Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       12  மே 2020  

பாஸ்கா 5ஆம் வாரம் - செவ்வாய்க்கிழமை

=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 19-28

அந்நாள்களில்

அந்தியோக்கியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல்மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப் போட்டார்கள். சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கியபின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, "நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும் என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து, நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 145: 10-11. 12-13. 21 (பல்லவி: 10b.11a) Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, உம் மக்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பர். அல்லது: அல்லேலூயா.
10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி

12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி

21
என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
(லூக் 24: 26, 46)

அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 27-31b

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். "நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்" என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.

இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன். இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை. ஆனால் நான் தந்தைமீது அன்புகொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 14: 19-28

இன்னல்கள் வழியாக இறையாட்சி


நிகழ்வு

ஒரு நகரில் கிறிஸ்தவப் பெண்மணி ஒருவர் இருந்தார். இவர் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர். கோயில் தொடர்பான நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இந்தப் பெண்மணிக்குப் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் வந்தன. ஆனாலும், இவர் அந்தப் பிரச்சனைகளை கண்டு கலங்காமல், அவற்றைத் துணிவோடு எதிர்கொண்டு, எப்பொழுதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இப்படி இருக்கையில் இவரையும் இவருடைய குடும்பத்தையும் பற்றி நன்கு அறிந்த பங்குத்தந்தை இவரிடம், "உங்களைப் பற்றி நான் நன்கு அறிவேன். அது எப்படி, இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் உங்களால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றது என்று கேட்டார்.

அதற்கு இந்தப் பெண்மணி இவ்வாறு பதிலளித்தார்: "சுவாமி! எனக்கு ஏதாவது பிரச்சனை வருகின்றபொழுது, அதைக்கண்டு கலங்கமாட்டேன். மாறாக, அந்தப் பிரச்னையை ஒரு காகிதத்தில் எழுதி, அதை ஒரு கண்ணாடிப் பாட்டிலில் போட்டு வைத்து, அந்தப் பிரச்சனை நீங்கவேண்டும் என்று இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடுவேன். ஒரு மாதம் கழித்து அந்தப் பாட்டிலைத் திறந்து பார்ப்பேன். அப்பொழுது இரண்டு நற்செயல் நடந்திருக்கும். ஒன்று, எனக்கு வந்த பிரச்சனைகள் காணாமலேயே போயிருக்கின்றோம். இரண்டு, ஒருவேளை வந்த பிரச்சனைகள் போகவில்லை என்றால், வந்த பிரச்சனைகளைத் துணிவோடு எதிர்கொள்வதற்கான ஆற்றலை இறைவன் எனக்குத் தந்திருப்பார். நான் நம்புகின்ற இறைவன் எனக்கு வருகின்ற பிரச்சனைகளைக் காணாமல் போகச் செய்கின்றபொழுது அல்லது அவற்றைத் துணிவோடு எதிர்கொள்வதகான ஆற்றலைத் தருகின்றபொழுது, நான் எதற்குக் கலங்கவேண்டும். அதனால்தான் நான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.

நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்காது. அந்தப் பிரச்சனைகளை நாம் ஆண்டவர்மீது நம்பிக்கைகொண்டு எதிர்கொண்டால் மிக எளிதாக எதிர்கொள்ள முடியும், வெற்றிக்கொள்ளவும் முடியும். இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் தன்னுடைய பணிவாழ்வில் வந்த பிரச்சனைகளை, இன்னல்களை, வேதனைகளை எப்படி எதிர்கொண்டார் என்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது பற்றி நாம் சிந்திப்போம்.

கல்லெறியப்பட்டாலும் கலங்காமல் கடவுளின் வார்த்தையை எடுத்தரைத்த பவுல்

"தனிப்பட்ட பணிக்காகத்" தூய ஆவியாரால் தேர்ந்தெடுக்கப் பவுலும் பர்னபாவும் பல்வேறு இடங்களுக்குச் சென்று கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்து வந்தார்கள். இவர்கள் லிஸ்திராவில் கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்துக்கொண்டிருக்கும்பொழுது, அந்தியோக்கிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் வந்த யூதர்கள், அங்கிருந்த மக்களைப் பவுலுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, இவர்மீது கல் எறிந்து, நகருக்கே வெளியே இழுத்துப் போடுகின்றார்கள். எல்லாரும் பவுல் இறந்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், பவுல் எழுந்து, தன் உடன் பணியாளரான பர்னபாவோடு தெருபைக்குச் சென்று, கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கத் தொடங்கினார்.

கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்தவரான பவுல், தமஸ்கு நோக்கிச் செல்லும் வழியில் கிறிஸ்துவால் தொடப்பட்டு (திப 9), கிறிஸ்துவின் அல்லது கடவுளின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து வந்தார். அப்படியிருக்கையில் யூதர்களிடமிருந்து தொடர்ந்து பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் வந்த வண்ணமாய்த்தான் இருந்தன. பவுல் இவற்றை கண்டு கலங்கி, தன்னுடைய பணியை நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ந்து செய்து செய்தார். புனித பவுலிடம் இருந்த மனத்திடம்தான், அதாவது பிரச்சனை கண்டு அஞ்சாமல், தொடர்ந்து பணிசெய்யும் மனத்திடம்தான் நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

இன்னல்கள் வழியாகத்தான் இறையாட்சிக்கு உட்படவேண்டும்

பவுல் தெருபையில் கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்துவிட்டு, முன்பு தான் கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்த லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கு ஆகிய நகர்களுக்கு வருகின்றார்; அங்கிருந்த நம்பிக்கையாளர்களை, நம்பிக்கையில் உறுதிப்படுத்தி, "நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும் என்கின்றார்.

பவுல் மேலே சொல்லப்பட்ட இடங்களுக்கு வந்து, அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார் எனில், அவர்களுக்கு யூதர்களிடமிருந்து பிரச்சனைகள் வந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். இப்படிப்பட்ட வேளையில்தான் பவுல், பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும் என்று சொல்கின்றார். ஆம், கிறிஸ்துவ வாழ்வு என்பது ஒரு போராட்டமான, பிரச்சனைகளும் சிலுவைகளும் நிறைந்த வாழ்வு (மத் 16: 24). இப்படிப்பட்ட வாழ்வில் நமக்கு வரும் பிரச்சனைகளை இறைவன்மீது நம்பிக்கை வைத்து, தொடர்ந்து நடக்கின்றபொழுதுதான், இறையாட்சிக்குள் உட்பட முடியும்.

நாம் நம்முடைய சீடத்துவ வாழ்வில் வரும் வேதனைகள், துன்பங்கள், பிரச்சனைகள் ஆகியவற்றைத் துணிவோடு எதிர்கொண்டு இறையாட்சிக்கு உட்படத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"வாழ்தல் என்னும் கலை நடனம் போன்றது அல்ல; மல்யுத்தம் போன்றது. இதில் நாம் போராடினால் மட்டுமே வெற்றிபெற முடியும்" என்பார் மார்க்ஸ் ஆரோலியஸ் (121-180) என்ற அறிஞர். ஆகையால், நாம் போராட்டமும் பிரச்சனைகளும் இன்னல்களும் மிகுந்த இந்த வாழ்க்கையை, ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு துணிவோடு எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 யோவான் 14: 27-31b

"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்


நிகழ்வு

அசிசி நகர்ப் புனித பிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது. அசிசி நகருக்குப் பக்கத்தில் குப்பியோ (Gubbio) என்றோர் இடம் உண்டு. இந்த இடத்தில் கொடியதோர் ஓநாய் இருந்தது. இந்த ஓநாய், மக்கள் தங்களுடைய வீடுகளில் வளர்த்து வந்த செல்லப் பிராணிகள் அந்த வழியாக வந்தபொழுது கடித்துக் குதறியது. மட்டுமல்லாமல், அந்த வழியாக வந்த மனிதர்களையும் அது அச்சுறுத்தி வந்தது.

இதைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுற்றிலும் இருந்த ஊர்மக்கள், அதை ஒரே அடியாக அடித்துக் கொன்றுவிடலாம் என்று திட்டம் தீட்டினார்கள். இச்செய்தி எப்படியோ பிரான்சிசின் செவிகளை எட்டியது. அவர், ஓநாய் கொல்லப்படுவதை விரும்பவில்லை. அதே நேரத்தில் ஓநாய்க்கு உணவு கிடைப்பதற்கும் வழிவகை செய்யவேண்டும் என்பதைப் பற்றியும் சிந்தித்தார்.

இதைத் தொடர்ந்து அவர், மக்களிடம் சென்று, "ஓநாயைக் கொல்ல வேண்டாம்; அது உங்களைத் துன்புறுத்தாத வண்ணம் நான் பார்த்துக் கொள்கின்றேன். பதிலுக்கு அதற்கு உணவு கிடைக்க ஏதாவது செய்யவேடும் என்று சொல்லிவிட்டு, ஓநாயிடம் சென்று, மக்கள் அதனால் படுகின்ற வேதனையை அதனிடம் எடுத்துச் சொன்னார். பின்னர் அவர் அந்த ஓநாயிடம், "சகோதரர் ஓநாயே! இனிமேல் நீ யாரையும் துன்புறுத்தக்கூடாது; பதிலுக்கு உனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலிருந்து உணவு கிடைக்கும் என்றார். ஓநாயும் இதற்குச் சம்மதிக்கவே, பிரான்சிஸ் மக்களிடம் சென்று, ஓநாயோடு தான் பேசியதை எடுத்துச் சொல்ல, மக்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்கள். இதனால் ஓநாய்க்கும் மக்களுக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட்டு, அப்பகுதியில் அமைதியான சூழ்நிலை உருவானது (Aiming at Excellence George Kaitholil. pg. 37).
இன்னோர் இயேசுவாக இப்புவியில் வலம்வந்த அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ், ஓநாய்க்கும் மக்களுக்கும் நடுவே அமைதி ஏற்படுவதற்கு அல்லது அமைதியை விதைப்பதற்கு மேற்கொண்ட முயற்சி வியப்புக்குரியதாகவும் பாராட்டுக்குரியதாகவும் இருக்கின்றது. நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன் என்று கூறுகின்றார். இயேசு தரும் அமைதி எத்தகையது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு தரும் அமைதி, உலகம் தரும் அமைதி போன்றது அல்ல

நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்... நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல என்கிறார். இயேசு தரும் அமைதியைப் புரிந்துகொள்வதற்கு முன்னர், இந்த உலகம் தரும் அமைதி எத்தகையது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்றைக்கு நாடுகளுக்கிடைய அமைதிப் பேச்சு வார்த்தை நடக்கின்றது. அமைதிப் பேச்சு வார்த்தை நடந்த பிறகும் நாடுகள் அமைதியாகத்தான் இருக்கின்றனவா என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எப்போது வேண்டுமானாலும் ஒரு நாடு இன்னொரு நாட்டைத் தாக்கும் அபாயகரமான சூழல் நிலவிக்கொண்டிருக்கின்றது. அப்படியானால், இன்றைக்கு உலகில் நிலவும் அமைதி என்பது மேம்போக்கானது; போலியானது; நிரந்தம் இல்லாதது என்பது தெளிவாகின்றது. ஆனால், இயேசு தருகின்ற அமைதி அப்படி அல்ல, அது உண்மையிலும் அன்பிலும் நட்பிலும் சகோதரத்துவத்திலும் உருவானது. அது நீடித்து இருக்கக்கூடியது. அதனால்தான் இயேசு, நான் தரும் அமைதி போன்றது அல்ல என்கின்றார்.

இயேசு தரும் அமைதி, துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தரும்

இயேசு தன்னுடைய சீடர்களிடம், அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன் என்றால், அது எத்தகைய அமைதி என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசு தரும் அமைதி, நமக்குத் துன்பமில்லாத வாழ்வினைத் தந்துவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. மாறாக, நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதற்கான வலுவினையும் ஆற்றலையும் நிச்சயம் தரும். அதில் எந்தவோர் ஐயமுமில்லை.

ஆகையால், இயேசு தரும் உண்மையான, உலகம் தர முடியாத அமைதியைப் பெற்றுக்கொள்ள, நாம் அவருடைய வழியில் நடக்கத் தயாராவோம்.

சிந்தனை

"அமைதியே கலைகளை வளர்த்து, செழிப்பை உண்டாக்கி, இன்பமான புத்துயிர் அளிக்கும் செவிலித்தாய்" என்பார் ஷேக்ஸ்பியர். ஆகையால், நமக்குச் செழிப்பும் புத்துயிரும் தரும் உண்மையான அமைதி கிடைக்க, நாம் இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!