|
|
17
மே 2020 |
|
பாஸ்கா
6ஆம் வாரம் -
திங்கள்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 11-15
பவுல், சீலா, திமொத்தேயு, லூக்கா ஆகிய நாங்கள்
துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறு
நாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்; அங்கிருந்து
மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம். அது
உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சில நாள்கள் தங்கியிருந்தோம்.
ஓய்வுநாளன்று நாங்கள் நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரைக்குச்
சென்றோம். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும்
என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம்.
அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக்
கேட்டுக்கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை
விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு
ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். அவரும் அவர் வீட்டாரும்
திருமுழுக்குப் பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், "நான் ஆண்டவரிடம்
நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து
தங்குங்கள்"என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்கவைத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது:
அல்லேலூயா.
1
அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய
அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!
சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! - பல்லவி
3
நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி,
யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
4
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையில்
உள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப்படுத்துவார். - பல்லவி
5
அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில்
சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!
6a
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்;
9b
இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. -
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 15: 26b-27a)
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது
என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்,
என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச்
சான்று பகர்வார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26- 16: 4
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு
அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்
பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில்
நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.
நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம்
சொன்னேன். உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள்.
உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும்
காலமும் வருகிறது. தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான்
இவ்வாறு செய்வார்கள். இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு
இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே
இவற்றை உங்களிடம் கூறினேன்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 16: 11-15
எல்லாருக்கும் நற்செய்தி
நிகழ்வு
ஓவியர் ஒருவர் இருந்தார். கிறிஸ்தவரான இவர், "Around the
throne of God in Heaven Thousands of children stand"என்ற பாடல்
வரிகளை மையப்படுத்தி, தன்னுடைய ஓவியக் கூடத்தில், விண்ணகத்தில்
கடவுளின் அரியணையைச் சுற்றி ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருப்பது
மாதிரியான ஓவியம் ஒன்றை வரைந்தார். அந்த ஓவியத்தை வரைந்து
முடித்ததும் மிகவும் களைப்பாக இருந்ததால், இவர் தன்னுடைய ஓவியக்கூடத்திலேயே
தூங்கிவிட்டார்.
தூங்கும்பொழுது இவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் யாரோ
ஒருவர் இவர் வரைந்து வைத்திருந்த ஓவியத்தைத் திருத்தத் தொடங்கினார்.
அவரைப் பார்ப்பதற்குப் புதியவர் போன்று இருந்தார். உடனே ஓவியர்
அவரிடம், "என்னுடைய ஓவியத்தில் என்ன பிழை இருக்கின்றது என்று
அதைத் திருத்தி வரைந்து கொண்டிருக்கின்றீர்கள்"என்று
கேட்டார். "உன்னுடைய ஓவியத்தில் என்ன பிழை என்றா
கேட்கின்றாய்...? நீ வரைந்திருக்கின்ற ஓவியத்தில் இருக்கின்ற
குழந்தைகள் எல்லாரும் ஒரே நிறத்தில் இருக்கின்றார்கள். விண்ணகத்தில்
ஒரே நிறத்தில் அல்லது ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இருக்கவில்லை!
எல்லா இனத்தைச் சார்ந்தவர்களும் இருக்கின்றார்கள். அப்படியெனில்,
ஒரே நிறத்தில் குழந்தைகளை வரைந்திருப்பது பிழைதானே! அதனால்தான்
நான் ஒருசில குழந்தைகளை வெள்ளையாகவும் இன்னும் ஒருசில குழந்தைகளைக்
கறுப்பாகவும் மற்றும் சில குழந்தைகள் மாநிறத்திலும் வரைந்தேன்"
என்றார்.
புதியவர் இவ்வாறு சொல்லி முடித்ததுதான் தாமதம், ஓவியர் கனவிலிருந்து
சட்டென விழித்தெழுந்து, கனவில் வந்த புதியவர் இயேசுதான் என உணர்ந்து,
அவர் ஓவியத்தில் செய்த திருத்தத்தைச் செய்து, கடவுளின் அரியணையைச்
சுற்றி, எல்லா இனத்தையும் சார்ந்த குழந்தைகளும் இருப்பது
மாதிரியாக ஓவியத்தை உருவாக்கினார்.
இந்த நிகழ்வு நமக்கு ஓர் உண்மையை மிக ஆழமாக உணர்த்துகின்றது,
அது என்னவெனில், விண்ணகத்தில் எல்லாருக்கும் அல்லது எல்லா இனத்தைச்
சார்ந்தவர்களுக்கும் இடமுண்டு. விண்ணகத்தில் எல்லா இனத்தைச்
சார்ந்தவருக்கும் இடமுண்டு எனில், கடவுளின் நற்செய்தி எல்லாருக்கும்
உண்டு என்றுதானே பொருள். ஏனெனில், நாசரேத்தில் அறிவிக்கப்பட்ட
நற்செய்தி, அப்படியே படிப்படியாக விரிந்து, உலகம் முழுக்கப்
பரவியது. இன்றைய முதல் வாசகத்தில் பவுல், பிலிப்பி நகரைச்
சார்ந்த லீதியா என்பவருக்கு இயேசுவின் வார்த்தையை எடுத்துரைத்து,
அவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்கின்றார். பவுல் தன்
உடன்பணியாளர்களோடு செய்த இப்பணி நமக்கு உணர்த்துகின்ற செய்தி
என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைத்திருவுளத்திற்கு பணிந்து மாசிதோனியா நோக்கிச் செல்லும் பவுல்
பவுல், ஆசியாவிற்கும் அதன்பிறகு பித்தானியாவிற்கும் கடவுளின்
வார்த்தையை எடுத்துரைக்க முயன்றபொழுது, இயேசுவின் ஆவியாரால் தடுத்து
நிறுத்தப்பட்டார். பின்னர் மாசிதோனியாவைச் சார்ந்த ஒருவர் ஒரு
காட்சியில், "எங்களுக்கு உதவி செய்யும்"என்று சொன்னதை இறைத்திருவுளமாக
ஏற்றுக்கொண்டு, கடவுளின் வார்த்தையை அறிவிக்க,
மாசிதோனியாவிற்கு வருகின்றார் (திப 16: 6-10) இவ்வாறு இறைத்திருவுளத்திற்குப்
பணிந்து, பவுல் தன்னுடைய இரண்டாவது திருத்தூதுப் பயணத்தை
மேற்கொள்ளும்பொழுது, சீலா, திமொத்தேயு, லூக்கா என்ற மூன்று
புதிய மனிதர்களோடு தன்னுடைய பயணத்தை மேற்கொள்கின்றார். முதல்
திருத்தூதுப் பயணத்தில் தன்னோடு வந்த பர்னபா இப்பொழுது கூட வரவில்லை.
இப்படிப் புதிய மனிதர்களோடு தன்னுடைய திருத்தூதுப் பயணத்தை
மேற்கொள்ளும் பவுல், உரோமையரின் குடியேற்ற நகரான பிலிப்புக்கு
வருகின்றார்.
பிற இனத்தைச் சார்ந்த பெண்ணான லீதியா இயேசுவை ஏற்றுக்கொள்ளுதல்
பிலிப்புக்கு வருகின்ற பவுல், ஓய்வுநாளன்று நகருக்கு வெளியே வந்து
அங்கிருந்த பெண்களோடு பேசத் தொடங்குகின்றார். அங்குத்
தியாத்திரா நகரைச் சார்ந்த லீதியாவும் இருக்கின்றார். பவுல்
அவர்களிடம் பேசிக்கொண்டிருக்குபொழுது, ஆண்டவர் லீதியாவின் உள்ளத்தைச்
திறக்கின்றார்.
இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி, பவுல் யூதர்களுக்கு
மட்டுமல்ல, பிற இனத்தாருக்கும் நற்செய்தி அறிவித்தார். அதைவிடவும்
அந்தப் பிற இனத்தைச் சார்ந்த பெண்களுக்கும் நற்செய்தியை அறிவித்தார்.
அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டுத்தான் லீதியாவும் அவருடைய
குடும்பமும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கின்றது. பவுல்
செய்த இந்த நற்செய்திப் பணி, நாமும் எல்லாருக்கும் ஆண்டவருடைய
நற்செய்தியை அறிவிக்கவேண்டும், அவர்களை ஆண்டவர்மீது நம்பிக்கை
கொள்ளச் செய்யவேண்டும் என்ற செய்தியை முன் வைக்கின்றது.
நாம் பவுலைப் போன்று எல்லாருக்கும் ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிக்கத்
தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
(மாற் 16: 15) என்பார் இயேசு. ஆகையால், நாம் ஆண்டவரின் நற்செய்தியை
எல்லாருக்கும் அறிவித்து, அவர்களை இயேசுவின் சீடர்களாக்குவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 15: 26- 16: 4
"...நீங்களும் சான்று பகர்வீரர்கள்"
நிகழ்வு
1985 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 9 ஆம் நாள், பல்கேரியில்
கிறிஸ்டோ குலேக்சப் (Christo Kuleczef) என்றொரு மறைப்பணியாளர்
கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். காரணம்
கிறிஸ்துவைப் பற்றிய மக்களுக்கு அறிவித்தார் என்பதால்.
சிறையில் அடைக்கப்பட்டு எட்டு மாதங்கள் கடுமையாகச் சித்திரவதை
செய்யப்பட்ட பின்பு இவர் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு விடுதலை
செய்யப்பட்டு, வெளியே வந்தபிறகு கிறிஸ்டோ குலேக்சப் என்ற அந்த
மறைப்பணியாளர் இப்படிச் சொன்னார்: "மக்களுக்குக் கிறிஸ்துவைப்
பற்றி நற்செய்தியை அறிவித்தேன் என்பதற்காக என்னைச் சிறையில் அடைத்தார்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட பின்பும் நான் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை
அறிவிக்கத் தவறியதில்லை; அங்கிருந்த சிறைக் கைதிகளுக்கும்
சிறைக் காவலர்களுக்கும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தேன்.
இவ்வாறு நான் வெளியே இருந்து கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்ததால்,
அவர்மீது நம்பிக்கை கொண்ட மக்களின் எண்ணிக்கை விடவும், உள்ளே
இருந்து கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்ததால், அவர்மீது நம்பிக்கை
கொண்ட மக்களின் எண்ணிக்கை அதிகம்."(Spreading Power through
Persecution John Piper).
பல்வேறு இடர்பாடுகளுக்கும் சித்திரவதைகளுக்கும் நடுவில், கடவுளின்
வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்து, அவருக்குச் சான்று பகர்ந்து
வந்த கிறிஸ்டோ குலக்சப் என்ற அந்த மறைப்பணியாளர் நம்முடைய கவனத்திற்கு
உரியவராக இருக்கின்றார். நற்செய்தியில் இயேசு, தன்னுடைய சீடர்கள்
தன்னைக் குறித்துச் சான்று பகர்கின்றபொழுது, எத்தகைய இடர்பாடுகளையெல்லாம்
சந்திப்பார்கள்கள் என்றும் அப்பொழுது தூய ஆவியாரின் துணை அவர்களுக்கு
எப்படி இருக்கும் என்பதையும் எடுத்துக் கூறுகின்றார். அவற்றைப்
பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தொழுகைக்கூடங்களிலிருந்து விலக்கி வைப்பர்
இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில், இயேசு தன்னுடைய சீடர்கள்
தன்னைக் குறித்துச் சான்று பகர்வார்கள் என்பதையும், அப்படிச்
சான்று பகரும்பொழுது அவர்கள் எத்தகைய இடர்பாடுகளைச் சந்திப்பார்கள்
என்பதையும் எடுத்துக் கூறுகின்றார்.
சீடர்கள் சந்திக்க இருக்கின்ற முதல் சவாலாக இயேசு சொல்வது,
"தொழுகைக்கூடத்திலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள்
என்பதாகும். இயேசு இவ்வாறு சொல்வதற்கு முக்கியமான காரணம்,
"இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொள்கின்ற யாரையும் தொழுகைக்
கூடத்திலிருந்து விலக்கி வைக்கவேண்டும் என்று யூதர்கள்
தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள். அதனால்தான் இயேசு
இவ்வாறு சொல்கின்றார். சீடர்கள் சந்திக்க இருக்கின்ற இரண்டாவது
சவாலாக இயேசு சொல்வது, சீடர்களைக் கொல்வதைக்கூட கடவுளின்
திருப்பணி என எண்ணுவர் என்பதாகும். இதைப் பவுலின் தொடக்க கால
வாழ்வோடு பொருத்திப் பார்க்கலாம் (திப 9: 1-3). பவுல்
கிறிஸ்துவர்களைக் கொன்றொழிப்பதைக் கடவுளுக்குச் செய்யும்
திருப்பணி என்று நினைத்தே செய்தார். அப்படியிருக்கையில்தான்
அவர் இயேசுவால் தடுத்தாட் கொல்லப்பட்டார்.
இப்படிப் பல்வேறு இடர்பாடுகளையும் சவால்களையும் தன்னுடைய
சீடர்கள் தனக்குச் சான்றுபகரும்பொழுது, எதிர்கொள்ள வேண்டும்
என்பதை இயேசு முன்கூட்டியே சொல்கின்றார்.
தூய ஆவியாரின் துணையிருப்பு
தன்னுடைய சீடர்கள் தன்னைப் பற்றிச் சான்று பகரும்பொழுது,
பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்க நேரிட்டாலும், தூய ஆவியாரின்
துணை அவர்களுக்கு எப்பொழுது உண்டு என்பதை இயேசு இன்றைய
நற்செய்தியின் முதல் பகுதியில் கூறுகின்றார். இயேசு தூய
ஆவியரைக் குறித்துக் குறிப்பிடும்பொழுது "துணையாளர்
என்கின்றார். துணையாளர் என்பதற்கு ஆலோசகர், உடனிருப்பவர்,
ஊக்கமூட்டுபவர், உறுதிப்படுத்துபவர் போன்ற பல்வேறு அர்த்தங்கள்
இருக்கின்றன. ஆம், நாம் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து
வாழ்கின்றபொழுது, அவர் நம்மைத் தனியே விட்டுவிடுவதில்லை. தூய
ஆவியாரின் வழியாக நமக்குத் துணை இருக்கின்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த, World Evangelical
Encyclopedia என்ற நூலில் உள்ள புள்ளி விவரம் இது: கடந்த
இரண்டாயிரம் ஆண்டுகளில் இதுவரைக்கும் நான்கு கோடியே, முப்பது
இலட்சம் கிறிஸ்தவர்கள் மதத்தின் பெயரில்
கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; இதில் ஐம்பது விழுக்காட்டினர்,
கடந்த நூறு ஆண்டுகளில் மட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இதைவிடவும்
அதிர்ச்சியூட்டும் செய்தி, இருபது கோடிக் கிறிஸ்தவர்கள்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவகையில் துன்புறுத்தப்படுகின்றார்கள்;
முன்னூறு பேர் ஒவ்வொருநாளும் கொல்லப்படுகின்றார்கள். இதில்
அறுபது விழுக்காட்டினர் குழந்தைகள்.
இது மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவலாக இருந்தாலும்,
கிறிஸ்துவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல்
நடத்தப்பபட்டு வந்தாலும், கிறிஸ்துவம் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துகொண்டே இருக்கின்றது என்பதை மிக
அருமையாக எடுத்துக் கூறுகின்றது. இதற்கு முக்கியமான காரணம்,
தூய ஆவியாரின் உடனிருப்புதான்.
ஆகையால், இயேசுவுக்குச் சான்று பகர்வது சவாலான பணியாக
இருந்தாலும், தூய ஆவியாரின் துணையை நம்பி, அவருடைய பணியைத்
துணிந்து செய்வோம். அதன்வழியாக இயேசுவின் உண்மையான
சீடர்களாவோம்.
சிந்தனை
"நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து
போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை (1 கொரி
4: 8) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் புனித பவுலும்
அவரோடு இருந்தவர்களும் எப்படி இன்னலுற்றபோதிலும்
குழப்பமுற்றபோதிலும் ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கையை இழக்காமல்,
அவருடைய பணியைச் செய்தார்களோ, அப்படி நாமும் ஆண்டவர்மீது தூய
ஆவியார்மீது நம்பிக்கை வைத்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்து
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|