|
|
16
மே 2020 |
|
பாஸ்கா 5ஆம் வாரம் -
சனி
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10
அந்நாள்களில்
பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார்.
லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார்.
அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப் பெண். தந்தையோ
கிரேக்கர். திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலும் உள்ள
சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர். பவுல் அவரைத் தம்முடன்
கூட்டிச் செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின்
பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும்
அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.
அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும்
திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப்
பிடிக்குமாறு கூறினார். இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி
பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.
பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே,
அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். அவர்கள்
மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின்
ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை. எனவே அவர்கள் மீசியா
வழியாகச் சென்று துரோவா நகரை அடைந்தனர்.
பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர்
வந்து நின்று, "நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி
செய்யும்" என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும்,
நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று
கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி
தேடினோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! அல்லது:
அல்லேலூயா.
1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன்
அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி
3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம்
அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி
5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும்
அவர் நம்பத்தக்கவர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(கொலோ 3: 1)
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால்
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின்
வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச்
சார்ந்தவர்கள் அல்ல.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "உலகு உங்களை வெறுக்கிறது
என்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால்
தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு
செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து
தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
எனவே உலகு உங்களை வெறுக்கிறது.
பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக்
கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள்
துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.
என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள்
வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை
இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள்
அறிந்துகொள்ளவில்லை."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 16: 1-10
தடங்கல் அல்ல; இறைத்திருவுளம்
நிகழ்வு
ஒரு கல்லூயில் பணிபுரிந்து வந்த பேராசிரியை ஒருவர், இரவு பத்துமணிக்கு
தன்னுடைய அறையில் உட்கார்ந்து, மறுநாள் வகுப்பிற்காகப் பாடங்களைத்
தயார் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது இவருடைய அலைபேசிக்கு ஓர்
அழைப்பு வந்தது. "இந்த நேரத்தில் யார் அழைப்பு...? எண் புதிதாக
வேறு இருக்கின்றது!" என்று அதனைத் துண்டித்தார். இரண்டு
மூன்றுமுறை அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும், இவர் அந்த அழைப்பினை
ஏற்றுக்கொண்டு பேசத் தொடங்கினார்.
மறுமுனையில் இவரிடம் படித்துக்கொண்டிருந்த மாணவி, தேம்பித்
தேம்பி அழுதுகொண்டே பேசத் தொடங்கினார். இவர் அந்த மாணவிக்கு ஆறுதல்
சொல்லி, அமைதிப் படுத்திவிட்டு, அலைபேசியை வைக்கும்பொழுது, இரவு
பதினொரு மணியாயிருந்து. இவருக்குக் கண் எரிந்தது. இருந்தாலும்,
மறுநாள் வகுப்பிற்கான பாடத்தைத் தயார்செய்துவிட்டுத் தூங்கலாம்
என்று முடிவுசெய்துவிட்டு, பாடங்களைத் தயார்செய்துவிட்டுத்
தூங்கப் போகும்பொழுது, மணி பன்னிரண்டை கடந்திருந்தது.
அடுத்தநாள் அதிகாலையில் இவர் எழுந்திருக்கும்பொழுது கண் எரிந்தது.
இருந்தாலும் எழுந்து, வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு
கல்லூரிக்குச் சென்றார். கல்லூரில் முந்தைய நாள் இரவில் இவரோடு
அலைபேசியில் பேசிய மாணவி இவரிடம் வந்து, இவருடைய கைகளைப்
பிடித்துக்கொண்டு, "அம்மா! நீங்கள் மட்டும் நேற்று இரவு அந்த
ஒருமணி நேரம் என்னோடு பேசியிருக்கவில்லை என்றால், இன்றைக்கு
நீங்கள் என்னை உயிரோடு பார்த்திருக்க மாட்டீர்கள்; நான் தற்கொலை
செய்து இறந்திருப்பேன்" என்றார்.
அப்பொழுது பேராசிரியை அந்த மாணவியிடம், "நேற்று இரவு உன்னுடைய
அலைபேசியிலிருந்து வந்த அழைப்பை யாரென்று தெரியாமல், மிகப்பெரிய
தடங்கலாகத்தான் நினைத்தேன். இப்பொழுது உன்னுடைய உயிரைக்
காப்பாற்றுவதற்கான இறைவனின் திருவுளமே அது எனப் புரிகின்றபொழுது
மகிழ்ச்சியாக இருக்கின்றது" என்றார். பின்னர் பேராசிரியை அந்த
மாணவியிடம் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைப் பேசி அனுப்பி
வைத்தார்.
இந்தப் பேராசிரியையின் வாழ்கையில் வந்த தடங்கலைப் போன்று, நம்முடைய
வாழக்கையிலும் பல தடங்கல் வரலாம், அந்தத் தடங்கலை இறைத்திருவுளமாக
எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் முன்னோக்கி நகர்ந்துசென்றால்,
நம்முடைய வாழ்க்கை மிக இனிமையாக இருக்கும். இன்றைய முதல் வாசகத்தில்,
புனித பவுல், ஆசியாவிற்குச் சென்று பணிசெய்யலாம் என்று நினைத்தபொழுது,
அவருக்கு ஒரு தடங்கல் வருகின்றது. அதற்கு பின்பு அவர்
மாசிதோனியாவிற்குச் சென்று பணிசெய்யத் தொடங்குகின்றார். பவுலின்
வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தத் தடங்கல் நமக்கு உணர்த்துவது என்ன
என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம்.
எதிர்ப்பையும் மீறிப் பணிசெய்த பவுல்
விருத்தசேதனம் தொடர்பான பிரச்சனையை, எருசலேமில் இருந்த திருதூதர்களிடம்
கொண்டுசென்று, அதற்கான நல்லதொரு தீர்வினைக் கண்ட பவுல், அதன்பிறகு
தன்னுடைய இரண்டாவது திருத்தூது பணியாக தெருபை,
லிஸ்திராவிற்குப் பயணம் செல்கின்றார். இந்த லிஸ்திராவில்தான்
யூதத் தலைவர்கள் மக்களைத் தூண்டிவிட்டுப் பவுலைக் கல்லால் எறிந்து
கொல்ல முயற்சி செய்தார்கள் (திப 14: 6-21). அப்படியிருந்தபொழுதும்
பவுல் அங்கிருந்த எதிர்ப்பையும் மீறிப் பணிசெய்கின்றார். அதன்விளைவாக
திமொத்தேயு என்ற சீடர் அவருக்குக் கிடைக்கின்றார். இந்தத்
திமொத்தேயுவின் தாய் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு யூதராக இருந்தாலும்,
இவருடைய தந்தை ஒரு கிரேக்கர் மேலும் இவர் தன்னுடைய பாட்டி
லோயியிடம் இருந்த இறைநம்பிக்கையைத் தன்னுடைய தாய் யூனிக்கி
வழியாகப் பெற்றிருந்தார். இப்படிப்பட்டவரைப் பவுல் மீண்டுமாக
லிஸ்திராவிற்கு வருகின்றபொழுது, தன்னோடு பணிசெய்வதற்காக அழைத்துக்
கொண்டு போகின்றார்.
இப்படி எதிர்ப்பையும் மீறி பவுல், லிஸ்திராவில் பணிசெய்ததால்,
பலரும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்குகின்றார்கள்.
நாமும் நம்முடைய வாழ்வில் வரும் எதிர்ப்புகளைக் கண்டு, அஞ்சி,
நம்முடைய பணியைப் பாதிலேயே விட்டுவிடாமல், தொடர்ந்து பணிசெய்தால்,
நிறைந்த பலன் கிடைக்கும் என்பது உறுதி.
தடங்கலை இறைத்திருவுளமான எடுத்துக்கொண்டு பணிசெய்த பவுல்
பவுல், தெருபை, லிஸ்திராவில் பணிசெய்த பிறகு ஆசியாவிற்கும் அதன்பிறகு
பித்தானிவிற்கும் பணிசெய்யப் போகும்பொழுது, இயேசுவின் ஆவியார்
அல்லது தூய ஆவியார் (உரோ 8:9; கலா 4:6; பிலி 1:19) அங்கு போகவேண்டாம்
என்று தடுக்கின்றார்கள். இதற்குப் பின்பு இரவில் ஒரு
காட்சியில் இவருக்குத் தோன்றும் மாசிதோனியர், எங்களுக்கு வந்து
உதவி செய்யும் என்று சொல்ல, கடவுள் தம்மை மாசிதோனியாவிற்குச்
சென்று பணிசெய்ய அழைக்கின்றார் என்று நினைத்துக் கொண்டு, பவுல்
தன்னோடு இருந்தவர்களோடு சேர்ந்து அங்கு பணிசெய்யச்
செல்கின்றார்.
இங்கு "ஆசியா" என்று குறிப்பிடப்படுவது ஆசியக் கண்டம் அல்ல,
சிறிய ஆசியா என்று திருவிவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். பவுலும்
அவரோடு இருந்தவர்களும் ஆசியாவிற்குச் சென்று பணிசெய்ய நினைத்தபொழுது
தடங்கல் வருகின்றது. அதன்பிறகு அவர் தன்னோடு இருந்தவர்களோடு
மாசிதோனியாவிற்குச் சென்று பணிபுரிகின்றார். பவுலுக்கு, அவருடைய
பணிவாழ்வில் வந்த இந்தத் தடங்கலை அவர் வெறும் தடங்கலாகப்
பார்க்காமல், இறைத்திருவுளமாகப் பார்த்தார். நாமும் நமக்கு வருகின்ற
தடங்கலை வெறும் தடங்கலாகப் பார்க்காமல், இறைத்திருவுளமாக ஏற்றுக்கொண்டு
பணிசெய்தால், பல நன்மைகளைப் பெறுவோம் என்பது உறுதி.
சிந்தனை
"அறிவிலிகளாய் இராமல், ஆண்டவரின் திருவுளம் யாது எனப்
புரிந்துகொள்ளுங்கள்" (எபே 5: 17) என்பார் புனித பவுல்.
ஆகையால், நாம் ஆண்டவரின் திருவுளம் யாது எனப் புரிந்துகொண்டு,
அதன்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 15: 18-21
வெறுக்கும் உலகை அன்பு செய்வோம்
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். இவரிடத்தில் பலரும் பல்வேறு
இடங்களிலிருந்து ஆலோசனை கேட்க வந்து போனார்கள்.
இந்தத் துறவியிடத்தில் ஒருநாள் பெண்மணி ஒருவர் வந்தார். அவர்
துறவியிடம், தன்னுடைய கணவர் தவறான வழியில்
சென்றுகொண்டிருப்பதையும், அவரைத் திருத்துவதற்குத் தான்
மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானதையும், அவர் திருந்தி
நல்வழிக்கு வர நல்லாலோசனை ஒன்று தனக்குத் தருமாறும் கெஞ்சிக்
கேட்டார். சிறிதுநேரம் அமைதியாக இருந்து சிந்தித்துவிட்டு, ஓர்
ஆலோசனையை அந்தப் பெண்மணிக்குக் கொடுத்தார் துறவி. அந்த
ஆலோசனையைப் பெற்றுக்கொண்ட பெண்மணி மிகவும் உற்சாகமாக தன்னுடைய
வீட்டிற்குச் சென்றார்.
இது நடந்து ஓரிரு வாரங்கள் கழித்து, துறவியைச் சந்திக்க ஒருவன்
வந்தான். அவன் வேறு யாருமல்ல; தன்னிடம் ஆலோசனை பெற்றுச் சென்ற
பெண்மணியின் கணவன்தான். அவன் துறவியை வாய்க்கு வந்தபடி
திட்டிவிட்டு, "என்னைத் திருத்துவதற்கு என் மனைவியிடம் ஆலோசனை
சொல்வதற்கு நீ யார்...? நான் உன்னை முற்றிலுமாக வெறுகின்றேன்"
என்று கத்தினான்.
அவன் இவ்வாறு கத்தியதும், துறவி அவனிடம், "நீ என்னை முற்றிலும்
வெறுக்கிறாயா...? பரவாயில்லை; ஆனால், நான் உன்னை முழுவதும்
அன்பு செய்கின்றேன்" என்றார். இதைக்கேட்டு அந்த மனிதன் உள்ளம்
குத்துண்டு போனான். "நானோ இவரை வெறுக்கின்றேன் என்று
சொல்கின்றேன்; இவரோ என்னை முழுவதும் அன்பு செய்கின்றேன் என்று
சொல்கின்றாரே! என்னை முழுவதும் அன்புசெய்யும் ஒருவர் ஒன்றைச்
சொல்கின்றார் எனில், அதை எனது நல்லதுக்குத்தான் சொல்வார்"
என்று நினைத்தவனாய், துறவியின் காலில் விழுந்து மன்னிப்புக்
கேட்டான். பின்னர் அவன் தன்னுடைய வழியைத் திருத்திக்கொண்டு
நல்வழியில் நடக்கத் தொடங்கினான்.
ஆம், இந்த உலகம் நம்மீது வெறுப்பை உமிழத்தான் செய்யும்.
பதிலுக்கு நாம் வெறுப்பை உமிழாமல், அன்பைப் பொழிந்தால் எல்லாம்
அன்பு மயமாகிவிடும். நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம் இந்த
உலகம் வெறுப்பதையும், அவ்வாறு வெறுக்கின்றபொழுது, நாம் எவ்வாறு
நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பற்றிப் பேசுகின்றார். அது
குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் வழியில் நடப்போரை வெறுக்கும் உலகம்
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "உலகு உங்களை
வெறுகின்றது என்றால், அது உங்களை வெறுக்குமுன்பே என்னை
வெறுத்தது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்" என்கின்றார்.
இயேசு இந்த உலகத்தில் பிறந்த ஓரிரு நாள்களிலேயே அவர்மீதான
வெறுப்புத் தொடங்கிவிட்டது. இயேசு பிறந்ததை மூன்று ஞானிகள்
வழியாகக் கேள்விப்பட்டுப் பின்னர் அவர்கள் தன்னை
ஏமாற்றிவிட்டுச் சென்றதாக நினைத்து, பெத்லகேமையும் அதைச்
சுற்றிலும் இருந்த ஊர்களில் இருந்த இரண்டு வயதும் அதற்கு
உட்பட்ட குழந்தைகளை ஏரோது கொல்லத் தொடங்கியபொழுதே, அவர்மீதான
வெறுப்பு தொடங்கியது (மத் 2: 13-16). அந்த வெறுப்பு அவர்
சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதுவரை தொடர்ந்தது.
இதைத்தான் இயேசு தன்னுடைய சீடர்களிடம், இந்த உலகம் உங்களை
வெறுக்கும் முன்பே, என்னை வெறுத்தது என்பதை அறிந்துகொள்ளுங்கள்
என்கின்றார்.
இயேசுவையும் அவருடைய சீடர்களையும் இந்த உலகம் வெறுக்கக்
காரணம், அவர்கள் இந்த உலகைச் சார்ந்தவர்களாக வாழவில்லை.
ஒருவேளை அவர்கள் இந்த உலகைச் சார்ந்தவர்களாக வாழ்ந்திருந்தால்
இந்த உலகம் அவர்களை அன்பு செய்திருக்கும் (1 பேது 4: 3-4).
இப்படி வெறுக்கும் உலகத்தில் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்
என்பதை இயேசு தொடர்ந்து கூறுகின்றார். அது குறித்து நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
வெறுக்கும் உலகிலிருந்து நம்மைத் தேர்ந்துகொண்ட இயேசு
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம் தொடர்ந்து
பேசுகின்றபொழுது, "நான் உங்களை இவ்வுலகிலிருந்து
தேர்ந்தெடுத்துவிட்டேன்" என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள்
நாம் இவ்வுலகைச் சார்ந்தவர்களாக அல்லாமால், மறு உலகைச்
சார்ந்தவர்களாக வாழவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது.
மறுவுலகைச் சார்ந்த வாழ்க்கை என்றால், வெறுப்புப் பதிலாக
அன்பையும், பகைமைக்குப் பதிலாக பாசத்தையும் விதைக்கக்கூடிய
வாழ்க்கை. இவ்வாறு நாம் இந்த உலகம் காட்டும்
வாழ்க்கையிலிருந்து விலகி, மறுவுலகம் காட்டும் வாழ்க்கை
வாழ்கின்றபொழுது எங்கும் அன்பும் அமைதியும் மட்டுமே இருக்கும்.
ஆகையால், நாம் இவ்வுலகம் காட்டும் வாழ்க்கை வாழாமல், இயேசு
காட்டும் வாழ்க்கை வாழ்ந்து, எங்கும் அன்பை ஆளவிடுவோம்.
சிந்தனை
"பெரிய சாதனைகளைச் செய்ய விரும்புவோர் அதிகத் துன்பங்களை
அனுபவிக்க வேண்டும்" என்பார் புளூடார்க் (46-119) என்ற
சிந்தனையாளர். ஆம், இயேசுவின் வழியில் நடந்து, பல சாதனைகளையும்
நன்மைகளையும் செய்ய இருக்கும் நமக்குத் துன்பங்களும்
வேதனைகளும் அடுத்தவருடைய வெறுப்பும் வரத்தான் செய்யும்.
இவற்றையெல்லாம் நாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு இயேசுவுக்கு
உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|