்தச் சகோதரர் தன்னுடைய கவலையை மறந்து மகிழ்ச்சி கொள்ளத் தொடங்கினார்.

பிரான்சிசின் சபையில் இருந்த சகோதரர், எப்படிக் கடவுளின் அடியவராக இருந்தும் கவலைகொண்டாரோ, அப்படி இயேசுவின் சீடர்கள், அவர்கள் இயேசுவின் சீடர்களாக இருந்தாலும், இயேசு விட்டுப் பிரியப்போகிறார் என்று நினைத்துத் துயரத்தில் மூழ்குகின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு அவர்களுக்குச் சொல்லும் பதிலென்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் துயரத்தில் மூழ்கிய சீடர்கள்

இயேசு தன்னுடைய சீடர்களிடம், "இப்பொழுது நான் என்னை அனுப்பியவரிடம் போகிறேன்" என்கிறார். இதைக் கேட்டு அவருடைய சீடர்கள் துயரத்தில் மூழ்கத் தொடங்குகின்றார்கள்.

இயேசு தன்னுடைய சீடர்களிடம் என்னை அனுப்பியவரிடம் போகிறேன் என்று சொன்னது, உண்மையில் அவருடைய சீடர்களைத் துயரத்தில் மூழ்கவைக்கும் செய்தியா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இயேசு தன்னை அனுப்பியவரிடம் செல்வதற்கு முன்பாகப் பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும். இயேசு சிலுவையில் அறையப்பட்டால்தான் இவ்வுலகிற்கு மீட்பளிக்க விரும்பிய தந்தையின் திருவுளம் நிறைவேறும். அப்படியானால், இயேசு தன்னை அனுப்பியவரிடம் போகிறேன் என்று சொன்னதைக் கேட்டு அவருடைய சீடர்கள் மகிழ்ந்திருக்கவேண்டும். அவர்களோ மகிழாமல், துயரத்தில் மூழகியதால்தான், இயேசு அவர்களைப் பார்த்து, "உங்களுள் எவரும், "நீர் எங்கே போகிறீர்?" என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளர்கள்" என்று வியக்கின்றார்.

இயேசு போனால்தான் சீடர்கள் பயனடைய முடியும்

"என்னை அனுப்பியவரிடம் போகிறேன்" என்று இயேசு சொல்ல, அவருடைய சீடர்கள் துயரத்தில் மூழ்கத் தொடங்கியதும், இயேசு அவர்களைத் தேற்றும் விதமாக, "நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார்" என்று கூறுகின்றார்.

ஆம். இயேசு அவரை அனுப்பிய தந்தையிடம் சென்ற பிறகே தூய ஆவியார் சீடர்கள்மீது இறங்கி வருகின்றார். தூய ஆவியார் வந்த பின்னரே, அதுவரைக்கும் யூதர்களுக்கு அஞ்சி, அறைக்குள் தங்களை அடைத்துக்கொண்டு வாழ்ந்த சீடர்கள், துணிவோடு மக்களுக்கு முன்பாகப் பேசத் தொடங்குகின்றார்கள். ஆகையால், இயேசு தன்னுடைய சீடர்களை விட்டுப் பிரிந்த பின்பு வரும் தூய ஆவியாரால் பயனடைவார்கள் மிகுந்த பயனடைவார்கள் என்பது உறுதி.

தூய ஆவியாரின் வருகையால் சீடர்கள் பெறும் பயன்கள்

தான் சீடர்களை விட்டு, தந்தையிடம் சென்ற பின், வரும் தூய ஆவியாரால் சீடர்கள் அடைய இருக்கும் நன்மைகளை, இயேசு இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் எடுத்துக் கூறுகின்றார். "அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துச் சொல்வார்" என்று இயேசு தூய ஆவியாரைக் குறித்துச் சொல்லும் வார்த்தைகள், தூய ஆவியார் வந்து மக்களுக்குச் சரியானதை எடுத்துச் சொல்வார் என்ற உண்மையை விளக்குவதாக இருக்கின்றன.

மக்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை; அவரிடம் நம்பிக்கை கொள்ளவுமில்லை (யோவா 3:18). இதைப் பாவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களை மனமாற்றத்திற்குத் தூய ஆவியார் இட்டுச் செல்வார் என்று சொல்லும் இயேசு, அவர்களுக்கு நீதி எது என்பதையும் அவர் வெளிப்படுத்துவார் என்று சொல்கின்றார். மட்டுமல்லாமல், இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான் என்றும் தூய ஆவியார் எடுத்துச் சொல்வார் என்கின்றார் இயேசு.

இவ்வாறு இயேசு தன்னுடைய சீடர்களிடம், அவர்கள் தன்னுடைய பிரிவை நினைத்துத் துயரத்தில் மூழ்கவேண்டாம் என்றும், தூய ஆவியாரின் வருகையால் அவர்கள் மிகுந்த பயனடைவார்கள் என்றும் கூறுகின்றார். நாம்கூட பல நேரங்களில் இயேசுவின் சீடர்களைப் போன்று இறைவன் நம்மோடு இல்லையே என்று கலக்க முறலாம்; ஆனால், இறைவன் நம்மோடு எப்பொழுதும் இருக்கின்றார் என்பதை உண்மை. ஆகையால், நாம் இறைவனின் துணையை நம்பி அவருடைய வழியில் எப்பொழுதும் நடப்போம்.

சிந்தனை

"அவர்கள் முன் அஞ்சாதே, ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்" (எசா 1:8) என்கிறார் ஆண்டவர். ஆகையால், நாம் இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு நம்முடைய வாழ்க்கையைத் துணிவோடு எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!