|
|
30
மே 2020 |
|
பாஸ்கா 4ஆம் வாரம் - திங்கள்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, கடவுளிடம் திரும்புங்கள் என்ற
நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 5-18
அந்நாள்களில்
பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து திருத்தூதரை
இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்டனர். இதை அவர்கள் அறிந்து
லிக்கவோனியாவிலுள்ள நகரங்களான லிஸ்திராவுக்கும் தெருபைக்கும்
அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் தப்பிச் சென்றார்கள். அங்கெல்லாம்
அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள்.
லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவியிலேயே கால்
ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து பவுல்
பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான
நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து உரத்த
குரலில், "நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்" என்றார். அவர்
துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார்.
பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில்,
"தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன" என்று
குரலெழுப்பிக் கூறினர். அவர்கள் பர்னபாவைச் "சேயுசு" என்றும்,
அங்குப் பவுலே பேசியபடியால் அவரை "எர்மசு" என்றும் அழைத்தார்கள்.
நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும்
பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன்
சேர்ந்து பலியிட விரும்பினார்.
இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள்
மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் பாய்ந்து
சென்று உரக்கக் கூறியது: "மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?
நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற
பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள
அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற
நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவர்
அனைத்து மக்கள் இனங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி
விட்டிருந்தார்; என்றாலும் அவர் தம்மைப்பற்றிய சான்று எதுவும்
இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில் அவர் நன்மைகள் பல
செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்;
வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள்
உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்."
இவற்றை அவர்கள் சொன்னபின்பு கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை
ஒருவாறு தடுக்க முடிந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
=================================================================================
திபா 115: 1-2. 3-4. 15-16 (பல்லவி: 1a)
பல்லவி: எங்களுக்கன்று, ஆண்டவரே! மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்.
அல்லது: அல்லேலூயா.
1
எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று: மாட்சியை உம் பெயருக்கே
உரித்தாக்கும்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை
உமக்கே உரியதாக்கும்.
2
"அவர்களுடைய கடவுள் எங்கே" எனப் பிற இனத்தார் வினவுவது ஏன்? -
பல்லவி
3
நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும்
செய்கின்றார்.
4
அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே,
வெறும் மனிதக் கைவேலையே! - பல்லவி
15
நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக! விண்ணையும் மண்ணையும்
உருவாக்கியவர் அவரே.
16
விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு
வழங்கியுள்ளார். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 14: 26)
அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும்
கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு
நினைவூட்டுவார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும்
கற்றுத்தருவார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 21-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர்
என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும்
அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை
வெளிப்படுத்துவேன்."
யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் - அவரிடம்,
"ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு
வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?" என்று கேட்டார்.
அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: "என்மீது அன்பு கொண்டுள்ளவர்
நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு
கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது
அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள்
கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.
உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம்
சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம்
துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய
அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர்பணிகள் 14: 5-18
வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் (இறை)வார்த்தையை
அறிவி
நிகழ்வு
ஆராய்ச்சியாளர் ஒருவர் இருந்தார். இவர் பறவையினங்கள், பூச்சியினங்கள்
தொடர்பான மிகத் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இதனால்
இவர் எங்கேயும் தன்னுடைய பார்வைக்கு புதுவகையான பறவையோ, வண்டுகளோ
தென்பட்டால், அவற்றைப் பிடித்துக்கொண்டு, தன்னுடைய ஆய்வுக்கூடத்திற்கு
வந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவார். ஒருநாள் இவர் ஒரு பெரிய மரத்தில்
வண்டுகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டிருந்தபொழுது, இரண்டு
புதுவகையான வண்டுகள் இவருடைய பார்வையில் தென்பட்டன. உடனே இவர்
அந்த இரண்டு வண்டுகளையும் தன் இரண்டுகளிலும் பிடித்துக்
கொண்டார்.
இந்த நேரத்தில் புதுவகையான ஒரு வண்டு இவருடைய கைக்கு எட்டும்
தூரத்தில் இருந்தது. "இந்த வாய்ப்பை நழுவவிட்டால், இனிமேலும்
இப்படிப்பட்ட வண்டினைப் பார்க்க முடியோது... என்ன செய்வது?" என்று
ஒருவினாடி இவர் சிந்தித்தார். பின்னர் தன்னுடைய வலக்கையில் இருந்த
வண்டினை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, கைக்கு எட்டும் தூரத்தில்
இருந்த புதுவகையான வண்டினைப் பிடித்துக்கொண்டு, வேகமாக தன்னுடைய
ஆராய்ச்சிக்கூடத்திற்கு ஓடிவந்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அந்த ஆராய்ச்சி, இத்தனை நாள்களும் இவர் எதற்காக ஆய்வினை
மேற்கொண்டு வந்தாரோ, அதற்கான முடிவு கிடைத்தது.
இந்த நிகழ்வில் வரும் ஆராய்ச்சியாளர் செய்த செயல் சற்று
வித்தியாசமாக இருந்தாலும், இவர் தனக்குக் கிடைத்த பொன்னான
வாய்ப்பினைப் பயன்படுத்தினார். அதனால் தன்னுடைய ஆராய்ச்சியில்
வெற்றி கண்டார். முதல் வாசகத்தில் பவுல் பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த
ஒருவரை நலப்படுத்தியதும், அந்நகரில் இருந்த மக்களெல்லாம் அவரிடம்
வருகின்றார்கள். இதை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு
அவர் கடவுளுடைய வார்த்தையை மக்களுக்கு அறிவிக்கின்றார். பவுல்
தனக்குக் கிடைத்த வாய்ப்பினை நல்லவிதமாய்ப் பயன்படுத்திக்
கொண்டு, கடவுளின் வார்த்தையை அறிவித்தது நமக்கு என்ன
செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்திப்போம்.
நம்பிக்கையோடு இருந்த கால் ஊனமுற்றவர், நலம்பெறுதல்
பவுலும் பர்னபாவும் சேர்ந்து கடவுளின் வார்த்தையை மக்களுக்கு
அறிவித்துக் கொண்டிருக்கையில், யூதத் தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகள்
வந்தன; அவர்கள் இவர்கள் இருவரையும் கல்லால் எறியத் திட்டமிட்டனர்
.இதையறிந்த பவுலும் பர்னபாவும் லிக்கவோனியாவிலுள்ள
லிஸ்திராவிற்கு வருகின்றார்கள். இங்கு இவர்கள் கடவுளின்
வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கையில், பவுல்
பிறவிலேயே கால் ஊனமுற்ற ஒரு மனிதரைக் காண்கிறார். அவரிடம் நலம்பெறுவதற்கான
நம்பிக்கை இருந்ததைக் கண்டு, பவுல், அவரிடம், "நீர் எழுந்து
காலூன்றி நேராக நில்லும்" என்று சொல்லி அவரை நலப்படுத்துகின்றார்.
எப்படி பேதுரு கால் ஊனமுற்ற மனிதரை எழுந்து நடக்கச் செய்தரோ
(திப 3:2), அப்படி பவுல் கால் ஊனமுற்ற மனிதரை எழுந்து நடக்கச்
செய்கின்றார்.
பவுல் செய்த இந்த வல்லசெயல் அந்நகரில் இருந்த மக்களிடம் மிகப்பெரிய
அதிர்வலையை ஏற்படுத்துகின்றது. அவர்கள் பவுலையும் பர்னபாவையும்
பார்த்து, "தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன"
என்று சொல்லி, சேயுசு கோயில் அர்ச்சகரோடு சேர்ந்து காளைகளையும்
பூமாலைகளையும் கொண்டுவந்து இவர்களுக்குப் பலியிட
முடிவுசெய்கின்றார்கள்.
தனக்குக் கிடைத்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திய பவுல்
சேயுசு கோயில் அர்ச்சகர் மக்களோடு சேர்ந்து காளைகளையும்
பூமாலையும் பலியிட நினைக்கும்பொழுது, பவுல் பர்னபாவும் தங்களுடைய
மேலுடைகளைக் கிழித்துக் கொண்டு, அவர்களிடம், நாங்களும் உங்களைப்
போன்ற மனிதர்களே! பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும்
மண்ணையும் உண்டாக்கிய கடவுளிடம் திரும்பி வாருங்கள் என்கின்றார்கள்.
இங்கு நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கிய உண்மை, மக்கள் பவுலையும்
பர்னபாவையும் தெய்வங்கள் என்று நினைத்து பலி செலுத்த நினைத்தபொழுது,
இவர்கள் இருவரும் தாங்கள் சாதாரண மனிதர்களே என்ற உண்மையை எடுத்துச்
சொல்லி, கடவுளின் வார்த்தையை அவர்களுக்கு அறிவித்துதான்.
நாமும்கூட கடவுளின் வார்த்தையை வாய்ப்புக் கிடைக்கின்றபொழுதெல்லாம்
அறிவிக்கவேண்டும். அதுதான் நாம் செய்யகூடிய தலையாய பணியாக இருக்கின்றது.
ஏனெனில், "வாய்ப்புகள் எல்லா நேரத்திலும் நம்முடைய கதவைத் தட்டுவதில்லை"
என்ற ஜெர்மானியப் பழமொழிக்கு ஏற்ப, கடவுளின் வார்த்தையை அறிவிக்க
நமக்குக் எல்லா நேரமும் வாய்ப்புக்கிடைப்பதில்லை. ஆகையால்,
நாம் புனித பவுல் மற்றும் பர்னபாவைப் போன்று கடவுளின்
வார்த்தையை வாய்ப்புக் கிடைக்கின்றபொழுது அறிவிக்க முயற்சி
செய்து, இயேசுவின் உண்மையான சீடர்களாவோம்.
சிந்தனை
"ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்பு உள்ளபோதே அவரைத் தேடுங்கள்" (எசா
55:6) என்பார் இறைவாக்கினர் எசாயா. ஆகையால், நாம் நமக்கு
வாய்ப்புக் கிடைக்கின்றபொழுது, அவரைத் தேடுவோம்; தேடி அறிந்துகொண்டு
அவருடைய வார்த்தையை மக்களுக்கு அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 14: 21-26
யாருடன் (மூவொரு) கடவுள் குடிகொள்வார்?
நிகழ்வு
இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் "மறு கிறிஸ்துவாக", "இன்னோர் இயேசுவாக"
வாழ்ந்தவர் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ்.
ஒருநாள் இவர் ஒரு மலைக்குச் சென்று, தனிமையில் இறைவனிடம்
வேண்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது இறைவன் இவருக்கு முன்பாகத்
தோன்றி, "பிரான்சிஸ்! நீ எனக்குகந்த வழியில் நடந்து, என்மீது
மிகவும் அன்பு செலுத்துவதால், என்னிடத்தில் நீ எது கேட்டாலும்
அதைத் தரலாம் என்று இருக்கின்றேன். இப்பொழுது உனக்கு என்ன
வேண்டுமோ, அதைக் கேள் தருகின்றேன்" என்று சொல்லி, பிரான்சிசின்
பதிலுக்காகக் காத்திருந்தார்.
பிரான்சிஸ் வேறெதைப் பற்றியும் சிந்திக்காமல், "இறைவா! எனக்கு
நீ மட்டும் போதும்; வேறெதுவும் வேண்டாம்" என்றார். உடனே இறைவன்
அவரிடம், "பிரான்சிஸ்! நான் எப்போதும் உன்னோடு இருக்கின்றேன்;
இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது; ஆனால், நீ இவ்வுலகில்
அன்பையும் அமைதியையும் மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் விதைக்க
வேண்டும் அல்லவா, அதற்கு வேறு ஏதாவது வேண்டும் என்றால் கேள்,
தருகின்றேன்" என்றார்.
"இறைவா! என்னிடத்தில் நீர் இதே கேள்வியை எத்தனை முறை
கேட்டாலும் இதே பதிலைத் தான் தருவேன். எனக்கு வேறெதுவும்
தேவையில்லை; நீர் மட்டும் போதும்" என்றார் பிரான்சிஸ். உடனே
கடவுள், அவருக்குள் குடிகொண்டு, அவருடைய போதனையாலும் அவருடைய
நற்செயல்களால் எல்லாரும் பயன்பெறுமாறு செய்தார்.
அசிசி நகர்ப் புனித பிரான்சிசின் வாழ்வில் நடந்ததாக, ஜோஜி
வள்ளி என்ற எழுத்தாளர் எழுதியை "Heart 2 Heart" என்ற நூலில்
இடம்பெறும் இந்த நிகழ்வு, இறைவனை நாம் மிகவும் அன்பு செய்தால்,
அவர் நம்மோடு குடிகொள்வார் என்ற செய்தியை மிக அழகாக எடுத்துச்
சொல்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, "என்மீது
அன்பு கொண்டுள்ளவரிடம் வந்து, நாங்கள் குடிகொள்வோம்"
என்கிறார். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளின் பொருள் என்ன
என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அன்பு என்பது சொல்லல்ல; செயல்
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "என் கட்டளைகளைக்
ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார்" என்று
கூறுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளைக் குறித்துச்
சிந்தித்துப் பார்க்கின்றபொழுது, இயேசுவை அன்பு செய்வதற்குப்
பல வழிகள் இருந்தாலும், அதில் முதன்மையான வழி அவர்களுடைய
கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதுதான் என்ற உண்மை விளங்கும்.
இன்றைக்குப் பலர் இயேசுவை அல்லது கடவுளை அன்பு செய்வதாகச்
சொல்லிக்கொண்டு, அவருடைய கட்டளைகளை உதறித் தள்ளிவிட்டு, வெறும்
பக்தி முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றார்கள்.
இப்படிப்பட்டவர்கள் இயேசுவை உண்மையாக அன்பு செய்பவர்களாகவும்
அவருடைய சீடர்களாகவும் இருக்கமுடியாது. அப்படியானால், இயேசுவை
அன்பு செய்வதற்கு, அவருடைய அன்புக் கட்டளையைக் (யோவா 13: 34)
கடைப்பிடித்து வாழ்வது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.
இயேசுவை அன்பு செய்வோருக்கு அவர் அளிக்கும் ஆசிகள்
தன்னுடைய கட்டளைக் கடைப்பிடிக்காமல், தன்னை அன்பு செய்ய
முடியாது என்று சொன்ன இயேசு, தொடர்ந்து, தன்னுடைய கட்டளைகளைக்
கடைப்பிடிப்போருக்கு மூன்று விதமான ஆசிகளை வழங்குவதைப் பற்றிச்
சொல்கின்றார். முதலாவது ஆசி, தந்தைக் கடவுள் அவரை
அன்புசெய்வார் என்பதாகும். ஏனெனில், இயேசுவின் வார்த்தைகள்
அவருடைய வார்த்தைகள் அல்ல; அவரை அனுப்பிய தந்தையின்
வார்த்தைகள். ஆகையால், இயேசுவின் கட்டளைகளைக்
கடைப்பிடிப்போரைத் தந்தைக் கடவுள் அன்பு செய்பவராக
இருக்கின்றார்.
இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கு கிடைக்கும்
இரண்டாவது ஆசி, இயேசுவின் வெளிப்பாடு ஆகும். இது குறித்துப்
பவுல் குறிப்பிடும்பொழுது, கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும்
கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே, அந்த வெளிப்பாடு (2 கொரி 4:
6) என்று குறிப்பிடுவார். இயேசுவன் கட்டளையைக்
கடைப்பிடிப்போருக்கு கிடைக்கும் மூன்றாவது ஆசி, மூவொரு
கடவுளின் உடனுறைதல் அல்லது மூவொரு கடவுளின் குடிகொள்ளுதல்.
இதைதான் இயேசு, "என்மீது அன்பு கொள்பவரிடம் வந்து, அவருடன்
குடிகொள்வோம்" என்று குறிப்பிடுகின்றார்.
ஆகையால், நாம் பெயரளவுக்கு இயேசுவின் சீடர்களாக இல்லாமல்,
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழும், அவருடைய உண்மையான
சீடர்களாக இருந்து, அவரது அருளைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
"காயப்படும் வரை அன்பு செய்தால், இவ்வுலகில் காயப்படுத்தல்
என்ற ஒன்று இருக்காவே இருக்காது; அன்பு மட்டும்தான் இருக்கும்"
என்பார் கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா. ஆகையால், நாம்
காயப்படும் வரை இறைவனை, ஒருவர் மற்றவரை அன்புசெய்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|